Tuesday, April 30, 2013

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி


செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி


செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களில் இலங்கை அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் சசிதரன் (21) என்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, செங்கல்பட்டு முகாமிலுள்ள மூன்றுபேர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 11 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இரண்டு முகாம்களிலும் சுமார் 46 பேர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி அடைக்கப்பட்டிருப்பவர்கள் தங்களை விடுவிக்ககோரி அடிக்கடி போராட்டம் நடத்திவந்துள்ளனர். தங்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தங்களை இந்த முகாம்களிலிருந்து விடுவித்து வழமையான அகதிமுகாம்களில் இருக்கும் தத்தம் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிவருகின்றனர்.

போலீசாரோ, இவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படவேண்டியவர்கள் என்றும் இவர்களை இந்த உயர்பாதுகாப்பு முகாம்களை விட்டு வெளியில் விடமுடியாது என்றும் வாதாடி வருகின்றனர்.

பல்வேறு போராட்டங்களின் விளைவாக, சில அகதிகள் சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுமுள்ளனர், ஆனால் மேலும் பலர் அங்கே அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே சசிதரன் என்பவர் இன்று ஞாயிறு காலை நஞ்சருந்தியிருக்கிறார். தனது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் வேறு வழியின்றியும் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக சசிதரன் கடிதம் எழுதி வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்


செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக தங்களை விடுவிக்க வேண்டும், திறந்த வெளி முகாமிற்கு மாற்றவேண்டும், குடும்பத்துடன் தாங்கள் வாழ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவ்வப்போது உண்ணா நிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.இது பல ஆண்டுகளாக தொடந்து வருகிறது. இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சிகளும் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் இதுவரை அரசு இந்த போராட்டத்திற்கு செவி சாய்க்க வில்லை.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமை சேர்ந்த ஈழ நேரு, செல்லக்குமார் மற்றும் சிறிகாந்தன் ஆகிய மூவர்களும் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்களுக்கு பின் காவல்துறை அவர்களை வலுக் கட்டாயமாக அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது.

எனினும், மருத்துவமனையிலும் இந்த மூன்று தமிழர்களும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.இதில் சிறிகாந்தன் என்பவர் மாற்றுத் திறனாளி ஆவார். அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் செயற்படாது என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் சிறப்பு முகாமில் உள்ள 13 முகாம் வாசிகள் அங்குள்ள மரத்தின் மீதி ஏறி போராட்டம் செய்து வருகின்றனர்.

அரசு இதை கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ம.க.இ.க நடத்தும் டி.ஜி.பி அலுவலக முற்றுகைப் போராட்ம் வெற்றி பெறவேண்டும் ! அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்!


 இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமே கொந்தளிக்கிறது. ஆனால் அதே தமிழகத்தில் தமிழ் அகதிகளை அடைத்து வைத்து கொடுமைப் படுத்தும் சிறப்பு முகாமும் இருக்கிறது.

• தமிழீழ வாக்கெடுப்பிற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் ஜெயா அம்மையார் அகதிகளை தொடர்ந்தும் சிறப்பு முகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறார்.

• இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என வலியுறுத்தும் கலைஞர் சிறப்பு முகாமை மூடும்படி கேட்க மறுக்கிறார்.

• சிங்கள கிரிக்கட் வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர, புத்த பிக்குவை விரட்டி விரட்டி அடிப்போர், ஏனோ சிறப்பு முகாமிற்கு எதிராக போராட்டம் நடத்த தயங்குகின்றனர்.

• தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் இருக்கும்வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வேறு எந்த போராட்டத்தையும் எந்தவொரு ஈழத்தமிழனும் நம்பப்போவதில்லை.

ம.க.இ.க நடத்தும் டி.ஜி.பி அலுவலக முற்றுகைப் போராட்ம் வெற்றி பெறவேண்டும் !
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்!
சிறப்பு முகாமிற்கு எதிராக போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள்!

சிங்கள மக்கள் எல்லாம் காமுகர்கள் எனில் இன்று அவர்கள் மத்தியில் பல லட்சம் தமிழ் மக்கள் எப்படி வாழுகிறார்கள்?


சிங்கள இரணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்களின் படங்களை பிரசுரித்து இதனை செய்தவர்களுடன் சேர்ந்து வாழ முடியுமா? அவ்வாறு சேர்ந்து வாழும்படி சொல்பவர்கள் தமிழ் இன துரோகிகளே என்று ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் பின்வரும் எனது சந்தேகங்களை தீர்த்து வைக்கும்படி கேட்கிறேன்.

(1)இலங்கை ராணுவமும் சிங்கள மக்களும் ஒன்று என்று கூறமுடியுமா? சிங்கள மக்கள் எல்லாம் காமுகர்கள் எனில் இன்று அவர்கள் மத்தியில் பல லட்சம் தமிழ் மக்கள் எப்படி வாழுகிறார்கள்?

(2) இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை சிங்கள மக்களும் கண்டித்திருக்கிறார்களே. நிமால் பெர்ணாண்டோ என்ற சிங்கள பெண்மனியும் சிறில்துங்க என்ற சிங்கள இடதுசாரியும் சென்னையில் வந்து இது குறித்து பேசியது அனைவரும் அறிந்ததே. அண்மையில் ஆயிரக்கணக்கான சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும்படி போராடியிருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் இலங்கை ராணுவம் போன்றவர்களா?

(3)இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை சிங்கள மக்கள் கண்டிக்கவில்லை எனவே இலங்கை ராணுவம் சமம் சிங்கள மக்கள் என்று கூறுவதாயின் இந்திய ராணுவம் இலங்கையில் செய்த படுகொலைகள், கற்பழிப்புகளை வைத்து இந்திய ராணுவம் சமம் இந்திய மக்கள் என்று யாராவது கூற முனைந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

(4) 1971ல் ஒரு அழகிய இளம் பெண்ணை கதிர்காமம் என்னும் இடத்தில் ஒரு அதிகாரியும் 4 ராணுவ வீரர்களும் கற்பழித்து பின் நிர்வாணமாக்கி தெருவில் கட்டி இழுத்து மக்கள் மத்தியில் சுட்டார்கள். அந்த பெண் குற்றுயிராக துடித்து தண்ணீர் கேட்ட போதும் யாரும் பயத்தில் கொடுக்க முன்வரவில்லை. இந்த பெண் ஒரு சிங்கள இனத்தவள்.ஜே.வி. பி இயக்கத்தை சேர்ந்தவள். இதை செய்தது இலங்கை இராணுவத்தை சேர்ந்த சிங்களவர்கள். இது குறித்து என்ன கூறுவீர்கள்?

(5)இதே இலங்கை ராணுவம் 1971ல் நான்காயிரம் சிங்கள இளைஞர்களையும் 1989ல் அறுபதினாயிரம் சிங்கள இளைஞர்களையும் சுட்டுக் கொன்றது. பாதி எரிந்த நிலையில் உடல்களை ஆற்றில் மிதக்க விட்டது. சிங்கள மக்கள் சமம் சிங்கள ராணுவம் எனில் அவர்கள் எப்படி தமது இனத்தவர்களையே சுட்டுக்கொன்றார்கள்?

(6) இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக யார் போராடினாலும் அது தமிழர்களாக இருந்தாலும் சரி அல்லது சிங்களவர்களாக இருந்தாலும் சரி அவர்களை ஈவிரக்கமின்றி இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்லும். அதனால்தான் அதற்கு இந்தியா உட்பட எல்லா நாடுகளும் பயிற்சி, ஆயுதம் எல்லாம் கொடுத்து ஆதரவளிக்கின்றன. எனவே இவ்வாறு அனைவருக்கும் பொது எதிரியான இலங்கை ராணுவத்திற்கு எதிராக அனைத்து மக்களும் ஜக்கியமாக சேர்ந்து போராட வேண்டும் என்று புரட்சிவாதிகள் கோருவது எப்படி தவறாகும்?

மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் பிறந்தநாள்.(22.04.1870)


இன்று மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் பிறந்தநாள்.(22.04.1870)

மாக்சிச லெனிச மாவோயிச சிந்தனைகளின் வழிகாட்டலில்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக!
நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக!
தரகு முதலாளியத்திற்கு எதிராக!
இன ஒடுக்கு முறைக்கு எதிராக!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் வெல்வதற்கு ஒரு உலகம் காத்து இருக்கிறது- தோழர் கால் மாக்ஸ்

குவான்டனமோ சிறையில் 166 சிறைவாசிகள் 45 நாட்களாக உண்ணாவிரதம்.


• குவான்டனமோ சிறையில் 166 சிறைவாசிகள் 45 நாட்களாக உண்ணாவிரதம்.

போஸ்டன் குண்டுவெடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள் ஏன் இந்த சிறைக் கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியிட மறுக்கின்றன?

இந்திய அரசுக்கு ஒரு சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்!
அமெரிக்க அரசுக்கு ஒரு குவான்டனமோ என்னும் சித்திரவதை முகாம்.

சாகர் ஆமீர் (வயது-44) கடந்த 11 வருடங்களாக இச் சிறையில் அடைத்து வைத்து மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார். இவர் நிரபராதி என இரண்டு தடவை நிரூபணமாகியும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இவர் வெளியில் வந்தால் ஈராக் மீதான அமெரிக் போர் குறித்த பல உண்மைகள் வெளியில் வந்துவிடும் என்பதற்காகவே அவர் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

உலகிற்கு ஜனநாயகம, மனிதவுரிமை பற்றி போதிக்கும் அமெரிக்க அரசு தான் சட்டவிரோத சிறைச்சாலைகளை பல நாடுகளில் பேணுவதும் அதில் பல அப்பாவி முஸ்லிம்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்வதும் நடக்கின்றது. இது பற்றிய செய்திகள் அன்றாடம் வெளிவருகின்றன. ஆனால் இது குறித்து பரவலான கண்டனம் மக்களால் தெரிவிக்கப்படாமை மிகவும் துரதிருஸ்டமே!

இன்று பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சித்திரவதை செய்யப்படும்போது நாம் குரல் கொடுக்க தவறினால், நாளை நாம் கைது செய்யப்படும்போது எமக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

“அவர்கள் முதலில் கம்யுனிஸ்ட்டுகளை கைது செய்தார்கள்
நான் மௌனமாக இருந்தேன்- பின்னர்
அவர்கள் யூதர்களை கைது செய்தார்கள்
நான் மௌனமாக இருந்தேன்- இறுதியில் அவர்கள்
என்னை கைது செய்ய வந்தார்கள்.
எனக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை.”
இது கிட்லரின் சர்வாதிகார கொடுமை குறித்த கவிதை வரிகள். இவ் வரிகள் இன்றும் பொருத்தமாகவே இருக்கின்றது.

குவான்டனமோ சிறைக் கொடுமை பற்றிய மேலதிக விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை பார்க்கவும்.
http://www.dailymail.co.uk/news/article-2312284/Shaker-Aamer-Hes-cleared--devastating-secret-MI6-Iraq-invasion-means-freed.html

இரும்பு பெண்மணியின் இறுதி ஊர்வலம்.


இரும்பு பெண்மணியின் இறுதி ஊர்வலம்.

அவர் மக்களுக்கு இனிக்கவில்லை. ஏனெனில் அவர் கரும்பு பெண் அல்ல!
அவர் மக்களை உறுதியாக அடக்கினார். ஏனெனில் அவர் இரும்பு பெண்!

கடந்த புதன்கிழமை முன்னாள் பிரதமர் மாக்கிரட் தட்சர் அவர்களின் இறுதி ஊர்வலம் லண்டனில் நடைபெற்றது. அரச மரியாதைகளுடன் நடைபெற்ற இவ் நிகழ்வு மக்களின் வரிப் பணத்தில் 10 மில்லியன் செலவில் நடைபெற்றதால் மக்கள் மத்தியில் பலவித விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

தனது ஆட்சிக்காலத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை இரக்கத்துடன் பரிசீலிக்காது உறுதியுடன் அடக்கியதால் ரஸ்சிய பத்திரிகைகளால் தட்சர் அவர்கள் “இரும்புப்பெண்”என கிண்டலாக அழைக்கப்பட்டார். மூன்று முறை பிரதமராக இருந்தவர் இறுதியில் பெரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அவரது கட்சியினராலேயே பாதியிலேயே பதவி பறிக்கப்பட்டார்.

பொதுவாக மரணம் ஒருவரது தவறுகளை மன்னிக்கும் என்பார்கள். அதுவும் ஒருவரது இறுதி ஊர்வலத்தில் பொதுவாக யாரும் எதிர்ப்பு காட்டுவதில்லை. ஆனால் அரசின் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தட்சருக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள் என்றால் இதிலிருந்து தட்சர் அவர்களின் ஆட்சிக்கால கொடுமைகளை புரிந்து கொள்ள முடியும்.

அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்படும்போது மக்கள் திரும்பி நின்று தங்கள் பின்பகுதியைக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர் ஆட்சியில் இருக்கும்போது தங்களை பார்க்கவில்லை, எனவே அவரை தாங்கள் பார்க்க விரும்பவில்லை என காரணம் கூறினார்கள். அதுமட்டுமல்ல தட்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக ஒரு அரக்கியின் மரணத்தை கொண்டாடும் பழைய பாடலான “டிங் டொங்” பாடலை அதிக அளவில் தரவிறக்கம் செய்து அந்த வார முதல் வரிசைப் பாடலாக்கி தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

வழக்கத்திற்கு மாறாக மகாராணியார் தட்சர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கு பற்றியிருக்கிறார். பிரதமர் தாங்கள் எல்லோரும் “தட்சரிஸ்டுக்கள”; என்று அறிவித்தார். நல்லவேளை உதவி பிரதமர் அதை உடனடியாக மறுத்துவிடடார்.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு 2.5 மில்லியனை தொட்டிருக்கும் இவ் வேளையில் அது குறித்து எந்த வித கவலையும் இன்றி பிரதமர் எந்த முகத்துடன் “தட்சரிசம” பற்றி பெருமையாக கூறமுடியும்?

பிரதமர் தன்னை “தட்சரிஸ்ட்”என்று பகிரங்கமாக அறித்து அடையாளப்படுத்தியுள்ளார். அதற்குரிய பதிலை மக்கள் அவருக்கு நிச்சயம் அடுத்த தேர்தலில் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தொழிலாளர்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி முதலாளித்துவத்திற்கு செயத் சேவைக்காக முதலாளித்துவம் தட்சரை நன்றியுடன் நினைவு கூரலாம். ஆனால் மக்கள் தட்சரின் தவறுகளை மன்னிப்பதற்கோ, மறப்பதற்கோ தயாராக இல்லை என்பதையே அவருக்கான எதிர்ப்பு காட்டுகிறது.

பூமியின் உருவாக்கத்திற்கு தேவையான பெருவெடிப்பிற்கு கடவுள் காரணமல்ல. பேராசிரியர்- ஸ்டீபன் கேவ்கிங்.


• பூமியின் உருவாக்கத்திற்கு தேவையான பெருவெடிப்பிற்கு கடவுள் காரணமல்ல. பேராசிரியர்- ஸ்டீபன் கேவ்கிங்.

கடந்தவாரம் அமெரிக்காவில் “கல்ரெக்” பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; ஸ்டீபன் உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் 12 மணி நேரம் வரிசையில் காத்து இருந்தனர். மண்டபத்தில் இடம் போதாமல் வெளியில் நின்று கொண்டும் அவரது பேச்சை செவிமடுத்தனர்.

உலகில் பல மதங்களும், அவற்றின் கடவுள்களும் இருக்கின்றன. இவை பல இருந்தாலும் அவை எல்லாம் ஒருமித்த குரலில் கூறுவது “கடவுள் பூமியைப் படைத்தார்” என்பதே. ஆனால் ஸ்டீபன் அவர்கள் பெரு வெடிப்பின் மூலமே பூமி உருவானது என்றும் அந்த பெரு வெடிப்பிற்கு கடவுள் தேவையில்லை என்றும் விளக்கியுள்ளார்.

இது பற்றிய விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் லிங்கை பார்க்கவும்.

http://www.dailymail.co.uk/news/article-2311168/Stephen-Hawking-says-The-Big-Bang-didnt-need-God-set-off.html

அறியாமையின் இருப்பிடமே கடவுள். அறிவு வளர வளர கடவுள் சுருங்கி வருகிறார். இன்று இல்லா விடினும் என்றாவது ஒரு நாள் அறிவின் வளர்ச்சியானது கடவுளை முற்றாக நீக்கிவிடும் என்பதை வரலாறு காட்டுகிறது.

இலங்கை, இந்திய நாடுகளில் பாடசாலைகளைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகம். பல்கலைக்கழகங்களைவிட கடவுள்களின் எண்ணிக்கை அதிகம். இதுவே மக்களின் அறியாமைக்கும் மதங்களினது ஆதிக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பகுத்தறிவு பெற வைப்பதே இந்த அறியாமையிலிருந்து விடுபட ஒரே வழியாகும்.

மீண்டும் ஒரு “பெரியாருக்காக” தமிழ் உலகம் காத்து நிற்கின்றது!

வீர மரணம் அடைந்த தோழர் மாறன் அவர்களுக்கு அஞ்சலிகள்.


11.04.1986 யன்று வீர மரணம் அடைந்த தோழர் மாறன் அவர்களுக்கு அஞ்சலிகள்.

இலங்கையில் அமைதிப்படையாக சென்ற இந்திய ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தது. பல தமிழ் பெண்களை கற்பழித்தது. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. உடமைகள் சேதமாக்கப்பட்டன. இவற்றையெல்லாம் அமைதிப் பணியாக அரசு தொலைக்காட்சி பொய்ப்பிரச்சாரம் செய்தது. அதனைக் கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக தமிழ்நாடு விடுதலைப்படை சார்பில் கொடைக்கானல் டிவி டவரை தகர்க்கும் முயற்சியில் 11.04.1986 யன்று தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தோழர் மாறன் அவர்களின் தியாகம் மகத்தானது. அவர்களது உணர்வு பாராட்டத்தக்கது. அவருடன் நான் பழகிய நாட்கள் சிறிது ஆனாலும் மறக்க முடியாதவை. அந்த தாக்குதல் வழக்கிலேயே (கொடைக்கானல் வெடி குண்டு வழக்கு) என் மீது போடப்பட்டு எட்டு வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

இலங்கை தமிழர்கள் போராட்ட வரலாற்றில் தோழர் மாறன் அவர்களின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். தோழர் மாறன் அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் சார்பில் எனது புரட்சி அஞ்சலிகளை செலுத்துகிறேன்.

மத்தளத்திற்கு ஒரு பக்கமே அடி! மேளத்திற்கு இரண்டு பக்கம் அடி! ஆனால் இலங்கை தமிழ் மீனவனுக்கு எல்லா பக்கமும் அடி!

• பரிதாபத்திற்குரிய மீனவர்கள்

மத்தளத்திற்கு ஒரு பக்கமே அடி!
மேளத்திற்கு இரண்டு பக்கம் அடி!
ஆனால் இலங்கை தமிழ் மீனவனுக்கு எல்லா பக்கமும் அடி!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மீனவர்கள் போல் அதிக ஆதரவு அளித்தவர்கள் யாரும் இல்லை. அதுபோல் அவர்களைப் போல் அதிக இழப்புகளை சந்தித்தவர்களும் இல்லை. ஆனால் இன்றுவரை அவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லையே என்பதுதான் மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எத்தனை இழப்புகள் வந்தபோதும் அது இலங்கை தமிழ் மீனவராக இருந்தாலும் சரி அல்லது இந்திய தமிழ் மீனவராக இருந்தாலும் சரி ஆரம்பம் முதல் உறுதியாக ஆதரவு தந்து வருபவர்கள் அவர்கள். அதனாலேயே பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகிறவர்கள்.

இதுவரை 600க்கு மேற்பட்ட இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து இநதிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இறந்தவர்கள் தமிழ் மீனவர்கள் என்பதுடன் அவர்களுக்கு என ஒரு அரசியல் பலமும் இல்லை என்பதும் ஒரு காரணமாகும்.

அதேபோல் இலங்கை தமிழ் மீனவர்கள் சந்தித்து வரும் கஸ்டங்களோ அல்லது அனுபவித்து வரும் துன்பங்களோ சொல்லில் அடங்காது. கடலில் அதிக தூரம் சென்று மீன் பிடிக்க கூடாது, அதிக வலு இயந்திரம் பாவிக்க கூடாது என்று ஆரம்பத்தில் கட்டப்பாடு விதித்த இலங்கை அரசு காலப்போக்கில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதையே தடுத்துவிட்டது. மாற்றுவழியோ அல்லது நிவாரணமோ இன்றி ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடிய அரசின் கோர செயல் குறித்து யாருமே கவலைப்படவில்லை. அவர்கள் எப்படி சாப்பிட முடியும் வருமானம் இன்றி எப்படி வாழ முடியும் என்று கூட யாரும் அக்கறை கொள்ளவில்லை.

யுத்தம் முடிந்த இன்றும்கூட பல கட்டுப்பாடுகள். அவர்கள் காலம்காலமாக தொழில் செய்துவந்த பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு அவர்கள் தொழில் நசுக்கப்படுகிறது. இன்னொரு புறம் இவர்களின் பகுதியில்வந்து இந்திய தமிழ் மீனவர்கள் தொழில் செய்கிறார்கள். இவர்களின் விலை உயர்ந்த வலையை திருடி செல்கிறார்கள்.

ஒரு புறம் கடற்படை தொல்லை. இன்னொரு புறம் சிங்கள மீனவர் தொல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய தமிழ் மீனவர்களின் அத்து மீறல்கள். இவ்வாறு எல்லா பக்கமும் அடிவாங்கி பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் குறித்து யாருமே குரல் கொடுக்காதது மிகப் பெரிய துரதிருஸ்டமே.

அமைச்சர் டக்ளஸ தேவானந்தா அவர்கள் இவர்களுக்காக குரல் கொடுத்துவிட்டார் என்பதற்காக இவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து தமிழ் தேசிய சக்திகளோ அல்லது இந்தியாவில் தமிழீழத்திற்காக போராடுவதாக கூறும் தலைவர்களோ உதவ முன்வராதது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமே.

இனியாவது இலங்கை தமிழ் மீனவனின் துன்பத்தை புரிந்து கொள்வோம். அவனுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வோம்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு பொருத்தமான ஒரு தீர்வாக தற்கால சூழலில் அமையும் என்றே டெலோ இயக்கம் கருதுகிறது. – செல்வம் அடைக்கலநாதன்


இலங்கை என்ற ஒரு ஜக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கு என ஒரு தனியாக சுயாட்சி கட்டமைப்பை உருவாக்கப்படுவதே இலங்கை இனப்பிரச்சனைக்கு பொருத்தமான ஒரு தீர்வாக தற்கால சூழலில் அமையும் என்றே டெலோ இயக்கம் கருதுகிறது. – செல்வம் அடைக்கலநாதன்

குட்டிமணி தங்கத்துரை ஆகியோரால் ஆரம்பிக்கப்ட்டு இதுவரை காலமும் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போராடி வந்த “டெலோ” இயக்கத்தின் தற்பொதைய தலைவர் செல்வம் அடைகலநாதன் அவர்கள் தாங்கள் தமிழீழ கோரிக்கையைக் கைவிட்டு சுயாட்சி கோரிக்கையை முன்வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்ப்பட்டு ஆதரவு தரப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் த.வி.கூ தலைவர் சம்பந்தன் அவர்கள் எற்கனவே தாம் தமிழீழ கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது அதில் அங்கம் வகிக்கும் இன்னொரு அமைப்பான டெலோ இயக்கத்தின் தலைவர் தமிழீழத்தை கைவிட்டு சுயாட்சி கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் அதில் இருக்கும் ஈபி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இதே கருத்தையே கொண்டிருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் அதுவும் தமிழ்நாட்டில் தமிழீழத்திற்காக மாணவர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், தாம் தற்போதைய சூழலை நன்கு கணித்தே இவ்வாறு கோரிக்கையை முன்வைப்பதாக செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ கோரிக்கையை கைவிட்டுவிட்டனர் என குற்றம்சாட்டி இவர்களில் இருந்து பிரிந்து சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, கஜேந்திரன், பொன்னம்பலம் ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால் மக்கள் இவர்களுக்கு படுதோல்வியை அளித்து தமிழீழத்தை கைவிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அமோக ஆதரவளித்தனர்.

எனவே தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக தமிழீழ கோரிக்கையை எழுப்பும் தமிழ்நாட்டு தலைவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கீழே உள்ள படம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம் ஆகும்.

40வது இலக்கிய சந்திப்பு


40வது இலக்கிய சந்திப்பு லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று முதலாவது நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. வழக்கம்போல் சல சலப்புகளும, கல கலப்புகளும் கொண்ட சந்திப்பாக நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறுவது ஆச்சரியம் அல்ல மாறாக இப்படி நடக்கவில்லையென்றால்தான் ஆச்சரியம் என்று இத்தகைய சந்திப்புகளில் தொடர்ச்சியாக பங்குபற்றி வரும் நண்பர் ஒருவர் கூறினார்.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த சாத்திரி அவர்கள் இலக்கிய சந்திப்பில் பேச இன்று வந்திருந்தார். அவ்வாறு அவர் பேச முன்வந்தது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. மாறாக தாங்களும் மாற்றுக் கருத்தாளர்கள் என்றும் ஜனநாயகத்தற்காக குரல் கொடுத்து வருவதாக கூறும் சிலர் அவரை பேச விடாமல் செய்ததுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

புலிகள் மாற்றுக் கருத்திற்கு இடங்கொடாமல் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டும் இவர்கள், புலிகள் அமைப்பைச் சேர்ந்த சாத்திரி என்பவரை பேசவிடாமல் நடந்து கொண்டது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.

“ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்” என்கிறோம். மாற்று கருத்து அவசியம் என்கிறோம். அதற்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்கிறோம். ஆனால் எமக்கு எதிராக கருத்துகள் வரும்போது நாமும் சர்வாதிகாரமாக அடக்க முனைகிறோம்.

நல்ல வேளையாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் பௌசர் அவர்கள் இது குறித்து வருத்தம் தெரிவித்ததுடன் அனைவரின் கருத்துகளுக்கும் தொடர்ந்து இடம் அளிக்கப்படும் என உறுதியளித்தது ஆறுதலாக இருந்தது.

இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் இப்படி நடக்க முனையாது உண்மையாகவே கருத்துச் சுதந்திரத்தை மற்றவர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

• தமிழீழ தீர்வு உணர்ச்சிபூர்வமான தீர்வா? உணர்வுபூர்வமான தீர்வா?

• தமிழீழ தீர்வு
உணர்ச்சிபூர்வமான தீர்வா?
உணர்வுபூர்வமான தீர்வா?

தமிழீழ வாக்கெடுப்பு கோரி அண்மையில் தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழர்கள் தொடர்பாக பல தீர்மானங்கள் இந்த சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவற்றுக்கு என்ன நடந்ததோ அதுவே இதற்கும் நடக்கும்? ஆம் இதுவும் ஒரு பயனும் அற்ற தீர்மானவாகவே இருக்கப்போகிறது. ஆனால் சில தமிழ் உணர்வாளர்கள் இதை எதோ வரலாற்று திருப்பு முனை என வர்ணிக்கின்றனர். அது எப்படி என எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த தமிழீழம் குறித்து நான் சில வினாக்களை கேட்க விரும்புகிறேன்.

(1)தமிழீழ தீர்வை முன்வைத்தவர்கள் த.வி. கூட்டணி. இன்று அதன் தலைவர் சம்பந்தன் அவர்கள் தமிழீழ தீர்வை கைவிட்டுவிட்டதாக கூறுவது எத்தனை தமிழ்நாட்டு தலைவர்களுக்கு தெரியும்?

(2) 1983ல் 36 இயக்கங்கள் இருந்ததாகவும் அதில் ஒரேயொரு இயக்கமான “பேரவை” இயக்கம் தவிர மற்ற எல்லா இயக்கங்களும் தமிழீழ தீர்வை முன்வைத்தன. ஆனால் இன்று இதில் எத்தனை இயக்கங்கள் தமிழீழ தீர்வை முன்வைக்கின்றன என்று தமிழ்நாட்டு தலைவர்கள் யாராவது கூறமுடியுமா?

(3)இலங்கையில் சுமார் 2 கோடி சனத்தொகை இருப்பதாகவும் இதில் தமிழ் பேசும் மக்கள் சுமார் 40 லட்சம் பேர் என கூறுகின்றனர். இதில் வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்கள் 20 லட்சம் எனவும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் சுமார் 10 லட்சம் எனவும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் சுமார் 10 லட்சம் எனவும் அறிய வருகிறது. இந்த தமிழீழ தீர்வு மலையக தமிழர்களுக்கு எவ்வித பயனும் தராது. எனவே அவர்கள் இதனை ஆதரிப்பதில்லை. தமது இனம் பிரிக்கப்படும் என்பதால் முஸ்லிம்களும் ஆதரவு தருவதில்லை. இது தமிழக தலைவர்களுக்கு தெரியுமா?

(4)இவர்கள் கேட்பதுபோல் தமிழீழ வாக்கெடுப்பிற்கு விட்டு அது தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டால் அப்புறம் தமிழ்நாட்டு தலைவர்கள் என்ன செய்வார்கள்?

(5)சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்பதற்காக தமிழீழம் முன்வைக்கப்படுகிறதா அல்லது பிரிந்து சென்றால் நன்றாக வாழமுடியும் என்பதால் தமிழீழம் முன்வைக்கப்படுகிறதா? இது பற்றி யாராவது தமிழ்நாட்டு தலைவர்கள் கூறுவார்களா? ஏனெனில் இதற்கான பதில் தமிழ்நாட்டு விடுதலைக்கும் பொருந்தும் அல்லவா?

தமிழீழம் என்பது வெறும் உணர்ச்சி பூர்வமாக இல்லாமல் உணர்வுபூர்வமாக அமைய வேண்டும். எனவே தமிழீழம் குறித்து வினா எழுப்புவோரை துரோகிகளாக சித்தரிக்காமல் உரிய பதிலை வழங்க வேண்டும் எதிர்பார்க்கிறேன்.

மாணவர்களின் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆறுதலாக அமையுமே தவிர ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நான் நம்பவில்லை.- கவிஞர் சல்மா


மாணவர்களின் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆறுதலாக அமையுமே தவிர ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நான் நம்பவில்லை.- கவிஞர் சல்மா

எதிர்வரும் 06.04 13யன்று லண்டனில் நடைபெற இருக்கும் இலக்கிய சந்திப்பிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சல்மா அவர்களுடன் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02.04.13) ஈஸ்ட்காமில் நடைபெற்றது.
கவிஞரும், எழுத்தாளரும், கனிமொழியின் நெருங்கிய நண்பரும், தி.மு.க வின் முன்னனி செயற்பாட்டாளருமான சல்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு கலந்துரையாடல் மதிப்புக்குரிய பௌசர் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஒரு பெண் இலக்கியவாதி அதுவும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்திருப்பதால் அவருடைய கருத்துக்களை கேட்பதற்கு மிகவும் ஆவலுடன் சென்றிருந்தேன். அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போதே அவர் “இன்று தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டம் எந்தவித அரசியல் கட்சி சார்பில்லாமல் நடப்பது தனக்கு மகிழ்வு கொடுக்கும் அதேவேளையில் அவர்களது போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்குமேயொழிய ஒரு தீர்வை பெற்றுத்தரும் என தான் நம்பவில்லை” என்றார்.

அவர் மேலும் கூறுகையில் “1983லும் இதேபோல் பெரிய எழுச்சி ஏற்பட்டதாகவும் ஆனால் அந்த எழுச்சியால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வும் பெறப்படவில்லை. அதேபோல் இன்றைய எழுச்சியாலும் அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கப்போவதில்லை” என்றார்.

அவர் பற்றிய ஆவணப்படம் கோலண்டிலும் ஜெர்மனியிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த மாதங்களில் லண்டனிலும் அது வெளியிடப்படுகிறது. தற்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எல்லா மத அடிப்படைவாதிகளும் ஒற்றுமையாக சந்திக்கும் ஒரு புள்ளி பெண் ஒடுக்கு முறை. எனவே பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கும் சல்மா அவர்கள் மத அடிப்படைவாதிகளால் எந்தளவு எதிர்ப்புகளை சந்தித்திருப்பார் என்பதை அவரது பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு கொடுக்கப்படும் ஆதரவிலேதான் அவரது முயற்சியின் வெற்றி தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜெயா அம்மையாரின் சுயரூபம் காண்பீர்!


• சட்டசபையில் தமிழீழ வாக்கெடுப்பிற்கு பிரகடனம்.

• சிறப்புமுகாமில் சட்டவிரோத அட்டூழியங்கள்.

• ஜெயா அம்மையாரின் சுயரூபம் காண்பீர்!

தமக்கு வழங்கப்படும் வேதனம் போதாது என்றும் அதனை அதிகரித்து வழங்குபடி கோரி பூந்தமல்லி சிறப்பு அகதிமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது கணவனை பார்க்க வந்த அகதிப் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்ட்டுள்ளது. இதனால் அப் பெண் தனது இரு பிள்ளைகளுடன் பார்க்க அனுமதிகோரி முகாம் வாசலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளார். சட்டரீதியான, நியாயமான அவரது கோரிக்கையை நிறைவேற்ற மறுத்த தமிழக அரசு அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது. இதனை அறிந்த கணவர் வேதனை தாங்காது சிறப்புமுகாமில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயா அம்மையார் ஒருபுறம் சட்டசபையில் பிரகடனம் செய்து தான் ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையுள்ளவர் என காட்டிக்கொண்டு மறுபுறத்தில் தொடர்ந்தும் அகதிகளை துன்புறுத்தி வருகிறார். அவரின் சுயரூபம் ஈழத்தமிழர்களுக்கு நன்கு தெரியும். அனால் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் வைகோ அவர்கள் இது நன்கு தெரிந்தும் “விடியலின் வெளிச்சம” என ஜெயா அம்மையாரைப் பாராட்டுவது வியப்பாக இருக்கிறது.

மாணவர்களே!

தமிழ்நாட்டில் அகதிகள் துன்புறுத்தப்படும்போது அது குறித்து எதுவும்கோராது மறுபுறத்தில் மகிந்தவின் கொடுமைக்கு எதிராக நீங்கள் போராடுவது அர்த்தமுள்ளதாக இருக்காது. எனவே முதலில் தமிழ்நாட்டில் அகதிகளை அடைத்து வைக்கும் சிறப்பு முகாம்களை மூடுவதற்கு போராடுங்கள்.