•19வது நாளாக தொடரும் மக்களின் போராட்டமும்
நல்லாட்சி அரசின் பிரதமர்ரணிலின் பித்தலாட்டமும்!
நல்லாட்சி அரசின் பிரதமர்ரணிலின் பித்தலாட்டமும்!
அவுஸ்ரேலியா சென்ற நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் “ தாம் இளைஞர்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டதாகவும் எனவே தமிழர்கள் தைரியமாக இலங்கை திரும்பி வரலாம்" என அழைப்பு விடுத்துள்ளார்.
கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு கோரி 19வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் பிரதமர் ரணில் அவர்களுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆனால் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களை திரும்பி வருமாறு ரணில் அழைப்பு விடுகிறார். அதேவேளை கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த நிலதில் உட்புகுந்தால் சுடப்படுவீர் என விமான படை அறிவித்தல் செய்துள்ளது.
அந்த மக்களுக்கு காணி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அந்த நிலத்தினுள் மக்கள் உள் சென்றால் சுடப்படுவாராயின் என்ன அர்த்தம்?
மக்கள் தமது சொந்தக் காணிக்குள் செல்வது மரணதண்டனை வழங்கும் அளவிற்கு மிகப் பெரிய குற்றமா? இதுதான் நல்லாட்சி அரசா?
எதிரி நாடுகூட எல்லை தாண்டும் மக்களை கைது செய்து சிறையில்தான் அடைக்கும். ஆனால் இலங்கை அரசு தமது சொந்த நிலத்தில் உட் செல்லும் மக்களை சுட்டு கொல்லப்படும் என அறிவிப்பது என்ன நியாயம்?
உண்மையில் நல்லாட்சி அரசின் பிரதமர் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக அவுஸ்ரேலிய அரசு தமிழ் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதை தடுப்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர் ரணிலின் நரித்தனத்தை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களுக்கு உண்டு.
இவ்வாறு செய்வதன் மூலமே ஜ.நா வில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.
கேப்பாப்பிலவிற்கு விஜயம் செய்த பத்தேகம சமித்த தேரர் தனது ஆதரவை வழங்கியதுடன் இம் மக்களின் நியாயமான போராட்டத்தை சிங்கள மக்களுக்கு கூறப்போவதாக தெரிவித்தள்ளார்.
கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக மிகப் பெரிய மக்கள் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளதாகவும் அதில் பெருந்தொகையான சிங்கள மக்களும் கலந்து கொள்ளவிருப்பதாக அறிய வருகின்றனது.
தமிழ் சிங்கள மக்களை பிரித்து வைத்து இனவாதத்துடன் ஆட்சி புரிந்து வரும் இலங்கை அரசுக்கு பேரிடியாக மாறி வருகிறது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்.
அதிகளவான மக்களின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றுவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்; வெற்றி பெறுவது உறுதி.
No comments:
Post a Comment