Thursday, April 30, 2015

“மெண்டல்” பத்மநாதனும் இந்திய அமைதிப்படையும்

 “மெண்டல்” பத்மநாதனும் இந்திய அமைதிப்படையும்
இந்தியாவில் நிர்வாணமாக திரிபவர்களை சாமியார் என வணங்கும் இந்திய படைகள் இலங்கையில் நெல்லியடி என்னும் இடத்தில் நிர்வாணமாக திரிந்த மனநோயாளி பத்மநாதனை புலிகளின் தளபதி என்று சுட்டுக்கொன்ற கொடுமையை என்னவென்று அழைப்பது?
“அமைதிப்படை” என்று இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் ஒரு நாள் நெல்லியடியில் பத்தமநாதன் என்பவரை சுட்டுக்கொன்றுவிட்டு புலிகளின் மிகப்பெரிய தளபதியை கொன்றுவிட்டதாக தொலைக்காட்சியில் கூறினார்கள்.
இதைக் கேட்டு கரவெட்டி மக்கள் சிலர் சிரித்தார்கள். இன்னும் சிலர் பத்மநாதனுக்காக வருந்தினார்கள். ஏனெனில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்தமநாதன் என்பவர் நெல்லயடி சந்தியில் பல வருடங்களாக நிர்வாணமாக திரிந்த ஒரு மனநோயாளி என்பது அந்த மக்கள் அனைவரும் அறிந்ததே!
நெல்லியடியில் 1980களில் பத்மநாதனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நிர்வாணமாக திரிந்தார். ஆனால் நல்லவேளை இந்தியாவில் போன்று அவரை சாமியார் என்று யாரும் வணங்கவில்லை. பூஜிக்கவில்லை.
அந்த காலத்து பிரபல நடிகை சரோஜா தேவியை நினைத்து பையித்தியமானவர் என சிலர் கூறினார்கள். அதற்கு ஏற்ப அவரும் “நதி எங்கே போகிறது கடலை தேடி. நான் ஏங்கே போகிறேன?; சரோஜா தேவியை தேடி” என்று பாடிக்கொண்டு திரிபவர்.
“செல்லமுத்து” புடவைக்கடை முதலாளி அவ்வப்போது புது லுங்கி கட்டி விடுவார். இன்னும் சில அக்கறை உள்ளவர்கள் முடி வெட்டி எண்ணெய் வைத்து விடுவார்கள். “சங்குணி” கடை முதலாளி மிஞ்சும் உணவுகளை அளித்து வந்தார்.
“ஒப்பிரேசன் லிபரேசன்” நடந்தபோதுகூட இலங்கை ராணுவம் அவரை கொல்லவில்லை. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் அவரை சுட்டுக்கொன்றது மட்டுமல்ல அவரை புலிகளின் தளபதி என்று கூசாமல் பொய் வேறு சொன்னார்கள்.
ராஜீவ்காந்தியைக் கொன்று விட்டார்களே என்று கண்ணீர் வடிப்போர் ராஜீவ் காந்தியின் அமைதிப்படையால் கொல்லப்பட்ட பத்மநாதன் போன்றோருக்காக கண்ணீர் வடிப்பார்களா?

பிரிட்டன் அரசியல் தலைவர்கள் விவாதமும் ஒருமித்து மக்களை ஏமாற்றிய விதமும்

பிரிட்டன் அரசியல் தலைவர்கள் விவாதமும்
ஒருமித்து மக்களை ஏமாற்றிய விதமும்
கடந்தவாரம் லண்டனில் ஏழு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட விவாதம் நடைபெற்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தமது கருத்துகளை ஒரே மேடையில் பகிர்ந்து கொண்ட விவாதம் இது.
விவாதத்திற்கு முன்னரும் தலைவர்கள் எல்லலோரும் ஒருவருடன் ஒருவர் கை குலுக்கினார்கள். விவாதம் முடிந்த பின்னரும் கை குலுக்கினார்கள்.
இத்தகைய பண்பு இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நினைத்தும் பார்க்க முடியாதது. எனவே இது பாராட்டுக்குரியது தான்.
ஆனால் எல்லோரும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாற்றிய விதம் இருக்கிறதே அதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
பட்ஜட்டில் துண்டு விழுகிறது. எனவே மக்களுக்கு வழங்கும் மானியங்களை குறைக்கப்போவதாக கூறுகிறார்கள். ஆனால் ஏன் இந்த துண்டு விழுகிறது என்பதை யாரும் விபரிக்கவில்லை.
இராக் யுத்தம். ஆப்கானிஸ்தான் யுத்தம் என தேவையற்ற பல யுத்த செலவுகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்த யுத்தங்கள் தவறு என்று யாரும் கூறவில்லை.
மகாராணியாரிடம் இருக்கும் சொத்துக்களை தேசிய மயமாக்கினாலே பட்ஜட்டில் துண்டு விழுதலை நிவர்த்தி செய்ய முடியும். ஆனால் இங்கு எல்லா அரசுகளும் தொடர்ந்தும் மகாராணிக்கு மக்களின் பணத்தை வாரி வழங்குகின்றன.
மகாராணியின் பொன்விழா ஆண்டு. அவரது பேரப்பிள்ளையின் திருமணம் எல்லாம் விமர்சையாக பல மில்லியன் செலவில் கொண்டாடப்பட்டது. இதனால் வியாபாரம் பெருகும் என அப்போது கூறப்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறு வியாபாரம் பொருகவில்லை என்றும் பட்ஜட்டில் துண்டு விழுகிறது என்றும் கூறுகிறார்கள்.
முன்னர் அகதிகள் வருகையால் பிரிட்டன் முன்னேற முடியவில்லை என்றார்கள். இப்போது ஜரோப்பாவில் இருந்து வருபவர்களால் பிரிட்டன் முன்னேற முடியவில்லை என்கிறார்கள். அப்படியானால் இந்த குறைவான கூலி உழைப்பாளிகளிடம் சுரண்டிய உபரி உழைப்பு எங்கு சென்றது?
தமது தவறான பொருளாதார கொள்கைகளை மக்கள் உணராமல் இருப்பதற்காக உழைக்கும் மக்களிடையே துவேசத்தை உருவாக்கிறார்கள். ஆனால் இவர்களின் கனவு ஒருபோதும் நிவைவேறப்போவதில்லை.
முதலாளித்துவமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை உழைக்கும் மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

நோர்வேயில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு

 நோர்வேயில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு
"ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று!"
- பாரதியார்.
வழக்கம்போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இலக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலக்கிய சந்திப்பு படங்களைப் பார்க்கும்போது பாரதியாரின் பாடல் வரிகளே நினைவுக்கு வருகிறது.
44வது இலக்கிய சந்திப்பு இது. நோர்வே யில் ஒஸ்லோவில் 4ம் 5ம் தேதிகளில் நடைபெற்றுள்ளது.
காத்திரமான தலைப்புகள் விரிவான உரையாடலுக்காக தரப்பட்டுள்ளன.
நிச்சயம் சிறந்த ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற்றிருக்கும் என நம்பலாம்.
நண்பர் சரவணன் இலக்கிய சந்திப்பு படங்கள் பகிர்ந்துள்ளார். பாராட்டுக்கள்.
அதுபோல் உரையாடல்கள் வீடியோவும் பொதுவெளியில் பகிரப்படும் என நம்புகிறோம்.
புலிகள் இருந்தவரை புலிகளுக்கு எதிரான மாற்று அரசியலை முன்வைக்கும் களமாக இலக்கிய சந்திப்பு இருந்தது.
ஆனால் புலிகள் அற்ற இன்றைய நிலையில் ஒரு முற்போக்கு அரசியலை முன்னெடுக்கும் களமாக இலக்கிய சந்திப்புகள் இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாகும்.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இலக்கிய சந்திப்புகளை நடத்துவோர் இதை கவனத்தில் கொள்வார்களா?

எப்போதும் வெட்டப்படுவது ஆடுகளையே தவிர சிங்கங்களை அல்ல.- டாக்டர் அம்பேத்கார்.

எப்போதும் வெட்டப்படுவது ஆடுகளையே தவிர சிங்கங்களை அல்ல.- டாக்டர் அம்பேத்கார்.
மணல் கடத்தும் முதலாளி சுடப்படுவது இல்லை.
தண்ணீர் திருடும் முதலாளி சுடப்படுவதில்லை
கிரனைட் கல் கடத்தும் முதலாளி சுடப்படுவதில்லை.
கனம வளங்களை கொள்ளையிடும் முதலாளி சுடப்படுவதில்லை.
ஆனால் மரம் வெட்டும் கூலி தமிழன் மட்டும்
ஏன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்?
அன்று
சந்தண மரம் கடத்தியமைக்கு வீரப்பன் சுட்டுக்கொலை
சந்தண மரம் கடத்திய முதலாளிகள் ஒருபோதும் சுடப்படவில்லை.
இன்று
செம்மரம் கடத்தியமைக்கு 20 கூலித் தமிழன் சுட்டுக்கொலை.
செம்மரம் கடத்திய முதலாளி இன்னும் சுடப்படவில்லை.
டாக்டர் அம்பேத்கார் கூறியதுபோல்
எப்போதும் வெட்டப்படுவது ஆடுகளேயொழிய சிங்கங்கள் அல்ல.

தவறுகளை மரணங்கள் மன்னித்துவிடுமா?

• தவறுகளை மரணங்கள் மன்னித்துவிடுமா?
மன்னிக்க முடியாத தவறுகளை செய்த ஒரு நபர் மரணமடைந்ததும் அவரது தவறுகளை மறந்து அவரை “ஓகோ” என போற்றி புகழும் ஒரு மரபு சரியானதா என்ற கேள்வி எம்முள் எழுகிறது.
இரு நாட்களுக்கு முன்னர் மரணமடைந்த ஜெயகாந்தன் அவர்களை சிலர் போற்றி புகழ்ந்து இலக்கிய உலகின் பேரிழப்பு என எழுதுவதை படிக்கும்போது அந்த கேள்வி எழுகிறது.
என்னதான் அவர் ஜாம்பவானக இருந்தாலும் அவரது எழுத்து பரந்துபட்ட மக்களுக்கு எதிராக இருக்குமாயின் எம்மைப் பொறுத்தவரையில் அவை வெறும் காகித குப்பையே!
அமைதிப்படை என்னும் பெயரில் சென்ற இந்திய ராணுவம்
ஈழத்தில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது சரி என்றார்.
அது அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது நியாயம் என்றார்.
பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்தது சரி என்றார்.
அதுமட்டுமன்றி இதகை; கண்டித்த தமிழக தமிழர்களை புலிகளின் கைக்கூலிகள் என்று ஏளனம் செய்தார்.
தனது இனத்திற்கு துரோகம் இழைத்த இத்தகைய ஜெயகாந்தனை
அவர் மரணமடைந்ததும் அதனை மறந்து எப்படி போற்றி புகழ முடியும்?
எம்மைப் பொறுத்தவரையில் மரணங்கள் தவறுகளை மன்னிப்பதில்லை.

ஓ! தந்தை பெரியாரே!

ஓ! தந்தை பெரியாரே!
20 தமிழரைக் கொன்ற ஆந்திர அரசை
எம்மால் எதிர்க்க முடியவில்லை
900 மீனவரைக் கொன்ற இலங்கை அரசை
எம்மால் எதிர்க்க முடியவில்லை
40ஆயிரம் தமிழரைக் கொன்ற ராஜபக்சவை
எம்மால் எதிர்க்க முடியவில்லை.
இத்தனைக்கும் துணை நின்ற மத்திய அரசைக்கூட
எம்மால் எதிர்க்க முடியவில்லை
எம்மால் முடிந்தது எல்லாம்
எமக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட
உங்களை செருப்பால் அடிக்க மட்டுமே!
எமது வீரம் எல்லாம்
எமக்காக உழைத்த
உமது முகத்தில் மூத்திரம் பெய்வதே!
தந்தையே!
உங்கள் புதல்வர்களின் அறியாமையை மன்னித்துவிடுங்கள்!

தோழர் மாறனை என்றும் நினைவில் கொள்வோம். (11.04.1988)

கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு சம்பவத்தில்
வீர மரணம் அடைந்த தோழர் மாறனை
என்றும் நினைவில் கொள்வோம். (11.04.1988)
தோழர் மாறன் சென்னையில் பிறந்தவர். தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டவர்.
1988ல் இடம்பெற்ற கொடைக்கானல் டி.வி டவர் வெடி குண்டு சம்பவத்தில் வீர மரணம் அடைந்தவர்.
1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது. இது அனைவரும் அறிந்ததே!
ஆனால் இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. அவ் வேளை இதனைக் கண்டித்து தி.மு.க தலைவர் கருணாநிதி டி.வி பெட்டியை உடைத்து தமது எதிர்ப்பைக் காட்டினார்.
தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது ஈழத் தமிழர்களுக்கு தனது ஆதரவை எப்போதும் உறுதியாக காட்டி வந்திருக்கிறது.
அது தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி 1986ல் மருதையாற்று பாலத்தில் குண்டு வைத்தது.
பின்னர் இந்திய அரசின் பொயப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாக கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது.
அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார்.
தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர்.
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார்.
இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வீர வணக்கத்தையும், அஞ்சலிகளையும் செலுத்துகிறோம்.

தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்.

• தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்.
14.04.2015 யன்று தோழர் தமிழரசனின் 70வது பிறந்த தினம்.
மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனை வழிகாட்டலில்
தமிழ்நாடு விடுதலைக்காய் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த
தோழர் தமிழரசன் அவர்களின் 70வது பிறந்த தினம்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என கூறியவர் தோழர் தமிழரசன்.
தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஈழத் தமிழனும் விடுதலை அடைவான் என்று கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்தவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவாது. மாறாக மாபெரும் தமிழ் இன அழிவை மேற்கொள்ளும் என்று முள்ளிவாய்க்கால் அவலத்தை அன்றே எதிர்வு கூறியவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கலக்க வேண்டும் என்று கூறியதோடு தானே அதற்கு முன்மாதிரியாக விளங்க முயற்சி செய்தவர் தோழர் தமிழரசன்.
தோழர் தமிழரசன் “முருகன் முப்பாட்டன்” என்று கூறி காவடி தூக்க வில்லை. மாறாக தமிழ்நாடு விடுதலைக்காக மிசின்கன் துப்பாக்கி தூக்கியவர்.
தோழர் தமிழரசன் ஒருபோதும் முதலமைச்சர் கனவு காணவில்லை. மாறாக தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தவர்.
தோழர் தமிழரசன் தமிழ் மக்களுக்காக உண்மையாகவே போராடினார். அதனால்தான் அவர் உளவுப்படைகளின் மூலம் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எஙகள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே - பாரதிதாசன்

• எஙகள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
- பாரதிதாசன்
20 தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு 
இந்திய அரசுக்கு எதிராக, தமிழக தமிழர்களுக்கு ஆதரவாக
லண்டலில் ஒலித்த குரல்கள்!
இதுவரை, ஈழத் தமிழர்களுக்காக தமிழக தமிழர்கள்
தீக்குளித்தார்கள், சிறை சென்றார்கள்
பகிஸ்கரித்தார்கள், ஊர்வலம் சென்றார்கள்.
பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று, தமிழக தமிழர்களுக்காக
முதல் முறையாக லண்டன்வாழ் ஈழத் தமிழர்கள்
குரல் கொடுத்துள்ளார்கள்.
நல்ல மாற்றம். வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.
இந்த மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே
இந்திய அரசம் அதன் உளவுப்படைகளும் செயற்பட்டன.
ஆனால் அதையும் மீறி தமிழ் இனம் ஒன்றாக ஜக்கியமாகிறது.
இனி உலகில் எந்த மூலையில் தமிழன் தாக்கப்பட்டாலும்
உலகில் உள்ள தமிழன் எல்லாம் ஒன்றாக குரல் கொடுப்பான்
இந்த நிலை கண்டு பகைவர் இனி கலக்கமடைவர் என்பது உறுதி.
கொல்லப்பட்டது 20 மாடுகளாக இருந்திருந்தால்
பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருப்பார்.
கொல்லப்பட்டது 20 இந்துக்களாக இருந்தும்கூட
தமிழர்கள் என்பதால் இந்து அமைப்புகள் கண்டு கொள்ளவில்லை.
ஆந்திராவில் இருக்கும் தனது திராட்சை தோட்டத்திற்காக
“மக்கள் முதல்வர்” ஜெயா அம்மையார் மௌனம் காக்கிறார்.
வெளி மாநிலங்களில் இருக்கும் சன் டிவி சொத்துகளுக்காக
ஊழல் பேர்வழி கலைஞர் கண்டிக்காமல் இருக்கிறார்.
ஆனால் லண்டனில் இருந்தாலும் தமிழ் இன உணர்வில்
ஈழத் தமிழர் வலியுடன் குரல் கொடுக்கின்றனர்.
தமிழர்களின் இந்த ஒற்றுமை இந்திய அரசை மட்டுமல்ல
இந்திய அரசுக்கு துணை போகும் கலைஞர் ஜெயா கும்பல்களையும்
விரைவில் தூக்கியெறியும். இது உறுதி.

கனடா வாழ் சீக்கியர்களின் உணர்வு கனடா வாழ் தமிழர்களுக்கு வருமா?

• கனடா வாழ் சீக்கியர்களின் உணர்வு
கனடா வாழ் தமிழர்களுக்கு வருமா?
இந்திரா காந்தி கொலையை அடுத்து இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்கு நீதி வழங்குமாறு கோரி உலகில் உள்ள சீக்கியர்கள் எல்லாம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பிரதமர் மோடி சீக்கிய படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரியிருந்தும்கூட கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு சீக்கியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கனடா சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அங்குவாழும் சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் கனடா வாழ் தமிழர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்துள்ளனர்.
சிலர் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். சிலர் அவருடன் விருந்துண்ண போட்டி போட்டுள்ளனர்.
என்னே வெட்கம்! இப்படியுமா நமது ஆட்கள் கனடாவில் இருக்கிறார்கள்?
இந்திய அரசு எமது மக்களை, எமது விடுதலைப் போராட்டத்தை அழித்தது. அதனை மறந்து எப்படி இவர்களால் வரவேற்பு அளிக்க முடிகிறது?
அமைதிப்படையை அனுப்பியது தவறு என்று முன்னாள் இந்திய இராணுவ தளபதியே கூறுகிறார். இருந்தும் இந்திய பிரதமர் இன்னும் அமைதிப்படையால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழர்களை கொன்ற மகிந்த ராஜபக்சவுக்கு மோடி வரவேற்பளிக்கிறார். அவருடன் கை குலுக்கிறார். ஆனால் மோடி யாழ்ப்பாணம் சென்றபோதும்கூட சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்களை சந்திக்க மறுத்துவிட்டார். ஆனால் இங்கிலாந்து பிரதமர் அவ் மக்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
இன்றும்கூட தமிழின அழிப்புக்கு மோடி துணை போகிறார். மாடுகளை கொல்லக்கூடாது என்று பேசும் மோடி ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை.
மோடியை பொறுத்தவரையில் ஒரு மாட்டின் பெறுமதியைக்கூட தமிழர்களுக்கு வழங்க தயாரில்லை.
இத்தனைக்கும் பிறகும் அந்த மோடியுடன் கனடா வாழ் தமிழர்களால் எப்படி கைகுலுக்க முடிகிறது?
இதுவரை இந்தியாவால் பலியான தமிழர்கள்
இந்த தமிழர்களின் தவறுகளை மன்னிப்பார்களாக!
இனியாவது இவர்கள் தமிழின உணர்வு பெறுவார்களா?

உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் சிலையும் சிதைக்கப்பட்ட கன்பொல்லை தியாகிகள் நினைவு சின்னமும்!

• உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் சிலையும்
சிதைக்கப்பட்ட கன்பொல்லை தியாகிகள் நினைவு சின்னமும்!
• வேலூரில் சாதி வெறியர்களால் டாக்டர் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கன்பொல்லையில் தியாகிகள் நினைவுச்சின்னம் சிதைக்கப்பட்டுள்ளது.
• சேலத்தில் தாழ்த்தப்பட்ட சிறுவன் வாயில் மலம் கரைத்து ஊற்றப்பட்டுள்ளது.
யாழ் ஏழாலையில் தாழ்த்தப்பட்டசாதி மாணவர்கள் பயிலும் பாடசாலை குடிநீரில் விசம் கலக்கப்பட்டுள்ளது.
• இலங்கையிலும் இந்தியாவிலும் சாதி வெறியர்கள் ஒரே மாதிரியாகவே செயற்படுகின்றார்கள்.
தரைப்படை, கடற்படை. விமானப்படை என பல படைகள் வைத்திருந்த புலிகளாலும் சாதிகளை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமை கொடுமைகளை தடுக்க முடியவில்லை.
தமிழகத்தில் சாதி விடுதலை அடைந்தால் மட்டுமே தமிழ் தேசிய விடுதலை அடைய முடியும் என கூறும் திருமாவளவன், இலங்கையில் தமிழீழ விடுதலை அடைந்தால் சாதி விடுதலை அடைய முடியும் என்று கூறுவது முரண் இல்லையா?
இது குறித்து விரிவான கட்டுரை பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.

தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு

• தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு
நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர்; தோழர் லெனின்
ருஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி ருஸ்சிய புரட்சியை வென்றெடுத்து உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்
முதலாளி வர்க்க கொடுமைகளை ஒழிக்க பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப்பிடிக்க ஆயுதப் போராட்டத்தின் மூலமான புரட்சி அவசியம் என நிரூபித்தவர் தோழர் லெனின்
தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று உலகப்புரட்சி பேசிய ரொக்ட்சியை தத்துவாhத்த ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்.
தேசிய இனப்பிரச்சனைக்கு சுயநிர்ணய உரிமையை தீர்வாக முன்வைத்து சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்
தன் வாழ்நாள் முழுவதும் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளிவர்க்க ஜக்கியத்திற்கு வழி அமைத்தார் தோழர் லெனின்
இறந்தும்கூட எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்குகிறார் தோழர் லெனின். அதனால்தான் ருஸ்சிய அருங்காட்சியத்தில் இருக்கும் அவர் உடலை அழித்து புதைக்க வேண்டும் என்று எதிரிகள் கோருகிறார்கள்.
உலகம் உள்ளவரை தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தால் நன்றியுடன் நினைவு கூரப்படுவார்.
அவர் முன்வைத்த புரட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

வடக்கு மாகாண முதல்வர் இவர்களுக்காகவும் குரல் கொடுப்பாரா?

• வடக்கு மாகாண முதல்வர் இவர்களுக்காகவும் குரல் கொடுப்பாரா?
வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் பெண்களை பாலியல் வல்லுறவு மற்றும் கொலை புரிந்த குற்றத்திற்காக தமிழக சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் மூன்று நபர்களை விடுதலை செய்யும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிறையில் உள்ளவர்களின் மகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் சம்பந்தப்பட்டவர்கள் தனது நியாயாதிக்கத்திற்கு உட்பட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காகவும் இக் கடிதத்தினை தான் எழுதியதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண முதல்வர் விக்கி அவர்கள் காலஞ்சென்ற ஆயுள் சிறைவாசி பிரேமானந்த சுவாமிகளின் அபிமான சீடர் என்பதாலே இந்த கடித்தினை எழுதினார் என்பது அவர் இங்கு சொல்லாமல் மறைத்திருக்கும் விடயமாகும்.
விக்கி அவர்கள் கூறுகின்றபடி மனிதாபிமான அடிப்படையில் இக் கடிதத்தினை எழுதியுள்ளார் என எடுத்துக்கொண்டாலும் இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவெனில் இதே தமிழகத்தில் எந்தவித குற்றமும் இழைக்காமல் பல வருடங்களாக சிறப்புமுhமில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளின் விடுதலை குறித்து இந்த முதல்வர் ஏன் கடிதம் எழுதவில்லை?
இந்த அப்பாவி அகதிகளின் விடுதலை குறித்து குரல் தரும்படி பல முறை இந்த முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் ஏன் இதற்காக குரல் கொடுக்க மறுக்கிறார்?
இந்த அகதிகளும் இந்த முதல்வரின் நியாயாதிக்க பிரதேசத்தை சேர்ந்தவர்கள்தானே! அப்படியாயின் இவர்களுக்காக ஏன் மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்கவில்லை?
ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சின்ன சாந்தன் என்பவர் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்தவர். இவரின் வயதான தாயார் இறப்பதற்கு முன் தன் மகனை ஒரு முறையேனும் பாhத்துவிட விரும்புகிறார். சின்ன சாந்தனும் சிறையில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறார். அப்படியாயின் அவரின் விடுதலைக்கு இந்த மாகாண முதல்வர் ஏன் கடிதம் எழுதவில்லை?
பாலியல் வல்லுறவு குற்றவாளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் வடமாகாண முதல்வர் அப்பாவிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க மறுக்கிறார்.
தமிழ் மக்களுக்கு இதைவிட கேவலமான நிலை வேறு என்ன இருக்க முடியும்?

செம்மணியில் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி கிருசாந்தி இவர்களை மன்னிப்பாரா?

• செம்மணியில் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி கிருசாந்தி இவர்களை மன்னிப்பாரா?
செய்தி- தந்தை செல்வா நினைவுப் பேருரை சந்திரிகா பண்டாரநாயக்கா நிகழ்த்தினார்
சம்பந்தன் அய்யாவின் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சந்திரிக்கா அம்மையார்தான் சமாதானத்திற்கான யுத்தம் என்று தமிழ் மக்கள் மீது பாரிய யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர்.
தமிழ் மக்களின் முள்ளிவாயக்கால் பேரழிவிற்கு வித்திட்டவர் , வழி சமைத்தவர் இந்த சந்திரிக்கா அம்மையார்தான்.
இந்த அம்மையாரின் ஆட்சியின்போதே செம்மணியில் பாடசாலை மாணவி கிருசாந்தி இலங்கை ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு புதைக்கப்ட்டார்.
இவருடைய ஆட்சியின்போது தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு இதுவரை அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இந்த அம்மையார்தான் இன்றைய மைத்திரி அரசை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறுகிறார்கள்.
இன்றைய அரசு இன்னும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவில்லை.
கைப்பற்றிய நிலம் இன்னும் தமிழ் மக்களிடம் திருப்பி அளிக்கப்படவில்லை.
காணமல் போனவர்கள் பற்றி உறவினர்களுக்கு எதுவுமே இன்னும் கூறப்படவில்லை.
இன்றும் ராணுவத்தால் தமிழ் மாணவிகள் மீது பாலியல் வல்லுறவுகள் தொடருகின்றன.
இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத சந்திரிக்கா அம்மையார் தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்துகிறார் என்றால் என்ன அர்த்தம்?
இத்தகைய சந்திரிக்கா அம்மையாரை உரையாற்ற சம்பந்தன் அய்யா அழைக்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்?
இவர்களை படுகொலை செய்யப்பட்ட கிருசாந்திகள் மன்னிப்பார்களா?

மன்னிக்கப்படுவார்களா?

• மன்னிக்கப்படுவார்களா?
மரணதன்டனை ரத்து செய்யப்படுமா?
தமிழன் என்பதற்காக கேட்கவில்லை.
மனிதாபிமான அடிப்படையில் கேட்கிறோம்.
தயவு செய்து மன்னிப்பு அளியுங்கள்.
மரண தண்டனையை ரத்து செய்யுங்கள்.
அவர்களுக்கு வாழ ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்.
அதிசயம் நிகழ வேண்டும்.
மரணத்தின் வாயிலில் நிற்பவர்கள்
மீண்டு வரவேண்டும்!

ஜெயா அம்மையார் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் .

 ஜெயா அம்மையார் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் .அது ஊழல் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
பாவாணி சிங் நியமனம் முறைகேடானது என்று கூறிய உச்ச நீதிமன்றம் ஆனால் மறு விசாரணை தேவையில்லை என விசித்திரமான தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெயா அம்மையாரை விடுவிக்க உச்சி குடுமி மன்றமும் தன்னால் இயன்ற அனைத்து வழிகளையும் மேற்கொள்கிறது.
ஒரு ரூபா சம்பளம் வாங்கிய ஜெயா அம்மையார் 4 ஆயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்தது அப்பட்டமான ஊழல் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால் உச்ச நீதிமன்றம் முதல் பி.ஜே.பி மோடி வரை அனைவரும் ஜெயா அம்மையாரின் விடுதலைக்கு வழி தேடுகிறார்கள்.
மக்கள் விருப்பத்திற்கு மாறாக, நீதிக்கு புறம்பாக ஜெயா அம்மையார் விடுதலை செய்யப்படுவாரேயானால் எதிர் காலத்தில் 2ஜி ஊழல் கருணாநிதி கும்பல் தண்டிக்கப்பட முடியாமல் போகும்.
அது மட்டுமல்ல மக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.
எனவே ஊழல் குற்றவாளி ஜெயா அம்மையாருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். அவருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அவர் அரசியலில் இருந்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
2ஜி ஊழல் பேர்வழிகளான கருணாநிதி குடும்பமும் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் 6 ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட வேண்டும்.
இது மற்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும்.
பரந்துபட்ட தமிழ் மக்களின் விரும்பமும் இதுவேயாகும்

Tuesday, April 21, 2015

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்

 சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்- டாக்டர் அம்பேத்கார்.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் மக்களை நேசித்த ஒரு அற்புதமான தலைவர். அவர் சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று கூறுகின்றார் எனில் அந்த சாதீய சமூகம் எந்தளவு கொடுமையாக இருந்திருக்கும்? அந்த தலைவர்  இந்த வரிகளை எந்தளவு விரக்தியுடன்; கூறியிருப்பார்? அண்மையில் வேலூரில் டாக்டர் அம்பேத்காரின் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும்கூட சாதி வெறி பிடித்தவாகள்; டாக்டர் அம்பேத்காரின் சிலையைக்கூட விட்டுவைக்க மனம் இன்றி இருக்கின்றார்கள் எனில் இந்த சமூகம் எந்தளவு கொடுமையானது என்பது மட்டுமல்ல அது எள்ளவும் மாறவில்லை என்பதையும் உணர முடிகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த சாதீய கொடுமைகள் தொடருகின்றன என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் காட்டுகின்றன. கடந்தவருடம் உடுப்பிட்டி மகளிர் பாடசாலைக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டபொழுது உயர்சாதியினர் அதை தடுத்து நிறுத்தினார்கள். கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் ஏழாலை என்னும் இடத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் சிறீ முருகன் வித்தியாலயத்தில்  தண்ணீர் தாங்கியில் விசம்  கலக்கப்பட்டமையினால் 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ட்டனர். இது உயர் சாதியினரின் திட்டமிட்ட நாசகாரச் செயல் என்பதை பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள். இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றார்கள். ஆனால் பொலிஸ் இதுவரை குற்றவாளிகள் எவரையும் கைது செய்யவில்லை. தமிழ் தலைவர்களும்கூட வழக்கம்போல் இதனை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.

சில ஊடகங்கள் இது ஈபிடிபி கட்சியினரின் சதி என்றார்கள். இன்னும் சிலர் இது இராணு புலனாய்வு பிரிவின் வேலை என்றார்கள். ஆனால் யாருமே இப்பவும் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு என தனி பாடசாலை இருப்பது குறித்தோ அல்லது  அந்த பாடசாலை குடிநீரில் சாதி வெறியர்களால் விசம் கலக்கப்பட்டமை குறித்தோ வெட்கப்படவோ அன்றி ஒரு கண்டனத்தையோ தெரிவிக்க முன்வரவில்லை. சுப்பர் சிங்கர் பாடகி ஜெசிக்காவின் வெற்றிக்காக தமிழ் இன உணர்வோடு இரவிரவாக இணைய மூலம் வாக்கு போட்ட புலம்பெயர் தமிழ் உறவுகள்கூட இந்த விடயம் குறித்து தமது முகநூலில் பேச விரும்பவில்லை. அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை தமிழ் மக்களாக இவர்கள் கருதவில்லையா? அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தமிழ் இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்று உணரவில்லையா? இத்தனை அழிவிற்கும் பிறகுகூட தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் இந்த சாதி வேறுபாடுகள் நீங்கவில்லையாயின் எப்பதான் இது நீங்கும்? அனைவரின் மத்தியில் தமிழர் என்ற உணர்வு ஏற்படாதா?

புலிகளின் காலத்தில் சாதி இல்லை என்றும் இப்போது புலிகள் இல்லாததால் அது மீண்டும் உருவெடுக்கிறது என்றும் சில புலி ஆதரவு ஆய்வாளர்கள் சொல்ல முற்படுகின்றனர். இது தவறு. புலிகள் சாதி பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சாதீயத்தை ஒழிக்க ஒருபோதும் முயன்றதில்லை என்பதே உண்மையாகும். புலிகளுக்கு முன்னரும் சாதிகளும் அதன் தீண்டாமைக் கொடுமைகளும் இருந்தன. அவை புலிகளின் காலத்திலும் இருந்தன. புலிகளுக்கு பின்னர் இப்போதும் அவை இருக்கின்றன. புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஆலையம் வல்வெட்டித்துறையில் இருக்கிறது. அதில் இன்றும்கூட தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் நுழைய அனுமதி இல்லை என்பது புலிகளின் சாதி ஒழிப்பு பற்றி விளங்கிக்கொள்வதற்கு போதுமான உதாரணமாகும்.

1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் போது தென்னிலங்கைப் பகுதியில் இருந்த தமிழர்கள் சிங்களக் காடையினரால் தாக்கப்பட்டு காயம்பட்ட நிலையில் , உடைமைகளைப் பறிகொடுத்த நிலையில் பரிதாபகரமான நிலையில் பஸ்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் நெல்லியடி என்னும் பகுதியில் இவ்வாறு பாதிக்கப் பட்டவர்கள் வந்து இறங்கியபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்த கன்பொல்லை கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் இதனை வெள்ளாளர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சண்டையாம் என்று கூறினார்கள். அவர்கள் இதனை தமிழ் மக்கள் மீதான இனக் கலவரம் என்று  கருதவில்லை. இதைக் கேட்ட நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அன்றைய நிலை அதுதான். தாழ்த்தப்பட்ட சாதி மக்களையும் தமிழர்களாக உயர் சாதியினர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவர்களும் கலவரத்தில் பாதிக்கப்பட்டது தமிழர்கள் என்று கருதவில்லை.


1970களில் இதே கன்பொல்லை கிராமத்து தாழத்தப்பட்ட சாதி மக்களை உயர்சாதியினர் தாக்கியபோது அவர்கள் திருப்பி தாக்கினார்கள். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் துப்பாக்கி வெடிகுண்டுகள் எல்லாம் பயன்படுத்தினார்கள். அப்போது தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தார்கள். அவர்கள் நினைவாக நிறுவப்பட்ட நினைவுச் சின்னத்தை இன்றும்கூட கன்பொல்லை கிராம நுழைவாயில் காணலாம். மூன்று பேரில் இருவரின் சிலைகள் உடைக்கப்பட்டு ஒருவரின் சிலையுடன் இந்த நினைவுச்சின்னம் இன்று இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சாதி வெறியர்கள் தாழ்த்ப்பட்ட மக்களின் சிலைகளைக்கூட அனுமதிக்கவில்லை என்பதற்கு இந்த உடைந்த கன்பொல்லை தியாகிகளின் சிலையே சாட்சியாகும்.

கன்பொல்லை கிராமத்தை சேர்ந்த அந்த தாழ்த்தப்பட்ட சாதி மக்கள்  உயர் சாதியினரின் சாதீயக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெற தங்கள் கிராமத்திற்கு “கனப்பொல”என சிங்களப் பெயர் சூட்டி புத்த பிக்கு ஒருவரை வரவழைத்து புத்த ஆலயம் ஒன்றையும் உருவாக்கினார்கள். அந்த புத்த ஆலையத்திற்காக ஒரு அரச மரத்தையும் நட்டிருந்தார்கள். ஆனால் நல்ல வேளையாக சிங்கள இராணுவம் சாதி வேறுபாடு இன்றி , பிரதேச வேறுபாடு இன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தாக்கியதால் அதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் திரட்டுவது விடுதலை இயக்கங்களுக்கு இலகுவாக அமைந்தது. பின்னர் அதன் மேல் தமிழ்த் தேசியம் கட்ட முனைந்தனர். ஆனால் அதன் அடித் தளத்தில் உள்ள சாதீயப் பிரச்சனை தீர்க்கப்படாமல் அவ்வாறே உள்ளது என்ற உண்மையை இந்த தமிழ் தேசியவாதிகள் காண மறுக்கின்றனர்.

1989ம் ஆண்டுப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் இயக்கம் போராடிக் கொண்டிருந்தபோது கரவெட்டிப் பகுதியில் அதன் ஒரு பிரிவுக்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த செங்கதிர் என்பவர் பொறுப்பு வகித்தார். அவருடன் அவருடைய சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களே பெரும்பாலும் இருந்தனர். அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடினாலும்கூட அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் அவருடைய சக போராளிகளுக்கும் உயர் சாதியினர் உணவு வழங்க மறுத்தனர். தங்குமிடம் கொடுக்க மறுத்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க தயங்கினர். இதனால் அவர் பல தடவை இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளானார். தனது போராளிகள் பலரை இழந்தார். அப்போது அவரிடம்  “தமிழ் ஈழம் கிடைத்தால் என்னவாகும்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் எவ்வித தயக்கமும் இன்றி “என் சாதி மக்கள் அனைவரும் அகதிகளாக சிங்களப் பகுதியான அநுராதபுரம் செல்ல நேரிடும்” என்று கூறினார். இவ்வாறு அவர் கூறியதில் நான் எதுவும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அந்தளவுக்கு சாதியக் கொடுமைகளை அவர் அனுபவித்திருந்தார். அன்று மட்டுமல்ல இன்றும் கூட இந்த நிலைமைதான் உள்ளது. மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது மறுக்கமுடியாத  கசப்பான உண்மையாகும்.

இந்த சாதீய கொடுமை நிலை குறித்து 2006ல் லண்டனுக்கு வருகை தந்திருந்த மதிப்புக்குரிய காலம்சென்ற தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களிடம் கேட்டேன். அவர் இந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தோழர் சண்முகதாசன் தலைமையில் போராடியவர். அவர் புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்திலும் வாழ்ந்தவர். அவர் “ சாதீயம் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. அது என்றாவது ஒருநாள் மீண்டும் பற்றி எரியும்” என்றார். அதுமட்டுமல்ல “சாதீயம் புலிகளின் துப்பாக்கி நிழலில் தூங்குகிறது. அது ஒருநாள் விழித்தக் கொள்ளும் என்றார். இவருடைய இக் கூற்று மறுக்க முடியாத உண்மையாகும். இன்று அதன் கொடுமைகளை காணும்போது அன்று தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பது புரிந்து கொள்ள முடிகிறது.

உண்மையாகவே தமிழ் தேசியத்தை விரும்புவோர் முதலில் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து சாதீயத்தை ஒழிப்பதற்கு முன் வரவேண்டும். அவ் வழியிலேயே தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப முயலவேண்டும். மாறாக தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அடக்கி யொடுக்கி பல வந்தமாக அவர்கள் கூறும் தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்பினால் அது என்றாவது ஒருநாள் பீறிட்டு வெடித்துக் கிளம்பி போலியாக கட்டியெழுப்பிய தமிழ் தேசியத்தையே சுக்கு நூறாக்கும். புலிகள் இயக்கத்தில் உப தளபதியாக இருந்த ராகவன் அவர்களும் “வடக்கில் நிகழும் இச் சாதிப்பிரச்சனை தீர்க்கப்படாவிடின் தமிழ் மக்கள் ஒருபோதும் விடுதலை பெறமுடியாது” என்று கூறியுள்ளார் என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதுமட்டுமல்ல இவர் இச் சாதீயப் பிரச்சனை குறித்து ஒரு சிறந்த ஆய்வு ஒன்றையும் செய்துள்ளார்.

இலங்கையில் குறிப்பாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் சாதி முறையும் தீண்டாமையும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. சாதி அமைப்பு என்பது இலங்கை முழுவதிலும் சிங்களவர் தமிழர் இருசாரார் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால் வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீண்டாமை என்ற நாசமும் சேர்ந்து இருக்கின்றது. நளவர், பள்ளர், பறையர் போன்ற சில சாதிகள் தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட சாதிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் தமிழர்களாக மட்டுமன்றி மனிதர்களாகவும் கருதப்படவில்லை. தீண்டாமை என்பது மனிதன் மனிதனுக்குச் செய்யும் மிக மோசமான கொடுமை என்றே கூறவேண்டும்.                                    

சாதி அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவத்தின் ஒரு மிச்ச சொச்சமாகும். இலங்கையில் முதலாளித்துவம் ஒழுங்காக இல்லாமல் ஏற்ற இறக்கமாக வளர்ந்துள்ள படியால்தான் சாதி அமைப்பு இன்னமும் நின்று பிடிக்கிறது. சாதி அமைப்பு இன்று ஆளும் வர்க்கத்திற்கு துணைபுரிவதால் ஆளும் வர்க்கத்தின் அரசு இயந்திரம் அது அழியாமல் இருப்பதற்கு உதவி புரிகிறது. எனவே சாதீயத்திற்கு எதிரான போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தங்களைத் தாங்களே முற்போக்கு சக்திகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இதனைப் பார்க்கவோ புரிந்து கொள்ளவோ மறுக்கின்றனர். சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க தயங்குகின்றனர். இதுவே இன்றைய துரதிருஸ்டமான நிலையாகும்.

இந்தியாவில் உயர்சாதியினரான பிராமணர் வெறும் மூன்று வீதமே சனத்தொகையில் உள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால் பாராளுமன்ற அரசியலில் சில சலுகைகளை பெறமுடிகிறது. ஆனால் இலங்கையில் வடக்குப் பகுதியில் உயர் சாதியினர் பெரும்பான்மையினராகவும் தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக சிறுபான்மையினராக இருப்பதனால் எந்தப் பாராளுமன்றக் கட்சியும் உயர் சாதியினரைப் பகைத்துக் கொள்ளவோ , புண்படுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் முப்பது சதவீதமாக இருந்தும் கூட அவர்கள் எந்தத் தேர்தல் தொகுதியிலும் பெரும்பான்மையைப் பெறமுடியாத விதத்தில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் கமிஸன் மற்றும் அதிகார வர்க்கம் அனைத்திலும் உயர் சாதியினர் இருப்பதால் அவர்களால் இவ்வாறு தந்திரமாக செய்ய முடிந்தது. ஆனால் இந்த நிலைமை தோழர்.சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன் மாறியது. ஏனெனில் அவருடைய கட்சியானது பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்வைத்தது. அது தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சலான தலைமையைக் கொடுத்தது.

1966ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் சுன்னாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு படுத்தியது. பொலிசாரும் உயர் சாதியினரும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடுத்த நிறுத்த எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் தடைகளை உடைத்தெறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் முற்றவெளியில் திரண்டார்கள். அங்கு அவ் மக்கள் மத்தியில் உரையாற்றிய தோழர்.சண்முகதாசன்  அமெரிக்க நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு அவருடைய சகோதரர் கூறிய புத்திமதியை மேற்கோள் காட்டினார். “ஒரு போதும் அடி பணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

இதன்பின் நிலைமை மாறியது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தோன்றினார்கள். புதிய உணர்வு கொண்ட இப் போராளிகள் அடிக்கு அடி கொடுத்தார்கள். இவர்களுடைய போராட்டம் ஆலயப்பிரவேசம், தேனீர் கடைப் பிரவேசம், பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல் ஆகியவற்றைச் சுற்றி நடைபெற்றது. ஆனால் இன்னும் வேறு வடிவங்களில் இப் போராட்டம் நடைபெற்றது. சில போராட்டங்கள் வன்முறையான வடிவத்தில் நடைபெற்றன.

தாழ்த்தப்பட்ட மக்களின் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான இப் போராட்டத்தில் பொலிசார், நீதிமன்றங்கள் ,அதிகாரிகள் ஆகிய முழு அரசு இயந்திரமும் உயர் சாதியினருக்கு ஆதரவாக செயற்பட்டன. மாஜி மந்திரியாகிய சுந்தரலிங்கம் போன்றவர்கள் வெளிப்படையாக உயர் சாதியினருக்கு ஆலோசகர்களாக செயற்பட்டனர். இவ் வேளையில் சங்கானை என்னும் கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் சவ ஊர்வலத்தின் பாதையை மறித்து அவ் ஊர்வலத்தின் மீது சுட்டார். இத் துப்பாக்கிச் சூட்டிற்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கண்துடைப்பிற்காக சுட்டவரைக் கைது செய்த பொலிஸ் அவரை வெறும் 250 ரூபா பிணையில் விடுவித்தது. பின்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது. போலிஸ், நீதிபதி எல்லாம் உயர் சாதியினருக்கு ஆதரவாக இருந்தமையினால் இவ்வாறு நடந்தது. எனவே இவ் அமைப்பில் தமக்கு நீதி கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போராளிகள் அன்று மாலை சங்கானைச் சந்தையில் வைத்து அக் குற்றவாளியைச் சுட்டுக்கொன்றனர். தோழர் சண்முகதாசன் சுட்டிக்காட்டியதுபோல் “அடிக்கு அடி” கொடுத்தனர்.

இதே போன்று இந்தியாவில் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி என்னும் இடத்தில் கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட சாதிக் கூலித் தொழிலாளர்களை குடிசைக்குள் பூட்டி வைத்து எரித்துக் கொன்றனர் உயர் சாதியினர். இதற்கு காரணமான பண்ணையாரை “அப்பாவி” என்று கூறி இந்திய நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் அவரை கம்யுனிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொன்றனர். இது தான் சாதிப் போராட்டத்தின் இயல்பு. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தம் கன்னத்தில் அறை விழுந்த போது மறு கன்னத்தைக்காட்டாமல் அடிக்கு அடி கொடுக்கக் கற்றுக்கொண்டார்கள். இந்த மாற்றத்திற்கு காரணம் கம்யுனிஸ்ட் கட்சிகள் இப் போராட்டத்திற்கு தலைமை அளித்ததாகும்.

இலங்கையில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியானது இப் போராட்டத்தை ஆதரிக்கக்கூடிய உயர்சாதி மக்களின் முற்போக்கான பகுதிகளை அணிதிரட்டியது. இக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் தலைமைத் தோழர்களில் சிலர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அளித்த தலைமையினால் இந்தப் போராட்டத்தின் நோக்கங்கள் சகல பகுதி மக்கள் மத்தியிலும் பரவலாயின. சிங்கள மக்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அறிமுகம் செய்ய கட்சி பெரும் நடவடிக்கை எடுத்தது. பல தேசிய தின நாளிதழ்கள் இப் போராட்டத்தைப் பற்றிய பல செய்திகளை வெளியிட்டன. சீனாவின் பீக்கிங் வானொலி அதன் ஆதரவை இதற்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல வடிவக் கலாச்சார நிகழ்ச்சிகளும் அப்போது இடம்பெற்றன என்பதைக் குறிப்பிடவேண்டும். அற்புதமான பல கவிதைகள் பாடல்கள் தோன்றின. நூற்றுக்கு மேலான தடவை அரங்கேற்றப்பட்ட “கந்தன் கருணை” என்னும் சிறப்பான நாடகமும் தயாரித்தளித்தார்கள்.

இந்து மதத்தின்படி கந்தபெருமானுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி வள்ளி “குறவர்” என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இதனால் நாரதர் கந்தபெருமானிடம் சென்று இலங்கையில் வடக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் உயர் சாதியினரால் இம்சிக்கப்படுவதாக முறையிடுவதுடன் இவ் நாடகம் ஆரம்பிக்கின்றது. இதைக் கேட்ட கந்தபெருமான் கோபம் கொண்டு இதற்கு தண்டனை வழங்க பூமிக்கு வருகிறார். அவரின் பெயர் கந்தன் என்பதால் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொண்ட உயர்சாதியினர் அவரை முருகன் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட கந்தபெருமான் உயர் சாதியினர் மீது எறிவதற்காக தனது ஆயுதமாகிய “வேல்” ஜ உயர்த்தினார். அப்போது நாரதர் இடைமறித்து  “இந்த ஆயுதத்தை மக்களிடம் கொடுங்கள். அவர்கள் பாவிக்கட்டும்” என்று கூறுகின்றார். இந்த மாவோயிச அரசியல் தத்துவத்துடன் அவ் நாடகம் முடிவடைகின்றது.

புரட்சிகர கலை எப்படி புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளிவிடமுடியும் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும். புரட்சிகர நடைமுறையின்றி புரட்சிகர கலை பிறக்காது என்பதையும் அது தெளிவாக்கிறது. நடைமுறைதான் பிரதானமானது. ஆனால் புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும் புரட்சிகரக் கலை புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்தள்ளி விட உதவுகின்றது. சூன்யத்தில்  நாம் புரட்சிகரக் கலையை உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின் அங்கமாக அது உருவாகின்றது.


தமிழகத்தில் தாழத்தப்பட்ட மக்களுக்காக பாடும்படும் தலைவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் மற்றும் டாக்டர் கிருஸ்ணசாமி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அவர்களது தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தையும் உறுதியாக ஆதரித்தவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் சாதி விடுதலை அடையாமல் தமிழ் தேசிய விடுதலை அடைய முடியாது என்கிறார்கள். அதாவது தமிழ் தேசிய விடுதலைக்கு சாதி விடுதலை முக்கியமான முன் நிபந்தனை என்கிறார்கள். இது சரியான நிலைப்பாடுதான். ஆனால் இவர்கள் ஈழப்பிரச்சனையில் தமது இந்த நிலைக்கு மாறாக தமிழீழ விடுதலை அடைந்தால் சாதீய விடுதலை அடையலாம் என்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் யாழ்ப்பாணம் வன்னி வந்து விடுதலைப்புலிகள் அமைப்பு தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து புலிகளிடம் வலியுறுத்துவார் என தாழத்தப்பட்ட சாதி மக்கள் நம்பினார்கள். எதிர்பார்த்தார்கள். ஆனால் திருமாவளவனோ தமிழீழ விடுதலை அடைந்த பின் சாதீய விடுதலை அடையலாம் எனக்கூறியது அந்த மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

திருமாவளவன் யாழ்ப்பாண தாழ்த்தப்பட்ட சாதி மக்களை ஏமாற்றியது அச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் தனது சொந்த தமிழ்நாட்டு மக்களையும் தேர்தல் பாதை மூலம் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றார். அவரும் டாக்டர் கிருஸ்ணசாமியும் தங்களை நம்பிய தாழ்த்தப்பட்ட சாதி மக்களை வைத்து பேரம்பேசி ஒரு சில தொகுதிகளைப் பெற்று ஓட்டு அரசியல் செய்கின்றனரேயொழிய அந்த மக்களின் விடுதலைக்காக உண்மையாக உழைக்க வில்லை.

தமிழ்நாடு விடுதலையை ஆயுதப் போராட்ட பாதையில் முன்னெடுத்த தோழர் தமிழரசன் இந்திய சாதீய கொடுமைகளை நன்கு உணர்ந்திருந்தார். அவர் இந்த சாதீயம் குறித்து ஆராய்ந்து “மீன்சுருட்டி அறிக்கை” என்னும் சிறப்பான அறிக்கையை முன்வைத்திருக்கிறார். அதில் அவர் சாதியை ஒழிப்பது தமிழ்தேசிய விடுதலைக்கும் நிலப்பிரபுத்தவ அதிக்கத்தை வீழ்த்தவும் உடனடி அவசியம் என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.