ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
கனடாவில் இருக்கும் செந்தமிழினி பிரபாகரன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நால் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள செந்தமிழினி பிரபாகரன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
“ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்கின்ற பலரது பலத்த வரவேற்பை பெற்ற தமிழகத்தில் தோழர் தமிழரசனோடு பயணித்து கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் கைதாகி 8 ஆண்டுகள் சிறையிலும் சிறப்புமுகாமிலும் வாழ்ந்த பாலன் தோழரின் அண்மையில் வெளிவந்த நூலானது எதனால் கால முக்கியத்துவம் பெறுகிறது என அறிந்தால் தான் இந்;த நூல் ஆற்றப் போகும் வரலாற்றுச் சிறப்பை நாம் முழுமையாக உணர முடியும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் ‘தாம் எதனால் ஒடுக்கப்பட்டிருக்கின்றோம், யார் தமது எதிரிகள்?’; என அறியாத வரையில் அவர்களால் தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை சரியான பாதையில் முன்னகர்த்த ஒருபோதும் முடியாது.
“இமயம் முதல் குமரி வரை ஆண்டவன் தமிழன்” என தமிழரின் ஆட்சிப் பெருமை பேசுகின்றோம்.
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி” என தமிழின் மாட்சிதனைப் புகழ்கின்றோம்.
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி” என தமிழின் மாட்சிதனைப் புகழ்கின்றோம்.
ஆனால் தமிழினதும் தமிழரினதும் பெருமை அதன் தொன்மையில் மட்டும் இல்லை. தொடர்ச்சியிலுமே தங்கி உள்ளது என்பதை உணர மறந்த இனமாக வாழ்கின்றோம்.
தமிழ் வாழ, தமிழினம் தளை அறுத்து தழைத்தோங்க தமிழர் விடுதலை பெறுவதும் தமிழரின் பாரம்பரிய தேசங்கள் விடுதலை பெறுவதும் அவசியம் ஆகும். இதை உணர்ந்து தமிழரின் எஞ்சியிருக்கும் இரு தேசங்களான தமிழக, தமிழீழ விடுதலைக்காக மார்க்சிய தமிழ்தேசிய பாதையில் போராடிய போராளி தான் தோழர் தமிழரசன் ஆவார்.
6 கோடி தமிழ் மக்கள் தமிழகத்தில் அருகில் இருந்தும் எதுவுமே செய்ய முடியாமல் கை கட்டி வேடிக்கை பார்க்க அல்லது செய்வதறியாது கதறி நிற்க சிங்கள பேரினவாத அரசு உலகின் ஆதிக்க சக்திகளின் துணையோடு தமிழீழ விடுதலை போராட்டத்தை பூண்டோடு அழித்து ஒழித்தனர் என்றால் இது எப்படி சாத்தியமாயிற்று?
இந்த கேள்விக்கும் தோழர் தமிழரசன் கூறிய “ஒரு அடிமையால் இன்னொரு அடிமைக்கு என்றும் உதவ முடியாது. தமிழக மக்கள் தாம் இந்தியத்திடம் இருந்து விடுதலை பெறுவதனூடாகவே ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் விடுதலை பெற உதவ முடியும்” என்ற கூற்று பதிலாகின்றது.
இந்த ஆழ்ந்த பார்வையூடாக வரலாற்றில் சில பாடங்களை கற்று சில மாற்றங்களை உட்படுத்தி ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான இரு தமிழர் தேசங்களுக்குமான விடுதலையை வென்றெடுப்பதற்கு உலகத்தமிழின புரட்சிகர சக்திகள் கை கோர்க்க வேண்டியதன் தேவையை தமிழ் தேசிய மார்க்சிய போராளியான தோழர் தமிழரசன் எப்படி ஆழமாக உற்று நோக்கி எடுத்துரைத்தார் என்பது உட்பட உலக தமிழினத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்கும் மார்க்சிய லெனினிச மாவோயிச தத்துவ விளக்கங்களுடாக தோழர் தமிழரசன் எப்படி போராட்ட வடிவங்கள், தத்துவார்த்த சிந்தனைகள் என்பன அமைய வேண்டும் என பார்த்தார் என்பது உள்ளான பல்வேறு வரலாற்றியலுக்கு தேவையான விடயங்களை அவரோடு புரட்சிகரப் பாதையில் பயணித்த ஈழத்து போராளியும் தமிழ் மக்களால் இன்றும் பொதுதள எழுத்துக்களுடான வழிகாட்டலால் நன்கு மதிக்கப்பட்டு அறியப்பட்டவருமான பாலன் தோழர் இந்த நூலில் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
தத்துவார்த்த சிந்தனைகளோடு மட்டும் நின்றுவிடாமல் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள், உணர்வை தொடும் தருணங்கள், நெகிழ்ச்சியான உரையாடல்கள் எனவும் எழுதி படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது இந்த நூல்.
தோழர் தமிழரசன் பாதையில் பாலன் தோழர் அவரோடு பயணித்த காலத்தே பயணித்த பலரையும் பற்றி; எழுதுகையில் மேலோட்டமாக கடக்காமல் அந்த தோழர்கள் பற்றியும் அவர்களின் உன்னத உழைப்பு உயிரீகம் பற்றியும் எழுதியுள்ளமை இன்னொரு வகையில் இந்த நூலை முழுமையாக்குகின்றது.
அந்நாட்களில் இந்தியா, ஈழத்து போராளிகளை குழுக்களாக பிரிந்து இந்திய உதவியோடு பயிற்சி எடுக்க கருத்து முரண்களோடு பயணிக்க ஊக்கமளித்து ஆயுதங்கள் வழங்கி ஒருவரை ஒருவர் அழிக்க ஊக்குவித்த காலம்.
இந்தியா ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு உதவுவதாக காட்டிக் கொண்டு எமது விரல்களைக் கொண்டே எம் கண்களை குற்றுவதை தோழர் தமிழரசன் நன்கு புரிந்து எச்சரித்திருந்தார் என்பதை பாலன் தோழர் அவர்களின் இந்த நூலை படிக்கும் பொழுது வேதனையோடு அறிய முடிகின்றது.
இந்தியாவை ஈழத்தமிழர்கள் நம்பி இணங்கி பயணித்தால் என்றோ ஒரு நாள் இந்தியா ஈழத்தமிழினத்தை பேரழிவுக்கு உள்ளாக்கி ஆக்கிரமிக்கும் என்பதை அவர் பல இடங்களில் தோழமைகளிடம் சொல்லியும் இருக்கிறார்.
இந்த நூலை படிப்பதனூடாக எதிர்காலத்திலும் தமிழினம் இந்தியாவை நம்பி தவறிழைக்கக் கூடாது என்ற வலியுறுத்தல் கிடைக்கிறது.
இந்திய உளவுப்படையால் ஏவப்பட்ட ஈரோஸ் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழர் நெப்போலியன் அவர்களுக்கு தோழர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலை ஆசிரியர் சமர்ப்பணமாக்கியிருப்பதே நூலின் உள்ளடக்கத்தின் சாரத்திற்கு இன்னுமொரு குறியீடாகவுள்ளது.
இந்நூல் வெறுமனே தோழர் தமிழரசன் அவர்களை அறிமுகப்படுத்தியுள்ளதை கடந்து தோழர் தமிழரசனை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்க நினைத்து அவரையும் அவரோடு அநீதியாக கொல்லப்பட்ட அவரது 4 தோழர்களையும் சூழ்ச்சியால் கொன்ற இந்தியத்தை தக்க சான்றுகளினூடாக அம்பலப்படுத்தி தமிழரசனை ஒரு மார்க்சிய போராளியாக, பொதுவுடமைவாதியாக, தமிழக, தமிழீழ விடுதலைக்கான முனை மழுங்காத, அடங்காத உணர்வு கொண்ட எளிமையான பண்பான போராளியாக அவரது உழைப்புக்களையும், தத்துவார்த்த சிந்தனைகளையும் எடுத்தியம்பி அவரது சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை, அவர் பற்றி புலவர் கலியப்பெருமாள் மற்றும் ஈழத்து போராளி சாந்தன் ஆகியோரின் பார்வைகளையும் சுட்டிக்காட்டி, தமிழரசன் பாதையில் பயணித்த தோழமைகள் பற்றியும் அவர்களின் கருத்துக்கள், அர்ப்பணிப்புகள் என்பனவற்றையும் எழுதி இன்னமும்; தொடரும் தமிழரசனின் பாதையிலான தோழர்களின் விடுதலைப் போராட்டம் இனியும் ஓயாது என்பதையும் எடுத்து சொல்லியுள்ளது.
முகநூலில் தோழர் தமிழரசன் பற்றி பாலன் தோழர் எழுதிய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு தோழர் தமிழரசன் பற்றி மேலும் எழுதி நூலுருவாக்க வேண்டும் என அவரை வேண்டிய பல தோழமைகளில் நானும் ஒருத்தி என்ற வகையில் இந்த நூல் எங்கள் இனத்திற்கு கிடைக்கப்பெற்ற பெரும் பேறு எனவே பார்க்கின்றேன். போற்றி தோழர் பாலனுக்கு நன்றி கூறுகின்றேன்.
“தீவிரவாதி” என்று கூறி ஈனத்தனமாக இந்திய காவல்துறையால் கொல்லப்பட்ட உன்னதமான ஒரு போராளியை இன்று தமிழகத்தின் போராளிகள் தமிழ்த்தேசிய தலைவராக போற்றி அவர் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அவரை நிகழ்கால, எதிர்கால தமிழ் உணர்வாளர்கள் உணர்ந்து போற்றி போராடும் வண்ணம் மக்கள் அறியவேண்டிய விடயங்களை அவர் சிந்தனைகளுள் பயணித்து பாலன் தோழர் தன் சிந்தனைகள் என்ற நூல் கொண்டு கோர்த்தெடுத்து கொடுத்திருக்கும் பாங்கு போற்றுதற்குரியது.
தோழர் தமிழரசனின் தொழில்நுட்ப அறிவு, நக்சல்பாரி இயக்கத்துடனான பயணத்தில் பெற்ற பட்டறிவு, 9 ஆண்டுகால சிறை வாழ்விலும் தளராத போர்க்குணம், பொதுவுடமைச் சிந்தனைகள், ஈழத்தமிழர்கள் துயர்கண்டு துடித்து அவர்களுக்காகவும் புரட்சிகர பாதையில் போராடிய பாங்கு, கோட்பாடுகள் வகுத்து “பெண்ணாடம்” “மீன்சுருட்டி” ஆகிய மாநாடுகளில் தனது நுண்ணிய ஆழ்ந்த அறிவையும் ஆளுமையையும் வெளிப்படுத்திய அரசியல் தூரநோக்கு ஞானம், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைகளை தகர்த்தெறியும் தீவிரம், பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டியெழுப்பி இருதேச தமிழர்களுக்காகவும் ஆயுதமேந்தி போராடிய விடுதலை மற வாழ்வு, இவ்வாறான நீண்ட ஓய்விலா முனை மழுங்காத பயணத்தில் அவர் பதித்த தடங்கள் என அவரின் அறநெறி வாழ்வை முடிந்தவரை இந்நூல் எடுத்து வந்திருக்கின்றது.
இறுதி உணர்வுள்ள தமிழன் இருக்கும் வரை தோழர் தமிழரசன் வாழ்வார். தோழர் தமிழரசன் பெயர் உள்ள வரையில் இந்த நூலை தந்து அவரை உலகுக்கு உணர்த்திய பாலன் தோழர் உழைப்பும் போற்றப்படும்.
இந்த பயணம் தொடரட்டும்… பாலன் தோழர் அவர்களின் பணி சிறக்கட்டும் என வாழ்த்துகின்றேன்
No comments:
Post a Comment