Friday, March 31, 2017

•வரலாற்றில் இடம் பிடித்த கேப்பாப்பிலவு மக்களின் போராட்ட வெற்றி சொல்லும் சேதி என்ன?

•வரலாற்றில் இடம் பிடித்த கேப்பாப்பிலவு மக்களின்
போராட்ட வெற்றி சொல்லும் சேதி என்ன?
தமது நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு கோரி கடந்த 29 நாளாக போராடிய கேப்பாப்பிலவு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கேப்பாப்பிலவு மக்களின் இந்த போராட்ம் தமிழ் மக்களின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
யுத்தம் முடிந்து 7 வருடமாகியும் அந்த மக்களது நிலத்தை ராணுவம் ஒப்படைக்கவில்லை. தமிழ் தலைவர்களும் இது குறித்து அக்கறை எடுக்கவில்லை.
எனவே வேறு வழியின்றி அந்த மக்கள் தமது நிலத்திற்காக தாமே போராட்டத்தை ஆரம்பித்தனர்.
7 வருடமாக கிடைக்காத நிலத்தை 29 நாள் போராட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இந்த மக்களின் வெற்றி சொல்லும் சேதி,
(1) போராட்டம் தோல்வியை தருவதில்லை. அது எப்போதும் வெற்றியை தருகிறது.
(2) நிலம் கிடைக்கும் வரை போராடுவது என்பதில் உறுதியாக இருந்தனர். அந்த உறுதி வெற்றியைக் கொடுத்துள்ளது.
(3) இலங்கை வரலாற்றில் 29 நாட்கள் குழந்தைகள் தமது நிலத்திற்காக போராடியது இந்த போராட்டம் மட்டுமே..
(4) போராட்டம் இன்பகரமானது என்பதை அந்த குழந்தைகள் நிரூபித்து காட்டினார்கள்
.
(5) போராட்டம் குழந்தைகளுக்கு இலக்கியத்தை மட்டுமல்ல கல்வியையும் களத்தில் கொடுத்தது.
(6) குழந்தைகளின் போராட்டம் தமிழ் மக்களின் ஆதரவை மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் இன மக்களது ஆதரவினையும் பெற்றுக் கொடுத்தது.
(7) சம்பூரை அடுத்து கேப்பாப்பிலவு மக்கள் சாதித்து காட்டியுள்ளனர். இது மற்ற போராட்டங்களுக்கு உற்சாகத்தையும் உறுதியையும் கொடுத்துள்ளது
.
(8) எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை கேப்பாப்பிலவு மக்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.
மாபெரும் வெற்றியை பெற்றுள்ள அந்த குழந்தைப் போராளிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

•மலையக மக்களின் 200 வருட துயரம் !

•மலையக மக்களின் 200 வருட துயரம் !
இலங்கையில் தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கென தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்களின் 200 வது வருடம் இதுவாகும்.
வரும்போதும் அவர்கள் மிகுந்த வேதனையை அனுபவித்தார்கள். அதன்பின் இன்றுவரை அவர்களின் துயரம் தொடர்கிறது.
இலங்கைக்கு அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் அவர்களின் வாழ்விற்கு போதிய வருமானம் இதுவரை வழங்கப்படவில்லை
அன்று ஆங்கிலேயர் கட்டிக்கொடுத்த லயன்களிலேயே இன்றும் வாழ்கின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் மண் சரிவில் அவர்கள் புதைகின்றபோது வீடு கட்டி தருவதாக வாக்குறுதி வழங்கப்படும். ஆனால் இதுவரை வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை.
அவர்கள் கூலி என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் வடக்கத்தையான் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் தமிழர்கள் என்று அழைக்கப்படவில்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது அவர்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் மிக விரைவில் அவர்கள் அனைவரினதும் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
இன்று அவர்கள் தம்மை மலையக தமிழர் என அழைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி 6 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர்களின் தலைமை என்று கூறிக்கொண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்படி ஏமாற்றுகின்றதோ அதேபோன்று மலையக மக்களின் தலைமை என்று கூறிக்கொண்டு இதொக ஏமாற்றுகின்றது.
பதவி பெற்று சம்பந்தர் அய்யா எப்படி பூர்வீக தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றாரோ அதேபோன்று அறுமுகம் தொண்டமான் மலையக தமிழ்மக்களுக்கு துரோகம் இழைக்கின்றார்.
இங்கு சோகம் என்னவெனில் இடதுசாரிகள்கூட அந்த மக்களை வென்றெடுத்து அவர்களுக்காக போராட தவறிவிட்டார்கள்.
இழப்பதற்கு தமது உயிரை தவிர வேறு எதுவுமற்ற மக்களே புரட்சிக்கு தலைமை தாங்க முடியும் என்று மாக்ஸ் கூறினார். அதன்படி இலங்கை புரட்சிக்கு தலைமை தாங்ககூடிய தகுதி கொண்ட மக்கள் மலையகத்தில் வாழும் 10 லட்சம் உழைக்கும் மக்களே.
வடக்கு கிழக்கு மக்கள் முன்வைத்த தமிழீழ தீர்வால் மலையக மக்களுக்கு பயன் இல்லை என்றாலும் கணிசமான மலையக இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்றும்கூட சிறைகளில் மலையக தமிழ் இளைஞர்கள் வாடுகின்றார்கள்.
புலிகளின் தளபதியாக இருந்த கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் புலிகளுக்கு சாப்பாடு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் மலையகத்தை சேர்ந்த ஒரு வயதான தாயார் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த வருடம் சிறையிலேயே மரணமடைந்தார்.
மலையக மக்களும் தமிழர்கள்தான். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா இதவரை ஒருநாள்கூட மலையக மக்களுக்காக குரல் கொடுத்தது இல்லை.
200 வருடங்கள் அவர்கள் பட்ட துன்பம் போதும். இனியாவது அவர்கள் வாழ்வு மலர வேண்டும்.

•கலியாண வீட்டுக்கு போனால் தானே மாப்பிளையாகவும் செத்தவீட்டுக்கு போனால் தானே பிணமாகவும் இருக்க ஆசைப்படும் சிறீதரன் எம்.பி.

•கலியாண வீட்டுக்கு போனால் தானே மாப்பிளையாகவும்
செத்தவீட்டுக்கு போனால் தானே பிணமாகவும் இருக்க
ஆசைப்படும் சிறீதரன் எம்.பி.
தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு இப்ப ஒரு நோய் பிடித்திருக்கு. எந்த விழாவிலும் தானே முன்னுக்கு நிற்க வேண்டும் என்று.
இதனால் தமிழ் மக்களுக்கு எதும் தீங்கு நடக்குமா என்று அவர் யோசிப்பதில்லை. கவலைப்படுவதும் இல்லை.
மாவீரர் நிகழ்வு என்றால் தானே தீபம் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பார். கோயில் விழா என்றால் தனக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்பார்.
ஆமி தளபதிக்கு விழா எடுத்தாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்தாலும் அதையிட்டு அவருக்கு கவலை இல்லை.
ஜரோப்பாவில் கடும் குளிருக்கு மத்தியிலும் ஜ.நா வில் நீதி கோரி மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ராணுவம் தமிழ் விதவை பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே குற்றம் சாட்டியிருக்கிறார்.
இப்போதும் இளைஞர்களுக்கு சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் நிகழ்வதாக பிரிட்டன் லேபர் கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால் நமது சிறீதரன் எம்.பி கோயில் விழாவில் அதே ராணுவத்தின் தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவம் வழங்கிறார்.
இத்தகைய செயல் தமிழ் இனத்திற்கு எந்தளவு கேடானது என்பது சிறீதரன் எம்.பிக்கு தெரியவில்லையா? அல்லது அது குறித்து அவருக்கு அக்கறை இல்லையா?
அவர் விரும்பியிருந்தால் கோயிலில் ராணுவ தளபதிக்கு கௌரவம் வழங்குவதை தடுத்திருக்கலாம். அல்லது தான் அந்த விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கலாம்.
யாழ் குடாநாட்டில் குடிதண்ணீருக்கு பஞ்சம் உள்ளது. எனவே அதனைப் போக்குவதற்காக இரணைமடுக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு திட்டம் போடப்பட்டது. அதற்குரிய பணமும் உலக வங்கி வழங்க முன்வந்தது.
ஆனால் சிறீதரன் எம்.பி தனது அரசியல் சுயநலத்திற்காக அதனை தடுத்து விட்டார். அவரால் யாழ் குடாநாட்டு மக்களுக்கு குடி தண்ணீர் வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று அரசியல் செய்த அதே சிறீதரன் எம்.பி 5 கோடி ரூபாவுக்கு யாழ்ப்பாணத்தில் நல்லூரில இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு குடி தண்ணீர் வழங்க மறுத்த அதே சிறீதரன் எம்.பி தனது பிள்ளைகளை அதே யாழ்ப்பாணத்தில்தான் படிக்க வைக்கிறார்.
வாக்கு போட்ட மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர். ஆனால் பதவி பெற்ற சிறீதரன் எம்.பி தனது சொகுசு வாகனத்தை விற்று 7 கோடி ரூபா பெற்றுள்ளார்.
பாவம் தமிழ் மக்கள். இவரை நம்பி ஏமாறுகின்றார்கள்.

•இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து கோரி ஆறாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்!

•இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து கோரி
ஆறாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்!
இந்தோனேசியாவில் உள்ள தமிழர்கள் தமக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி ஆறாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக இதுவரை எந்தவொரு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும் குரல் கொடுக்கவில்லை.
சம்பந்தர் அய்யா தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மட்டுமல்ல பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரும் ஆவார். அவர் குரல் கொடுக்க வேண்டியது கடமையாகும். ஆனால் அவர் குரல் கொடுக்கவில்லை.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்க ஜ.நா சென்றுள்ள சுமந்திரனாவது இந்த அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று ஜ.நா அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்திடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவரும் கேட்க விரும்பவில்லை.
கனடா ஒவ்வொரு வருடமும் 3 லட்சம் அகதிகளை உள் வாங்குகிறது. அண்மையில் சிரிய அகதிகளை கூட உள்வாங்கியுள்ளது. எனவே கனடா வாழ் தமிழ் அரசியல் பிரமுகர்கள் இது குறித்து கனடா அரசுடன் பேசி இந்த அகதிகளை உள்வாங்குவதற்கு முயற்சி செய்யலாம்.
கனடாவில் பராளுமன்ற உறுப்பினராக தமிழர் ஹரி ஆனந்தசங்கரி உள்ளார் அவர் அரசுடன் இது குறித்து பேசி ஏற்பாடுகளை செய்ய முன்வரவேண்டும்.
நியூசிலாந்தில் உள்ள அகதிகள் தொண்டு நிறுவனங்கள்கூட இந்த இந்தோனேசிய அகதிகளை உள்வாங்குதற்கு முயற்சி செய்ய முடியும். முயற்சி செய்ய வேண்டும்.
முதலில் இவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று இந்தோனேசிய அரசை வற்புறுத்த வேண்டும். அடுத்து இவர்களை கனடா அல்லது நியூசிலாந்து நாட்டிற்கு வரவழைக்க முயற்சி செய்ய வேண்டும்.
இதற்குரிய முயற்சிகளையும் ஏற்பாடுகளையும் செய்வதற்கு தமிழ் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
குரல் கொடுக்க முன்வருவார்களா?

“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.

“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.
தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் இன்று ஆகும்.(04.03.2017)
புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர்.
தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர்.
1983 க்கு முன்னர் பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர். பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர் அல்லது வெளிப்படையாக தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.
புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,
"சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினேன். அடுத்து உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார். எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன். வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கிறது. மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்".
"நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்".
இது பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர். பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
புலவர் தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை ஈழத் தமிழர்களுக்கு உறுதியான ஆதரவை வழங்கியுள்ளார்.
அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்ட்டார்.
வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபொதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபொதும் அவர் கைவிட்டதில்லை.
தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.

•தலைமையை தெரிவு செய்வது மக்களேயன்றி இந்திய துணைதூதர் அல்ல!

•தலைமையை தெரிவு செய்வது மக்களேயன்றி இந்திய துணைதூதர் அல்ல!
சம்பந்தர் அய்யாவின் பின்பு தலைமையேற்க தான் தயார் என்று சிறீதரன் எம்பி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரிடம் தெரிவித்துள்ளார்.
முதலாவது, 
தமிழ் மக்கள் தமக்குரிய தலைமையை தாங்களே தெரிவு செய்வர். தமிழ் மக்களுக்கு யார் தலைமை வகிக்க வேண்டும் என்பதை இந்திய துணை தூதர் தீர்மானிக்க முடியாது.
இரண்டாவது,
சிறீதரன் தனக்கு தலைமைப் பதவியில் விருப்பம் இருந்தால் அதனை தமிழ் மக்களிடம் நேரடியாக கூறவேண்டுமேயொழிய இந்திய துணை தூதரிடம் கூறவேண்டியதில்லை.
மூன்றாவது,
இத்தனை அழிவுக்கும் பின்னர் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்தியாவிடம் தலைமை பதவியை கோருபவர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க எந்தவித தகுதியும் அற்றவர்.
சம்பந்தர் அய்யாவுக்கு பின் தலைமையேற்க தயார் என்று சிறீதரன் எம்.பி அவர்களால் கூறமுடியாது. மாறாக
சம்பந்தர் அய்யா போன்று இந்திய விசுவாசியாக இருப்பேன் என்று கூற சிறீதரனுக்கு தகுதி உண்டு.
சம்பந்தர் அய்யா போன்று தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பேன் என்று கூற சிறீதரன் எம்.பிக்கு தகுதி உண்டு.

•தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் தமிழக மீனவனை சுடும் தைரியம் இலங்கை கடற்படைக்கு இருந்திருக்குமா?

•தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் தமிழக மீனவனை
சுடும் தைரியம் இலங்கை கடற்படைக்கு இருந்திருக்குமா?
எதிரிநாடுகூட எல்லை தாண்டும் மீனவனை சுடுவதில்லை. ஆனால் நட்பு நாடு என்னும் இலங்கை தொடர்ந்து தமிழக மீனவனை சுட்டுக் கொல்கிறது.
இப்போது இலங்கையில் யுத்தம் இல்லை. புலிகளின் ஆபத்தும் இல்லை. அப்படியிருக்க எதற்காக தமிழக மீனவனை சுட்டுக் கொல்ல வேண்டும்?
டில்லியில் பேச்சுவார்த்தை நடந்த பிறகு துப்பாக்கி சூடு நடக்கிறது என்றால் என்ன அர்த்தம்? டில்லிதான் தமிழக மீனவனை சுடும்படி கூறியுள்ளதா?
இதுவரை 600 தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்திய அரசு ஒருமுறைகூட இலங்கை அரசைக் கண்டிக்கவில்லை.
இதுவே ஒரு மலையாளி மீனவனுக்கோ அல்லது வங்காளி மீனவனுக்கோ நடந்திருந்தால் அந்த இனம் சும்மா இருந்திருக்குமா? அல்லது இந்திய அரசுதான் சும்மா இருந்திருக்குமா?
தமிழினம் அடிமையாக இருப்பதால்தானே இலங்கை அரசும் கண்மூடித்தனமாக கொல்கிறது. இந்திய அரசும் அதைக் கண்டுக்காமல் இருக்கிறது.
வருடம்தோறும் 85ஆயிரம் கோடி ரூபா தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறுகிறது. அந்த தமிழக மக்களின் பணத்தில்தான் இலங்கை கடற்படைக்கு அது பயிற்சி வழங்குகிறது.
தமிழக மக்களின் பணத்தில் பயிற்சி பெற்ற இலங்கை கடற்படையே தமிழக மீனவனை சுட்டுக் கொல்கிறது.
உலகில் தன்னை சுட்டுக்கொல்லும் படைக்கு தன் பணத்தில் பயிற்சி அளிக்கும் ஒரே ஏமாளி இனம் தமிழ் இனம்தான்.
இதற்கு எல்லாம் காரணம் தமிழ் இனம் அடிமையாக இருப்பதுதான். தமிழ் இனம் விடுதலை பெற்று தனிநாடாக இருக்குமென்றால் தமிழக மீனவனை சுடும் தைரியம் இலங்கை கடற்படைக்கு வராது.
அதுமட்டுமன்றி தமிழ்நாடு தனிநாடாக இருக்குமென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களும் சுதந்திரம் பெற வாய்ப்பு உண்டு.
எனவே தோழர் தமிழரசன் சுட்டிக்காட்டியது போன்று அடிமையாக இருக்கும் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும். அது குறித்தே இனி தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு , நெடுவாசல், காவிரி என்று ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடுவதை விடுத்து ஒரேயடியாக தனிநாட்டிற்கான போராட்டத்தை தமிழக மக்கள் நடத்த வேண்டும்.
இதுதான் ஒரே வழி.

•இந்தியா வாழ வேண்டுமானால் தமிழக மீனவன் சாக வேண்டுமா?

•இந்தியா வாழ வேண்டுமானால்
தமிழக மீனவன் சாக வேண்டுமா?
இந்தியா வாழ்வதற்கு தமிழகம் தன்னை தியாகம் செய்ய வேண்டும் என்று இல. கணேசன் கூறினார்.
அதற்காக அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்தமைக்கான பரிசு அது.
அதேபோன்று இந்தியா வாழ்வதற்காக தமிழக மீனவன் சாக வேண்டும் என்று இன்னொருவர் கூறக்கூடும்.
அவ்வாறு கூறுவதற்காக அந்த இன்னொருவருக்கும் அமைச்சு பதவி பரிசாக வழங்கப்படவும் கூடும்.
யாரும் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். இந்த கேட்டை எல்லாம் பார்க்க வேண்டும் என்பது தமிழன் தலைவிதி போலும்.
இங்கு எமது கவலை என்னவென்றால் தமிழக மீனவனின் அழுகையை நிறுத்துவது யார்? அவன் கண்ணீரை துடைப்பது யார்?
இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவன் அழுது கொண்டேயிருப்பது? அவன் நிம்மதியாக வாழ்வது எப்போது?
தமிழனாக அதுவும் மீனவனாக பிறந்தது குற்றமா?
கடல் மேல் மிதக்க விட்டான் - அவன்
கண்ணீரில் கரைய விட்டான்!

•மாணவர்களை தாக்கி வழக்கு போட்ட தமிழக காவல்துறை இலங்கை கடற்படையை கைது செய்து வழக்கு போடுமா?

•மாணவர்களை தாக்கி வழக்கு போட்ட தமிழக காவல்துறை
இலங்கை கடற்படையை கைது செய்து வழக்கு போடுமா?
மலையாள மீனவனை கொன்றமைக்காக இத்தாலி மாலுமிகளை கைது செய்து வழக்கு போட்டது கேரள காவல்துறை.
சோனியா அம்மையார் கேட்டுக்கொண்டபோதும்கூட அதற்கு இடங்கொடுக்காமல் தைரியமாக நடவடிக்கை எடுத்தது கேரள அரசும் அதன் காவல்துறையும்.
அதுபோன்று தமிழக மீனவனை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையை கைது செய்து வழக்கு போடும் தைரியம் தமிழக காவல்துறைக்கு உண்டா?
இலங்கை கடற்படையை கைது செய்யாவிட்டாலும் பரவாயில்லை அதற்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு வழக்கை பதிவு செய்யும் தைரியமாவது தமிழக அரசுக்கோ அல்லது அதன் காவல்துறைக்கோ உண்டா?
அமைதி வழியில் போராடிய மாணவர்களை அடித்து உதைத்து வீரம் காட்டிய தமிழக அரசு இலங்கை கடற்படைக்கு எதிராக தனது வீரத்தை காட்டுமா?
மீனவ குப்பத்து மக்கள் மீது பொய் வழக்கு போட்டு அவர்கள் குடிசைகளை கொளுத்திய தமிழக காவல்துறை இலங்கை கடற்படைக்கு எதிராக தனது வீரத்தை காட்டுமா?
தமிழகத்தை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழர்களை கைது செய்து சிறப்புமுகாமில் அடைக்கும் தமிழக காவல்துறை தமிழக மீனவனை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்யும் தைரியமாவது உண்டா?
தமிழகத்தில் உலக தமிழின தலைவர் இருக்கிறார். புரட்சி தலைவர் தளபதி மட்டுமன்றி புரட்சி புயல்கூட இருக்கிறார். ஆனால் இத்தனை புரட்சி புண்ணாக்குகள் இருந்தும் தமிழக மீனவனை காக்க முடியவில்லை.

•தமிழக மீனவனுக்கு தேவை நிதியல்ல நீதியே!

•தமிழக மீனவனுக்கு தேவை நிதியல்ல நீதியே!
சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவனுக்கு 5 லட்சம் ரூபா வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
5 லட்சம் ரூபா போதாது. 30 லட்சம் ரூபா வழங்க வேண்டும் என சில தலைவர்கள் கோரியுள்ளனர்.
மீனவனுக்கு தேவை நிதியல்ல, நீதியே. அதுதான் இனி வருங்காலத்தில் மீனவ கொலைகளை தடுத்து நிறுத்தும்.
இந்திய எல்லையில் வைத்து இந்திய மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். ஆனால் உலகில் 5வது பெரிய இந்திய கட்ற்படை வேடிக்கை பார்க்கிறது.
பாகிஸ்தான் எல்லைதாண்டி வந்து இந்திய ராணுவ வீரரை சுட்டுக் கொன்றதை கண்டித்த பிரதமர் மோடி இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்து மீனவனைக் கொல்லும்போது மௌனம் காக்கிறார்.
எல்லை தாண்டி வந்து சுட்டு விட்டு தான் சுடவில்லை என இலங்கை கடற்படை சர்வ சாதாரணமாக மறுக்கிறது. ஆனால் ஆதாரங்களை வைத்திருக்கும் இந்திய அரசு அக்கறையற்று இருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்களை ஒரே நாளில் கொன்றுவிட்டு அது குறித்த விசாரணைக்கே மறுத்து வருவது இலங்கை அரசும் அதன் ராணுவமும்.
கடந்த வருடம் வீதியில் சென்ற மாணவர் இருவரை நெஞ்சில் சுட்டுக் கொன்றுவிட்டு வானத்தை நோக்கி சுட்டதில் தவறுதலாக இறந்துவிட்டார்கள் என்று கூறியதே இலங்கை அரசும் அதன் பொலிசும்.
இலங்கையில் தமிழர்களை சுட்டுவிட்டு சர்வ சாதாரணமாக எப்படி இலங்கை ராணுவம் மறுத்து வருகிறதோ அதேபோன்றுதான் தமிழக மீனவனை சுட்டுவிட்டும் சர்வ சாதாரணமாக கடற்படை மறுத்துள்ளது.
இலங்கையில் பௌர்ணமி நாளில் மாடு வெட்டக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் தமிழர்களை தாராளமாக வெட்டிக் கொல்லலாம்.
புத்தர் பெருமான் கொல்லாமையை போதித்தார். ஆனால் அவர் அதில் தமிழர்களை கொல்லக் கூடாது என்று சொல்லவில்லை போலும். அதனால்தான் இலங்கையில் புத்தரின் பேரால் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
இலங்கை கடற்படை தான் சுடவில்லை என்று திமிராக மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை வருத்தம் தெரிவித்தால் போதும் என்று அமைச்சர் ராதாகிருஸ்ணன் கூறுகிறார்.
யாராவது அமைச்சர் ராதா கிருஸ்ணனை கொன்றுவிட்டு வருத்தம் தெரிவித்தால் அதனை அவர் ஏற்றுக்கொள்வாரா? இப்படிப்பட்ட வெங்காயம் எல்லாம் எப்படி அமைச்சராக இருக்குது?
மாட்டைக் கொல்லக்கூடாது என்று அக்கறை கொள்ளும் இந்திய பிரதமர் மோடி தமிழன் கொல்லப்படும்போது அக்றை இல்லாமல் இருக்கிறார்.
இந்தியாவில் மாடு தமிழனைவிட மதிப்பு மிக்கதா? தமிழன் உயிர் என்றால் அத்தனை கேவலமானதா?
தமிழ் பொறுக்கிகள் கட்டுமரத்தில் போய் இலங்கை கடற்படையுடன் மோதட்டும் என்று சுப்பிரமணியசுவாமி கிண்டல் செய்கிறார்.
இதுவே ஒரு மiயாளி அல்லது கன்னடன் இறந்திருந்தால் இப்படி சுப்பிரமணியசுவாமி கிண்டல் செயய முடியுமா?
தமிழனின் இந்த நிலைக்கு என்ன காரணம்? தமிழன் அடிமையாக இருப்பதுதான் காரணம்.
தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைவதே தமிழன் தலை நிமிர ஒரே வழி.

•சுமந்திரனின் சுத்துமாத்து!

•சுமந்திரனின் சுத்துமாத்து!
கக்கூஸ் போவதற்குகூட சிங்கள பொலிஸ் பாதுகாப்பை கொண்டிருக்கும் சுமந்திரனுக்கு மாணவர்களின் அறிவைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு?
தான் படித்த காலத்தில் சுமந்திரன் மொக்கனாக இருந்திருக்கலாம. அதற்காக மாணவர்கள் எல்லாம் மொக்கராக இருக்க வேண்டும் என சுமந்திரன் நினைப்பது என்ன நியாயம்?
பட்டிமன்றத்தில் மாணவர்கள் சுமந்திரன் முகத்தில் காறி துப்பிவிட்டார்கள் என்றால் அதனை துடைப்பதைவிட்டு மாணவர்களை அறிவற்றவர்கள் என்று கூறமுனைவதா?
சம்பந்தர் அய்யா சொகுசு பங்களாவில் வாழ்கிறார் என்று கூறுவது தவறாம். அவர் ஒரு சிறிய அறையில் வாழுகிறாராம். அதற்கு பிள்ளையான் சாட்சியாம்.
முதலாவது, சம்பந்தர் அய்யாவுக்கு எங்கெங்கு எத்தனை வீடுகள் இருக்கின்றன என்பதை சுமந்திரன் கூற தயாரா? அவ்வாறு அவர் கூறினால் அந்த வீடுகளில் எத்தனை அறைகள் உள்ளன என்பதை கூற நாம் தயார்.
இரண்டாவது, முன்னாள் பிரதமர் இரத்தனசிறீ விக்கிரமநாயக்கா வாழ்ந்த பங்களாவை சம்பந்தருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அது ஒரு அறை உள்ள சிறிய வீடு என்றா சுமந்திரன் கூற முனைகிறார்?
மூன்றாவது, சம்பந்தர் அய்யா ஒரு சிறிய அறையில் வாழ்வதாக சுமந்திரன் கூறியபோது அருகில் மாவை சேனாதிராசா தலையாட்டிக் கொண்டிருந்தார். அவர் மாவிட்டபுரத்தில் தனது வீட்டை 3 கோடி ரூபாவுக்கு திருத்தி வருவதையும் சுமந்திரன் இல்லை என்பாரா?
சொகுசுவாகனம் இறக்குமதி செய்து அதனைவிற்று 5கோடி ரூபா பணம் பெற்றுக்கொள்ளாத ஒரு தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி யின் பெயரை சுமந்திரன் கூறுவாரா?

•மார்ச்-8 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு

•மார்ச்-8 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு
பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காதவரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலை அடைய முடியாது- தோழர் லெனின்
மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உள்ள பெண்களை அடக்கி வைத்திருக்கும் எந்த சமூகமும் முழு விடுதலையோ உண்மையான முன்னேற்றமோ அடைந்துவிட முடியாது.
வருடத்தில் ஒருநாள் பெண்கள் தினம் கொண்டாடுவதன் மூலம் பெண்கள் விடுதலை அடைந்துவிட முடியாது. உரிமைகள் பெற்றுவிட முடியாது.
இதுவரை பெண்கள் பெற்ற உரிமைகள் யாவும் தானாக கிடைத்தவை அல்ல. மாறாக அவர்கள் போராடி பெற்றவையே.
இனியும்கூட பெண்கள் போராடாமல் எந்த விடுதலையும் பெற்றுவிடமுடியாது என்பதையே வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
அடுப்பு ஊதிய பெண்கள் துப்பாக்கி ஏந்திப் போராடியதாலேதான் அன்று பெண்கள் சயிக்கிள் ஓடுவதை கலாச்சாரக் குற்றமாக கருதிய தமிழ் சமூகம் இன்று லண்டனில் தமிழ் மாணவி ஒருவர் விண்வெளிக்கு செல்ல தெரிவு செய்திருப்பதை வாழ்த்தி வரவேற்றிருக்கிறது.
ஆனாலும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளில் மிகவும் கொடியது அரச ராணுவப் படைகளால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதே.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சி ஒன்றே பெண்களுக்கான முழு விடுதலையை பெற்றுக் கொடுக்கும்.

•ஆண்டுகள் கழிகின்றன ஆட்சிகள் மாறுகின்றன முதல்வர்கள்கூட மாறுகின்றனர் ஆனால் எழுவர் விடுதலை மட்டும் நடக்கவில்லையே!

•ஆண்டுகள் கழிகின்றன
ஆட்சிகள் மாறுகின்றன
முதல்வர்கள்கூட மாறுகின்றனர்
ஆனால் எழுவர் விடுதலை மட்டும் நடக்கவில்லையே!
எழுவர் விடுதலையை ஜெயா அம்மையார் விரும்பியதாக கூறுகின்றனர். ஆனால் அவர் தனது ஆட்சிக்காலத்தில் அதை நடத்தவில்லை.
ஜெயா அம்மையாரின் ஆட்சியை தொடருவதாக பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் அவரும் ஜெயா அம்மையாரின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை.
அடுத்து இப்போது எடப்பாடி பழனிச்சாமி தானும் ஜெயா அம்மையாரின் ஆட்சியை தொடருவதாக கூறுகிறார். அவரும்கூட இன்னும் இந்த எழுவர் விடுதலை குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இந்த எழுவர் விடுதலைக்கு தேவையான சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்றைய நிலையில் இதை ஒரு அறிக்கையாக விடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. இருப்பினும் அவர் கேட்டுக்கொண்டதற்கு அவரை பாராட்ட வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் இருந்தபோது இந்த எழுவரை விடுதலை செய்ய மட்டுமன்றி அவர்கள் பரோலில் வரவும்கூட அவர் அனுமதிக்கவில்லை.
கலைஞரின் ஆட்சியில் உதவி முதல்வராக இருந்தபோது இந்த எழுவர் விடுதலைக்கு முயற்சி செய்யாத ஸ்டாலின் இப்போது அறிக்கை விடுவது ஏமாற்று அரசியலாக இருக்கிறது.
இப்போது ஸ்டாலின் கேட்டுக்கொண்ட பிறகாவது தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம்.
இதனிடையே இந்த எழுவரை விடுதலை செய்தால் இலங்கையுடனான நட்பு பாதிக்கும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தன்னை கொல்ல வந்த நபரையே மன்னித்து விடுதலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த இந்த எழுவரை விடுதலை செய்வதை ஏன் எதிர்க்க போகிறார்?
எனவே இந்த எழுவர் விடுதலையால் இலங்கையுடனான நட்பு ஒருபோதும் பாதிக்கப்படப் போவதில்லை.
எனவே எழுவரை விடுதலை செய்தால் இலங்கை நட்பு பாதிக்கும் என்பது உண்மையல்ல. மாறாக தமிழர்களுக்கு எதிரான ஆர்.எஸ.எஸ. இன் துவேசமே இது.
இந்நிலையில் இந்து தமிழீழம் கேட்டால் இந்த ஆர்.எஸ.எஸ் ஆதரிக்கும் என்று காசிஆனந்தன் சென்னையில் கூறிக்கொண்டு திரிகிறார்.
பிஜே.பி யாக இருந்தாலும் சரி காங்கிரசாக இருந்தாலும் சரி தமிழர்களின் உணர்வுகளுக்கு ஒருபோதும் மதிப்பளிக்க மாட்டார்கள்.

•ஜனாதிபதிக்கு ஒரு சிறுமியின் கடிதம்! ஜனாதிபதி அங்கிள்!

•ஜனாதிபதிக்கு ஒரு சிறுமியின் கடிதம்!
ஜனாதிபதி அங்கிள்!
நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார்.
நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்று சம்பந்தர் தாத்தா கூறுகின்றார்.
உங்களை கொல்ல வந்தவரையே நீங்கள் மன்னித்து விடுதலை செய்ததாக பத்திரிகை மாமாக்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமன்றி நீங்கள் உங்கள் வீட்டு சாப்பாட்டை உங்கள் கையாலே சாப்பிடுகின்றீர்களாம்.
உங்கள் குண்டியை உங்கள் கையால் கழுவுவதைக்கூட பெருமையாக சொல்லுவார்கள் போல் இருக்கு.
இந்தளவு நல்லவாரன, எளிமையானவரான, அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் என் அப்பாவை மட்டும் எனக்கு காட்ட மறுக்கின்றீர்கள்?
நான் பிறந்தது முதல் என் அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை. நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது அப்பாவை ராணுவம் பிடித்து சென்றதாக அம்மா கூறுகின்றா.
சம்பந்தர் தாத்தாவின் மகள் அவருடன் கூட இருந்து ஒவ்வொரு நாளும் தன் தந்தையை பார்க்கிறார்.
சுமந்திரன் மாமாவின் பிள்ளைகள் அவருடன் ஒன்றாக கூட திரிந்து மகிழ்கிறார்கள்.
மாவை சேனாதிராசா மாமா தன் பிள்ளைகளை லண்டனில் சந்தோசமாக வைத்திருக்கின்றார்.
சரவணபவன் மாமாவின் மகள் பிறந்தநாளுக்கு நீங்களே வந்து கேக் ஊட்டுகின்றீர்கள்.
சிறீதரன் மாமா தன் பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் வைத்து படிப்பிக்கின்றார்.
நானும் அவர்களது பிள்ளைகள் போல் என் அப்பாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறேன்.
நானும் என் அப்பாவின் கை பிடித்து பாடசாலை செல்ல விரும்புகிறேன்.
நானும் அப்பாவின் முதுகில் எறி உப்பு மூட்டை விளையாட்டு விளையாட விரும்புகிறேன்.
என் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா மாமா?
நான் என்ன தவறு செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை?
தமிழ் இனத்தில் பிறந்தது என் குற்றமா?
குறிப்பு- காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம் தொடர்கிறது. ஜனாதிபதி மட்டுமல்ல தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்கள்கூட அவர்களை சந்தித்து குறைகளை கேட்க விரும்பவில்லை.