Sunday, January 22, 2017

தமிழக தமிழர்களால் மட்டுமன்றி ஈழத் தமிழர்களாலும் நினைவு கூரப்பட வேண்டியவர் தோழர் தென்தமிழன்.

•தமிழக தமிழர்களால் மட்டுமன்றி ஈழத் தமிழர்களாலும்
நினைவு கூரப்பட வேண்டியவர் தோழர் தென்தமிழன்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என்று கூறியவர் தோழர் தமிழரசன்.
அவ்வாறு கூறியது மட்டுமன்றி தமிழக மக்களின் அடிமை நிலை ஒழிவதற்காக தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து அவர் போராடினார்.
அவ்வாறு அவர் போராடும்போது தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி அரியலூரில் மருதையாற்றுப் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்தார்.
அதுமட்டுமன்றி பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கி உதவுவது போல் ஈழப் போராளி அமைப்புகளையும் அங்கீகரித்து உதவ வேண்டும் என்று அவர் இந்திய அரசை வற்புறுத்தினார்.
தோழர் தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப்படையில் இணைந்து தமிழ்நாடு விடுதலைக்காக போராடியவர்களில் தோழர் தென்தமிழனும் ஒருவர்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மருதையாற்று பால தகர்ப்பு வெடிகுண்டு சம்பவத்திற்காக தோழர் தென்தமிழன் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது தமிழ்நாடு விடுதரைலப்படைக்கு ஆதரவாக பொஸ்டர் ஒட்டியதாகவே குற்றம் சாட்டப்பட்டது. அதற்குகூட சாட்சியோ ஆதாரமோ பொலிஸ் வைக்கவில்லை. ஆனாலும் நீதிமன்றம் இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
பற்றரி வாங்கி கொடுத்ததுக்காக எப்படி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோ அதேபோன்றுதான் போஸ்டர் ஒட்டியதாக தென்தமிழனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
மரணதண்டனை என்ற தீர்ப்பை முன்னரே எழுதிவிட்டு அதற்காக நடத்தப்பட்ட வழக்குதான் தோழர் தென்தமிழன் மீதான வழக்கு என்பதை வழக்கறிஞர் சங்கரசுப்பு தெரிவித்திருக்கிறார்.
உயர்நீதிமன்றத்தில் தோழர் தென்தமிழன் மீதான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 12 வருட சிறைவாசத்தின பின் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் தோழர் தென்தமிழன் 20 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்திருந்தபோதும் தமிழ அரசு அவரை விடுதலை செய்ய மறுத்தது.
நீண்ட சிறைவாழ்வு. போதிய மருத்துவ வசதியின்மை . எல்லாம் சேர்ந்து தோழர் தென்தமிழனை மனநோயாளியாக்கியது.
மனநோயாளியான அவரை பரோலில் விடுதலை செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் தமிழக அரசு வேண்டுமென்றே அடைத்து வைத்திருந்தது.
இறுதியில் பல மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் தோழர்களின் முயற்சியில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழர் தென்தமிழன் விடுதலை செய்யப்பட்டார்.
தன் மகளின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வந்த தோழர் தென்தமிழன் நேற்று முன்தினம் (20.01.2017) மரணமானார் என்ற செய்தி வந்துள்ளது.
தமிழ்நாடு விடுதலைக்காகவும் , ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் செயற்பட்ட தோழர். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காக சிறையில் கழித்தவர்.
அவரது மரண ஊர்வலம் இன்று (21.01.2017) அரியலூர் மாவட்டத்தில் அவரது சொந்த ஊரான பருக்கலில் நடைபெற்றுள்ளது.
ஒருமுறை தோழர் தமிழரசனை சந்திப்பதற்காக நான் சென்னையில் இருந்து சென்றபோது ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் காத்து நின்று என்னை அழைத்து சென்றவர் தோழர் தென்தமிழன்.
தனது சயிக்கிளில் என்னை உட்காரவைத்து முந்திரிக் காட்டை சுற்றிக் காண்பித்தவர் தோழர் தென்தமிழன்.
அவர் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோதும் என்னை தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பத்தவர்களுக்கு அறிமுகப்டுத்தியவர்
அந்த இரவு வேளையிலும் எம்மைக் கண்டவுடன் அவரது குடும்பத்தினர் உணவு தயாரித்து அன்புடன் பரிமாறியதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
அத்தகைய இனிய தோழர் சிறையின் கொடுமையினால் தோழர்களையோ தனது குடும்பத்தவர்களையோ இனம் காண முடியாத அளவிற்கு மனநோயாளியானார் என்பது உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
தோழர் தென்தமிழன் விரும்பிய போராட்டம் இன்று பரந்து விரிகிறது. ஆனால் இதனைப் பார்த்து மகிழ்வதற்கு அவர் இன்று எம்மிடையே இல்லை.
தோழர் தென்தமிழனின் தியாகம் அளப்பரியது. அவரை தமிழக மக்கள் மட்டுமல்ல ஈழத் தமிழர்களும் நினைவு கூர வேண்டும்.
தோழர் தென்தமிழனுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வானம் வசப்படுகிறதோ இல்லையோ ஆனால் தோழர் தென்தமிழன் கனவு நிச்யம் நிறைவேறும். இது உறுதி.

No comments:

Post a Comment