Tuesday, April 30, 2024
பல காலமாக விடை தெரியாத வினாக்களுக்கு
பல காலமாக விடை தெரியாத வினாக்களுக்கு விடையாக கடவுளை கூறிவருகிறான் மனிதன்.
ஆனால் அறிவியல் வளர்ச்சியானது அவ் வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடித்து வருவதால் கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறார்.
அவ்வாறான கண்டு பிடிப்புகளில் மிகவும் முக்கியமானது டார்வினின் கூர்ப்புவிதி.
மனிதனை கடவுளே படைத்தார் என்று மதங்கள் யாவும் கூறிவந்த நிலையில் மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் என்று முதன் முதலில் கூறியவர் டார்வின்.
தனது உயிருக்கு மதவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி தனது கண்டு பிடிப்பை சுமார் பத்து வருடங்கள் வெளியிடாமல் இருந்தார்.
இன்று உலகில் மதிக்கப்படும் மிகப்பெரிய தத்துவஞானி காரல் மார்க்ஸ். அவர் தனது “மூலதனம்” படைப்பை டார்வினுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.
இதில் இருந்தே அறிவியல் உலகில் டார்வின் எந்தளவு மதிக்கப்படுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
சுமார் 150 வருடங்கள் கழித்து கிருத்தவ மத போப்பாண்டவர் அவர்கள் டார்வினுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
கொடுமை என்னவென்றால் இன்றும்கூட பிள்ளையார்தான் பிள்ளை தருவதாக நம்பி பல பெண்கள் அரச மரத்தை சுற்றி சுற்றி வருகின்றனர்.
இது குறித்து பெரியார் அவர்கள் “ பிள்ளை வேணுமென்றால் அரச மரத்தை சுற்றாதே. புருசனை சுற்று” என்று கூறினாராம்.
அதற்கு மதவாதிகள் “பிள்ளை கொடுப்பது புருசன் என்றால் பெரியாருக்கு ஏன் பிள்ளை இல்லை?” என்று கேட்டார்களாம்.
இது எந்தளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. நான் அறிந்ததையே எழுதியுள்ளேன்.
ஆனால் அறிவியல் எல்லா வினாக்களுக்கும் விடை காணும்போது கடவுள் அற்றுப் போய்விடுவார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
குறிப்பு – 19.04.2024 டார்வின் அவர்களின் நினைவுதினம்
No comments:
Post a Comment