Tuesday, December 31, 2013

• மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் 120வது பிறந்த தினம்

• மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் 120வது பிறந்த தினம்(26.12.2013)

மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 120வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது.

தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர்.

ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் தோழர் மாவோ அவர்கள்.

தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர்.

மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர்.

• சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை.

• சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின் நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது.

மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

இதுவே புரட்சியாளர்களின் வரலாற்று கடமையாகும்!

• தேவயானிக்காக அலறி துடிக்கும் மத்திய அரசு ஈழத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவுக்காகத் துடிக்காதது ஏன்? கலைஞர் கேள்வி.

• தேவயானிக்காக அலறி துடிக்கும் மத்திய அரசு ஈழத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவுக்காகத் துடிக்காதது ஏன்? கலைஞர் கேள்வி.

கலைஞர் அவர்களே!

உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கேள்வியைக் கேட்டமைக்காக உங்கள் உணர்வுகளைப் பாராட்டுகிறோம். ஆனால் அதேவேளை நாமும் ஒரு கேள்வி உங்களிடம் கேட்க விரும்புகிறோம்.

இசைப்பிரியாவுக்காக அலறித் துடிக்கும் நீங்கள் மு.க. மணி க்காக துடிக்காதது ஏன்?

இசைப்பிரியா ஒரு ஈழத்து தமிழ் பெண். அதுபோல் மு.க. மணியும் ஒரு ஈழத்து தமிழ் சிறுவன்தானே?

ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் துடிப்பது உண்மையானால் மு.க மணிக்காக துடிக்க மறுப்பது ஏன்?

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைக்கு கண்ணீர் விட்ட நீங்கள் மு. மணி கொல்லப்பட்டதற்கு கண்ணீர் விட மறுப்பது என்?

அகதியாக வந்த சிறுவனை உங்கள் தத்துப்பிள்ளையாக எடுத்துக்கொண்டீர்கள். அவனுக்கு மு.க. மணி என்று பெயரும் சூட்டினீர்கள். ஆனால் அவன் உங்கள் சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவான் என அஞ்சி அவனை உங்கள் குடும்பத்தவர்களே கொன்று விட்டார்கள். இதை நாம் மட்டும் சொல்லவில்லை. உங்களுடன் இவ்வளவு காலமும் ஒன்றாக இருந்த பரிதி இளம் பரிதியே கூறுகிறார். அவர் “மணி எங்கே” என்று கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?

அகதி சிறுவன் மு.க.மணிக்கு என்ன நடந்தது?
ஏன் அந்த அப்பாவி அகதி சிறுவன் கொல்லப்பட்டான்?
கொலையாளிகள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?
ஏன் அந்த சிறுவன் மரணம் குறித்து வாய் திறக்க மறுக்கிறீர்கள்?

கலைஞரே உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.
இனியும் தாமதம் செய்யாமல் உடன் பதில் தாருங்கள் கலைஞரே!

கீழ் வரும் இணைப்பில் பரிதியின் பேட்டியை படிக்கலாம்.

http://tamilworldtoday.com/archives/21181

• தமிழர்கள் இந்தியர்கள் அல்ல

• தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் ஒருமுறை இந்திய அரசு தமிழன் முகத்தில் அறைந்து கூறியிருக்கிறது.

தேவயானிக்காக அலறி துடித்த இந்திய அரசு தமிழ் பிரபாகரனுக்காக குரல் கொடுக்க மறுப்பதேன்?

தமிழ் பிரபாகரன் தமிழன் என்பதாலா? அல்லது
தமிழன் இந்தியன் அல்ல என்று இந்திய அரசு கருதுவதாலா?

இதுவரை 600 மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது குறித்து இந்திய அரசு ஒரு கண்டனத்தைக்கூட தெரிவிக்காதது ஏன்?

ஆனால் தமிழக மீனவனை கொல்லும் இலங்கை கடற்படைக்கு தொடர்ந்தும் பயிற்சி கொடுப்பது எதற்காக? தொடர்ந்தும் தமிழனை சுட்டுக்கொல்வதற்காகவா?

இந்த இழிவு நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கு என்ன காரணம்?
தமிழர்களே சிந்திப்பீர்!

Wednesday, December 25, 2013

• தோழர் தமிழரசன் மாவீரர் இல்லையா?

• தோழர் தமிழரசன் மாவீரர் இல்லையா?
• அவர் தியாகங்கள் போற்றுதலுக்குரியது இல்லையா?
• அவருக்கு நினைவு அஞ்சலி செய்ய முடியாதா?

தமிழ்நாட்டில் இன்று பரவலாக மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யப்படுகிறது. அதில் ஈழப் போராட்டத்திற்காக உயிர் நீத்த முத்துக்குமார் ஆப்துல் ரசாக் போன்றவர்களும் நினைவு கூரப்படுகின்றனர். முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் கூட அவர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு செய்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் இங்கு எமது கவலை என்னவெனில் இவர்கள் ஏன் தோழர் தமிழரசனை நினைவு கூர தயங்குகிறார்கள்?

• இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என மருதையாற்று பாலத்தில் வெடிகுண்டு வைத்து முதன் முதலில் அகில இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தோழர் தமிழரசன். இவர் மாவீரர் இல்லையா?

• வெறும் பேச்சளவில் நில்லாது செயலிலும் அதைக் காட்டும் வண்ணம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து அதனால் உளவுப் படையினரால் கொல்லப்பட்டவர் தோழர் தமிழரசன். அவர் தியாகம் போற்றுதலுக்குரியது இல்லையா?

• பல வருடம் சிறைத் தண்டனை. பல கொடிய சித்திரவதைகள். இருப்பினும் இறுதிவரை உறுதியாகப் போராடியவர் தோழர் தமிழரசன். அவர் நமது அஞ்சலிக்குரியவர் இல்லையா?

• முள்ளிவாயக்கால் அவலம் இந்திய அரசினால் நிகழும் என முன்கூட்டியே கூறி அதைத் தடுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவில் ஈழப் போராட்டத்தில் கலக்க வேண்டும் எனக் கூறி அதற்கான முயற்சிகளில் இறங்கியவர் தோழர் தமிழரசன். அவருக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஏன் இடம் இல்லை?

அன்று அப்பு பாலன்
அடுத்து புலவர், தமிழரசன்
அதையடுத்து லெனின, மாறன் போன்றவர்கள்.

இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய புரட்சி வீரர்கள்.
இவர்கள் தமிழ்நாட்டின் போற்றுதலுக்குரிய மாவீரர்கள்.
இவர்களை என்றும் நினைவில் கொள்வோம்!

அவர்கள் காட்டிய பாதையில் சென்று
அவர்களது இலட்சியத்தை வென்றடைவோம்!!

ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ யின் (அராஜகம்) வீரம்!

ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ யின் (அராஜகம்) வீரம்!

• பம்பாயில் தமிழன் அடித்து விரட்டப்படட்போது வராத வீரம்!
• பெங்களுரில் தமிழன் அடித்து விரட்டப்பட்டபோது வராத வீரம்!
• முல்லையாறு மறிக்கப்பட்டபோது வராத வீரம்!
• முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர் கொல்லப்பட்டபோது வராத வீரம்!

ஒரு ஏழைத் தமிழனை தாக்க பொங்கியெழுந்த
ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏவின் வீரம்!

(ஜெயா) அம்மாவை பழித்ததால் அடித்தேன் என்கிறாயே
ஜெயா அம்மாவின் அம்மணம் தெரிய சிங்கள அரசு காட்டுன்; போட்டதே, அப்ப ஏன் பொங்கவில்லை?

600 மேற்பட்ட உன் மீனவன் சுட்டுக்கொல்லப்பட்டபோது எங்கே போயிற்று உன் வீரம்?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எல்லாம் கோமாளிகள் என்றானே சிங்கள ராணுவ தளபதி. அப்போது உன் வீரம் ஏன் பொங்கவில்லை?

ஒரு கம்யுனிஸ்ட் மீது கைவைத்தால் உலகில் உள்ள கம்யுனிஸ்ட் எல்லாம் குரல் கொடுப்பான் என்பது தெரியாதா?

சிகப்பு சட்டை போட்ட புரட்சியாளர்கள் மீது கைவைத்தால் உலகப் புரட்சியாளர்கள் எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள் என்று நினைத்தாயா?

ஏ அராஜக எம்.எல்.ஏ.வே!

இன்று
அரசு உன்னது
ஆட்சி உன்னது
காவல்துறை உன்னதாக இருக்கலாம்!

ஆனால் காலம் மாறும்
இவை எல்லாம் கைமாறும்.
அன்று உன்னையாரும் காப்பாற்றமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்!

• தாய்!

• தாய்!

மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது புரட்சி மணி என்ற தோழர் “தாய்” என்னும் ரஸ்சிய நாவலை எனக்கு படிக்க கொடுத்தார். அதை நான் இரண்டு முறை வாசித்தேன். எனது நீதிமன்ற வாக்கு மூலத்தில் கூட அந்த நாவலின் சில வரிகளை பயன்படுத்தினேன். அந்த நாவல் புகழ்பெற்ற மாக்சிம் கார்க்கியின் படைப்பாகும். அது சிறைப்படுத்தப்பட்ட பாவல் என்ற இளைஞனின் விடுதலைக்கு அவனது தாய் பாடுபடுவதே கதையாகும். இந்த நாவல் எமது போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் போராளிகளுக்கு படிப்பதற்கு கொடுக்கப்பட்டது.

சிறையில் இருக்கும் பேரறிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் பாடுபடுவதை அறியும்போதெல்லாம் எனக்கு இந்த “தாய்” நாவலே ஞாபகம் வருகிறது. எதிர்காலத்தில் இவரது கதையும் நிச்சயம் போராளிகளுக்கு ஒரு உந்துதலாக அமையும்.

பேரறிவாளன் ஏன் விடுதலை செய்யப்படவேண்டும்?

• கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த சங்கராச்சாரிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் பற்றரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இதுதான் இந்திய நீதித்துறையின் லட்சணம்!

• விசாரணை செய்த அதிகாரியே தான் பேரறிவாளனின் வாக்கு மூலத்தை திருத்தினேன் என்று கூறிய பின்னரும்கூட பேரறிவாளன் விடுதலை செய்யப்படவில்லை. அது குறித்து விசாரிக்கப்படும் என்றுகூட நீதித்துறை இதுவரை கூறவில்லை.

• ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்டக்கூடாது என்பதே இந்திய நீதித்துறையின் இலட்சியம் எனில் அப்பாவியான பேரறிவாளனை எப்படி தண்டிக்கலாம?

• சோனியா குடும்பத்தை திருப்பதிப்புடுத்துவதற்காக ஒரு அப்பாவி பலிகடாவாக்கப்படுகிறார். காங்கிரஸ் அரசு பேரறிவாளனை விடுதலை செய்ய மறுக்கிறது.

ஆனால் காலம் மாறும். அன்று மக்கள் மன்றத்தில் இவ் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.
அப்போது பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார்.

ஆம்! வரலாறு அவரை விடுதலை செய்யும்! இது உறுதி!!

• தோழர் தமிழரசன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதேன்?

• தோழர் தமிழரசன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதேன்?

கடந்த எனது பதிவில் தோழர் தமிழரசன் மாவீரர் இல்லையா எனக் கேட்டிருந்தேன். இதைப் படித்த ஒரு அன்பர் மக்களைக் கொன்ற தமிழரசன் ஒருபோதும் மாவீரர் ஆக முடியாது என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் வேடிக்கை என்னவெனில் அந்த அன்பர் பிரபாகரன் மாவீரர் என தனது முகப்பு பக்கத்தில் போட்டிருக்கிறார்.

பிரபாகரன் ஆரம்பத்தில் குரும்பசட்டி என்னும் இடத்தில் ஒரு தனியார் வீட்டில் கொள்ளையடித்த வரலாறு பலருக்கு தெரியவில்லை. குரும்பசட்டியில் ஒரு தனியார் வீட்டில் அடைவு வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு பிரபாகரன் வெளியே வந்தபோது அங்கே சுருட்டு சுற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பிரபாகரனை கல்லால் தாக்கினார்கள். பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றார்.

ஈழத்தில் இருந்த பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் தங்கள் இயக்க செலவுகளுக்காக பணம் கொள்ளையடித்தார்கள். சில இயக்கங்கள் வங்கியில் கொள்ளையடித்தன. சில பெற்றோல் நிலையங்கள், தபாற் கந்தோர்கள், சங்கக்கடைகள் என்பனவற்றில் கொள்ளையடித்தன. இன்னும் சில தனியார் வீடுகளிலும் மட்டுமல்ல கோயில்களிலும் கொள்ளையடித்தன.

ஈழவிடுதலை இயக்கங்கள் கொள்ளையடித்து பணத்தேவைகளை பூர்த்தி செய்ததை அறிந்த தோழர் தமிழரசனும் தமது அமைப்பு செலவுகளுக்காக பணம் கொள்ளையடிக்க முயன்றார். அவர் முதலில் முயற்சி செய்தது உட்கோட்டை வங்கியில் ஆகும். அங்கு கொள்ளையிட முயன்றபோது அந்த வங்கிக் காசாளர் பணத்தை கொடுக்க மறுத்தார். பணப்பையை எடுக்க இழுபறி நடந்தது. அதனால் அந்த காசாளர் சுடப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் கூடிவிட்டார்கள். இதனால் பணம் கொள்ளையடிக்க முடியாமல் தமிழரசன் தன் குழுவினருடன் தப்பி சென்றார்.

இதன் பின்பு தமிழரசன் பணம் கொள்ளையடிக்க முயலவில்லை. அந்த எண்ணத்தை முற்றிலுமாக கைவிட்டிருந்தார். இந்த நிலையில் ஈழவிடுதலை இயக்கம் ஒன்றிற்கு இந்திய உளவுப்படை புலிகளை அழிக்குமாறு ஒரு தொகையான ஆயுதங்களை கொடுத்திருந்தது. அந்த ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த 6 போராளிகள் தலைமையுடன் விரக்தி அடைந்திருந்தார்கள். எனவே அவர்கள் அந்த ஆயுதங்களை இரகசியமாக எம்மிடம் ஒப்படைக்க விரும்பினார்கள்.

எமது இயக்கம் அப்போது நாட்டில் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனவே ஆயுதங்களைப் பெற்றாலும் அவற்றை நாட்டுக்கு கொண்டுபோக முடியாத நிலை இருந்தமையால் நாம் அவ் ஆயுதங்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் இந்த விடயத்தை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் அவ் ஆயுதங்களை தாம் பெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால் ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த போராளிகள் தமிழரசனுக்கு கொடுக்க விரும்பினாலும் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டார்கள். இதனால் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு அவர்களை ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்ல உதவுவதாக தமிழரசன் வாக்குறுதியளித்தார்.

தோழர் தமிழரசன் இந்த விடயத்தை தன்னுடன் உறவு வைத்திருந்த பெருஞ்சித்திரனார் போன்ற தலைவர்களுடன் கலந்தாலோசித்தார். எல்லோரும் “ஆயுதங்களைப் பெற்று போராட்டத்தை ஆரம்பியுங்கள். நாங்கள் ஆதரவாக அரசியல் பிரச்சாரம் செய்கிறோம்” என உறுதியளித்திருந்தனர்.

இதனாலேயே மிகுந்த நம்பிக்கையுடன் பணம் கொள்ளையடிக்க தோழர் தமிழரசன் மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் அவர் கொண்டிருந்த அதீத நம்பிக்கையும் விட்ட சில தவறுகளும் அவரை மரணத்தில் தள்ளிவிட்டன. எதிரி மிகவும் நன்கு திட்டமிட்டு அவரை கொலை செய்துவிட்டான். ஒரு மாபெரும் போராளியை தமிழ்நாடு இழந்துவிட்டது.


அவர் விட்ட தவறுகள் என்ன? அடுத்த பதிவில் விபரமாக தருகிறேன்.

• காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் காணுகிறது • சோனியா கும்பல் மக்களால் வெறுக்கப்படுகிறது • சோனியாவை நாடு கடத்த மக்கள் கோரிக்கை

• காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் காணுகிறது
• சோனியா கும்பல் மக்களால் வெறுக்கப்படுகிறது
• சோனியாவை நாடு கடத்த மக்கள் கோரிக்கை

பல கோடி ரூபா ஊழல் செய்த குடும்பம்!

பல்லாயிரம் தமிழர்கள் படுகொலைக்கு காரணமான குடும்பம்!

இந்திய மீனவர்களை கொலை செய்யும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுத்த குடும்பம்!

காஸ்மீரில் அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு உத்தரவு வழங்கிய குடும்பம்!

சதீஸ்கரில் ஆதிவாசிகளின் படுகொலைகளுக்கு காரணமான குடும்பம!

மணிப்பூரில் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டத்திற்கு பொறுப்பான குடும்பம்!

இத்தகைய ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் காரணமான சோனியா குடும்பம் மக்களின் வெறுப்புக்குள்ளானது ஆச்சரியமானது அல்ல. அக் குடும்பத்தை இந்தியாவை விட்டு வெளியேறு என மக்கள் கோருவதும் அதிசயம் அல்ல.

ஆனால் மக்களிடம் கொள்ளையடித்து ஊழல் மூலம் சம்பாதித்த பல கோடி ரூபா பணம் பறிமுதல் செய்ய வேண்டும். மக்களின் அழிவிற்கு காரணமான சோனியா குடும்பம் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதன் பின்னரே அவர் நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

சோனியா குடும்பத்தை பலமாக ஆதரித்த மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. அத்தகைய ஆந்திரப் பிரதேசத்திலேயே மக்கள் இன்று சொனியாவை வெளியேறு என குரல் கொடுக்கிறார்கள்.

இன்று ஆந்திராவில் ஒலிக்க தொடங்கியிருக்கும் இக் குரல் விரைவில் இந்தியா முழுவதும் ஒலிக்கும். சோனியா குடும்பம் ஓட்டம் பிடிக்கும். இது உறுதி.

• தொடரும் சட்ட விரோத தடுப்பு காவல்கள்

• தொடரும் சட்ட விரோத தடுப்பு காவல்கள்

சந்தேகத்தின் பேரில் 15 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. சிறையில் பிறந்த குழந்தையுமாக சேர்த்து குடும்பமே சிறையில் வாடுது. அவர்கள் இதுவரை 429 தடவைகள் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்னமும் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. இது குறித்து எவ்வித அக்கறையும் இன்றி நீதிமன்றமும் ஒவ்வொரு தடவையும் வாய்தாவை புதுப்பித்து வருகிறது. இது இலங்கை நீதித்துறைக்கும் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு பல நீதி மறுக்கப்பட்ட சட்ட விரோத தடுப்பு காவல்கள் இலங்கையில் இருக்கின்றன.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இலங்கையில் மக்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. இலங்கையில் ஜனநாயகம் இருக்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதாக உலக நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் அங்கு நடப்பது அராஜகம் ஆகும்.

அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சட் விரோத தடுப்பு காவல்கள் நடக்கின்றன. தமிழ் மக்கள் மட்டுமல்ல அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற சிங்கள மக்களும் காணமல் போகின்றனர். அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி குரல் கொடுத்த லலித் குகன் ஆகிய இரு தோழர்களும் அரசால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அரசால் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விபரங்கள் வெளிப்படுத்தியும் அரசு எவ்வித பதிலும் அளிக்காது திமிராக நடந்து கொள்கிறது.

இந்த சட்ட விரோத தடுப்பு காவல்கள் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இடம்பெறுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெரியார் திராவிடகழக தலைவர் மணி தேசியபாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார். மக்கள் ஜனநாயக குடியரசுக்கட்சி சேர்ந்த ராகினி பொடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார். மலைவாழ் மக்களுக்காக போராடிய மனுவேல் தேசியபாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். இவ்வாறான கைதுகள் தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது கறுப்பு சட்டத்தின் ஆட்சியா என கேட்க வைக்கிறது.


தொடரும் சட்ட விரோத கைதுகளுக்கு எதிராகவும்
அராஜக ஆட்சிகளுக்கு எதிராகவும்
மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்!

• அப்துல் ரவூப் இற்கு வீர வணக்கம்!

• அப்துல் ரவூப் இற்கு வீர வணக்கம்!

ஈழத் தமிழர்களுக்காக பல உணர்வாளர்கள் தமிழ் நாட்டில் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மையானர் அப்துல் ரவூப். 1995ம் ஆண்டு பெரம்பலூரில் ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை தியாகம் செய்தார்.

1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அப்போது ஒரு காவலர் இந்த இஸ்லாமிய இளைஞனின் தியாக செய்தியை என்னிடம் கூறினார். அப்போது இதைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது எந்த யாழ்ப்பாண தமிழர்கள் அதை தடுக்காமல் மௌனமாக இருந்தார்களோ அவ் யாழ்ப்பாண தமிழர்களுக்கு இன்னல் நிகழ்ந்தபோது தமிழன் என்ற உணர்வில் தனக்குதானே தீக்குளித்து இறந்தவன் இந்த ரவூப் என்ற முஸ்லிம் இளைஞன்.

உண்மையில் இந்த முஸ்லிம் இளைஞனின் மரணம் யாழ்ப்பாண தமிழர்களின் முகத்தில் ஓங்கியறைந்தது போல் நான் உணர்ந்தேன். இந்த சிறிய வயதில் எவ்வளவு பெரிய மனம் இருந்திருந்தால் இத்தகைய மாபெரும் தியாகத்தை அவன் புரிந்திருப்பான். தனது இனத்தவர்களை விரட்டியடித்தாலும் அதனை பெரிது படுத்தாது தமிழன் என்ற உணர்வில் தன்னை தியாகம் செய்ததன் மூலம் இந்த முஸ்லிம் இளைஞன் மிக உயர்ந்து நிற்கிறான். அவன் பெயர் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

தியாகி அப்துல் ரவூப் நினைவாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஜக்கியப்பட்டு சிங்கள இனவெறிக்கு எதிராக போராட வேண்டும். இதுவே நாம் அவனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவன் நினைவாக இதனை உறுதி பூணுவோம்.

தியாகி ரவூப்பிற்கு வீர வணக்கம்!

• வாருங்கள் தோழர்களே ஒன்றாக கூடுவோம் ! ஒருமித்து குரல் எழுப்புவோம்!!

• வாருங்கள் தோழர்களே
ஒன்றாக கூடுவோம் !
ஒருமித்து குரல் எழுப்புவோம்!!

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சம உரிமை இயக்கத்தினாரால் இலங்கை உட்பட பல நாடுகளில் கண்டன கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு அங்கமாக நாளை (15.12.2013) லண்டனில் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் தடுப்பு காவலில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் அனைத்து மக்களும் குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

அனைத்து மக்களும் ஒருமித்து குரல் எழுப்புவதன் மூலமே இலங்கை அரசின் இவ் அராஜகத்தை தடுத்து நிறுத்த முடியும்.

எனவே அனைவரும் ஒன்றாக கூடுவோம். இலங்கை அரசுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம்.

புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.

மக்களை அணிதரளுமாறு கோரி சமவுரிமை இயக்கம் சார்பில் லண்டனில் கூட்டம் .

• அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும்
• இராணுவ குடும்ப சர்வாதிகார ஆட்சியை எதிர்த்தும்
• ஜனநாயக ஆட்சியைக் கோரியும்
• அனைத்து மக்களுக்குமான சமவுரிமை கோரியும்
• மாணவர் மீதான அடக்குமுறையை நிறுத்தக் கோரியும்
• அடிப்படை மனிதவுரிமைகளை முன்னிறுத்தியும்

மக்களை அணிதரளுமாறு கோரி சமவுரிமை இயக்கம் சார்பில் லண்டனில் இன்று (15.12.2013) கூட்டம் நடைபெற்றது.

மூவின மக்களும் கலந்து கொண்டார்கள்.
மூவின பேச்சாளர்கள் உரையாற்றினார்கள்.
மூன்று மொழிகளிலும் கூட்டம் நடைபெற்றது.

நம்பிக்கைதரும் மாற்றத்திற்கான அறிகுறி தெரிகிறது. தொடரும் முயற்சிகள் மக்களை ஒன்று திரட்டும். அது இந்த அராஜக அரசை நிச்சயம் தூக்கியெறியும். சிறையில் உள்ளவர்களுக்கு விடுதலை பெற்று தரும். அனைத்து மக்களுக்கும் சமவுரிமை பெற்றுக் கொடுக்கும்.

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

இன்று மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும்.

தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.

மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.

பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.

தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.

ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.

ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.

• ட்ரொஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1)

• ட்ரொஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1)

ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சிலட்ரொக்சியவாதிகள் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.

ட்ரொஸ்கியவாதத்தின் இன்றைய வக்கீல்கள் இதனைப் பற்றி அவ்வளவாக பேச விரும்பாவிட்டாலும் தனியொரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியுமா என்பதே ட்ரொஸ்கியவாதிகளுக்கும் கம்யூனிசவாதிகளுக்கும் இடையிலான பிரதான பிரச்சனையாக இருந்தது. இன்று சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் பொழுது போக்கற்ற அறிவு ஜீவிகளின் விவாதத் தலைப்புகளில் இடம் பிடிப்பவை. அதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிரூபித்தார்கள்.

ஜரோப்பாவின் பிரதான முன்னேறிய நாடுகளில் முதலில் புரட்சிகள் நடைபெறும் என லெனின் எதிர்பார்த்தது உண்மைதான். லெனின் ஒரு சர்வதேசியவாதி. எனவே அவர் உண்மையில் இதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். ஆனால் புரட்சிவாதி விரும்பும் பாதையிலேயே வரலாறு எப்பொழுதும் செல்வதில்லை. புரட்சி ஏற்பட்ட கங்கேரி, ஜெர்மனி போன்ற நாடுகளில் அது தோல்வி கண்டது. இந் நிலையில் தாம் வெற்றிக்கு இட்டுச் சென்ற ரஸ்சியப் புரட்சியை ரஸ்சியப் புரட்சியாளர்கள் என்ன செய்வது? ஸ்டாலின் வினவியவாறு “அதனை உலகப் புரட்சிக்கு காத்திருந்து கொண்டு அதன் சொந்த முரண்பாடுகளில் சிக்கி வேர்வரை அழுக விடுவதா?”

லெனின் இத்தகைய ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்தார். அவர் 1916ல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் யுத்தத்திட்டம் என்பதில் “முதலாளித்துவதத்தின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் மிகுதியும் சமாந்திரமற்ற முறையில் நடைபெற்றது. பண்ட உற்பத்தி அமைப்பின் கீழ் வேறுவிதமாக அது நடைபெறமுடியாது. இதிலிருந்து சோசலிசம் சகல நாடுகளிலும் ஏக காலத்தில் வெற்றி பெறமுடியாது என்பது புலனாகிறது. அது முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்

இந்த லெனிசக் கருத்துக்களின் அடிப்படையில் முதலில் லெனினாலும் பின்னர் அவருடைய வாரிசான ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ்விக் கட்சி புரட்சி வெற்றி பெற்ற ஒரு நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கு படுத்தியது. வரலாறு அது சரி என நிரூபித்துவிட்டது.

ஆனால் ட்ரொஸ்கி வேறுவிதமாக சிந்தித்தார். பின்தங்கிய ரஸ்சியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி தப்பிப் பிழைப்பதை அவர் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் வெற்றியுடன் இணைத்தார். அவர் “உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற அரங்கில்தான் ரஸ்சியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும்” என்று ஆடம்பரமாகப் பிரகடனம் செய்தார்.

வுவசாயிகளின் புரட்சிகர உள்ளார்ந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்காததே ட்ரொஸ்கியின் இந்த தவறான தர்க்கத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். புரட்சி சோசலிசக் கட்டத்தை நோக்கி நகரும் போது பாட்டாளி வர்க்கத்திற்கு பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல விவசாயிகளுடனும் மோதல் ஏற்படும் என அவர் கருதினார். அதனால் அவர் இவ்வாறு கூறினார் “ ….பாட்டாளி வர்க்க முன்னனிப்படை அதன் வெற்றியை அடையப் பெறுவதற்காக அதன் ஆட்சியின் அதி ஆரம்பக் கட்டத்திலேயே நிலப்பிரபுத்துவ சொத்தைப் பறிப்பது மட்டுமல்ல முதலாளித்துவ சொத்தையும் பறிக்க நேரிடும். இதில் பாட்டாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் முதல் கட்டங்களில் தனக்கு ஆதரவளித்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல தன்னை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு காரணமாயிருந்த பரந்துபட்ட விவசாயிகளுடனும் பகைமையான மோதலில் ஈடுபட நேரிடும்”.

லெனினுடைய கருத்துக்கள் ட்ரொஸ்கியின் கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறானவை. ரஸ்சிய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் புரட்சிப் பாத்திரம் உண்டு என்று லெனின் வாதிட்டார். இந்த விவசாய மக்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒழுங்கு படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த விசேட நேச அணி பற்றி லெனின் பின்வருமாறு வர்ணித்தார் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உழைப்பாளிகளின் முன்னனிப் படையான பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளின் பாட்டாளிகள் அல்லாத எண்ணற்ற பிரிவினருக்கும் (குட்டி பூர்சுவா சிறிய கைவினைஞைர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள் போன்றன)அல்லது பெரும்பாலான பிரிவினருக்கும் இடையில் உள்ள விசேட வடிவ வர்க்கக் கூட்டணியாகும்”.

ஆகவே விவசாயிகளுடனான கூட்டணியில் நம்பிக்கையற்ற ட்ரொஸ்கியால் ரஸ்சியப் புரட்சிக்கு எந்த எதிர்காலத்தையும் காண முடியவில்லை. அவருடைய கருத்தில் உலகப் புரட்சிதான் அதைக் காப்பாற்ற முடியும்.ஆனால் அது நடைபெறவில்லை. ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியாது என அவர் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போல்ஷ்விக்கள் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதை நிரூபித்ததுடன் சோவியத்யூனியனுக்கு எதிரான பாசிச ஆக்கிரமிப்பின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத கொடிய தாக்குதலுக்கு எதிராகவும் அதனைப் பாதுகாத்தார்கள். வரலாறு இவ்வாறு இந்தப் பிணக்குகள் பற்றிய தீர்ப்பை வழங்கி முன்னேறிச் சென்றது.

• தோழர் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தாரா? – தோழர் சண்முகதாசன் (பகுதி-2)

• தோழர் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தாரா? – தோழர் சண்முகதாசன் (பகுதி-2)


லெனினின் வாரிசு என்ற பிரச்சனையிலும் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தார் என்ற ட்ரொஸ்கியவாதிகளின் பிரச்சாரத்தில் எள்ளவும் உண்மையில்லை என்பதை நாம் தெளிவாக காணலாம். வரலாற்றின்படி ட்ரொஸ்கி புரட்சிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஆனால் ஸ்டாலினோ 1912ல் பிராக் மாநாட்டில் மென்ஷிவிக்குகளிடமிருந்து பிரிந்த போது போல்ஷ்விக் கட்சியில் லெனினுடன் இணை ஸ்தாபகராக இருந்தார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் ரஷ்யாவுக்குள்ளே புரட்சிகர வேலைக்கு வழிகாட்டுமுகமாக ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்தியக் கமிட்டி ரஷ்யசபை என்ற நடைமுறையான கேந்திரம் அமைக்கப்பட்டது. இது ஸ்டாலினுடைய தலைசிறந்த ஸ்தாபன திறமைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். லெனின் பெரிதும் வெளிநாடுகளில் இருந்து இயக்கத்திற்கு தலைமை தாங்கிய போது ரஷ்யாவுக்குள்ளே தலைமறைவுக் கட்சியை கட்டியமைத்தது ஸ்டாலின்தான்.

அப்போது 1912ல் ட்ரொஸ்;கி “ஆகஸ்ட் குழு” என்பதை மும்முரமாக ஒழுங்குபடுத்தினார். அவர் இதில் லெனினுக்கும் போல்ஷ்விக் கட்சிக்கும் எதிரான குழுக்களையும் போக்குகளையும் ஒன்றினைத்தார். அப்பொழுதுதான் லெனின் அவரை “யூதாஸ் ட்ரொஸ்;கி” என்று அழைத்தார்.

1917 மே 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் மத்திய கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஏடான “பிராவ்டா”வின் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

1917ம் ஆண்டு ஜீலை 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் ஆறாவது காங்கிரசில்தான் ட்ரொஸ்கியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அப்பொழுது லெனின் பின்லாந்தில் இருந்து மாநாட்டிற்கு வழிகாட்டினார். ஸ்டாலின்தான் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பிரதான அறிக்கையை சமர்ப்பித்தார். இதிலிருந்து அக்டோபர் புரட்சியின் போது லெனினுக்கு அடுத்தபடியான பாத்திரத்தை வகித்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. இதனாற்தான் 1922ல் துப்பாக்கிக் குண்டின் காயம் காரணமாக லெனின் செயல்பட முடியாது இருந்த நிலைமையில் கட்சியின் பொதுச் செயலாளராக லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார்.

இவற்றை மறுக்க முடியாத ட்ரொஸ்க்கியவாதிகள் இறுதியில் பற்றிக்கொள்ளும் விடயம் லெனின் மரணசாசனம். இது உண்மையில் எதிர்வர இருந்த காங்கிரசுக்கு லெனின் சொல்ல எழுதப்பட்ட கடிதமாகும். இந்த காங்கிரஸ் லெனின் மறைவின் பின் 1924ம் ஆண்டு மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற்றது.இந்தக் கடிதத்தை காங்கிரசில் வாசிக்க வேண்டும் என்பதே லெனினுடைய வேண்டுகோள்.அதன்படி ஸ்டாலினே இக் கடிதத்தை வாசித்தார். இக் கடிதத்தில் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ட்ரொஸ்கியும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் ட்ரொஸ்க்கியவாதிகள் கூறுவது போல் பொதுச்செயலாளர் பதவிக்கு ட்ரொஸ்கியை நியமிக்கவேண்டும் என்று அதில் கூறப்படவில்லை. இந்தக் கடிதம் வாசிக்கக் கேட்ட பின்னர்தான் காங்கிரஸ் ஸ்டாலினை பொதுச் செயலாளராக தெரிவு செய்தது. ஒரேயொரு வாக்கு ட்ரொஸ்கியின் வாக்குதான் எதிராக விழுந்தது. அவர் தனக்குத்தானே வாக்களித்தார்.

ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவும் அவர் ட்ரொஸ்கிக்கு போதிய விவாத வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ட்ரொஸ்க்கியவாதிகள் சேறு பூசுகின்றனர். இது முற்றிலும் பொய். சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் வரலாற்றில் ஸ்டாலினைப் போல் இவ்வளவு அதிகாரம் படைத்திருந்த ஒரு தலைவர் தனது எதிரிக்கு ஸ்டாலின் ட்ரொஸ்க்கிக்கு காட்டியது போன்ற பொறுமையைக் காட்டியது கிடையாது.
விவாதங்கள் போல்ஷ்விக் கட்சிக்கு உள்ளேயும் கம்யுனிச அகிலத்திற்கு உள்ளேயும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.மீண்டும் மீண்டும் ட்ரொஸ்க்கி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.

1927 அக்டோபரில் நடைபெற்ற கட்சியின் 15வது மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு உறுப்பினரினதும் நிலைப்பாட்டை அறிவதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.724000 உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய கமிட்டியின் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.4000 பேர் ஆதாவது ஒருசத வீதத்திற்கும் குறைவானோர் ட்ரொஸ்க்கிய குழுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது ட்ரொஸ்க்கிக்கு கிடைத்த இறுதி அடியாகும்.

ட்ரொஸ்க்கிக்கு வேண்டியது ஜனநாயக விவாதமும் தீர்ப்பும் என்றால் அது போதிய அளவு கிடைத்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. தனது குழுவாத நடவடிக்கைகளை கைவிடவில்லை. கட்சியின் பொறுமை சோதிக்கப்பட்டது.1927 நவம்பர் 14 திகதி மத்திய கமிட்டி ட்ரொஸ்க்கியை வெளியேற்றியது. சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் சோவியத் யூனியனின் ஓதுக்குப்புறக் குடியரசு ஒன்றிற்கு நாடு கடத்ப்பட்டார். ஆனால் அவர் இந்த நிபந்தனையை மீறியபடியால் ஒருவருட முடிவில் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

• ட்ரொக்சியின் மரணமும் ட்ரொக்சியத்தின் முடிவும் - தோழர் சண்முகதாசன் (பகுதி-3)

• ட்ரொக்சியின் மரணமும் ட்ரொக்சியத்தின் முடிவும் - தோழர் சண்முகதாசன் (பகுதி-3)

சோவியத்யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ட்ரொஸ்க்கியின் நடவடிக்கைகள் பற்றியோ சர்வதேச சோவியத் எதிர்ப்பு நடவடிக்கையின் கேந்திரமாக அவர் எப்படி மாறினார் என்பதுபற்றியோ இந்தக் கேந்திரம் அவரது ஆடம்பரங்களுக்கு எவ்வாறு பெரும் தொகை பணத்தை செலவழித்தது என்பது பற்றியோ அவர் இறுதியில் பெரிதும் அரண் செய்யப்பட்ட கோட்டையில் குடியேறினார் என்பது பற்றியோ இறுதியில் அவருடைய பெண் காரியதரிசியின் காதலனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இங்கு விரிவாக கூறவேண்டியதில்லை .அவை அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான விடயங்கள்.

இன்று சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் வேறு பொழுதுபோக்கற்ற அறிவுஜீவிகள்தான் அவைபற்றி விவாதிப்பார்கள். ஆதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிருபித்துவிட்டனர். ஆனால் 1920ம் ஆண்டுகளில் ரஸ்சியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதனைச் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். இவ்வாறுதான் அப்பொழுது ட்ரொக்சியவாதத்திற்கு ஒரு சமுதாய அடிப்படை இருந்தது.

ஆனால் இன்று ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்ற ட்ரொக்சியின் தத்துவம் செத்த தத்துவம். ட்ரொஸ்க்கியவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு உள்ளேயிருந்த தவறான தத்துவம் என்ற நிலைமையில் இருந்து பகிரங்கமான எதிர்ப்புரட்சித் தத்துவமாக மாறியுள்ளது. ட்ரொக்சிய வாதம் என்னும் எதிர்ப் புரட்சிகரத் தத்துவம் உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் புரட்சிக்கு எதிரானது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் ட்ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுவதன் அடிப்படை நோக்கத்தை ஒரு உண்மையான புரட்சியாளனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

• மக்களின் மௌனப் புரட்சி

• மக்களின் மௌனப் புரட்சி

ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து
கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்தவர்கள்!
ஆயிரக்கணக்கில் மக்களை கொலை செய்தவர்கள்!
ஊழல் பணத்தை சுவிஸ் வங்கியில் குவித்தவர்கள்!
மொத்தத்தில் நாட்டையே அந்நியனுக்கு விற்றவர்கள!

இவர்களை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர்
இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்
இவர்களிடம் உள்ள மக்கள் பணம் பறிக்கப்படல் வேண்டும
இவர்களின் அராஜகம் தண்டிக்கப்படல் வேண்டும்.

• யார் புரட்சியாளர்கள்?

• யார் புரட்சியாளர்கள்?

• மாக்சியத்தை ஏற்றுக்கொள்பவர்களை புரட்சியாளர்கள் என அழைக்கலாமா?

ட்ரொக்சியவாதிகளும், சில புத்திஜீவிகளும் தங்களை மாக்சியவாதிகள் என அழைக்கின்றனர். ஆனால் அவர்கள் புரட்சியைக் காட்டிக் கொடுக்கின்ற திரிபு வாதிகளாக செயற்படுவதை நாம் காண்கிறோம். எனவே மாக்சியவாதிகள் எல்லாம் புரட்சியாளர்கள் என கருத முடியாது.

• மாக்சிய லெனிசத்தை ஏற்றுக்கொள்பவர்களை புரட்சியாளர்கள் என கருதலாமா?

சிலர் மாக்சிய லெனிசத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை மாவோசிசத்தை நிராகரித்து தேர்தல் பாதையை முன்னெடுக்கிறார்கள். இவர்கள் திரிபுவாத்தை முன்வைப்பதுடன் புரட்சிக்கு துரோகமிழைப்பவர்கள். எனவே மாக்சிய லெனிசிசதத்தை மட்டும் ஏற்றுக்கொள்பவர்களை புரட்சியாளர்களாக கருத முடியாது.

• மாக்சிய லெனிச மாவோசித்தை ஏற்றுக்கொள்பவர்களை புரட்சியாளர்களாக கருத முடியுமா?

மாக்சிச லெனிச மாவோ சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை அதற்காக மக்கள் மத்தியில் பணி செய்யவும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயாரில்லாத சிலர் இருக்கின்றனர். அவர்களை புரட்சியாளர்களாக கருத முடியாது.

• அப்படியென்றால் யார் புரட்சியாளர்கள்?

மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்ட பாதைக்காக மக்கள் மத்தியில் யார் பணி புரிகிறார்களோ அவர்களே புரட்சியாளர்கள் ஆகும்.

• இலங்கையில் யார் புரட்சியாளர்கள்?

இலங்கையில் மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையில் தேர்தல் பாதையை நிராகரித்து
இனவாத்திற்கு எதிராக
நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக
தரகு முதலாளியத்திற்கு எதிராக
இந்திய மற்றும் ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு எதிராக
ஆயுதப் போராட்ட பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பவர்களே புரட்சியாளர்கள் ஆவர்.

• ரிலாக்ஸ் பிளீஸ்!

• ரிலாக்ஸ் பிளீஸ்!

நான் எப்போதும் சீரியஸ்சான அரசியல் விடயங்களையே எழுதுவதாக சில நண்பர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். அவர்களுக்காக இந்த பதிவை பகிர்கிறேன்.

கடந்த 20.12.2013யன்று கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர். அவர்களுக்குரிய பரிசை எமது “குத்துப்பாட்டு” புகழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன் வழங்கியுள்ளார்.

இடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி முன்மாதிரியாக விளங்குகின்றனர். இனி மற்ற நாடுகளில் வாழும் புலத்து தமிழர்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட முனைவார்கள்.

கீழ்வரும் இணைப்பில் அந்த நிகழ்வைப் பார்வையிடலாம்.

http://www.youtube.com/watch?v=FzSnZ27Cgmc


இந்த மாதிரி நிகழ்வுகளைக் காணும்போது எனக்கு வன்னியில் உணவின்றி செத்த குழந்தைகளின் நினைவே வந்து தொலைக்கிறது. அந்த துயர சம்பவத்தை நினைவூட்டியமைக்கு மன்னிக்கவும்.

அதுமட்டுமா போராடியவர்கள் இன்று ஊனமுற்று இருப்பவர்கள் தங்கள் வாழ்வுக்கு உதவும்படி கையேந்துகிறார்கள். எமக்காகப் போராடிய அந்த உள்ளங்களுக்கு உதவாமல் இப்படியான களியாட்டங்களை செய்ய எப்படி எம்மவர்களுக்கு மனம் வருகிறது?