Sunday, December 20, 2020
பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது!
•பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது!
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வன்னியில் இருந்து ஒருவர் என்னுடன் பேசினார்.
தன்னை முன்னாள் போராளி என்று கூறியவர் இம்முறை தாம் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் அது குறித்து என் கருத்து என்னவென்று கேட்டார்.
தான் ஆட்சிக்கு வந்தவுடன் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக மகிந்த ராஜபக்சா உறுதியளித்திருப்பதாகவும் அதனால் அவரை ஆதரிக்க முடிவு செய்ததாகவும் அவர் என்னிடம் கூறினார்.
அப்போது நான் “சரி. அவர் பதவிக்கு வந்த பின்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிடில் என்ன செய்வது? எந்த அடிப்படையில் அவரை நம்புகிறீர்கள்?” என கேட்டேன்.
அதற்கு அவர் இதை நாங்கள் மகிந்தவிடமே கேட்டோம். அப்போது அவர் “12000 புலிகளை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்த எனக்கு சிறையில் இருக்கும் 77 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதா. என்னை நம்புங்கள்” என்று கூறினார் என்றார்.
இவ்வாறு மகிந்தா மட்டுமன்றி கோத்தா மற்றும் நாமல் ராஜபக்சா எல்லோரும் தாம் ஆட்சிக்கு வந்ததும் உடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.
பதவி ஏற்றதும் உடன் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தவர்கள் ஒரு வருடம் கடந்த பின்னரும் இன்னும் விடுதலை செய்யவில்லை.
ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்தனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை.
அரசியல்வாதிகளின் தேர்தல்கால வாக்குறுதிகள் நம்பமுடியாதவை என்பதற்கு இது நல்லதொரு சான்று மட்டுமல்ல தேர்தல்பாதை மூலம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது.
தேர்தல் பாதை மூலம் அரசியல் கைதிகளையே விடுதலை செய்விக்க முடியவில்லை எனில் தமிழருக்கு தீர்வை பெற முடியும் என எப்படி நம்புவது?
No comments:
Post a Comment