Wednesday, July 31, 2024
சாவதினாலேயே ஒருவர்
சாவதினாலேயே ஒருவர் புனிதராகி விடமாட்டார்
செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு
எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு
காலத்திற்கேற்ற மாற்றம் உண்டு
செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம்
செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம்
- கவிஞர் தாமரை
ராஜிவ் காந்தி போர்பஸ் திருடன்
ராஜிவ் காந்தி போர்பஸ் திருடன் என்றும் அவர் ஒழிய வேண்டும் என திமுக கட்அவுட் வைத்திருந்தது.
சைதாப்பேட்டை வளைவில் வைக்கப்பட்ட இக் கட்அவுட்டை நானே என் கண்ணால் கண்டிருக்கிறேன்.
ஆனால் அடுத்த மாதம் ராஜீவ் காந்தி ஒழிந்ததும் “இளம் தலைவர் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு” என முரசொலியில் கலைஞர் இரங்கல் தெரிவித்தார்.
அதேபோன்று “வயதாகிவிட்டது எனவே சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும்” எனக் கோரியவர் சுமந்திரன்.
அதுமட்டுமன்றி “இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு வயதான சம்பந்தர் ஐயாவே பொறுப்பு கூறவேண்டும்” என்று கடந்த மாதம் சுமந்திரன் கூறியிருந்தார்.
இன்று சம்பந்தர் ஐயா இறந்தவுடன் அவரது தலைமையை புகழ்கிறார். ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கண்ணீர் வடிக்கிறார்.
உயிரோடு இருக்கும்போது ஒழிய வேண்டும் என்கிறார்கள். ஒழிந்ததும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார்கள்.
அப்படியென்றால் மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்து புனிதப்படுத்துகிறதா?
அல்லது, தமிழ் மக்கள் முட்டாள்கள், தாம் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என இவர்கள் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா?
தன்னை தமிழின தலைவர்
தன்னை தமிழின தலைவர் என்றவர் ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்தபோது தன்னைக் கொல்லப்பார்க்கிறாங்க காப்பாத்துங்க என்று அலறினார்.
ஆனால் மரணத் தறுவாயில் தியாகி சிவகுமார் கடைசியாக கூறிய வரிகள்” மீண்டும் தமிழனாக பிறந்து போராட விரும்புகிறேன்”
இப்போது கூறுங்கள் யார் தமிழின தலைவர்?
சீமான் வைக்கும்
சீமான் வைக்கும் தமிழ்த்தேசியம் இனவாத தேசியம் என்றும் அதனால் ஆதரிக்க முடியாது என்று போலிக்கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர்.
அப்படியென்றால், தோழர் தமிழரசன் மார்க்சிய அடிப்படையில் பாட்டாளிகள் தலைமையில் தமிழ்த்தேசிய விடுதலையை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றுதானே முத்திரை குத்தினார்கள்.
செய்தி – அமைச்சர்
செய்தி – அமைச்சர் விஜயதாச ராஜபக்சா திருப்பதி சென்று வழிபாடு
எத்தனை ஆயிரம் தமிழர்களை கொன்றாலும் பரவாயில்லை. திருப்பதி செல்லுங்கள். பாவ விமோசனம் தரப்படும்.
தோழர் சண் அவர்களின்
தோழர் சண் அவர்களின் 104வது பிறந்ததினம்!
இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 104 வது பிறந்த தினம் ஆகும் (03.07.1920 – 03.07.2024)
தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர்
அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர்.
மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர்.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே.
அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.
அவர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை பகிரங்கமாக ஆதரித்தார்.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை ஜே.ஆர் ஜெயவர்தனா “பயங்கரவாதிகள்” என்றார்.
அமிர்தலிங்கம் “பொடியன்கள்”என்றார்.
ஆனால் சண்முகதாசன் மட்டுமே முதன் முதலாக அவர்களை “போராளிகள்”என்று அழைத்தார்.
அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், என்எம் பெரோரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் இவ்வாறு கூறினார்.
அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவர் மீது மதிப்பு கொண்டதுடன் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் பெற்று வந்தார்கள்.
இறுதியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அவரது மகள் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருந்தார்.
இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார்.
இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது.
அவருடன் அவருடைய இறுதிக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை எனக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை தந்தது.
அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தமிழ் நூல் பதிப்பை நானே முதலில் வெளியிட்டிருந்தேன்.
அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று அவர் விரும்பிய புரட்சியை மேற்கொள்வதே ஆகும்.
குறிப்பு- தோழர் சண் பற்றி அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். https://www.youtube.com/watch?v=hJSV6g_qf4k&t=2s
இந்த பொருளாதார நெருக்கடியிலும்
இந்த பொருளாதார நெருக்கடியிலும் ஒருபுறம் நாடு நாடாக ஓடி ஓடி பிச்சை எடுத்துக்கொண்டு மறுபுறம் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் புத்தவிகாரை கட்டுகின்றது சிங்கள அரசு.
மகிந்தா வந்தால் என்ன, ரணில் வந்தால் என்ன, யார் ஜனாதிபதியாக வந்தாலும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் மட்டும் மாறுவதில்லை.
இதற்கு எதிராக மக்களை திரட்டி போராட வேண்டிய எம் தலைவர்களோ இந்திய அரசுக்கு கடிதம் எழுதுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.
அந்த இந்திய அரசின் ஆதரவுடனும் உதவியுடனும்தான் இந்த தமிழின அழிப்பை சிங்கள அரசு மேற்கொள்கின்றது என்பதை நன்கு தெரிந்தும் தொடர்ந்தும் கடிதம் எழுதுவதையே போராட்டமாக நினைக்கின்றனர்.
ஆனால் இந்திய அரசோ கடிதம் கிடைத்தது என்றுகூடப் பதில் தருவதில்லை. அந்தளவு இறுமாப்புடன் அது நடந்து கொள்கிறது.
அதாவது இந்த நாய்களை(தமிழ் தலைவர்களை) எவ்வளவுதான் எட்டி உதைத்தாலும் தொடர்ந்தும் காலடியில் கிடந்து விசுவாசமாக வாலாட்டும் என இந்திய அரசு நன்கு தெரிந்து வைத்துள்ளது.
சிலர் கேட்கிறார்கள் “ சிஙகள நிலத்தில் பல இந்துக் கோயில்கள் இருக்கும்போது தமிழர் நிலத்தில் புத்த விகாரை இருந்தால் என்ன தவறு ? என்று.
சிங்களவர்கள் பெரும்பான்மையினர். அவர்கள் மத்தியில் எத்தனை இந்துக் கோவில்கள் இருந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு இல்லை.
ஆனால் தமிழர் சிறுபான்மையினர். தமிழர் நிலத்தில் கட்டப்படும் புத்த விகாரைகள் தமிழின அழிப்பை நோக்கமாக கொண்டவை.
போராட்டம் மகத்தானது.
போராட்டம் மகத்தானது. அது சாதாரண மனிதனை போராளியாகவும் மாமனிதனாகவும் மாற்றுகிறது.
சாதாரண இளைஞனான வசந்தனை மாமனிதன் மில்லராக மாற்றியதும் இந்த போராட்டமே.
வசந்தன் எனது அயல் கிராமம் துன்னாலையை சேர்ந்தவர். அவரை எனக்கு படிக்கிற காலத்தில் இருந்து தெரியும்.
நாம் எல்லோரும் தாமரைக்குளத்தில் குளித்தது, அதன் அருகில் வயல்வெளியில் கிரிக்கட் விளையாடியது எல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது.
நாம் எமது இயக்க செலவுகளுக்காக பருத்தித்துறையில் இருந்த வங்கி ஒன்றில் பணம் கொள்ளையிட முடிவு செய்தோம்.
அந்த வங்கியின் பொறுப்பாளராக வசந்தனின் தந்தையார் இருந்தார்.
அவர் போராட்டத்திற்கு ஆதரவான உணர்வாளராக இருந்தார். எனவே அவரிடமே சென்று ஆலோசனை கேட்டோம்.
நாம் வெற்றிகரமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அவரே எமக்கு பெரிதும் உதவினார்.
வசந்தன் மற்றும் மதி இருவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.
ஆனால் மதியின் சகோதரர் மதியை திருப்பி அழைத்து வந்து தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இயக்கத்தில் சேர்த்துவிட்டார்.
லாறியில் வெடிமருந்தை நிரப்பிக் கொண்டு சென்று வெடிக்க வைத்து எதிரி முகாமை நிர்மூலமாக்கும் தாக்குதல் முதன் முறையாக வசந்தன் மேற்கொண்டதாக பலரும் நினைக்கின்றனர்.
ஆனால் வசந்தனின் நண்பன் மதியே இந்த வகையான தாக்குதலை கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு முதலில் மேற்கொண்டவர். ஆனால் அத் தாக்குதல் வெற்றிபெற வில்லை.
வசந்தன் தன் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அது அவருடைய சொந்த ஊரான கரவெட்டியை மட்டும் அதிர வைக்கவில்லை. முழு இலங்கையையும் அதிர வைத்தது.
போராட்டம் வசந்தனை மில்லராக மாற்றியது. இன்று மில்லர் பெயர் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் எதிரிகளுக்கு அதிர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.
30 வருடமாக மகன் பேரறிவாளன்
30 வருடமாக மகன் பேரறிவாளன் சிறையில் வாடிய போதும் ஈழத் தமிழரை இனியும் ஆதரிப்போம் என உறுதியாக கூறிய தாய்.
விருதுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் முழு தகுதியானவர் அற்புதம் அம்மாள்.
வாழ்த்துக்கள்.
யாரையும் தொந்தரவு செய்யாத
யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு? – அருந்ததி ராய்
2010ல் லண்டனில் ஒரு கூட்டத்தில் அருந்ததி ராய் உரையாற்றினார்.
இந்தியாவில் நடக்கும் இனப் படுகொலைகள் பற்றி பேசியவர் ஈழத்தில் நடந்த இனப் படுகொலை பற்றியும் பேசினார்.
அண்மைக் காலத்தில் எம் கண் முன்னே ஒரு பெரிய இனப்படுகொலை இந்திய அரசின் உதவியுடன் நடந்திருக்கிறது. ஆனால் அதுபற்றி நம்மில் பலர் பேசாமல் இருக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமன்றி ஈழத்தில் நடந்த அந்த இனப்படுகொலை இந்த மேடையில் பதிவு செய்யப்பட வேண்டும். யாராவது ஈழத் தமிழர் இந்த கூட்டத்தில் இருந்தால் மேலே வந்து சில வரிகள் கூறும்படியும் அழைப்பு விடுத்தார்.
அந்த கூட்டத்தில் பெருமளவு வெள்ளை இனத்தவர்களும் சீக்கிய இனத்தவர்களுமே இருந்தனர்.
அதில் அவர் ஈழத்து இனப் படுகொலை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் பேசினார். அதுதான் அருந்ததி ராய்.
அவர் காட்டுக்குள் சென்று நக்சலைட்டுகளுடன் உரையாடி அவர்களின் கருத்துகளையும் வெளி உலகிற்கு அறிய தந்திருக்கிறார்.
அவருடைய பேச்சுகள் எழுத்துக்கள் இந்திய அரசுக்கு எரிச்சல் தருகின்றன.
அதனால்தான் பல வருடங்களுக்கு முன்னர் பேசிய ஒரு பேச்சுக்கு தற்போது வழக்கு பதிவு செய்து அவர் குரலை அடக்க முனைகின்றனர்.
பன்றி பல குட்டிகள்
பன்றி பல குட்டிகள் போடும். ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் பூமி அதிர்கின்றனது.
எமக்காக அதிர்ந்தவர்கள் இவர்கள். எமது எதிரிகளை அதிர வைத்தவர்கள்.
பொதுவாக எமக்காக மரணித்தவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு மாவீரர்களாக நினைவுகூரப்படும்.
ஆனால் தமது பெயர் பொறிக்கப்படாது என்று தெரிந்தும் எமக்காக மரணித்தவர்கள் இவர்கள்.
இவர்களை வரலாறு எப்படி நினைவு கூரப் போகின்றது என்று தெரியவில்லை.
ஆனால் தமிழர் மனங்களில் இவர்கள் என்றும் நிலைத்து இருப்பர். இது உறுதி.
1995ம் ஆண்டு நான்
1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை அச் செய்தி அறிய கிடைத்தது.
அப்துல் ரவூப் என்ற இளைஞர் தன் 23வயதில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி.
ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என்று இந்தியஅரசு கட்டமைத்து வைத்திருந்த விம்பத்தை அச் செய்தி சுக்குநூறாக உடைத் தெறிந்தது.
அதைவிட ஆச்சரியம் என்னவெனில் “பணம் தரலாம் உங்கள் மகன் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டான் என்று கூறுங்கள்” என்று தமிழக அரசு மிரட்டியும் ரவூப் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை.
அப்துல் ரவூப் உயிருடன் இருந்திருந்தால் இன்று தன் 52வது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடியிருப்பார்.
அப்துல் ரவூப்பை தொடர்ந்து இதுவரை 17 தமிழக தமிழர்கள் ஈழத் தமிழருக்காக உயிர் துறந்துள்ளார்கள்.
ஆனாலும் தமிழின படுகொலையை அவர்களால் நிறுத்த முடியவில்லை.
ஏனெனில் அரசுக்கு எவ்வித சேதம் தராத தற்கொலைகள் குறித்து அரசு ஒருபோதும் கவலை கொள்வதில்லை.
அதுமட்டுமல்ல முக்கியமாக தமிழக தமிழர்களை ஆள்பவர்கள் தமிழரில்லை அல்லது தமிழின உணர்வு அற்றவர்கள்
முடிந்துவிட்டான் என்று
முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்து போவான்.
பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் உமா வெற்றி பெற்று எம்.பி யாகி உள்ளார்.
பிரித்தானியா பாராளுமன்றத்தில் இடம்பெறும் முதல் தமிழ் எம்.பி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இந்தியாவில் 40 வருடமாக அகதியாக வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர் நிலை எப்போது மாறும்?
ஆழ்ந்த இரங்கல்கள்
•ஆழ்ந்த இரங்கல்கள்
லண்டனில் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் ஈஸ்ட்காம் நகரின் நீண்ட கால கவுன்சிலராக மேயராக செயற்பட்ட போல் சத்தியநேசன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அவர் வீட்டு கதவை தட்டி உதவி கேட்டால் உடனே வந்து உதவுபவர்.
அவருடைய லேபர் கட்சி பெருபான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்வேளையில் அவர் மறைவுற்றது பெரும் இழப்பாகும்.
சிலோன் டீ குடியுங்கள்
“சிலோன் டீ குடியுங்கள். நீங்களும் கடவுளாகலாம்”
குறிப்பு - இது சிலோன் டீ க்கான கட்டணம் செலுத்தாத விளம்பரம்.
😂😂
முன்னாள் போராளி
முன்னாள் போராளி
ஒரு கை ஒரு காலை இழந்தவர்
ஆனாலும் நம்பிக்கை இழக்காதவர்
கவிஞர்
எழுத்தாளர்
ஊடகவியலாளர்
என பல் திறன் கொண்டவர்
திரு.கோகுல் பிரேம்குமார்
ஆழ்ந்த இரங்கல்கள்
காற்சட்டை போட்ட
காற்சட்டை போட்ட 300 பாய்ஸ் என்று இந்திய தூதர் டிக்சிற் கிண்டலாக கூறினார்.
அவர்களோ இந்திய டாங்கியை கவிழ்த்து போட்டுவிட்டு சிரிப்பை பதிலாக கொடுத்தனர்.
எதிரி எவ்வளவு பெரியது
எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் இல்லை.
எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம்.
11வது நினைவுதின அஞ்சலி
11வது நினைவுதின அஞ்சலி
தமிழ்நாடு விடுதலைக்காக போராடிய தோழர் தமிழரசனுடன் சேர்ந்து பயணித்த ஈழத் தமிழர் தினேஸ் @ ராயு
வரலாற்றில் தோழர் தமிழரசன் பெயர் இருக்கும்வரை கூடவே தோழர் ராயுவின் பெயரும் நிலைத்து இருக்கும்.
இருவரும் ஈழத் தமிழர்
இருவரும் ஈழத் தமிழர்
ஒருவர் லண்டன் சென்றதால் அங்கு குடியுரிமை பெற்று இப்போது எம்.பி யாகியுள்ளார்.
மற்றவர் தமிழ்நாடு சென்றதால் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கோரி தீக்குளிக்கும் நிலை.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் அவல நிலை எப்போது மாறும்?
எந்தப் புலனாய்வு படிப்பும்
எந்தப் புலனாய்வு படிப்பும் படித்ததில்லை. எங்கும் புலனாய்வு பயிற்சி பெற்றதில்லை.
ஆனாலும் ஒரு சிறிய காட்டுக்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வு அமைப்புகளின் அத்தனை சதி முயற்சிகளையும் அவர் முறியடித்தார்.
வேலூர் சிறப்புமுகாமில் இருந்து ஒரு போராளியை சதித்திட்டத்துடன் இந்திய உளவு அமைப்பு அனுப்பியது.
நான் அப்போது அச் சிறப்புமுகாமில் இருந்ததால் அதை நேரில் கண்டேன்.
ஆனால் எனது ஆச்சரியம் என்னவெனில் இன்றுபோல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது இருக்கவில்லை.
ஆனாலும் வன்னிக் காட்டுக்குள் இருந்த அவர் எப்படி இதை அறிந்து முறியடித்தார் ?
அடுத்து இன்னொருவரை அனுப்பினார்கள். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரும் ஒரு பொலிசாரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றார்.
ஆனாலும் அதையும் அவர் முறியடித்தார். இப்படி அவர் முறியடித்த பல சம்பவங்கள் கூறலாம்.
வரலாறு அவரை எப்படி நினைவு கூரப் போகின்றது என்று தெரியவில்லை.
அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய திறமை எதிரியைக்கூட வியப்படைய வைத்தது.
இருவரும் விளையாட்டு
இருவரும் விளையாட்டு வீரர்கள். ஒருவர் மரடோனா. இன்னொருவர் நடராஜன்.
ஆங்கிலம் பேச வரவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? என்று பத்திரிகையாளர் ஒருவர் மரடோனாவிடம் கேட்டபோது "அடுத்தவன் மொழி எனக்குத் தெரியவில்லை என்று நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என் தாய்மொழி சரியாக பேச வரவில்லை என்றால் தான் நான் வருத்தப்பட வேண்டும். " என அவர் பதில் அளித்தார்.
இந்தி தெரியவில்லை என வருத்தப்படும் நடராஜனுக்கு இது தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு பிழைக்க வரும் இந்திக்காரர்கள் தமக்கு தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படுவதில்லை.
அப்படியிருக்க இந்தி தெரியவில்லை என்று நடராஜன் ஏன் வருத்தப்படுகிறார்?
கள்ளச்சாராயம் காய்ச்சி
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கைது செய்ய முடியாத திராவிட மாடல் அரசு
அம்ஸ்ரோங் கொலையின் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியாத திராவிட மாடல் அரசு
பாடல் பாடியதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது.
பாடல் எழுதியவர் கைது செய்யப்படவில்லை. பாடலை பாடிய பாடகர் கைது செய்யப்படவில்லை.
“கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி” என்ற இப் பாடல் பல வருடங்களாக பலரால் பாடப்பட்டு வரும் பாடல்.
இப் பாடலை பாடியதற்காக இப்போது சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். வன்மையான கண்டனங்கள்.
குறிப்பு – பாடல் பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. எல்லோரும் பாடுவோம். எத்தனை பேரை கைது செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
மா.செ.தமிழ்மணி ஐயாவுக்கு
•மா.செ.தமிழ்மணி ஐயாவுக்கு அஞ்சலிகள்
ஈழத் தமிழர்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட , தன் வாழ் நாள் முழுவதும் தமிழுக்காக வாழ்ந்த தமிழ்மணி ஐயா அவர்களுக்கு எமது அஞ்சலிகள்.
அவரை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். ஏனெனில் அவரது மகன்களான தமிழ் முகிலன் தமிழ்இனியன் ஆகியோர் எனது தோழர்களாக இருந்தனர்
ஆனால் அவரை நேரில் காணும் வாய்ப்பு ஒரேயொரு முறைதான் எனக்கு கிடைத்தது. அது என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.
தன் பிள்ளைகள் தமிழ்முகிலன் , தமிழ் இனியன் ஆகியோர் மீதான கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கின் தீர்ப்பு நாளின் போது திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்திருந்தார்.
அன்று என்னையும் அவ் வழக்கிற்காக பொலிசார் அவ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அவருடைய மகன் தமிழ் முகிலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்ட்டது.
நான் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தும் பொலிசார் என்னை விடுதலை செய்யாது மீண்டும் காவலுடன் சிறப்புமுகாம் கொண்டு சென்றனர்.
அப்போது எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக மனம் வருந்தியதுடன் நான் எப்படியாவது விரைவில் விடுதலையாகி விட வேண்டும் என தமிழ்மணி ஐயா என் கரம்பற்றி ஆறுதல் கூறியது இப்போதும் என் நினைவில் இருக்கிறது.
தனது மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த துயரமான நிலையிலும்கூட தனது மகன் அருகில் நின்று ஆறுதல் கூறாமல் எனது அருகில் வந்து எனது விடுதலைக்காக அவர் குரல் கொடுத்தது ஈழத் தமிழர்கள் மீது அவர் கொண்ட அன்புக்கு சான்றாகும்.
அவர் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட அன்பும் பாசமும் அளப்பரியது. அவர் எமக்கு அளித்த ஆதரவு மறக்க முடியாதது.
• ஈழத் தமிழர்கள் சார்பில் அவருக்கு எமது அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.
• தோழர்கள் முகிலன் இனியன் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் துயரில் பங்கு கொள்கிறோம்.
குறிப்பு – 10.07.2015யன்று மா.செ.தமிழ்மணி ஐயா அவர்கள் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பு இது. அவரின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு மீள் பதிவு செய்துள்ளேன்.
சீனாவில் மாவோ செய்தது என்ன?
•சீனாவில் மாவோ செய்தது என்ன?
பொதுவாக எல்லோரும் மாவோ அவர்கள் சீனப் புரட்சியை செய்ததாக நினைக்கிறார்கள்.
சீனப் புரட்சியை சீன மக்களே செய்தார்கள். மாவோ அப் புரட்சிக்கு தலைமை வகித்தார் . அவ்வளவே.
அப்படியென்றால் மாவோ செய்த மகத்தான பணி என்ன?
அடிமைப்பட்டுக் கிடந்த சீன மக்களுக்கு அவர்களுடைய அடிமைத்தனத்தை அவர் புரிய வைத்தார்.
அவர் ஒரு வரலாற்று ஆசிரியர். அதனால் சீன மக்களின் பெருமைக்குரிய வரலாற்றை அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
அதனால் தங்களைவிட மிகவும் சிறிய நாடான ஐப்பானிடம் தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதை சீன மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதை உணர்ந்து கொண்டமையினால்தான் அவர்களால் மகத்தான சீனப் புரட்சியை நிகழ்த்தி விடுதலை பெற முடிந்தது.
தூங்கும் அரக்கன் எனப் பெயர் பெற்றிருந்த சீனா இன்று பொருளாதார வல்லரசு எனப் பெயர் பெற்றமைக்கு முக்கிய காரணம் சீன மக்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை உணர்ந்தமையே.
எனவே தமிழ் இன மக்களும் விடுதலை பெற வேண்டும் எனில் முதலில் அவர்கள் தாம் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். உணர வைக்கப்பட வேண்டும்.
ஈழத்திலும் சரி இந்தியாவில் தமிழ்நாட்டிலும் சரி தமிழ் மக்கள் அடிமையாகவே இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் தலைவர்களோ அவர்களின் அடிமைத்தனத்தை உணர விடாமல் தடுக்கும் பணியையே செய்கிறார்கள்.
இப்போது தமிழ் இனத்திற்கு தேவை,
•மாவோ போன்று அடிமைத்தனத்தை உணர வைக்கும் தலைவர்களே.
•மாவோ போன்று தமிழ் இனத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை எடுத்துக் கூறும் தலைவர்களே.
குறிப்பு- அடிமையாக கிடப்பது கேவலம் இல்லை. மாறாக தமது அடிமைத்தனத்தை உணராமல் வீழ்ந்து கிடப்பதே கேவலம் ஆகும்.
ஊத்திக் கொடுத்த உத்தமி
"ஊத்திக் கொடுத்த உத்தமி" என்று ஜெயா அம்மையாரை பாடியபோது கைதட்டி ரசித்தவர்கள், இப்போது "கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி" என்று பாடும்போது கண்டனம் செய்கின்றனர்.
இவர்களுக்கு வந்தா ரத்தம். மற்றவனுக்கு வந்தா தக்காளி சட்னியா?
500 கோடி பட்ஜட்
500 கோடி பட்ஜட் என்கிறார்கள்
கிட்டத்தட்ட 3 மணி நேர படம்.
ஆனால் மனதில் நிற்கும் வண்ணம் ஒரு மூன்று நிமிடக் காட்சிகூட இல்லை.
கமலும் சங்கரும் சேர்ந்து லைக்கா நிறுவனத்தை நன்றாக ஏமாற்றிவிட்டனர்.
அமிர்தலிங்கம் மரணம்
•அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா?
(இன்று அமிர்தலிங்கத்தின் 35வது நினைவு தினம். )
சில வருடங்களுக்கு முன்னர் பி.பி.சி க்கு பேட்டி கொடுத்த சம்பந்தர் ஐயா “அமிர் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” எனக் கூறியிருந்தார்.
(1) தமிழ் மக்களுக்கு இன உணர்வை ஊட்டியதில் அமிர்தலிங்கம் பங்கு மறுக்க முடியாதது. ஆனால் அதை அவர் தமிழ் மக்களின் நலன்களுக்காக செய்யவில்லை. மாறாக தனது பதவி நலன்களுக்காகவே செய்தார்.
(2) சுயாட்சிக் கழக நவரட்ணம் தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தபோது அது தற்கொலைக்கு ஒப்பான தீர்வு என அமிர்தலிங்கம் சாடினார். ஆனால் அதே அமிர்தலிங்கம் தான் தேர்தலில் தோற்றதும் தனது பதவி நலனுக்காக அதே தமிழீழ தீர்வை முன்வைத்தார்.
(3) ”அடைந்தால் தமிழீழம் இல்லையேல் சுடுகாடு” என இளைஞர்களை உசுப்பேற்றிவிட்ட அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தபோது அதனை ஏற்றார். ஜே.ஆர் “மாவட்ட சபை” வழங்க முன்வந்தபோது அதனை ஏற்றார். இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட மாகாண சபையை ஏற்றார்.
(4) வடபகுதியில் சாதிப் போராட்டம் நடைபெற்றபோது அமிர்தலிங்கம் உயர்சாதியினர் பக்கமே நின்றார். பாராளுமன்றத்தில் “சங்கானை இன்னொரு சங்காயாக (சீனா) மாறுகின்றது” என தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எதிராக பேசினார்.
(5) தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராக (மலையக) தொண்டமான் இருந்தார். ஆனால் அமிர்தலிங்கம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தபோது அதனால் தமது மக்களுக்கு பயன் இல்லை எனக் கூறி தொண்டமான் விலகி சென்றார்.
(6) ராஜதுரைக்கு தலைமைப் பதவியை வழங்கியிருந்தால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அமிர்தலிங்கம் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜதுரைக்கு எதிராக தமிழரசுக்கட்சி சார்பில் காசி ஆனந்தனை போட்டியிட செய்தார். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை குழப்பினார்.
(7) இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொலை மற்றும் பாலியல் வல்லுறவு செய்தபோது அதனைக் கண்டித்த அமிர்தலிங்கம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்தபோது அதனைக் கண்டிக்க மறுத்தார்.
(😎 இலங்கை அரசு தரப்படுத்தலை அமுல்படுத்தியபோது அதற்கு எதிராக தமிழ் மாணவர்களை போராடும்படி தூண்டிய அமிர்தலிங்கம் தனது மகனுக்கு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு பெற்றார்.
(9) இந்திரா காந்தி போராளிகளுக்கு பயிற்சி வழங்க முனைந்தபோது அதனை தடுக்க அமிர்தலிங்கம் முனைந்தார். ஆனால் மதுரை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது மகன் ஆயுத இயக்கம் கட்டிய போது அதனை அவர் தடுக்கவில்லை.
(10) பல தமிழ் இளைஞர்களை அன்றைய ஜே.ஆர் அரசு கைது செய்தபோது அவர்களை விடுவிக்க அமிர்தலிங்கம் முனையவில்லை. ஆனால் தனது மகனின் கடிதத்தை கொண்டு சென்ற தனது உறவினர் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும் உடனே ஜே. ஆர் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுவித்தார். அந்த உறவினர் எந்த வழக்கும் இன்றி உடனே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.
(11) யாழப்பாணத்தில் தேர்தலில் தோல்வியுற்ற அமிர்தலிங்கம் அம்பாறையில் இருந்து தெரிவு செய்யப்பட விரும்பினார். ஆனால் அங்கும் அவர் தோல்வியுற்றார். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் கொல்லப்பட்டார்.
அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால்,
• தமிழீழம் கிடைத்திருக்காது. ஏனெனில் அவர் தமிழீழ கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டார்.
• முள்ளிவாய்க்கால் அவலத்தையும் அவர் தடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் உயிரோடு இருந்த காலத்திலே இந்திய ராணுவ அழிப்பை தடுக்காதவர் மட்டுமல்ல அதை கண்டிக்க கூட முன்வராதவர்.
• தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்திருக்காது. சம்பந்தர் ஐயாவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருக்காது.
எனவே அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.!
குறிப்பு- புலிகளுக்கு பின்னால் பைல் கட்டை தூக்கி திரிந்த காலத்தில் அமிர் இறப்பு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சம்பந்தர் ஐயா கூறவில்லை. இப்போது அந்த சம்பந்தர் ஐயா இறந்த பின்பு சம்பந்தர் ஐயா மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சுமந்திரன் கூறுகின்றார்.
இத்தனை வருடங்களாக
இத்தனை வருடங்களாக ஓடியும் இதுவரை வெற்றிபெறவில்லை என்பதற்காக நாம் வருத்தமடையத் தேவையில்லை
ஏனெனில், இத்தனைக்கு பிறகும் நாம் நின்றுவிடாமல் ஓடுகிறோம் என்பதே பெருமைதான்.
எதுவுமே எளிமை இல்லைதான் ஆனால் அனைத்துமே சாத்தியம்தான்.
தேர்தல் பாதையில் வெற்றி பெற முடியவில்லை என்றால் அடுத்த கட்டமான ஆயுதப் போராட்டபாதைக்கு தமிழ்த்தேசியம் நகருமேயொழிய தனது தமிழ்த்தேசிய விடுதலை என்னும் இலக்கை ஒருபோதும் கைவிடாது.
ஒருவன் அயோக்கியன்
"ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை புனிதப்படுத்த நினைப்பவர்கள் அவனைவிடப் பெரிய அயோக்கியர்கள்" -பிடல் காஸ்ரோ
ஏன் இந்தளவு தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார்?
பாவம், இவருக்கும் பசிக்குமில்லே.
காயம் இல்லாமல் கனவு
காயம் இல்லாமல் கனவு காணலாம். ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது.
இந்திய அரசுக்கு கடிதம் எழுதி தீர்வு பெற முடியும் என சிலர் நினைக்கிறார்கள்.
இன்னும் சிலர் அண்ணாமலைக்கு உறவுப்பாலம் கட்டி தீர்வு பெற முடியும் என நம்புகின்றனர்.
ஆனால் சிங்கள அரசின் பலாத்காரத்திற்கு எதிர் பலாத்காரத்தை பாவிக்காமல் எந்த தீர்வையும் பெற முடியாது என்பதை தமிழ் இளைஞர்கள் இன்பம் செல்வம் கொலை செய்யப்பட்டபோதே உணர்ந்து விட்டார்கள்.
ஆம். அடக்குமுறையை மேற்கொள்ளும் சிங்கள அரசு இயந்திரத்தை வன்முறைமூலம் உடைத்தெறியாமல் தமிழ் மக்கள் எந்தவொரு தீர்வையும் பெற்றுவிட முடியாது என்பதையே வரலாறு தொடர்ந்து நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.
தேர்தலில் 69லட்சம் வாக்கு
தேர்தலில் 69லட்சம் வாக்கு பெற்ற கோத்தா பதவியை விட்டு ஓடிவிட்டார்.
தேர்தலில் தோல்வி அடைந்த ரணில் ஜனாதிபதியாகி இரண்டாவது வருடம் தொடர்கிறார்.
இப்போது எழும் கேள்வி என்னவெனில் 69 லட்சம் பெரிதா? அதைவிட ரணில் பெரிதா?
இதுதான் (முதலாளித்துவ) ஜனநாயகம்?
மீண்டும் காமராசர் ஆட்சி வேண்டுமா?
•மீண்டும் காமராசர் ஆட்சி வேண்டுமா?
காமராசரை விரட்டிய திராவிட கட்சிகள்கூட காமராசர் ஆட்சி தருவோம் என்கின்றனர்.
திராவிட ஆட்சிகளின் ஊழலைப் பார்த்துவிட்டு சில தமிழத்தேசியர்களும் காமராசரைப் புகழ்கின்றனர்.
காமராசர் ஆட்சி என்பது காங்கிரஸ் ஆட்சியே. அந்த ஆட்சியில்தான் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டது.
இந்தி மொழி திணிக்கப்பட்டது. தமிழ் நிலம் தாரை வார்க்கப்பட்டது.
தமிழினத்தின் இன்றைய இழி நிலைக்கு காமராசரின் காங்கிரஸ் ஆட்சியே காரணம்.
மீண்டும் காமராசர் ஆட்சி எனக்கூறுவது மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதே.
எனவே இனி அமைய வேண்டியது காமராசர் ஆட்சி அல்ல. தமிழத்தேசிய ஆட்சியே.
விருதுநகர் தபால்நிலைய வெடிகுண்டு வழக்கில் காமராசர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது உண்மையா ?
அப்படியென்றால் அவர் தீவிரவாதியா? அல்லது சுதந்திரப் போராட்ட தியாகியா?
ஈழப் போராளிகளை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்போர் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றனர்?
இருவரும் ஈழத் தமிழர்.
இருவரும் ஈழத் தமிழர்.
ஒருவர் அகதியாக பிரான்ஸ் சென்றார். குடியுரிமை பெற்று ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திச் செல்லும் முதல் தமிழர் என்ற பெருமை பெறுகிறார். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இன்னொருவர் அகதியாக தமிழ்நாடு சென்றார். சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கோரி தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் அவல நிலை.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் அவலநிலை என்று மாறும்?
கடந்த வருடம்
கடந்த வருடம் ஒரு நீதிபதி உயிருக்கு ஆபத்து என்றுகூறி நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த வருடம் ஒரு மருத்துவர் தனது உயிருக்கு ஆபத்து என்கிறார்.
பிரச்சனைக்கு காரணமான அரசு இது ஏதோ அதிகாரிகளுக்கிடையான மோதல் போன்று சித்தரித்து தப்ப முயல்கிறது.
நீதிபதி மறக்கப்பட்டது போல் இந்த மருத்துவரும் விரைவில் மறக்கப்படலாம்.
நாம் எப்போதும் நோயாளிகளுடனே போராடுகிறோம். நோய்களுடன் போராடுவதில்லை.
அதனால்தான் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்துகொண்டே உள்ளன.
வடக்கில் வசந்தம் என்றார்கள். கிழக்கில் உதயம் என்றார்கள்.
ஆனால் மீண்டும் புலிகள் வந்தால் நல்லது என்று தமிழ் மக்களை நினைக்க வைத்துள்ளார்கள்.
இதுதான் சிங்கள அரசின் கடந்த 15 வருட சாதனை.
கடந்த வாரம் ஜீ டிவியில்
கடந்த வாரம் ஜீ டிவியில் “சரிகமப” பக்தி பாடல் நிகழ்வு இடம்பெற்றது.
அதில் ஒரு பாடலுக்கு ஒரு நபர் சாமி வந்து இறங்கி ஆடுவதுதாக காட்டப்பட்டது.
ரேட்டிங்காக நடத்தப்பட்ட ஒரு அப்பட்டமான செட்அப் இது என்பது நன்றாக தெரிந்தது.
அதைவிட இந்த சாமி இறங்குதல் என்பது ஒருவகை மனநோய் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் விரும்பினால் முட்டாளாக இருக்கலாம். ஆனால் முட்டாள்தனத்தை பரப்ப அவருக்கு உரிமை கிடையாது.
ஒரு டிவி நிறுவனம் பல கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தனது வியாபாரத்திற்காக இப்படி முட்டாள்தனத்தைப் பரப்ப இடமளிக்கக்கூடாது.
காவல்துறையினர் ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு கேள்வி – சாமி இறங்கியதாக கூறப்படும் நபர்கள் எல்லாம் அவ் வேளைகளில் தமிழில்தான் பேசுகின்றனர். அப்படியென்றால் சாமிக்கு தமிழ் தெரியும் அல்லவா. அப்படியிருக்க எதற்கு சாமிக்கு சமஸ்கிருதத்தில் பூஜை செய்கின்றனர்?
ஒவ்வொரு வருடமும்
ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் வரும்போது தமிழருக்கு நினைவில் வருவது 1983ம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலைகளே.
அதுவும் வெலிக்கடை சிறையில் நடைபெற்ற குட்டிமணி, தங்கத்துரை உட்பட 52 பேரின் படுகொலைகள் மறக்க முடியாதவை.
மனித இனம் உன்னதமான ஒரு வாழ்க்கையை, பரிபூரண விடுதலையை நோக்கி முன்னேறும் இக் காலகட்டத்தில் மிருகத்தனமான மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற நிகழ்வு அது.
இக் கொடூரமான வெறிகொண்ட தாக்குதலில் பலியான கொள்கை மறவர்களில் ஒருவர் அழகன் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை சந்திரகுமார்.
அழகன் பருத்தித்துறையில் புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றவர்.
1979ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் தன்னை முழு நேரமாக இணைத்துக்கொண்டவர்.
புலிகள் இயக்கம் உடைந்து புதிய பாதை ( புளட்) என்ற அணி உருவாகிய போது அழகன் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் அவ்வணியும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக விளங்கினார்.
அழகன் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்.
அவர் இந்திய புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியத்திற்கு உழைத்தார்.
அதன் நிமித்தம் இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.
1983ம் ஆண்டு யூலை மாதம்25ம் தேதியன்று வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கொல்லப்பட்டபோது அழகன் அவர்களும் கொல்லப்பட்டார்.
தோழர் அழகன் கொல்லப்பட்டு இன்றுடன் 41 வருடங்கள் கழிந்துவிட்டன.
ஆனால் அவர் விரும்பிய இலட்சியம் இன்னும் வெல்லப்படவில்லை.
தமிழ் மக்கள் இன்னும் விடுதலை பெறவில்லை.
வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம்.
ஒரு டவுட் ?
• ஒரு டவுட் ?
இந்த பிரபஞ்சம் உருவாகி 1400கோடி வருடங்கள் என்கிறார்கள்.
அதில் இந்த பூமி உருவாகி 500கோடி வருடங்கள் ஆகுது என்கிறார்கள்.
ஆனால் கடவுள் மனிதனை படைத்து 6000 ஆண்டுகள்தான் ஆகுது.
அப்படியென்றால் அதுவரை கடவள் தனியாக இருந்து என்ன செய்துகொண்டிருந்தார்?
குறிப்பு – கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன்தான் கடவுளைப் படைத்துள்ளான். அப்புறம் தான் படைத்த கடவுள்களில் எது பெரிதென்று அடிபட்டு சாகிறான்.
அஞ்சலிகள்
•அஞ்சலிகள்
தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
லண்டன் படிப்பை பாதியில் விட்டிட்டு போராட வந்தவர். இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டவர்.
பனாகொடை ராணுவ முகாமில் இருந்து தப்பியவர். பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பை நடத்தியவர்.
அவருடைய அர்ப்பணிப்பு மதிக்கப்பட வேண்டும். அவருடைய இழப்பு குறித்து ஆழ்ந்த அஞ்சலிகள்
1971ல் மேற்கு வங்க மாநில
1971ல் மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்தவர் “ இந்திய அரசு ராணுவத்தை அனுப்பவில்லை என்றால் நான் எனது மாநில பொலிஸை அனுப்புவேன்” என் தைரியமாக கூறினார்.
அதன் பின்னரே பிரதமர் இந்திரா காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேச விடுதலைக்கு உதவினார்.
இப்போது மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா அவர்கள் வங்க தேசத்தில் இருந்து அகதிகள் வந்தால் அவர்களுக்கு உதவுவோம் என்று தைரியமாக கூறுகின்றார்.
அவர் “இது இன்னொரு நாட்டு பிரச்சனை” என்று கூறவில்லை. அதுமட்டுமன்றி “மத்திய அரசின் கொள்கையே எமது கொள்கை” என்றும் கூறவில்லை.
மாறாக, உதவி கேட்டு வரும் அகதிகளுக்கு உதவுவதையே ஐநா உறுதி செய்கிறது என்று தைரியமாக கூறியுள்ளார்.
இந்த மேற்கு வங்க முதல்வர்களின் தைரியம் தமிழ்நாடு முதல்வர்களுக்கு ஏன் இல்லை?
41 வருடங்களுக்கு முன்னர்
41 வருடங்களுக்கு முன்னர் 1983 யூலையில் இதே நாட்களில் இலங்கையில் ,
•2000வரையிலான அப்பாவி தமிழர் கொல்லப்பட்டனர்
•600 வரையிலான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்
•5000வரையிலான தமிழர் கடைகள் அழிக்கப்பட்டன
•1800 வரையிலான தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
•பலத்த காவலில் சிறையில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
இத்தனையும் சிங்கள அரசே திட்டமிட்டு பொலிஸ் மற்றும் ராணுவத்தின் முன்னிலையில் அவற்றின் உதவியோடு செய்தது.
நடந்தது இனப்படுகொலை. ஆனாலும் இன்றுவரை சிங்கள அரசும் இந்திய அரசும் இதனை இனக்கலவரம் என்றே கூறிவருகின்றன.
அதுமட்டுமல்ல இதுவரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும் வழங்கப்படவில்லை.
உன் கோவணம் உரியப்பட்டதா? உரிந்தவன் கைகளை வெட்டு. ஆனால் ஒருபோதும் கெஞ்சிக் கோவணம் கட்டாதே. அதைவிட அம்மணமாகவே போராடு
ஒரு நாள் சமையலுக்கு
ஒரு நாள் சமையலுக்கு வாங்கும் வெண்டிக்காயைக்கூட உடைத்து பார்த்து வாங்குகிறோம்.
ஆனால் 5 வருடம் எம்மை ஆளும் அரசியல்வாதிகளை ஆராயாமல் தெரிவு செய்கிறோம்.
ஒரு துண்டு தேங்காயைத் திருடியதற்காக எலிக்கு விஷம் வைத்து கொல்கிறோம்.
ஆனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை திருடும் அரசியல்வாதிகளை கொல்ல நினைப்பதில்லை.
வாய்ப்பு கிடைக்கும்போது பொறுப்பற்ற அரசியல்வாதிகளை எமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறோம்.
அப்புறம் பிரச்சனை வந்ததும் யாராவது ஒரு தனி நபர் வந்து தீர்வு பெற்றுத் தருவார் என நம்ப முயல்கிறோம்.
தனி நபர்களால் சாகசம் செய்ய முடியுமேயொழிய ஒருபோதும் தீர்வு பெற்றுத் தர முடியாது.
அரசிடமே அதிகாரம் உண்டு. அரசே பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
ஆனால் அரசோ மக்களை திசை திருப்பி அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க முயல்கிறது.
எனவே அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவதே உரிய வழியாகும். இதுவே மக்கள் போராட்ட அரசியல் ஆகும்.
திருச்சி சிறப்புமுகாமில்
•திருச்சி சிறப்புமுகாமில் விடுதலைகோரி 12 பேர் தொடர் உண்ணாவிரதம்
ஒரு கூட்டம் மக்கள் அகதியாகவே பிறந்து அகதியாகவே வாழ்ந்து அகதியாகவே இறந்துவிடும் கொடுமையை என்னவென்பது?
அதுவும் ஈழத் தமிழ் இனத்திற்கு இக் கொடுமை வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் நிகழ்வதை என்னவென்பது?
அகதியாக சென்ற ஈழத் தமிழரை கனடா வாழ வைக்கிறது, பிரிட்டன் வாழ வைக்கிறது ஐரோப்பா அவுஸ்ரேலியா எல்லாம் வாழ வைக்கிறது.
ஆனால் தொப்புள்கொடி உறவுகள் என்று நம்பிச் சென்ற தமிழ்நாடு மட்டும் ஏன் சிறப்பு முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது?
இந்தியா சென்ற தீபெத் அகதிகள் நன்றாக வாழ முடியும். பர்மா மற்றும் நேபாள அகதிகள்கூட வாழ முடியும். ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் வாழ முடியாது என்றால் என்ன அர்த்தம்?
அடேய் யாரு
அடேய் யாரு பார்த்த வேலையடா இது?😂
எந்த ஆயுதங்களை எதிர்கட்சிகள் மீது திமுக பயன்படுத்தியதோ அதே ஆயுதங்கள் இன்று திமுக விற்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன.
பாடல் கேட்க நல்லாகத்தான் இருக்கு. நீங்களும் ஒருமுறை கேட்டுப் பாருங்களேன்.
மூக்கணாங்கயிறுகளை
"மூக்கணாங்கயிறுகளை மாற்றுவதால் மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது. அந்நியர்கள் யார் எம்மை ஆண்டாலும் நாம் அடிமைகள்தான்" - வியட்நாம் தலைவர் ஹோ சிமின்
ஜனாதிபதிகள் மாறுவதால் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
ஒரு கோடி ரூபாய்
ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்தாலும் கழுதை அதை ஒரே நாளில் தின்று தீர்த்துவிடும்.
அந்தப் பணத்தில் ஒரு டன் பேப்பர் வாங்கி ஆறு மாதத்திற்கு திங்கலாம் என்பது அந்த கழுதைக்கு தெரியாது.
அதுபோலத்தான் போராட்டம் என்றால் என்னவென்று தெரியாத நபர், சிங்கள தலைமைகளுடன் சேர்ந்து மருத்துவ மாபியாக்களை ஒழிக்கப்போவதாக கூறுவது.
இருவரும் ஈழத் தமிழர்கள்
இருவரும் ஈழத் தமிழர்கள். இருவரும் ஈழத் தமிழர் விடுதலைக்காக இயக்கம் நடத்தியவர்கள்.
ஒருவர் அண்மையில் மரணமடைந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன். இன்னொருவர் அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன்.
மகேஸ்வரன் லண்டனில் தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்து போராடினார்.
பகிரதன் மதுரை மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டே இயக்கம் நடத்தினார்.
பகிரதன் தன் படிப்பை நிறுத்தவில்லை. ஆனால் அவரது இயக்கத்திற்கு பல இளைஞர்களை படிப்பை பாதியில் நிறுத்தி அனுப்பி வைத்தார் மாவை சேனாதிராசா.
இப் பதிவில் மகேஸ்வரனையும் பகிரதனையும் ஒப்பிடுவதற்கு காரணம் இருவரது இயக்கத்தின் பெயரும் ஒன்றாக இருந்தது.
மகேஸ்வரன் தனது இயக்கத்திற்கு ஆரம்பத்தில் TENA என்றே பெயர் வைத்திருந்தார்.
இதுதெரியாமல் பகிரதன் தனது இயக்கத்திற்கு TENA என்று பெயர் வைத்தார்.
இதனால் மகேஸ்வரன் பின்னர் தனது இயக்கத்தின் பெயரை TEA என்று வைத்துக் கொண்டார்.
மகேஸ்வரன் தனது இயக்கத்தின் வரலாற்றை பதிவு செய்யாமல் மறைந்துவிட்டது உண்மையில் பேரிழப்பாகும்.
1983 யூலை படுகொலைகளுக்கு
• 1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள் காரணமா?
முதலாவது, 1983ல் நடந்தது இனக் கலவரம் என்கிறார்கள். அது தவறு. அது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை
இரண்டாவது, 1983ல் நடந்த கொலைகளுக்கு புலிகளே காரணம் என்கிறார்கள். புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 13 ராணுவத்தினர் இறந்தமையினால் இது நிகழ்ந்தது என்கிறார்கள்.
இதுவும் தவறு. ஏனெனில்,
(அ)1956, 1966, 1977 ம் ஆணடு;களில்கூட கலவரம் என்னும் பெயரில் தமிழ் இனப்படுகொலைகள் நடந்தன. அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லை. எந்த ராணுவத்தினரும் கொல்லப்படவில்லை.
(ஆ)1983 யூலைக்கு முன்னரும் பல பொலிசார் மற்றும் ராணுவத்தினர் புலிகள் இயக்கத்தாலும் வேறு இயக்கங்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
(இ)அதற்கு முன்னர் 13 ராணுவத்தினர் ஒரேயடியாக கொல்லப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியென்றால் பின்னர் ஆயிரக் கணக்கில் ராணுவத்தினர் கொல்லப்ட்டார்களே. அப்போது ஏன் கலவரம் வெடிக்கவில்லை?
•1983 யூலை இனக் கலவரம் எமக்கு கற்று தரும் பாடம் என்ன?
எமக்கு பல பாடங்களை அது கற்று தந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது 1983ற்கு பின்னர் இனக் கலவரம் நடக்கவில்லை. ஏனெனில் தமிழ் போராளிகள் கையில் ஆயுதம் இருந்ததே.
இனியும் கலவரம் வந்தால் மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு ஏந்தினால் அது முன்பைவிட பயங்கரமாக இருக்கும் என்பதையும் அது புரிந்துள்ளது
அண்மையில் எனது முகநூல்
அண்மையில் எனது முகநூல் நண்பர் ஒருவர் ஆசிரியர் சிவபாதசுந்தரம் அவர்களை நினைவு கூர்ந்து பதிவு ஒன்று இட்டிருந்தார்.
அதை படித்ததும் எனக்கு ஆசிரியர் சிவபாதசுந்தரம் அவர்களுடனான சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.
ஆசிரியர் சிவபாதசுந்தரம் அவர்கள் காட்லிக்கல்லூரியல் படிப்பித்துக்கொண்டிருந்தவேளை அவரிடம் விஞானப்பாடம் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது.
ஒருநாள் அவர் மனித இனம் தோன்றிய கூர்ப்பு விதி பற்றி படிப்பித்துக்கொண்டிருந்தார்.
நான் எழுந்து “விஞ்ஞான பாடத்தில் மனிதன் தோன்றியதற்கு கூர்ப்பு விதி கூறுகின்றீர்கள். சமய பாடத்தில் மனிதனை கடவுள் படைத்தார் என்று கூறப்படுகிறது. இதில் எது சரி?”எனக் கேட்டேன்.
அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தச்சந்தோப்பு பிள்ளையார் கோவிலில் வணங்கிவிட்டே பாடசாலைக்கு வருவார். இதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
இதனால்தான் நான் கேட்கிறேன் என்பதைப் புரிந்தகொண்ட அவர் சிரித்துவிட்டு “பரீட்சையில் இந்த கேள்வி வந்தால் மேலே பாரு. அது சமயபாட வினாத்தாளாக இருந்தால் கடவுள் படைத்தார் என்று எழுது. விஞ்ஞானபாட வினாத்தாளாக இருந்தால் கூர்ப்பு விதியை எழுது” என்றார்.
சரி. நான் விடயத்திற்கு வருகிறேன். பூமி உருண்டை என்பதை விஞ்ஞானி கலிலியோதான் கண்டு பிடித்ததாக கூறுகின்றனர்.
ஆனால் அதற்கு முன்னரே ஸ்ரீ வராகப் பெருமாள் பூமியை சுமக்கும் சிற்பம் உள்ளது. அதில் பூமி உருண்டையாக உள்ளது.
அப்படியென்றால் பூமி உருண்டை என்பது கலிலியோவுக்கு முன்னரே இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதா?
அல்லது அந்த சிற்பத்தில் இருக்கும் உருண்டை பூமியைக் குறிக்கவில்லையா?
யாராவது தெரிந்தவர்கள் பதில் பிளீஸ்
ஆழ்ந்த இரங்கல்கள்
ஆழ்ந்த இரங்கல்கள்
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் தனது 81வது வயதில் இன்று காலமானார்.
இனவாதம் பேசி பதவிகளைப் பெற்ற சிங்கள இடதுசாரி தலைவர்கள் மத்தியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இறுதிவரை ஆதரித்த ஒரு தலைவர்.
அவருக்கு எமது அஞ்சலிகள்.
ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர் - "யோவ் நீலகண்ட சாஸ்திரி! நான்தான் சுமந்து சென்றேன் என்று உங்கிட்ட சொன்னேனா? எதுக்கு வீணாய் என்னை கோர்த்து விடுற?"😂
குறிப்பு – மதம் அறிவியலுக்கு எதிரானது. அதுவும் சங்கிகள் மனித குலத்திற்கே எதிரானவர்கள்.
முன்னாள் போராளிகளின்
முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இவை இயற்கையாக நிகழுகின்றனவா அல்லது பின்னணியில் ஏதும் சதி நடந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை தருகின்றன.
புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் இவ் முன்னாள் போராளிகளின் மரணங்களுக்கு அரசே பொறுப்பு கூறவேண்டும்.
1983 இனப்படுகொலைகளுக்காக
1983 இனப்படுகொலைகளுக்காக சிங்கள அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
சிங்கள அரசு இவ்வாறு மன்னிப்பு கோரும் நிலை வரும் என யாராவது 1983ல் கூறியிருந்தால் எவரும் நம்பியிருக்கமாட்டார்கள்.
சிங்கள அரசு இவ்வாறு மன்னிப்பு கோருவதற்கு முக்கிய காரணம் 1983 இனப்படுகொலைகளை தமிழ் மக்கள் மறக்கவில்லை.
அவ் இனப்படுகொலைகளுக்கு நீதிகோரி ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
ஆனால் இவ் இனப்படுகொலைகளுக்கு வெறும் மன்னிப்பு மட்டும் போதாது.
விசாரணை செய்து இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்க வேண்டும்.
முக்கியமாக இனி இவ்வாறான இனப்படுகொலைகள் நிகழா வண்ணம் உறுதி செய்ய வேண்டும்.
அதுவரை தமிழ் மக்கள் நீதி கோரி நினைவு கூர்வதை நிறுத்தக் கூடாது.
கனடாவில் 3 லட்சம்
கனடாவில் 3 லட்சம் தமிழர் மட்டுமே உள்ளனர். கனடா அரசு “இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்பட வேண்டும் " என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் உள்ளனர். ஆனால் இந்திய அரசு இது பற்றி எதுவுமே கூறுவதில்லை.
மாறாக, தமிழினப்படுகொலை செய்துவரும் சிங்கள அரசுக்கு உதவி வருகிறது. ஐ.நா வில் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.
இது குறித்து இந்திய அரசிடம் தட்டிக் கேட்க வேண்டிய உரிமையும் பொறுப்பும் தமிழக முதல்வருக்கு உண்டு.
ஆனால் திராவிட முதல்வர் மௌனமாக இருக்கிறார். அது ஏன்? ஈழத் தமிழருக்கு உதவுவோம் என தேர்தலில் கொடுத்த வாக்குறுதி எல்லாம் பொய்யா?
கைக்கெட்டும் தூரத்தில் எட்டுக்கோடி தமிழர் இருந்தும் தமிழர்களை கொல்லும் தைரியம் ஒன்றரைக் கோடி சிங்களவர்களின் அரசுக்கு எப்படி வந்தது?
எனக்கு ஒரு கனவு
எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
புத்தர் பெருமான் மீண்டும் பிறக்க வேண்டும்.
அதுவும் தமிழனாக ஈழத்தில் பிறக்க வேண்டும்.
அவர் தமிழன் என்பதற்காக கண்கள் பிடுங்கப்பட்டு அவர் சிலையின் கீழ் போடப்பட வேண்டும்.
அவர் தமிழன் என்பதற்காக ஆடைகள் உரியப்பட்டு நிர்வாணமாக வீதியில் ஓடவிடப்பட வேண்டும்.
இறுதியாக அவர் தமிழன் என்பதற்காக எரியும் தார்ப்பீப்பாவினுள் வீசி எறியப்பட்டு கொல்லப்பட வேண்டும்.
அப்போது புத்தர் என்ன போதனை செய்வார் என்பதை அருகில் இருந்து கேட்க வேண்டும்.
“காயங்களோடு சிரிப்பது எளிதல்ல. அப்படி சிரிக்க தொடங்கிவிட்டால் எந்த காயமும் பெரிதல்ல” – புத்தர்
கொன்று புதைத்தால்
"கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர். வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர் " - செர பண்டாயி
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது.
”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்ணிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு.
தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை.
1972.07.28 ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம்.
தோழர் சாருவை கொலை செய்வதன் மூலம் புரட்சியாளர்களான நக்சலைட்டுகளை ஒழித்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது.
நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக மேலும் 7 பட்டாலியன்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.
எத்தனை பட்டாலியன்களை உருவாக்கி எத்தனை பேரை சுட்டுக் கொன்றாலும் நக்சலைட்டுகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது.
சொந்த மக்களை கொல்வதற்காக மேலும் மேலும் படைகளை உருவாக்கும் ஜனநாயகநாடு(?) உலகில் இந்தியா மட்டுமே.
நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்திய அரசோ நக்சலைட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது யுத்தம் நடத்துகிறது.
ஏழை மக்களின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்க மறுக்கும் இந்திய அரசு, அந்த ஏழை மக்களை ஒழிப்பதற்காக படைகளை உருவாக்க பணம் ஒதுக்கிறது .
இந்த அநியாயத்தை இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்?
இந்த அவலத்திற்கு எப்போது இந்திய மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள்?
ஓடுவதாக இருந்தால்
ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள்
நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்
பதுங்குவதாக இருந்தால் பாய்வதற்காக பதுங்குங்கள்
ஆனால் ஒருபோதும் அடிமையாகவே வீழ்ந்து கிடந்துவிடாதீர்கள்
(இன்று சர்வதேச புலிகள் தினம்.)
ராயன்
• ராயன்
கதை என்ன என்பதை ஆரம்பத்திலேயே ஊகித்துக்கொள்ள முடிகிறது.
ஆனாலும் இறுதிவரை படம் விறுவிறுப்பாக நகர்ந்து செல்கின்றது.
ஒரு அண்ணனும் தங்கையும் சேர்ந்து தம் இரு சகோதரர்களை குத்திக் கொல்கின்றனர்.
அதை மக்களும் ரசித்து பார்க்கின்றனர். இந்த ரசனையைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
குறிப்பு – கீழே உள்ள படத்திற்கும் என் பதிவிற்கும் சம்பந்தம் இல்லை.😂
காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழர் பிரச்சனை இன்னும் தீர்கப்படவில்லை என்பதை சர்வதேசம் தெரிந்துகொள்வதற்கு இவர்களின் தொடர்ச்சியான போராட்டம் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆனால் இவர்களுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறி எம்.பி யானவர்கள் இவர்களை மறந்துவிட்டார்கள்.
என்றுதான் இவர்களுக்கு தீர்வு கிடைக்கும்?
நாம் எமது வாழ்வில்
நாம் எமது வாழ்வில் விரும்பியளவு பணத்தை சம்பாதித்துவிட முடியும்.
நாம் எம் வாழ்வில் விரும்பியளவு கல்வி கற்றுவிட முடியும்.
ஆனால் விரும்பியளவு நண்பர்களை இலகுவில் நாம் பெற்றுவிட முடியாது.
இனிய நண்பர்கள் அனைவருக்கும் “வாழ்த்துகள்”
உடல் ஊனமுற்றவர்கள்
உடல் ஊனமுற்றவர்கள் என குறிப்பிட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் இப்போது மாற்று திறனாளிகள் என குறிப்பிட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.
உண்மைதான். இவர்களுக்கு ஏதேனும் ஒரு ஊனம் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மாற்று திறமைகள் பல உண்டு.
அவர்கள் சமூகத்தில் எதிர்பார்ப்பது இரக்கமோ அல்லது சலுகையோ அல்ல. தமது திறமைக்கான வாய்ப்பு.
கடந்த வருடம் ஜீ டிவி சரிகமப நிகழ்வில் ஒரு கண் தெரியாதவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அவர் அந்த நிகழ்வில் முதற் பரிசு பெற்றார். பெற்ற புகழ் மூலம் தனது தாய்க்கு ஒரு புது வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக மாற்று திறனாளிகளுக்கான இசைப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
உண்மையில் இது ஒரு நல்ல முயற்சி. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ரணில் மகிந்தாவை
ரணில் மகிந்தாவை தண்டிக்கவில்லை. மாறாக காப்பாற்றி வருகிறார்.
சஜித் மகிந்தாவை தண்டிப்பேன் என இதுவரை கூறவில்லை.
ஆனால் அனுர மட்டுமே தான் ஆட்சிக்கு வந்தால் மகிந்தவை கைது செய்து சிறையில் அடைப்பேன் என்கிறார்.
மகிந்த கும்பல் சுருட்டிய மக்கள் பணத்தை மீட்பேன் என்கிறார்.
அவர் இதை செய்கிறாரோ இல்லையோ குறைந்த பட்சம் நடவடிக்கை எடுப்பேன் என்றாவது தைரியமாக கூறுகிறார்.
இரண்டாம் துட்ட கைமுனு என புகழப்பட்டவர் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார்.
அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படும் நிலையும் வரும்.
காலம் அற்புதமானது.
காலில் மிதிபடும்
காலில் மிதிபடும் புழுகூட எப்படி துடித்து எழுகிறது? ஏனெனில் அதற்கு யாரும் “நீ புழுதானே. நீ துடித்து எழுக்கூடாது” என்று போதிப்பதில்லை
பட்ட அறுகம்புல்கூட சிறு துளி நீர் கண்டதும் எப்படி துளிர்த்து எழுகிறது? ஏனெனில் அதனிடம் யாரும் “நீ பட்டுப் போய்விட்டாய். எனவே இனி உன்னால் துளிர்க்க முடியாது” என்று கூறுவதில்லை.
ஆனால் தமிழன் மட்டும் மீண்டும் எழுவேன் என்றதும் ஓடி வந்து சிலர் “ இதுவரை எழுந்து நின்று அழிந்தது போதாதா?” என்று கேட்கின்றனர்.
இன்னும் சிலர் “இந்தியாவை மீறி தமிழனால் ஒருபோதும் எழ முடியாது” என்கிறார்கள்.
அப்படியென்றால், 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது?
100 வருடம் ஆண்ட ஒல்லாந்தருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது?
150 வருடம் ஆண்ட ஆங்கிலேயருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது?
இப்படி காலம் பூராவும் வீழ்ந்த போதெல்லாம் எப்படி தமிழனால் எழுந்து நிற்க முடிந்தது?
ஏனெனில், அப்போது சொகுசுமாளிகையில் இருந்துகொண்டு அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என் கூறும் தலைவர் இருக்கவில்லை
அப்போது இந்தியா தீர்வு பெற்று தரும் எனக் கூறி கடிதம் எழுதும் தலைவர்கள் இருக்கவில்லை
அப்போது அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டும் புலம்பெயர் அமைப்புகள் இருக்கவில்லை.
அதனால்தான் அப்போது தமிழனால் எழுந்து நிற்க முடிந்தது.
எனவே மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்றால், "தமிழா நீ வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரன். இப்படி அடிமையாக வீழ்ந்து கிடக்கலாமா?” என கேட்கும் ஒரு தலைவர் தேவை.
மக்கள் போராட்ட முன்னணி
மக்கள் போராட்ட முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி மக்கள் போராட்ட முன்னணி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தலுக்கு பின்னரும் இக் கொள்கையை சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் உறுதி அளித்துள்ளனர்.
சோசலிசக்கட்சியின் சிறீதுங்க அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பல வருடங்களாக ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர்.
ஆனால் அவரால் இக் கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஆதரவைத் திரட்ட முடியவில்லை.
ஜேவிபி யின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரா அவர்கள் தமிழ் மக்களுக்கு சம உரிமை உண்டு என்று கூறிவருகிறாரேயொழிய தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அரகலய போராட்டத்தை ஒன்று சேர்ந்து முன்னெடுத்த இவர்களால் தற்போது ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
இவர்கள் பிரிந்து நின்று போட்டியிடுவது சஜித் , ரணில் போன்றவர்களுக்கே உதவிகரமாக அமைகிறது.