Saturday, April 29, 2023
தோழர் மாறனை சந்தித்த அந்த முதல்
தோழர் மாறனை சந்தித்த அந்த முதல் நாள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. மறக்க முடியாத அனுபவம் அது.
திருவல்லிக்கேணியில் இருந்த உதமுக அலுவலகத்தில் தோழர் பொழிலனை சந்தித்தேன். அப்போது அருகில் நின்ற மாறனை அவர் அறிமுகப்படுத்தினார்.
உடனே மாறன் என் கையை பிடித்து குலுக்கிவிட்டு என்னை கட்டி அணைத்து என் முதுகை இறுக்கி தடவினார். “நம் ஆள்தான்” என மகிழ்ச்சியாக கூறினார்.
இதைக் கண்ட பொழிலன் முகம் மாறிவிட்டது. மிகவும் கோபத்துடன் மாறனை முறைத்து பார்த்தார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்ன விடயம் என பொழிலனிடம் கேட்டேன்.
“நீங்கள் பார்ப்பணரா என அறிவதற்கு உங்கள் முதுகில் பூணுல் இருக்கிறதா என தடவிப் பார்த்தார்” என கூறினார்.
இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சரி. பரவாயில்லை, எங்கள் நாட்டில் இப்படி பார்ப்பதில்லை” என்றேன்.
அப்புறம் நாம் பல விடயங்கள் பேசினோம். திரும்பி வரும்போது “ சாந்தி தியேட்டர் பஸ் தரிப்பில் பல பஸ் வரும்” எனக்கூறி அந்த இடத்தைக் காட்டுவதற்காக மாறனை துணைக்கு அனுப்பினார் பொழிலன்.
அவ்வாறு மாறனுடன் நடந்து வரும்போது எதிரில் இரு அழகான இளம் பெண்கள் சிரித்து பேசிக்கொண்டு வந்தனர்.
திடீரென்று மாறன் அவர்களை மறித்து கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
மாறன் சென்னை தமிழ் பேசுவார். இது எனக்கு ஆரம்பத்தில் பாதிதான் புரியும். அதனால் கெட்ட வார்த்தையில் ஏதோ திட்டுகிறார் என்று மட்டுமே புரிந்தது.
எனக்கு மாறன் திடீரென்று பெண்களை திட்டியது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் அந்த பெண்கள் எதுவும் நடக்காததுபோல் சாதாரணமாக கடந்து சென்றது.
ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள் என மாறனிடம் கேட்டேன். அதற்கு அவர் “ இவளுகள் பாப்பாத்திகள். எமது எதிரிகள்” என்றார்.
அத்தோடு “ பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால் பாம்பை விட்டுவிடு. பார்ப்பாணை அடி. ஏனெனில் பாம்பைவிட பார்ப்பாண் விஷம் “ என்றார்.
எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. “என்ன இருந்தாலும் தயவு செய்து என்னுடன் வரும்போது இப்படி நடந்து கொள்ளாதீர்கள்” என்று அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர் “ தோழர், இது எமது பல நூற்றாண்டு வலி. இதை நீங்கள் ஒருநாள் புரிந்து கொள்வீர்கள்” என்றார்.
No comments:
Post a Comment