•இந்திய உளவு (பாகம்-2)
1983ல் ஈழத் தமிழர்கள் மத்தியில் முப்பத்தைந்து விடுதலை இயக்கங்கள் இருந்ததை நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் முப்பத்தாறாவது இயக்கமாக இந்திய உளவுப்படையால் ஒரு இயக்கம் இருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
ரெலோ (TELO ) இயக்கத்தைச் சேர்ந்த சோதிலிங்கம் என்பவர் தனது சிறை அனுபவங்கள் தொடர்பாக ஒரு நூல் எழுதியுள்ளார்.
அதில், இந்தியாவுக்கு அகதியாக சென்ற சில ஈழத் தமிழர்களை இந்திய உளவுத்துறையானது இயக்கமாக ஒன்று சேர்த்து உளவு பார்ப்பதற்காக இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் யாவரையும் இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டதாகவும் அவர்களை தான் சிறையில் சந்தித்தாகவும் அவர் எழுதியிருக்கிறார்.
இந்த செய்தியின் உண்மைத் தன்மையை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில் சோதிலிங்கத்தைத்தவிர வேறுயாரும் இச் செய்தி பற்றி இதுவரை கூறியதாக நான் அறியவில்லை.
ஆனால் 1991ற்கு பின்னர் இந்திய உளவுப்படையானது பல வழிகளில் இலங்கையில் ஊடுருவியது. புலிகளை அழிக்க முனைந்தது என்பது குறித்து பலர் இன்று பல விடயங்களை தெரிவிக்கிறார்கள்.
நான் 1992ல் வேலுர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டவேளை அங்கு 60 புலிப் போராளிகளும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் பெரும்பாலும் கால்களை இழந்தவர்கள், கைகளை இழந்தவர்கள், கண்களை இழந்தவர்கள் என மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது கைது செய்யப்பட்டவர்கள்
அதில் ஒருவர் எஞ்சினியர் என்பவர். (இவர் மாத்தையாவின் டிறைவராக இருந்தவர் என்கிறார்கள்). இவருக்கு மட்டும் திடீரென்று இந்திய அரசு விடுதலை உத்தரவு வழங்கியது.
புலிப் போராளிகளில் ஒருவருக்கு மட்டும் அதுவும் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு திடீரென்று இந்திய அரசு விடுதலை உத்தரவு வழங்கியது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது.
அங்கிருந்தவர்களுக்கு நாட்டில் உள்ள புலித் தலைமையுடன் நேரடி தொடர்பு இருக்கவில்லை. பற்பொடி வாங்கக்கூட பணம் இன்றி செங்கட்டிக் கல்லை உடைத்து பல் தேய்த்து வந்தார்கள்.
இந்நிலையில் எஞ்சினியருக்கு விடுதலை கிடைத்ததோடு அவருக்கு விமான டிக்கட் எடுக்கவும் எப்படி பணம் கிடைத்தது என்று அங்கிருந்த புலிப் போராளிகளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
இங்கு எல்லாவற்றையும்விட ஆச்சரியம் என்னவெனில் எஞ்சினியர் விடுதலை செயப்பட்ட அன்று காலை மாவட்ட கலக்டரே சிறப்புமுகாமுக்கு வந்து அவரை தன் காரில் அழைத்துச் சென்று காலை உணவு கொடுத்து பயணம் அனுப்பியது.
இது இந்திய உளவுப்படையில் செயல் என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. ஆனால் எதற்காக இந்திய உளவுப்படை இப்படி செய்கிறது என்பதை அப்போது யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால் ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் இந்திய அரசு தான் சட்ட ரீதியாக நடப்பதாக காட்டிக்கொண்டாலும் அதன் உளவுப்படையானது சட்டவிரோதமாக பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் கொல்வதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறது.
இஸ்ரவேலின் மொசாட் பாணிpயில் திடீரென்று ஒரு கமாண்டோ படையை வன்னிக்குள் இறக்கி பிரபாகரனை கைது செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது முடியவில்லை.
கைது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. குண்டு போட்டாவது அழிக்க முடியுமா என்றும் முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்கும் அவர்களால் பிரபாகரனின் இருப்பிடத்தை அறிய முடியவில்லை.
இங்குதான் பொட்டு அம்மானின் திறமையை நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் இந்திய உளவுப்படை எடுத்த அனைத்து முயற்சிகளையும் அறிந்து அதனை முறியடித்து பிரபாகரனை காப்பாற்றியதில் பொட:;டு அம்மானுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்திய உளவுப்படையானது தனது உளவு வேலைகளுக்;காக இந்திய தமிழரை பயன்படுத்தியதோடு அந்த இந்திய தமிழர் தம்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஈழத் தமிழ் பெண்களை திருமணம்கூட செய்திருக்கின்றனர்.
இன்று இந்த செய்திகள் ஆச்சரியம் தராமல் இருக்கலாம். ஆனால் இன்றும் ஆச்சரியம் தருவது என்னவெனில் 1992ல் இதை எப்படி பொட்டு அம்மான் கண்டு பிடித்து முறியடித்தார் என்பதே.
வன்னியில் பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சென்றுவந்த என் நண்பர் “இந்தியாவில் இருந்து வந்த பத்திரிகையாளர்களை புலிகள் கடுமையாக பரிசோதனை செய்தார்கள். அவர்களின் தலை மயிரைக்கூட பிடித்துப் பார்த்தார்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இப்போதுதான் புரிகிறது பொட்டு அம்மான் எந்தளவு எச்சரிக்கையாக இருந்திருக்கிறார் என்று.
உண்மைதான். ஜேவிபி இயக்கத்தின் தலைமையை ஒரு தோட்டாகூட செலவு செய்யாமல் கைது செய்ய முடிந்த இலங்கை அரசால் புலிகளின் தலைமையை அவ்வாறு கைது செய்ய முடியவில்லையே.
இதற்கு தமிழ் மக்களின் ஆதரவு புலிகளுக்கு இருந்தது என்பது காரணம் என்றாலும் அதுமட்டுமன்றி புலிகளின் புலனாய்வுபிரிவின் திறமையும் அதற்கான பொட்டு அம்மானின் பங்களிப்பும் இருந்திருக்கிறது என்பதும் உண்மைதான்.
(இன்னும் வரும்)