•மாதராய் பிறந்திட மாதவம் புரிந்திட வேண்டும். ஆனால்
திருமணத்தின்போது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும்?
திருமணத்தின்போது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும்?
பெண்களின் கன்னித் தன்மையை பரிசோதித்து அவர்களின் ஒழுக்கத்தையே கேள்விக்குள்ளாக்கும் கொடுமை இன்னும் இந்த ஆணாதிக்க உலகில் தொடருகின்றது.
மகாராஸ்ரா மாநிலத்தில் பொலிஸ் வேலையில் இருக்கும் பெண் ஒருவருக்கு முதலிரவின்போது படுக்கை விரிப்பில் இரத்தக்கறை வரவில்லை என்பதால் அவர் ஒழுக்கமற்றவர் என குற்றம்சாட்டி அன்றே விவாகரத்து செயய்ப்பட்டுள்ளது.
கஞ்சர்பாத் என்ற சாதியில் இவ்வாறு பார்த்து விவாகரத்து வழங்கவென்று ஒரு பஞ்சாயத்துக் குழு முதலிரவு அறைக்கு வெளியே உட்காhந்து இருக்குமாம்.
என்ன கொடுமை இது? கடுமையான பயிற்சி அல்லது சயிக்கிள் ஓட்டுவதன் மூலமோ இந்த கன்னித்திரை கிழிய வாய்ப்புண்டு என்பது கூட இந்த முட்டாள்களுக்கு இன்னும் தெரியவில்லையா?
கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. ஆனால் ஒரு பெண் பலவந்தமாக உறவு செய்யப்பட்டால் “கற்பழிப்பு” என கூறப்படுகிறது.
பாலியல் வல்லுறவுக்குள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதிசெய்ய பெண்களின் பிறப்பு உறுப்பில் நடத்தப்படும் இரு விரல் சோதனையானது அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அதைத் தடைசெய்துள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.
கன்னித்தன்மை பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று 2013-ல் பி.எஸ்.சவுஹான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சொல்லிவிட்டது.
ஆனாலும் இன்றும்கூட பாதிக்கப்பட்ட பெண்கள் மீது கன்னித் தன்மை பரிசோதனை நடத்தப்படுகிறது.
2013-ல் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுஹான் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது, அப்பெண்களில் பலர், மாவட்ட அதிகாரிகளால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
இந்த கன்னித்தன்மை பரிசோதனைக் கொடுமை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் பெண்களுக்கு நடந்துகொண்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்கா நாட்டில் ஒவ்வொரு வருடமும் ‘ரீட் டான்ஸ்’ என்ற அரை நிர்வாணக் கலை நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்துகொள்ளப் பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
2016-ம் ஆண்டு புதிய விதியின்படி, இந்தோனேசிய ராணுவத்தில் சேர, ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானில், ஏடெனா ஃபர்கடானி என்ற கார்ட்டூனிஸ்ட், தன் ஆண் வழக்கறிஞருடன் கைகுலுக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
1970-களில் திருமண விசாவில் பிரிட்டனுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய வரலாறு உண்டு.
இந் நிலையில் ஜ.நா வின் தென்னிந்திய பெண்களுக்கான அமைதித் தூதுவராக ஜஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜஸ்வர்யாவுக்கு ரஜனிகாந்த் மகள், தனுஸ் மனைவி என்பதைவிட வேறு என்ன தகுதிகள் இருக்கிறது என்று இப் பதவி வழக்கப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை.
ஆனால் ஜஸ்வர்யா தன் திருமணத்தின்போது அவரின் கன்னித்தன்மை குறித்து வெளிவந்த பல கிசு கிசு செய்திகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.
எனவே அவர் தனது பதவிக்காலத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் இந்த கொடிய கன்னித்தன்மை பரிசோதனையை தடைசெய்ய முழு கவனம் செலுத்தவார் என நம்புவோம்.
பெண்கள் உலகமெங்கும், எல்லாத் துறைகளிலும் பல தடைகளை உடைத்து முன்னேறி நாட்டை ஆள்கிறார்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். எத்தனையோ சாதனைகளைச் செய்துவருகிறார்கள்.
ஆனால், திருமணம் என்று வரும்போது, தங்கள் ஒழுக்கத்தை நிரூபிக்க இப்படியெல்லாம் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை என்பதைச் சமூகம் உணர வேண்டும்.
No comments:
Post a Comment