•ஏன் அநுராவுக்கு வோட் போடக்கூடாது என்பதற்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய பதில் தருமா?
தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய பதில் தருமா?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வோட் போட வேண்டும் என்பதை சம்பந்தர் ஐயா இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வோட் போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்கு “பிசாசு” கோத்தபாயா வருவதை தடுக்க “பேய்” சஜித்திற்கு வோட் போட வேண்டும் என்று காரணத்தையும் கூறி வருகிறார்கள்.
சரி. அப்படியென்றால் ஏன் ஜேவிபி வேட்பாளர் அநுராவுக்கு தமிழ் மக்கள் வோட் போடக்கூடாது? என்று கேட்டால்; “அவர் வெல்லமாட்டார். எனவே அவருக்கு போடுவது வீண்” என்கிறார்கள்.
தமிழ் தரப்பினர் முன்வைத்த நிபந்தனைகளில் ஒன்றைக்கூட ஏற்பதற்கு சஜித் முன்வரவில்லை. ஆனால் அநுரா வடக்கு கிழக்கு இணைப்பு ஒன்றைத்தவிர மற்ற அனைத்து நிபந்தனைகளையும் ஏற்பதாக பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் எமது புத்திசாலி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அநுராவுக்கு போடக்கூடாது. சஜித்திற்குதான் போட வேண்டும் என்கிறார்கள்.
அவர்களின் கவனத்திற்கு கீழ்வரும் கேள்விகளை முன்வைக்கிறோம். இதற்கு உரிய பதிலை அவர்கள் தர வேண்டும். இலங்கையில் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பது ஏன் மாற்றத்தை தராது என்பதற்கு அவர்கள் பதில் தர வேண்டும்.
2002 பொதுத்தேர்தலில் 1% வாக்குகளை கூட பெறாமல் 10 ஆவது இடத்தை பெற்ற இம்ரான்கானின் கட்சி 2013 தேர்தலில் 16% வாக்குகளை பெற்று 34 ஆசனங்களுடன் மூன்றாவது அணியாக முன்னேறி மாற்றத்திற்கான முதல் அடிக்கல்லை வைக்கிறது. 2018 தேர்தலில் 32% வாக்குகளுடன் 149 ஆசனங்களை சுவீகரித்து இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராகவில்லையா?
கனடாவின் லிபரல் கட்சி 2011 தேர்தலில் 18% வாக்குகள் மற்றும் 34 ஆசனங்களுடன் மூன்றாவது நிலை கட்சியாக இருக்கிறது. 2015 தேர்தலில் லிபரல் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோ 40% வாக்குகளையும் 184 ஆசனங்களையும் வென்று தனிப் பெரும்பான்மை அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்கவில்லையா?
2016 இல் புதிதாக கட்சி அமைத்து 2017 தேர்தலில் பிரதான 3 கட்சிகளை தோற்கடித்து, முதற்சுற்றில் 24% வாக்குகளையும், இரண்டாவது விருப்பு வாக்கின்படி 66% வாக்குக்களையும் பெற்று இமானுவல் மெக்ரன் பிரான்சின் ஜனாதிபதியாகவில்லையா?
ஒவ்வொரு தேர்தலும் மாற்றத்தை கொண்டு வரும் அடிக்கல்லாக அமைவதுடன், மூன்றாவது அணி தனது வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதானது, அதற்கு அடுத்த தேர்தலில் மேலும் மக்களை தம் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் அடித்தளமாக அமையும். அதனால் வெல்லும் அணிக்கே வாக்களிப்பேன் என்று நாமாகவே வெல்லும் அணியை தீர்மானிக்காமல், மிகவும் பொருத்தமான வேட்பாளருக்கு தயக்கமில்லாமல் வாக்களிக்க வேண்டும் அல்லவா?
இலங்கையில் மூன்றாவது அணி பலமான அரசியல் சக்தியாக மாற்றமடைவதற்கு 50% வாக்குகள் தேவையில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. இலங்கையை பொறுத்தமட்டில் மூன்றாவது அணி 30 - 35% வாக்குகளை பெறும்பட்சத்தில் இரண்டாம் விருப்பு வாக்குகளுடன் வெற்றிவாய்ப்பை கூட பெறும் சாத்தியங்கள் உள்ளன. அதனால் மொத்த வாக்குகளில் 25% வீதமான வாக்குரிமையை கொண்டிருக்கும் தமிழ்மற்றும் முஸ்லிம் மக்கள் நினைத்தால், முற்போக்கு சிந்தனை கொண்ட வெறும் 10-15% பெரும்பான்மையினருடன் இணைந்து அரசியல் மாற்றத்தை கொண்டு வரலாம் அல்லவா?