•சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!
மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை நடந்துள்ளது.
நாகபட்டிணம் மாவட்டம் தரங்கம்பாடி ஓலக்குடியைச் சேர்ந்த காதலர்கள் குருமூர்த்தி மற்றும் சரண்யா சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டமையினால் சாதி வெறியர்களால் கொன்று தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு சாதி வெறிபிடித்த கொலையாளிகளை கைது செய்ய தயங்குவதாலும் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் சிறையை விட்டு வெளியே வரும்போது தியாகிகள் போல் வரவேற்கப்படுவதாலும் ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தேர்தலில் சாதி வோட்டுக்களுக்காக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. கொலையாளிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கிறது. சாதி சங்கங்களுடன் வெளிப்படையாகவே கூட்டு வைக்கிறது.
தமிழ் மக்கள் இன உணர்வு பெற்று அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே தமிழ் மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் இத்தகைய கொடுமைகளை உளவுத்துறை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உருவாகிறது.
தொடரும் ஆணவக்கொலைகள் அம்பேத்காரியம் மூலம் ஒழிக்க முடியாது என்பதை காட்டுகிறது. அதேபோல் பெரியாரியத்தின் போதாமையையும் எடுத்துக் காட்டுகிறது.
அம்பேத்காரியத்தையும் பெரியாரியத்தையும் உள்வாங்கி மாக்சிய பார்வையில் சாதீயத்தை ஒழிக்க தோழர் தமிழரசன் முன்வைத்த பாதையே அவசியம் என்பதை காட்டுகிறது.
தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பிற்காக முன்வைத்த மீன்சுருட்டி அறிக்கையை மக்கள் முன்வைத்து அதன் வழியில் மக்களை அணிதிரட்டுவதே தீர்வுக்கான வழியாகும்.
தமிழகம் போன்று ஈழத்திலும் சாதிகளும் அதன் தீண்டாமைக் கொடுமைகளும் உண்டு. ஆனால் தமிழகம் போன்று ஆணவக்கொலைகள் இல்லை.
ஆனால் தமிழகத்தை பார்த்து நடிகர்களுக்கு கட் அவுட் வைக்கும் கலாச்சாரத்தை பின்பற்றுவது போல் இந்த ஆணவக்கொலைக் கலாச்சாரத்தையும் ஈழத்தில் பின்பற்றத் தொடங்கி விடுவார்களோ என அச்சம் தோன்றுகிறது.
எனவே தமிழின உணர்வு கொண்டவர்கள் இந்த ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் அதற்கு காரணமான சாதீயத்திற்கும் எதிராக தமது கருத்துகளை முகநூலில் பரவலாக பதிவுசெய்ய வேண்டும்.
No comments:
Post a Comment