Thursday, February 28, 2019

இயக்க சொத்துக்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து

•இயக்க சொத்துக்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து
அவற்றைப் பெற்றுக்கொள்வது எப்படி?
இயக்க சொத்துகளை சில தனிநபர்கள்; வைத்து அனுபவிப்பதாகவும் அவற்றை மீட்டு மாவீரர் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் சிலர் எழுதி வருகின்றனர்.
போராடியவர்கள் நாட்டில் வறுமையில் வாடும்போது போராட்டத்திற்கு என சேர்த்த பணத்தை வெளிநாடுகளில் சிலர் வைத்து அனுபவிப்பதாக அவர்கள் முகநூலில் எழுதுகின்றனர்.
ஆனால்,
(1) யார் யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்தோ அல்லது அதுகுறித்த எந்தவித கணக்கு வழக்கு ஆதாரமோ இதுவரை வெளியிடப்படவில்லை.
(2) அதுமட்டுமல்ல யார் இந்த பணத்தை பெற்றுக்கொள்வது? யார் யாருக்கு பணத்தை வழங்குவது? எவ்வளவு பணத்தை வழங்குவது? என்ற விபரங்களும்கூட இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
(3) அத்துடன் இவ்வாறு முகநூலில் எழுதுவதால் பணத்தை வைத்திருப்பவர்கள் தாங்களாக முன்வந்து மாவீரர் குடும்பங்களுக்கு கொடுத்துவிடப் போவதுமில்லை.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது,
•கோத்தபாய ராஜபக்ச எடுத்து வைத்திருக்கும் புலிகள் இயக்கத்தின் சொத்தை மாவீரர் குடும்பத்திற்கு வழங்கும்படி இவர்கள் யாரும் கேட்பதில்லை.
•மாவீரர் குடும்பத்திற்கு வழங்கும்படி கேட்காவிட்டாலும் பரவாயில்லை. இலங்கை அரசிடம் ஒப்படைக்கும்படிகூட இவர்கள் கேட்பதில்லை.
•கோத்தபாயா தமிழர் இல்லைதானே? நாம் தமிழரிடம்தான் கேட்போம் என இவர்கள் ஒருவேளை சொல்லக்கூடும்.
•சரி. பரவாயில்லை. அப்படியென்றால் புலிகளின் சொத்து பற்றி மட்டும் பேசும் இவர்கள் மற்ற இயக்க சொத்துகள் பற்றி ஏன் கேட்பதில்லை?
உதாரணமாக,
(அ) ரெலோ இயக்கத்தின் கோடிக்கணக்கான ரூபா சொத்தை செல்வம் அடைக்கலநாதன் தன் சொத்தாக்கி வைத்திருக்கிறார் என்று ரெலோ இயக்கத்தினரே குற்றம் சாட்டுகிறார்கள்.
(ஆ)ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் கோடிக்கணக்கான ரூபா சொத்தை சுரேஸ் பிரேமசந்திரன் குடும்பம் அனுபவித்து வருவதாக அந்த இயக்கத்தவர்களே குற்றம் சாட்டுகின்றனர்.
(இ)பெரிய இயக்கங்கள் மட்டுமல்ல. சிறிய இயக்கங்கள் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் உண்டு. ஒரு சிறிய அமைப்பை சேர்ந்த சிலர் கொள்ளையடித்த வங்கிப்பணத்துடன் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதாக சில வருடங்களுக்கு முன்னர் “தேசம”; இணையதளத்தில் கூறப்பட்டிருந்தது.
(ஈ)இது ஏதோ ஆயுத இயக்கங்கள் மீதான குற்றச்சாட்டு அன்று. ஆயுதம் ஏந்தாத தமிழ்தேசிய கூட்டமைப்பு மீதும் இந்த குற்றச்சாட்டு உண்டு. தேர்தல் நிதியாக அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த பணத்தை மாவைசேனாதிராசா தன் மகன் லண்டனில் வியாபாரம் செய்ய கொடுத்தார் என்று குற்றச்சாட்டு உண்டு. ஒவ்வொரு தேர்தலுக்கும் இந்திய தூதராலயம் கொடுக்கும் கோடிக்கணக்கான ரூபா பணத்திற்கு கணக்கு வழக்கு அவர்களிடம் இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.
எனவே புலி அமைப்பு மட்டுமன்றி அனைத்து அமைப்புகளிலும் பொதுச் சொத்தை வைத்திருப்பவர்கள் அதனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனக் கோருவதே நியாயமாக இருக்கும்.
மேலும், எந்த அமைப்பாக இருந்தாலும் எல்லா அமைப்புகளும் போராட்டத்திற்காகவே சொத்தை திரட்டினார்கள். எனவே போராட்டத்திற்காக திரட்டிய சொத்து போராட்டத்திற்காகவே பயன்படுத்த வேண்டும். அதுவே மக்களின் விருப்பம் மட்டுமல்ல அந்தந்த அமைப்புகளில் இருந்து மடிந்த மற்றும் முன்னாள் போராளிகளின் விருப்பமாகவும் இருக்கும்.
•இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் புலிகளின் பணத்தை வைத்திருக்கும் சிலர் பிரபாகரன் வந்து கேட்கும்போது அவரிடம் ஒப்படைப்பதாக கூறுகிறார்கள்.
(1) பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறுவது இலங்கை இந்திய அரசுகளுக்கு மட்டுமன்றி பணத்தை சுருட்டி வைத்திருப்பவர்களுக்கும் உதவுகின்றது.
(2) நெடுமாறன் அய்யா கூட தன்னிடமிருக்கும் புலிகளின் சொத்தை வேறு யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பிரபாகரன் தன்னுடன் கதைத்து வருவதாக கூறுகின்றாரோ என சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.
(3) எனவே பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை மக்களுக்கு வெளிப்படையாக கூறாதவரை இவர்களிடம் இருக்கும் சொத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது.
மேலும்,
•வெளிநாடுகளில் இயக்க சொத்தை வைத்திருப்பவர்கள் முகநூலில் எழுதுவதை பார்த்து பயந்து சொத்தை ஒருபோதும் திருப்பி ஒப்படைக்க மாட்டார்கள்.
•வெளிநாடுகளில் சொத்தை வைத்திருப்போர் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களின் படியே வைத்திருப்பதால் சட்டரீதியாக அவர்களிடம் இருந்து பெற முடியாது.
•ஒருவேளை அந்தந்த நாடுகளின் அரசுகள் இந்த சொத்தை பறித்தெடுத்தாலும் ஒருபோதும் அதை மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்போவதில்லை.
அப்படியென்றால் இதற்கு என்னதான் தீர்வு?
(1)போராட்டம் இன்னும் முடியவில்லை. போராட்டத்திற்காக தேவை இன்னும் இருக்கிறது.
(2)போராட்டத்திற்கான ஒரு பலமான இயக்கம் மீண்டும் உருவாக்க வேண்டும்.
(3)அந்த பலமான இயக்கம் அனைத்து இயக்கங்களின் பொது சொத்தை வைத்திருப்பவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்.
(4)மீட்கும் பொதுச் சொத்தை தொடர்ந்து போராட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
இதுதான் சரியான வழி மட்டுமல்ல சொத்தை மீட்பதற்கான சாத்தியமான வழியும்கூட.
சரி. அப்படியென்றால் அதுவரை இந்த விடயம் கூறித்து பேசாமல் இருப்பதா?
இல்லை. தாராளமாக பேசலாம். பேச வேண்டும். இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுவதற்கு இவ்வாறு பேசுவது பெரிதும் உதவும்.
•எச்சரிக்கை - இதுவரை போராட்டத்திற்கு ஒரு சதம் கூட வழங்காதவனும் இந்த பிரச்சனை பற்றி அடிக்கடி இப்ப பேசுகிறான். ஏனெனில் இன்னொரு போராட்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இலங்கை இந்திய உளவு அமைப்புகளின் சூழ்ச்சிக்காக பேசுகிறான். இதற்கு தமிழ் மக்கள் பலியாகிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment