Wednesday, February 28, 2018

அன்ரனி மார்க் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருக்கும் அன்ரனி மார்க் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வேலுர் சிறப்புமுகாமில் சில வருடங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மார்க் அன்ரனி அவர்கள் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
கனடாவில் எனது “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் “ நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு தனது சிறப்புமுகாம் அனுபவத்தை பேசியிருந்தார்.
சிறந்த உணர்வாளரான மார்க் அன்ரனி அவர்கள் தொடர்ந்தும் எனது முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கி வருகிறார்.
எனது நூல் குறித்து கருத்துக்களை தெரிவித்த அன்ரனி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்ரனி அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
1990 ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்திலேதான் வேலூர் கோட்டையில் ஈழத் தமிழர்களை அடைத்து வைக்கப்படும் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் ஆரம்பிக்கப்பட்டது.
தம்மை விடுதலை செய்யுமாறு கோரிய இரண்டு அகதி இளைஞர்களை பிரியாணி கேட்டார்கள் என்று பொய்யாக கூறி கமிஷனர் தேவாரம் சுட்டுக்கொன்றதும் இதே சிறப்புமுகாமில்தான்.
வேலுர் கோட்டையில் உள்ள ஹைதர் மகாலில் ஆணகள் பெண்கள், குழந்தைகள் என சுமார் 300 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அருகில் இருந்த திப்புமகாலில் சுமார் 120 ஆண்கள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தனர்.
திப்புமகாலில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை 1992ம் ஆண்டளவில் தோழர் பாலன் அவர்களையும் கொண்டு வந்து எம்முடன் அடைத்தனர்.
அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த காலங்களில் கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கிற்காக அவரை பொலிசார் நீதிமன்றம் அழைத்து சென்று வருவார்கள்.
அவ்வாறு சென்று வரும் நேரங்களில் தோழர் பாலன் மூலமும் அவர் தோழர்களிடமிருந்து பெற்றுவரும் பிரசுரங்கள் மூலமும் தோழர்கள் தமிழரசன், மாறன் பொன்றவர்கள் பற்றி அறிந்துள்ளேன்.
அதேபோல் தமிழரசன் மறைவிற்கு பின்னர் தமிழ்நாடுவிடுதலைப்படையை முன்னெடுத்த தோழர் லெனின் சுந்தரம் போன்றவர்களையும் அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றியும் அறிந்திருக்கிறேன்.
ஆனால் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்ற இந்த நூலைப் படித்தபின்பே அவர்களை நன்கு அறிய முடிகிறது.
அவர்களின் வரலாற்றை மட்டுமன்றி அவர்கள் பின்பற்றிய தத்துவங்கள் பற்றியும் அவற்றின் இன்றைய அவசியம் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.
தமிழக தமிழர்கள் மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் அறிந்துகொள்ள நிறைய விடயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.
மேலும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், சுந்தரம் மாறன் லெனின் போன்றவர்களை ஈழத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நூல்.
தோழர் பாலன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். அவர் இதுபோன்று பயன்மிக்க நூல்களை இன்னும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு கூட்டம் மக்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்க

ஒரு கூட்டம் மக்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்க
இன்னொரு கூட்டம் உழைக்காமல்
உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது
இந்த சாதிப் பாகுபாடுதான் சமூகம் என்றால்
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!

அப்பாவி அப்பு- சோதனை மேல் சோதனை சோதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது தமிழ் பூமி

அப்பாவி அப்பு- சோதனை மேல் சோதனை
சோதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காது தமிழ் பூமி
தமிழ் இளைஞன்- என்ன அப்பு ஒரே பாட்டாய் இருக்கு?
அப்பாவி அப்பு- தமிழ்தேசியகூட்டமைப்பு தேர்தல் கூட்டத்திற்கு போயிட்டுவாரன் தம்பி.
தமிழ்இளைஞன்- ஓ! அப்படியா? என்ன கோமணத்தோட வாரியள். வேட்டி சால்வை எல்லாம் ஏங்கே?
அப்பாவி அப்பு- அதையெல்லாம் சோதனை என்ற பெயரில் உருவிப்போட்டாங்கள் தம்பி.
தமிழ் இளைஞன்- அடக் கடவுளே! நல்லவேளை கோமணத்தையும் உருவாமல் விட்டாங்கள்? அதுசரி நீங்கள் ஏன் அங்கை போனீங்கள்?
அப்பாவி அப்பு- சம்பந்தர் அய்யா தீர்வு தாரண் எண்டு போன எலக்சனில் சொன்னவர். அதுதான் கொண்டு வந்திருப்பார் என்டு வாங்கப் போனன்.
தமிழ் இளைஞன்- சம்பந்தர் அய்யா தீர்வு கொண்டு வந்தவரோ?
அப்பாவி அப்பு – அடுத்த எலெக்சனுக்கு கொண்டுவந்துதாரன் என்டு சொல்லுறார்.
தமிழ்இளைஞன்- உவர் இப்படித்தானே ஒவ்வொரு எலெக்சனுக்கும் நெடுக சொல்லுறார். அதுசரி யாருக்கு அப்ப வோட்டுப்போடப் போறியள்?
அப்பாவி அப்பு- வழக்கம்போல வீட்டுக்கு போடலாம் என்று நினைக்கிறன். ஆனால் இனி கோமணத்தையும் உருவிப் போடுவாங்களோ என்று பயமாய் இருக்கு தம்பி!

வாசன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
லண்டனில் இருக்கும் வாசன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நூல் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ள வாசன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
மனித குல வரலாறானது என்றுமே போராட்டங்களாலும் புரட்சிகர சிந்தனைகளாலுமே வழி நடத்தப்பட்டு ஒரு முன்னோக்கிய பாதையிலே பயணித்து வருகின்றது.
இவ்வரலாற்றில் இது ஈட்டிய வெற்றிகள் அதிகம். கூடவே தோல்விகளும் பின்னடைவுகளும் கூடிய துயரம் பதிந்த வரலாறுகளும் நிறையவே உண்டு. அத்துடன் மறக்கடிக்கப்பட்ட போராட்டங்களும் மானிட வரலாற்றில் நிறையவே உண்டு.
இவ்வகையில் மறக்கடிக்கப் பட்ட வரலாறான தமிழ்நாடு விடுதலைப் படையின் ஸ்தாபகர்களில் ஒருவரான தமிழரசனின் வாழ்க்கை வரலாற்றினையும் அவரது கொள்கைகளையும் விளக்கி தோழர் பாலன் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்ற நூலொன்று வெளிவந்துள்ளது.
ஏற்கனவே “சிறப்பு முகாம் எனும் சித்திரை வதை முகாம்” “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்ற இரு நூல்களை எழுதிய தோழர் பாலனது மூன்றாவது நூல் இது.
தமிழரசன் அதிகமானோர் அறிந்திராத ஒரு மனிதர். அறிந்த ஒரு சிலரும் அவரைப் பற்றிய ஒரு தவறான கருத்தையும் கன்னோட்டத்தையுமே கொண்டிருப்பதினை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
தமிழ் நாடு விடுதலைப்படையின் ஸ்தாபர்களில் ஒருவரான அவரை ஒரு பயங்கரவாதியாக அல்லது மக்கள் விரோத அரசியலை மேற்கொண்ட ஒரு கொலைகாரனாக கொள்ளைக்காரனாக இன்று விமர்சிப்பவர்கள் அநேகர்.
மேலும் இன்று தமிழ் பாசிச சக்தியாக வளர்ச்சி பெற்றுள்ள ‘நாம் தமிழர்’ அணியினர் அவரைப் புகழ்ந்தோதுவதினாலும் அவரது பதாகைகைளைத் தாங்கிச் செல்வதினாலும் அவரையும் ஒரு தமிழ் இன வெறியராக அடையாளப்படுத்துவோரும் உள்ளனர்.
இந்நிலையில் அவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வகையில் தோழர் பாலன் அவர்கள் இந்நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
நூலின் ஆரம்பத்தில் தோழர் தமிழரசனை சுருக்கமாக அறிமுகம் செய்த நூலாசிரியர் தமிழரசன் பின் பற்றிய தத்துவங்களையும் பாதைகளையும் விபரித்து அவர் படுகொலை செய்யப்பட்ட நாள் வரை செய்த தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் விபரமாக எழுதியுள்ளார்.
அவற்றில் அவர் இடது சாரி தத்துவங்கள் மீது கொண்ட நம்பிக்கையையும் சாதீயம் குறித்த அவரது பார்வையினையும் இலங்கை மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பு எண்ணம் குறித்த அவரது தீர்க்கதரிசனமான கருத்துக்களையும் மிகவும் விரிவாகவே விளக்கியுள்ளார்.
ஆயினும் எத்தனையோ தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் அவர் புரிந்துள்ள போதிலும் தமிழ்நாடு விடுதலைப்படை குறித்தும் தமிழரசன் குறித்தும் எம்மிடையே முரண்பாடான கருத்துக்களும் நெருடல்களும் நிறையவே உண்டு.
முதலில் இந்திய மார்க்சிய லெனினிய பொதுவுடைமைக் கட்சி என்ற பதாகையின் கீழ் (இபொக மாலெ) ஒன்றிணைந்த இந்தியாவின் கீழ் இணைந்து செயற்பாடு வந்த நக்சல்பாரிகளிடமிருந்து பிரிந்து தமிழ்தேசியம் தொடர்பான கருத்தினை முன் வைத்து அதிலிருந்து முரண்பட்டு புலவர் கலியபெருமாள், சுந்தரம், தமிழரசன் போன்றவர்கள் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய பொதுவுடைமைக் கட்சியையும் அதன் ஆயுதப் பிரிவாக தமிழ்நாடு விடுதளிப்படையையும் உருவாக்குகின்றனர்.
இப்படியாக அதிகார பூர்வமாக இந்திய நக்சல்பாரிகள் இயக்கமானது இந்திய தரப்பு, தமிழ்நாடு தரப்பு என பிரிய வழி வகை செய்கின்றனர். இப்பிரிவிற்கான முன்னோடிகளாக இருந்த இவர்கள் மீது இன்றளவும் பாரிய விமர்சங்கள் மற்றைய பொதுவுடைமைத் தோழர்களால் வைக்கப்படுகின்றன.
மேலும் தமிழகத்தில் ‘மக்களுக்கான யுத்தமா? மண்ணுக்கான யுத்தமா?’ என்ற கருத்தாக்கத்தில் மக்களுக்கான யுத்தத்தினை முதன்மைப் படுத்தி ‘மக்கள் யுத்தக் குழு’ என்ற நக்சல்பாரி இயக்கம் ஒரு மக்களுக்கான யுத்தத்தினை மேற்கொண்டு வரும் காலகட்டத்தில் மண்ணிற்கான யுத்தம் என்ற பதாகையுடன் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் போராட்டத்திற்கு இவர்கள் இழைத்த துரோகமாக இன்றளவும் பல்வேறு விமர்சங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்று தமிழ் பாசிச சக்தியாக உருவெடுத்திருக்கும் ‘நாம் தமிழர்’ கட்சியினர் தமிழரசனை கொண்டாடுவது, எவ்வளவுதான் இடதுசாரி கொள்கை மீது பற்றுறுதி கொண்டிருந்தாலும் இனத் தேசியம் எனும் கருத்துவாக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் ஏதாவது ஒரு தருணத்தில் பாசிச சக்தியாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதையே வெளிப்படுத்துகின்றது.
மேலும் மிக அழகான முறையில் அச்சிடப்பட்டு ஒரு உன்னத நோக்கம் கொண்டு சீரிய முறையில் காலத்தின் தேவை கருதி பதிப்பிக்கப்பட்ட இந்நூலிலும் பல முரண்பாடுகளையும், பலவீனங்களையும் போதாத்தன்மைகளையும் எதிர்கொள்கிறோம்.
இது குறித்தும் பல்வேறு விமர்சங்களையும் கருத்துக்களையும் நாம் வைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
ஒரு நூலிற்குரிய பலவீனங்களாக விளங்கும் ‘கூறியது கூறல் குற்றம், குறை படக் கூறல் கற்றம்’ என்ற இலக்கண மொழிக்கமைய தோழர் பாலனது எழுத்து முறைமையிலும் கூறியதை திரும்பக் திரும்பக் கூறும் ஒரு பலவீனமான அம்சம் ஒளிந்து கிடக்கின்றது.
இதனை நாம் அவரது ‘சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாம்’ நூல் பற்றி எழுதும் போதே குறிப்பிட்டிருந்தோம். அத்தகைய கூறியது கூறல் இந்நூலிலும் அதிகமாக விரவிக் கிடக்கின்றது. அத்துடன் அவர் ஏற்கனவே எழுதிய ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ எனும் முழுப் புத்தகமுமே இந்நூலின் ஒரு பெரும்பகுதியாக புதையுண்டு கிடக்கின்றது. இது தோழர் தமிழரசன் வரலாற்றை கூற வந்த அவர் அதனை விட்டு அதிகம் விலகி கூற வந்த விடயத்தின் பேசு பொருளை பலவீனமாகியுள்ளார்.
அத்துடன் ‘தோழர் தமிழரசனும் அவர் பின் பற்றிய தத்துவங்களும்’ எனும் அத்தியாயத்தில் மிகவும் அவசியமற்ற விதத்தில் ட்ரொட்ஸ்கிய வாதத்தின் மீது அவசியமற்ற முறையில் சேறு பூசுவதற்கு அதிக பக்கங்களை வீணடித்துள்ளார். இது இங்கு புகலிடத்தில் இயங்கி வரும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் உடன் அவருக்குண்டான பகை முரண்பாடு காரணமாகவும் இருக்கலாம்.
இதே போன்றே ‘தமிழரசனும் சாதியத்திற்கு எதிரான போராட்டமும்’ எனும் அத்தியாயத்தில் சாதீயம் குறித்து பல்வேறு பயனுள்ள விடயங்களை அலசி ஆராய்ந்து எழுதியிருந்தாலும் இது இந்நூலின் மையவோட்டத்தை சிதைக்கும் ஒரு விடயமாகவே எம்மால் கருத முடிகின்றது.
அத்துடன் இந்நூலினை வாசிக்கும்போது எம்மிடையே பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. முக்கியமாக இன்று முன்னெப்போதையும் விட தமிழ் இன உணர்வாளர்களின் குரல்களும் அது சார்ந்த கட்சிகளின் எண்ணிக்கையும் என்றுமில்லாதவாறு மிகவும் அதிகரித்துள்ளது.
இவர்கள் நடாத்தும் கருத்தரங்குகள், விழாக்கள், மாநாடுகளில் தமிழரசனின் பதாதைகளோடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதாதைகளும் சமமாக உயர்த்திப் பிடிக்கப் படுகின்றன.
ஆனால் தமிழ்நாடு விடுதலைப்படையின் தோழமை கட்சியான தமிழீழ பாதுகாப்புப் பேரவையின் அநேகமான தோழர்கள் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை வரலாறு எமக்குத் தெரியப்படுத்துகின்றது. எனவே இவ்விரு தலைவர்களையும் ஒரே பதாகையின் கீழ் உயர்த்திப்பிடிக்கும் செயலானது முற்றிலும் முரண்பாடான விடயமாகவே எம் பார்வையில் தெரிகின்றது. இது குறித்து ஆசிரியரின் பார்வை என்ன என்பது தெளிவு படுத்தப் படவில்லை.
மேலும் படுகொலை செய்யப்பட்ட தமிழரசனில் இருந்து மற்றைய தோழர்களின் படுகொலைகள் அனைத்தும் போலீஸ் அதிபர் தேவாரம் தலைமையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவிற்கினங்கவே நடைபெற்றது என்பது வரலாறு எமக்குத் தெரியப்படுத்தும் பாடம் ஆகும். ஆனாலும் இந்நூலில் எம்ஜியாரின் குறித்தும் அவரது காட்டாட்சி குறித்தும் எதுவித விபரங்களும் இல்லாமல் மறைக்கப்பட்டது மிகப்பெரிய குறையாகவே எம்மால் அவதானிக்கப்படுகின்றது.
இத்தகைய பலவேறு குறைபாடுகள், போதாமைகள் இருந்துள்ள போதிலும் இந்நூலானது தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் அபரிதமானவை. உதாரணமாக சாதீயம் குறித்து எழுதும் ஆசிரியர், கன்பொல்லை கிராம எழுச்சி, கந்தன் கருணை நாடகம், கீழ்வெண்மணி என பல விடயங்களையும் தகவல்களையும் தெரிவித்திருப்பது அவரது கடுமையான உழைப்பிற்கு சான்றாக விளங்குகின்றது.
இன்றைய தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழரசன் காட்டிய பாதையில் பயணிப்போர் பலர். அதேபோல் அவரை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்துவோர் பலர்.
ஆயினும் ஒரு விவாதத்திற்கான ஒரு ஆரம்பப் புள்ளியை தொடக்கி வைத்த தோழர் பாலனது முயற்சி என்றுமே பாராட்டிற்குரியது.
தோழர் பாலன் அவர்கள் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்பதே எமது விருப்பமும் விண்ணப்பமும் ஆகும்

ஆசிரியர் சதீஸ்குமார் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
தமிழ்நாடு திருச்சியில் இருக்கும் தமிழ் ஆசிரியர் சதீஸ்குமார் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் பலரும் இவ் நூலை ஆர்வமுடன் வாங்கியிருந்தனர். அவ்வாறு வாங்கிப் படித்ததும் அல்லாமல் அது குறித்து தனது கருத்துக்களையும் எனக்கு தெரியப்படுத்தியுள்ளார் தமிழ்ஆசிரியர் சதீஸ்குமார் அவர்கள்.
ஆசிரியர் சதீஸ்குமார் அவர்களின் உணர்வுகளை பாராட்டுவதோடு எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் என்ற நூலில் முக்கனியின் சுவையைக்கண்டேன்
ஒரு தமிழ்த்தேசிய போராளியை எதிர்கால தமிழ் சமுதாயம் அறிந்துகொள்ள கூடாது என்பதற்காக வங்கி கொள்ளையன் என்று நாடகமாடி கல்லெறிந்து போதும் தன்னிடம் ஆயுதங்கள் இருந்தும் மக்கள் மீது பிரயோகிக்காமல் மரணத்தை எற்றுக் கொண்டு தமிழ்மக்களை நேசித்த ஒரு தவைரின் வரலாற்றை கூறும் நூல் இது.
தமிழ் மண் மீட்க புறப்பட்ட அந்த வேங்கையை வங்கிக் கொள்ளையன் என்று பொய் பழிச்சுமத்தி கொலைச்செய்யப்பட்டு மறைக்கப்பட்ட வரலாற்றை இன்றைய தமிழ் ஆர்வலர்கள் அறிய ஆசிரியர் எடுத்த அரிய முயற்சி இந்நூல்
தமிழ்த் தேசத்திற்கு உயிர் துறந்த உத்தமர்களின் வரலாற்றையறிய உன்னத படைப்பு
ஈழத்தில் இந்திய அடக்குமுறையும் தமிழகத்தின் வளங்கள் சுரண்டி புயல் பாதிப்பிற்கு உதவாத இந்தியத்தின் நிலை அறியவைக்கும் நூல்.
எம் இனத்தை அழிப்பவனுக்கு வாரி பணத்தை அளிப்பதை கண்டு ஆசிரியரின் உணர்ச்சி வெளிப்பாடு
ஆட்சி மாறியும் காட்சி மாறாது நிலை கண்டு வேதனை வெளிப்பாடு
கொள்ளையன் என்று நாடகமாடி கல்வீச்சு செய்து கொள்ளும் போது மரணத்தை எற்றுக் கொண்டு தலவைர் எடுத்துரைக்கும் விதம்
இவர் தம் பிழையை மன்னித்தருள்க என்று இயேசு பிரான் மரணத்தை எற்றுக் கொண்டது போல் ஆசிரியர் கையாண்ட விதம் போற்றதற்குரியது
தமிழர்கள் இல்லங்களில் அலங்கரிகப்படவேண்டிய தங்கப்பேழை

“தோழர்”

“தோழர்”
இந்த வார்த்தை உலகம் முழுவதையுமே ஒன்றிணைப்பதற்காகவும்,
எல்லா மக்களையும் சுதந்திரச் சிகரத்திற்கே உயர்த்தவல்லதெனவும் ,
உலக மக்கள் அனைவரையும் புதிய பந்தங்களினால் - ஒருவருக்கொருவர் மதிப்பு , மரியாதை ,மனித சுதந்திரத்துக்கு மதிப்பு என்னும் பந்தங்களினால் பிணைக்கவல்லது எனவும் அவர்கள் உணர்ந்தனர்.
- மக்ஸிம் கார்க்கி.
இத்தகைய “தோழர்” என்ற உயர்ந்த சொல் ஒருவருக்கு எரிச்சல் கொடுக்கிறது எனில் அவர் பரந்துபட்ட மக்களின் ஜக்கியத்திற்கும் நலனுக்கும் எதிரான சிந்தனை கொண்டிருக்கிறார் என்றே அர்த்தமாகும்.

ஒரு தேசியவாதியாக இல்லாதவன்,

"ஒரு தேசியவாதியாக இல்லாதவன்,
சர்வதேசியவாதியாக இருக்க முடியாது.
ஏன்? குறைந்தபட்சம் சனநாயகவாதியாக கூட இருக்க முடியாது."
-மாமேதை தோழர் லெனின்.
நல்லவேளை இப்ப தோழர் லெனின் இல்லை.
இருந்திருந்தால் அவரையும் பயங்கரவாதி என்றுமட்டுமல்ல
பாசிசவாதி என்றும் முத்திரை குத்தியிருப்பார்கள்.

•70வது சுதந்திரதினம் (04.02.2018) இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது?

•70வது சுதந்திரதினம் (04.02.2018)
இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது?
அரசியல்வாதிகள் பதவி பெறவும் அந்த பதவி மூலம் லஞ்சம் பெறவும் ஊழல் செய்யவுமே சுதந்திரம் இருக்கிறது.
சுதந்திரம் என்னும் பெயரில் வெள்ளைக்காரர்களுக்கு பதிலாக கொள்ளைக்காரர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.
இதுவரை 40 ஆயிரம் தமிழ்மக்கள் , 60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையின் அபிவிருத்திக்கு புலிகள் தடையாக இருக்கின்றார்கள் என்றார்கள்.
புலிகள் இல்லை என்றால் இலங்கையில் பாலும் தேனாறும் ஓடும் என்றார்கள்.
இப்போது புலிகள் இல்லை. ஆனால் அவர்கள் கூறிய பாலும் தேனாறும் இன்னும் ஓடவில்லை.
யுத்தத்திற்கு கோடிக் கணக்கான ரூபாயை திரட்டி செலவு செய்த ஆட்சியாளர்களால் இப்போது மக்களுக்காக ஏன் பணம் திரட்ட முடியவில்லை?
நாடுமுழுவதும் மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் பிள்ளைகளுடன் தற்கொலை செய்கிறார்களே. அது குறித்து ஏன் இந்த ஆட்சியாளர்களால் அக்கறை கொள்ள முடியவில்லை?
புனிதபூமி என்று கூறும் அநுராதபுரத்திலே ஒரு சிங்கள சிறுவன் உடுக்க உடையின்றி நிர்வாணமாக குப்பையில் உணவு பொறுக்கிறானே. இது ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல அந்த புத்தருக்கே கேவலம் இல்லையா?
நாடுமுழுவதும் புத்தர் சிலை அமைக்க 100 கோடி ரூபாவை ஒதுக்கும் இந்த ஆட்சியாளர்களால் அந்த சிறுவனுக்கு ஏன் உணவு வழங்க பணம் ஒதுக்க முடியவில்லை?
ஒரு சிங்கள தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் பெத்த மகளையே விபச்சாரம் செய்ய வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளாரே அது இந்த அரசுக்கு கேவலம் இல்லையா?
அனைத்து மக்களும் கஸ்டப்படுகின்றனர். ஆனால் அரசோ எம்.பி களுக்கு ஒரு லட்சம் ரூபா சம்பளம், 5 கோடி ரூபா சொகுசு வாகனம். 2 கோடி ரூபா லஞ்சம்; தருவது அசிங்கம் இல்லையா?
உலகில் சிறுவர் பாலியல் விபச்சாரத்தில் முதலிடம் என்ற பெருமையை(?) இலங்கை பெற்றுள்ளவேளையில் 70வது சுதந்திர தினம் கொண்டாடுவதில் என்ன பெருமை இருக்கிறது?

இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கும் லண்டன் வாழ் தமிழர்கள் சொன்ன செய்தி!

•இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கும்
லண்டன் வாழ் தமிழர்கள் சொன்ன செய்தி!
லண்டன் இலங்கை தூதரகம் முன்பு லண்டன் தமிழ் மக்கள் நடத்திய போராட்டம் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளது.
சம்பந்தரையும் சுமந்திரனையும் விலைக்கு வாங்கிவிட்டால் தமிழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என இலங்கை அரசு நினைத்தது.
இரண்டு நாட்களில் 40 ஆயிரம் மக்களை கொன்றால் அந்த மக்கள் போராட ஒருபோதும் துணிய மாட்டார்கள் என உலக நாடுகள் நினைத்தன.
ஆனால் தமிழன் எங்கு இருந்தாலும் தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதை ஒருபோதும் கைவிட மாட்டான் என்பதை லண்டனில் நிரூபித்துள்ளான்.
இலங்கை சுதந்திரதினத்தை துக்கநாளாக முதன் முதலில் 1957ல் அறிவித்தது தமிழரசுக்கட்சியே.
அதன்படி திருகோணமலையில் கறுப்புக் கொடியேற்றிய நடராஜா என்ற தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆனால் இன்று அதே தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தர் அய்யா அதே திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராக சிங்க கொடியை ஏற்றுகிறார்.
இது அந்த நடராஜா என்ற தமிழருக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
காணாமல்போனவர்களின் உறவுகள் 350 நாட்களாக வீதியில் உட்கார்ந்து போராட்டம் செய்கிறார்கள்.
அவர்கள் இன்று கறுப்பு உடை அணிந்து தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தாயகத்தில் மட்டுமல்ல லண்டன் பிரான்ஸ் மற்றும் பல நாடு:களில் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
வழக்கத்தைவிட இம்முறை அதிகளவான தமிழ் மக்கள் இந்த போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டமானது போராட்ட இலக்கியம் பிறக்க வழி சமைக்கும். இம்முறை பறை இசையுடன் போராட்ட பாடலும் லண்டன் போராட்டத்தில் பிறந்துள்ளது.
இந்த மக்களின் எதிர்ப்பு போராட்டம் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு மாற்று உருவாகுவதைக் காட்டுகின்றனது.
வாழ்த்துவோம். வரவேற்போம்.

தோழர் சண் நினைவுதினக் கூட்டம்

தோழர் சண் நினைவுதினக் கூட்டம்
இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன் அவர்கள் 08.02.1993ல் காலமானார்.
எதிர்வரும் 08.02.2018 அவரது 25 வது நினைவுதினமாகும். அதையொட்டி கொழும்பில் 17.02.2018 யன்று நினைவுக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அக் கூட்டத்தில் தோழர் சண் குறித்து பலரும் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளனர்.
இயலுமானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குமாறு கேட்கப்படுகின்றனர்.
தோழர் சண் மறைந்தாலும் அவர் முன்வைத்த கருத்துகளும் வழிகாட்டல்களும் இன்னும் மறையவில்லை.
இலங்கை புரட்சி வரலாற்றில் அவர் பெயரும் பங்களிப்பும் என்றும் நிலைத்து நிற்கும்.

நம்புங்கள்! இலங்கை ஒரு ஜனநாயக நாடாம்

நம்புங்கள்!
இலங்கை ஒரு ஜனநாயக நாடாம்
இலங்கையில் நல்லாட்சி நடக்கிறதாம்
அதன் சுதந்திர தினத்திலேயே
நாட்டில ஒரு அதிகாரி தமிழ்மக்களை
கெட்ட வார்த்தையால் ஏசி மிரட்டுகிறார்
லண்டனில் ஒரு அதிகாரி தமிழ் மக்களை
கழுத்து வெட்டுவோம் என மிரட்டுகிறார்
தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்?
தமிழ்மக்கள் கைகளில் ஆயுதம் இருந்தால் மட்டுமே
தமிழ்மக்கள் பாதுகாப்பாய் வாழமுடியும்!

மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்திவைக்க ஏற்பட்ட முக்கிய சாதனங்களில் ஒன்றாகும் - தோழர் லெனின்

மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்திவைக்க ஏற்பட்ட முக்கிய சாதனங்களில் ஒன்றாகும் - தோழர் லெனின்
இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்று ஜே.வி.பி தலைவர் அநுர குமரா திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு சிங்களவர் மட்டுமல்ல பௌத்த மதத்தையும் சேர்ந்தவர். இருந்தும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்று பேசியுள்ளார்.
பல சிங்கள புத்திஜீவிகளும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்று பேசியும் எழுதியும் வருகின்றனர்.
ஆனால் சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பல மதங்கள் உள்ள ஒரு நாட்டில் ஒரு மதத்திற்கு மட்டும் முன்னுரிமை வழங்குவது சமவுரிமை தத்துவத்திற்கு முரணானது.
அதுமட்டுமல்ல மதங்களுக்கு வாய்ப்பு வழங்குவதானது வறுமைப்பட்ட மக்கள் விடுதலை பெற விடாமல் தொடர்ந்தும் அழுத்திவைக்கவே உதவி புரியும்.
இலங்கை மக்கள் அனைவரும் முன்னேற்றம் அடைவதற்கு குறைந்தபட்சம் இலங்கை மதசார்பற்ற நாடாகவேணும் இருத்தல் அவசியம்.

போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை!

•போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை!
04.02.18 யன்று லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அங்குவந்த சிங்கள ராணுவ அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து கழுத்து வெட்டப்படும் என்று சைகை காட்டி மிரட்டினார்.
இது படம்பிடிக்கப்பட்டு உடனடியாக சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
லண்டன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் கண்டித்ததுடன் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரியை உடன் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கோரினார்கள்.
அதுமட்டுமல்ல லண்டனில் அகதிகள் தஞ்சம் கோரிய தமிழர்களை திருப்பி அனுப்பாது பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அரசு வேறுவழியின்றி சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரியை பதவி நீக்கியதுடன் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதுவரை தமிழ் மக்கள்மீது கைவைக்கும் அதிகாரிகளை கேட்பதற்கு யாருமற்ற நிலை இருந்தது.
ஆனால் லண்டன் தமிழ் மக்கள் தமது போராட்டம் மூலம் அந்த நிலையை மாற்றியுள்ளார்கள்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு போராடினால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையாளிகளையும் கூண்டில் ஏற்றலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
குறிப்பு- இன்று போராட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றாக முகநூல் இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கழுத்து வெட்டின அதிகாரிகளை பாதுகாத்துக்கொண்டு கழுத்து வெட்டுவன் என்று மிரட்டிய அதிகாரிமீது மட்டும் நடவடிக்கை எடுக்குமா இலங்கை அரசு?

•கழுத்து வெட்டின அதிகாரிகளை பாதுகாத்துக்கொண்டு
கழுத்து வெட்டுவன் என்று மிரட்டிய அதிகாரிமீது மட்டும்
நடவடிக்கை எடுக்குமா இலங்கை அரசு?
லண்டனில் தமிழ்மக்களை பார்த்து கழுத்து வெட்டுவேன் என்று மிரட்டிய ராணுவ அதிகாரியை வேலை நீக்கம் செய்வதாக வெளிநாட்டு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
ஆயிரக்கணக்கில் தமிழ்மக்களின் கழுத்தை வெட்டிய அதிகாரிகளை பாதுகாத்துவரும் இலங்கை அரசு, வெட்டுவன் என்று மிரட்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளதா என பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.
அதுவும் சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்தது உண்மையில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்ந்தும் சேவையில் ஈடுபடலாம் என ஜனாதிபதி மைத்திரி இன்று உத்தரவிட்டதன் மூலம் இந்த ஆச்சரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கழுத்து வெட்டியவர்களை மட்டுமல்ல கழுத்து வெட்டுவன் என மிரட்டிய அதிகாரி மீதும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஜனாதிபதி தெளிவாக காட்டிவிட்டார்.
தான் பதவியில் இருக்கும்வரை எந்தவொரு ராணுவவீரன் மீதும் விசாரணை செய்ய அனுமதிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி கூறியிருந்தார்.
அதன்படியே கழுத்தை வெட்டுவன் என்று மிரட்டிய ராணுவ அதிகாரியையும் அவர் எவ்வித நடவடிக்கையும் இன்றி காப்பாற்றியிருக்கிறார்.
ஆனால் நமது சம்பந்தரும் சுமந்திரனுமே “ ஜனாதிபதி நல்லவர். எளிமையானவர். நல்லாட்சி செய்கிறார். அவர் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பார்” என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இந்த விடயத்தில் தனது சுயரூபத்தைக் காட்டிய ஜனாதிபதி மைத்திரியை நாம் பாராட்ட வேண்டும்.
இல்லையேல் தாங்கள் கேட்டுக்கொண்டபடியால்தான் நல்லாட்சி அரசு ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது என்று இந்நேரம் சுமந்திரன் அறிக்கை விட்டிருப்பார்.

சுமந்திரன், சம்பந்தர் உயிராபத்து நீங்கிவிட்டதா?

•சுமந்திரன், சம்பந்தர் உயிராபத்து நீங்கிவிட்டதா?
வன்னியில் நடந்த கூட்டங்களின்போது சுமந்திரன் மற்றும் சம்பந்தருக்கு அதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டன.
கூட்டத்திற்கு வந்த மக்களைக்கூட வாசலில் வைத்து பொலிசார் சோதனை இட்டனர்.
பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளைக்கூட இந்த பொலிசார் கடும் சோதனை செய்தனர்.
ஏன் இத்தனை பாதுகாப்பு? ஏன் சொந்தமக்களைக்கூட சோதனை செய்ய வேண்டும்? என்று சமூகவலைத்தள ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.
சுமந்திரன் மற்றும் சம்பந்தருக்கு உயிர் ஆபத்து இருக்கிறது என்றும் அதனால் இந்த பாதுகாப்பும் சோதனைகளும் அவசியம் என்று அவர்களுடைய செம்புகள் பதில் எழுதினார்கள்.
தற்போது கடைசியாக யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் சுமந்திரன் மற்றும் சம்பந்தருக்குரிய பாதுகாப்புகள் பெருமளவு குறைக்கபட்டிருந்தது.
அதுமட்டுமன்றி வன்னியில் செய்ததுபோன்று கூட்டத்திற்கு வந்த மக்கள் சோதனை செய்யப்படவில்லை.
இங்கு எமது கேள்வி என்னவெனில், சுமந்திரன் மற்றும் சம்பந்தருக்கு இருந்த உயிராபத்து நீங்கிவிட்டதா? அல்லது,
வன்னிமக்கள் கொலைகாரர்கள், யாழ்ப்பாண மக்கள் கொலைகாரர்கள் இல்லை என்று சம்பந்தரும் சுமந்திரனும் கருதுகிறார்களா?
சம்பந்தர் மற்றும் சுமந்திரனுக்கு பாதுகாப்பு அவசியம் என்ற அவரது செம்புகள் இதற்கு பதில் தருவார்களா?