Saturday, February 27, 2021
இந்தியா - சீனா
இந்தியா - சீனா
ஈழத் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்!
(1) இலங்கை அரசு இன்று மட்டுமல்ல 1960 களிலேயே சீனாவுடன் ரப்பர் அரிசி ஒப்பந்தம் செய்தது. அப்போது யாரும் அதனை எதிர்க்கவில்லை.
(2) 1971ல் ஜேவிபி புரட்சி செய்தபோது இந்தியாவின் இந்திரா காந்தி அரசு இந்திய படைகளை அனுப்பி இலங்கை அரசுக்கு உதவியது. சீனா ஆயுத தளவாடங்களை கொடுத்து உதவியது.
(3) 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது அதனை முதலில் ஆதரித்த நாடு இந்தியாவின் எதிரி நாடு எனக் கூறப்படும் சீனாவே.
(4) இந்தியா அமைதிப்படை என்னும் பெயரில் வந்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லறவு செய்தது. கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்தது. ஆனால் சீனா இதனைக் கண்டிக்கவில்லை.
(5) சீனா ஒருபோதும் தன் படைகளை இலங்கைக்கு அனுப்பியதில்லை.. ஆனால் இலங்கை அரசுக்கு ஆயுத தளவாடங்களை கொடுத்து உதவி வருகிறது.
(6) இந்திய ராணுவத்துடன் புலிகள் போர் புரிந்த காலத்தில்கூட இந்தியாவின் எதிரி நாடு எனக் கூறப்படும் சீனா புலிகளையும் தமிழ் மக்களையும் ஆதரிக்கவில்லை.
(7) 2001ல் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முய்ன்றபோது இந்தியாவின் வாஜ்பேய் அரசே அதைத் தடுத்து இலங்கை ராணுவத்தை காப்பாற்றியது. இந்தியாவின் இத் தலையீட்டை சீனா எதிர்க்கவில்லை
(8) 2009 போரின் போதும் புலிகளுக்கு வந்த ஆயுதக் கப்பல்களை அழிக்க இந்தியா உதவியது. தனது ராடர் கருவிகளையும் அதனை இயக்க ராணுவ வீரர்களையும் கொடுத்து உதவியது. சீனா ஆயுத தளவாடங்களை கொடுத்து உதவியது.
(9) இன்று ஜநா வில் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை இந்தியாவும் சீனாவும் சேர்ந்தே பாதுகாக்கின்றன.
(10) இந்தியாவின் இன்றைய மோடி அரசும் இலங்கை அரசுக்கு போர்க்கப்பல் இலவசமாக கொடுத்து உதவியுள்ளது. இலங்கை படைவீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. சீனாவும் இலங்கை அரசுக்கே உதவி வருகிறது.
(11) இலங்கை அரசு இதுவரை 600 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்றுள்ளது. ஆனாலும் இந்திய அரசு தொடர்ந்தும் புலிகள்; இயக்கத்தை தடை செய்து வருவதோடு இலங்கை அரசுக்கே உதவி வருகிறது. சீனாவும் இலங்கை அரசுக்கே உதவி வருகிறது.
இவ்வாறு ஆரம்பம் முதல் இந்தியாவும் சீனாவும் சேர்ந்தே இலங்கையை ஆக்கிரமித்து வருகின்றன. இன்று இலங்கையில் சீனாவின் முதலீடுகளைவிட இந்தியாவின் முதலீடுகளே அதிகமாக உள்ளது.
இன்று வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் 90 வீதமான ஆக்கிரமிப்பு இந்தியாவே செய்திருக்கிறது. இலங்கையில் நான்கு தூதராலயங்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் விடுதலை உணர்வை இந்தியாவே நசுக்கி வருகிறது.
ஆனால் எமது அரசியல் ஆய்வாளர்களோ சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியா தமிழ் மக்களுக்கு உதவப் போகிறது என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பு – தோழர் சண்முகதாசன் சீனாவை ஆதரித்தார். எனவே நாமும் ஆதரிக்க வேண்டும் என அண்மையில் ஒருவர் எழுதியிருந்தார். இது தவறு. மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே 1971ல் இலங்கை அரசுக்கு சீனா ஆயுத உதவி செய்தபோது தோழர் சண்முகதாசன் சீனாவைக் கண்டித்துள்ளார். மாசேதுங் மறைவுக்கு பின்னர் சீனா கம்யுனிஸ்ட்; நாடு இல்லை என்றும் அது முதலாளித்துவத்திற்கு திரும்புகின்றது என்றும அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment