Wednesday, April 29, 2020
தோழர் லெனினும் பிரதமர் மோடியும்
தோழர் லெனினும் பிரதமர் மோடியும்
ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனினை சந்திப்பதற்கு அமெரிக்க பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றிருந்தார்.
பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த ரைஸ் வில்லியமுக்கு அவருக்கான சந்திப்பு நேரம் வந்திருந்தபோதும் கதவு திறக்கப்படவில்லை.
இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நேரம் தவறாமையில் மிகவும் கறாராக இருப்பவர் தோழர் லெனின்.
சரி, யாரோ மிக மிக முக்கிய பிரமுகர் லெனினுடம் விவாதித்து கொண்டிருக்கிறார் என்று அந்த அமெரிக்க பத்திரிகையாளர் நினைத்தார்.
அரைமணி, ஒரு மணி, ஒன்றரை மணி ஆயிற்று. கதவு திறக்கவில்லை. லெனினுடன் இவ்வளவு நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் முழு அதிகாரம் பெற்ற அந்த தூதர் யாரோ? என்பதே அப் பத்திரிகையாளரின் கேள்வியாக இருந்தது.
கடைசியில் கதவு திறந்தது. அவரது அறையில் இருந்து வெளியே வந்தவரைப் பார்த்ததும் அனைவரும் அசந்து போய்விட்டார்கள்.
ஏனெனில் வெளியே வந்தவர் பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட ஒரு ஏழை விவசாயி.
லெனினுடைய அறைக்குள் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றார். அவரிடம் லெனின் சொன்னார், " உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏழை விவசாயி தம்போவ் பகுதியை சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி அவருடைய கருத்துகளை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. இதனால் நேரத்தை மறந்துவிட்டேன்." என்று சொன்னார்
இவர்தான் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனின். அதேவேளை இந்திய பிரதமராக இருக்கும் மோடியையும் நினைத்து பார்க்கிறேன்.
தமிழக விவசாயிகள் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க எத்தனையோ வழிகளில் எத்தனையோ போராட்டங்களை செய்தும் சந்திக்க முடியவில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமரை சந்திப்பதற்கே விவசாயிகள் போராட்டம் நடத்தும் துரதிருஷ்டவசமான நிலை இந்தியாவில்தான் உண்டு.
நடிகைகளுக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க முடிந்த மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது கொடுமைதான்.
முதலாளிகளுக்காக அயராது பாடுபடும் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக பாடுபடுவார் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான்.
ஆனாலும் லெனின் காட்டிய வழி விவசாயிகளுக்கு இருக்கிறது. அவர்கள் அதில் பயணம் செய்து மோடிகளை தூக்கி எறிவார்கள். இது நிச்சயம்.
அது சரி இப்போது ரஸ்சிய பிரதமராக லெனின் இருந்திருந்தால் கொரோனாவுக்கு என்ன செய்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன்.
நிச்சயமாக “விளக்கு பிடியுங்கள். கை தட்டுங்கள்” என்று அவர் மக்களுக்கு சொல்லியிருக்கமாட்டார்.
தோழர் லெனினுடன் இந்திய பிரதமரை ஒப்பிட்டுள்ளீர்கள். அப்படியே இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சாவையும் ஒப்பிட்டு இரண்டு வரிகள் கூறுங்களேன் என்று நீங்கள் சிலர் என்னிடம் கேட்க நினைக்கக்கூடும்.
“ம். ஒரு பெரிய பெருமூச்சு விடுகிறேன்.” எனது இந்த பதிலின் அர்த்தம் உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்.
குறிப்பு - லெனின் பிறந்த தினத்திற்கான பதிவு இது.
Image may contain: 1 person, beard and close-up
Image may contain: 1 person, close-up
No comments:
Post a Comment