Thursday, March 26, 2015

சிறப்புமுகாமில் பாலியல் வல்லுறவு கொடுமைகள்

சிறப்புமுகாமில் பாலியல் வல்லுறவு கொடுமைகள்

சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிப்  பெண்களை தமிழக அதிகாரிகள் பாலியல் வல்லுறவு செய்கின்றனர் என்பது பலருக்கு ஆச்சரியமான ஒரு செய்தியாக இருக்கும். பெண்களை தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில், தமிழ் பெண்களை அதுவும் தமிழ்நாட்டை நம்பி வந்த அகதி தமிழ்ப் பெண்களை தமிழக காவல்துறை அதிகாரிகளால் இவ்வாறு செய்ய முடியுமா என்பதே அவர்கள் ஆச்சரியப்படுவதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் கடந்தகால வரலாறுகளை நன்கு அறிந்தவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியமூட்டும் செய்தியாக ஒருபோதும் இருக்காது. ஏனெனில் இதே தமிழக காவல்துறையினர்தான் சிதம்பரம் காவல் நிலையத்தில் பத்மினி என்ற பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அந்த அப்பாவிப் பெண்ணை கொலையும் செய்தார்கள். ஆனால் இது தற்கொலை மரணம் என காவல்துறை உயர் அதிகாரிகளால் மூடி மறைக்க முயன்றபோது  மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துமுகமாக தோழர் லெனின் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப்படையினர் அந்த காவல் நிலையத்தை குண்டு வைத்து தகர்த்தனர். அவ்வாறு குண்டு வைத்தவர்களை தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி ஆயுள்தண்டனை வழங்கியிருக்கும் தமிழ்நாடு அரசும் அதன் நீதித்துறையும் அந்த அப்பாவி பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தமைக்காக ஒரு காவல்துறை அதிகாரியையும் இதுவரை தண்டிக்கவில்லை.

இதுமட்டுமல்ல, வாசாத்தியில் சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடுவதாக சென்ற  தமிழக காவல்துறையினர் பல நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர். இது தொடர்பாக பல மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் வேறு வழியின்றி நீதிமன்றம் 60 காவல்துறையினரை பல வருடங்களின் பின்னர் தண்டித்தது. அந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழ்நாடு அரசு எந்தவித நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வாறு தமது சொந்த மக்களையே பாலியல் வல்லுறவு செய்யும் தமிழக காவல்துறையினர் அகதியாக வந்த, கேட்பதற்கு யாருமேயற்ற அனாதைகளான, அந்த அப்பாவி ஈழப் பெண்களை விட்டுவைப்பார்களா? தமிழக பொலிசார் தமிழக மக்கள் மீது பாலியல் வல்லுறவு செய்வதையே கண்டு கொள்ளாத தமிழக அரசு, ஈழத் தமிழ் அகதிப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும்போது கண்டு கொள்ளுமா என்ன? காவல்துறை மட்டுமா பாலியல் துஸ்பிரயோகம் செய்தது? காவல்துறையை கண்டிக்க வேண்டிய நிர்வாகத்துறை அதிகாரிகளுமல்லவா பாலியல் சேட்டைகள் புரிந்தனர். காவல்துறை , நிர்வாக துறை, நீதிமன்றம் எல்லாம் சேர்ந்து ஒரு தவறை செய்யும்போது அதற்கு எதிராக அதுவும் அகதியாக வந்தவர்களால் என்னதான் செய்யமுடியும்?

இங்கு வேடிக்கை என்னவெனில் சிங்கள ராணுவம் இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்வதாக கணணீர் விடும் தமிழக அரசியல்வாதிகள்,  தமது மண்ணில் தமது கண் முன்னே தமிழக அதிகாரிகளால் அகதிப் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது குறித்து கண்ணீர் விடுவது கிடையாது. ஒரு கண்டனம்கூட தெரிவிப்பதும் கிடையாது. இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழக அதிகாரிகளால் அகதிப்பெண்கள் பலியாவதை தடுக்க முடியாதவர்கள் ஈழத்தில் சிங்கள ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ்; பெண்களுக்காக குரல் கொடுப்பதாக கூறுவது வேடிக்கை மட்டுமல்ல கொடுமையான வேதனையும்கூட.

சிலர் தங்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்போம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இவை யாவும் ஏதோ இரகசியமாக நடந்த அல்லது நடக்கும் விடயங்கள் அல்ல. பாதிக்கப்ட்டவர்கள் இவற்றை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களில் எழுத்து மூலமான வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். சர்வதேச மன்னிப்புசபை போன்ற அமைப்புகளுக்குகூட தெரியப்படுத்தியுள்ளார்கள். ஆனால் யாருமே கண்டு கொள்ளவுமில்லை. எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவுமில்லை. இதுதான் இந்த அகதிகளின் துர்ப்பாக்கிய நிலையாகும்.




துறையூர் சிறப்புமுகாமில் நடந்த பாலியல் வல்லுறவுகள்

1992களில் ஜெயா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் பல ஈழத்து அகதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறான கொடிய சிறப்பு முகாம்களில் ஒன்றாக துறையூரில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமும் விளங்கியது. இவ் துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிவா என்ற விடுதலைப் புலி போராளி 17.10.1994யன்று கரூர் நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் துறையூர் சிறப்புமுகாமில் காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவு நிகழ்வுகளையும் கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தில் கூறப்பட்ட சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

“24-7-92 முதல் நான் துறையூரில் உள்ள சிறப்பு அகதிகள் முதாமில் அடைக்கப்பட்டிருக்கிறேன். சிறப்புமுகாம் என்னும் பெயரில் சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாமாகவே இது இருக்கின்றது. ஏனெனில் சிறையில் கைதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சொற்ப சலுகைகள் கூட இச் சிறப்புமுகாமில் எமக்கு மறுக்கப்படுகிறது. தமிழக அரசால் நடத்தப்படும் இச் சிறப்பு முகாம்கள் என்பது ஈழத் தமிழ் அகதிகளை கொடுமைப்படுத்தும் சித்திரவதை முகாம்கள் என்பது அனைவருக்கும் தெரியும். துறையூர் சிறப்புமுகாமில் கணவன், மனைவி பிள்ளைகளை பிரித்து ஷெல்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். கணவன் தனது மனைவி பிள்ளைகளுடன் பேசுவதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. தனியாக வைக்கப்பட்டிருக்கும் இப் பெண்களை இரவு நேரங்களில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி மருத்துவமனைக்கு என வெளியே கூட்டிச் சென்று ~~லாட்ஜில்|| வைத்து பாலியல் பலாத்காரம் நிகழ்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்களே உயர் அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறுவர்களை பாடசாலை சென்று படிக்க அனுமதிப்பதில்லை. உறவினர்கள் பார்வையிட வந்தால் அனுமதிப்பதில்லை. கடந்த இரு வருடங்களாக இத்தகைய சிறப்புமுகாமில் போதிய வெளிச்சம் இன்றிய ஒரு சிறிய ~~ஷெல்|| இல் 24 மணிநேரமும் பூட்டியே என்னை வைத்திருக்கின்றனர். உள்ளேயே குளிக்க வேண்டும். மல சலம் கழிக்க வேண்டும் உள்ளேயே சாப்பிட வேண்டும். இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருப்பதுடன் எவ்வித பொழுது போக்கு வசதியும் செய்து தரப்படாதது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் எனக்கு மிகுந்க வேதனையைக் கொடுக்கின்றது. முகாமில் இருக்கும் மற்ற அகதிகளுடன் பேசுவதற்குக் கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இங்கு நடக்கும் இக் கொடுமைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டோம்;. எமக்கு நியாயம் வழங்குமாறு கோரி தொடர்ந்து 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். எமக்கு இழைக்கப்படும் இக் கொடுமைகளை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமர், முதலமைச்சர், உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சித் தலைவர், ஆகியோருக்கு தமிழ்நாடு இளைஞர் பேரவை, மக்கள் உரிமைக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் தந்தி கொடுத்துள்ளனர். ஆனால் எவ்வித பயனும் இல்லை. மாறாக எனது மனைவி பிள்ளைகளின் படங்கள் பறித்துக் கிழிக்கப்பட்டன. எனது உடுப்புகள் செருப்புகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இது குறித்து நியாயம் கேட்டால் இங்குள்ள பொலீஸ் அதிகாரிகள் எங்களைப் பார்த்து, “தேவடியா மகனே, மயிராண்டி சிங்களவனுக்குப் பிறந்தவனே” என்று சர்வ சாதாரணமாக ஏசுவார்கள். ஏன் எங்கள் தாயை அசிங்கப் படுத்துகிறீர்கள் என்று கேட்டால் அடி உதை விழும். இவ்வாறுதான் 21-12-1993 அன்று உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் வெறிபிடித்த பொலீசார் கும்பலாக சேர்ந்து என்னைத் தாக்கியதில்; என் கால் முறிந்தது. என்னை மட்டுமல்ல அன்று முகாமில் பலரை இவ்வாறு அடித்து துன்புறுத்தினார்கள். அவர்கள் எவ்வாறு சித்திரவதை செய்தனர் என்பதை கூறுவதற்கு என் நாக்கு கூசுகின்றது. அந்தளவு கேவலமாக கொடுமை செய்தனர். கால் முறிந்து நடக்க முடியாமல் நான் வேதனைப்பட்ட போதும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றால் தமது அராஜகம் வெளி உலகத்திற்கு தெரிந்து விடும் என்ற பயத்தில் ஈவு இரக்கமின்றி அப்படியே கிடக்க விட்டனர். இன்றும் கூட என் கால்கள் அடிக்கடி வலிக்கின்றது.”

மேற்கண்டவாறு போராளி சிவா அவர்கள் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தும்கூட கரூர் நீதிமன்றமானது இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் மட்டுமல்ல அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயா அம்மையார் கூட தான் ஒரு பெண்ணாக இருந்தும்கூட தனது ஆட்சியில் ஒரு அகதிப் பெண்ணுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சிறப்புமுகாமில்  ரீட்டா என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை  

துறையூர் சிறப்புமுகாமில் 1993 ஆண்டில் “ரீட்டா” என்ற  ஒரு இளம் பெண் அடைக்கப்பட்டிருந்தார். இவர் இலங்கையில் மன்னார்  பகுதியைச் சேர்ந்தவர். இந்த பெண்ணை துறையூர் சிறப்புமுகாம் காவல்துறை அதிகாரிகள் இரவில் மருத்துவமனைக்கு என்று அழைத்து சென்று விடுதிகளில் வைத்து பாலியல் வல்லுறவுகள் மேற்கொண்டனர். இவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்தார். ஆனால் யாருமே கண்டு கொள்ளவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்டவில்லை. வேறுவழியின்றி அந்த அப்பாவி பெண் இக் கொடுமைகளை சகித்து கொண்டார். ஆனால் அப்போது துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சில “புளட்” அமைப்பு போராளிகள்; இந்த பெண்ணால் தமக்கு அவமானம் எனக் கருதினார்கள். அவர்கள் தாம் விடுதலை பெற்று இலங்கைக்கு திரும்பும்போது தம்முடன்  இந்த பெண்ணையும் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் இந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி அழைத்து சென்று வவுனியாவில் வைத்து கொலை செய்துவிட்டார்கள்.

காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை நிர்ப்பந்தித்து பாலியல் வல்லுறவு மேற்கொண்டமைக்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளையே “புளட்” அமைப்பினர் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள்   அந்த அப்பாவி பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்று வவுனியா காட்டில் கொலை செய்தது மிகவும் கொடுமையானது. தங்களின் செயலால் ஒரு அப்பாவிப் பெண் கொல்லப்பட்டுவிட்டாள் என்பதை தெரிந்த பின்னரும்கூட சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் திருந்தவில்லை. தமது தவறுக்காக மனம் வருந்த வில்லை. மாறாக தொடர்ந்தும் தமது கொடுமைகளை அகதிப் பெண்கள் மீது இழைத்தனர்.  இதுவரை இந்த அதிகாரிகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவும் இல்லை. தமிழக அரசாலோ அல்லது தமிழக அரசியல் தலைவர்களாலோ கண்டிக்கபடவும் இல்லை என்பது மிகவும் துரதிருஸ்டவசமானது.

நிர்வாகத்துறை அதிகாரியினால் இழைக்கப்பட்ட கொடுமை

ஈழஅகதிப் பெண்களை காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல நிர்வாக துறை அதிகாரிகளும் பாலியல் வல்லுறவு செய்த சம்பவங்கள் ஏராளம். இந்த கொடுமைகளை சுட்டிக்காட்டி  கேட்ட நபர்களை சிறப்பு முகாமில் அடைத்த கொடுமையை என்னவென்று அழைப்பது? கரூர் அகதிமுகாமில் கந்தையா என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் இலங்கையில் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். இவரை “ஈழத்து பாரதி” என்று இலங்கையில் அழைப்பார்கள். இவர் தமிழீழம் குறித்து பல உணர்ச்சிக் கவிதைகளை பாடியுள்ளார். அதனால் இவரை இலங்கை ராணுவம் கொலை வெறியோடு தேடியது. இலங்கை ராணுவத்திற்கு அஞ்சி இந்தியா சென்ற கவிஞர் கந்தையா கரூர் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு அப்போது 80 வயது.

கரூர் அகதிமுகாம் பொறுப்பாளரான தாசில்தார் ஒருவர் அகதி பெண் ஒருவரை அழைத்து சென்று லாட்ஜில் வைத்து பாலியல் உறவு மேற்கொண்டுள்ளார். இதை அறிந்த கவிஞர் கந்தையா அடுத்தநாள் தாசில்தாரிடம் “தேன் நிலவு எப்படி இருந்தது?” என்று கிண்டலாக கேட்டிருக்கிறார். ஒரு அகதி தன்னைப் பார்த்து கேட்பதா என  ஆத்திரம் கொண்ட தாசில்தார் கியூ பிரிவு பொலிசாரிடம் சொல்லி இவரை புலி என முத்திரை குத்தி வேலூர் சிறப்புமுகாமில் அடைத்துவிட்டார். ஒரு 80 வயது பெரியவர் தன் இனப் பெண்ணை  அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு தாசில்தார் பாலியல் வல்லுறவு செய்வதை தட்டிக் கேட்டதற்காக புலி என்று சிறப்புமுகாமில் அடைத்தால் அதன் பின் யாருக்குத்தான் இத்தகைய தவறுகளை தட்டிக் கேட்க துணிவு வரும்? ஒரு தாசில்தாரின் பாலியல் தவறை தட்டிக் கேட்டமைக்காக அவரை புலி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமில் அடைக்க ஒரு அரசு இடங்கொடுக்கிறதாயின் அந்த தமிழக அரசின் கீழ் அகதிகளின் பாதுகாப்பிற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? காவல்துறை அதிகாரிகளின் தவறை கண்டிக்க வேண்டிய நிர்வாக துiறை அதிகாரியான தாசில்தாரே அகதிப் பெண்கள் மீது பாலியல் தவறு இழைத்தால் அப்புறம் அகதிப் பெண்களுக்கு யார்தான் பாதுகாப்பு?


வேலூர் சிறப்புமுகாமில் நடந்த கொடுமையும் காவல்துறை அதிகாரி வைகுந்தின் பெருமையும் 

முதன் முதலாக வேலூர் கோட்டையில்தான் சிறப்புமுகாம் அமைக்கப்பட்டது என்பது யாவரும் அறிவர். இதில் திப்புமகாலில் புலிப்போராளிகள் என 150 இளைஞர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதன் அருகில் இருந்த கைதர் மகாலில் குடும்பத்தவர்கள் 400பேர் அடைக்கப்பட்டிருந்தார்கள். இதில் கைதர் மகாலில் அடைக்கப்பட்டிருந்த பெண்கள் பகலில் முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு வெளியே செல்லும் பெண்களை வேலூர் ஆயுதப்படை பொலிசார் தமது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தினார்கள். இதையறிந்த திப்புமகாலில் இருந்த புலிகள் சிலர் இரண்டு மகால்களுக்கும் இடையில் உள்ள உள்பாதை ஒன்றை பயன்படுத்தி இரகசியமாக கைதர்மகால் சென்று அப் பெண்களை பலமாக அடித்து தண்டனை வழங்கினார்கள். அடுத்தநாள் இந்த செய்தி உயர் அதிகாரிகளுக்கு சென்றுவிட்டது. அவர்கள் அகதிப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் பொலிசாரைக் கண்டிப்பதற்கு பதிலாக புலிகள் வந்துசென்ற பாதையையை சீமெந்து ப+சி அடைத்துவிட்டார்கள். இதையே அப்போது பொலிஸ் உயர் அதிகாரியாக இருந்த வைகுந் அவர்கள் தான் எழுதிய “நான் சந்தித்த சவால்கள்” என்னும் புத்தகத்தில் புலிகள் தப்பிப்போக இருந்த பாதையை தாங்கள் அடைத்துவிட்டதாக பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார். புலிகள் ஏன் கைதர் மகாலுக்கு வந்தார்கள்? ஏன் அந்த பெண்களைத் தாக்கினார்கள் என்பதெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் அவர்கள் தப்பிப்போக இருந்தாக ஒரு உயர் அதிகாரியே பெருமையாக குறிப்பிடுகிறார் எனில் தமிழக காவல்துறையினர் ஈழஅகதிப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு குறித்து எத்தகைய மனோபாவம் கொண்டுள்ளனர் என்பதை இதன்மூலம் உணர முடிகிறது அல்லவா?


திருச்சியில் காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் பாதிக்கப்பட்ட அப்பாவி அகதிப்பெண்கள்

திருச்சியில் தங்கியிருந்த ஒரு அகதிப் பெண் தமது குடும்ப வருமானத்திற்காக  விமானம் மூலம் இலங்கை சென்று பொருட்கள் வாங்கி வந்து விற்று பிழைப்பு நடத்தினார். இவர் இலங்கையில் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர். இவருடைய கணவன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதால் தமது பிள்ளைகளுக்காக இந்த வியாபாரத்தை இவர் மேற்கொண்டார். இது சட்டரீயான ஒரு வியாபாரம் என்றாலும் விசா மற்றும் கிளியரன்ஸ் விடயங்களுக்காக அதிகாரிகளின் தயவு தேவைப்பட்டது. இதனைப் பயன்படுத்தி திருச்சி உளவுப்படை அதிகாரிகள் தமது தேவைகளை பூர்த்தி செய்தார்கள். வன்னி சென்று தமக்கு வேண்டிய தகவல்களை திரட்டி தருமாறும் இல்லையேல் வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என அந்த பெண்ணை மிரட்டினார்கள்.  இதனால் வேறுவழியின்றி அந்த பெண் வன்னி சென்று உளவு தகவல்களை திரட்ட சம்மதித்தார். இதையறிந்த புலிகள் இவர் வன்னி சென்றபோது கைது செய்து இரகசியமாக கொலை செய்துவிட்டார்கள். தாங்கள் அனுப்பிய பெண் கொலை செய்யப்பட்டுவிட்டாள் என்பதை அறிந்த பின்னரும்கூட சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் கொஞ்சம்கூட இரக்கப்படவில்லை. தம்மால் அந்த பெண்ணின் பிள்ளைகள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டனவே என்றுகூட அந்த அதிகாரிகள் கவலைப்படவில்லை.
;.
இதே  போன்று இந்த காவல்துறை அதிகாரிகளால் திருச்சியில் இன்னொரு பெண் குடும்பமாக சீரழிக்கப்பட்டார். திருச்சியில் கே.கே நகர் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி வசதியாக வாழ்ந்த அந்த குடும்பத்து பெண்ணை பாலியல்ரீதியாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக திருச்சி கியூ பிராஞ் உதவி கண்காணிப்பாளார் அப் பெண்ணின் கணவரை புலிகளுக்கு பெற்றோல் கடத்தினார் என்ற பொய்க் குற்றச்சாட்டில் துறையூர் சிறப்புமுகாமில் அடைத்தார். கணவரைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவும் அவரை சிறப்புமுகாமில் இருந்து விடுவிப்பதற்காகவும் அந்த பெண் வேறு வழியின்றி அந்த அதிகாரியின் பாலியல் இச்சைகளுக்கு சம்மதித்தார். இதை அறிந்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் தன்னுடனும் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என அந்த பெண்ணை வற்புறுத்தினார். அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட அந்த அதிகாரி உடனே அந்த பெண்ணை போதைப் பொருள் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்துவிட்டார். அந்த பெண் ஒருவாறு நீதிமன்றின் மூலம் ஜாமீனில் விடுதலையானதும் சிறைவாசலில் வைத்து மீண்டும் கைது செய்து மேலூர் சிறப்பு முகாமில் அடைத்து விட்டார்கள். இரு அதிகாரிகளின் காம வெறியால் ஒரு அகதிப் பெண் குடும்பமாக சீரழிக்கப்பட்டார். இதன்பின் எந்த பெண்ணிற்குத்தான்; அதிகாரிகளை எதிர்ப்பதற்கு துணிவு வரும்?




அகதிகளின் அண்மைக்கால போராட்டம்

திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சுபாஸ்கரன் என்ற நபரின் மாமியார் அண்மையில் இறந்துவிட்டார். தமிழகத்தில் அவருக்கு வேறு எந்த உறவினர்களும் இல்லாததால் அவரின் இறுதி சடங்கை சுபாஸ்கரன் தான் செய்ய வேண்டும். இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு சுபாஸ்கரன் அதிகாரிகளிடம் கெஞ்சினார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சிறைகளில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதிகள்கூட அவர்களின் உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கும் அவரது உறவினரின் மரண சடங்கிற்கு சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சிறப்புமுகாமில் ஒரு அகதிக்கு இத்தகையை அனுமதி மறுப்பது என்பது சட்ட விரோதம் மட்டுமல்ல சிறப்புமுகாம் என்பது சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாமாக இருக்கிறது என்பதையும் நன்கு காட்டுகிறது.

சிறப்புமுகாமில் தற்போது நபர் ஒருவருக்கு ஒருநாளைக்கு 70 ரூபாய் பணம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இந்த 70 ரூபாயில்தான் உணவு உட்பட அனைத்து செலவுகளும் செய்ய வேண்டும். இது போதாது என்பதால் தமக்கு வழங்கும் பணத்தை அதிகரித்து தரும்படி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் கடந்த இரண்டு வருடங்களாக கோரி வருகின்றனர். சிறப்புமுகாமை நிர்வகிக்கும் அதிகாரிகள்கூட வழங்கப்படும் இந்த பணம்  போதாது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இதனால் வேறு வழியின்றி சிறப்புமுகாம் அகதிகள் தமக்கு வழங்கும் பணத்தை அதிகரிக்குமாறு கோரி கடந்த 15.03.2015 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள். அவர்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசியல்வாதிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பத்திரிகைகள்கூட கண்டு கொள்ளவில்லை. மாடு வெட்டக்கூடாது என்று மாட்டின்மீது காட்டும் அக்கறைகூட இந்திய அரசு இந்த அகதிகள் மீது காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு மாட்டைவிடக் கேவலமாகவே ஈழஅகதிகள் தமிழ்நாட்டில் வைக்கப்பட்டுள்னர் என்பதே உண்மையாகும்.



No comments:

Post a Comment