Monday, March 30, 2015

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!
இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்கிறார்கள்.
இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் உள்ளது?
• மணிப்பூரில் பெண்களை கற்பழித்து தங்களுக்கு ஆண்மை உள்ளதாக நிரூபிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.
• சாதி மாறி காதலித்தால் பெண்ணை 13 பேர் கற்பழிக்குமாறு உத்தரவிடுவதற்கு நாட்டாமைக்கு சுதந்திரம் உண்டு.
• கோடிக்கணக்கான ஊழல் செய்வதற்கு சோனியாவுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சுதந்திரம் உண்டு.
• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொல்வதற்கு சுதந்திரம் உண்டு.
• கூலிப்படையை ஏவி கொலை செய்ய சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அது மட்டுமல்ல நீதியை விலை கொடுத்து வாங்கவும் அவருக்கு சுதந்திரம் உண்டு.
• பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனையும் கொலை செய்த சங்கராச்சாரிக்கு விடுதலையும் வழங்க இந்திய நீதித்துறைக்கு சுதந்திரம் உண்டு.
• இலங்கையில் 40 ஆயிரம் மக்களைக் கொல்ல இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. அதுமட்டுமல்ல தமிழக மீனவனைக் கொல்ல இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவும் இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு.
இப்படி பல சுதந்திரம் இந்தியாவில் உண்டு.
நீங்கள் எந்த சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கின்றீர்கள்?

அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயம். அப்பாவி மக்களுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?

• அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயம்.
அப்பாவி மக்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்பாவி மக்களுக்கு ஒரு நியாயமும் அரசியல்வாதிகளுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
323 ரெலிபோன் இணைப்புகளை சன் டிவிக்கு முறைகேடாக பயன்படுத்தியதில் 400 கோடி ரூபா பெறுமதியான ஊழல் செய்த தயாநிதி மாறன் இன்னும் கைது செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
2ஜி மூலம் பல லட்சம் கோடி ஊழல் செய்த கனிமொழி மற்றும் ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவும் இல்லை.
66 கோடி ரூபா மக்கள் பணத்தைச் சுருட்டிய ஜெயா அம்மையாருக்கு 4 வருடம் தண்டனை வழங்கியும்கூட 21 நாளில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை அளித்துள்ளது.
ஆனால் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு விடுதலையளிக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் நிரபராதி பேரறிவாளன் விடுதலையை வேண்டுமென்றே தாமதம் செய்கிறது.
மதுரையில் கைது செய்யப்பட்ட 6 தமிழ் இன உணர்வாளர்கள் 300 நாட்களுக்கு மேலாக மதுரை சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் இந்த தலைவர்கள் போல் ஊழல் செய்யவில்லை. மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை. மாறாக தமிழின விடுதலையை விரும்பியதே அவர்கள் செய்த தவறு.
மக்கள் பணத்தை திருடியவர்களுக்கு ஜாமீனில் விடுதலை. ஆனால் தமிழ் இன உணர்வாளர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறை.
இதுதான் இந்திய நீதியா?

• இலங்கை அரசே! முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் தோழர் குமார் குணரட்ணத்தை வெளியேற்றாதே!

• இலங்கை அரசே!
முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் தோழர் குமார் குணரட்ணத்தை வெளியேற்றாதே!
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்திருக்கும் தோழர் குமார் குணரட்ணத்தை வெளியேற்றுவதற்கு இலங்கை அரசு முயற்சி செய்கிறது.
ஓரு புறத்தில் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம் என அறைகூவல் விடும் புதிய மைத்திரி அரசானது, இன்னொரு புறத்தில் வந்திருக்கும் குமார் குணரட்னத்தை வெளியேறும்படி கூறுகிறது.
இது ஒரு அரசியல் பழி வாங்கலாகும். இது மைத்திரி அரசின் இரட்டை வேடத்தைஅம்பலப்படுத்துவதாகவே இருக்கிறது.
மாணவர்களை கொலை செய்ய உத்தரவிட்ட மகிந்த மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் கோத்பாயா மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டு தப்பியோடிய பசில் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ரஸ்சியாவில் இருந்து அழகிகளை இறக்குமதி செய்து சொகுசு பஸ்சில் உல்லாசம் அனுபவித்த மகிந்த புதல்வர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால்,
1988ல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் புரிந்த தோழர் குமார் குணரட்னம் மீது
1989ல் இலங்கை ராணுவத்திடம் தனது சகோதரனை பறி கொடுத்த குமார் குணரட்னம் மீது
ஜே.வி.பி இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகித்த குமார் குணரட்னம் மீது
இன்று முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைவராக உள்ள தோழர் குமார் குணரட்னம் மீது
இத்தகைய நீண்ட அரசியல் வரலாற்றை கொண்டிருக்கும் தோழர் குமார் குணரட்னம் மீது
இலங்கை அரசு அவசரம் அவசரமாக நடவடிக்கை எடுப்பது ஏன்?
மகிந்தவும், மைத்திரியும் ஒரே ஆளும் வர்க்கம். ஆனால் தோழர் குமார் குணரட்னம் பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுப்பதுதான் காரணமா?
அல்லது, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சமவுரிமை உண்டு என்று இன ஜக்கியத்திற்காக தோழர் குமார் குணரட்ணம் பாடுபடுவது தான் காரணமா?
அல்லது, சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தோழர் குமார் குணரட்ணம் கோருவதுதான் காரணமா?
தேர்தல் காலத்தில் தோழர் குமார் குணரட்ணத்தின் “முன்னிலை சோசலிசக்கட்சி” குறிப்பிட்டது போன்று மகிந்த போய் மைத்திரி வந்திருப்பது வெறும் முக மாற்றமே.
மாறாக, அமைப்பு மாற்றமே இலங்கையின் அனைத்து பிரச்சனைகளும் தீர்வாக அமையும். இதனை புதிய மைத்திரி அரசின் நடவடிக்கைகள் நன்கு உறுதிப் படுத்துகின்றன.

• நம்ம தமிழக முதல்வர் பன்னீருக்கு ஒரு “ஓ” போடுவோம்!

• நம்ம தமிழக முதல்வர் பன்னீருக்கு ஒரு “ஓ” போடுவோம்!
செய்தி - ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப துடிக்கிறார் கருணாநிதி- தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
நம்ம ஆம்பள சிங்கம் பன்னீருக்கு தமிழகத்தில் ஈழ அகதிகள் இருப்பதுகூட தெரிந்திருக்கிறது.
அதிசயம். ஆனால் உண்மை. நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
அவர் ஈழ அகதிகள் மீது அக்கறை கொண்டு கருணாநிதியையே அறிக்கையால் விளாசியிருக்கிறார்.
நம்பிவிட்டோம். நம்பிவிட்டோம். முதல்வர் பன்னீர் அவர்களே!
நீங்கள் உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போன்று கலைஞர் அரசும் சோனியா அரசும்தான் எமது தமிழ் இன அழிவுக்கு துணை போனது என்பது உண்மையே.
ஆனால் உங்கள் தலைவி “ஊழல் ராணி” ஜெயா அம்மையார் ஆட்சியிலும்,
இன்று உங்கள் ஆட்சியிலும் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
சிறப்புமுகாமில் உள்ள அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் நீங்கள் அகதிகள் விடயம் தொடர்பாக கருணாநிதியை குற்றம் சாட்ட என்ன தார்மீக தகுதி இருக்கு?
போதும்! உங்கள் அரசியல் லாபங்களுக்காக இனியும் ஈழத் தமிழர்களை பலிக்கடா ஆக்காதீர்கள்.
உங்களால் ஈழத் தமிழர்களை வாழவைக்காவிடினும் பரவாயில்லை.
ஆனால் அவர்களை அழிக்க துணை போகாதீர்கள்.

• சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?

• சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?
தமிழ் மக்கள் தலைமை நீதிபதி பதவி கோரவில்லை. ஆனால் தமிழர் ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் ஆளுநர் பதவி கோரவில்லை. ஆனால் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் அமைச்சர் பதவி கோரவில்லை. ஆனால் தமிழர்கள் சிலர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ் மக்கள் கோருவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே! ஆனால் அது இன்னும் ஏன் நடைபெறவில்லை?
இந்த சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.
இனியும் அவர்களை விடுதலை செய்ய தாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி ஒரு தமிழர். அவராவது கைதிகளை விடுதலை செய்ய முன்வராவிடினும் அவர்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காவது முன்வரவேண்டும்.
ஒருவர் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையைவிட அதிக காலத்தை சிறையில் கழித்துவிட்டபோதும் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லையாயின் என்ன அர்த்தம்?
அது தாமதிக்கப்பட்ட நீதி அல்லவா?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.

• பிப்-4, இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு

• பிப்-4, இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு
“இலங்கை மக்கள் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை கொண்டவர்கள்
தலைமைகளின் துரோகத்தால் தொடர்ந்தும் அடிமைகளாக இருக்கின்றனர்”
மன்னராட்சிக் காலத்தில் இந்திய மன்னர்கள் எவராலும் இலங்கை முழுவதையும் கைப்பற்றி தொடர்ந்து அட்சி செய்ய முடியவில்லை.
போத்துக்கேயராலும் முழு இலங்கையையும் கைப்பற்ற முடியவில்லை. அதுமட்டுமல்ல அவர்களால் 100 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்ய முடியவில்லை.
அதன்பின் வந்த ஒல்லாந்தர்களாலும் முழு இலங்கையை கைப்பற்ற முடியவில்லை. அவர்களாலும் 100 வருடங்களுக்கு மேல் ஆட்சி செலுத்த முடியவில்லை.
அதன்பின் வந்த ஆங்கிலேயர்களால் முழு இலங்கையை கைப்பற்ற முடிந்தாலும் அவர்களாலும் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை. 1948ல் வேறு வழியின்றி; சுதந்திரம் வழங்கினார்கள்.
முழு இலங்கையையும் கைப்பற்றிய ஆங்கிலேயர்களால் இலங்கையை இந்தியாவுடன் சேர்த்து ஆட்சி செய்ய முடியவில்லை.
அதிக தூரத்தில் உள்ள அந்தமான் தீவையும், இலட்ச தீவுகளையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்களால் அவற்றைவிட மிக அருகில் இருக்கும் இலங்கையை இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை.
அருகில் இருக்கும் சிக்கிம், பூட்டான் போன்ற நாடுகளை தனக்கு கீழே அடிமைப்படுத்தியிருப்பதுபோல் இன்றைய இந்திய அரசால் இலங்கையை ஆக்கிரமிக்க முடியவில்லை.
இந்தியாவிற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி ஏற்பட்டது. பங்களாதேசில் ராணுவ ஆட்சி எற்பட்டது. ஆனால் இலங்கையில் ஒருபோதும் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை.
ஆம். இலங்கை ஒரு சிறிய தீவு. சுமார் இரண்டு கோடி மக்களே அங்கு உள்ளனர். ஆனால் அவர்கள் சுதந்திர உணர்வு மிக்கவர்கள். வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள்.
1948 ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை 3 ஆயுதப் போராட்டங்களை அது சந்தித்துவிட்டது. இதுவரை சுமார் 3லட்சம் மக்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டாலும் மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.
ஆம். இலங்கை மக்கள் பெருமைக்குரியவர்களே!
அவர்கள் மிக விரைவில் தமது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

• புலிகளுக்கு ஒரு நியாயம். தலிபான்களுக்கு இன்னொரு நியாயம். இதுதான் அமெரிக்க நியாயமா?

• புலிகளுக்கு ஒரு நியாயம்.
தலிபான்களுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் அமெரிக்க நியாயமா?
செய்தி- ஆப்கான் தலிபான்கள் தீவிரவாதிகள் அல்ல- அமெரிக்கா அறிவிப்பு
• அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு தலிபான் காரணம் என்று கூறி தலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. தலிபான்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது.
ஆனால் புலிகள் அமெரிக்கா மீது ஒருபோதும் தாக்குதல் செய்யவில்லை. இருந்தும் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அமெரிக்கா தடை செய்தது.
• தலிபான்கள் பல அமெரிக்க போர் வீரர்களை கொன்றார்கள். குண்டு தாக்குதல் மேற்கொண்டார்கள். இருந்தும் தலிபான்கள் தீவிரவாதிகள் அல்ல என்று அமெரிக்கா அறிவிக்கிறது.
ஆனால் புலிகள் எந்தவொரு அமெரிக்க வீரரையும் கொல்லவில்லை. மாறாக தாம் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்துள்ளார்கள். இருந்தும் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறி அவர்கள் மீதான தடையை அமெரிக்கா நீடிக்கிறது.
• தலிபான்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் மத அடிப்படைவாத கொள்கைகள் பின்பற்றப்படும் என்கிறார்கள். ஆனால் புலிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரக் கொள்கையே பின்பற்றப்படும் என்றார்கள்.
இருந்தும் தலிபான்களை தீவிரவாதிகள் அல்ல என்று கூறும் அமெரிக்கா புலிகளை இன்றும் பயங்கரவாதிகள் என்றே கூறுகிறது.
• புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தடைசெய்த அமெரிக்கா
புலிகளையும் மக்களையும் அழிக்க இலங்கை அரசுக்கு உதவிய அமெரிக்கா
இன்றும் புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா
ஜ.நா வில் இலங்கை அரசுக்கு தண்டனை பெற்று தரும் என்று நம்ப முடியுமா?
• கசாப்புக் கடைகாரனிடம் கருணையை எதிர்பாhக்கும் செம்மறியாட்டின் அறியாமையைவிட மோசமான முட்டாள்தனமானது அமெரிக்காவிடம் தமிழர்கள் நீதியை எதிர்பார்ப்பது!
“அமெரிக்கா கப்பல் அனுப்பும், காத்திருங்கள்” என்று புலிகளை ஏமாற்றிய வியாபாரிகள் ,தற்போது “அமெரிக்கா நீதி பெற்று தரும், ஜ.நா வுக்கு படை எடுங்கள்” என்று தமிழ் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்கள்.
• அமெரிக்காவை நம்பும்படி கூறுபவர்கள் அமெரிக்காவை விட ஆபத்தானவர்கள்.
இதை தமிழ் மக்கள முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

• லண்டனில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

• லண்டனில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
லண்டனில் உள்ள இலங்கை தூதரலாயத்திற்கு முன்னால் இன்று (07.02.2015) மதியம் 1மணியளவில் முன்னிலை சோசலிசக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மூவின மக்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் சிங்களம,; தமிழ் மற்றும் ஆங்கில மும்மொழிகளில் இலங்கை அரசுக்கு எதிராக கோசம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சேனக்க கெட்டியராச்சி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அடுத்து பௌசர் தமிழில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து டிசா சிங்களத்தில் உரையாற்றினார்.
நேற்று பிரான்ஸ் பாரிசில் இதே போன்ற ஆர்ப்பாட்டம் முன்னிலை சோசலிசக் கட்சி சார்பில் நடைபெற்றது.
இலங்கையிலும் நாட்டின் பல பாகங்களில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
லண்டனில் கடும் குளிருக்கு மத்தியிலும் மூவின மக்களும் இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக்கு எதிராக ஒன்று திரண்டு குரல் கொடுத்திருப்பது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

• தோழர் சண்முகதாசனுடான எனது அனுபவங்கள்

• தோழர் சண்முகதாசனுடான எனது அனுபவங்கள்
இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 22வது நினைவு தினம்.
தோற்றம்- யாழ்ப்பாணத்தில் 03.07.1914 , மறைவு- இங்கிலாந்தில் 08.02.1993
தோழர் சண்முகதாசன் அவர்களுடன் அவருடைய இறுதிக் காலங்களில் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1989ல் எனது நண்பர் வரதராஜன் மற்றும் சீவகன் ஆகியோரின் உதவியுடன் தமிழக நக்சல்பாரி தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரை வீடியோ பேட்டி எடுத்தேன். தமிழீழம் குறித்த எனது கேள்விகள் பலவற்றுக்கு அவர் பொறுமையாக சிறப்பான பதில்களை அளித்தார்.(துரதிருஸ்டவசமாக தற்போது அந்த வீடியோ பிரதி யாரிடமும் இல்லை.)
1990ல் தோழர் சணமுகதாசன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் எழுதிய “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் புத்தகத்தை தமிழ்நாடு அமைப்பு கமிட்டியினரின் “கிளாரா” அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டேன்.
1983ல் இனக் கலவரத்தின் பின் தோழர் சண் வடபகுதிக்கு விஜயம் செய்த போது வடமராச்சியில் எமது தோழர்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுத்தார். அப்போது எமது கேள்விகள் அனைத்திற்கும் அவர் பொறுமையாக விளக்கம் அளித்தார்.
இயக்கங்கள் எல்லாம் இந்தியாவுக்கு அதிக அளவில் இளைஞர்களை அழைத்து சென்று பயிற்சி வழங்கியபோது 1984 தைப் பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று கூறினார்கள். இது குறித்து தோழர் சண்முகதாசன் அவர்களிடம் கேட்டபோது “இந்தியா ஒருபோதும் தமிழீழம் பெற்று தராது. ஆனால் இந்த இயக்க இளைஞர்கள் எல்லோரும் ஒரு நாள் தங்களுக்கள் அடிபட்டு சாகப் போறாங்கள்” என்றார். அப்போது நாங்கள் அவரைப் பாhத்து சிரித்தோம். ஆனால் இன்று அவர் கூறியதுதான் நடந்திருக்கிறது.
மாபெரும் ஆசான் தோழர் மாசேதுங் அவர்களுடன் பழகும் வாயப்பு எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் தோழர் மாசேதுங் அவர்களுடன் பழகிய தோழர் சண்முகதாசன் அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எமக்கு கிடைத்தமை உண்மையிலே மிக்க மகிழ்வு அளிக்கிறது.

சீமான் அவர்களே!

சீமான் அவர்களே!
சூரனை அழிக்க முருகன் வேல் ஆயுதத்தை ஏந்தினார்.
தமிழின விடுதலைக்காக பிரபாகரன் துப்பாக்கி ஏந்தினார்.
துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார் மாஓ
ஆனால் நீங்களோ தேர்தல் மூலம் தமிழன் முதலமைச்சரானால்
அனைத்து தமிழரும் விடுதலை பெறலாம் என்கிறீர்களே?
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?
தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உதவ முடியும்.
தமிழக அடிமைகள் தமது விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதே
ஈழதமிழ் அடிமைகளின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும்.
எனவே முடியுமாயின் தோழர் தமிழரசன் காட்டிய பாதையில்
தமிழக விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுங்கள்.
இல்லையேல் தயவு செய்து ஒதுங்கியிருங்கள்.
இளைஞர்களின் உணர்ச்சிகளை காயடிக்காதீர்கள்!

தமிழர் நலன் கருதியே சுதந்திரதின நிகழ்வில் பங்கு பற்றினோம்- சம்பந்தர் தெரிவிப்பு

 தமிழர் நலன் கருதியே சுதந்திரதின நிகழ்வில் பங்கு பற்றினோம்- சம்பந்தர் தெரிவிப்பு
ரனிலுடன் சேர்ந்து சிங்க கொடி ஏந்தியதும் தமிழர் நலனுக்காகவே!
மகிந்தவுடன் சேர்ந்து விருந்துண்டதும் தமிழர் நலனுக்காகவே!
சந்திரிக்காவிற்கு ஆமாம் போட்டதும் தமிழர் நலனுக்காகவே!
மைத்திரியின் சுதந்திரதின நிகழ்வில் பங்கு பற்றியதும் தமிழர் நலனுக்காகவே!
இந்திய தூதர விருந்துகளில் தண்ணியடிப்பதும் தமிழர் நலனுக்காகவே!
வாரா வாரம் இந்தியாவுக்கு படையெடுப்பதும் தமிழர் நலனுக்காகவே!
சம்பந்தரும் அவரது பரிவாரங்களும் எது செய்தாலும் அது தமிழர் நலன்களுக்காகவே?
இங்கு தமிழர் நலன் என்று அவர்கள் சொல்வது தமது நலன்களையே!
தமது நலன்களுக்காக தமிழ் இனத்தை மட்டுமல்ல
எதையும் காட்டிக்கொடுக்க அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.
சிறையில் உள்ளவர்களின் விடுதலையைக்கூட கோராதவர்கள்
தமிழர் நலன்களுக்காக பாடுபடுகிறார்கள் என்றால்
அதை நம்புவதற்கு தமிழ் மக்கள் என்ன கேனையர்களா?
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்றால் கூட நம்பலாம்.
ஆனால், இந்த சம்பந்தர் கும்பல் தமிழர் நலன்களுக்காக பாடுபடுகிறது என்றால்
ஒரு அப்பாவி குழந்தை கூட நம்பாது!

காதலர் தின வாழ்த்துக்கள்!

• காதலர் தின வாழ்த்துக்கள்!
சிறந்த தத்துவத்திற்கு எடுத்துக்காட்டு மாக்சியம்
சிறந்த நண்பர்களுக்கு எடுத்துக்காட்டு மாக்ஸ் , எங்கெல்ஸ்
சிறந்த காதலர்களுக்கு எடுத்துக்காட்டு மாக்ஸ் , ஜென்னி
பிறந்த பிள்ளைக்கு பால் புட்டி வாங்கக்கூட பணம் இல்லை.
இறந்த பிள்ளைக்கு பிரேத பெட்டி வாங்கவும் பணம் இல்லை.
வறுமையின் கொடுமையினால் அவர்கள் பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை.
ஆனாலும் வறுமையினால் மாக்ஸ் ஜென்னி காதலை பிரிக்க முடியவில்லை.
மூலதனம் எழுதிய நேரத்திற்கு நாலு காசு சம்பாதித்திருக்கலாம் என தாய் கூறினாள்.
மூலதனம் விற்று வந்த காசு தான் குடித்த சுருட்டுக்கே போதாது என்று மாக்ஸ் கூறினார்.
ஆனால் மாக்ஸ் மீது கொண்ட காதலால் ஜென்னி தன்னையே தியாகம் செய்திராவிடின்
மாக்ஸால் மூலதனம் எழுதுவதை நினைத்தே பார்த்திருக்கமுடியாது.
மாபெரும் ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “ஒரு புதிய தலைமுறை அதாவது தம் வாழ்நாள் முழுவதற்கும் தன்னிடம் ஒரு பெண்ணின் சரணாகதியைப் பணமோ வேறு எவ்விதமான சமூக அதிகாரமோ கொண்டு விலைக்கு வாங்காத ஆண்களினதும் உண்மையான காதலன்றி வேறு எந்தக் காரணத்ததுக்கும் தம்மை சரணளிக்காதவர்களும் பொருளாதார பின்விளைவுகளுக்கு அஞ்சி தம்மைத் தமது நேயத்திற்குரியோருக்கு அளிக்காதவர்களுமான பெண்களின் தலைமுறை வளர்ந்து வந்தபின்பு இப் பிரச்சனை தீர்வு பெறும். இத்தகைய மக்கள் உருவாகிய பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என்று நாம் இன்று நினைப்பது பற்றி அவர்கள் துளியளவும் அக்கறைப்படமாட்டார்கள். அவர்கள் தமது சொந்த நடைமுறைகளையும் தங்கள் சொந்த பொது அபிப்பிராயங்களையும் உருவாக்கி ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நடைமுறையுடன் நிறைவு காண்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் ஆண்களுடன் பூரண சமத்துவம் அனுபவிப்பர் என்பதில் ஜயமில்லை.”
பெண்கள் பொருளாதார ரீதியாக ஆண்களை சார்ந்திருக்காத , பெண்ணடிமை முற்றாக ஒழியும் காலத்தில் உண்மையான காதல் மலரும். அப்போது பிப் 14 ம் திகதி மட்டுமல்ல 365 நாட்களும் காதலர் தினமே!

ஆனந்திக்கு ஒரு நியாயம்! சுமந்திரனுக்கு இன்னொரு நியாயம்! இதுதான் மாவை சேனாதிராசாவின் நியாயம்?

ஆனந்திக்கு ஒரு நியாயம்!
சுமந்திரனுக்கு இன்னொரு நியாயம்!
இதுதான் மாவை சேனாதிராசாவின் நியாயம்?
தேர்தலை பகிஸ்கரிக்கும்படி கோரிய ஆனந்தியை
பெண் என்றும் பாராமல் மயங்கி விழும்வரை ஏசிய
தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள்,
அனுமதியின்றி சுதந்திரதின விழாவில் பங்குபற்றிய
தமிழர் நலனுக்கு விரோதமாக, இலங்கை அரசுக்கு ஆதரவாக
போர்க்குற்ற விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரும்
சுமந்திரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
ஆனந்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்-ஆனால்
சுமந்திரனோ மக்களால் தெரிவு செய்யப்படாத உறுப்பினர்
ஆனந்தி மீது நடவடிக்கை எடுப்பதும்
சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும்
மக்களை அவமதிக்கும் செயலாகும்.
மக்களை அவமதிப்பவர்களுக்கு
அடுத்த தேர்தலில் மக்கள்
தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
இது உறுதி!

• கலைஞர் மகள் கனிமொழி பதில் தருவாரா?

• கலைஞர் மகள் கனிமொழி பதில் தருவாரா?
வடமாகாணசபை உறுப்பினர் ஆனந்தி அவர்கள்
கலைஞர் மகள் கனிமொழியின் ஏற்பாட்டிலேயே
தனது கணவர் உட்பட பல புலி உறுப்பினர்கள்
இலங்கை அரசிடம் சரணடைந்ததாக கூறியுள்ளார்.
அவ்வாறு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த
நடேசன் உட்பட அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அப்படியாயின் கலைஞர் மகள் கனிமொழி
போராளிகள் கொல்லப்படுவதற்கு துணை போனாரா?
இது குறித்து கனிமொழி பதில் தருவாரா?
அல்லது தமிழீழத்திற்காக “டெசோ” நடத்தும்
கலைஞர் கருணாநிதியாவது பதில் தருவாரா?
தமிழின தலைவர் என தன்னை கூறிக்கொள்பவர்
தமது பதவி மற்றும் குடும்ப நலனுக்காக
தமிழின படுகொலைக்கு துணை போனாரா?
ஈழத் தமிழர்களால் இவர்களின் துரோகம்
மறக்கத்தான் முடியுமா? அல்லது
மன்னிக்கத்தான் முடியுமா?

கலைஞருக்கு மகிழ்ச்சி கொடுத்த தேர்தல் முடிவு!

• கலைஞருக்கு மகிழ்ச்சி கொடுத்த தேர்தல் முடிவு!
தி.மு.க வேட்பாளர் 1 லட்சம் வோட்டால் தோல்வி பெற்றுள்ளார்.
இருப்பினும் கலைஞர் கருணாநிதி மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
66 கோடி ரூபா மக்கள் பணத்தை சுருட்டிய ஜெயா அம்மையாருக்கு
நீதிமன்றம் நாலு வருட சிறைத் தண்டனை அளித்தது.
60 ஆயிரம் கோடி ஊழல் செய்த தன் மகள் கனிமொழிக்கு
எத்தனை வருடம் சிறைத் தண்டனை கிடைக்குமோ என
கலைஞர் கணக்கு பார்த்த வண்ணம் இருந்தார்.
ஜெயா அம்மையாரின் வேட்பாளர்
தலைக்கு 5 ஆயிரம் கொடுத்து
இடைத் தேர்தல் வெற்றியை பெற்று விட்டார்.
கலைஞர் வேட்பாளர் 1 லட்சத்தால் தோல்வியுற்றாலும்
எதிர் காலத்தில் கனிமொழி தண்டனை பெற்றாலும்
தி.மு.க வும் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறலாம்
என்ற நம்பிக்கையை கலைஞருக்கு கொடுத்துள்ளது.
ஜெயா அம்மையாரின் வெற்றி
கலைஞருக்கு கிடைத்த நம்பிக்கை!
ஆனால் இது தமிழனுக்கு கிடைத்த அவமானம்
தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட தலைகுனிவு!

ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஒரு கம்யுனிஸ்ட்டா?

ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஒரு கம்யுனிஸ்ட்டா?
ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஒரு மாவோயிஸ்ட் என்றும்
அவர் தோழர் சணமுகதாசனை தலைவராக கொண்டவர் என்றும்
அதனாலேயே ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்தவர் என்றும்
இன்றும்கூட வீட்டில் மாக்ஸ், மாசேதுங் படங்களை வைத்திருக்கின்றார்
என்றும் சிலர் தற்போது கூறி வருகிறார்கள்.
ஆனால் தோழர் சண்முகதாசன் “ இலங்கை அரசும் சிங்கள பேரினவாதிகளும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் எற்க மறுக்கின்றமையே இன நெருக்கடிக்கு தீர்வு காணமுடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எதுவுமே இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
• தலைவர் சண்முகதாசன் கூறியதை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா?
• தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை “மாவோயிஸ்ட” மைத்திரி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா?
• தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை வீட்டில் கால்மாக்ஸ் படம் வைத்திருக்கும் மைத்திரி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா?
• ஜனாதிபதி மைத்திரி பதில் அளிக்காவிட்டாலும் அவருக்கு கம்யுனிச வேசம் போட முனைபவர்களாவது பதில் தருவார்களா?
இனப் படுகொலையில் பங்கெடுத்த ஒருவரை
இராணுவத்தை விலக்க மறுக்கும் ஒருவரை
ஆக்கிரமித்த நிலத்தை தர மறுக்கும் ஒருவரை
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய மறுக்கும் ஒருவரை
இந்தியாவின் கூட்டாளியாக செயற்படும் ஒருவரை
மாவோயிஸ்ட் என்றோ கம்யுனிஸ்ட் என்றோ கூறுவது
மாசேதுங்கையும் கம்யுனிசத்தையும் அசிங்கப்படுத்துவதாகவே இருக்கும்!

தமது சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசு,

• தமது சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசு,
இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உதவிய இந்திய அரசு
ஜ.நா வின் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தருமா?
• இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு உதவிய இந்திய அரசு
தமிழர்களுக்கு உதவி செய்யும் என இனியும் நம்புபவர்களின்
அறியாமையை என்னவென்று அழைப்பது?
• கசாப்பு கடைகாரனிடம் கருணையை எதிர்பார்க்கும் செம்மறி ஆட்டின் அறியாமையைவிட இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என நம்புவது முட்டாள்தனமானது.
• காங்கிரஸ் கட்சியானாலும் பிஜேபி கட்சியானாலும்
யார் ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக்கொள்கை ஒன்றே.
தமிழர்களை அழிக்க இலங்கை அரசுக்கு உதவுவதே
இந்திய அரசின் ஒரே கொள்கையாகும்.

ஜெசிக்காவுக்காக வாக்கு போட்டவர்கள் விபுசிகாவிற்காக குரல் கொடுப்பார்களா?

• ஜெசிக்காவுக்காக வாக்கு போட்டவர்கள்
விபுசிகாவிற்காக குரல் கொடுப்பார்களா?
விஜய் டிவி பாட்டுப்போட்டியில் ஜெசிக்காவின் வெற்றிக்காக உழைத்த புலம்பெயர் தமிழர்கள் அதே உணர்வுடன் சிறுமி விபுசிகாவுக்காகவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
யாருமற்ற அந்த சிறுமி விபுசிகா மீண்டும் தன் தாயாருடன் சேர்ந்து வாழ அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
பல நாட்களாக எந்த வித வழக்கும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விபுசிகாவின் தாயார் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
விபுசிகாவின் தாயார் மட்டுமல்ல அடைத்து வைக்கப்ட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இதற்காக தமிழ் மக்கள அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
• சிராணிக்கு மீண்டும் தலைமை நீதிபதி பதவியை அளித்த அரசு
பதவி நீக்கப்ட்ட தளபதிகளுக்கு மீண்டும் பதவி வழங்கிய அரசு
சிறையில் உள்ள தமிழர்களை மட்டும் விடுதலை செய்ய மறுக்கிறது!
• அலரி மாளிகையில் பணத்தைக் கண்டு பிடித்தவர்களுக்கு
மறைத்து வைக்கப்பட்டிருந்த விமானத்தை கண்டு பிடித்தவர்களுக்கு
மகிந்தவின் விலையுயர்ந்த வாகனத்தைக் கண்டு பிடித்தவர்களுக்கு
கோத்தபாயாவின் ஆயுதக் களஞ்சியத்தை கண்டு பிடித்தவர்களுக்கு
நாமல் ராஜபக்சவின் விலையுயர்ந்த கடிகாரங்களை கண்டு பிடித்தவர்களுக்கு
தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லையா?
• மகிந்தவின் இனவாத பாதையிலேயே மைத்திரியும் செல்கிறார்.
இந்தியா எப்போதும் இலங்கை அரசை ஆதரிக்கிறது.
இவர்களை எல்லாம் நம்பி தமிழினம் அழிகிறது!

எத்தனை முட்டாள்தனமான உலகில் நாம் வாழ்கிறோம்?

• எத்தனை முட்டாள்தனமான உலகில் நாம் வாழ்கிறோம்?
மக்கள் பணம் 66 கோடியை சுருட்டி
4 வருடம் தண்டனை பெற்ற குற்றவாளி
ஜெயா அம்மையார் மீண்டும் முதல்வராக வர 
தன்னை சிலுவையில் அறைந்த முட்டாளை
சவப்பெட்டியில் வைத்து புதையுங்கள்.
முடிந்தால் உயிர் பிழைத்து வரட்டும்.
இல்லையேல் செத்தாவது தொலையட்டும்.
பூமியில் ஒரு முட்டாளாவது குறையட்டும்!
தந்தை பெரியார் வாழ்ந்த பூமியில்
இன்னும் எத்தனை நாளைக்கு
இந்த மோசடிப் பேர்வழிகளை அனுமதிப்பது?

• லண்டனில் நடைபெற்ற 6 கவிதை தொகுப்புகளின் மதிப்புரை நிகழ்வு

• லண்டனில் நடைபெற்ற 6 கவிதை தொகுப்புகளின் மதிப்புரை நிகழ்வு
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் நேற்றைய தினம் ( 01.03.2015) மாலை 4 மணியளவில் ஈழத்து தமிழ் பெண் கவிஞர்களின் ஆறு கவிதை தொகுப்புகள் பற்றிய மதிப்புரையும் கருத்து பகிர்வுகளும் “தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்” சார்பாக இடம் பெற்றன.
• “கருநாவு” – ஆழியாள் (அவுஸ்ரேலியா)
• “இன்னும் வராத சேதி” – ஊர்வசி (இலங்கை)
• “பெருங்கடல் போடுகிறேன்”- அனார் (இலங்கை)
• “எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை” – ஒளவை (கனடா)
• “நீத்தார் பாடல்” – கற்பகம் யசோதரா (கனடா)
• “ஒவ்வா” - ஸார்மிளா செய்யத் (இலங்கை)
தலைமை தாங்கவிருந்த மாதவி சிவலீலன் தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை. அதனால் பௌசர் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
சந்திரா ரவீந்திரன் மற்றும் கோகுலரூபன் ஆகியோர் மேற்கண்ட ஆறு கவிதை தொகுப்புகள் குறித்த தங்கள் மதிப்புரைகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து இறுதியாக சமூகமளிந்திருந்த பார்வையாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
அவதானிப்பு :
(1) மார்ச் -8ம் தேதி சர்வதேச மகிளிர் தினம் வருகிறது. மார்ச் முதலாம் திகதி நடைபெற்ற இந்த பெண் கவிஞர்களின் தொகுப்பு நிகழ்வு அதற்கு முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.
(2) கடந்த மாதமளவில் “எழுநா” சார்பாக10 நூல்களின் வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்றது. தற்போது ஆறு பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பு மதிப்புரையும் கருத்து பகிர்வும் நடைபெற்றுள்ளது. இவை தமிழ் இலக்கியம் குறித்த ஆரோக்கியமான நம்பிக்கையளிக்கும் நகர்வை காட்டுகிறது.
(3) பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இவ்வாறான இலக்கிய நிகழ்வை உணர்வுடன் நடத்துவோரும் அதில் பங்களிப்போரும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
(4) நண்பர் கிருஸ்ணராஜா அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இங்கு பயன்படுத்தியுள்ளேன். அவருக்கு நன்றிகள்.