Wednesday, November 30, 2016

•தீர்வு கிடைக்க இன்னும் 40 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 40 நாட்கள் மட்டுமே!
இந்த வருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தருவேன் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்திருந்தார்.
அதன்படி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை நினைவூட்டுகின்றோம்.
இன்று சர்வதேச குழந்தைகள் தினமாம்.
எமது தேசத்தில் வறுமையின் கொடுமையால் குழந்தைகளை பெற்றவர்களே கிணற்றில் வீசிக் கொல்லும் அவலம் ஒருபுறம்.
குழந்தைகள் வறுமையின் கொடுமையால் திருடுவதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அவலம் இன்னொரு புறம்.
இதற்கு எல்லாம் என்ன தீர்வு? இதனை எமது தலைவர்கள் கண்டு கொள்ளமாட்டார்களா என்று கேட்கவும் முடியவில்லை.
ஏனெனில் இன்னும் 40 நாட்களில் தீர்வு வந்துவிடுமாம். அதன்பிறகு எமது தேசத்தில் பாலும் தேனாறும் ஓடுமாம்.
அதுசரி, குழந்தைப் போராளிகளை புலிகள் வைத்திருப்பதாக ரொம்ப அக்கறையோடு (?) ஒரு குறூப் சொல்லிக்கொண்டு திரிந்ததே. அந்த குறூப் எல்லாம் இப்ப எங்கே போய்விட்டார்கள்?
வன்னியில் வறுமையின் கொடுமையால்; குழந்தைகள் சாவது அவர்களின் கண்ணுக்கு இப்போது ஏன் தெரிவதில்லை?

•கைதிகள் விடுதலை கோரி தற்கொலை செய்த மாணவன் செந்தூரனை நினைவு கூர்வோம்!

•கைதிகள் விடுதலை கோரி தற்கொலை செய்த
மாணவன் செந்தூரனை நினைவு கூர்வோம்!
கடந்த வருடம் இதே காலங்களில் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ் மாணவன் செந்தூரன் தன் உயிர் ஈர்த்தான்.
அவனது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசு அவனது மரணத்தைக்கூட மதிக்கவில்லை.
தனது குடும்பம் ஏழ்மை நிலையில இருந்தும் அதனைப் பொருட்படுத்தாது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக செந்தூரன் தன் உயிர் கொடுத்தான்.
தான் தற்கொலை செய்தால் தனது மரணம் எழுச்சியைக் கொடுக்கும். அது கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என அந்த அப்பாவி மாணவன் நம்பினான்.
இலங்கை அரசு மட்டுமல்ல தமிழ் தலைவர்கள்கூட மாணவன் செந்தூரன் இழப்பை மறந்துவிட்டனர். அவர்களுடைய கவனம் எல்லாம் தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில்தானே இருக்கிறது.
நடிகைராதாவையும் அவர் மகள் கார்த்திகாவையும் அழைத்து வந்து யாழ் டில்கோ ஓட்டலில் ஆடுபவர்கள் மாணவன் செந்தூரனை நினைவில் வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ம் திகதி கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த வருடம் நவம்பர் 7ம் திகதியும் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இன்னும் எத்தனை செந்தூரன்கள் இறந்த பின்பு இந்த விடயத்தை சம்பந்தர் அய்யா கவனத்தில் எடுப்பார் என்று தெரியவில்லை.
ஒரு வாழ வேண்டிய இளம் சிறுவன் மரணித்த பின்புகூட இந்த கிழட்டு அரசியல்வாதிகளுக்கு உணர்வு வரவில்லை என்றால் தமிழ் மக்கள் என்னதான் செய்ய முடியும்?

•இது தேவைதானா?

•இது தேவைதானா?
புலம்பெயர் நாடுகளில் உள்ள சிலர் தம் மகளின் சாமர்த்திய சடங்கை பெரிய விழாவாக நடத்துவதுடன் அதனை பெருமையாக முகநூல்களிலும் பதிவு செய்கின்றனர்.
இது குறித்து பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் இவ்வாறான சம்பவங்கள் தொடரவே செய்கின்றன. அண்மையில் ஜெர்மனியில் இப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கீழ்வரும் இணைப்பில் அதனை காணலாம்.
பெண்கள் பருவமடைவது என்பது அவர்களது உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான மாற்றம்தானே. அதற்கு எதற்கு விழா எடுக்க வேண்டும்?
பழைய காலத்தில் தமது வீட்டில் ஒரு பெண் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறான சடங்குகள் தோன்றியிருக்க கூடும்.
ஆனால் இன்று அதுவும் வெளி நாடுகளில் இவை தேவைதானா? அதுவும் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டுமா?
உண்மையில் இந்த சடங்கால் சம்பந்தப்பட்ட பெண் பிள்ளைகள்கூட சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுடன் கூடப் படிக்கும் வெள்ளையின மாணவர்களால் இது கேலி செய்யப்படுகின்றது.
அதுமட்டுமன்றி வன்னியில் வறுமையின் கொடுமையினால் பெத்த பிள்ளைகளையே கிணற்றில் வீசிக் கொல்லும் அவல நிலை இருக்கும்போது வெளிநாடுகளில் இப்படி ஊதாரிச் செலவு செய்வது நியாயமா?
இன்னும் சிலர் கிரடிக்காட்டில் கடன்பட்டு இப்படி ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தில் மேலும் பிரச்சனைகள் உருவாகின்றன.
சாமத்திய சடங்கு செய்வது ஒரு பெற்றோரின் சொந்த விருப்பம். அது குறித்து கேள்வி கேட்க முடியாது என்று கருத்து எழுத சிலர் வருவார்கள்.
பிறந்த நாளின் பெயரால், திருமணத்தின் பெயரால் எல்லாம் ஆடம்பர நிகழ்வுகள் நடக்கும்போது சாமத்திய சடங்கின் பெயரால் ஆடம்பர செலவு செய்வது என்ன தவறு என்று இன்னும் சிலர் கேட்கலாம்.
மாவீரர் பெயரால் பல மில்லியன் செலவு நடக்கிறது. அதைக் கேட்க மாட்டீர்கள். ஒரு தந்தை தனது மகளின் சந்தோசத்திற்காக செய்யும் சாமர்த்திய சடங்கை மட்டும் கேட்க வந்துவிட்டீர்கள் என்றுகூட கேட்பதற்கு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் நான் கூற விரும்புவது என்னவெனில் உலகம் உருண்டை என்று முதல் முதல் கூறியவனை முட்டாள் என்று சிறையில் அடைத்து கொன்ற வரலாறு மனிதனுக்கு உண்டு.

•தீர்வு கிடைக்க இன்னும் 37 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 37 நாட்கள் மட்டுமே!
சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 37 நாட்கள் மட்டுமே உள்ளது.
37 நாட்களுக்குள் தீர்வை பெற்று தருவதற்காக மாவை சேனாதிராசா அவர்களின் கரங்கள் அயராது உழைக்கின்றன போலும்.
அதனால்தான் அவருக்கு குடை பிடிக்க இன்னொரு தமிழரின் கரங்கள் அவருக்கு தேவையாக இருக்கின்றது போலும்.
மாவை சேனாதிராசா அவர்கள் தம் வாழ்வில் நான்கு வருட சிறைவாழ்வைத் தவிர வேறு எந்த தியாகத்தையும் செய்யாதவர்.
ஆனால் அவர் இதுவரை நான்கு தடவைகளுக்கு மேல் பாராளுமன்ற எம்.பி பதவியை பெற்று அனுபவித்துள்ளார்.
அவருடைய ஒரு மாத சம்பள மற்றும் சலுகைகள் சுமார் இரண்டு லட்சம் ரூபா. அவர் குடும்பம் இருப்பது இந்தியாவில். அவர் பிள்ளைகள் வாழ்வது லண்டனில்.
அவர் அந்த காலத்தில் இளைஞர்களை போராட்டத்திற்கு வரும்படி ஒவ்வொரு மேடைகளிலும் அறைகூவல் விடுத்தார். ஆனால் தமது பிள்ளைகளில் ஒருவரைக்கூட அவர் போராட்டத்திற்கு விடவில்லை.
அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன் மதுரையில் மருத்துவக்கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளையில (1984ல்) தமிழீழ தேசிய ராணுவம் TENA என்ற இயக்கத்தை நடத்தினார்.
தமது இயக்கத்திற்கு இளைஞர்களை எடுத்து அனுப்பும்படி இந்த மாவை சேனாதிராசாவுக்கே அப்போது அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
பகிரதன் அனுப்பிய கடிதமும் அந்த கடிதம் கொண்டு வந்த நபரும் மன்னாரி;ல் தள்ளாடி ராணுவ செக் போஸ்டில் பிடிபட்டன.
இந்த செய்தி உடனே பத்திரிகையில் வெளிவந்தன. எந்த நேரமும் மாவை சேனாதிராசா கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் அதிசயம் நடந்தது. அமிர்தலிங்கம் ஜே.ஆர் உடன் தொலைபேசியில் பேசினார். கைது செய்யப்பட்ட இளைஞன் உடனே விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டான்.
அரசியல் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துக்கொண்டு சாதாரணமான மக்களின் பிள்ளைகளை போராட வைத்தார்கள் எனபதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
அதுமட்டுமல்ல, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆபத்து வந்தபோது ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடன் தொலைபேசியில் பேசி தப்பித்துக்கொண்டார்கள் என்பதற்கும் இது ஒரு உதாரணமாகும்.
இனியாவது தமிழ் மக்கள் இந்த போலித் தலைவர்களை இனம் காண வேண்டும்.

•இவர்களை வாழ்த்துவோம்!

•இவர்களை வாழ்த்துவோம்!
டென்மார்க் நாட்டில் இன்று ரகிஸ் இராஜலிங்கம், கைடி பிற்றர்ஸன் தம்பதியர் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
அவர்கள் தமது திருமண நிகழ்வை முன்னிட்டு யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்து முதியோர்களுக்கு உணவளித்து மகிழ்ந்துள்ளனர்.
இவர்களுடைய தயவால் சுவையான உணவைப் பெற்றுக்கொண்ட முதியோர்கள் யாவரும் இவர்களுக்கு தமது வாழ்த்துகளை மனதார தெரிவித்துள்ளனர்.
வீண் பகட்டு ஆடம்பர செலவுகளை தவிர்த்து இவ்வாறான செயல்கள் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியைக் காட்டியுள்ள இராஜலிங்கம் தம்பதியினர் உண்மையில் பாராட்டுக் குரியவர்கள்.
அவர்களை பாராட்டுவதோடு அவர்களுக்கு எமது அன்பு நிறைந்த வாழ்த்துகளை தெரிவிப்போம்.
இனியாவது கெலிகப்டரில் சாமத்திய சடங்கு செய்வோர், ஆடம்பரமாக பிறந்தநாள் , திருமணம் போன்றவற்றை செய்வோர் திருந்தட்டும்.

•என்னத்தைச் சொல்ல?

•என்னத்தைச் சொல்ல?
இதோ இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் தமது கையால் தமக்கு குடை பிடிக்கிறார்கள்.
ஆனால் எமது தலைவர்களோ தமக்கு குடை பிடிக்கவும்கூட இன்னொருவரை வைத்திருக்கின்றனர்.
இது குறித்து இவர்களுக்கு வெட்கம் இல்லை. சொல்லப்போனால் பெருமையாக அல்லவா நினைக்கிறார்கள்.
வீதியில் வந்த மாணவர்கள் சுடப்படுகிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பை; பற்றி பேசவேண்டிய எமது தலைவர்கள் சம்பந்தர் அய்யாவுக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு போதாது என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள்.
சம்பந்தர் அய்யா தமிழ் மக்களின் தலைவர்தானே. அவர் தமிழ் மக்கள் மத்தியில் வருவதற்கு எதற்கு சிங்கள பொலிசாரின் பாதுகாப்பு?
சிஙகளப் பொலிசாரின் பாதுகாப்பை வைத்திருப்பதும் அல்லாமல் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லவா கேட்கிறார்கள்.
இவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் சலுகைகள் இரண்டு லட்சம் ரூபா. இவர்கள் திரிவதற்கு 8 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம். போதாக் குறைக்கு இவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு.
இத்தனை கொடுத்தும்கூட இவர்கள் குடும்பத்துடன் வாழ்வது இந்தியாவில். ஏன் இவர்களால் வாக்கு பெற்ற மக்கள் மத்தியில் வாழ முடியவில்லை?
இவர்களை தேடிச் சென்று முறையிட்டால் கண்ணை மூடிக் கொண்டு நித்திரையில் இருப்பது, அல்லது திறப்பு என் கையில் இல்லை என்று கிண்டலாக பதில் சொல்வது.
இந்த கொடுமைகளுக்கு என்னதான் முடிவு?
இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களை நாம் சகித்தக் கொள்வது?

•ஜே.வி.பி க்கு ஒரு நியாயம். புலிகளுக்கு இன்னொரு நியாயம் இதுதான் நல்லாட்சி அரசின் (இனவாத) நியாயமா?

•ஜே.வி.பி க்கு ஒரு நியாயம்.
புலிகளுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் நல்லாட்சி அரசின் (இனவாத) நியாயமா?
செய்தி - மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என குற்றம்சாட்டி அதனுடன் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது இலங்கை அரசு.
புலிகள் அமைப்பை அழிப்பதாக கூறி முள்ளிவாய்க்காலில் கடைசி இரண்டு நாளில் மட்டும் 40 அயிரம் தமிழ் மக்களைக் கொன்றது இலங்கை அரசு.
ஜே.வி.பி தலைவர் விஜயவீராவைக் கொன்ற இலங்கை அரசு அவருடைய மனைவி பிள்ளைகளைக் கொல்லவில்லை. அவர்களை பாதுகாப்புடன் படிக்க வைத்தது
ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனைக்கூட விட்டு வைக்காமல் சுட்டுக் கொன்றது இலங்கை அரசு.
விஜயவீராவுக்கு சிலை வைக்க அனுமதித்துள்ள இலங்கை அரசு பிரபாகரனின் தாய் தந்தையரின் வீட்டைக்கூட இடித்து தரை மட்டமாக்கியுள்ளது.
மறைந்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஜே.வி.பி யை அனுமதிக்கும் இலங்கை அரசு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கிறது.
இதுதான் நல்லாட்சி அரசின் நியாயமா?
இதுதான் அதன் நல்லிணக்க வழிமுறையா?

•ஆர்த்தியை வாழ்த்துவோம் !

•ஆர்த்தியை வாழ்த்துவோம் !
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரான ஆர்த்தி (Arrthii Nathan ) தற்போது இங்கிலாந்தில் தமது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மருத்துவ கல்வி மாணவியான ஆர்த்தி இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அதற்குரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
தான் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் செயற்பட்டு வருகிறார்.
தனது நீண்ட தலைமுடியை Little Princesses Trust என்னும் தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
அதுமட்டுமன்றி பண சேகரிப்பிற்காக ஒரு நாள் கேக் விற்பனையையும் தனது நண்பியுடன் சேர்ந்து செய்துள்ளார்.
Little Princesses Trust தொண்டு நிறுவனமானது சிறுவயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் ஒரு அமைப்பு ஆகும்.
ஆர்த்தி அவர்களின் நல்ல எண்ணத்தைப் பாராட்டுவோம்.
அவர் பூரண நலம் பெற்று வாழ வாழ்த்துவோம்.

•பூணூல் !

•பூணூல் !
இடுப்பில் இது இருந்தால் கோமணமாவது கட்டலாம்.
எதற்கும் பயன்படாமல் சிலர் தோளில் ஏன் தொங்குகிறது?
பாம்பின் விசத்தை விடக் கொடியது இந்த பூணூல் என்றார்களே.
அப்ப ஏன் நண்பர்களே அதை இன்னும் ஒழிக்க முடியவில்லை?
தூக்கு கயிற்றைக்கூட வெல்ல முடிந்த தமிழனால்
இந்த பூணூல் கயிற்றை வெல்ல முடியவில்லையே!
அது ஏன் நண்பர்களே?
எத்தனை ஆண்டுகள் போராடியும்
இந்த பூணூல் கயிற்றை அறுக்க முடியவில்லையே.
அது ஏன் நண்பர்களே?

•போலி என்கவுண்டர் கொலைகளை வன்மையாக கண்டிப்போம் !

•போலி என்கவுண்டர் கொலைகளை வன்மையாக கண்டிப்போம் !
கேரள பொலிஸ் மாவோயிஸ்ட்டுகள் என்னும் பேரில் 3 பேரை நேற்றைய தினம் சுட்டுக்கொன்றுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் இருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தோழர்கள் குப்புராஜ் மற்றும் அஜீதா என அறிய வந்துள்ளது. மூன்றாவது நபர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸ் கூறுகிறது.
கடந்தமாதம் ஆந்திராவில் 28 பேர் மாவோயிஸ்டுகள் என்று குறிப்பிட்டு போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அதன்பின்பு சிறைவைக்கப்ட்டிருந்த 7 முஸ்லிம்கள் மத்திய பிரதேசத்தில் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மோடி ஆட்சிக்கு வந்த பின்பு போலி மோதல் கொலைகள் அதிகரித்துள்ளன. அரசே பொலிஸ் மூலம் தண்டனை வழங்குகிறது. அப்புறம் நீதிமன்றம் , சட்டம் எல்லாம் எதற்கு?
மாவோயிஸ்டுகள் என்பதற்காக கைது செய்ய முடியாது என்று கடந்த மாதம்தான் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்று அதே கேரள பொலிஸ் மாவோயிஸ்டு என்பதற்காக 3 பேரை சுட்டுக் கொன்றதாக கூறுகிறது. கேரள பொலிசே கேரள உயர்நீதிமன்றத்தை மதிக்காவிடில் என்ன அர்த்தம்?
சுட்டுக் கொல்லப்பட்ட பெண் ஒரு வழக்கறிஞர். அவர் மீது எந்த வழக்கோ அல்லது குற்றச்சாட்டோ இல்லை. அப்புறம் எதற்காக அவரை சுட்டுக் கொன்றனர்?
கொல்லப்பட்ட 3வது நபர் யார் என்றே இன்னும் அடையாளம் காணப்படவில்லையாம். அப்புறம் அவரை ஏன் சுட்டுக் கொன்றனர்? அவர் கொடிய பயங்கரவாதி என்று எப்படி கூறுகின்றனர்?
நேற்று ஆந்திராவில். இன்று கேரளாவில் நாளை தமிழ்நாட்டில் உங்களில் யாராவது ஒருவர் இவ்வாறு கொல்லப்படலாம்.
எனவே இந்த போலி மோதல் கொலைகளுக்கு முடிவுகட்ட அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்.

•விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை- பிடல் காஸ்ட்ரோ

•விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை- பிடல் காஸ்ட்ரோ
அமெரிக்க இரட்டைக்கோபுரம் குண்டுத் தாக்குதலில் அழிக்கப்பட்தையடுத்து பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரை அமெரிக்கா பிரகடனம் செய்தபோது ஹவானாவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காஸ்ட்ரோ " அமெரிக்காவும மேற்குலக வல்லாதிக்க நாடுகளும் சேர்ந்து உலக வரை படத்தில் இருந்து அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான முக்கியமான வேறுபாட்டை அழித்துவிடப் போகின்றன" என்று சொன்னார்.
ஆம். இது உண்மைதான் என்பதை நாம் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் கண்டோம். இந்தியாவில் மாவோயிஸ்ட் அழிப்புகளில் கண்டு வருகின்றோம்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிடல் காஸ்ரோ. இன்று அவர் மறைவை அடுத்து இந்தியா தனது உற்ற நண்பனை இழந்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆனால் இதே மோடிதான் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி போலி மோதல்கள் மூலம் சுட்டுக் கொன்று வருகின்றார்.
மறைந்த பிடல் காஸ்ரோ அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர் இந்திய மாக்ஸ்சிட் கம்யுனிட் கட்சியினர். ஆனால் இதே மாக்ஸ்சிஸ்ட் கட்சியினர் ஆட்சி செய்யும் கேரள அரசுதான் இரண்டு தினங்களுக்கு முன்னர் 3 பேரை மாவோயிஸ்டுகள் என்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்ட்டவர்களில் ஒருவர் பெண் வழக்கறிஞர். அவர் மீது எந்த வழக்கோ குற்றச்சாட்டுகளோ இல்லை. ஆனால் அவரையும் கேரள கம்யுனிஸ்ட் அரசு சுட்டுக் கொன்றுள்ளது.
ஒருபுறத்தில் மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டு மறுபுறத்தில் பிடல் காஸ்ரோவிற்கு வீர வணக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர் இந்த போலிக் கம்யுனிஸ்டுகள்.
இந்த இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் முதலில் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பாராளமன்ற பாதைக்கு சென்று தம்மை திரிபுவாதிகளாக காட்டிக் கொண்டனர்.
தற்போது மாவோயிச போராளிகளை சுட்டுக் கொல்வதன் மூலம் தாமும் இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
உலகில் எங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் நடைபெறுகிறதோ அங்கு எல்லாம் பிடல் காஸ்ரோ உயர்த்திப் பிடிக்கப்பட்டார்.
அந்தவகையில் இலங்கையிலும் தமிழ் மக்களால் பிடல் காஸ்ரோ மிகவும் மதிக்கப்பட்டார். ஆனால் பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது தமிழ் மக்;களுக்கு விரோதமாக இலங்கை அரசின் இனப்படுகொலையை ஆதரித்தது.
பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு வழங்கிய ஆதரவானது தமிழ் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வலியைவிட அதிகமானது.
இந்த கசப்பான உண்மைகளை மறந்து பிடல் காஸ்ரோவை என்னால் போற்ற முடியவில்லை என்பதை தயவுடன் கூறிக்கொள்கிறேன். என்னை மன்னித்து கொள்ளுங்கள்.
எனக்கு காஸ்ரோவைவிட என் தமிழ் இனம்தான் பெரிது. முக்கியமானது.

•கவிதை குறித்த உரையும் சமூக அரசியல் கலந்துரையாடலும்!

•கவிதை குறித்த உரையும்
சமூக அரசியல் கலந்துரையாடலும்!
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நேற்று (26.11.16) மாலை 5.30 மணியளவில் கவிதை குறித்து உரையும் சமூக அரசியல் கலந்துரையாடலும் நடைபெற்றது.
தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் இரு அமர்வுகளாக இவ் நிகழ்வுகள் ஈஸ்ட்காம் தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றன.
முதலாம் அமர்வில் புஸ்பராஜன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
முதலில் முரளி சண்முகவேலன் அவர்கள் அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ரம்ப் இன் வெற்றி குறித்து தனது பார்வையை முன்வைத்தார்.
அதையடுத்து தோழர் வேலு அவர்கள் துயர் நடுவே வாழ்வு என்னும் திகார் பெண்களின் கண்ணீர் கவிதைகள் பற்றி உரையாற்றினார்.
அடுத்து சந்தூஸ் பரராசசிங்கம் அவர்கள் குவண்டனமோ கவிதைகள் (கைதிகளின் குரல்) பற்றி உரையாற்றினார்.
சிறிது நேர தேனீர் இடைவேளைக்கு பின்பு இரண்டாவது அமர்வு ஆரம்பமானது.
இரண்டாவது அமர்வு பௌசர் தலைமையில் நடைபெற்றது.
அதில் பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் அவர்கள் போருக்கு பின் வடக்கு கிழக்கில் கல்வி மற்றும் சமூக நிலை குறித்து உரையாற்றினார்.
இறுதியில் பார்வையாளர்களின் கருத்து பரிமாற்றங்களுடன் 9.30 மணியளவில் நிகழ்வு முடிவுற்றது.

•தமக்காக மாண்டவருக்காக தமிழ் மக்கள் நினைவு கூருவதும் ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது!

•தமக்காக மாண்டவருக்காக தமிழ் மக்கள் நினைவு கூருவதும்
ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது!
மாவீரர்களை நினைவு கூர முடியாது என்றார்கள்
அவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள்
வன்முறையாளர்களை ஆதரிக்க முடியாது என்றார்கள்
எத்தனையோ தடைகளைப் போட்டுப்; பார்த்தார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் அத்தனை தடைகளையும் தாண்டினார்கள்
ஏனெனில் மாண்டவர்கள் அவர்களது உறவுகள் அல்லவா!
தமிழ் மக்கள்,
முதலில் உரிமைகளை இழந்தார்கள்.
பின்பு உடமைகளை இழந்தார்கள்.
இறுதியில் உயிர்களையும் இழந்தார்கள்.
ஆனால் அவர்கள் உணர்வுகளை இழக்கவில்லை.
எனவேதான் எழுக தமிழாக திரண்டார்கள்.
ஆயிரமாக திரண்டு மாவீரர்களையும் நினைவு கூர்கிறார்கள்.
மாண்டவர்களை வெறுமனனே நினைவு கூர்வதாயின்
வீட்டில் ஒரு மூலையில் அழுதுவிட்டுப் போயிருப்பார்கள்.
எதற்காக இத்தனை செலவு செய்து ஒன்று கூடுகிறார்கள்?
ஏன் ஒருமித்து ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்?
புலத்தில் இருப்பவர்கள் தமது வியாபாரத்திற்காக
மாவீரர் கொண்டாடுவதாக தூற்றினார்கள்.
தமிழ்நாட்டில் அஞ்சலி செய்பவர்கள்
புலிகளின் காசுக்காய் கூவுவதாய் புலம்பினார்கள்.
போராடியவர் தாயகத்தில் வறுமையில் வாட
புலத்தில் ஆடம்பர மாவீரர் விழா தேவைதானா எனவும்
அவர்கள் கேள்விகள் கேட்டார்கள்.
ஆனால் அத்தனை கேள்விகளுக்கும்
தமிழ் மக்கள் பதில் அளித்துள்ளனர்.
மாவீரர் நினைவு என்பது வெறும் அஞ்சலி மட்டுமல்ல
அது அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் இன்னொரு வடிவம்என்று உணர்வு பூர்வமாய் காட்டுகின்றார்கள்.
அதனால்தான்,
புதர்பற்றிய மாவீரர் இல்லங்களை
கூட்டிச் சுத்தம் செய்கின்றனர்.
உடைந்துபோன கற்குவியலில்
மாவீரர்களை தேடுகின்றனர்.
புலத்தில் மட்டுமா தமிழன் அஞ்சலி செலுத்துகிறான்
இம்முறை தாயக மண்ணிலும் அல்லவா அஞ்சலி நடைபெற்றது.
அதுமட்டுமா? தமிழகத்தில்கூட பல நிகழ்வுகள் நடக்கின்றனவே
ஒன்றுகூட முடியாதவர்கள் முகநூல்களில் அஞ்சலி செய்கின்றனர்.
அஞ்சலிப் பதிவுகளால் முகநூல் என்றுமில்லாதவாறு நிரம்பி வழிகிறது.
இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன?
எத்தனை அடக்குமுறை செய்தாலும்
எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும்
தமிழ் மக்கள் தமது உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டாகள் என்பதையன்றி வேறு என்னவாக இருந்தவிட முடியும்?

•இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் குழந்தைகள் அல்லர்

•இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் குழந்தைகள் அல்லர்.
தமது தாய் தந்தையரின் இழப்பிற்கு ஒருநாள் நிச்சயம் நியாயம் கேட்பார்கள்
காஸ்மீர் மற்றும் பாலஸ்தீன குழந்தைகள் போல் இவர்களும் டாங்கிகளை கல்லால் அடிப்பதற்கு தயங்கமாட்டார்கள்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நாளைய போராட்டத்தில் வெடிக்கப்போகும் குண்டுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இவை அணுகுண்டுகளைவிட சக்தி மிக்கவை என்பதை எதிரி நிச்சயம் தனது அனுபவத்தில் உணர்ந்து கொள்ளப் போகிறான்.

•சீமான் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் !

•சீமான் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் !
வேண்டாத மாமி கைபட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம் என்பதுபோல் சிலர் தமக்கு பிடிக்காத சீமான் மீது விசிலடித்தார் என்று விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
சீமான் மீது எத்தனையோ ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்க முடியும். அதைவிடுத்து அவர் விசிலடித்தார் என்று வைக்கும் விமர்சனங்களால் என்ன பயனை பெற்றுவிட முடியும்?
“அவர்கள் கப்பலில் வந்தார்கள். தங்கள் கையில் இருந்த பைபிளை எம்மிடம் தந்தார்கள். எங்கள் கையில் இருந்த நாட்டை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்”. இது ஒரு ஆப்பிரிக்க நாட்டு கவிஞனின் கவிதை வரிகள்.
ஆனால் எதையுமே தராமலே இந்திய அரசு இலங்கை நாடு முழுவதையுமே ஆக்கிரமித்துவிட்டதே. இதை எழுத எந்த கவிஞனும் எமிமிடம் இல்லையே
இந்தியாவுக்கு,
•சம்பூர் கொடுத்தாயிற்று
•புல்மோட்டை கொடுத்தாயிற்று
•மன்னார் எண்ணெய்வயல் கொடுத்தாயிற்று
•பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று
•காங்கேசன் துறைமுகமும் சீமெந்தும் கொடுத்தாயிற்று
•திருகோணமலை துறைமுக குதங்கள் கொடுத்தாயிற்று
மிஞ்சி இருப்பது கோமணம் மட்டுமே அதையும் எப்போது உருவிக் கொடுக்கப்போறாங்களோ தெரியவில்லையே?
ஒரு பக்கம் இலங்கை அரசு ஒடுக்கிறது. மறுபக்கம் இந்திய அரசு ஆக்கிரமிக்கிறது தமிழன் எப்படி நீட்டி நிமிர்ந்து உறங்குவது?
இந்த அவலத்தை சீமானுக்கு எடுத்துக் கூறுங்கள். அவரது போராட்டம் இந்திய ஆக்கிரமிப்பு எதிராக அமையட்டும்.

•கண் உள்ளவர் பாருங்கள் காது உள்ளவர் கேளுங்கள் மனட்சாட்சி உள்ளவர் புரிந்து கொள்ளுங்கள்

•கண் உள்ளவர் பாருங்கள்
காது உள்ளவர் கேளுங்கள்
மனட்சாட்சி உள்ளவர் புரிந்து கொள்ளுங்கள்
ஒரு தாய்க்கு தன் மகன் இறந்த துயரத்தை விட ,அவன் புதைத்த இடத்தை கண்டறிய “அம்மா என்று ஒருமுறை கூப்பிடு” என்று கேட்கும் அவலம் இருக்கிறதே அதைவிட கொடிய வலி என்னவாக இருக்கும் இந்த பூமியில்?
இதயம் உள்ளவர்கள் ஒருமுறை கேளுங்கள் இந்த தாயின் குமுறலை.
என்ர அய்யா ! என்ர செல்லமே!
நான் பெத்த செல்லக் குட்டியே!
என்ர தெய்வமே! தெய்வமே!
இப்படிக் குடுத்து வச்சனியே!
உன்ர இடத்தைக் காட்டு அம்மாவுக்கு!
இப்படி காடு பத்தினால் நான் எங்கே அய்யா உன்னை தேடிப் பிடிப்பது?
என்ர செல்லமே!
அம்மா ன்னு கூப்பிடு ஒருக்கால்
அம்மா ஓடி வாரன் கூப்பிடு அய்யா!
என்ர அய்யா! என்ர அய்யா !
வருசா வருசம் வீட்டில் இருந்து கத்தினேனே அய்யா
இந்த வருசம் இதையென்றாலும் எனக்கு காட்டு அய்யா
கூப்பிடு அய்யா! ஒரு முறை அம்மா ன்னு கூப்பிடு அய்யா!
கொதிக்குது அய்யா ! வயிறு கொதிக்குது அய்யா!
பி.கு- இந்த தாயின் குமுறலே ஈழத் தமிழர்களின் தேசியகீதம்!

•இளநீர் குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவர்களை பிடிக்கிறார்கள்!

•இளநீர் குடித்தவன் இருக்க
கோம்பை நக்கியவர்களை பிடிக்கிறார்கள்!
செய்தி- முன்னாள் அமைச்சர் கருணா கைது
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கருணா கைது செய்யப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
கருணா மீது பல கொலைக் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவற்றுக்காக அவர் கைது செய்யப்படவில்லை.
ரவிராஜ் கொலையில் அவருக்கு பங்கு உண்டு என்று விசாரணையில் தெரிய வந்த பின்பும்கூட அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை.
பல ஆள் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களில் அவர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவற்றுக்காக கருணா கைது செய்யப்படவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் குறிப்பாக பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை கருணாவின் உத்தரவிலேயே நடந்தது என்று குற்றச்சாட்டு உண்டு. அதற்காகவும்கூட கருணா கைது செய்யப்படவில்லை.
வெறும் நிதி மோசடிக்காக கருணா கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த அரசு நடவடிக்கை எடுப்பதாக காட்டுவதற்கேயொழிய கருணாவை தண்டிப்பதற்காக அல்ல.
நிதிமோசடிக்காக கருணா கைது செய்யப்பட்டிருப்பது உண்மை என்றால் அவரைவிட பன்மடங்கு நிதி மோசடி செய்த மகிந்த ராஜபக்ச ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?
மகிந்தவைக் கைது செய்யாமல் கருணாவை கைது செய்தமை இளநீர் குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவனை பிடித்த கதையன்றி வேறு என்ன?
இந்த ஆட்சியில் பசில் ராஜபக்ச , நாமல் ராஜபக்ச, விமல் வீரவம்ச ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் உடனேயே பினையில் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் பிள்ளையானுக்கு இன்னும் பிணை வழங்காமல் இருப்பது ஏன்?
தான் ஆட்சிக்கு வந்தால் கே.பி யை விசாரித்து அவர் வசம் இருக்கும் பல கோடி ரூபாக்களை கைப்பற்றுவேன் என்று ரணில் கூறியிருந்தார்.
ஆனால் இதுவரை கே. பி மீது எந்த விசாரணையும் செய்யவில்லையே. அவர் மகிந்த ஆட்சியில் திரிந்தது போல் சுதந்திரமாகவும் சொகுசாகவும் திரிகிறாரே. அது ஏன்?
ஒருவேளை வழக்கம்போல் அவருடனும் இரகசியமாக “ டீல்” பேசி முடித்து விட்டார்களா என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.
விமல் வீரவம்ச வீட்டிற்குள்ளேயே ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஆனால் இன்னும் வீரவம்ச கைது செய்யப்படவில்லை. விசாரணைகூட செய்யப்படவில்லை. அது ஏன்?
ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது என்றும் அதனால்தான் மகிந்த கும்பல் மீது உண்மையான , கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
அந்த சந்தேகம் உண்மைதான் என்பதை நிரூபிப்பது போன்று இளநீர் குடித்தவர்களை விட்டு கோம்பை நக்கியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

Sunday, November 20, 2016

•ஹிலாரி பதவிக்கு வந்தால் ஈழத் தமிழருக்கு நன்மை பயக்குமா?

•ஹிலாரி பதவிக்கு வந்தால் ஈழத் தமிழருக்கு நன்மை பயக்குமா?
ஒபாமா பதவிக்கு வரும்போது வைகோ நேரில் ஒபாவை சந்தித்து தான் எழுதிய புத்தகத்தை கொடுத்து அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
ஒபாமா பதவிக்கு வந்தால் ஈழத் தமிழருக்கு நன்மை கிடைக்கும் என அப்போது கூறப்பட்டது. அவ்வாறு தமிழ் மக்கள் நம்பவைக்கப்பட்டது.
ஆனால் பதவிக்கு வந்த ஒபாமா தமிழ் மக்களுக்கு எதுவும் நன்மை செய்யவில்லை. மாறாக அவருடைய காலத்தில்தான் அமெரிக்க அரசின் உதவியோடு முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தது.
அதேபோல் இப்போது ஹிலாரிக்கான தமிழர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நல்லூரில் பிரார்த்தனை செய்யப்போவதாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
ஹிலாரி இதுவரை தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. இனியும் தான் பதவிக்கு வந்தால் என்ன செய்வேன் என்று எதையும் கூறவில்லை. அப்படியிருக்க எதற்காக ஹிலாரிக்கு தமிழர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்?
ஒபாமா தமிழருக்கு மட்டுமல்ல தனது கறுப்பு இன மக்களுக்கே எதையும் செய்யவில்லை. அதேபோல் முதல் பெண் ஜனாதிபதி என்ற புகழ் பெறப்போகும் ஹிலாரியும் தமிழருக்கு மட்டுமல்ல அமெரிக்க பெண்களுக்குகூட எதையும் செய்யப் போவதில்லை.
எந்த அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அதன் வெளியுறவுக் கொள்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.
இந்த உண்மை வைகோ விற்கு மட்டுமல்ல சிவாஜிலிங்கத்திற்கும் நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் மக்களின் கவனத்தை திருப்பி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தமது விசுவாசத்தை காட்டுகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர் “மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது” என சிவாஜிலிங்கம் அறிக்கை வெளியிட்டார். இப்போது ஹிலாரிக்காக நல்லூர் முருகனிடம் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம் ஒரு அறிக்கைப் பிரியர். அவருக்கு எப்பவும் எப்படியாவது தனது பெயர் பத்திரிகையில் வரவேண்டும் என விரும்புவார். அதற்காக விதம் விதமாக அறிக்கை விட்டுக்கொண்டேயிருப்பார்.
நிராகரிக்கப்பட்ட இந்தியன் விசா மீண்டும் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக யாழ் இந்திய துணை தூதரின் மனதை குளிர்விக்க சிவாஜிலிங்கம் இவ்வாறான அறிக்கைகள் விடுவதாக பத்திரிகை நண்பர்கள் கூறுகிறார்கள்.
சிவாஜிலிங்கத்தின் அறிக்கைகளை இந்தியா கவனிக்கிறதோ தெரியவில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒருபோதும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.