அமைச்சர் விஜயகலா இத்தனை நாளும் கோமாவில் இருந்தாரா?
வித்யா கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சர் விஜய கலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் சரண்யா என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாகி மரணமான போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
தமிழ் மக்களுக்காக ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்ததால் இதனை கவனிக்க மறந்துவிட்டார் என வைத்துக்கொள்வோம்.
ஆனால் இவரது ஊரான காரைநகரில் தண்ணீர் எடுக்கச்சென்ற மாணவி கடற்படை வீரரால் கற்பழிக்கப்பட்டபோது அந்த கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஏன் இவர் கேட்கவில்லை?
அப்போது இவர் மருத்துவமனையில் “கோமா”வில் இருந்தாரா?
இப்போது அதிகாரம் அமைச்சர் விஜயகலாவின் கையில் இருக்கிறது அல்லவா! அந்த கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவாவது அவர் முனைவாரா?
ஏனெனில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும்வரை சம்பந்தப்பட்ட வீரர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய மறுத்து வந்தார். இப்போது அமைச்சர் விஜயகலா அதனை செய்வாரா?
அதுமட்டுமல்ல கடந்த வருடம் நெடுங்கேணியில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த ராணுவ வீரருக்கு தண்டனை கிடைக்க வழி செய்வாரா?
மன்னாரில் ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளான மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்வரா?
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இனி இன்னொரு பெண்ணிற்கு இப்படி ஒரு கொடுமை நடக்காமல் தடுக்க வேண்டும்.
அதைவிடுத்து மக்களை ஏமாற்ற பத்திரிகைளில் அறிக்கை விடுவதோ அல்லது எதிர்கட்சிகள் போன்று வீதியில் இறங்கி போராடுவதோ எந்த பயனும் தரப் போவதில்லை.
இந்த அரசியல் நாடகங்களை மக்கள் ஏற்கனவே பல முறை பார்த்து சலித்துவிட்டார்கள்.