•பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று
கேட்கும் நிலையில் தமிழ் மக்கள்!
கேட்கும் நிலையில் தமிழ் மக்கள்!
பொதுபலசேனாவின் தலைவரான ஞானசேரதேரர் என்பவர் தொடர்ந்து இனவாத கருத்துக்களை வெளிப்படையாக கூறிவருகிறார்.
அண்மையில் அமைச்சர் மனோகணேசன் அலுவலகத்திற்கே சென்று அவரை மிரட்டியுள்ளார் இந்த ஞானசேர தேரர்.
ஒரு அமைச்சருக்கே இந்த கதியென்றால் சாதாரண மக்களின் கதி என்ன? என்று அனைவரும் கேள்வி எழுப்பினார்கள்.
அதன்பின், பல தனிப் பொலிஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஞானசேர தேரர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால் ஞானசேர தேரர் இது குறித்து பயப்படவில்லை. மாறாக அவர் இன்று தான் நினைத்தால் ஒரு மணி நேரத்திற்குள் இனக் கலவரத்தை உருவாக்குவேன் என்று தமிழ் முஸ்லிம் மக்களை மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.
இத்தனை நாளும் அமைதியாக இருந்த ஞானசேரதேரர் திடீரென்று ஏன் இப்போது இந்தளவு வெளிப்படையாவும் தைரியமாகவும் இனவாதம் பேசுகின்றார்?
சிங்கள மக்களின் ஆதரவு அற்ற ஞானசேரதேரரை கைது செய்வதில் ஏன் அரசு தயக்கம் காட்டுகின்றது?
புலிகள் மற்றும் ஜே.வி.பி யின் போராட்டங்களை சுட்டு அடக்கிய இலங்கை படைகளால் உண்மையில் ஞானசேரதேரரை கைது செய்ய முடியாதா?
இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலை யாராவது கண்டறிய முனைந்தால் இன்றைய அரசே காரணம் என்று கண்டறியலாம்.
மீள் குடியேற்றத்திற்காக போராடும் இரணைதீவு மக்களுக்கு, காணமல்போன உறவுகளை கண்டறிய போராடும் மக்களுக்கு, தமது சொந்த நிலத்தை கேட்டு போராடும் பன்னங்கட்டீ மற்றும் கேப்பாப்பிலவு மக்களுக்கு அரசு அளித்துள்ள பதிலே இந்த ஞானசேரதேரர்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினால் மீண்டும் நாட்டில் இனக் கலவரம் உருவாகும் என்று அரசு மறைமுகமாக பதில் வழங்கியுள்ளது.
வெளிப்படையாக இனவாதம் பேசி மக்களை மிரட்டும் பிக்கு மீது எந்த நடவடிக்கையும் இல்லை
தென்னிலங்கையில் இருந்துவந்து கிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடி யேற்றுபவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆனால் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கiளுக்காக அஞ்சலி செய்ய முனைந்த கிருத்தவ பாதிரியார் மீது பலதடவை விசாரணை கைது மிரட்டல்.
வவுனியாவில் புத்தர் சிலையை உடைத்தவர்கள தமிழர்கள் இல்லை. தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்களவர்களே என்று வவுனியா விகாரைப் பொறுப்பாளரான பிக்குவே கூறியுள்ளார்.
இந்த உண்மையை பாராளுமன்றத்தில் ஜே.வி.பி யின் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே கூறியுள்ளார். அதுமட்டுமன்றி இனவாதிகளை இந்த அரசு பாதுகாக்க முனைகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே இந்த நிலையில் தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்?
பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று கெஞ்சுவதைத் தவிர.
No comments:
Post a Comment