Sunday, January 18, 2015

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்குமா?


• எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்குமா?
1983 ல் எம்.ஜி.ஆர் அனைத்து இயக்க பிரதிநிதிகளையும் கோட்டையில் சந்தித்தார். அப்போது அவர் புளட் இயக்க ஆதரவாளராக இருந்தமையினால் எல்லா இயக்கங்களையும் புளட் இயக்கத்தில் சேரும்படி ஆலோசனை கூறினார். அவருடைய ஆலோசனையை ஒரு இயக்கமும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது பாலஸ்தீன விடுதலை அமைப்பு போல் எல்லா இயக்கமும் ஒரு குடையின் கீழ் வருவதாகவும் அதனை இந்திய அரசு அங்கீகரிக்க அவர் வழி செய்ய வேண்டும் எனவும் இயக்கங்களின் சார்பில் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் அதில் விருப்பம் காட்டவில்லை.
பாலஸ்தீன விடுதலை அமைப்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியாவில் தூதர அந்தஸ்தும் அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் கிண்டியில் அவர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவியும் வழங்கப்பட்டு வந்தது. அதனை சுட்டிக்காட்டி அதேபோல் ஈழவிடுதலை இயக்கங்களும் தமிழ்நாட்டில் வெளிப்படையாக இயங்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இயக்கங்களின் சார்பில் கோரப்பட்டது. அதற்கு எம்.ஜி.ஆர் மட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியும் ஆதரவு வழங்கவில்லை.
1983ற்கு முன்னர் தமிழீழத்திற்கு ஆதரவு தரும்படி தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் எம்.ஜி.ஆரிடம் கோரிய போது தனக்கு சிங்கள மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் இருப்பதால் தன்னால் ஆதரவு தரமுடியாது என்றார். பின்னர் கலைஞர் இவரை “மலையாளி” என்று விமர்சிப்பதற்கு அஞ்சியே போராளிகளை ஆதரிக்க முன்வந்தார். ஆரம்பத்தில் புளட் இயக்கத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர் பின்னர் கலைஞர் கொடுத்த பணத்தை புலிகள் இயக்கம் வாங்காதபடியால் அவர்களுக்கு பணம் கொடுத்தார்.
எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வெளிப்படையாக தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடியும் இரகசியமாக சுமார் 40 கோடி ரூபாவும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த 40 கோடி ரூபா (சாராய) உடையாரினால் வழங்கப்பட்ட லஞ்சப் பணம் என்றும் அறிய வருகிறது.
எம்.ஜி.ஆரும் கலைஞர் கருணாநிதியும் தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஈழவிடுதலை இயக்கங்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்தையும் பயன்படுத்தினார்களேயொழிய அவர்கள் ஒருபோதும் இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என விரும்பவில்லை.
எம்.ஜி.ஆரோ அல்லது கலைஞரோ ஈழவிடுதலை இயக்கங்களை இந்திய அரசு அங்கீகரித்து தமிழ்நாட்டில் சுதந்திரமாக இயங்க வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் சகோதரப் படுகொலைகளினால் இயக்கங்கள் அழிந்திருக்காது. முள்ளிவாய்க்கால் அவலமும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தாலும் தமிழீழம் மலர்வதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்காது என்பதே உண்மையாகும்.

No comments:

Post a Comment