Sunday, November 29, 2020

தோழர் தமிழரசன் தாயாருக்கு அஞ்சலிகள்!

•தோழர் தமிழரசன் தாயாருக்கு அஞ்சலிகள்! 1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார். தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட. மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்? ஆம். அந்த கொடும் துயரை 33 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே. தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய். தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை. மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை. நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை. அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருப்பார்? இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். முடியவில்லை. ஆனாலும் அவர் மகன் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது அவரிடம் சேர்ப்பிக்க முடிந்ததையிட்டு ஆறுதல் அடைகிறேன். அந்த தாயாருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

தமிழா!

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழா! நீ அதை ஆள முடியாது! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் அடிமையாகவே கிடக்கப் போகிறாய் தமிழா!

ஜேக்கப் மேரியம்மாவுக்கு அஞ்சலிகள்!

ஜேக்கப் மேரியம்மாவுக்கு அஞ்சலிகள்! புலிகள் இயக்க உறுப்பினர் வரதன் அவர்கள் மலையகத்தில் சயனைட் அருந்தி இறந்தபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் ஜேக்கப் மேரியம்மா கைது செய்யப்பட்டார். மேரியம்மா கைது செய்யப்பட்டபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரம் அவர்களும் கைது செய்யப்பட்டிருந்தார். கடும் சித்திரவதை மற்றும் நீண்டகால சிறைவாசத்தின் பின் மேரியம்மா விடுதலை செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த மேரியம்மா அவர்கள் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள். இந்த தாயின் தியாகம் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மலையக தமிழ்மக்களின் பங்களிப்பை காட்டும் ஒரு உதாரணம் ஆகும். இனியாவது முரளியின் பட பிரச்சனையின் போது கருத்து தெரிவித்த தமிழக ஊடகவியலாளர் போன்றவர்கள் இந்த உண்மையை அறியட்டும்.

தமிழர் தமக்கு ஒரு கொடியை விரும்புவது

•தமிழர் தமக்கு ஒரு கொடியை விரும்புவது எப்படி தேசவிரோத குற்றமாகும்? ஒருபுறம் தமிழர் நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் மறுபுறம் விழா கொண்டாடியவர்களை கைது செய்கிறது. இதுதான் தமிழக அரசின் “டயர்நக்கி” முதல்வரின் தமிழ் இனப் பற்று. கன்னடம், ஆந்திரா, காஸ்மீர் யாவும் தமக்கென ஒரு கொடியை வைத்திருக்க அனுமதிக்கும் இந்தியஅரசு தமிழர் தமக்கென ஒரு கொடி வைக்க முனைவதை தேசவிரோதம் என்கிறது. கர்நாடாவில் கன்னட கொடியை கன்னட அமைச்சர் ஏற்றுகிறார். அதை அனுமதிக்கும் இந்திய அரசு தமிழகத்தில் தமிழ்நாட்டுக்கொடியை ஏற்ற முனைவோரை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது. தமிழக அரசே! தோழர் பொழிலன் உட்பட கைது செய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர்களை உடனே விடுதலை செய். அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் தேசவிரோத குற்ற வழக்கை வாபஸ் பெறு.

தாய்!

•தாய்! ஒரு போராளியாக இருப்பது கடினம் என்றால் அதைவிடக் கடினமானது அப் போராளியின் தாயாக இருப்பது. அத்தகைய கடின வாழ்வையே இந்த தாய் இறுதிவரை அனுபவித்தார். பொதுவாக போராளியின் தியாகமே மதிக்கப்படும். அதையே வரலாறும் நினைவு கொள்ளும். ஆனால் ஆச்சரியப்படும்வகையில் பெரும்திரளான தமிழ்மக்கள் இத் தாய்க்கு உரிய மரியாதையுடன் விடை கொடுத்துள்ளனர். ஈன்ற பொழுதைக் காட்டிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்கும்போதே தாய் அதிக மகிழ்ச்சி அடைவாள் என்கிறார்கள். ஆனால் இந்த தாய் தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியுடன் கூடவே கொள்ளையன் என அடித்தக் கொல்லப்பட்டான் என்ற அவப் பெயரையும் சேர்த்தே கேட்டார். 33 ஆண்டுகள் கழிந்தன. இந்த தாய் எதிர்பார்த்த அங்கீகாரத்தை வரலாறு வழங்கியது. ஆம் தன் மகன் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய தலைவராக மதிக்கப்படுவதை கண்டுவிட்டே அவர் உயிர் பிரிந்துள்ளது.

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்

•தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்! லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது. சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார். இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்.. அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது. இவர் கொல்லப்பட்டபோது இலங்கை அரசு உட்பட பல சர்வதேச நாடுகளும் கண்டித்தன. ஒரு வெளிநாட்டு அமைச்சரை கொன்றது தவறு என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு இறுமாப்பாக கூறியது. இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே. ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை. சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள். இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள். குறிப்பு - இன்று (02.11.2020) தமிழ்செல்வனின் நினைவுதினம் ஆகும்.

இலங்கையின் புத்திசாலி சுகாதார அமைச்சர்!

இலங்கையின் புத்திசாலி சுகாதார அமைச்சர்! இந்திய பிரதமர் மோடி அவர்கள் கொரோனோ ஒழிப்பிற்கு கை தட்டுங்கள், விளக்கு பிடியுங்கள் என்றார். ஆனால் இலங்கை சுகாதார அமைச்சரோ கொரோணோ பூதத்தை பிடித்து பானையில் அடைத்து ஆற்றில் வீசிவிட்டார். இலங்கையில் கொரோனோ அழிந்துவிட்டது என்று நம்புவோம். பாவம் மக்கள்! குறிப்பு- வேடிக்கை என்னவெனில் கடந்தமுறை கொரோனோவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டோம் என்று மார்தட்டிய கோத்தா அரசு இம்முறை மந்திரித்த பானையை ஆற்றில் போடும் நிலைக்கு வந்துவிட்டது.

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம் 24.06.2016 யன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதி என்ற பெண்ணின் கதை இது. கொலைகாரன் என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் என்ற இளைஞன் 10.09.2016 யன்று புழல் சிறையில் தற்கொலை செய்ததாக பொலிஸ் கூறியது. இன்றுவரை அந்த தற்கொலை ஏன் நடந்தது அல்லது எப்படி நடந்தது என்பது பற்றி பொலிசாரோ அல்லது தமிழக அரசோ மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணை செய்யவில்லை. இந்நிலையில் இப்படம் பொலிசாரை நியாயப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது. நான் தமிழக சிறையில் எட்டு வருடம் இருந்திருக்கிறேன். அப்போது டவர் மாணிக்கம் என்ற கைதி மரத்தில் எறி விழுந்து இறந்ததைக்கூட கண்ணால் பார்த்திருக்கிறேன். ஆனால் சிறையில் ஒரு கைதி சுவரில் தொங்கிய மின்சார வயரை கடித்து தற்கொலை செய்தார் என்று கூறப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை. அதுவும் கைது செய்யும்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் கைதியை சிறையில் எந்தளவு கண்காணிப்பில் வைப்பார்கள்; என்பதை நான் நன்கு அறிவேன். எனவே இப் படத்தை தயாரித்தவர்கள் கொஞ்சம் புலனாய்வு செய்திருந்தாலே பொலிசாரால் மூடிமறைக்கப்பட்ட பல உண்மைகளை மக்களுக்கு தெரிவித்திருக்க முடியும்.

உச்சநீதிமன்றமே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம்

உச்சநீதிமன்றமே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். அல்லது தமிழக அரசே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். அல்லது நீண்டநாள் பரோலில் விடுதலை செய்யலாம். அல்லது ஆளுநருடன் கலந்துபேசியும் தமிழக அரசு எழு தமிழர்களை விடுதலை செய்யலாம். ஆனால் ஒன்று, இனியும் எந்தவித தாமதமும் இன்றி ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

தோழர் வேல்முருகனுக்கு அஞ்சலிகள்!

•தோழர் வேல்முருகனுக்கு அஞ்சலிகள்! கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் கொய்த்துப்பாற மீன்முட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள வனப்பகுதியில், திங்கள் கிழமை கேரள காவல்துறையின் தண்டர்போல் அதிரடிப்படையினரால் தமிழகத்தின் தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சார்ந்த தோழர் வேல்முருகன் (32) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் வேல்முருகன், மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றவர். தேனி மாவட்டம் முருகமலையில் ஆயுதப்பயிற்சி எடுத்ததாகக் கூறி, 2007ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட தோழர் வேல்முருகன், அந்த வருடமே ஒடிசா மாநிலம் கோராபுட் சிறையில் அடைக்கப்பட்டு, நான்கு வருடங்களுக்குப் பிறகு பிணையில் வெளியே வந்தார். கேரள பினராயி அரசின் போலி மோதல் என்கவ்ண்டரை, வன்மையாகக் கண்டிப்போம்.

மாலைதீவு சம்பவம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? மாலைதீவில் நடந்தது புரட்சி அல்ல. அது எதிர்

•மாலைதீவு சம்பவம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? மாலைதீவில் நடந்தது புரட்சி அல்ல. அது எதிர்க்கட்சி தலைவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி. அவர் ஆட்சி அமைத்தால் மாலைதீவை பின்தளமாக பயன்படுத்த தம்மை அனுமதிப்பார் என்ற நம்பிக்கையில் புளட் போராளிகள் உதவி புரிந்தனர். உண்மையில் பளட் இயக்கத்திற்கு முன்னரே இப்படி ஒரு சிந்தனை TEA இயக்க தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு இருந்தது. அவர் மாலைதீவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதனை பின்தளமாக பயன்படுத்த முடியுமா என சிந்தித்தார். மாலைதீவு சம்பவம் நடந்த பின்னர் அவர் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ள தீவு ஒன்றை இவ்வாறு பெற முடியுமா என்று முயற்சி செய்தார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்தியாவை பின்தளமாக தொடர்ந்து பயன்படுத்த போராளி இயக்கங்களால் முடியவில்லை என்பதே. அதனால் அவர்கள் இதற்காக வேறு இடங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னரே இந்திய அரசு புலிகளுக்கும் ஈழத் தமிழருக்கும் எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது என சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே இந்திய அரசு போராளிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தது என்பதற்கு சிறந்த உதாரணம் மாலைதீவு சம்பவம் ஆகும். இந்தியாவில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும்கூட போராளிகள் பின்தளமாக பயன்படுத்த இந்திய அரசு அனுமதிக்காது என்பதற்கும் மாலைதீவு சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் ஆகும். ஏனெனில் மாலைதீவு அரசு இந்திய அரசிடம் உதவி கோராத நிலையிலும் இந்திய அரசு வலியவந்து புளட் போராளிகளை கொன்று ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அடக்கியது. இதற்கு முன்னர் இபிஆர்எல்எவ் இயக்கத்தினர் யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர் இருவரைக் கடத்தியிருந்தனர். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் இந்திராகாந்தி ஜெயவர்த்தனா கோராமலே இபிஆர்எல்எவ் தலைவர்களை பிடித்து சென்னை ஹோட்டல் ஒன்றில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார். ஆனால் இபிஆர்எல்எவ் தலைவர்கள் இன்றும் இந்திய விசுவாசிகளாகவே இருந்து வருகின்றனர். குறிப்பு – இந்தியாவுக்கு எதிராக மாலைதீவில் பின்தளம் அமைக்க முயற்சி செய்து மரணம் அடைந்த புளட் போராளிகளுக்கு எமது அஞ்சலிகள். அவர்கள் தியாகம் என்றும் மதிக்கப்பட வேண்டியதே.

போலி என்கவுண்டர் கொலைகள் செய்வதில்

•போலி என்கவுண்டர் கொலைகள் செய்வதில் சங்கிகளும் கம்யுனிஸ்ட்டுகளும் ஒன்றே ! ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தமிழர்களை சுட்டு சுட்டு பிணங்களாக கேரள அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஏன் தமிழனைக் கொல்கின்றீர்கள் என்று கேட்காவிட்டாலும் ஒரு மனிதனை ஏன் விசாரணையின்றி சுட்டுக் கொல்கிறீர்கள் என்றாவது யாராவது கேட்டிருக்க வேண்டும். ஆனால் சங்கிகள் போலி என்கவுண்டர் மோதலில் கொல்வதைக் கண்டிக்கும் மனிதவுரிமைவாதிகள் யாரும் கேரள கம்யுனிஸ்ட் அரசு செய்யும் இக் கொலைகளை கண்டிப்பதில்லை. இத் தமிழர்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் எனவே சுட்டுக் கொல்வதாக கேரள கம்யுனிஸ்ட் அரசு கூறுகிறது. ஆனால் விசாரணையின்றி கொலை செய்யும் கேரள அரச பயங்கரவாதமே மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தைவிட கொடுமையானது என்று உச்சநீதின்றம் கூறியுள்ளது. ஒருபுறம் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர அரசு தமிழர்களை சுட்டுக் கொல்கிறது. மறுபுறம் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் என்று கேரள அரசு சுட்டுக் கொல்கிறது. இன்னொருபுறம் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக் கொல்கிறது. இப்படி எல்லாபுறமும் தமிழன் எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டால் அதன் அர்த்தம் என்ன? கேட்பதற்கு யாருமற்ற அனாதை தமிழன் என்று நினைக்கிறார்களா அல்லது தமிழன் உயிர் பெறுமதி அற்றது என கருதுகிறார்களா? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தமிழன் உயிர் ஒன்றும் மயிர் இல்லை என்பதைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சம்பந்தர் ஐயாவும் கொரோனோவும்!

•சம்பந்தர் ஐயாவும் கொரோனோவும்! திருகோணமலையில் வசிக்கும் ஒரு ஏழைத் தமிழ் சிறுவன் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு தாயிடம் பணம் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தான். தாயிடம் பணம் இல்லை. ஆனாலும் மகனைச் சமாளிப்பதற்காக “கடவுளிடம் கேள் அவர் தருவார்” என்று கூறினார். இதைக் கேட்ட சிறுவன் உடனே “ அன்புள்ள கடவுளே! எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட உடன் 200 ரூபா அனுப்பி வையுங்கள்” என்று எழுதி கடவுள், திருகோணமலை என முகவரியிட்டு கடிதம் அனுப்பினான். கடிதத்தைக்கண்ட தபாற்கந்தோர் ஊழியர் ஒருவர் அக் கடிதத்தை குசும்பாக சம்பந்தர் ஐயாவின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். கடிதத்தைப் படித்த சம்பந்தர் ஐயா பொதுவாக பண உதவி செய்வதில்லை. ஆனாலும் இச் சிறுவனுக்கு உதவ விரும்பினார். ஏனெனில் இந்த கொரோனோ நேரத்தில் ஒரு சிறுவனுக்கு உதவி செய்தால் தன் பெயர் பத்திரிகைகளில் அடிபடும் என அவர் நினைத்தார். ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 200 ரூபா அதிகம். எனவே 100 ரூபா அனுப்பினால் போதும் என நினைத்து 100 ரூபா பணத்தை அனுப்பினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சிறுவன் உடனே கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினாhன். அதில் “கடவுளே! பணம் அனுப்பியமைக்கு நன்றி. ஆனால் இனி சம்பந்தர் ஐயா மூலம் அனுப்ப வேண்டாம். ஏனெனில் அவர் 200 ரூபாவில் 100 ரூபாவை சுருட்டிவிட்டு எனக்கு 100 ரூபா மட்டுமே அனுப்பி வைத்துள்ளார்” என்று எழுதியிருந்தான். இது இணையவெளியில் வந்த ஒரு நகைச்சுவை துணுக்கு. அமெரிக்கா ஜனாதிபதி பற்றி வந்த இந்த பகிடியை சம்பந்தர் ஐயாவுக்கு நான் மாற்றியிருக்கிறேன். சரி பகிடியை விடுவோம். இப்போது சீரியஸ் மேட்டருக்கு வருவோம். கடந்த வாரம் சம்பந்தர் ஐயா இந்திய தூதரை சந்தித்து பேசியதாக செய்திகள் வந்திருந்தன. அதன்பின்பு இந்திய தூதரகத்தில் பணிபரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சம்பந்தர் ஐயாவால் தூதரக ஊழியருக்கு கொரோனோ வந்ததா அல்லது தூதரக ஊழியரால் சம்பந்தர் ஐயாவுக்கு தொற்று எற்படுமா என ஆராய்வது என் பதிவின் நோக்கம் இல்லை. மாறாக, இலங்கை சட்டப்படி சம்பந்தர் ஐயா முகாமில் தனிமைப்படுத்தப்படுவாரா இல்லையா என்பதை அறிவதே நோக்கமாகும்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனோவினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனோவினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இடம் இன்றி திணறுவதாக இராணுவ தளபதியே ஒப்புதல் அளிக்கிறார். போற போக்கைப் பார்த்தால் கொரோனோ இல்லாதவர்களைத்தான் தனிமைப்படுத்துவார்கள் போல் இருக்கிறது. புலிகளை அடக்கிய எங்களுக்கு கொரோனோவை அடக்குவது பெரிய விடயம் இல்லை என்று வாய்ச்சவடால் விட்ட அமைச்சர் ஒருவர் இப்போது வாய் திறக்க முடியாமல் இருக்கிறார். கோரோனோவை சிறப்பாக அடக்கிய நாடு என இலங்கை பெயர் பெற்றுள்ளது என்று தேர்தலுக்கு முன்னர் கூறிய சுகாதார அமைச்சர் இப்போது மந்திரிக்கப்பட்ட பானைகளை ஆற்றில் போட்டுக்கொண்டு திரிகிறார். ஆக, கொரோனோவைக் கட்டுபடுத்த முடியாமல் இலங்கை அரசு திணறுகிறது என்பது நன்கு வெளிச்சமாகியுள்ளது. எந்த மக்கள் நம்பிக்கையுடன் இந்த அரசை தெரிவு செய்தார்களோ அந்த மக்களை காக்கத் தவறியுள்ளது இந்த அரசு. அந்த மக்கள் மத்தியில் நன்கு அம்பலமாகி வருகிறது இந்த அரசு.

இது 6 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் நான் செய்த பதிவ

குறிப்பு - இது 6 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் நான் செய்த பதிவு ஆகும். இதனை இன்று முகநூல் எனக்கு நினைவூட்டியுள்ளது. அண்மையில் முரளியின் 800 பிரச்சனையின்போது தமிழக ஊடகவியலாளர் ஒருவரும் இன்னும் சிலரும் வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்கள் ஒருபோதும் மலையக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறியிருந்தனர். அவர்களுக்காக இதனை மீள்பதிவு செய்கிறேன். • தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் மலையக விஜயம் வரலாற்றில் வரவேற்கத்தக்கதொரு மாற்றம்! மலையத்தில் மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியமை நல்லதொரு மாற்றமாகும். இலங்கை அரசு விரும்பாத நிலையிலும்கூட வடமாகாண முதலைமைசர் விக்கினேஸ்வரன் அந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியமை வரவேற்கப்பட வேண்டியதே! இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமெரிக்க, இந்திய உதவிகள் தேவையில்லை என்கிறார். வடக்கு கிழக்கில் இருந்து யாரும் வரத் தேவையில்லை என்கிறார் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுதுணி கூட வழங்கப்படவில்லை. மலையக மக்களின் தலைவர் தொண்டமான் மண் சரிவு வரும் என்று சோதிடம் பார்ப்பதா? எனக் கேட்கிறார். ஆனால் இன்னொரு சிங்கள அமைச்சரோ மண் சரிவு வரும் என்பது தமக்கு தெரியும் என்றும் மாற்று காணி தோட்ட முதலாளிகள் தராததால் தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார். வட கிழக்கு மாகாண தமிழ் தலைவர்கள் மலையகத்திற்கு விஜயம் செய்திருப்பது மலையக மற்றும் பூர்வீக தமிழ் மக்களின் ஜக்கியத்திற்கும் ஒருமித்த தலைமைக்கும் வழி வகுக்கும். தமிழ் இனமாக ஒன்று படுவோம்! இன ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவோம்

லெனின் ரஸ்சிய புரட்சி !

• லெனின் ரஸ்சிய புரட்சி ! உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என்பது விடை காணவேண்டிய வினாவாக இன்றும் இருக்கலாம். ஆனால் மார்க்சின் பின்னரான இந்த 150 ஆண்டு காலப் போராட்டங்களும் வென்றெடுப்புகளும் முதலாளித்துவத்திற்கான ஒரே மாற்று மார்க்சிசமும் சோசலிசமுமே என்பதை நிரூபித்துள்ளன. மார்க்சிசம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது. மாபெரும் அக்டோபர் புரட்சி மூலமாக அது லெனினிசமாக வளர்ச்சி கண்டது. சீனப்புரட்சியின் ஊடாக மாஓசேதுங் சிந்தனையாக அது மேலும் விரிவு கண்டது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மார்க்சிசம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி மார்க்சிசம் நிற்கின்றது. அது ட்ராக்சியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் விட்டுக்கொடுக்காத இடையறாத போராட்டத்தை நடத்தி வருகிறது. புரட்சி நடைபெற்ற நாடுகளில் இன்று புரட்சி அரசுகள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த புரட்சிகளே, •உலகில் உழைக்கும்; மக்களும் நாடாள முடியும் என்பதை நிரூபித்தன. •உலகில் உழைக்கும் மக்களும் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நிரூபித்தன •உலகில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ண உரிமை கொண்டவை என்றன. •உலகில் சர்வாதிகார பாசிச ஆட்சிகளை ஒன்றுதிரண்டு தூக்கியெறிய முடியும் என்பதை நிரூபித்தன. •உலகில் இன மத சாதி மற்றும் நிற பேதங்களை கடந்து அனைவரும் சமமான மனிதர்கள் என பறைசாற்றின. உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் நாம் இழப்பதற்கு எதுவுமேயில்லை -ஆனால் நாம் வெல்லுவதற்கு ஒரு உலகம் இருக்கிறது!

ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?

ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்? ரவிராஜ் கொலைக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை? ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடியவரா? இல்லை ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாரா? இல்லை ரவிராஜ் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தவராக குற்றம் சாட்டப்பட்டாரா? இல்லை ரவிராஜ் ஒரு தேடப்பட்ட சந்தேக நபரா? அல்லது குற்றவாளியா? இல்லை அப்படியாயின் ரவிராஜ் ஏன் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்? கொல்லப்படும் அளவிற்கு ரவிராஜ் செய்த தவறுதான் என்ன? ரவிராஜ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் புலிகள் அமைப்பை ஆதரித்தார் புலிகள் அமைப்பை ஆதரித்தது தவறு என்றால் ஏன் மற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படவில்லை? எல்லா தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளின் ஆதரவுடன்தானே பதவியைப் பெற்றவர்கள். புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொன்ன சம்பந்தர் ஐயாவையல்லவா இலங்கை அரசு முதலில் சுட்டிருக்க வேண்டும் ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே. ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார். இனவாதம் மூலம் ஆட்சி செய்யும் இலங்கை அரசு அந்த இனவாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்காது. இனங்களுக்கடையே நல்லிணக்கம் ஏற்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும்கூட அனுமதிக்காது. முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் பௌத்த இனவாதிகளுடன் சிங்கள மொழியில் விவாதம் செய்து அவர்களை அம்பலப்படுத்தினார். அதனாலேயே அஸ்ரப் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. தன்னை சந்தித்த சிங்கள மக்களிடம் சிங்கள மொழியில் தமிழர் நியாயங்களை தான் கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் சிங்களப் பகுதிகளில் வந்து அவற்றை கூறும்படி தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார். அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் கொல்ல வேண்டும் என்றும் இனவாதிகள் கத்தினார்கள். தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழர் பிரச்சனையை காலம் காலமாக இந்தியாவுக்கு கூறியிருக்கிறார்கள். அமெரிக்கா பிரிட்டனுக்கு எல்லாம் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை கூற அவர்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஒருவேளை தமிழ் மக்களுக்கு ஏதும் தீர்வைப் பெற்றுத்தர முன்வந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஏனவே இனியாவது காலம் சென்ற ரவிராஜ் காட்டிய பாதையில் சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுவோம். அவர்களை இனவாத ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து வென்றெடுப்போம். குறிப்பு- ரவிராஜ் கொல்லப்பட்ட தினம் இன்று. ரவிராஜ்க்கு சிலை வைத்த தமிழ்தேசியகூட்டமைப்பால் அவரின் கொலைக்குரிய நீதியை இன்னும் பெறவில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு நீதி பெற முடியாதவர்கள் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி பெற்று தருவார்கள் என எப்படி நம்புவது?

பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்!

பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்! தொப்புள் கொடி உறவுகள் என்று வெறும் வாய்ப் பேச்சில் அவர்கள் சொல்லி வரவில்லை. உண்மையிலே தங்களால் இயன்றளவு ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் அர்ப்பணித்து வருகிறார்கள். உலகில் எந்தவொரு இனமும் தமிழகம் போல் தன் இனத்திற்கு உதவியிருக்குமா என தேடிப் பார்க்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் சேயாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. நாம் அவர்கள் மண்ணில் கொலை செய்தோம். கொள்ளை அடித்தோம். பெண்களின் கழுத்pல் இருந்த தாலியைக்கூட அறுத்தோம். ஆனால் அவர்கள் ஒருமுறைகூட ஈழ அகதிகள் வெளியேற வேண்டும் என்று கோரவில்லை. கடந்த 35 ஆண்டுகளாக தங்க வைத்திருப்பதோடு ரேசனில் உணவுப் பொருட்களும் தந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் ஒரு நேர உணவுக்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள். பெங்களுரில் இருந்து விரட்டப்பட்ட தமது உறவுகளைக்கூட அவர்கள் உரிய முறையில் பராமரிக்கவில்லை ஆனால் எத்தனை இடர் வந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதில் அவர்கள் ஒருபோதும் பின்னின்றதில்லை. ஈழத் தமிழர்களை பாதுகாக்குமாறு கோரி இதுவரை 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்துள்ளனர். பல இளைஞர்கள் ஈழத்திற்கே வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடி இறந்துள்ளனர். அதில் ஒருவரே சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்ற தனுஸ்கோடி செந்தூரபாண்டியன். அவர் தனது 18 வயதில் 11.11.1993யன்று பலாலி முகாம் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார். இன்று அவரது 27வது நினைவு தினம் ஆகும். எமக்காக ஈழத்திற்கே வந்து மரணித்த அந்த சகோதரனை ஒவ்வொரு தமிழனும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும். இங்கு வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள். ஆனால் அவர்களோ அப்போதும்கூட கோபம் கொள்வதில்லை. 7கோடி பேர் தாம் அருகில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டோமே என்றுதான் தலை குனிகிறார்கள். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இனி அடுத்த போராட்டம் தாயும் சேயும் இணைந்தே நடத்தப் போகிறார்கள். அந்த அற்புதத்தை உலக வரலாறு பார்க்கத்தான் போகிறது! குறிப்பு - இது ஒரு மீள் பதிவு.

அது ஒரு கனாக் காலம்!

•அது ஒரு கனாக் காலம்! கரவெட்டியில் ஒரு மதவு இருந்தது அது மதவடி என்று பெயர் பெற்று இருந்தது அதில் நிறைய இளைஞர் கூட்டம் இருந்தது அவர்கள் சிரித்து மகிழ்ந்திட்ட ஒரு காலம் இருந்தது சோனப்பு வீதியில் அந்த மதவடி இருந்தது மதவடியில் குந்தி இருந்து பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து வந்ததே ஒரு வீட்டில் விசேடம் என்றால் பலகாரப் பெட்டி மதவடி வந்திடுமே ஒரு வீட்டில் ஓலம் கேட்டால் ஒடி வரப் பலர் இருந்தனரே மதவடியில் அருகில் அத்துளு வயல் இருந்தது அதன் நடுவே ஒரு குளம் இருந்தது குளம் நிறைய தாமரை மலர்ந்தது நீச்சல் பழகும் சிறுசுகளாலும் குளம் கலங்கியும் நிரம்பியும் இருந்தது. அங்கும் பல சாதிகள் இருந்தன ஆனால் அதையும் தாண்டி அன்பு இருந்தது பல மதங்கள் இருந்தன ஒருபோதும் வேறுபாடு காட்டியதில்லை பல இயக்கத்தையும் சேர்ந்தவர் இருந்தனர் உன் இயக்கம் பெரிது என் இயக்கம் பெரிது என்றதொரு சண்டை நடந்ததில்லையே மதவடி அருகெங்கும் மதில்களும் வேலிகளும் இருந்தன ஆனாலும் ஆர்மி வந்தால் ஓடி தப்பிச் செல்ல அதில் இடைவெளிகளும் கண்டாயங்களும் இருந்தன மட்டக்களப்பில் இருந்து வந்த பொடியன்களும் மன்னாரில் இருந்து வந்த பொடியன்களும் கவலை எதுவுமின்றி குந்தி இருந்த மதவடி இது எட்டுமுறை ராணுவம் சுற்றி வழைத்தபோதும் ஒருமுறைகூட யாரும் பிடிபட்டதில்லையே பொடியன்கள் தில்லையம்பலம் கோவிலடியில் பசியோடு நிற்கிறான்கள் என அறிந்ததும் ஓடோடி வந்து புக்கையும் மோதகமும் தந்த ஜயர் தலையில் துவக்கை வைத்து ஆர்மி மிரட்டிய போதும் மதவடி பொடியன்களை காட்டிக் கொடுக்க மறுத்தாரே யாரோ பெத்த பிள்ளைகள்தானே என்று இருந்துவிடாமல் தான் பெத்த பிள்ளைகளாக எண்ணி சோறு சமைத்து இராணுவ முற்றுகைக்குள்ளால தைரியமாக வந்து சோனப்பு சுடலையில் இருந்த பொடியன்களுக்கு தந்த பாறி அக்காத்தையை மறந்தவிட முடியுமா? மதவடி அருகில் ஒரு காளி கோவில் இருந்தது அதில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர் ஒருநாள் பூசாரியைக் கண்டதும் அவர்கள் ஆயுதங்களை எடுக்க மறந்துவிட்டதை உணர்ந்தனர் ஜயோ! பூசாரி ஏசப் போகிறரே என்று மதவடியில் இருந்த பொடியன்கள் பயந்தவேளை “அடேய் தம்பியளா! நீங்க வைத்த சாமான்களை தண்ணி பட்டுவிடக் கூடாதென்று எடுத்து காளிக்கு பின்னால வைத்திருக்கிறேன்டா” என்று சொல்லிவிட்டு போனாரே அந்த பூசாரி. அது ஏதோ வானத்தில் இருந்து கேட்ட அசரீரி போல் அல்லவா இருந்தது அவர்களுக்கு. ஒருமுறை ராணுவம் தேடுதல் நடத்தியவேளை பனம் பாத்தியினுள் மறைத்து வைத்திருந்த 30 பெட்டி சக்கையை (வெடி மருந்து)எடுத்து விட்டது ஆத்திரம் கொண்ட ராணுவம் அங்கிருந்த கொட்டிலைக் கொழுத்தியது அப்புறம் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றது அந்த வீட்டில் மறைந்திருந்த பொடியன் அவசரத்தில் தன் வெடிகுண்டை மறந்து ஓடிவிட்டான். அந்த வீட்டில் இருந்த தாயோ உடனே அந்த வெடி குண்டை வாழையடியில் புதைத்து விட்டு அதன் மேலே அசையாமல் நின்றாள் ராணுவத்தை கண்டு பெண்கள் பயந்த காலத்தில் தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை வெடி குண்டை பாதுகாக்க வேண்டும் என்று தைரியமாக நிமிர்ந்து நின்ற தாய் அவர். மதவடி பொடியன்கள் ஒன்றுகூடி கரவை இளைஞர் ஒன்றியம் என்னும் பெயரில் வாசிகசாலை ஒன்றையும் நடத்தினார்கள் அதில் கேடயம், மனஓசை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற புரட்சி சஞ்சிகைகளும் இந்தியாவில் இருந்து தருவித்து வைத்தார்கள். இவற்றைப் படிப்பதற்கென்றே இளைஞர்கள் பல ஊர்களில் இருந்தும் தேடி வந்தனர். ஒருமுறை இந்திய ராணுவம் இருந்தவேளை ஊர்க் கோயில் திருவிழாவிற்காக சுவாமி வெளி வீதி உலா வந்தவேளை இந்திய ராணவம் வருகின்றது என்றதும் சுவாமியை அப்படியே வீதியில் போட்டுவிட்டு காவி வந்த பக்தர்கள் ஓடி மறைந்து விட்டனர். கடவுள் பிள்ளையார் கோவில் வீதியில் தனியாக கிடப்பதைக் கண்ட இந்திய ராணுவம் பிள்ளையாரை தூக்கிச் சென்று கோவிலினுள் வைத்துவிட்டு சென்று விட்டனர். இதையறிந்த மதவடி பொடியன்கள் அடுத்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டினார்கள் அதில், “பக்தர்களே! பிள்ளையார் உங்களை காப்பாற்ற மாட்டார். போராளிகளே உங்களை காப்பாற்றுவர்” என்று எழுதியிருந்தார்கள். மதவடியில் போஸ்டரைக் கண்டதும் ஊரே பர பரத்தது. சிலர் “பிள்ளையாரை எதிர்த்து போஸ்டரா” என்றார்கள் பலர் “ போராளிகள்தானே எம்மைக் காக்கின்றனர்” என்றனர். மதவடி ஓட்டையில் எப்போதும் வெடி குண்டுகள் இருந்தன எட்டு முறை ராணுவம் அதன் மேலாக வந்தபோதும் ஒருபோதும் அதனை பொடியன்கள் வெடிக்க வைக்கவில்லை ஊர் அழிந்துவிடும் என்று நினைத்தார்களா- அல்லது தாம் இருந்து மதகு என்று நினைத்தார்களா தெரியவில்லை மதவடி இப்போதும் இருக்கிறது அதில் இருந்த பொடியன்கள் சிலர் இப்போது உயிரோடு இல்லை உயிரோடு இருக்கும் சிலருக்கும் அது ஒரு கனவாகி போனதன்றோ? மதவடி எப்போதும் இருக்கும் அதில் பொடியன்கள் எப்போதும் இருப்பர்? ( மீள் பதிவு.)

செங்கொடியும் செந்தூரனும்

•செங்கொடியும் செந்தூரனும் இருவரும் தமிழர்கள். ஒருவர் ஈழத் தமிழர். மற்றவர் தமிழக தமிழர். இருவரும் சிறையில் உள்ள தமிழர் விடுதலைக்காக தமது உயிரை அர்ப்பணித்தவர்கள். தோழர் செங்கொடி ஏழுதமிழர் விடுதலைக்காக தீக்குளித்து உயிர் துறந்தார். மாணவன் செந்தூரன் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக ரயில் முன் பாய்ந்து உயிர் துறந்தார். செங்கொடி உயிர் துறந்த இடத்தில் அவருக்கு நினைவு சின்னம் எழுப்பி வருடா வருடம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆனால் மாணவன் செந்தூரன் உயிர் துறந்த தண்டவாளத்தில் இன்னமும் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவன் விரும்பிய தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை பெற்று வரவில்லை. எமது தலைவர்கள் இந்திய தூதருடன் சேர்ந்து 20 காந்தி சிலைகளை வைக்க எடுக்கும் அக்கறையை இந்த மாணவனுக்கு ஒரு நினைவுக் கல்லைக்கூட வைக்க காட்டவில்லை. எமது தலைவர்கள் அரசியல் கைதிகளையும் மறந்து விட்டார்கள் அதற்காக உயிர் விட்ட மாணவன் செந்தூரனையும் மறந்து விட்டார்கள். அவர்களது கவலை எல்லாம் தங்கள் பதவியை எப்படிக் காப்பாற்றுது, சொகுசு பங்களா வாகனம் எப்படி வாங்குவது, தமக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெறுவது என்பது பற்றியே இருக்கிறது. தம்பி செந்தூரா! எங்களை மன்னித்துவிடு! மாஸ்ரர் படம் வரப்போகுது அதுக்கு கட்அவுட் கட்ட வேண்டும். அப்பறம் மாகாணசபை எலெக்சன் வருது தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு அதில் உன்னை நினைக்க ஏது நேரம்? ஆனாலும் ஒரு விடயத்தில் நீ ஆறுதல் கொள்ளலாம் ஏனெனில் நல்லவேளை 2015ல் நீ செத்துவிட்டாய் இல்லையேல் ஏன் கோத்தபாயா வரும்போது சாகவில்லை என்று கேட்டிருப்பார்கள். அல்லது, ஒரு கட்சி தூண்டிவிட்டுத்தான் செத்தாய் என்று கூறியிருப்பார்கள். குறிப்பு- அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 26.11.2015 யன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரன் நினைவாக எழுதும் குறிப்பு இது.

நாம் பெருமூச்சுவிடுவதைத் தவிர வேறுவழியில்லை!

•நாம் பெருமூச்சுவிடுவதைத் தவிர வேறுவழியில்லை! இவர் பீகார் மாநிலத்தில் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ தோழர் மெஹபூப் ஆலம் 53,597 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நான்காவது முறையாக வென்றது ஆச்சரியம் இல்லை. நான்குமுறை வென்றபின்பும் இப்போதும் மண்குடிசை வீட்டில் வாழ்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இப்பவும் அரச பஸ்ஸில்தான் பயணம் செய்கிறார். எமக்கும் எம்பி யாக சிலர் வந்து வாய்ச்சிருக்கிறார்கள். வென்றதும் இவர்களுக்கு சொகுசு பங்களா வேண்டும். 5 கோடி ரூபாயில் சொகுசு வாகனம் வேண்டும். அதைவிட தமிழ் மக்கள் மத்தியில் வருவதற்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும். நாம் எமது எம்.பி களை நினைத்து பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு வழியில்லை.

நாம் தோற்றுப் போய்விட்டோமா?

நாம் தோற்றுப் போய்விட்டோமா? குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக பத்து எண்ணுவதற்குள் மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும். அதேபோல் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மாறாக மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் அது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் அழிவு என்பது ஒரு பின்னடைவேயொழிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான தோல்வி அல்ல. ஏனெனில் போராட்டம் வெற்றியை தராது போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுபுறத்து உண்மையாகும். பொதுவாகவே ஒரு மனிதன் பிறக்கும்போதே போராட்டத்துடனே பிறக்கிறான். அவன் பூமியில் பிறந்தவுடன் செய்யும் முதல் போராட்டமே அழுகைதான். அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்கிறார்கள். அதுபோலவே பிறக்கும்போதே போராட்டத்துடன் பிறக்கும் மனிதன் இறக்கும்வரை போராட்டத்துடனே வாழ்கிறான். ஒருவன் போராட தயங்கினால் அவன் வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்துவிடுவான். எப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும். எனவே தமிழ் இனமும் அழியாமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறது என்றால் அது இத்தனை காலமும் போராடி வருகின்றது என்றே பொருள். எனவே இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டுமென்றால் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஏடறிந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழ் இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக எல்லாம் தொடர்ந்து போராடியதை அறிய முடியும். இத்தகைய வீரம் செறிந்த போராட்ட குணாம்சமே தொடர்ந்தும் இலங்கை மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் இனத்தை போராட வைக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எனவேதான் தமிழ் மக்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றிவிழாக் கொண்டாடியவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோல்வியை ஒத்துக்கொள்ளும்டி தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் இதுவரை தோற்கவில்லை. இனியும் தோற்கப்போவதில்லை. குறிப்பு - இதைப் படித்தவுடன் இத்தனை காலமும் போராடி கண்ட பலன் என்ன அழிவைத் தவிர என்று சிலர் மனதில் கேள்வி எழுக்கூடும். அவர்களுக்கான பதில் அடுத்த பதிவில்.

இந்த செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்த செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஐபிசியைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் இந்த செய்தி வந்ததாக தெரியவில்லை. இந்த செய்தி உண்மையாக இருந்தாலும் ஒரு நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இன்னொரு நாட்டின் அரசு இப்படி வெளிப்படையாக கோர முடியுமா என்றும் தெரியவில்லை. இந்த செய்தி உண்மையானால் அதனால் பிரிட்டனுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ எந்த சங்கடமும் இல்லை. மாறாக இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இப்பவும் சொல்லிக்கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களே சங்கடத்தை எதிர் கொள்வர். ஏனெனில் இனி அவர்களால் எந்த முகத்துடன் மக்களிடம் சென்று இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவப் போகிறது என்று சொல்ல முடியும்? சரி , புலிகளை அழித்துவிட்டதாக கூறிய இலங்கை அரசும் இந்திய அரசும் எதற்காக தொடர்ந்தும் புலிகளை தடை செய்து வருகிறார்கள்? எதற்காக தடை செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகளை கேட்கிறார்கள்? அவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில் இல்லாத புலிகளுக்கு எதற்கு தடை? சரி தடையை நீக்கிவிட்டால் மீண்டும் உருவாகிவிடுவார்கள் என்று கருதினால் ஜே.வி.பி மீதான தடையை ஏன் நீக்கினார்கள்? ஜே.வி.பி அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்த இலங்கை அரசு, அதன் தலைவர்களை பயங்கரவாதிகள் என்று கொன்ற இலங்கை அரசு இப்போது எப்படி அவர்கள் தடையை நீக்கி இயங்க அனுமதிக்கிறார்கள்? திலீபனை நினைவுகூர தடை விதித்த இலங்கை அரசு இன்று எப்படி ஜே.வி.பி தனது 31வது காhத்திகை வீரர்கள் தினத்தை நினைவுகூர அனுமதி அளித்துள்ளது? ஜே.வி.பி ஒரு சிங்கள அமைப்பு. புலிகள் தமிழ் அமைப்பு என்பதைத்தவிர வேறு என்ன வித்தியாசத்தை இலங்கை அரசு கண்டுள்ளது? இங்கு வேடிக்கை என்னவெனில் சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது ஒரு அமைப்பை தடைசெய்யதால் போராட்டத்தை ஒழித்துவிடலாம் என நினைப்பதாகும். போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் பெயர் என்னவைத்தாலும் போராட தமிழ் மக்கள் தயங்கமாட்டார்கள். இந்த உண்மையை இலங்கை இந்திய அரசுகள் விரைவில் உணர்ந்துகொள்ளும்.

போட்டாச்சு முழுப்படம்

•போட்டாச்சு முழுப்படம் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனது இரண்டு முழுப் படங்கள் போட்டுள்ளேன். என் எட்டு வருட சிறைவாழ்வில் நான் மறக்க முடியாத படங்கள் இவை. அதனால்தான் இவற்றை என் முகநூல் முகப்பு படமாக தொடர்ந்து வைத்திருக்கிறேன். ஒருபடம் 1992ம் ஆண்டு வேலூர் சிறப்புமுகாமில் இருந்து கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றபோது நீதிமன்றம் முன்னிலையில் எடுக்கப்பட்ட படம். இன்னொரு படம் 1995ம் ஆண்டு மதுரை சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட படம் ஆகும். விசாரணை சிறைவாசிக்கே கைவிலங்கு போடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அகதியான எனக்கு கைவிலங்கு மட்டுமல்ல லீடிங் செயினும் போட்டு 36 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்ய வைத்தார்கள். சாப்பிடும்போதோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது கூட அவர்கள் எனக்கு இவற்றை கழற்றவில்லை. இறுதியாக எனது தோழர்கள் இதை படம் பிடித்து நீதிமன்றத்தில் காட்டி எனக்கு இவற்றைப் போடக்கூடாது என்ற உத்தரவைப் பெற்றார்கள். குறிப்பு - இது கடந்தவருடம் முழுப்பட சேலஞ்சிற்காக பதிவு செய்தது. இன்று முகநூல் நினைவூட்டியதால் மீள் பதிவு செய்கிறேன்.

ஏழு தமிழர் விடுதலை இனியும் தாமதமானால்

ஏழு தமிழர் விடுதலை இனியும் தாமதமானால் இனத்தின் விடுதலையாக மாற்ற வேண்டும். ஏழு தமிழர் விடுதலை குறித்து தமது அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சா கூறியுள்ளார். ஆனால் இந்த ஏழு தமிழரில் நாலுபோர் ஈழத் தமிழராக இருந்தும் இவர்கள் விடுதலை குறித்து இதுவரை எந்தவொரு ஈழத் தமிழத்; தலைவரும் குரல் எழுப்பவில்லை. அந்தளவுக்கு இந்திய அரசு விசுவாசம்!

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்ல

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனத்திற்கு சமவுரிமை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனம் படுகொலைக்கு நீதி இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனது உறவுகள் சிறையில் இருந்து விடுதலை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து எந்த பதிலும் இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனக்காக மரணித்த உனது உறவுகளை நினைவுகூரக்கூட உனக்கு அனுமதி இல்லை. ஏனெனில் நீ தமிழன். குறிப்பு – ஜேவிபி தமது கார்த்திகை வீரர்களை நிரைனவுகூர அனுமதி உண்டு. ஆனால் தமிழர்கள் தமக்காக இறந்தவர்களை நினைவுகூர அனுமதி மறுப்பு.

தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் (19.11.1967) இன்று ஆகும். அவர் மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று தன் குடும்பத்துடன் 53வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். ஆனால் தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார் . தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

மாவீரர்களை நினைவு கூர்வதற்கு

மாவீரர்களை நினைவு கூர்வதற்கு அனுமதி கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மாவீரர்களை நினைவுகூர்பவர்கள் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ராணுவ தளபதி மிரட்டுகிறார். பதினொரு வருடங்களுக்கு முன்னர் மரணித்தவர்களைக் கண்டு இன்றும் இலங்கை அரசு ஏன் அஞ்சுகிறது? ஏனெனில் மரணித்த மாவீரர்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்கள். அதனால் மாவீரர்கள் மீண்டும் முளைத்துவிடுவார்கள் என்று பயம் கொள்கிறார்கள். அந்தப் பயம் இருக்கட்டும். குறிப்பு – வெற்றிவிழா கொண்டாடியவர்கள் பதினொரு வருடத்தின் பின்னரும் பயம் கொள்கிறார்கள் எனில் போராட்டம் தமிழர்களுக்கு தோல்வியைத் தரவில்லை என்றுதானே அர்த்தம்.

தனி ஒருவனாக கையில் குழந்தையுடன்

தனி ஒருவனாக கையில் குழந்தையுடன் வீதிக்கு வந்து எழுவர் விடுதலைக்கு போராடும் இந்த தமிழன் உணர்வு பெரும் நம்பிக்கை தருகிறது. ஏனெனில் உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே தொடங்கியிருக்கிறது. இந்த தமிழன் மூட்டியிருக்கும் சிறுபொறி எழுவர் விடுதலைக்கான பெரு நெருப்பாக மாறட்டும். ஏழு தமிழர் விடுதலை பெற்றால் மகிழ்ச்சி. விடுதலை பெறாவிட்டால் பெரு மகிழ்ச்சி. ஏனெனில் இனவிடுதலையாக அது மாறும்.

நாய் பிடிக்கும் வண்டிக்கு

•நாய் பிடிக்கும் வண்டிக்கு நெதர்லாந்தில் வேலை வந்திடுச்சு! தன்னை யாழ்ப்பாண சங்கிலி மன்னரின் வாரிசு எனச் சொல்லிக்கொண்டு நெதர்லாந்தில் இருக்கும் ஒருவர் “தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தை எதிர்க்க கூடாது” என்று கூறுகிறார். அதுமட்டுமன்றி “ புலிகள் தன்னிடம் ஆரம்பத்திலேயே வந்திருந்தால் தன்னால் காப்பாற்றியிருக்க முடியும்” என்றும் கூறியிருக்கிறார். யுத்தம் முடிந்து பதினொரு வருடங்களின் பின்பு ஏன் இவர் இப்படி கூற ஆரம்பித்திருக்கிறார்? பாவம் அவருக்கும் பசிக்குமில்லே.

தடை அதை உடை

•தடை அதை உடை இவர்கள் கூடிக் கத்திவிட்டு கலைந்த காகக்கூட்டங்கள் இல்லை இவர்கள் ஒன்றாய்கூடி மழையாக பொழிந்த மேகக்கூட்டங்கள் இவர்கள் சிந்தியது குருதி, அது பெற்று தரும் விடுதலை உறுதி . இவர்களை நினைவு கூரத் தடை எனில் அதை உடை.

171 பேரைக் கொன்றவருக்கு 5160 வருடம் தண்டனை

•171 பேரைக் கொன்றவருக்கு 5160 வருடம் தண்டனை 40000 பேரைக் கொன்ற மகிந்தவுக்கு எத்தனை வருடம்? 1982ம் ஆண்டு கவதமேலா நாட்டில் 171 பேரைக் கொன்ற ராணுவ வீரருக்கு 5160 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரில் சுமார் இரண்டு லட்சம் மயா இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் ஆட்சியில் இருந்தபோது 1982ம் ஆண்டு டாஸ் எரிஸ் என்ற கிராமத்தில் 201 அப்பாவி மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 1996ம் ஆண்டு உள்நாட்டுபோர் முடிவிற்கு வந்தபின் இக் கிராம படுகொலைகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இந்தப் படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்தினரில் முக்கியமானவர் முன்னாள் ராணுவ வீரர் சான்டோ லோபஸ். இவர் மீது 171 பேரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ராணுவ வீரர் சான்டோ லோபஸ், உள்நாட்டுப் போரைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கைபில் பிரிவைச் சேர்ந்தவர். உள்நாட்டுப் போர் முடிந்த பின் அமெரிக்காவில் பதுங்கி இருந்த சான்டோ லோபஸ் கைது செய்யப்பட்டு கவுதமேலாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவர் மீது வழக்கு நடந்து வந்தது. கவுதமேலா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த எப்ரெயின் ரியாஸ் மான்ட் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்துவந்த நிலையில் 2017ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார். இந்த வழக்கில் கவுதமேலா சிட்டி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 171 பேரைக் கொலை செய்த சான்டோ லோபஸக்கு ஒவ்வொருவரையும் கொலை செய்தமைக்காக தலா 30 ஆண்டுகள் வீதம் 5130 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்றதற்காக கூடுதலாக 30 ஆண்டுகளும் என மொத்தம் 5160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது இங்கு எமக்கு எழும் கேள்வி என்னவெனில் 171 பேரைக் கொன்றவருக்கு 5160 வருடம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 40000 தமிழ் மக்களைக் கொன்ற மகிந்தவுக்கு விசாரணை கூட நடைபெறவில்லையே. அது ஏன்? இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், “நடந்தது இனப்படுகொலை அல்ல” என்று கூறுவதற்கு மாயா இனத்தில் ஒரு சுமந்திரன் இல்லை. இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவை “இலங்கையின் தேசியதலைவா” என்று புகழும் சம்பந்தர் அய்யா மாயா இனத்தில் இல்லை. குறிப்பு- 171 பேரின் படுகொலைக்கு 36 வருடங்கள் கழித்து மாயா இன மக்களால் நீதியை பெற்றிருப்பது 40000பேரின் படுகொலைக்கு உரிய நீதியை பெற முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு தருகிறது

எமக்காக மரணித்தவர்களை

•எமக்காக மரணித்தவர்களை நாம் நினைவு கூர வேண்டுமா? மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை அப்படியென்றால் மரணித்த மாவீரர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்? முதலாவதாக, அவர்கள் எமக்காக மரணித்தவர்கள் இரண்டாவதாக, அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். மூன்றாவதாக அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். முக்கியமாக எமது இளம் சிறார்கள் இதை உணர்வதற்கு மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டும். ஏனெனில் எமது அடுத்த சந்ததியினரான இளம் சிறார்கள் தேடப்போவது தமது உறவுகளின் கல்லறைகளில் உள்ள பெயர்களை அல்ல. மாறாக தங்கள் உறவுகளின் வேர்களை. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசு வேண்டுமானால் மாவீரர்களின்; கல்லறைகளை உடைக்கலாம். ஆனால் இந்த இளம் சிறார்களின் நெஞ்சுறுதியை ஒருபோதும் உடைக்க முடியாது. இவர்கள் மிக விரைவில் தங்களுக்குரிய நியாயத்தை கேட்பார்கள். அதுவும் தங்களுக்கே உரிய மொழியில் கேட்கப் போகிறார்கள். Comments

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி “போராடிய போராளிகள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா?” என்பதே. கேள்வி- போராடியவர்கள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது மாவீரர்களுக்கு லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா என்று சிலர் கேட்கிறார்களே? பதில்- உண்மையில் நல்ல கேள்வி. ஆனால் இதே லண்டனில் ஈஸ்ட்காமில் 4 கோயில்கள் அருகருகே பல மில்லியன் ரூபாவில் கட்டும்போது இது தேவையா என்று கேள்வி கேட்காதவர்கள் ஒக்ஸ்போட் நகரில் மாவீரர்களுக்கு பணிமனை கட்டும்போது ஏன் கேட்கின்றனர்? இதே லண்டனில் ழு2அரினா மண்டபத்தில் யு.சு.ரகுமான் கச்சேரி நடக்கும்போது கேள்வி கேட்காதவர்கள் எக்சல் மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஏன் கேட்கிறார்கள்? வெம்பிளி அரினாவில் மானாட மயிலாட நடந்தபோது கேள்வி எழுப்பாதவர்கள் அதே வெம்பிளி அரினாவில் மாவீரர் நினைவு கூரும்போது ஏன் கேட்கிறார்கள்? ஈலிங் அம்மன் ரோட்டில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்த போது ஏன் இந்த வீண் செலவு என்று கேட்காதவர்கள் மாவீரருக்கு பூ வும் விளக்கும் வைக்கும்போது ஏன் கேட்கின்றனர்? கேள்வி- வெயிட் வெயிட், இத்தனையும் கேட்டவர்கள்தான் காயம்பட்ட போராளிகளுக்காக கேள்வி கேட்க முடியும் என்கிறீர்களா? பதில்- இல்லை. ஆனால் இவர்கள் உண்மையில் காயம்பட்ட போராளிகள் மீது அக்கறை இருந்திருந்தால் இத்தனையும் கேட்டிருப்பார்கள். மாறாக மாவீரர் அஞ்சலி நிகழ்வின்போது மட்டும் இப்படி கேட்க மாட்டார்கள். கேள்வி - கேள்வி கேட்டவர்கள் தவறானவர்களாக இருக்கலாம். ஆனால் கேள்வி தவறு இல்லையே? பதில்- இத்தனை குறுகிய காலத்திற்குள் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வும் பங்களிப்புமே புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபுறம் போராட்டத்தை முன் நகர்த்துகின்றனர் மறுபுறத்தில் தாயகத்தில் உள்ள தம் உறவுகளை தாங்கிப் பிடிக்கின்றனர். அவர்கள் உலக தமிழ் இனத்திற்கு சொல்லும் செய்தி இதுதான், “ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம் நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம். ஆனால் ஒருபோதும் எமது இயக்கத்தை நிறுத்திவிட மாட்டோம்” (மீள் பதிவு)

ஈழத் தமிழருக்காக போராடி வீர மரணம் அடைந்த

•ஈழத் தமிழருக்காக போராடி வீர மரணம் அடைந்த தமிழக உறவுகளை நன்றியுடன் நினைவு கூர்வோம்! தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்தவர்களை மாவீரர்களாக போற்றி ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகிறோம். இதில் ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்த தமிழக உறவுகளையும் நாம் நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறோம். ஈழத் தமிழர்களுக்காக 18 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். இது பலரும் அறிந்த செய்திதான். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஈழத்தில் போராடி வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலேகூட பலர் அறிந்திராத செய்தியாகும். ஈழத்தில் போராடி வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த சில மாவீரர்கள் விபரம் வருமாறு, பிரிவு: கரும்புலி நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்:செங்கண்ணன் இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர் ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்) வீரப்பிறப்பு: 25.01.1975 வீரச்சாவு: 11.11.1993 நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: உமா இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 27.05.1972 வீரச்சாவு: 11.12.1999 நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: மணியரசி இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி ஊர்: தமிழகம். வீரப்பிறப்பு: 02.02.1977 வீரச்சாவு: 19.04.1996 நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: பத்மநாபன் இயற்பெயர்: பி.பத்மநாபன் ஊர்: திருச்சி, தமிழகம். வீரப்பிறப்பு: 27.07.1963 வீரச்சாவு: 16.03.1988 நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுனில் இயற்பெயர்: கதிரவன் ஊர்: தமிழகம். வீரச்சாவு: 11.04.1988 நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்) இயற்பெயர்: முத்தையா இராமசாமி ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 23.07.1962 வீரச்சாவு: 11.12.1991 நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: உதயசந்திரன் இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர் ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 05.05.1969 வீரச்சாவு: 09.06.1992 நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு பிரிவு: கடற்புலி நிலை: கப்டன் இயக்கப் பெயர்: ஈழவேந்தன் இயற்பெயர்: துரைராசன் குமரேசன் ஊர்: தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 25.05.1969 வீரச்சாவு: 20.11.1992 நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: சச்சு இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த் ஊர்: பியர், இந்தியா. வீரப்பிறப்பு: 04.09.1975 வீரச்சாவு: 20.12.1992 நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்) இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 01.01.1966 வீரச்சாவு: 13.05.1996 நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு நிலை: கப்டன் இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு) இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 31.05.1975 வீரச்சாவு: 19.05.1996 நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது . நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குற்றாளன் இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 08.08.1969 வீரச்சாவு: 16.07.1996 நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுதா இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன் ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு வீரப்பிறப்பு: 28.10.1980 வீரச்சாவு: 05.07.1999 நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: குருசங்கர் இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 18.04.1973 வீரச்சாவு: 25.07.1996 நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.. சிலர் இவர்களை தமிழகத்தில் இருந்து நேரடியாக வந்து வீர மரணம் அடைந்தவர்கள் என்கிறார்கள். ஆனால் வேறு சிலர் இல்லை . இவர்கள் மலையகத்தில் இருந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்கிறார்கள். இதில் யார் கூறுவது சரி என்று உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இவர்கள் தமிழ் மக்களுக்காக உயிர் துறந்தவர்கள் என்பதை உறுதியாக கூறமுடியும். எனவே தமிழ் மக்கள் இவர்களையும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை தமிழ்நாட்டில் இருந்துவந்து ஈழத்தில் போராடி மரணித்தவர்களின் முழு விபரம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தல் அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் மாவீரர் நினைவு நிகழ்வுகளை நடத்துவோர் தமிழ்நாட்டு மாவீரர்களையும் இனி குறிப்பிட்டு மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு நினைவு கூர்வது இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் ஒன்றிணைந்து போராட பெரிதும் உதவிகரமாக அமையும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள்

•புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் தம் உறவுகளுக்காக குரல் கொடுப்பது தவறா? ஈழத் தமிழர்கள் போன்று யூத இன மக்களும் அகதிகளாக பல நாடுகளில் வாழ்ந்தார்கள். பல நாடுகளில் அகதிகளாக அவர்கள் வாழ்ந்து வந்தபோதும் தமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற பொதுவான எண்ணம் அவர்களுக்கு இருந்தது. தமக்கு ஒரு நாடு வேண்டும் என்று அவர்கள் அனைவரும் போராடி வந்ததால்தான் அவர்களால் இஸ்ரவேல் என்று ஒரு நாட்டை அடைய முடிந்தது. அன்று அகதிகளாக வாழ்ந்த யூதர்களால் ஒரு நாட்டை அடைய முடிந்தது என்றால் இன்று அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களால் ஏன் விடுதலையை பெற முடியவில்லை? இதற்கு பல காரணங்களும் சூழ்நிலைகளும் இருந்தாலும் மிக முக்கிய காரணம் எந்தவொரு யூதனும் போராடும் யூதனைப் பார்த்து “இஸ்ரேலில் வந்து போராடு” என்று கூறவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களில்தான் “ தைரியமான ஆள் என்றால் இலங்கையில் வந்து போராடு” என்று முகநூலில் சவால் விட்டு எழுதும் புத்திசாலிகள்(?); இருக்கிறார்கள் புலம்பெயர் தமிழன் ஈழத்தில் பாடசாலை கட்ட பணம் கொடுக்கிறான் புலம்பெயர் தமிழன் ஈழத்தில் கோயில் கட்ட பணம் கொடுக்கிறான் புலம்பெயர் தமிழன் ஈழத்தில் மருத்துவமனை கட்ட பணம் கொடுக்கிறான் புலம்பெயர் தமிழன் வறிய மக்களுக்கு பொருளாதார உதவி செய்கிறான் புலம்பெயர் தமிழன் முன்னாள் போராளிகளுக்கும் உதவி செய்கிறான் இவ்வாறு புலம்பெயர் தமிழன் பல உதவிகளை செய்யும்போது இலங்கையில் வந்து செய் என்று கூறாதவர்கள், புலம்பெயர் தமிழன் அரசியல் கருத்தை தெரிவித்தவுடன் “இலங்கையில் வந்து போராடு” என்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்ட எமது தமிழ் இனம் இந்தளவு விரைவாக மீண்டும் எழுந்து நிற்கிறது என்றால் அது புலம்பெயர் தமிழர்களின் அளவில்லா உதவியும் மகத்தான அர்ப்பணிப்பும் இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? அடுத்த கட்ட போராட்டத்தை புலம்பெயர் தமிழர்களே முன்னெடுக்க வேண்டும் என முதன் முதலில் கூறியவர்கள் புலிகளே. ஆம். இது ஒரு சரியான கணிப்புதான். அதேபோன்று போராடும் புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் வந்து போராடும்படி முதன் முதலில் அழைப்பு விடுத்தவர் கோத்தபாய ராஜபக்சதான். கோத்தபாயாவின் அழைப்பை எம்மால் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அவர் வெள்ளை வானில் எற்றி கொல்வதற்காகவே அவ்வாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அதன்பின்பு அதே அழைப்பை சுமந்திரன் நக்கலாக விடுத்தார். பாவம். இப்போது அவரே சிங்கள பொலிஸ் பாதுகாப்பு இன்றி தமிழர் பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார். இன்று புலம்பெயர் நாடுகளில் சுமார் 7 லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த 7 லட்சம் தமிழர்களும் ஈழத்தில் வந்துதான் அரசியல் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கோருவது, முதலாவதாக, அந்த 7 லட்சம் தமிழர்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதற்கு ஒப்பாகும். இரண்டாவதாக, இது கோத்தபாயாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருக்கிறது மூன்றாவதாக, இது போhராட்டம் என்றால் ஈழ மண்ணில் மட்டும்தான் நடத்த வேண்டும் என்ற முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. நான்காவதாக, மொத்தத்தில் இது தமிழ் மக்களின் நலனில் இருந்து கூறப்படவில்லை. மாறாக இலங்கை இந்திய அரசுகளிpன் நலனுக்காக கூறப்படுகின்றது என்று அர்த்தமாகும். அண்மையில் சீக்கிய மக்கள் லண்டனில் ஒரு ஒன்றுகூடலை நடத்தியிருந்தார்கள். காலிஸ்தானுக்காக வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள். இது நடக்குமா நடக்காதா என்பதற்கு அப்பால் மிக முக்கியமான ஒரு விடயத்தை ஈழத் தமிழர்கள் கவனிக்க வேண்டும். அதாவது ஒரு சீக்கியன்கூட இதுவரை இவர்களைப் பார்த்து “தைரியம் இருந்தால் இந்தியா வந்து போராடு” என்று எழுதவில்லை. இவ்வாறு இவர்கள் ஒற்றுமையாக இருப்பதால்தான் நடந்த சீக்கிய படுகொலைகளுக்காக பிரதமர் மோடி அவர்களிடம் தவிர்க்க முடியாமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார். சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி ஈழத் தமிழரிடம் இதுவரை மன்னிப்பு கேட்காமைக்கு காரணம் “இந்திய ராணுவம் அப்பாவி மக்களை கொல்லவில்லை. புலிகளைத்தான் கொன்றது” என்று எழுதும் சிலர் நம்மிடையே இருப்பதுதான். புலம்பெயர் தமிழர்கள் போராடுவது இலங்கை அரசுக்குத்தானே எரிச்சல் கொடுக்க வேண்டும். ஏன் இந்திய உளவுப்படைகளுக்கு கொடுக்கிறது என அப்பாவியாய் சிலர் கேட்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழக தமிழர்களும் இப்போது ஒன்று சேர்ந்து போராட ஆரம்பித்துள்ளார்கள். இதுவே இந்திய உளவுப்படைகளுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராடினால் தமிழ் இனம் விடுதலை பெற்றுவிடும் என்பது மட்டுமல்ல இந்தியாவே சுக்கு நூறாக உடைந்துவிடும் என்று இந்திய உளவுப்படை அச்சப்படுகிறது. எனவேதான் பல்வேறு வழிகளில் இலங்கை இந்திய உளவுப்படையினர் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை நசுக்க முனைகின்றனர். “இலங்கையில் வந்து போராடு” என்று எழுதுவோரின் வேர்களை ஆராய்ந்தால் அவை இவ் உளவுப்படைகளில் இருந்தே வருவதை நாம் நன்கு கண்டு கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உலகத்தில் யாரும் எங்கிருந்தும் போராடலாம். இதைக்கூட உணர்ந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக “இலங்கையில் வந்து போராடு” என்று எழுதுபவர்களை என்னவென்று அழைப்பது? குறிப்பு- கணவான்களே கூறுங்கள்! ஒவ்வொரு வருடமும் ஜெனிவா வந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த வெள்ள இனப் பெண்மணியும் இலங்கையில் வந்துதான் குரல் கொடுக்க வேண்டுமா? (மீள் பதிவு)

இந்த அற்புதங்களை நிகழ்த்துபவர்கள் யார்?

•இந்த அற்புதங்களை நிகழ்த்துபவர்கள் யார்? சரணடைந்த மருத்தவர் வரதராஜனை ஊடகங்களுக்கு முன்னால் பேட்டி கொடுக்க வைத்தார் கோத்தபாயா. இப்போது அந்த வரதராஜன் ஜ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார். அடுத்து தமிழ்செல்வனின் மனைவியை பேட்டி கொடுக்க வைத்தார் கோத்தபாயா. ஆனால் அதே தமிழ்செல்வனின் மனைவி பிரான்சில் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். கடந்த பதினொரு வருடமாக போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் எதிராக கருத்து கூறி வந்தவர் சுமந்திரன். போராளிகளும் கொலை செய்துள்ளார்கள் அதுவும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியவர். இப்போது அதே சுமந்திரன் சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்புடன் சென்று மாவீரருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல எந்த போராளிகளை வன்முறையாளர்கள் என்றாரோ அந்த போராளிகளை நினைவுகூர அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று வாதாடுகிறார். இதே வரிசையில் அடுத்தது யார் என்று அறிவதைவிட இந்த மாற்றங்களை நிழ்த்துபவர்கள் யார் என்பதை அறிவதே முக்கியமானது. இத்தகைய அற்புதங்களுக்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கியமானவர்கள் மக்கள் மட்டுமே. குறிப்பாக புலம்பெயர் மக்களே இந்த அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள். புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். அதுமட்டுமன்றி அவர்கள் தமிழக சக்திகளையும் தம்முடன் இணைத்து போராடுகிறார்கள். தன்னை வெறும் 40 லட்சம் ஈழத் தமிழர்கள் மட்டுமே எதிர்ப்பதாக கோத்தபாயா இதவரை நினைத்து வந்தார். ஆனால் தமிழக ஏழு கோடி தமிழர்களையும் சேர்த்து மொத்தம் ஏழு கோடியே நாற்பது லட்சம் தமிழ் மக்களை எதிர்க்க நேரிடும் என்பதை கோத்தபாயா நினைத்தக்கூட பாhத்திருக்க மாட்டார். இந்த அற்புதத்தையும் புலம்பெயர் ஈழத் தமிழர்களே நிகழ்த்துகின்றனர். இனிவரும் காலங்களில் இன்னும் பல அற்புதங்களை இவர்கள் நிகழ்த்துவார்கள். ஏனெனில் மக்கள் சக்தியே மகத்தான சக்தி. அது அணுகுண்டைவிட வலிமையானது. இதை கோத்தபாயா விரைவில் உணரவைப்பார்கள்..

புட்டு சாப்பிட்ட தமிழர்கள

புட்டு சாப்பிட்ட தமிழர்களை பீட்சா சாப்பிட வைத்திருக்கிறோம் என கூறிய சிங்கள பொலிஸ் அதிகாரியை உடனே கண்டித்தவர் சுமந்திரன். இது பாராட்டுக்குரியது. அதேபோல் சுமந்திரன் கண்டனத்தை அடுத்து நீதிபதியும் தனது அதிருப்தியை தெரிவித்தார் என செய்திகள் கூறுகின்றன. இது உண்மையாயின் இந்த தமிழ் நீதிபதியும் பாராட்டுக்குரியவர். இதை அறிந்தவுடன் அரசாங்க கட்சி எம்.பியாக இருந்தும் அங்கஜன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்ததாக அறிகிறோம். அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் கிடைக்கவும் செய்திருக்கிறார் என கூறுகின்றார்கள். எனவே அங்கஜனும் பாராட்டுக்குரியவர். இது ஒரு நல்ல மாற்றம். இதேபோன்று தமிழ் இனத்திற்கு இழுக்கு ஏற்படும்போதெல்லாம் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து எதிர்க்க வேண்டும். சிங்கள தலைவர்கள் எத்தனை கட்சியாக பிரிந்திருந்தாலும் தமிழ் இனத்தை அடக்குவதில் ஒருமித்து செயற்படுகின்றார்கள். எனவே தமிழ் தலைவர்களும் இனி ஒருமித்து எதிர்கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும். ஆனால் தேன்கூட்டுக்கு கல் எறிந்தால் நாம் ஓட வேண்டி வரும். நாயை விட பலம் குறைந்தது தேனீ. ஆனாலும் அவற்றுக்கு பயந்து நாம் ஓடுவதற்கு காரணம் அவை ஒருமித்து சேர்ந்து வந்து தாக்குவதால்தான். எனவே நாம் பலம் குறைந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட்டால் சிங்கள அரசை ஓடச் செய்ய முடியும்.

•எனக்கு நீதி வழங்குங்கள் இல்லையேல் தூக்கில் இடுங்கள்

•எனக்கு நீதி வழங்குங்கள் இல்லையேல் தூக்கில் இடுங்கள் ஜனாதிபதியிடம் தமிழ் அரசியல் கைதி கோரிக்கை கடந்த 12 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தேவதாசன் (வயது - 63) ஜனாதிபதி கோத்தா அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதில் எனக்கு நீதி கிடைக்க வழி செய்யுங்கள் இல்லையேல் மரணதண்டனை விதித்து தூக்கில் இடுங்கள் என்று கேட்டிருக்கிறார். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என கூறுவார்கள். இங்கு அரசியல் கைதியான தேவதாசன் அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நல்லாட்சியிலும் தேவதாசன் அவர்கள் இதுகுறித்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தேவதாசனை சந்தித்து இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். ஆனாலும் தேவதாசன் அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்த கோத்தபாயா தமிழ் அரசியல் கைதியான தேவதாசனின் வழக்கை விசாரணைக்குகூட எடுக்க தயாரில்லை. இத்தனைக்கு பிறகும் கோத்தபாயா தமிழர்களுக்கு தீர்வு தருவார் என கூறுபவர்களை என்னவென்று அழைப்பது?

இவர்கள் மூவரும் இலங்கையர்கள்.

இவர்கள் மூவரும் இலங்கையர்கள். இவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ஒருவர் கைதடியில் எட்டு தமிழர்களை கொன்று அதனால் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வீரர். மற்றவர் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி ஜோசப்பரராயசிங்கத்தைக் கொன்றமையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழர் பிள்ளையான். இன்னொருவர் புலிப்போராளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 12 வருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதியான தேவதாசன். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல தான் தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதியாக செயற்படுவேன் என கோத்தபாயா கூறியிருந்தார். ஆனால் பதவிக்கு வந்ததும் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வீரரை உடனடியாக விடுதலை செய்தார். தற்போது தமக்கு ஆதரவாக கொலை செய்த பிள்ளையானை பிணையில் விடுதலை செய்துள்ளார். ஆனால் தேவதாசன் தனக்கு விடுதலை கோரவில்லை. மாறாக தன்னுடைய வழக்கை விசாரணைக்கு எடுத்து நீதி வழங்குமாறே கேட்டிருக்கிறார். தான் பதவிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று வாக்குறுதி அளித்த கோத்தபாயா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாதது மட்டுமன்றி வழக்கு விசாரணைக்குகூட எடுக்க மறுக்கிறார். கொலை செய்து மரண தண்டனை பெற்றவருக்கு விடுதலை. கொலை செய்து நீதிமன்ற விசாரணையை எதிர் கொண்டவருக்கு விடுதலை ஆனால் புலிக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு 12 வருடமாகியும் விடுதலை செய்யாதது மட்டுமன்றி வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூட தயாரில்லை. இதுதான் இலங்கை அரசின் நியாயம்! குறிப்பு – தமிழ் மக்கள் மீது சம்பந்தர் ஐயாவுக்கு அக்கறை இல்லை. தாங்கள் பதவிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று நாமல் என்ற தம்பி கூறினார். அந்த தம்பியை யாராவது கண்டீர்களா?

இத்தனை வருடங்களாக ஓடியும்

இத்தனை வருடங்களாக ஓடியும் இதுவரை வெற்றிபெறவில்லை என்பதற்காக நாம் வருத்தமடையத் தேவையில்லை ஏனெனில், இத்தனைக்கு பிறகும் நாம் நின்றுவிடாமல் ஓடுகிறோம் என்பதே பெருமைதான். எதுவுமே எளிமை இல்லைதான் ஆனால் அனைத்துமே சாத்தியம்தான். ஒரு மரத்தை வெட்ட 6 மணி நேரம் கிடைத்தால் புத்திசாலி தன் கோடரியை கூர்மையாக்க 4 மணி நேரத்தை செலவு செய்வான். அதுபோல நமக்கும் நம்மை கூர்மைப்படுத்த தக்க நேரம் கிடைத்திருக்கிறது எனக் கொள்வோம். மண்ணில் விழுந்த விதைகூட போராடியே முளைக்கிறது. காலில் மிதிபடும் புழு கூட துடித்து எழுகிறது தமிழன் மட்டும் வீழ்ந்து கிடந்துவிடுவானா என்ன? மீண்டும் எழுவோம்.

மாணவன் செந்தூரனின் 5வது நினைவு தினம்!

மாணவன் செந்தூரனின் 5வது நினைவு தினம்! நவம்பர் 7 திகதிக்கு முன்னர் சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று 2015ல் சம்பந்தர் ஐயா கூறியிருந்தார். அனால் அவர் கூறியபடி கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில்தான் நவம்பர் 26 ம் திகதி சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தான். சம்பந்தர் ஐயா சொன்ன நவம்பர் 7ம் திகதி ஒவ்வொரு வருடமும் வருகிறது. ஆனால் சிறைக் கைதிகள்தான் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும் கைதிகள் செந்தூரனின் தந்தையோ அல்லது சகோதரனோ இல்லை. அல்லது அவனது நண்பர்களோ இல்லை. செந்தூரன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. அவன் எந்தவொரு அரசியல் கட்சி தலைவனும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு இல்லாத கைதிகள் விடுதலை பற்றிய கவலை அவனுக்கு இருந்தது. செந்தூரன் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் படித்து பட்டம் பெற்று சுக வாழ்வை வாழ்ந்திருக்கலாம். அல்லது வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம் அல்லது இன்று சிலர் செய்வதுபோல் நடிகர்களுக்கு 30 அடியில் கட்அவுட் கட்டி மகிழ்ந்திருக்கலாம். ஆனால் மாணவன் செந்தூரன் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக தன் உயிரை கொடுத்துள்ளான். தன் மகன் தன்னை பிற்காலத்தில் பார்த்துக்கொள்வான் என்று செந்தூரனின் தாய் கனவு கண்டிருப்பார். தன் சகோதரன் தங்களை வாழவைப்பான் என்று செந்தூரனின் சகோதரிகள் நினைத்திருப்பார்கள். ஆனால் செந்தூரன் தன்னை பெற்று வளர்த்த தாயின் கனவை நினைக்கவில்லை. தன் கூடப் பிறந்த சகோதரிகளின் விருப்பத்தை நினைக்கவில்லை. அவனுடைய நினைவு எல்லாம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக அவன் தேர்ந்தெடுத்த பாதை தவறாக இருக்கலாம். ஆனால் இந்த சின்ன வயதில் அவன் செய்த அர்ப்பணிப்பு மகத்தானது. செந்தூரனை நினைவு கூர்வோம்! குறிப்பு- இன்று (26.11.2020)செந்தூரனின் 5வது நினைவு தினமாகும்.

தமிழா!

தமிழா! மடிந்த போராளிகள் எமக்காக ஏங்கினார்கள் எமக்காக போராடினார்கள் இறுதிவரை உறுதிமாறாமல் எமக்காகவே இறந்தார்கள் எம் தமிழ் மொழிக்காகவும் எம் தமிழ் இனத்திற்காகவும் எம் தமிழ் மண்ணிற்காகவும் தொடர்ந்து இயங்கினார்களே. இன்று நாம் இயங்க வேண்டாமா? மயங்கியும் தயங்கியும் அலைந்தும் குலைந்தும் நிலையில்லாது இயங்கும் நாம் நமக்காக நம்மவருக்காக நம்முடையதற்காக இயங்க வேண்டாமா? அதற்கென நாம் இணைய வேண்டாமா? அதற்குரிய உறுதியை அதற்குரிய சூழினை இன்று நாம் எம் உள்ளத்தில் மேற்கொள்ள வேண்டாமா? அவ் உறுதிக்குரிய வல்லுணர்வினை மாவீரர்களின் நினைவுகளில் இருந்து பெறுவோமாக அதன்வழி நாம் பெருமையும் உறுவோமாக முதலில் உரிமைகளை இழந்தோம் பின்னர் உடமைகளை இழந்தோம் இறுதியாக உயிர்களை இழந்தோம் ஆனால் உணர்வுகளை இழக்கவில்லையே மீண்டும் எழுவோம் முன்னைவிட வலிமையாக எழுவோம் என்று கூறியதும் ஓடிவந்து வேண்டாம் இன்னொரு போர் என்பர் புலிகளாலேயே முடியவில்லை என்பர் இனி யாரால்தான் முடியும் என்றும் கேட்பர் புலிகள்போல் மீண்டும் வரமுடியாமல் போகலாம் ஆனால் புலிகளைவிட அதிக தூரம் நிச்சயம் எம்மால் பார்க்க முடியும் ஏனெனில், எமக்காக மாண்டவர்கள் தங்கள் தோள்களில் அல்லவா எம்மை தாங்கி நிற்கின்றனர் என்னபடி நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்டாலும் தாம் சொன்னபடி எதுவும் தராமல் ஏமாற்றுவதையே முதற்படியாய் கொண்டுவிட்டனர் இலங்கை அரசினர் அவர்தம் காலடியை நக்கியே நம் தலைவர்கள் அடி பணிந்து இருக்கின்றனர் - தமிழா! இன்னும் இன்னபடி நீ வீழ்ந்து கிடந்தால் எப்படித்தான் மேற்படியை எட்டுவாயோ? எத்தனை நாள் எத்தனை ஆண்டு எத்தனை பேர் எத்தனை போர் எத்தனை தோள் திரண்டு எழுவதோ எத்தனை பேச்சு எத்தனை பாட்டு எத்தனைதாம் எழுதிக் குவிப்பதோ எத்தனை நாள் நாம் பொறுப்பது எத்தனை பேர் நாம் இறப்பது எத்தனைநாள் இன்னும் நாம் அடிமையாக கிடப்பதோ? எமது மொழி எமது இனம் எமது மண் மீட்பதற்கு நாமே சோர்ந்து போனால் பின் யார்தான் முன்வருவர் எமக்காக எம் இனம் இன்று தாழ்வுற்றுக் கிடக்கிறது சிந்தனைத் திறன் இல்லாது சீரழிந்து குலைகிறது பிறர் இதை எடுத்துச்சொன்னாலும் உணர்வு பெறாமலே இருக்கிறது எவ்வளவுதான் உருகி உருகி எடுத்து கூறினாலும் செயல்படாது அடிமையாய் பணிந்து கிடக்கிறது தமிழர் தலைமையோ பதவி நலன்களுக்காக நம் பகைவனிடம் அண்டிப் பிழைக்கின்றது அண்டிப்பிழைக்கும் தலைமையிடம் இன் சொல்லால் சொன்னோம் எரிச்சலுடனும் கூறியுள்ளோம் புண் சொல்லும் வீசினோம் புண்படவும் சொல்லிவிட்டோம் என்னவகை சொன்னாலும் அவர் தம் உடலில் சின்னதொரு மாற்றமும் இன்னும் ஏற்படவில்லையே தம்மை எமது தலைவர்கள் என்றார்கள் எம் மத்தியில் வருவதற்கு அவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் 5 கோடி ரூபா சொகுசு வாகனம் வேண்டும் கொழும்பில் சொகுசு பங்களா வேண்டும் தேர்தலில் தம்மை தெரிவு செய்தால் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார்கள் அவர்களுக்கு எல்லாம் வந்தது - ஆனால் எமக்குத்தான் ஒரு ம- - ம் வரவில்லையே! யுத்தம் முடிந்து 10 வருடமாச்சு காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை இடம்பெயர்ந்தோர் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை ஆனால், கிழக்கில் சிங்கள குடியேற்றம் வடக்கில் பௌத்த விகாரைகள் நாளுக்கு நாள் அரங்கேறுது ஒருபுறம் சிங்கள ஆக்கிரமிப்பு மறுபுறம் இந்திய ஆக்கிரமிப்பு தமிழன் தன் மண்ணில் நீட்டி நிமிர்ந்து நிம்மதியாக உறங்க முடியவில்லையே ஏய் தமிழா! அன்று ஒரு பெரு நிலம் உனக்கிருந்தது அறிவாயோ இன்று அரைக் காணி நிலத்திற்கு வேலிச் சண்டை போடுகிறாயே எல்லா இனமும் தாய் மொழியில் பேசும் நீ பேசுவது மொழிகளின் தாய் மொழியில் என்பதையாவது நீ அறிவாயோ? நீ வீழ்ந்து கிடப்பது எதிரியின் பலத்தால் அல்ல உன் பலத்தை அறியாததால் தன் பலம் அறியாமல் யானை கோவில் வாசலில் பிச்சை எடுப்பதுபோல் உன் பலம் அறியாமல் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறாய் போர்த்துக்கேயரை விரட்டியவன் நீ ஒல்லாந்தரை விரட்டியவன் நீ ஆங்கிலேயரை விரட்டியவன் நீ ஆக்கிரமிப்பாளர்கள் எல்லாரையும் விரட்டிய வீரம் செறிந்த வரலாற்றைக் கொண்டவன் நீ. ஆனால் இன்று, பல்லி சொல்லுக்கு பலன் அறிய பஞ்சாங்கத்தை தேடிக்கொண்டிருக்கிறாயே? குட்டக் குட்டக் குனிந்துகொடுக்கும் முட்டாள் தமிழனே மூடப் பிறவியே ஒன்று கேள் நீ ஒரு ஊமைப் பிறவியல்லன் தொன்று தொட்டு தொழும் அடிமைப் பிறவியும் அல்லன் அன்று உன் கொடி உன் மண்ணில் நிமிர்ந்து பறந்ததே இன்று உன் தலை குனிந்து தாழ்ந்து கிடக்கிறதே ஏய் தமிழா! எந்த நிலை வரினும் ஏற்றம் தளரோம் நாம் சோர்வுற்றபோது மாவீரரை நினைத்தெழுவோம் என்ன துயர் வரினும் ஏற்ற பணி முடிப்போம் அன்னை தமிழ் மீது அருஞ்சூழ் உரைத் தெழுவோம் துரோகிகள் எமை தாழ்த்தி வீழ்த்திடினும் எம் இனத்திற்கு உழைப்பதே கொள்கை என்போம் இலங்கை அரசால் செத்தாலும் இந்திய அரசால் செத்தாலும் தமிழ் இன விடுதலை ஒன்றே நம் இலக்கு என்போம் வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ்வோம் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ் பொருட்டே ஆவோம் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வோம் தனியேதான் நின்றாலும் எம் கொள்கையில் மாற மாட்டோம் சூழ்ந்தாலும் தமிழ் சுற்றம் சூழ்ந்து உரிமை கேட்போம் சூழ்ச்சியினால் எம் உடலை கூறாக்கினாலும் முடிவு அந்த முடிவே புதைத்தாலும் எரித்தாலும் அணுக்கள் எல்லாம் அதுவே!

இரண்டு கால் உள்ள சிலரே எழுந்து நிற்காமல்

இரண்டு கால் உள்ள சிலரே எழுந்து நிற்காமல் அடிமையாக வீழ்ந்து கிடக்கையில் ஒரு காலை இழந்த பின்பும் எப்படி இந்த இளைஞனால் எழுந்து நிற்க முடிகிறது? ஏனெனில் இவர் இழந்தது ஒரு காலையே ஒழிய உணர்வை அல்ல. அதனால்தான் எந்த தடுமாற்றமும் இன்றி உறுதியாக நிற்க முடிகிறது. வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது? எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் இரண்டு நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது. ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல.

இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்

இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள் இவர்கள் இலங்கை ராணுவத்தைவிட அதிக தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றார்கள் இவர்களிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள். இவர்களால் இப்பவும் தமக்கு ஆபத்து என்று இந்திய அரசு தடையை நீடிக்கிறது. இவர்களை நினைவுகூரத் தடை விதிக்கின்றனர். இவர்களின் கல்லறைகளைக்கூட இடித்து தள்ளுகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் கொட்டும் மழையிலும் இவர்களுக்காக அஞ்சலி செலுத்துகின்றனர். ஏனெனில் இவர்கள் தமது உறவுகள் என்பதற்காக அல்ல, மாறாக இவர்கள் தமக்காக மாண்டவர்கள் என்று உணர்வதாலேயே அஞ்சலி செலுத்துகின்றனர். அதனால்தான் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் இவர்களை நினைவு கூர்கின்றனர்.

புட்டு வென்றது

புட்டு வென்றது இகழ்ந்து பேசிய சிங்கள பொலிஸ் அதிகாரி பகிரங்க மன்னிப்பு கோரினார். சிலர், சுமந்திரன் கண்டனம் தெரிவித்தமையினால்தான் இது நடந்து என்பார்கள். இன்னும் சிலர், நீதிபதி அதிருப்தி தெரிவித்தமையினால் நடந்தது என்பார்கள். வேறு சிலர், அங்கஜன்தான் காரணம் என்றும் சொல்லக்கூடும். ஆனால் இது மக்கள் காட்டிய எதிர்பினால்தான் நடந்தது என்பதே உண்மை. மக்கள் மகத்தானவர்கள். அதுவும் தமிழ் மக்கள் மேலும் மகத்தானவர்கள். குறிப்பு – வெள்ளைக்காரர் உணவை பச்சையாகவோ அல்லது சுட்டோ சாப்பிட்ட காலத்தில் உணவை அவித்து சாப்பிட்டவன் தமிழன். அவர்கள் நீராவியில் ரயில் கண்டு பிடிக்க முன்னரே நீராவியில் புட்டு அவித்து சாப்பிட்டவன் தமிழன். தமிழனின் புட்டு இந்தளவு மகத்தானது என்பதை அந்த சிங்கள பொலிஸ் அதிகாரி அறிந்திருக்கமாட்டார்.

காவல்துறை உங்கள் நண்பன் (சினிமா)

•காவல்துறை உங்கள் நண்பன் (சினிமா) ஆரம்பம் முதல் இறுதிவரை காவல்துறையின் அராஜகத்தைக் காட்டிவிட்டு அந்த சினிமாவுக்கு காவல்துறை உங்கள் நண்பன் என்று பெயர் வைக்கும் கெத்து வெற்றிமாறனுக்கே உண்டு. முதலில் விசாரணை என்று ஒரு சினிமா எடுத்து காவல்துறையின் முகத்திரையைக் கிழித்தார். இப்போது காவல்துறை உங்கள் நண்பன் என்ற சினிமா மூலம் மீதமிருந்த முகத்தையும் கிழித்து தொங்கவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அதுவும் சினிமாதுறையில் முன்னணியில் இருந்துகொண்டு காவல்துறையின் கோரமுகத்தைக் காட்டுவதற்கு உண்மையில் பெரும் துணிவு வேண்டும். அந்த துணிவு வெற்றிமாறனுக்கு இருப்பதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். 1991ல் ஜெயா அம்மையார் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்படும் ஈழ அகதிகள் மீது நாலு ஜெலட்டின் குச்சிகளை வாங்கி வைத்துவிட்டு ராமேஸ்வரம் பாலத்திற்கு குண்டு வைக்க சதி செய்ததாக பொலிசார் வழக்கு போடுவார்கள். நீதிபதியும் ஏன் பாலத்திற்கு குண்டு வைக்க வேண்டும் என்றோ அல்லது நாலு குச்சினால் பாலத்தை தகர்க்க முடியுமா என்றோ கேட்பதில்லை. மாறாக பொலிசாரின் பொய் வழக்கை அப்படியே ஏற்று அப்பாவி அகதிகளை சிறையில் அடைக்க உத்தரவிடுவார். அப்போதெல்லாம் இந்த பொலிசாரின் கோர முகத்தை மக்களுக்கு எப்படி அறிய வைப்பது என்று சிறையில் இருந்த நான் சிந்தித்ததுண்டு. அதை இப்போது வெற்றிமாறன் நன்கு செய்வதை பார்க்கும்போது திருப்தியாக இருக்கிறது. குறிப்பு – காவல்துறை என்பது அரசின் ஏவல்நாய் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு சிறு பொறி டில்லிக்குள் நுழைந்தவிட்டது.

ஒரு சிறு பொறி டில்லிக்குள் நுழைந்தவிட்டது. அது பெரும் காட்டுத் தீயை மூட்டுமா? அதில் மோடி அரசு வெந்து சாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்! செய்தி – மாபெரும் விவசாயிகள் பேரணி தடையை மீறி டில்லிக்குள் நுழைந்துள்ளது. ஒரு பெண் அதுவும் 80 வயது பெண் தலைமை ஏற்று நடத்துகிறாராம். வாழ்த்துகள்.

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 200வது பிறந்தநாள்.

•தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 200வது பிறந்தநாள். . தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார். ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார். அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் அவர்களின் 200வது பிறந்ததினம் இன்று ஆகும். உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார். தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார். மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார். எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.

•பிக் பாஸ்!

•பிக் பாஸ்! ரஸ்சிய கம்யுனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் அவர்கள் பிக்பாஸ் என்றும் அவருடைய ஆட்சியில் மக்கள் உளவு அமைப்புகளால் எந்நேரமும் கண்காணிக்கப்பட்டார்கள் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கூறிவருகின்றன. இதனால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஆர்வம் இருக்கவில்லை. லண்டன் டிவி ஒன்றில் நடிகை ஷில்பா செட்டி கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்வு ஒன்றே நான் இதுவரை பார்த்த நிகழ்வு. அதுவும் சக வெள்ளைக்கார பெண் போட்டியாளர் ஒருவரால் நிறரீதியாக ஷில்பாசெட்டி விமர்சிக்கப்பட்டமையினால் தவறாது பார்த்தேன். அதில் ஷில்பா செட்டி வெற்றியும் பெற்றார். ஆனால் இவையாவும் நிகழ்ச்சியை பிரபல்யப்படுத்துவதற்காக திட்டமிட்டு ஏற்கனவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்பதை பின்னர் அறிந்ததும் மக்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தேன். இவ்வாறு லண்டனில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இவ் நிகழ்வு தற்போது இந்தியாவில் பல மொழிகளில் அரங்கேறுகிறது. அதுவும் தமிழில் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த வருடம் இரு ஈழத் தமிழர்களையும் போட்டியாளர்களாக பங்குபற்ற வைத்தனர். இம்முறை கோரோனோவினால் ஈழத் தமிழர்கள் எவரையும் பங்குபற்ற வைக்க முடியவில்லை போலும். அதனால் ஈழத் தமிழ் பெண்ணை திருமணம் செய்த ஒருவரை பங்குபற்றவைத்து அதனை நிகழ்வில் கூறுகின்றனர். கடந்தமுறை இரண்டு ஈழத் தமிழர்கள் பங்கு பற்றியிருந்தும் நான் நிகழ்வை பார்க்கவும் இல்லை. யாரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் இம்முறை ஈழத் தமிழ் பெண்ணை திருமணம் செய்த ஆரி என்பவருக்காக நிகழ்வை பார்த்து வருகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஏனெனில் தான் ஈழத் தமிழ் பெண்ணை திருமணம் செய்ததற்காக தன் வீட்டாரும் தமிழக தமிழனான தன்னை திருமணம் செய்ததால் மனைவியின் வீட்டாரும் தம்மை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆரி கூறியது என் நெஞ்சைத் தொட்டுவிட்டது. எனவே இரு வீட்டாரும் அவர்களை ஏற்றுக்கொள்வதற்காக அவர் நிகழ்வில் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன். அதுமட்டுமன்றி இதுவரை காட்டப்பட்டதில் இருந்து ஆரி அவர்கள் நேர்மையாக விளையாடுவதாகவே தோன்றுகிறது. எனவே ஆரி அவர்களின் வெற்றிக்காக “ஆரி ஆர்மி”யில் நான் ஏன் சேரக்கூடாது? 🙂