Thursday, February 15, 2024
NIA சோதனையும் எனது சங்கீதமும்
•NIA சோதனையும்
எனது சங்கீதமும்
நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஏர். ஆர் ரகுமானின் சின்ன சின்ன ஆசை பாடல் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பிரபல்யம் அடைந்திருந்தது.
அப்போது அந்த பாடலை ஒருமுறை கேட்டுவிட வேண்டும் என நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
சிறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பகலில் மட்டும் பாடல்கள் போடுவார்கள். ஆனால் அவை பழைய பாடல்களாக இருந்தன.
அப்போது என்னை 14 நாட்களுக்கு ஒருமுறை பஸ்ஸில் அழைத்துச்சென்று கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள்.
அதனால் பாட்டுப்பெட்டி உள்ள பஸ்ஸில் சென்றால் இந்த பாட்டை கேட்க முடியும் என நான் நினைத்தேன். இதனை என்னை அழைத்துச் செல்ல வந்த பொலிசாரிடம் கூறினேன்.
எனது ஆர்வத்தைப் பார்த்த பொலிசாரும் சிரித்துவிட்டு பாட்டு பெட்டி உள்ள பஸ்ஸில் ஏற்றியதும் மட்டுமன்றி டிரைவரிடம் அநத பாட்டைப் போடும்படி கூறினார்கள்.
பாடல் மட்டுமல்ல அந்த பாடலைக் கேட்ட எனது ஆசையும் சின்ன சின்ன ஆசைதான். எனது ஒரு சின்ன ஆசை இப்படித்தான் நிறைவேறியது.
இப்போது நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்சிகளில் சுப்பர் சிங்கர் மற்றும் சரிகம பாட்டு நிகழ்ச்சிகள் முக்கியமானவை.
அந்த நிகழ்வில் சிலர் பாடும்போது அது நன்றாக இருப்பதாக நான் நினைப்பேன். ஆனால் நடுவர்கள் சுருதி சேரவில்லை. சரணம் நன்றாக வரவில்லை என்றெல்லாம் கருத்து கூறுவார்கள்.
எனவே இதெல்லாம் என்ன என்பதை அறிய விரும்பி சென்னையில் உள்ள பாடகி ஒருவரை தொடர்பு கொண்டு எனக்கு சங்கீதம் கற்று தர முடியுமா எனக் கேட்டேன்.
அவர் உடனே “சிறந்த பாடகராக வர விரும்புகிறீர்களா?” என கேட்டார்.
அதற்கு நான் “இல்லை. சிறந்த பாடல் எது என்பதை தெரிந்துகொள்வதற்காக படிக்க விரும்புகிறேன்” என்றேன்.
என் விருப்பம் அவருக்கு வித்தியாசமாக தோன்றியிருந்தாலும் அவர் எனக்கு சொல்லி தர சம்மதித்தார்.
எனக்கு சங்கீதம் சொல்லிதர சம்மதித்தவர் NIA சோதனை பற்றிய செய்திகளை அறிந்ததும் இதனால் தனக்கும் ஏதும் பிரச்சனை வருமா என அச்சத்துடன் கேட்டார்.
அவருடைய அச்சம் நியாயமானது. ஏனெனில் நான்கு வருடங்களுக்கு முன்னர் புலிகள் இயக்க தடை நீடிப்பின்போது எனது முகநூல் பதிவுகளையும் காரணமாக காட்டியிருந்தனர்.
எனது முகநூல் பதிவுகளையும் காரணமாக காட்டியிருக்கின்றனர் என்பதையே நான் கடந்த வருடம்தான் அறிந்திருந்தேன்.
எனவே மீண்டும் புலிகள் இயக்க தடையை நீடிப்பதற்காக இந்த பாடகி வீட்டில் NIA சோதனை செய்து என்னுடன் தொடர்பு என்று காட்டினாலும் காட்டுவார்கள்.
NIA சோதனையால் எனது சங்கீத படிக்கும் முயற்சி தடைப்பட்டுவிட்டது. பரவாயில்லை. NIA சோதனைக்கு அஞ்சாத ஒரு பாடகர் கிடைக்காமலா போய்விடுவார்?
No comments:
Post a Comment