Sunday, June 30, 2013

தொடரும் நெருக்கடிகள்.
முதலாளித்துவம் தீர்வு காணுமா?
மக்கள் புரட்சியை முன்னெடுப்பார்களா?

இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு அளிக்க வக்கற்ற அரசு தொடர்ந்தும் வறிய மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை படிப்படியாக குறைத்து வருகிறது. சூரியன் அஸ்திமிக்காத ராஜ்யஜியத்தை வைத்திருந்த ஏகாதிபத்தியம் இன்று மக்களின் வறுமையை போக்க முடியாமல் திண்டாடுகிறது. ரஜ்சிய மற்றும் சீன புரட்சிக்கால கட்டத்தில் தங்கள் நாட்டிலும் ஒரு புரட்சி வருவதைத் தவிர்க்கும் பொருட்டு மானியங்களை வழங்கிய ஏகாதிபத்தியங்கள் இன்று இந்த புரட்சி அபாயம் இல்லை என்று வழங்கிய மானியங்களை நிறுத்துகின்றன. கூகிள் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றன. அவ்வாறான முதலாளித்துவ கம்பெனிகளிடமிருந்து வரி அறவிடுவதை விடுத்து வறிய மக்களுக்கு வழங்கும் மானியங்களை நிறுத்துகின்றன. இதனால் வறிய மக்கள் சமாளிக்க முடியாமல் கடன் சுமையில் சிக்கி தவிக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலை இன்மை போன்ற காரணங்களால், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள, தங்களின் சேமிப்பையே பிரிட்டன் மக்கள் நம்பியுள்ளதாக, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்று, 2,000 பேரிடம் நடத்திய ஆய்வில் தெரிவித்து உள்ளதாவது:பிரிட்டனில், 50 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள், தங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, கடன் அட்டை, வங்கிகடன் மற்றும் தங்களது சேமிப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வார இறுதி நாட்களில், கடன் அட்டைகளை பயன்படுத்தி, பொருட்களை வாங்கும், 55 சதவீதத்தினர், இனி அவ்வாறு செயல்படமுடியாத நிலையில் உள்ளனர்.தங்களின் உணவுத் தேவைக்கென, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம், கடன் வாங்கி, நிலைமையைச் சமாளிக்கின்றனர்.இதில், 25 சதவீத மக்களே, வசதியுடன் வாழ்வதாகவும், 36 சதவீதம் பேர், தங்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். இதில், 31 சதவீதத்தினர், தங்களது அத்தியாவசியத் தேவையைக் கூட குறைத்துக் கொண்டு உள்ளனர். கடந்த, 5 ஆண்டுகளில், எப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சாதாரண மக்களை கசக்கிப் பிழிந்து உள்ளது.இங்கிலாந்தில், உணவிற்காக, மக்கள், தங்களின் சேமிப்பை பெருமளவில் பயன்படுத்துவது, கவலை அளிப்பதாக உள்ளது என, இந்த ஆய்வை நடத்திய, ரிச்சர்டு லாய்டு தெரிவித்து உள்ளார்.

தராளமயமாக்கல் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று கூறியவர்கள் இன்று தங்கள் நாடுகளில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளுக்கு பதில் கொடுக்க முடியாமல தவிக்கின்றனர். நேற்று கிரீஸ், சைபிரஸ் போன்ற நாடுகளில் நடந்தது நாளை இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் நடக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாக்ஸ் கூறிய முதலாளித்துவ நெருக்கடி பற்றி தவிர்க்க முடியாதவாறு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளனர். ஏகாதிபத்திய நாடுகளே நெருக்கடியில் தடுமாறும்போது இந்தியா இலங்கை போன்ற நாடுகள் தாராளமயமாக்கல் மூலம் எப்படி தன்னிறைவு பெறமுடியும்? எந்த நம்பிக்கiயில் தொடர்ந்தும் அதே பாதையில் பயணிக்க விரும்புகினறனர்?


அகதி ஒருவர் சிறப்பு முகாமில் விடுதலை கோரி சாகும்வரை உண்ணாவிரதம்.

அகதி ஒருவர் சிறப்பு முகாமில் விடுதலை கோரி சாகும்வரை உண்ணாவிரதம்.

சசிகரன் என்ற அகதி தன்னை விடுதலை செய்யுமாறு கோரி செங்கல்பட்டு சிறப்புமுகாமில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் முன்பு திருப்பூர் சாதாரண முகாமில் இருந்துள்ளார். அங்கிருந்தபோது அவர் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்டார் என கியு பிரிவு பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி சிறப்பு முகாமில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

சசிகரனின் தந்தையார் மதுரையைச் சேர்ந்த இந்திய தமிழர். அவர் வியாபார நிமித்தம் இலங்கை சென்றபோது அங்கு சசிகரன் பிறந்துள்ளார். உண்மையில் சசிகரன் ஒரு இந்திய தமிழராக இருந்தும் அவர் இலங்கையில் பிறந்த குற்றத்திற்காக அகதியாக கணிக்கப்பட்டு அகதி முகாமில் வைக்கப்ட்டார். அகதி முகாம்களில் வாழ முடியாமல் பலர் பல புலம் பெயர் நாடுகளுக்கு தப்பி செல்கிறார்கள். அகதிகளை வாழ வைக்க முடியாத தமிழக அரசும் அதன் காவல் துறையும் தப்பி செல்பவர்களை பிடித்து வழக்குப் போட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கிறது.

தனது சொந்த மீனவர்களையே காப்பாற்ற முடியாத தமிழக அரசிடம் தங்களை வாழ வைக்கும்படி சொந்த மூளை உள்ள எந்த ஒரு அகதியும் கேட்க மாட்டான். அவர்கள் வெளி நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்வதில் என்ன தவறு? தாங்களும் வாழ வைக்கமாட்டார்கள. வெளி நாடுகளுக்கு சென்று வாழவும் விடமாட்டார்கள் என்றால் இவர்களுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் என்ன வித்தியாசம்?

சிறப்பு முகாம்களை மூடி அங்குள்ள அகதிகளை விடுதலை செய்யுமாறு வைகோ கோரியுள்ளார். நெடுமாறன் , ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் கோரியுள்ளனர். சீமான் முகாம்களை மூடுமாறு போராட்டம் நடத்தியுள்ளார். ம.க.இக போன்ற புரட்சிகர இயக்கங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளன. இருந்தும் ஜெயா அம்மையாரும் கலைஞரும் மாறி மாறி ஆட்சி செய்கிறார்களேயொழிய சிறப்பு முகாம்களை மூட மறுக்கின்றனர்.

• தமிழீழம் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் ஜெயா அம்மையார் ஏன் சிறப்பு முகாம்களை மூட மறுக்கிறார்?

• ஜ.நா சென்று டெசோ தீர்மானம் கையளிக்கும் கலைஞர் ஏன் சிறப்பு முகாம்களை மூட தீர்மானம் நிறைவேற்றுவதில்லை?

தமிழக மக்களே சிந்தியுங்கள். சிறப்பு முகாமில் உள்ள அகதிகளின் விடுதலைக்கு தயவு செய்து குரல் கொடுங்கள்.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சோனியாகாந்தியுடன் சந்திப்பு

 அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சோனியாகாந்தியுடன் சந்திப்பு

ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களின் தலைவர்களில் ஒருவர். ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்சங்கத்தின் தலைவர். இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் இ.தொ.க வின் அமைச்சர். இவர் டில்லி சென்று சோனியாகாந்தியை சந்தித்துள்ளார். இவர் இலங்கையில் இருக்கும் நாட்களைவிட இந்தியாவில் இருக்கும் நாட்களே அதிகம் என்று கூறும் அளவிற்கு அடிக்கடி இந்தியா செல்பவர். எனவே இவரது இந்திய விஜயம் ஆச்சரியமானதொன்றல்ல. ஆனால் இம்முறை அவர் இந்தியா சென்று சோனியாகாந்தியை சந்தித்திருப்பது மிக முக்கியமான ஒரு செய்தியை வெளிப்படுத்துகிறது.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஒரு தமிழின தலைவர். எனவே அவர் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு குறித்து சோனியாவுடன் பேசியிருக்க கூடும் என்றே பலரும் எதிர்பார்க்கக்கூடும். அல்லது இந்தியா ஒப்பந்தம் போட்ட மாகாணசபையை ரத்து செய்ய மகிந்த அரசு முயல்வது குறித்தாவது அவர் பேசலாம் என நம்பியிருக்ககூடும். ஆனால் அவர் இது எவை குறித்தும் பேசவில்லையாம். தான் மலையக மக்களின் கல்வி, சுகாதாரம் குறித்து பேசியதாக பேட்டி கொடுத்துள்ளார்.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர் தனது மக்களின் கல்வி, சுகாதாரம் குறித்து இந்தியா சென்று அதுவும் சோனியாவுடன் பேசியதாக கூறுவது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர்களின் பிரச்சனை குறித்து பேசாவிடினும் பரவாயில்லை ஆகக்குறைந்தது மலையக மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்தாவது தொண்டமான் பேசாமல் விட்டிருப்பது அவர் தனது மக்களின் நலனை விட்டுக்கொடுத்து தொடர்ந்தும் அமைச்சு பதவியில் ஒட்டியிருக்கவே பிரியப்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

மாகாணசபையின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க மகிந்த அரசு முயல்கிறது. இதற்கு அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் கக்கீம் கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் அமைச்சர் தொண்டமான் இது குறித்து அக்கறையில்லாமல் இருக்கிறார். பொதுபல சேனா மற்றும் மற்றும் சிங்கள உறுமய போன்ற பௌத்த அடிப்படைவாதிகளால் தமது முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக அரசில் அங்கம் வகித்து கொண்டே தனது எதிர்ப்பை அமைச்சர் கக்கீம் பதிவு செய்கிறார். ஆனால் மலையக மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் குறித்து அமைச்சர் தொண்டமான் வாய் திறக்க மறுக்கிறார்.

மலையக தோட்ட தொழிளாளர்களுக்கு தகுந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அந்த மக்களில் இன்னமும் பலர் சிறையில் வாடுகின்றனர். அவர்களை விடுவிக்க கூட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் முயலவில்லை. இப்போதும் கூட அவர் இலங்கை அரசிற்காக இலங்கை அரசின் துதுவராகவே இந்தியா சென்று சோனியாவை சந்தித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது அமைச்சுப் பதவிக்காக அவர் தொடர்ந்தும் தமது மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார். அவரை வரலாறு ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

காலம் சென்ற தலைவர் தொண்டமான் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். அவர் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்பேசும் மக்களிற்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அவரின் பேரனான அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அனைத்து தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்காவிடினும் ஆகக் குறைந்தது தன்னை நம்பியிருக்கும் மலையக தமிழர்களுக்காகவது துரோகம் இழைக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்போகின்றதா இந்தியா? – பா.அரியநேத்திரன்

தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்போகின்றதா இந்தியா? – பா.அரியநேத்திரன்

வடகிழக்கு தமிழர்களை மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா ஏமாற்றப்போகிறதா என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 

இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா மீண்டும் தமிழர்களை ஏமாற்றப்போகின்றதோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியிலும்,தமிழ் அரசியல் கட்சிகளிடையேயும் அடிப்படையாக இருந்துவரும் ஒரு மனநிலையாகும் தற்போது இந்த சந்தேக நிலை மேலும் வலுத்து வருகின்றது.

ஏனெனில் ஒரு புறம் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் அதேநேரம் மறுபுறம் இந்திய அரசாங்கம் இதுகுறித்து கவனம் செலுத்தாமல் இருப்பதுடன், இந்திய எதிர்கட்சி தலைவர்களின் அரசாங்கத்திற்கு சார்பான கருத்துக்கள் போன்றவை இந்தியா தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்போகின்றதோ என்ற தோற்றப்பாட்டை இலங்கை அரசியல் களத்தில் உருவாக்கியுள்ளது.

அண்மையில் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கான மந்திரக்கோல் தங்களிடமில்லை என்று கூறியிருந்தார்.

நான் கேட்கின்றேன் இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்குவதற்கு மட்டும் இந்தியாவிடம் மந்திரக்கோல் இல்லை என்றால் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அழித்தொழிப்பதற்காக இந்தியா எந்தக் கோலை பாவித்திருந்தது அப்போது பாவிக்கப்பட்டது இந்தியாவின் மந்திரக்கோலா? அல்லது தந்திரக்கோலா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா எந்த மந்திரக்கோலை அல்லது தந்திரக்கோலை கொண்டு செய்ததோ, தமிழர்களின் பேரம்பேசும் சக்தியை இந்தியா எந்த மந்திரக்கோலை அல்லது தந்திரக்கோலை கொண்டு செய்ததோ அதே மந்திர,தந்திர கோல்கலை கொண்டுவந்து இந்திய ஆட்சியாளர்களும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரவேண்டும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகளை இந்தியா பலவீனப்படுத்தி தமிழர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. அப்போதும் தமிழர்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தராமல் சென்றதால் இலங்கையில் ஆயுதப்போராட்டம் விஸ்வரூபம் எடுத்து

கடந்த 2009ம் ஆண்டு மீண்டும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்து தமிழ் மக்களை அநாதரவாக்கிய இந்தியா தமிழர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்து நான்கு வருடங்களாகின்றது

இது வரை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த சிறு முயற்சிகளை கூட இந்தியா முன்னெடுக்காமல் இருப்பது மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இந்தியா செய்யப்போகின்றதா என்ற கேள்விகளையே தோற்றுவித்துள்ளது.

எனவே முதலில் 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிரான சட்டமூலங்களை நிறுத்துவதற்கு இந்தியா முயற்சிப்பதுடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காக நேரடி தலையீட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் இந்தியா மீது தமிழ் மக்களுக்க சிறு நம்பிக்கையாவது ஏற்படும் என்றார்.


பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார்

என்றும் நினைவில் கொள்வோம்!

1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் இலங்கைப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள். அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் இலங்கை தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் அவர்கள் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை. அவர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம்.

நான் அய்யா அவர்களுடன் அதிகம் பழக வில்லை. அவருடைய மகன் பொழிலன் அவர்களுடனே நான் அதிகம் பழகியிருக்கிறேன். பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் அய்யா அவர்களுடன் பேசியிருக்கசிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன். அவ்வேளைகளில் இலங்கைப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார். அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்பொது கண்டு கொண்டேன். ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார்.

தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார். அப்போது அவர் அய்யா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாடு விடுதலையில் அய்யா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன்.

அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாம். அரசியலில் பதவிகள் பெற்றிருக்கலாம் என்றெல்லாம் அவருடன் பழகிய பலர் கூறக் கேட்டிருக்கிறேன். இது எந்தளவு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் நினைத்திருந்தால் இலங்கைப் போராளிகளை வைத்து நிறைய சம்பாதித்திருக்க முடியும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். ஏனெனில் அவரிடம் சென்று பழகாத போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர். அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள்.

பிரபாகரன், உமா மகேஸ்வரன் மட்டுமல்ல முதல் பெண் போராளி என்று அழைக்கப்படும் ஊர்மிளாவும் அவர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். ஊர்மிளா அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் அய்யா அவர்களே தனது வீட்டில் வைத்து பாதுகாத்து அனுப்பினார் என்பது மிக முக்கிய உதவியாகும்.

அய்யா அவர்களின் சில அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எனக்கு உடன்பாடு இல்லாவிடினும் அய்யா அவர்கள் இலங்கை தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை. இலங்கைத் தமிழர்கள் அய்யா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.




கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார் - சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

கொத்தடிமைகளாக ஒரு கோடிச் சிறார் - சர்வதேச தொழிலாளர் நிறுவனம்

உலகில் பல லட்சக்கணகான சிறார்கள் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரிவதாகவும், அவர்களது பணியிட நிலைமைகள் பெரும்பாலும் ஆபத்தானவையாகவும், சில வேளைகளில் கொத்தடிமை நிலைமைக்கு இட்டுச் செல்வதாக இருப்பதாகவும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.

சிறாரை தொழிலாளர்களாக பயன்படுத்துவதற்கு எதிரான தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சிறார் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஒழிப்பதற்கான ஒழுங்குவிதிகள் தேவை என்று அது கோரியுள்ளது.

ஒரு கோடியே 5 லட்சம் சிறார்கள் (பெரும்பாலானோர் சிறுமிகள்) வீட்டு வேலையாட்களாக செயற்படுவதாகவும், துப்பரவு செய்தல், சமைத்தல், குழந்தைகளை மற்றும் முதியவர்களை பராமரித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும் அது கூறுகிறது.

இவர்கள் 14 வயதுக்கு கீழானவர்களாவர்.இவர்களில் பலருக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்றும்கல்விக்குவாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர் நிறுவனம் கூறுகிறது.

இவர்களில் சிலர் கடத்தப்படுவதுடன், உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.


இலங்கை அராஜக அரசே! • லலித், குகன் இருவரையும் உடன் விடுதலை செய்க!!

• இலங்கை அராஜக அரசே!
• லலித், குகன் இருவரையும் உடன் விடுதலை செய்க!!

கோத்தபாயாவின் வெள்ளைவான் கும்பல்களினால் கடத்தி செல்லப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருக்கும் சமஉரிமை இயக்க தோழர்களான லலித, குகன் இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இதற்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.

சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரியத்தற்காக இவ்விரு தோழர்களும் அரச குண்டர்படைகளால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு இரகசியமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோல் இராணுவத்தால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட யுவதிகளுக்காக நியாயம் கேட்ட மருத்துவர் சிவசங்கர் “மெண்டல” என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தோழர்கள் லலித், குகன் இருவருக்குமாக தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுத்துள்ளனர். பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. ஆனால் அரக்க குணம் கொண்ட அரசு அவர்களை விடுதலை செய்ய மட்டுமல்ல அவர்கள் தங்கள் காவலில் இருப்பதைக்கூட தெரிவிக்க மறுத்து வருகின்றது.

அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை வெள்ளைவானில் கடத்துவதன் மூலமோ அல்லது சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதன் மூலமோ தமது அராஜகத்தை தொடரலாம் என அரசு கனவு காண்கிறது. ஆனால் சர்வாதிகாரிகளுக்கு இறுதியில் என்ன நடக்கின்றது என்பதை வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ள தவறுகின்றனர்.

மக்களே!
அரஜாகத்திற்கு எதிராக தமிழ்சிங்கள மக்கள் ஜக்கியமாக போராடுவோம்.
தோழர்கள் லலித் குகன் ஆகியோரை விடுதலை செய்ய குரல் கொடுப்போம்.


சிரியா அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது: அமெரிக்கா

சிரியா அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது: அமெரிக்கா

சிரியாவில் நடந்துவருகின்ற உள்நாட்டு யுத்தத்தில் அந்நாட்டின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் ஆதரவு வழங்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கட்டத்துக்குள் இது இட்டுச்சென்றுள்ளது.

நரம்பு மண்டலத்தை பாதிக்கவல்ல சரின் வாயுவைக் கொண்டு சில தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றைம்பது பேர் வரை இறந்திருக்கிறார்கள் என தமக்கு இதுவரை கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் அலுவலக அறிக்கை கூறுகிறது.

சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக சண்டையிடுபவர்கள் அப்படியான ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு இராணுவ உதவிகளை அதிகரிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தீர்மானித்துள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் எந்த வடிவத்தில் அந்த உதவிகள் அமையும் என அவர் குறிப்பிடவில்லை.

இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அதிபர் அஸ்ஸாத்தின் அரசாங்கம் தொடர்ந்து மறுத்துவருகிறது.

சிரியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்துவருகின்ற சண்டைகளில் குறைந்தது 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.

இலங்கையில் போர் நிகழ்ந்தபோது மகிந்தராஜபக்ச அரசு இரசாயண ஆயுதங்களை பாவித்தது. இதே அமெரிக்க அரசு அப்போது மௌனம் காத்தது. போர் முடிந்த பின்னரும்கூட இது குறித்து கருத்து எதுவும் அமெரிக்க அரசோ அல்லது உலகில் எந்தவொரு நாடுமோ தெரிவிக்கவில்லை. ஏற்கனவே ஈராக்கில் இராசயண ஆயுதங்கள் இருப்பதாக கூறி அமெரிக்காவும் பிற நாடுகளும் போர் புரிந்தன. ஆனால் இப்பொது அமெரிகக் அதிபர் ஒபாமாவே அது தவறான தகவல் என ஒத்துக்கொண்டுள்ளார். வல்லரசுகள் தமது ஆக்கிரமிப்புக்காகவே இரசாயண ஆயுத விடத்தை கையில் எடுப்பதாகவே இது காட்டுகிறது.


மணிவண்ணன் அவர்களின் மறைவினால் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் கொண்டுள்ள கவலையை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

• மணிவண்ணன் அவர்களின் மறைவினால் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் கொண்டுள்ள கவலையை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

• மாரடைப்பால் அகால மரணமடைந்திருக்கும் மணிவண்ணன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை இலங்கைத் தமிழர்கள் சார்பில் தெரிவித்தக்கொள்கிறோம்.

மணிவண்ணன் தனது இறுதிக்காலங்களில் புலிகளுக்கு ஆதரவாளராக இருந்திருந்தாலும் அவரது ஆரம்பகாலங்களில் டெலோ இயக்க போராளிகளே நெருக்கமாக இருந்தனர். டெலோ இயக்க தலைவர் சிறீசபாரட்ணம் புலிகளால் கொல்லப்பட்டு அவ் இயக்கம் தடை செய்யப்பட்ட போது சென்னையில் இருந்த அவ் இயக்க உறுப்பினர்கள் மிகவும் கஸ்டப்பட்டனர். அப்போது சிலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு சென்று உதவி கேட்டனர். தானே சாப்பாட்டுக்கு மிகவும் கஸ்டப்படுவதாகவும் தன்னால் உதவி செய்ய முடியாது என்றும் சிவாஜி கணேசன் கூறிய வேளையில் தன்னிடம் வந்த போராளிகளுக்கு உதவி செய்து ஆதரித்தவர் மணிவண்ணன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அவரிடம் உதவி பெற்ற ஒரு டெலோ போராளி சிறையில் என்னுடன் இருந்தபோது இதுபற்றிய தமது அனுபவங்களை என்னிடம் கூறியிருந்தார்.

மணிவண்ணன் இயக்கிய “இனி ஒரு சுதந்திரம்” என்னும் படத்தில் மாக்சிய தலைவர்களான மாக்ஸ, லெனின் போன்றவர்களின் படங்கள் நூல்கள் என்பவற்றை அவர் காட்டியிருந்தார். இது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இவர் ஒரு காலத்தில் மாக்சிய லெனிய (நக்சலைட்) இயக்கங்களில் ஆர்வமாக செயற்பட்டவர் என்பதை மக்கள் உரிமைக் கழக தலைவர் பி.வி பக்தவச்சலம் மற்றும் அவரது தோழர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

எனது நண்பர் தேவதாஸ் ( தற்போது இலங்கை சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்) மணிவண்ணனுடன் பழகியதை என்னிடம் பல முறை கூறியிருக்கிறார். தனது சினிமா முயற்சிகளுக்கு மணிவண்ணன் பல உதவிகள் செய்ததை அவர் நன்றியுடன் என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். ஏனெனில் இலங்கைத் தமிழரான பாலு மகேந்திராவே தயங்கிய வேளையில் மணிவண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி பல இலங்கைத் தமிழர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கிறார்.

புலிகள் பலமாக இருந்தபோது புலிகளுடன் சேர்ந்து தங்களை அடையாளப்படுத்திய பலர் புலிகள் யுத்ததத்தில் நெருக்கடியான நேரத்தில் எதவி கொரியபோது தமது தொலைபேசியை அணைத்தவிட்டு பதுங்கியவர்களை நாம் அறிவோம். ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு தனது மரணத்தில் புலிக்கொடி போர்த்த வேண்டும் என மணிவண்ணன் கோரியது அவரது இலங்கைத் தமிழர்கள் மீதான உறுதியான அன்பு ஆதரவுக்கு எடுத்தக்காட்டாகும்.

நான் சிறைவைக்கபட்டிருந்த வேளை அவர் என்னை நேரில் சந்திக்க விரும்பினார். தமிழ்நாடு விடுதலைப் படைத்தளபதி தோழர் தமிழரசன் பற்றி அறிய விரும்பினார். ஆனால் துரதிருஸ்வசமாக அவரது விரும்பம் இதுவரை நிறைவேறாதது குறித்து மிகவும் வருந்துகிறேன்.

மணிவண்ணன் அவர்கள் ஆசைப்பட்டபடி அவர் புலிக்கொடியுடன் விடைபெறுகிறார். ஆனால் அவரது நினைவுகள் இலங்கை தமிழர்கள் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.


• டாக்டர் சிவசங்கர் விடுதலை

• டாக்டர் சிவசங்கர் விடுதலை

இலங்கை ராணுவத்தால் சில பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நியாயம் கேட்க சென்ற டாக்டர் சிவசங்கர் அவர்கள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அநுராதபுர சுகாரதார பிரிவில் கடமையாற்றி வந்த அவரை “மெண்டல்” என முத்திரை குத்தி சிறையில் அடைத்தது காவல்துறை. பல மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவசங்கர் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் சிவசங்கரும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் ஒரே காலத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒருமித்து ஜக்கியமாக போராடியதால் அரசு வேறுவழியின்றி பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தது. இன்று டாக்டர் சிவசங்கர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

அரசுக்கு எதிராக குரல் கொடுப்போரை கைது செய்து சிறையில் அடைத்து மிரட்ட முனைகின்றனர். ஆனால் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் மேலும் மேலும் கிளர்ந்தெழுவர் என்ற வரலாற்று உண்மையை காண அவர்கள் மறுக்கின்றனர். இந்த அடக்கு முறை அரசும் மக்களால் நிச்சயம் தூக்கியெறியப்படும்.

தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!

அரசே!
தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!

நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும, சமூக விடுதலையில் அக்கறை கொண்டவருமான தோழர் தேவதாசன் அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புலிகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் தேவதாசன் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

பல கொலைகள் புரிந்த தளபதி கருணா அமைச்சராக இருக்கிறார்.
வெடிகுண்டுகள் வாங்கிக் கொடுத்த கே.பி அரச விருந்தாளியாக வலம் வருகிறார்.
தயா மாஸ்டர் மீது எந்த வழக்கும் இன்றி அரசு வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
பெண்கள் பிரிவு பொறுப்பாளர் தமிழினியும் கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் புலிகளுக்கு உணவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மலையக மாது ஒருவர் விடுதலை செய்யப்படாமல் சிறையிலே இறந்துள்ளார். அதுபோல் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தேவதாசன உட்பட பலர் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்ட்டிருக்கிறார்கள்.

தளபதிகளுக்கு விடுதலை. அப்பாவி தொண்டர்களுக்கு தண்டனை. இதுதான் அரசின் புனர்வாழ்வு கொள்கையா? அல்லது இதுதான் மகிந்த சிந்தனையா?

தோழர் தேவதாசன் அவர்கள் தன்மீதான வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு கோரி பல முறை உண்ணாவிரதம் நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொருமுறையும் அரச அதிகாரிகளால் வாக்குறுதி வழங்கப்படுகிறதேயொழிய இன்னும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.

இவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிக காலத்தை சிறையில் கழித்துவிட்டபடியால் விடுதலையாகும் நோக்கத்தில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஒத்துக்கொள்ள இவர் முன்வந்தபோதும்கூட அரசு வேண்டுமென்றே இவரது வழக்கை விசாரணை செய்யாமல் இழுத்தடித்து வருகிறது.

1979களில் வாசுதேவநாணயக்காரவை கரவெட்டிக்கு அழைத்து வந்து கருத்தரங்கு நடத்தியவர். இப்போது வாசுதேவா அமைச்சராக இருக்கிறார். அவர் ஏன் இவரின் விடுதலைக்கு வழி கோல மறுக்கிறார்?

தேவதாசனுக்கு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன தலைவர் பதவியை பெற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி யினர். அவர்களின் தமிழ் உறுப்பினர் சந்திரசேகர் இவரின் நெருங்கிய நணபர். அவர் கூட ஏன் மௌனமாக இருக்கிறார்?

புதிய ஜனநாயக்கட்சி மற்றும் சிறீதுங்காவின் சோசலிசக் கட்சிகளின் சார்பாக வடபகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர் தேவதாசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தளவு பிரபல்யம் மிக்க ஒருவருக்கே இந்த கதி என்றால் பிரபல்யம் அற்ற அப்பாவிகளின் கதி என்ன?

அடைத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரியதால் லலித், குகன் ஆகியோர் இரகசியமாக கடத்தி செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சல்மா அவர்களின் ஆவணப்படம்

இன்று லண்டனில் ஈஸ்ட்காம் என்னும் இடத்தில் சல்மா அவர்களின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இன்று வேலை நாளாக இருந்தும் அதுவும் இறுதி நேரத்தில் மண்டபம் மாற்றப்பட்டிருந்தும்கூட அரங்கு நிறைந்த நிகழ்வாக அமைந்தது “சல்மா” அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதவேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் அதுவும் முஸ்லிம் சமூகத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கதையே சல்மாவின் கதையாகும். இது முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த அனைத்து சமூகத்திலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஒரு மணி நேர ஆவணப்படத்தில் ஒரு பெண்ணின் முழுப் போராட்டத்தையும் காட்டுவது கஸ்டம்தான். இருப்பினும் இந்த படத்தை பார்க்கும்போது அவரின் வலியை உணரமுடிகிறது. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு சப் டைட்டில் போன்றன சிறந்த தரத்தில் இல்லையென்றாலும் கூட இந்த பெண்ணிண் போராட்ட கதையானது அவற்றை மறந்து படத்துடன் எம்மை பிணைத்துவிடுகின்றது.

கிராமத்தில் அதுவும் குடும்பத்தினருக்குகூட தெரியாமல் கவிதை எழுதிய ஒரு பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து அவரை வெளி சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி அங்கீகாரம் கிடைக்கச் செய்தததில் காலச்சுவடு கண்ணன் மற்றும் ஊடகவியலாளர் அருள்எழிலன் ஆகியோரின் பங்கு நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.

படக்காட்சியின் பின் சல்மா பார்வையாளர்களுடன் உரையாடினார். தனது கதை யாராவது ஒரு பெண்ணுக்கு ஒரு உந்து சக்தியைக் கொடுக்குமாயின் அதுவே தனக்கு திருப்தியைக் கொடுக்கும் என்றார். கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவர்கள் மற்றும் யமுனா ராஜேந்திரன் போன்றவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக இளம் தலைமுறையினரான நேசன் மற்றும் சேகுவாரா போன்றவர்கள் பங்குபற்றி கலந்துரையாடலை வழி நடத்தியது வித்தியாசமாக இருந்தது. பாராட்டுக்கள்.

பெண்கள் கல்வி பெற்றால் அவர்கள் தங்கள் மீதான அடக்கு முறைகளில் இருந்து விடுதலை பெற முடியும் எனக் கூறப்பட்டது. அதாவது பெண்கள் கல்வி கற்றால் அவர்கள் தமது சொந்த காலில் நிற்கமுடியும் என விளக்கப்பட்டது. பெண்களுக்கு கல்வி முக்கியம்தான். ஆனால் கல்வி பெற்று அதன் மூலம் பல கோடிகளை சம்பாதித்த பெண்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எனவே வெறுமனவே பொருளாதார விடுதலையினால் மட்டுமல்ல ஒரு புரட்சி மூலமே பெண்கள் முழு விடுதலை பெற முடியும் என நான் நம்பகிறேன்.

இது வேண்டுமென்றே சிலரால் பரப்பப்படும் வதந்தியா அல்லது உண்மையிலே இதில் சொல்லப்படும் பிரச்சனைகள் இருக்கின்றனவா

கடந்த சனியன்று எனது நண்பர் தம்பிராஜா அழகேஸ் என்பவர் தனக்கு கிடைத்த கீழ்வரும் ஆங்கில பதிவு ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். இதைப் படித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது வேண்டுமென்றே சிலரால் பரப்பப்படும் வதந்தியா அல்லது உண்மையிலே இதில் சொல்லப்படும் பிரச்சனைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இது தொடர்பாக யாராவது சம்பந்தப்பட்ட தோழர்கள் விளக்கம் தருவார்களேயானால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாகவே ஒரு அமைப்பில் பல பிரச்சனைகள் இருப்பது வழக்கம்தான். அதுவும் இலங்கையில் தமிழ் சிங்கள ஜக்கியத்தை வலியுறுத்தி ஒரு அமைப்பு வேலை செய்யுமாயின் அது நிச்சயம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இலங்கையில் அவ்வாறான ஒரு ஜக்கியத்தை முன்வைத்து பணிபரியும் சோசலிச முன்னனியினர் தம் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் இப் பிரச்சனைகள் தொடர்பாக தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள் என நம்புகிறேன்.

The Central Committee and politburo of the Frontline Socialist Party (FSP) have been dissolved due to an ideological clash among party leaders and the party’s organization work is currently being carried out by a national operations committee.

It is learnt that several members of the party’s Central Committee and politburo have given up politics. A former politburo member of the JVP, Kularatne has now left the FSP and traveled to London.
His wife holds a senior post in the Sri Lankan administrative service and the Kularatne family has left for London to enable her to pursue further studies.
It is learnt that the various ideological clashes that existed among the FSP leader when forming the party after breaking away from the JVP have now intensified.

A head of the party’s students organization, Nuwan Jayaweera had informed the party that he be assigned to carry out work on international relations since he wanted to travel to London with his lawyer wife Dharani who has received a scholarship. Pubudu Jagoda had made a proposal to the Central Committee to assign Jayaweera to party’s international wing and to provide him with Rs. 700,000 to travel to London. However, Central Committee members Waruna Rajapakse and Ashoka have opposed this proposal. The reason was that Pubudu Jagoda and Kumar Gunaratnam had rejected a proposal made by Waruna Rajapakse and Ashoka to assign the party’s Puttalam District Leader Eraj Krishantha Alwis to manage international relations and to provide him financial assistance to carry out the work.

Waruna and Ashoka have stopped communicating with Kumar Gunaratnam via skype and telephone following this clash. One of the main reasons for the clash in the FSP is the document prepared by Kumar Gunaratnam on the party’s stance on the national issue. The clash had occurred since it was similar to the stance of the JVP on the subject.
The Central Committee has questioned if a new party was formed after moving out of the JVP in order to carry out the policies of the latter.
Comrade Chameera Koswatte was faced with unpleasant situations when he had tried to explain the current crisis in the party to its activists in the Gampaha District. It is learnt that the Gampaha District activists had even pushed Chameera to a room and physically attacked him. Chameera was attacked in this manner by Waruna Rajapakse’s supporters. Waruna has now moved out of the FSP and politics.

The clash within the FSP has even moved towards its office staff. The party’s women’s wing head Dimuthu Attygalle had not participated in the Central Committee meetings for a few months and when the office staff had questioned about it from Opatha, he had informed it to Dimuthu.
Angered by the inquiry, Dimuthu had visited the party office and shouted at the staff. The staff had then walked out of the office in protest.
Party sources also say that FSP’s Polonnaruwa organizer, S.K. Subasinghe is also disgruntled with the current situation. He has said that the situation has got worse due to Kumar’s usual actions.
Several attempts were made to contact Kumar Gunaratnam and Pubudu Jagoda via skype and the telephone. However, they could not be contacted to inquire about the current issues faced by the party. In the event the FSP provides us with the party’s response to the story, we would be glad to publish it in our website.

41வது இலக்கிய சந்திப்பு

• 41வது இலக்கிய சந்திப்பு

41வது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் யூலை 20-21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. இதுவரை புலத்தில் நடைபெற்று வந்த இவ் இலக்கிய சந்திப்பு முதன் முதலாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கிறது. இதனால் இது எதிர்பார்க்கப்பட்டது போன்று பல்வேறுபட்ட விமர்சனங்களை தோற்றுவித்து வருகின்றது.

அரசுக்கு ஆதரவாக அல்லது அரச ஆதரவாளர்களால் இவ் சந்திப்பு நடத்தப்படுவதாக ஒரு விமர்சனம் இம்முறை வைக்கப்படுகிறது. கடந்த 40 சந்திப்புகளில் வைக்கப்படாத இவ் விமர்சனம் இம்முறை எதற்காக முன்வைக்கப்படுகிறது என்று புரியவில்லை? யார் அரச ஆதரவாளர்கள்? யார் உண்மையான மக்கள் போராளிகள்? என்பதை யெல்லாம் இனங்காண முடியாத அளவிற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள் .

வழக்கம்போல் அனைத்து கருத்துகளுக்கும் இடமளிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் இவ் வாய்ப்பினைப் பயன்படுத்தி மக்களுக்கான இலக்கிய சந்திப்பாக இதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இலக்கிய சந்திப்பு வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்

சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்

சவூதியில் மன்னர் ஆட்சிக்கு விடையளித்து தேர்தலின் மூலமாக மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு சவுதி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தனது நண்பர்கள் இருவரை கைது செய்த சவூதி அரசு அவர்கள் மீது தேச துரோக குற்றத்தை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து அப்துல் கரீம் அல்-காதர் என்பவர் சவூதியில் மனித உரிமை அமைப்பை தொடங்கினார்.

இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அரசு அறிவித்தது. எனினும், தடையை மீறி சவூதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல், தேவையற்ற சிறை தண்டனை, தண்டனை காலத்தை கடந்த பின்னரும் விடுதலை செய்ய மறுப்பது, சிறை சித்திரவதை ஆகியவற்றை இவர் தனது இணையதளத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார்.

இவரது முயற்சியின் விளைவாக சவூதியில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து, தேச துரோக குற்றத்தின் கீழ் இவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தனது தவறுக்கு வருந்தி திருந்தினால் 5 ஆண்டு தண்டனை குறைப்புக்கும் பரிந்துரைத்த நீதிமன்றம் அப்துல் கரீம் அல்-காதர் 10 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதித்தது.

ஸ்னோடெனை ஒப்படைக்க முடியாது: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ரஷியா

ஸ்னோடெனை ஒப்படைக்க முடியாது: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ரஷியா

அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகளை அம்பலப்படுத்திய ஸ்னோடெனை பிடித்து ஒப்படைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைய ரஷியா நிராகரித்துள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வின் முன்னாள் பணியாளரான ஸ்னோடென், ஹாங்காங்கில் இருந்து ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானது. அங்கிருந்து வெனிசூலா வழியாக ஈக்வடார் சென்று தஞ்சமடைய அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.

அரசு உடமைகளைத் திருடியது, அரசை உளவு பார்த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஸ்னோடென் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், மாஸ்கோ வந்துள்ள ஸ்னோடனை பிடித்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ரஷியாவிடம் அமெரிக்கா கோரியது.

இது தொடர்பாக ரஷியா வெளியறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ மாஸ்கோவில் கூறியதாவது: அமெரிக்க சட்டத்தை ரஷியா மீறி விட்டது என்பது போன்ற குற்றத்தை எங்கள் மீது சுமத்த முயற்சி நடக்கிறது என்றே கருதுகிறோம். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்னோடென் விஷயத்தில் ரஷியா எதுவும் செய்ய முடியாது. அவருடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இது தொடர்பாக பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகள் மட்டுமே எங்களுக்குத் தெரியும் என்றார்.

ரஷியாவில் இருந்து கியூபா செல்லும் விமானத்தில் ஸ்னோடென் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் அதில் பயணம் செய்யவில்லை. எனவே அவர் ரஷியாவில் தான் மறைந்திருக்க வேண்டுமென்று அமெரிக்கா சந்தேகிக்கிறது.

ஈக்வடாரில் ஸ்னோடென் தஞ்சமடைய அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியுள்ளார்

13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்” என்னும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

லண்டன், ஈஸ்ட்காமில் இன்று (29.06.13) மாலை 5.30 மணியளவில் “13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்” என்னும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சார்ல்ஸ் அன்ரனிதாஸ் வழிப்படுத்தலில் ரவி சுந்தரலிங்கம், காதர், மனோகரன், பாறூக், சேனன், மருத்துவர் பாலா ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியில் சபையோரின் கருத்துரைகளுடன் கலந்துரையாடல் முடிவுற்றது.

தலைமையேற்று கலந்துரையாடலை வழிப்படுத்திய சார்ல்ஸ் அவர்கள் அண்மையில் டில்லியில் சுதர்சன் நாச்சியப்பன் ஏற்பாடு செய்த மாநாட்டிலும் கலந்து கொண்டவர். அவர் டெலோ அமைப்பு சார்பில் திம்பு பேச்சுவார்த்தையிலும் கலந்து கொண்டவர். முன்பு தமிழீழத்திற்காக தனது பங்களிப்பை வழங்கியவர் தனது நீண்ட கால அனுபவத்தினூடாக தற்போது 13வது திருத்த சட்டதிற்காக பாடுபடும் நிலைக்கு வந்திருக்கிறார். இந்த நிலை தனக்கு ஏன் வந்தது என்பது பற்றி அவர் விளக்கவில்லை.

அவரை தொடர்ந்து உரையாற்றிய ரவி சுந்தரலிங்கம் ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர். நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்டிருப்பதாக தனது பேச்சினூடே குறிப்பிட்டார். புலிகள் பலமாக இருந்த காலத்தில் வன்னி சென்று புலிகளின் மேல்மட்ட தலைவர்களுடன் உரையாடியவர். ஆனால் தற்போது “தமிழீழம் தோற்றுவிட்டது. இனி அது முடிந்து போன விடயம்” என்றார். அதுமட்டுமல்ல அவர் தனது உரையில் த.தே.கூட்டமைப்பு மாகாணசரபத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மாகாணசபையை பொறுப்பேற்று நடத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

13வது திருத்த சட்டம் தொடர்பாக ரவி சுந்தரலிங்கத்தின் கருத்துகளை தேசம்நெட் சோதிலிங்கம் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அதை பார்க்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை பயன்படுத்தவும்.

http://thesamnet.co.uk/?p=46614

http://www.youtube.com/watch?v=1ypgGBCl-E0


அடுத்து உரையாற்றிய மனோகரன் என்பவர் இந்தியாவின் உதவியின்றி இலங்கை தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்றும் இந்தியாவின் உதவியைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபடுவதை தவிர வேறு வழியில்லை என்றார். ஆனால் அனைவரும் ஒற்றுமையாக கேட்டும் இந்தியா இதுவரை ஏன் உதவி செய்ய வில்லை என்பதற்கோ அல்லது இனியாவது அவ்வாறு கேட்கும் பட்சத்தில் இந்தியா நிச்சயம் உதவி செய்யும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பது குறித்தோ அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை என்பதையே அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தியது ஆச்சரியமாக இருந்தது.

தமிழீழம் கேட்ட இலங்கை தமிழ் பிரமுகர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கணக்கில் 13வது திருத்திற்காக தற்போது பாடுபடுகிறார்கள். அதற்கும் இந்திய அரசின் உதவி பெற வேண்டும் என்கிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டு பிரமுகர்கள் தமிழீழத்திற்காக இந்திய அரசை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த வினோதம் உலகில் வேறு எங்கேயாவது நடந்திருக்கிறதா?

சோசலிசக் கட்சியைச் சேர்ந்த சேனன் உரை

“13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்” என்னும் தலைப்பில் இன்று (29.06.13) நடந்த கலந்துரையாடலில் சோசலிசக் கட்சியைச் சேர்ந்த சேனன் உரையாற்றினார்.

உலகப் புரட்சி என்னும் ரொக்சிய கட்சியை சேர்ந்த அவரின் உரையில் இந்த 13வது திருத்த சட்டத்தின் பின்னனியில் உள்ள ஏகாதிபத்தியங்களின் சூழ்ச்சி பற்றி விளக்கம் இருக்கும் என எதிர் பார்த்தேன். வர்க்கப் போராட்டத்தின் அவசியம் குறித்து பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ ஜே.வி. பியும் அதனில் இருந்து பிரிந்து வந்த சோசலிச முன்னனியும் இனவாதக் கட்சிகள் என வலியுறுத்துவதிலேயே தனது கவனத்தை செலுத்தினார். “சமஉரிமை இயக்கத்தில் இருக்கும் சோசலிச முன்னனியினர் தமிழ்மக்களின் பிரிந்துபோகும் சுயநிர்ணயத்தை ஆதரிக்கவில்லை. எனவே அவர்கள் ஒரு இனவாதக் கட்சினர்” என்றார். சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காவிடின் அவை இனவாதக் கட்சியினர் என புலிகளே கூறாத நிலையில் தன்னை சோசலிசவாதி என அழைத்துக் கொள்ளும் சேனன் அவர்கள் இவ்வாறு சோசலிச முன்னனியை குற்றம் சாட்டியது குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன்.

அடுத்து உரையாற்றிய பாறூக் அவர்கள் “மாகாணசபையின் அதிகாரம் அதிகம் வழங்கப்பட்டிருக்கிறது என்று சிங்களவர்கள் எதிர்த்தார்கள். அதிகாரம் குறைவு என்று தமிழர்கள் எதிர்த்தார்கள். முஸ்லிம் மக்கள் கவனத்தில் கொள்ளப்படவேயில்லை . இவ்வாறு மூன்று இன மக்களாலும் வெறுக்கப்பட்ட மாகாணசபையை ஆரம்ப புள்ளியாக வைத்து தொடர்ந்து போராட வேண்டும்” என வலியுறுத்தினார். எப்படி இதை தொடக்கப்புள்ளியாக கொள்ள மூன்று இன மக்களையும் ஒன்றாக்க முடியும் என்பது குறித்து அவர் விளக்க தவறிவிட்டார்.

அடுத்து மருத்துவர் பாலா உரையாற்றினார். இவரும் அண்மையில் நடைபெற்ற டில்லி மாநாட்டில் பங்குபற்றியவர். காணி பொலிஸ் அதிகாரங்கள் குறித்த சிங்கள மக்களின் அச்சங்கள் போக்கப்பட வேண்டும் என்றார்.

13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்

“13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்” என்னும் தலைப்பில் இன்று (29.06.13) நடந்த கலந்துரையாடலில் காதர் அவர்கள் உரையாற்றினார்.

காதர் அவர்கள் நீண்டகால அரசியல் வரலாறு உடையவர். பல்வேறு அமைப்புகளில் பங்குபற்றி செயலாற்றியவர். அண்மையில் நடந்த டில்லி மாநாட்டிலும் பங்கு பற்றி 13வது திருத்த சட்டம் பற்றி உரையாற்றியவர். இவர் எழுதிய சுயநிர்ணய உரிமை குறித்த நூலை முன்னர் ஈரோஸ் இயக்கம் பிரசுரம் செய்திருந்தது. பின்பு லண்டனில் இவருடைய கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் பங்குபற்றி உரையாற்றியிருந்தார்.

தற்போது இந்த 13வது திருத்த சட்டம் தொடர்பாக தமிழ் சக்திகள் அனைவரும் ஓர் அமைப்பாக இந்தியாவிடம் வலியுறுத்த வேண்டும் என்கிறார். போர்க்குற்றம் தொடர்பாக ஜ.நா மன்றத்தில் போராடுவது போல் இந்த 13வது சட்டத்திற்காகவும் இன்னொரு அமைப்பாக போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மலையகத்தை பிறப்பிடமாகக்கொண்ட காதர் அவர்கள் மலையக மக்கள் முன்னனியில் நீண்டகாலம் செயற்பட்டவர். அந்த மலையக மக்கள் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது பற்றியோ அல்லது ஆகக்குறைந்தது இந்த 13வது திருத்தம் மூலமாக மலையக மக்களுக்கு என்ன நன்மை என்பது குறித்தோ அல்லது முஸ்லிம் மக்கள் சார்பாகவோ எதுவும் பேசாதது ஆச்சரியமாக இருந்தது.

நீண்டகால இடதுசாரிப் பாரம்பரியம் கொண்டவன் என தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் காதர் அவர்கள் மக்கள் சார்ந்து தனது கருத்துகளை தெரிவிக்காதது மட்டுமல்ல அந்த மக்களின் எதிரியான இந்திய அரசிடமே மக்களுக்கு எவ்வித பயனுமற்ற 13வது திருத்த சட்டத்திற்காக கையேந்த வேண்டும் எனக் கோருவது மகா வெட்க கேடானது.