Sunday, November 30, 2014

பிரபாகரனுக்கு ஒரு நியாயம் விஜயவீராவுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் (இனவாத) நியாயமா?

பிரபாகரனுக்கு ஒரு நியாயம்
விஜயவீராவுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை அரசின் (இனவாத) நியாயமா?
இலங்கை அரசானது “பயங்கரவாதிகள்” என்ற முத்திரை குத்தி
1989ல் 60 ஆயிரம் சிங்கள மக்களை அழித்தது. கூடவே ஜே.வி.பி தலைவர் ரோகண விஜயவீரவையும் கொன்றது.
2009ல் 40 ஆயிரம் தமிழ் மக்களை அழித்தது. கூடவே புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொன்றது.
ஆனால்,
பிரபாகரனின் குடும்பத்தை அழித்த இலங்கை அரசு விஜயவீராவின் குடும்பத்தை அழிக்கவில்லை.
பிரபாகரனின் பிள்ளைகளை கொன்ற இலங்கை அரசு விஜயவீராவின் பிள்ளைகளை பாதுகாப்புடன் படிக்க வைத்தது.
அதுமட்டுமன்றி,
விஜயவீராவுக்கு நினைவு சின்னம் வைக்க அனுமதித்த இலங்கை அரசு பிரபாகரனுக்கு நினைவு சின்னம் வைக்க அனுமதிப்பதில்லை.
ஆண்டுதோறும் விஜயவீராவுக்கு நினைவு தினம் அனுட்டிக்க அனுமதிக்கும் இலங்கை அரசு பிரபாகரனுக்கு நினைவு தினம் அனுட்டிக்க விடுவதில்லை.
இன்று விஜயவீராவின் ஜே.வி.பி கட்சி
மாகாண சபை உறுப்பினராகவும் இருக்கிறது
பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறது.
அமைச்சராக இருக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக
வெளிப்படையாக அறிவித்த பின்னரும்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்
இன்றும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
இவ்வாறு இனவாதத்தோடு செயற்படும் மகிந்த அரசு
இனப்பிரச்சனையை தீர்க்கும் என
இன்னமும் நம்புபவர்களை என்னவென்று அழைப்பது?

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் வந்து தமிழீழம் பெற்று தருவார்” என்று கூறுவது

 “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.
அவர் வந்து தமிழீழம் பெற்று தருவார்” என்று கூறுவது
(1)”புலிகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பல பில்லியன் டொலர் பணத்தை பட்ஜட்டில் ராணுவத்திற்கு ஒதுக்குவதற்கு கோத்தபாயாவுக்கு உதவுகிறது.
(2)”புலிகளை அடக்குவேன்” என்று சொல்லி தேர்தலில் தொடர்ந்து வெல்வதற்கு மகிந்தராஜபக்சவுக்கு உதவுகிறது.
(3) “மீண்டும் புலிகளுடன் இணைந்துவிடுவார்கள்” என்று சொல்லி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருக்க மகிந்த அரசுக்கு உதவுகிறது.
(4)”புலிகளின் பிரதிநிதிகள்” என்று கூறி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை செய்வதை தவிர்க்க இலங்கை அரசுக்கு உதவுகிறது.
(5)இந்திய அரசு தொடர்ந்து புலிகள் இயக்கத்தைத் தடை செய்து வருவதற்கு உதவுகிறது.
(6)சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமை வைத்திருக்க தமிழக அரசுக்கு உதவுகிறது.
அதைவிட,
• தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு தலைமை உருவாவதை தடுக்கிறது.
• தமிழ்மக்கள் மீண்டும் போராடாமல் பிரபாகரன் வருகைக்காக காத்திருக்க வழி செய்கிறது.
• பிரபாகரன் மரணம் குறித்து உண்மையை அறியா வண்ணம் மக்களை தடுக்கிறது.
• புலிகளின் சொத்தை புலத்து வியாபாரிகள் தொடர்ந்து அனுபவிக்க உதவுகிறது.
• சில தமிழக அரசியல்வாதிகளுக்கு ஏமாற்று அரசியல் செய்ய உதவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக,
தனது 10வயது மகனைக்கூட காப்பாற்றாமல் தான் மட்டும் தப்பினார் பிரபாகரன் என்ற பழிச்சொல்லுக்கு வழி வகுக்கிறது.
இத்தனை வருடமாகியும் வராமல் ஏன் ஒளித்து இருக்கிறார் என்று மக்கள் விசனப்பட வைக்கிறது.
மேலும் அவருக்கு ஒரு வீர வணக்கம்கூட செலுத்தமுடியாத நிலையில் தமிழினத்தை வைத்திருக்கிறது.

ஜ.நா மன்றமே! பிரபாகரன் மரணம் போர்க்குற்றம் இல்லையா?

• ஜ.நா மன்றமே!
பிரபாகரன் மரணம் போர்க்குற்றம் இல்லையா?
புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னரே
இலங்கை அரசு பிரபாகரனை கொன்றதாக அறிவித்தது.
அப்படியாயின்,
ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னர்,
ஆயுதங்கள் அற்ற நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டது
ஒரு போர்க்குற்றம் அல்லவா?
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை
போர்குற்றமாக கருதும் ஜ.நா மன்றம்
பிரபாகரன் கொலையை கண்டுகொள்ளாதது ஏன்?
பிரபாகரன் கொல்லப்பட்டதும் போர்க்குற்றமே. இந்த போர்க்குற்றத்தில் இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் பெரும் பங்கு உண்டு என்பது பலரும் அறிந்ததே!
எனவே “பிரபாகரன் இருக்கிறார்” என்பது இலங்கை, இந்திய அரசின் போர்குற்றங்களை மறைக்கவே பெரிதும் உதவுகிறது.
வைகோ, நெடுமாறன் ஆகியோர் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என்று கூறுவதன் மூலம் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இந்திய அரசின் போர்க்குற்றத்திற்கு எதிராக தமிழக மக்கள் போராடுவதை தடுக்கிறார்கள்.
இதன் மூலம் இந்திய அரசுக்கு பெரிதும் உதவுகிறார்கள். இதை தமிழ் மக்கள் முதலில் உணரவேண்டும்.
“பிரபாகரன் இருக்கிறார்” என்பது
இலங்கை இந்திய அரசுக்கே பெரிதும் உதவுகிறது

மனித உரிமை செயற்பாட்டாளர் ரிக்கி பெர்ணான்டோ வுடனான சந்திப்பு

 மனித உரிமை செயற்பாட்டாளர் ரிக்கி பெர்ணான்டோ வுடனான சந்திப்பு
கடந்த சனிக்கிழமை (22.11.2014) லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் இலங்கை மனிதவுரிமை செயற்பாட்டாளர் ரிக்கி பெர்ணான்டோவுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
ஜனநாயக மனித அரங்கு சார்பில் சார்ல்ஸ் அவர்கள் தலைமையில் இவ்வுரையாடல் இடம்பெற்றது.
ரிக்கி பெர்ணான்டோ உரையாற்றும் வேளையில் பார்வையாளரில் ஒருவர் போட்டோ பிடிக்க முற்பட்டபோது “தயவு செய்து முகநூல் போன்ற தளங்களில் போட்டுவிடாதீர்கள். அப்புறம் இலங்கை திரும்பிச் செல்லும்போது பிரச்னையாயிடும்” என்றார்.
ரிக்கி பெர்ணான்டோ ஒரு பிரபல மனிதவுரிமை செயற்பாட்டாளர். அவர் சிங்கள பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர். இருந்தாலும் அவரே அச்சப்படுகின்ற நிலை இருக்கின்றதாயின் இலங்கையின் ஜனநாயகத்தை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
கடந்த வாரம் சுவிற்சலாந்தில் நடைபெற்ற சோசலிச முன்னனியின் கூட்டத்தில் குமார் குணரட்னம் பேசும்போதும் போட்டோ எடுக்க தான் முற்பட்டவேளை தடுக்கப்பட்டதாக அஜீவன் வீரகத்தி முகநூலில் தெரிவித்திருந்தார்.
சோசலிச முன்னனி சிங்கள இளைஞர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைப்பு. ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து வந்த அமைப்பு. அந்த அமைப்பே அச்சப்படுகிறது எனில் தமிழ் அமைப்புகளின் நிலை என்ன வென்று கூறவேண்டியதில்லை.
சிங்கள இனத்தை சேர்ந்த பிரபலமானவர்களே பாதுகாப்பு குறித்து அச்சப்படுவது இலங்கையின் இன்றைய நிலைமையை நன்கு உணர்த்துகிறது. சிங்களவர்களுக்கே இந்த நிலையென்றால் சாதாரண தமிழ் மக்களின் கதி என்ன?
இந்த நிலை மாறவேண்டும். இதற்கு காரணமான மகிந்த கும்பல் தூக்கியெறியப்பட வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

வீர வணக்கங்கள்!

நாம் உரிமைகளை இழந்தோம்
நாம் உடமைகளை இழந்தோம்
நாம் உயிர்களை இழந்தோம்- ஆனால்
நாம் உணர்வுகளை இழக்கவில்லை.
போராளிகள் புதைக்கப்படவில்லை.
அவர்கள் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்
ஆயிரமாயிரமாய் முளைத் தெழுவார்கள்!
துண்டு துண்டாய் வெட்டி எறிந்தாலும்
பொங்கும் கடல் அலைபோல்
மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்தெழுவோம்!
அடிமைத்தனத்திற்கு எதிராக
ஒடுக்குமுறைக்கு எதிராக
தமிழின விடுதலைக்காக
உயிர் துறந்த அனைவருக்கும்
வீர வணக்கங்கள்!

250 நாட்களாக இவர்கள் மதுரை சிறையில் வாடுவது ஏன்?

 250 நாட்களாக
இவர்கள் மதுரை சிறையில் வாடுவது ஏன்?
இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பது ஏன்?
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின் , கார்த்திக் ஆகிய ஆறுபேரும் கடந்த 250 நாட்களாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்திற்கும் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை வழங்கியபோதும் தமிழக அரசு தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்களை அடைத்து வைத்திருக்கிறது.
இவர்கள் மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்கள் அல்லர்
இவர்கள் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அல்லர்
இவர்கள் தங்கள மீதான வழக்கை 18 வருடம் இழுத்தடித்தவர்கள் அல்லர்
ஆனால் மக்கள் பணத்தை ஊழல் செய்து 4 வருடம் தண்டனை பெற்ற ஜெயா அம்மையாரின் தமிழக அரசு இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைத்து வைத்திருக்கிறது.
இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?
இவர்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது குற்றமா?
இவர்கள் தமிழக விடுதலைக்காக போராடியது குற்றமா?
இவர்களை விடுதலை செய்ய உரத்து குரல் கொடுப்போம்.
இவர்களுக்கு ஆதரவாய் தோள் கொடுப்போம்.
சிறையில் அடைத்து சித்திரவதை செய்தாலும்
இன உணர்வை சிதைக்க முடியாது என்பதை
தமிழக அரசுக்கு காட்டுவோம்
பெரும் படையாய் அணிதிரண்டு.

குஸ்பு அவர்களே!

செய்தி:- அப்பாவி மக்களைக் கொன்ற புலிகள் பயங்கரவாதிகள்- குஸ்பு
குஸ்பு அவர்களே!
• சதீஸ்கரில் அப்பாவி ஆதிவாசி பெண்களை கற்பழித்து கொன்று குவிக்கும் ராணுவம் பயங்கரவாதிகள் இல்லையா?
• காஸ்மீரில் சிறுவர்களைக்கூட சித்திரவதை செய்து கொலை செய்யும் ராணுவம் பயங்கரவாதிகள் இல்லையா?
• மணிப்பூரில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் ராணுவம் பயங்கரவாதிகள் இல்லையா? அப் பெண்கள் ராணுவத்தின் பாலியல் வல்லுறவுக்கு எதிராக நிர்வாணப் போராட்டம் நடத்தியதை தாங்கள் அறியவில்லையா?
• பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி நூற்றுக்கணக்காணவர்களைக் கொன்ற இந்திரா காந்தி பயங்கரவாதி இல்லையா?
• குஜராத்தில் பல அப்பாவி முஸ்லிம்களை கொன்ற மோடி பயங்கரவாதி இல்லையா?
• இந்திராகாந்தி கொலையடுத்து நாடு முழுவதும் 5000ற்கு மேற்பட்ட அப்பாவி சீக்கியர்களைக் கொன்ற காங்கிரஸ் கும்பல் பயங்கரவாதி இல்லையா?
• ஈழத்திற்கு அமைதிப்படை என்னும் பெயரில் ராணுவத்தை அனுப்பி பல்லாயிரம் அப்பாவி தமிழர்களை கொன்ற ராஜீவ் காந்தி பயங்கரவாதி இல்லையா?
• முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை கொல்ல மகிந்தவுக்கு உதவி புரிந்த காங்கிரஸ் சோனியா பயங்கரவாதி இல்லையா?

சேனனின் “ இனத்துவேசத்தின் எழுச்சி “ நூல்

• சேனனின் “ இனத்துவேசத்தின் எழுச்சி “ நூல்
சேனன் எழுதிய “இனத்துவேசத்தின் எழுச்சி” நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. 112 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் இந்தியாவில் விலை 90 ரூபா.
சேனன் இலங்கையில் பிறந்தவர். இலங்கையில் எந்த இயக்கத்திலும் செயற்படாதவர். இளம் வயதிலேயே நாட்டை விட்டு வெளியேறியவர். தற்போது லண்டனில் சோசலிசக் கட்சியில் முழுநேர செயற்பாட்டாளராக இருக்கிறார்.
2009 க்கு பிறகு தமிழகத்தில் ஈழம் பற்றிய புத்தகங்கள் நன்றாக விற்கின்றபடியால் சேனனின் ஈழம் பற்றிய எழுத்துக்களையும் புத்தகமாக்கியுள்ளனரோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
பல இணைய தளங்களில் சேனனால் எழுதி வெளியிடப்பட்ட 10 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. இவை தற்போதைய சூழ் நிலையில் எந்தளவு பொருத்தமாக இருக்கிறது அல்லது அவசியமாக இருக்கிறது என்று தெரியவில்லை.
ஏனெனில் ஒரு கட்டுரையில் புலிகளும் அரசும் யுத்தம் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை செய்ய வேண்டும் என கோரப்படுகிறது. தற்போது புலிகள் அற்ற நிலையில் இந்த கோரிக்கை பொருத்த மற்றதாகவே தோன்றுகிறது.
சேனன் தன்னை ஒரு மாக்சியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்பவர். எனவே இலங்கை இனப் பிரச்சனையை வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுக முற்படுகிறார்.
இலங்கையில் தேர்தல் ஒரு மோசடி நிறைந்தது என்கிறார். ஆனால் தேர்தல் பாதையை நிராகரிக்க தயங்குகிறார்.
அவர் ரொக்சியவாத எதிர்ப்புரட்சிகர நிலையில் இருந்து பார்ப்பதால் ஒரு சரியான புரட்சி தீர்வை முன்வைக்க முடியாதவராக இருக்கிறார்.

ட்ரொஸ்கியவாதம் பற்றி

ட்ரொஸ்கியவாதம் பற்றி

ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்;கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை  ஏதோ பெரிய முழக்கங்களாகக்  காட்ட சிலர் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.

ட்ரொஸ்;கியவாதத்தின் இன்றைய வக்கீல்கள் இதனைப் பற்றி அவ்வளவாக பேச விரும்பாவிட்டாலும் தனியொரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியுமா என்பதே ட்ரொஸ்;கியவாதிகளுக்கும் கம்யூனிசவாதிகளுக்கும் இடையிலான பிரதான பிரச்சனையாக இருந்தது. இன்று சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் பொழுது போக்கற்ற அறிவு ஜீவிகளின் விவாதத் தலைப்புகளில் இடம் பிடிப்பவை.. அதனைச் செய்ய முடியும் என்பதை ஸ்டாலின் உலகிற்கு நிருபித்தார்.

ஜரோப்பாவின் பிரதான முன்னேறிய நாடுகளில் முதலில் புரட்சிகள் நடைபெறும் என லெனின் எதிர்பார்த்தது உண்மைதான். லெனின் ஒரு சர்வதேசியவாதி. எனவே அவர் உண்மையில் இதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். ஆனால் புரட்சிவாதி விரும்பும் பாதையிலேயே வரலாறு எப்பொழுதும் செல்வதில்லை. புரட்சி ஏற்பட்ட கங்கேரி ஜெர்மனி போன்ற நாடுகளில் அது தோல்வி கண்டது. இந் நிலையில் தாம் வெற்றிக்கு இட்டுச் சென்ற ரஸ்சியப் புரட்சியை ரஸ்சியப் புரட்சியாளர்கள் என்ன செய்வது? ஸ்டாலின் வினவியவாறு “அதனை உலகப் புரட்சிக்கு காத்திருந்து கொண்டு அதன் சொந்த முரண்பாடுகளில் சிக்கி வேர்வரை அழுக விடுவதா?”

லெனின் இத்தகைய ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்தார். அவர் 1916ல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் யுத்தத்திட்டம் என்பதில்  “முதலாளித்துவதத்தின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் மிகுதியும் சமாந்திரமற்ற முறையில் நடைபெற்றது. பண்ட உற்பத்தி அமைப்பின் கீழ் வேறுவிதமாக அது நடைபெறமுடியாது. இதிலிருந்து சோசலிசம் சகல நாடுகளிலும் ஏக காலத்தில் வெற்றி பெறமுடியாது என்பது புலனாகிறது. அது முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்

இந்த லெனிசக் கருத்துக்களின் அடிப்படையில் முதலில் லெனினாலும் பின்னர் அவருடைய வாரிசான ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ்விக் கட்சி புரட்சி வெற்றி பெற்ற ஒரு நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கு படுத்தியது. வரலாறு அது சரி என நிரூபித்துவிட்டது.

ஆனால்  ட்ரொஸ்;கி வேறுவிதமாக சிந்தித்தார். பின்தங்கிய ரஸ்சியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி தப்பிப் பிழைப்பதை அவர் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் வெற்றியுடன் இணைத்தார். அவர் “உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற அரங்கில்தான் ரஸ்சியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும்” என்று ஆடம்பரமாகப் பிரகடனம் செய்தார்.

வுpவசாயிகளின் புரட்சிகர உள்ளார்ந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்காததே ட்ரொஸ்;கியின் இந்த தவறான தர்க்கத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். புரட்சி சோசலிசக் கட்டத்தை நோக்கி நகரும் போது பாட்டாளி வர்க்கத்திற்கு பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல விவசாயிகளுடனும் மோதல் ஏற்படும் என அவர் கருதினார். அதனால் அவர் இவ்வாறு கூறினார் “ ….பாட்டாளி வர்க்க முன்னனிப்படை அதன் வெற்றியை அடையப் பெறுவதற்காக அதன் ஆட்சியின் அதி ஆரம்பக் கட்டத்திலேயே நிலப்பிரபுத்துவ சொத்தைப் பறிப்பது மட்டுமல்ல முதலாளித்துவ சொத்தையும் பறிக்க நேரிடும். இதில் பாட்டாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் முதல் கட்டங்களில் தனக்கு ஆதரவளித்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல தன்னை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு காரணமாயிருந்த பரந்துபட்ட விவசாயிகளுடனும் பகைமையான மோதலில் ஈடுபட நேரிடும்”.

லெனினுடைய கருத்துக்கள் ட்ரொஸ்;கியின் கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறானவை. ரஸ்சிய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் புரட்சிப் பாத்திரம் உண்டு என்று லெனின் வாதிட்டார். இந்த விவசாய மக்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒழுங்கு படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த விசேட நேச அணி பற்றி லெனின் பின்வருமாறு வர்ணித்தார் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உழைப்பாளிகளின் முன்னனிப் படையான பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளின் பாட்டாளிகள் அல்லாத எண்ணற்ற பிரிவினருக்கும் (குட்டி பூர்சுவா சிறிய கைவினைஞைர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள் போன்றன)அல்லது பெரும்பாலான பிரிவினருக்கும் இடையில் உள்ள விசேட வடிவ வர்க்கக் கூட்டணியாகும்”.

ஆகவே விவசாயிகளுடனான கூட்டணியில் நம்பிக்கையற்ற ட்ரொஸ்;கியால் ரஸ்சியப் புரட்சிக்கு எந்த எதிர்காலத்தையும் காண முடியவில்லை. அவருடைய கருத்தில் உலகப் புரட்சிதான் அதைக் காப்பாற்ற முடியும்.ஆனால் அது நடைபெறவில்லை. ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியாது என அவர் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போல்ஷ்விக்கள் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதை நிரூபித்ததுடன் சோவியத்யூனியனுக்கு எதிரான பாசிச ஆக்கிரமிப்பின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத கொடிய தாக்குதலுக்கு எதிராகவும் அதனைப் பாதுகாத்தார்கள். வரலாறு இவ்வாறு இந்தப் பிணக்குகள் பற்றிய தீர்ப்பை  வழங்கி முன்னேறிச் சென்றது.

அடுத்து லெனினின் வாரிசு என்ற பிரச்சனையிலும் ஸ்டாலின் ட்ரொஸ்;கியின் இடத்தை அபகரித்தார் என்ற ட்ரொஸ்;கியவாதிகளின் பிரச்சாரத்தில் எள்ளவும் உண்மையில்லை என்பதை நாம் தெளிவாக காணலாம். வரலாற்றின்படி ட்ரொஸ்;கி புரட்சிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஆனால் ஸ்டாலினோ 1912ல் பிராக் மாநாட்டில் மென்ஷிவிக்குகளிடமிருந்து பிரிந்த போது போல்ஷ்விக் கட்சியில் லெனினுடன் இணை ஸ்தாபகராக இருந்தார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார். மேலும் ரஷ்யாவுக்குள்ளே புரட்சிகர வேலைக்கு வழிகாட்டுமுகமாக ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்தியக் கமிட்டி ரஷ்யசபை என்ற நடைமுறையான கேந்திரம் அமைக்கப்பட்டது. இது ஸ்டாலினுடைய தலைசிறந்த ஸ்தாபன திறமைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். லெனின் பெரிதும் வெளிநாடுகளில் இருந்து இயக்கத்திற்கு தலைமை தாங்கிய போது ரஷ்யாவுக்குள்ளே தலைமறைவுக் கட்சியை கட்டியமைத்தது ஸ்டாலின்தான்.

அப்போது 1912ல் ட்ரொஸ்;கி “ஆகஸ்ட் குழு” என்பதை மும்முரமாக ஒழுங்குபடுத்தினார். அவர் இதில் லெனினுக்கும் போல்ஷ்விக் கட்சிக்கும் எதிரான குழுக்களையும் போக்குகளையும் ஒன்றினைத்தார். அப்பொழுதுதான் லெனின் அவரை “யூதாஸ் ட்ரொஸ்;கி” என்று அழைத்தார்.

1917 மே 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் மத்திய கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஏடான “பிராவ்டா”வின் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

1917ம் ஆண்டு ஜீலை 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் ஆறாவது காங்கிரசில்தான் ட்ரொஸ்கியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அப்பொழுது லெனின் பின்லாந்தில் இருந்து மாநாட்டிற்கு வழிகாட்டினார். ஸ்டாலின்தான்; மாநாட்டிற்கு தலைமை தாங்கி பிரதான அறிக்கையை சமர்ப்பித்தார். இதிலிருந்து அக்டோபர் புரட்சியின் போது லெனினுக்கு அடுத்தபடியான பாத்திரத்தை வகித்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. இதனாற்தான் 1922ல் துப்பாக்கிக் குண்டின் காயம் காரணமாக லெனின் செயல்பட முடியாது இருந்த நிலைமையில் கட்சியின் பொதுச் செயலாளராக லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார்.

இவற்றை மறுக்க முடியாத ட்ரொஸ்க்கியவாதிகள் இறுதியில் பற்றிக்கொள்ளும் விடயம் லெனின் மரணசாசனம். இது உண்மையில் எதிர்வர இருந்த காங்கிரசுக்கு லெனின் சொல்ல எழுதப்பட்ட கடிதமாகும். இந்த காங்கிரஸ் லெனின் மறைவின் பின் 1924ம் ஆண்டு மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற்றது.இந்தக் கடிதத்தை காங்கிரசில் வாசிக்க வேண்டும் என்பதே லெனினுடைய வேண்டுகோள்.அதன்படி ஸ்டாலினே இக் கடிதத்தை வாசித்தார். இக் கடிதத்தில் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ட்ரொஸ்கியும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் ட்ரொஸ்க்கியவாதிகள் கூறுவது போல் பொதுச்செயலாளர் பதவிக்கு ட்ரொஸ்கியை நியமிக்கவேண்டும் என்று அதில் கூறப்படவில்லை. இந்தக் கடிதம் வாசிக்கக் கேட்ட பின்னர்தான் காங்கிரஸ் ஸ்டாலினை பொதுச் செயலாளராக தெரிவு செய்தது. ஒரேயொரு வாக்கு ட்ரொஸ்கியின் வாக்குதான் எதிராக விழுந்தது. அவர் தனக்குத்தானே வாக்களித்தார்.

ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவும் அவர் ட்ரொஸ்கிக்கு போதிய விவாத வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ட்ரொஸ்க்கியவாதிகள் சேறு பூசுகின்றனர். இது முற்றிலும் பொய். சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் வரலாற்றில் ஸ்டாலினைப் போல் இவ்வளவு அதிகாரம் படைத்திருந்த ஒரு தலைவர் தனது எதிரிக்கு ஸ்டாலின் ட்ரொஸ்க்கிக்கு காட்டியது போன்ற பொறுமையைக் காட்டியது கிடையாது.

விவாதங்கள் போல்ஷ்விக் கட்சிக்கு உள்ளேயும் கம்யுனிச அகிலத்திற்கு உள்ளேயும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.மீண்டும் மீண்டும் ட்ரொஸ்க்கி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.

1927 அக்டோபரில் நடைபெற்ற கட்சியின் 15வது மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு உறுப்பினரினதும் நிலைப்பாட்டை அறிவதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.724000 உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய கமிட்டியின் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.4000 பேர் ஆதாவது ஒருசத வீதத்திற்கும் குறைவானோர் ட்ரொஸ்க்கிய குழுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது ட்ரொஸ்க்கிக்கு கிடைத்த இறுதி அடியாகும்.

ட்ரொஸ்க்கிக்கு வேண்டியது ஜனநாயக விவாதமும் தீர்ப்பும் என்றால் அது போதிய அளவு கிடைத்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. தனது குழுவாத நடவடிக்கைகளை கைவிடவில்லை. கட்சியின் பொறுமை சோதிக்கப்பட்டது.1927 நவம்பர் 14 திகதி மத்திய கமிட்டி ட்ரொஸ்க்கியை வெளியேற்றியது. சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் சோவியத் யூனியனின் ஓதுக்குப்புறக் குடியரசு ஒன்றிற்கு நாடு கடத்ப்பட்டார். ஆனால் அவர் இந்த நிபந்தனையை மீறியபடியால் ஒருவருட முடிவில் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சோவியத்யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ட்ரொஸ்க்கியின் நடவடிக்கைகள் பற்றியோ சர்வதேச சோவியத் எதிர்ப்பு நடவடிக்கையின் கேந்திரமாக அவர் எப்படி மாறினார் என்பது பற்றியோ இந்தக் கேந்திரம் அவரது ஆடம்பரங்களுக்கு எவ்வாறு பெரும் தொகை பணத்தை செலவழித்தது என்பது பற்றியோ அவர் இறுதியில் பெரிதும் அரண் செய்யப்பட்ட கோட்டையில் குடியேறினார் என்பது பற்றியோ இறுதியில் அவருடைய பெண் காரியதரிசியின் காதலனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இங்கு விரிவாக கூறவேண்டியதில்லை .அவை அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான விடயங்கள்.

இன்று சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் வேறு பொழுதுபோக்கற்ற அறிவுஜீவிகள்தான் அவைபற்றி விவாதிப்பார்கள். ஆதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிருபித்துவிட்டனர். ஆனால் 1920ம் ஆண்டுகளில் ரஸ்சியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதனைச் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். இவ்வாறுதான் அப்பொழுது ட்ரொக்சியவாதத்திற்கு ஒரு சமுதாய அடிப்படை இருந்தது. ஆனால் இன்று  ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்ற ட்ரொக்சியின் தத்துவம் செத்த தத்துவம்..ட்ரொஸ்க்கியவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு உள்ளேயிருந்த தவறான தத்துவம் என்ற நிலைமையில் இருந்து பகிரங்கமான எதிர்ப்புரட்சித் தத்துவமாக மாறியுள்ளது. ட்ரொக்சிய வாதம் என்னும் எதிர்ப் புரட்சிகரத் தத்துவம் உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் புரட்சிக்கு எதிரானது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் ட்ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுவதன் அடிப்படை நோக்கத்தை ஒரு உண்மையான புரட்சியாளனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

Tuesday, November 18, 2014

• சட்டத்தின் வலையில் திமிலங்கள் சிக்குவதில்லை. சிறு மீன்களே எப்போதும் சிக்குகின்றன.

• சட்டத்தின் வலையில் திமிலங்கள் சிக்குவதில்லை.
சிறு மீன்களே எப்போதும் சிக்குகின்றன.
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் ஆறு தமிழர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. இந்த ஆறுபேருக்கும் இந்தியாவில் போதைபொருள் வழங்கிய அந்த பெரிய புள்ளிகள் யார்? என்பதோ அல்லது இலங்கையில் அதை விநியோகித்து பெரும் லாபம் ஈட்டும் அந்த பெரும் புள்ளிகள் யார்? என்பதோ தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் யார்? என்று விசாரணை கூட நடைபெறவில்லை.
இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்தில் சில அமைச்சர்கள் மட்டுமல்ல பிரதமருக்கே பங்கு உண்டு என குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அரச அமைச்சர்கள் மட்டுமல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்கூட இந்த கடத்தல் மூலம் பெரும் பணம் சம்பாதித்து திருச்சியில் பெரிய வணிக வளாகமே வைத்திருக்கிறார். ஆனால் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவும் இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை.
ராமேஸ்வரம் தலைமன்னார் ஊடாக ஒரு சில கிலோ போதைப்பொருட்களே கடத்தப்படுகின்றது. ஆனால் தூத்துக்குடி, நீர்கொழும்பினூடாக தொன் கணக்கில் கடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த பெரும் அரசியல்வாதி ஒருவருக்கும் பங்கு உண்டு என்பது வெளிப்படையான செய்திகள்.
ஆனால் இலங்கையிலும் சரி அல்லது இந்தியாவிலும்சரி இதுவரை எந்த பெரிய புள்ளியுமே போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்டவும் இல்லை. அது ஏன்?
கடந்த வருடம் ஒரு குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் சவூதியில் இலங்கையை சேர்ந்த பணிப்பெண் ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. அப்போது இலங்கை அரசு அந்த மரண தண்டனையை எதிர்த்தது. ஆனால் அதே இலங்கை அரசின் நீதிமன்றம் இன்று ஆறு பேருக்கு மரணதண்டனை அளித்துள்ளது.
மரணதன்டனைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதேவேளை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முன்னர் கொழும்பில் உள்ள பள்ளி மாணவர்களே இதனால் பெரிதும் பாதிக்கப்ட்டனர். தற்போது யாழ்ப்பாணத்திலேயே பள்ளிகூட வாசல்களில் போதைப் பொருள் விநியோகம் நடைபெறுகிறது.
எனவே ஒரு சிலரின் சுயநலத்திற்காக ஒரு சமுதாயம் கெடுவதை வேடிக்கை பார்க்க முடியாது. அந்த சுயநலவாதிகளை இனத்தின் பெயராலோ அல்லது மொழியின் பெயராலோ ஆதரிக்கவும் முடியாது.

இது என்ன நியாயம்?

இது என்ன நியாயம்?
இந்திய வரலாற்றில் 4 வருட தண்டனை பெற்ற எவரும் 21 நாட்களில் ஜாமீனில் விடுதலை பெற்றது கிடையாது. ஆனால் மக்களின் பணத்தை சுருட்டி தண்டனைக்குள்ளான ஜெயா அம்மையாருக்கு 21 நாட்களில் உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை அளித்து அந்த சாதனையை புரிந்துள்ளது.
அது ஏன் என்று கேட்டால் “ஜெயா அம்மையார் வயதானவராம். அவருக்கு பல நோய்கள் இருக்கிறதாம். எனவே ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்” என்கிறது உச்ச நீதிமன்றம்.
முன்பு சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறைவைக்கப்பட்டபோது 10 மாதம் கழித்தே உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ராஜீவ்காந்தி வழக்கில குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முனைந்தபோது இதே உச்ச நீதிமன்றமே தடுத்தது. அந்த மனு இன்னும் விசாரிக்கப்பட வில்லை.
ஆனால் மக்கள் பணத்தை சுருட்டி தண்டனைக்குள்ளான ஜெயா அம்மையாருக்கு மட்டும் உயர்நீதிமன்றம் ஜாமீனை மறுத்த நிலையிலும் உச்சநீதிமன்றம் 21 நாளில் ஜாமீன் விடுதலை அளித்துள்ளது.
ஜெயா அம்மையார் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. அவருடன் சேர்த்து அவருடைய தோழி சசிகலா மற்றும் வளர்ப்பு மகன் சுதாகரன் எல்லாம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் வயதானவர்களா? அவர்களும் நோயாளிகளா?
இவர்கள் 18 வருடம் வழக்கை இழுத்தடித்து நீதிமன்றத்தை அவமதித்தவர்கள். அதுமட்மல்ல சுதாகரன் மீது போதைபொருள் வழக்கு, மிரட்டல் வழக்கு என ஓரு “தாதா” வுக்குரிய அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்டு. குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவருக்கும் ஜாமீனில் விடுதலை வழங்கப்பட்டுள்ளதே?
இதோ இந்த படத்தில் உள்ள அகதியை பாருங்கள். இவரை ஜெயா அம்மையாரின் அரசு சிறப்புமுகாமில் வருடக்கணக்காக அடைத்து வைத்திருக்கிறது. இவரை விடுதலை செய்ய இந்தியாவின் எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை. இவர் எந்த குற்றமும் செய்யவில்லை. இவருக்கு எந்த தண்டனையும் நீதிமன்றம் வழங்கவில்லை. இவர் மீது எந்த வழக்கும்கூட இல்லை. இருப்பினும் இவரை விடுதலை செய்ய மறுப்பது என்ன நியாயம்?
“தாதா” சுதாகரனுக்கு ஒரு நியாயம்.
ஈழ அகதிக்கு இன்னொரு நியாயம்.
இது என்ன நியாயம்?

“இரும்பு பெண்” ஜெயா அம்மையாரும் ஈழத்தமிழர் ஆதரவு சுப்பு அக்காவும்

 “இரும்பு பெண்” ஜெயா அம்மையாரும்
ஈழத்தமிழர் ஆதரவு சுப்பு அக்காவும்
1993ல் டாக்டர் ராமதாஸ் மதுரையில் சிறைவைக்கப்பட்ட நேரத்தில் அவரது மனைவியார் ராமதாசின் உடல்நிலையைக் காரணம் காட்டி விடுதலை செய்யுமாறு ஜெயா அம்மையாரிடம் கோரினார். அதற்கு “சிறையில் இருக்க அஞ்சுபவர்கள் எல்லாம் எதற்கு வீர வசனம் பேசவேண்டும? எதற்கு மனைவியை அனுப்பி கெஞ்ச வேண்டும்?” என்று ஜெயா அம்மையார் நக்கலாக பதில் அளித்தார்.
ஆனால் அதே ஜெயா அம்மையார் தனக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் “தனக்கு மூட்டு வலி சுகர் எல்லாம் இருக்கு. எனவே ஜாமீனில் விடுதலை செய்யங்கள்” என்று நீதிபதியிடம் கெஞ்சினார். “இரும்புபெண்” என தன்னைக் காட்டிக்கொண்ட ஜெயா அம்மையார் தனக்கு தண்டனை என்றதும் நீதிபதியிடம் கெஞ்சி உருகியதை நாடே பார்த்து சிரித்தது.
1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டில் சுப்பு அக்காவும் அவரது கணவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். சுப்புஅக்கா ஈழத் தமிழர்கள் மீது அன்பும் ஆதரவும் கொண்டவர். அவர் சிறையில் அடைத்து வைக்கப்ட்டிருந்தபோதும் ஒரு ஈழத் தமிழரை சிறை அதிகாரிகள் தாக்கியதைக் கண்டித்து நடைபெற்ற சிறைவாசிகளின் உண்ணாவிரதத்தில் அவரும் பங்கெடுத்தார். மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் பங்குபற்றி நியாயம் கிடைக்க வழி செய்தார்.
சுப்பு அக்காவும் ஒரு பெண்தான். அவரும் வயதானவர் மட்டுமல்ல அமைச்சராகவும் இருந்தவர். இருப்பினும் அவருக்கு 10 மாதம் கழித்தே உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் விடுதலை கிடைத்தது. ஆனால் சுப்பு அக்கா தண்டனை பெற்ற குற்றவாளி அல்ல. அவர் மீது வேறு எந்த வழக்கும் இருக்கவில்லை. இருப்பினும் 10 மாதம் கழித்தே ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், தண்டனை பெற்ற குற்வாளியான ஜெயா அம்மையாருக்கு மட்டும் 21 நாளில் ஜாமீன் விடுதலை அளித்துள்ளது.
வயதானவர். நோயாளி என்று காரணங்களை கூறி ஜெயா அம்மையாரை மட்டுமல்ல அவரது கும்பல்களான சசிகலா இளவரசி சுதாகரன் போன்றவர்களையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சுதாகரன் மற்றும் இளவரசி போன்றவர்கள் வயதானவர்களா? அவர்களுக்கு என்ன நோய் உள்ளது? என்பதை உச்சநீதிமன்றம் மக்களுக்கு அறியத் தருமா?
சுப்பு அக்காவுக்கு ஒரு நியாயம்.
சுதாகரனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நியாயமா?

ஒருவனுக்கு ஒருத்தி என்னும் தமிழர் பண்பாட்டைக் கட்டிக்காப்பதில் விஞ்சி நிற்பது கலைஞர் கருணாநிதியா? யுவன் சங்கர் ராஜாவா?

• ஒருவனுக்கு ஒருத்தி என்னும் தமிழர் பண்பாட்டைக்
கட்டிக்காப்பதில் விஞ்சி நிற்பது
கலைஞர் கருணாநிதியா?
யுவன் சங்கர் ராஜாவா?
மாபெரும் பட்டி மன்றம்.
சன் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி (2015)
“தலைவர்” சாலமன் பாப்பையா- ஆண்டவன் முருகனுக்கு இரண்டு மனைவிகள். கலைஞரும் ஆண்டவர் தானே? ( பலத்த கைதட்டல்) எனவே அவரும் இரண்டு மனைவிகள் வைத்திருப்பதில் என்ன தப்பு? எண்பது வயதிலும் குஸ்பு வின் விலகலுக்காக அவர் பெரும் துயர் அடைந்தாரே. இந்த வயதிலும் அவருக்கு இருக்கும் இந்த “கெத்து” தமிழ் இனத்திற்கு பெருமைதானே!( பலத்த சிரிப்பு) எமக்கு இப்படி வாய்கவில்லையே என பொறாமைப்படலாமா? (மீண்டும் சிரிப்பு)
தனது பக்கத்தில் மனைவி, துணைவி என இரண்டு பேரை வைத்தக்கொண்டு ஒருவனுக்கு ஒருத்தியே தமிழர் பண்பாடு என்று பேசும் வல்லமை கலைஞரைவிட வேறு யாருக்கு இருக்கு?
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் இத்தனை பகிரங்கமாக பல மனைவிகளை வைத்திருக்கும் கலைஞரை சட்டம் இதுவரை தீண்ட முடியவில்லையே? சாதாரண தமிழன் இரு மனைவிகளை வைத்திருந்தால் உடனே கைது செய்து சிறையில் அடைக்கும் பொலிஸ், கலைஞரின் மனைவிகளுக்கு “சலூட்” அடிக்கிறதே!
என்னதான் 30 வயதிற்குள் 3 மனைவியரை யுவன் சங்கர் கட்டியிருந்தாலும் அவரால் ஒரே நேரத்தில் கலைஞர் போல் பல மனைவிகளை வைத்திருக்க முடியவில்லையே!
எனவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர் பண்பாட்டை கட்டிக்காப்பதில் தமிழின தலைவர் கலைஞரை விஞ்ச யுவனால் மட்டுமல்ல உலகில் எந்தவொரு தமிழனாலும் முடியாது என்று தீர்ப்பு கூறுகிறேன். (பலத்த கைதட்டல்)
குறிப்பு- தி.மு.க தொண்டர்கள் தங்கள் தலைவர் கலைஞர் இந்த தள்ளாத வயதிலும் குஸ்புவுக்காக வருத்தப்பட்ட “கெத்திற்காக” பெருமையுடன் பேசிக் கொண்டனர்.
(யாவும் கற்பனை அல்ல)

சபாஸ்! அடுத்த வருடம் “சூரன்” எதில் வருவார்?

சபாஸ்!
அடுத்த வருடம் “சூரன்” எதில் வருவார்?
சூரன் சேவல் வாகனத்தில் வந்தார்
சூரன் மயில் வாகனத்தில் வந்தார்
என்று கதைகள் படித்திருக்கிறோம்- ஆனால்
இம்முறை மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலில்
சூரன் போருக்கு “பிக்கப்” வாகனத்தில் வந்திருக்கிறார்.
அடுத்த வருடம் என்ன வாகனத்தில் வரப்போகிறார்?
“மகிந்த எயர்” லைனில் வருவாரோ!
மாத்தளைக்கு அருகில் மண் சரிவில்
300 மேற்பட்டோர் மாண்டுள்ளனர். அவர்களை
இந்த முத்துமாரியம்மனால் காக்க முடியவில்லை.
ஆனால் அது குறித்து சிந்தனையின்றி தொடர்ந்தும்
முட்டாள்தனமாக சூரன் போர் நடத்துகிறார்கள்!
இலங்கையில் மட்டுமா சூரன்போர் நடக்கிறது?
இலண்டனில் ஈலிங் அம்மனில் கூட நடந்துள்ளது.
லண்டனில் நடுரோட்டில நடத்தும் சூரன் போரைப் பார்த்து
வெள்ளைக்காரண் நக்கலாக சிரிக்கிறான்.
அதுகுறித்து இந்த பையித்தியங்களுக்கு
கொஞ்சம்கூட வெட்கம் வரவில்லையே!
சூரனை அழிக்க வந்த கடவுள் கந்தன்
மகிந்த ராஜபக்சவை என்ற அழிக்க வருவாரா?
கடவுள் கந்தன் வருவாரா? அல்லது
அடுத்த தேர்தலில் அவரும் மகிந்தவுடன் கூட்டு வைப்பாரா?

தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் மலையக விஜயம் வரலாற்றில் வரவேற்கத்தக்கதொரு மாற்றம்!

• தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் மலையக விஜயம்
வரலாற்றில் வரவேற்கத்தக்கதொரு மாற்றம்!
மலையத்தில் மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து
ஆறுதல் கூறியமை நல்லதொரு மாற்றமாகும்.
இலங்கை அரசு விரும்பாத நிலையிலும்கூட
வடமாகாண முதலைமைசர் விக்கினேஸ்வரன்
அந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து
ஆறுதல் கூறியமை வரவேற்கப்பட வேண்டியதே!
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்
அமெரிக்க, இந்திய உதவிகள் தேவையில்லை என்கிறார்.
வடக்கு கிழக்கில் இருந்து யாரும் வரத் தேவையில்லை என்கிறார்
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுதுணி கூட வழங்கப்படவில்லை.
மலையக மக்களின் தலைவர் தொண்டமான்
மண் சரிவு வரும் என்று சோதிடம் பார்ப்பதா? எனக் கேட்கிறார்.
ஆனால் இன்னொரு சிங்கள அமைச்சரோ
மண் சரிவு வரும் என்பது தமக்கு தெரியும் என்றும்
மாற்று காணி தோட்ட முதலாளிகள் தராததால்
தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்.
வட கிழக்கு மாகாண தமிழ் தலைவர்கள்
மலையகத்திற்கு விஜயம் செய்திருப்பது
மலையக மற்றும் பூர்வீக தமிழ் மக்களின்
ஜக்கியத்திற்கும் ஒருமித்த தலைமைக்கும் வழி வகுக்கும்.
தமிழ் இனமாக ஒன்று படுவோம்!
இன ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவோம்!

ஒரு பெண்மணியின் 14 வருட உண்ணாவிரத போராட்டம்!

• ஒரு பெண்மணியின் 14 வருட உண்ணாவிரத போராட்டம்!
நவம்பர்-5 , 14 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் மணிப்பூர் பெண் இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள்.
மணிப்பூரில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் விசேட கறுப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
இரோம் சர்மிளா மட்டுமல்ல மணிப்பூரில் பல பெண்கள் இதே கோரிக்கையை முன்வைத்து போராடுகின்றனர். சில பெண்கள் நிர்வாண போராட்டம்கூட நடத்தியுள்ளனர்.
ஆனால் அவர்களது நியாயமான கோரிக்கையை அன்னை சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்ற வில்லை.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும்கூட அவர்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
மாறாக அனைத்து அரசுகளும் இரோம் சர்மிளாவை சிறையிலே அடைத்து கொடுமைப்படுத்துகிறது.
இரோம்சார்மிளாவின் தொடரும் 14 வருட உண்ணாவிரதம்
• அகிம்சை போராட்டத்தின் மூலம் தீர்வு பெற முடியாது என்பதையும்
• ஆயுதப் போராட்டத்தின் மூலமே தீர்வு பெற முடியும் என்பதையும்
நன்கு உணர்த்துகிறது.
தமிழ் மக்கள் தமது ஆதரவை இரோம் சர்மிளாவுக்கு வழங்க வேண்டும்!
தமிழ் மக்கள் மணிப்பூர் மக்களுடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்!
“சிறுபான்மை இனங்களின் சிறைக்கூடமே இந்தியா” –தோழர் தமிழரசன்.

மோடி முதலில் குப்பை பெருக்க வேண்டியது இந்திய நீதிமன்றங்களிலேயே!

மோடி முதலில் குப்பை பெருக்க வேண்டியது
இந்திய நீதிமன்றங்களிலேயே!
செய்தி- “60 வயது மாதவிடாய் நின்ற பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தது பலாத்காரம் இல்லை”. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
இந்திய நீதிமன்றங்களில் குப்பை நீதிபதிகள் பெருகிவிட்டனர்.
பிரதமர் மோடி முதலில் குப்பை பெருக்க வேண்டியது
இந்திய நீதிமன்றங்களிலேயே!
மகிந்த ராஜபச்சவின் இலங்கை நீதிமன்றத்தில்கூட
இப்படியான முட்டாள் தீர்ப்பு கூறப்பட்டதில்லை.
ஆனால் ஜனநாயக நாடு என்றும்
சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்றும் கூறப்படும்
இந்தியாவிலேயே இத்தகைய முட்டாள் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இத்தகைய நீதிபதிகள் இருந்தால்
60 வயது பெண்ணை மட்டுமல்ல
6 வயது சிறுமியைக்கூட காடையர்கள்
இனி தைரியமாக பாலியல் வல்லுறவு செய்வார்களே!
ஏழைகள் தமக்கு நீதி வேண்டி நீதிமன்றம் செல்வார்கள்.
அந்த நீதிமன்றமே இப்படி நீதி வழங்கினால்
அவர்கள் இனி எங்கு செல்ல முடியும்?
இந்தியாவில் பெண்களை
அவர்கள் நம்பும் ஆண்டவனால்கூட
இனி காப்பாற்றமுடியுமா என்பது சந்தேகமே?

ஆயுதப் போராட்டம் பயனற்றதா?

• ஆயுதப் போராட்டம் பயனற்றதா?
• அகிம்சை வழியில் தீர்வு பெற முடியுமா?
ஆயுதப் போராட்டம் பயனற்றது என்றும் அகிம்சை வழியிலேயே தீர்வைப் பெறமுடியும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர் அல்லர்
ஆயுதப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவரும் அல்லர்.
அவர் அகிம்சைப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்.
தமிழ் மக்களுக்காக எந்த தியாகத்தையும் புரியாதவர்
சம்பந்தர் மூலம் பின் கதவால் பாராளமன்ற உறுப்பினர் ஆனவர்.
“ஆயுதப் போராட்டம் பயனற்றது” என்று கூற
இவருக்கு என்ன தகுதி இருக்கு?
“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்றார் தோழர் மாசேதுங். ஆனால் அகிம்சை வழியில் அரசியல் அதிகாரம் பெறமுடியும் என்று போதிக்கிறார் சுமந்திரன்.
நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்கிறார் தோழர் மாசேதுங். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன பிச்சை எடுக்க வேண்டும் என்பதை மகிந்த ராஜபக்சவே தீர்மானிக்கிறார் என்கிறார் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்கிறார் தோழர் சண்முகதாசன். ஆனால் வன்முறை பயன் தராது. அகிம்சை வழி மூலமே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று சுமந்திரன் கூறுகிறார்.
அகிம்சை போராட்டம் நடத்திய தந்தை செல்வா அது தோல்வியுற்ற நிலையில் தமிழ் மக்களை கடவுள்தான் இனி காப்பாற்ற வேண்டும் என்றார். ஆனால் பின் கதவால் பதவி பெற்ற சுமந்திரன் அகிம்சை வழியால் மகிந்தவிடம் தீர்வு பெற முடியும் என்கிறார்.
காரைநகரில் சிறுமியை கற்பழித்த கடற்படை வீரரை நீதிமன்றில் ஆஜர் செய்ய மகிந்த அரசு மறுக்கிறது. அதற்கே இந்த சட்ட வல்லுனரான சுமந்திரனால் எதுவும் செய்ய முடியவில.லை. ஆனால் 30 ஆயிரம் ராணுவம் சூழ்ந்து இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவாராம்.