Thursday, March 31, 2016

•தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசனையும் நினைவு கூர்வோம்.

•தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல
தோழர் தமிழரசனையும் நினைவு கூர்வோம்.
“பகத் சிங்கும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். பகத் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம்” என்று முன்னாள் குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் குறிப்பிட்டார். (ஆதாரம்- 24.03.1994 தினமணி)
வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர்.
நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம்.
இன்று பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வெள்ளைக்கார அரசால் தூக்கில் இட்டுக் கொல்லப்பட்டநாள் மட்டுமன்று. தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் கொள்ளைக்கார இந்திய அரசால் கொல்லப்பட்ட நாளும் ஆகும்.
தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும்.
தியாகி பகத்சிங்கை கொன்றதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறுவதை வெள்ளைக்கார அரசால் தடுக்க முடியவில்லை. அதேபோல் தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி.
தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோர் தமிழக மக்களுக்காக மட்டும் போராடவில்லை. ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள். அதனால்தான் அவர்கள் இந்திய அரசால் கொல்லப்பட்டார்கள்.
பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோரையும் தமிழக மக்களும் ஈழத் தமிழர்களும் என்று நினைவில் போற்றுவார்கள்.

மக்கள் சேவையே மகேசன் சேவையா? அல்லது மகேசன் சேவையே மக்கள் சேவையா?

மக்கள் சேவையே மகேசன் சேவையா?
அல்லது
மகேசன் சேவையே மக்கள் சேவையா?
வறுமையின் கொடுமையினால் வன்னியில் தாய் தன் பிள்ளைகளை கிணற்றில் வீசிக் கொன்றது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
கிளிநொச்சியில் ஒரு சிறுவன் பரீட்சைக்கட்டணம் கட்ட காசு இன்றி திருடியது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை
ஒரு முன்னாள் பெண் போராளி வறுமையினால் இறந்தது மட்டுமல்ல தன் இறுதிசடங்கைகூட அரசு செலவில் நடத்தும்படி கேட்டது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை.
மதுரையில் ஒரு அகதி அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் தற்கொலை செய்ததும் இவர்களுக்க கவலை இல்லை.
ஆனால் இவர்களது அக்கறை எல்லாம் 27 கோடி ரூபா செலவில் திருக்கேதீஸ்வர ஆலைய திருத்த வேலைகள் மட்டுமே.
தனது கட்டிடத்தையே குண்டு வீச்சில் இருந்து காப்பாற்ற முடியாத கடவுளுக்கு எதற்கு 27 கோடி ரூபா செலவு செய்ய வேண்டும் என்று நான் இங்கு கேட்கப் போவதில்லை.
நான் இங்கு கேட்பதெல்லாம்
மக்கள் தங்க வீடு இல்லாத நிலையில் கடவுளுக்கு ஆலயம் கட்டும்படியும்
மக்கள் கல்வி கற்க பாடசாலை இல்லாதபோது கடவுளுக்கு கோயில் கட்டும்படியும்
சிறுவர்கள் பாலுக்குகூட வழியின்றி தாயினால் கொலை செய்யப்படும்போது கோடி ரூபா செலவு செய்து கடவுளுக்கு கட்டிடம் கட்டும்படியும்
எந்தக் கடவுள் கேட்டிருக்கிறார்?
எங்கு அப்படி கேட்டிருக்கிறார்?
சம்பூர் மக்கள் இன்னமும் அகதி முகாமில் இருக்கிறார்கள். ஆனால் அதுபற்றிக் கவலையின்றி "வாழ்நாள்வீரர்" சம்பந்தர் அய்யா அங்கு பல லட்சம் ரூபா செலவு செய்து காளி கோயில் கட்டுகிறார்.
வன்னியில் மக்கள் பட்டினியால் வாடும்போது 27 கோடி ரூபா செலவில் அதுவும் இந்திய உதவியில் கோயில் கட்டுவது அவசியம்தானா?
வடமாகாண முதல்வர் விக்கி அய்யா இது குறித்து பதில் தருவாரா?
மக்களுக்கு செய்யும் சேவையே கடவுள் சேவையாகும் என்றே நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் இவர்கள் மக்கள் வாடும்போது மக்களுக்கு சேவை செய்யாமல் கடவுளுக்கு சேவை செய்கிறார்களே?
தமிழ் இனத்திற்கு ஏன் இந்த அவலம்?

அன்று சோசலிசதமிழீழம் கேட்ட கவிஞர் காசிஅனந்தன் இன்று இந்து தமிழீழம் கேட்பது யாருக்காக?

அன்று சோசலிசதமிழீழம் கேட்ட கவிஞர் காசிஅனந்தன்
இன்று இந்து தமிழீழம் கேட்பது யாருக்காக?
செய்தி- "இந்து தமிழீழம்" அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று கவிஞர் காசி ஆனந்தன் அய்யா கோரிக்கை.
• முன்னர் "சோசலிச தமிழீழம்" அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று கோரிய காசி ஆனந்தன் அய்யா அவர்கள் தற்போது எதற்காக "இந்து தமிழீழம்" அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று கோரியுள்ளார்?
• "தமிழீழம்" என்னும் எந்தப் பிரிவினைக்கும் இந்தியா ஆதரவளிக்காது என்று உறுதியாக பல முறை தெரிவித்த பின்னரும் எதற்காக கவிஞர் காசி ஆனந்தன் அய்யா இவ்வாறு கோருகிறார்?
• தமிழீழத்திற்கு மட்டுமல்ல அதிகாரம் மிக்க சமஸ்டி தீர்வுக்கும்கூட இந்தியா வலியுறுத்தாத நிலையில் எதற்காக கவிஞர் காசி ஆனந்தன் அய்யா இப்படி கோருகிறார்?
• இந்தியா தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஆள்கையில் இலங்கையில் தமிழ்தேசிய இனத்திற்கு உதவி செய்யும் என்று கவிஞர் காசி ஆனந்தன் அய்யா எப்படி நம்புகிறார்?
• இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கு உதவி செய்துவரும் இந்திய அரசு தமிழீழம் அமைக்க உதவி செய்யும் என்று கவிஞர் காசி ஆனந்தன் அய்யா எப்படி நம்புகிறார்?
• தனது நாட்டு மீனவனைக் கொல்வதைக்கூட கண்டுகொள்ளாமல் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை செய்துவரும் இந்திய அரசு தமிழீழம் அமைய உதவும் என்று கவிஞர் காசி அனந்தன் அய்யா எப்படி எதிர்பார்க்கிறார்?
• இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு உதவி செய்யாத இந்திய அரசு ஈழத்தில் உள்ள தமிழ்மக்களுக்கு உதவும் என்று கவிஞர் காசி அனந்தன் அய்யா எப்படி நம்புகிறார்?
கவிஞர் காசி அனந்தன் அய்யா அவர்களே!
இலங்கை ராணுவம் கொலை பாலியல் வல்லுறவு செய்தபோது அதற்கு எதிராக கவிதைபாடிய நீங்கள் இந்திய ராணுவம் கொலை மற்றும் பாலியல் வல்லுறவு செய்தபோது ஒரு கவிதைகூட பாடாதது ஏன் என்று உங்களை நான் கேட்கப் போவதில்லை.
எங்களை எல்லாம் கவிதை பாடி தூண்டிவிட்டு நீங்கள் மட்டும் ஏன் இந்தியாவில் போய் இருந்துகொண்டீர்கள் என்று நான் உங்களை கேட்கப்போவதில்லை.
1977ல் எல்லோரும் ஒற்றுமையாக தமிழர்விடுதலைக் கூட்டணியில் நின்றபோது நீங்கள் மட்டும் எதற்காக தமிழரசுக்கட்சியில் இருந்து இராசதுரைக்கு எதிராக போட்டியிட்டீர்கள் என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை.
இலங்கை அரசுக்கு எதிராக புலி சீருடை அணிந்து போராடிய நீங்கள் இந்திய ராணுவத்திற்கு எதிராக சண்டை தொடங்கியவுடன் வள்ளம் எறி இந்தியாவுக்கு தப்பி சென்றது ஏன் என்று உங்களை நான் கேட்கப் போவதில்லை
மருத்தவபடிப்பிற்கு தேவையான புள்ளிகள் எடுத்தும் அகதி என்பதால் நந்தினிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உங்கள் மகள்கள் இருவரும் எப்படி மருத்துவம் படிக்க இந்திய அரசு அனுமதி தந்தது என்று உங்களை நான் கேட்கப் போவதில்லை
ஈழத் தமிழர்களுக்காக இந்து தமிழீழம் கேட்பதாக கூறும் நீங்கள் உங்கள் மகளுக்கு அனுமதி எடுத்ததுபோல் ஏன் அகதி மாணவி நந்தினிக்கு மருத்துவ கல்வி பெற உதவவில்லை என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை.
அப்பாவி அகதிகளை எல்லாம் பிடித்து சிறப்புமுகாமில் அடைக்கும் கியூ பிராஞ் பொலிஸ் புலிகள் சார்பாக ராஜீவ்காந்தியுடன் பேசிய உங்களை மட்டும் ஏன் சிறப்புமுகாமில் அடைக்கவில்லை என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை.
ஈழவேந்தன், சிவாஜிலிங்கம் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையே நாட்டைவிட்டு வெளியேற்றிய இந்தியஅரசு உங்களை மட்டும் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்து அரசியல்பேச எப்படி அனுமதிக்கின்றது என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை.
முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது ஏன் இந்திய அரசை கண்டிக்கவில்லை என்றோ அல்லது வயதான பெண்மணி என்றும் பாராமல் சிகிச்சை பெற வந்த பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு திருப்பி அனுப்பியபோது ஏன் மௌனமாக இருந்தீர்கள் என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை
இந்திய ஆக்கிரமிப்பை உணர்ந்த தமிழ் சிங்கள மக்கள் ஒன்றுபட்டு இந்திய அரசின் "எட்கா" ஒப்பந்தத்தை எதிர்க்கும் இவ் வேளையில் இதுவரை மௌனமாக இருந்த நீங்கள் இப்போது எதற்காக இந்திய அரசுக்கு ஆதரவாக கோரிக்கை வைக்கிறீர்கள் என்று நான் உங்களை கேட்கப்போவதில்லை
உங்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றேயொன்றுதான்.அது ,
• அகதிகளை பிடித்து அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் சிறப்புமுகாம்களை மூடும்படி உங்களால் கோர முடியாதது ஏன்?
• பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி உங்களால் அனைத்து தமிழக கட்சிகளிடமும் கோர முடியாதது ஏன்?
• சிறப்புமுகாம்களையே மூட விரும்பாத இந்திய அரசு இந்து தமிழீழம் அமைக்க விரும்புமா?

•பசு மாட்டிற்காக குரல் கொடுக்கும் இந்திய அரசு அகதிகளை சிறப்புமுகாமில் அடைப்பது ஏன்?

•பசு மாட்டிற்காக குரல் கொடுக்கும் இந்திய அரசு
அகதிகளை சிறப்புமுகாமில் அடைப்பது ஏன்?
அகதிகளைவிட பசுமாடுகள் மதிப்பு மிக்கவையா?
செய்தி- திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 15 அப்பாவி அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்.
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி ஈழ தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 28.03.2016 முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
பசுமாட்டை சித்திரவதை செய்யக்கூடாது என்று குரல் கொடுக்கும் இந்திய அரசு அப்பாவி அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது.
இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் இந்திய அரசு "இந்து தமிழீழம்" அமைக்க உதவும் என்று எப்படி நம்புவது?
"இந்து தமிழீழம்" அமைக்க உதவும் படி கோரும் கவிஞர் காசி அனந்தன் அய்யா இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்யும்படி ஏன் இந்திய அரசிடம் கோருவதில்லை?
தனது மருத்துவ சிகிச்சைக்கு டில்லி வரும் சம்பந்தர் அய்யா இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்யும்படி ஏன் இந்திய அரசிடம்; கோர மறுக்கிறார்?
தனது குடும்பத்துடன் சென்னையில் சந்தோசமாக வாழ்ந்துவரும் மாவை சேனாதிராசா அவர்கள் இந்த அப்பாவி அகதிகள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஏன் உதவ மறுக்கிறார்?
கனடாவில் வாழும் தன் மகள் டில்லி மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற அனுமதி வாங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்காக தன் செல்வாக்கை ஏன் பயன்படுத்த தயங்கிறார்?
"டெலோ" தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புதுக்கோட்டை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்;. சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்தவர். அவர்கூட இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க மறந்து வருவது ஏன்?
ஈழத் தமிழருக்காக 27 கோடி ரூபா செலவு செய்து திருக்கேதீஸ்வரம் கோயிலை கட்டும் இந்திய அரசு அப்பாவி ஈழ அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்வது ஏன்?
தமிழர்கள் எல்லாம் இந்தி மொழி படிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய யாழப்;பாண இந்திய தூதர் இந்த அப்பாவி அகதிகள் விடுதலைபெற ஆலோசனை கூற மறுப்பது ஏன்?
ஜெயா அம்மையார் ஊழல் செய்து நீதிமன்றத்தினால் சிறை தண்டனை வழங்கிய போது அவரை விடுதலை செய்யுமாறு குரல் கொடுத்த நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமா உருத்திரகுமார் அவர்கள்; இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்யுமாறு ஜெயா அம்மையாரிடம் கேட்க மறுப்பது ஏன்?
இந்திய தூதுவரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் கொடுத்த உதவி பற்றிய அறிக்கைகளை வெளியிடும் எமது தமிழ் ஊடகங்கள் இந்த அப்பாவி அகதிகளின் உண்ணாவிரத செய்திகளை வெளியிடாமல் மறைத்து வருவது ஏன்?
தமிழக அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் "நாம்தமிழா"; சீமான் அவர்கள் மட்டுமே தாம் ஆட்சிக்கு வந்தால் சிறப்புமுகாம்களை மூடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புமுகாமிற்கு எதிராக குரல் கொடுத்து வந்த வைகோ, திருமாவளவன் போன்றவர்கள்கூட தமது தேர்தல் அறிக்கையில் சிறப்புமுகாம் பற்றி குறிப்பிடாதது வருந்தக்க விடயமே.
இந்தியாவில்,
ஈழ தமிழ் அகதிகள் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள் மட்டுமல்ல
அவர்கள் அங்கு பசுமாட்டைவிடக் கேவலமானவர்களும்கூட.

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் அவர்களுக்கு அஞ்சலிகள்

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் அவர்களுக்கு அஞ்சலிகள்
தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் நினவு நாள் இன்று ஆகும்.(29.03.2016)
தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தார் தோழர் லெனின்.
19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார்.
தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் 06.04.1991 யன்று அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார்.
தோழர் லெனின் 17.11.1993 யன்று செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார்.
தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார்.
தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும்.
குறிப்பு- தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அதனை வெளியிடவும் தோழர் லெனினுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் அதற்குரிய அனுமதியை வழங்க மறுத்துவிட்டது.
இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.

•கனடா பிரதமரும் தமிழக முதல்வரும்

•கனடா பிரதமரும் தமிழக முதல்வரும்
மக்கள் தலைவர்கள் என்றால் அதிக பாதுகாப்பு எதற்கு?
மக்கள் வரிப் பணம் இப்படி வீணாக அனுமதிக்கலாமா?
உலகின் இரண்டவது பெரிய நாடான கனடா நாட்டின் பிரதமர் சர்வ சாதாரணமாக வீதியில் திரிகிறார்.
அவர் தனது குடும்பத்துடன் எந்தவித பாதுகாப்பு பந்தோபஸ்தும் இன்றி; அமெரிக்காவிலும் நடமாடினார்.
ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் பிரதமர் மோடி அவர்கள் கறுப்பு பூனை பாதுகாப்பு இன்றி வெளியே வருவதில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் பிரதமர் மோடி அண்மையில் கோயம்புத்தூர் வந்தபோது பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி முகாமில் இருந்த அகதிகள்கூட வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஈழ அகதிகளை இப்படி கொலைக் குற்றவாளிகள் போல் கருதி முகாமிற்குள் அடைத்து வைப்பது கேவலம் இல்லையா?
இந்திய பிரதமர் நிலை இதுவென்றால் அதைவிட மோசமான நிலை தமிழக முதல்வருடையது. அவரை அம்மா என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் கறுப்பு பூனை பாதுகாப்பு இன்றி வெளியே வருவதில்லை.
ஜெயா அம்மையாரை மக்கள் மட்டுமல்ல அவருடைய மந்திரிகள்கூட சந்திக்க முடியாத நிலை. அண்மையில் மத்திய அமைச்சர் ஒருவர் தான் எவ்வளவோ முயன்றும் ஜெயா அம்மையாரை சந்திக்க முடியாமல் உள்ளது என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஜெயா அம்மையாரைப் பொறுத்தவரையில் அவர் தற்போது தமிழக முதல்வர். எனவே அவரது பாதுகாப்பை ஓரளவு நியாயப்படுத்திக்கொண்டாலும் கலைஞர் கருணாநிதிக்கு எதற்கு கறுப்புபூனை பாதகாப்பு வழங்கப்படுகிறது என்று புரியவில்லை.
அவர் தற்போது எதிர்க்கட்சி தலைவரும் இல்லை. ஒரு சாதாரண எம்.எல்.ஏ. அதுவும் சட்டசபைக்கு செல்வதில்லை. அவருக்கு எதற்கு இத்தனை செலவில் பாதுகாப்பு?
"உலக தமிழின தலைவர்" என்பவர்; தமிழ்நாட்டில் பாதுகாப்பு இன்றி நடமாட முடியவில்லை என்பது அவருக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே கேவலம் இல்லையா?
இவர்கள் இருவருக்கும் புலிகளால் ஆபத்து என்றே இந்த பாதுகாப்பு வழங்கப்ட்டு வருகிறது. தற்போது புலிகள் இல்லைத்தானே. அப்பறம் ஏன் இன்னும் இவர்கள் பாதகாப்பு விலக்கிக்கொள்ளப்படவில்லை?
ஒருபறம் முதலாளி மல்லையாக்கள் கோடிகக்கணக்கான பணத்தை ஏமாற்றிக்கொண்டு வெளிநாடு ஓடித் தப்புகிறார்கள்.
இன்னொருபுறம் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல்; செய்வது மட்டுமன்றி பாதுகாப்பு என்னும் பெயரில் மக்கள் பணத்தை வீணாக்குகின்றனர்.
இவர்களுக்காக அப்பாவி மக்கள் பாரிய கடன் சுமையை தங்கள் தலையில் சுமக்கின்றனர். இந்த அவல நிலைக்கு ஒரு முடிவு ஏற்படாதா?

•இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் சிறையில் வாடுவது ஏன்?

•இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் சிறையில் வாடுவது ஏன்?
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், கார்த்திக் ஆகிய ஆறுபேரும் இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்வதுடன் இவர்களுக்கு ஜாமீன் வழங்காமலும் அடைத்து வைத்திருக்கின்றனர்.
கொடிய சிறையில் நீண்ட நாட்கள் அடைத்து வைக்க இவர்கள் செய்த குற்றம் என்ன?
அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழகம் விடுதலை பெற வேண்டும் என விரும்பியது குற்றமா?
தோழர் தமிழரசன் பாதையில் தமிழக விடுதலைக்கு போராடியது குற்றமா?
ஈழத் தமிழின அழிவுக்கு எதிராக குரல் கொடுத்தது குற்றமா?
•60 கோடிரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்த ஜெயா அம்மையார் விடுதலை
•சங்கர ராமனை கொலை செய்த காஞ்சி சங்கராச்சாரியார் விடுதலை
•16 ஆயிரம் கோடி ரூபா கிரினைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை
•6 லட்சம் கோடி ரூபா தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசன் விடுதலை
ஆனால் தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறார்கள்.
ஆனால் இங்கே குற்றவாளிகள் தப்புகிறார்கள். அப்பாவிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
இந்த ஆறுபேரின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.
சிறையில் அடைப்பதன் மூலம் தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க முடியாது என்பதை காட்டுவோம்.

•சீ... வெட்கம்!

•சீ... வெட்கம்!
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா ?
செய்தி- தமிழ் அதிகாரிகள் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தெரிவிப்பு
தமிழ் மாணவி வித்யா தமிழ் காடையர் சிலரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
தமிழ் மாணவி ஹரிஸ்ணவி தமிழன் ஒருவனால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
தமிழ் மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றமைக்காக பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் கிரிசாந்தி என்ற மாணவி ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இன்று அந்த சந்திரிக்கா அம்மையாரே தமிழர்களைப் பார்த்து தமிழ் அதிகாரிகள் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
என்னே கொடுமை இது? தமிழ் மக்களால் தமிழ் பெண்களை பாதுகாக்க முடியாதா?
தமிழ் மகாணசபை முதல்வர் இருக்கிறார்.
தமிழ் எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார்
தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள
தமிழ் பிரதேசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட தமிழ் இந்திய தூதர் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்.
இவர்கள் எல்லாம் இருந்தும் ஏன் தமிழ் பெண்களை பாதுகாக்க முடியவில்லை?
இந்திய வீட்டு திட்டத்தை பெறுவதற்கு அதிகாரிகள் பாலியல் லஞ்சம் கோருகிறார்கள் என்று இந்திய தூதரிடமே தமிழ்பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தமிழ்மக்கள் எல்லாம் இந்தி படியுங்கள் என்று அக்கறையாக கூறிய அந்த தமிழ் இந்திய தூதர் தமிழ் பெண்களின் இந்த பாலியல் வல்லுறவு முறைப்பாடு குறித்து அக்கறையின்றி இருக்கிறார்.
பொலிஸ் அதிகாரம் தமிழர் கையில் இல்லை என்பதால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சிலர் கூறுவதும் உண்மைதான்.
ஆனால் பொலிஸ் அதிகாரம் உள்ள சிங்களப் பகுதியிலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கத்தானே செய்கிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது? அதிகாரம் மட்டுமல்ல இவ்வாறான சம்பவங்களை தடுக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையும் எமது அரசியல் தலைவர்களுக்கு வரவேண்டும்.
ஒருபுறம் பொலிஸ் மூலம் அடக்குவதோடு மறுபுறம் இதற்குரிய சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
எமது தலைவர்கள் தமிழ் மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்வதில்லை. மாறாக ,
அடுத்த தேர்தலில் எப்படி பதவி பெறுவது?
எப்படி தமக்கு சம்பள உயர்வு பெறுவது?
எத்தனை சொகுசு வாகனம் இறக்குமதி செய்வது?
எந்த வெளிநாட்டு சென்று என்ன பட்டம் பெறுவது?
என்பன குறித்தே அக்கறை கொள்கின்றனர்.
மாபெரும் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றினை; சொந்தமாகக்கொண்ட தமிழினம் இன்று தன் இனப் பெண்களையே பாலியல் வல்லுறவில் இருந்து பாதுகாக்க முடியாமல் இருப்பது வெட்கம் மட்டுமல்ல வேதனையும் கூட.

Monday, March 28, 2016

• தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

தோழர் லெனின் என்றவுடன் எல்லோரும் போல எனக்கும் நினைவுக்கு வருவது ரஸ்சியப் புரட்சியின் நாயகன் மாபெரும் ஆசான் தோழர் லெனினைத்தான். ஆனால் அதற்கடுத்து எனக்கு நினைவுக்கு வருவது தமிழ்நாடு விடுதலைப்படையை முன்னெடுத்த தோழர் லெனினே.
தோழர் லெனினை எனக்கு அறிமுகப்படுத்தியவர் புலவர் கலியப்பெருமாள் அவர்களே. ஒருமுறை புலவரை சந்திப்பதற்காக அவரது பெண்ணாடம் வீட்டிற்கு சென்ற போது ஒரு துடிப்பான இளைஞரைக் காட்டி இவர் எமது அமைப்பு தோழர், பெயர் லெனின் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் லெனின் பெயர் கொண்டவர்களை ஈழத்திலோ அல்லது தமிழகத்திலோ நான் இதற்கு முன்னர் சந்தித்ததில்லை. எனவே புலவரிடம் லெனின் என்பது அவரது சொந்தப் பெயரா? அல்லது அமைப்பு பெயரா எனக் கேட்டேன். புலவர் எனது கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக "இவரது அப்பா ஒரு மாக்சிய உணர்வாளர். அதனால்தான் அவர் தன் மகனுக்கு லெனின் என பெயர் வைத்திருக்கிறார்" என்று காரணத்தை விளக்கினார். புலவரை சந்தித்துப் பேசிய பின்பு நான் பெண்ணாடம் பஸ் நிலையத்திற்கு திரும்பி வந்தேன். அப்போது லெனின்தான் என்னை தனது சயிக்கிளில் ஏற்றிச் சென்று இறக்கிவிட்டார். அதுமட்டுமல்ல எனக்குரிய பஸ் வரும்வரை காத்திருந்து எனக்கு காப்பி வாங்கித் தந்து  உரையாடினார். அப்போது அவருடனான உரையாடலில் போராட்டத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை நான் உணர்ந்தேன்.

லெனின் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்தார். அதற்கு காரணம் நான் ஒரு ஈழப் போராளி என்பதை விடவும் தோழர் தமிழரசனுடன் அவரது இறுதிக் காலங்களில் நான் கொண்டிருந்த நெருக்கத்தை புலவர் மூலம் அவர் அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன். அதேபோல்  லெனினுடைய ஆர்வமும்  உற்சாகமும் எதிர்காலத்தில் போராட்டத்தில் சேர்ந்து பயணிப்போம் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது. எதிர்காலத்தில் நாம் இருவரும் சேர்ந்து பயணிப்போம் என்று  நினைத்தேனேயொழிய அவரைப் பற்றிய நூலுக்கு நான் அணிந்துரை எழுதவேண்டி வரும் என  ஒருபோதும் நினைத்ததில்லை. லெனின் குறித்து எனது அனுபவங்களை சொல்வதற்கு முன்னர் தோழர் தமிழரசன் குறித்த எனது அனுபவங்களை சிறிது சுருக்கமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் தோழர் தமிழரசன் உருவாக்கி முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப்படையையே அவரது மறைவுக்கு பின்னர் ஒரு காலகட்டத்தில் லெனின் தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளார்.

நான் ஈழத்தில் "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர அமைப்பைச்; சார்ந்தவன். எமது அமைப்பு மாக்சிய லெனிய மாவோயிச தத்துவ வழிகாட்டியில் புதிய ஜனநாயகப் புரட்சியை இலக்காகக் கொண்டு செயற்பட்டது. புரட்சியின் வெற்றிக்கு புரட்சிகர சக்திகளின் ஜக்கியம் அவசியம் என்பதை உணர்ந்த எமது அமைப்பானது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும்  பல புரட்கர சக்திகளுடன் உறவை மேற்கொண்டது. அவ்வாறு நாம் உறவு வைத்திருந்த புரட்சிகர அமைப்புகளில் தோழர் தமிழரசனின் அமைப்பும் ஒன்றாகும். தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த பெண்ணாடம் மாநாட்டில் எமது பேரவை அமைப்பின் சார்பாக தோழர் நெப்போலியன் கலந்து கொண்டார். பாராளுமன்ற பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்த தோழர் தமிழரசனுக்கும் அவரது தமிழ்நாடு விடுதலைப்படைக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு எமது அமைப்பின் சார்பாக தோழர் நெப்போலியன் அப்போது உறுதியளித்திருந்தார்.

எமக்கு தமிழகத்தில் வாடிப்பட்டிக்கு அருகில் ஒரு பயிற்சி முகாம் இருந்தது. அதில் தோழர் தமிழரசனுக்கும் அவரது தோழர்களுக்கும் தேவையான இராணுவ பயிற்சியை வழங்கினோம். அதுமட்டுமல்ல தேவையான ஆயுதங்;கள் மற்றும் உதவிகளையும் வழங்கினோம். அதேNளை புலவரது பெண்ணாடம் வீட்டில் எமது தோழர்களுக்கு மாக்சிய அரசியல் கல்வி புலவர், தமிழரசன் போன்ற தோழர்களால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. எமது தோழர்களுக்கு மூன்று வேளையும் உணவு தயாரிப்பது, பரிமாறுவது மற்றும் தங்க வைப்பது போன்றவை யாவற்றையும் புலவரும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக் கொண்டார்கள். இது அவர்களுக்கு பெரும் சிரமம் கொடுப்பதாக எமது தோழர்கள் கருதினார்கள். புலவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ அவ்வாறு நினைக்க வில்லையாயினும் நாங்கள் தனியாக வேறு இடம் செல்ல வேண்டும் என விரும்பினோம். எனவே ஒரு நல்ல இடம் ஏற்பாடு செய்யுமாறு தோழர் தமிழரசனிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதன்படி அவர் பெரம்பலூருக்கு அருகில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில்  மலையடிவாரத்தில் ஒரு இரகசியமான இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த இடத்தில் எமது தோழர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தமிழரசன் மற்றும் அவரது தோழர்களால் மாக்சிய அரசியல் கல்வி போதிக்கப்பட்டது. அவ் வேளைகளில் தோழர் தமிழரசன் பல நாட்கள் தொடர்ந்து எமது தோழர்களுடன் தங்கியிருந்துள்ளார். அதுமட்டுமல்ல எமது தோழர்களை அழைத்துக்கொண்டு மலையுச்சிக்கு சென்று விறகுகள் பொறுக்கி வந்துள்ளார். பல கிராமங்களுக்கு எமது தோழர்களை அழைத்துச் சென்று  ஏழை மக்களுடன் பழக வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர் மாக்சிய புரட்சிகர தத்துவத்தை மட்டுமன்றி மக்களுடன் எப்படி பழக வேண்டும் என்ற புரட்கர நடைமுறையையும் எமது தோழர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

இவ்வேளையில் இந்திய அரசானது ஈழப் போராளிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதையும், ஈழ விடுதலைப் போராட்டத்தை நசுக்க முனைவதையும் தோழர் தமிழரசன் கண்டார். எனவே அவர் "இந்திய அரசானது பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்ததுபோல் தமிழீழ விடுதலையையும் அங்கீகரிக்க வேண்டும்" எனக் கோரி மருதையாற்று ரயில் பாலத்தைக் குண்டு வைத்து தகர்த்தார். இந்த சம்பவம் தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த கோரிக்கையையும் முழு இந்தியாவும் அறியவைத்தது. இதனை விசாரணை செய்த உளவு நிறுவனங்கள் இதன் பின்னனியில் எமது அமைப்பு செய்த உதவிகளை அறிந்து கொண்டன. இதனால் ஆத்திரம் அடைந்த "றோ" உளவு அமைப்பு தமது கைக்கூலியான ஈரோஸ் அமைப்பிடம் என்னையும் தோழர் நெப்போலியனையும் கொல்லுமாறு கேட்டுக்கொண்டது. "றோ" உளவு அமைப்பு கேட்டுக்கொண்டபடி அதன் கைக்கூலி அமைப்பான ஈரோஸ் அமைப்பினால் எமது தோழர் நெப்போலியன் இலங்கையில் மலையகத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். இலங்கை இந்திய புரட்சிகர சக்திகளின் ஜக்கியம் என்னும் அடிப்படையில் தோழர் தமிழரசனின் அமைப்பினருக்கு செய்த உதவிக்காக தோழர் நெப்போலியன் பலியானார். தோழர் நெப்போலியனைக் கொன்று எமக்கும் தோழர் தமிழரசனுக்கும் இருந்த உறவை பிரிக்க முடியும் என "றோ" உளவு அமைப்பு போட்ட திட்டம் பலிக்கவில்லை. மாறாக தோழர் நெப்போலியன் படுகொலைக்கு பின்னரும் தோழர் தமிழரசனூடான எமது உறவு தொடர்ந்தது இன்னும் பலமாக.

இந்திய அரசு தனது நலன் கருதி முழு இலங்கையையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் இலங்கை இனப் பிரச்சனையில் தலையிடுகிறதேயொழிய தமிழ் மக்களின் நலன் கருதி தலையிடவில்லை என்பதை தோழர் தமிழரசன் நன்கு உணர்ந்திருந்தார். எனவே இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற ஈழத் தமிழ் மக்களும் தமிழக மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆயிரக் கணக்கில் தமிழக இளைஞர்கள் இலங்கை சென்று ஈழத் தமிழருடன் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் போராடுவதன் மூலமே இந்திய தலையீட்டை தடுக்க முடியும் என்று அவர் கருதினார். அதன்படி இலங்கையில் உள்ள நிலைமைகளை நேரில் அவதானித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள விரும்பினார். இலங்கை வருவதற்காக அவர் இரண்டு முறை வேதாரணியம் கடற்கரைக்கு வந்து காத்து இருந்தார். துரதிருஸ்டவசமாக அவரது விருப்பத்தை அப்போது எம்மால் நிறைவேற்ற முடியாமற் போய்விட்டது. ஒருவேளை அவரது அந்த பயணம் நடந்திருந்தால் பின்னர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அவலம் நிகழாமல் தவிர்க்கப்பட்டிருக்குமோ என இப்போது அடிக்கடி நினைத்து நான் வருந்துவதுண்டு.

இவ்வேளையில் தமிழகத்தில் தங்கியிருந்த ஈழப் போராளி அமைப்பு ஒன்றிடம் புலிகள் இயக்கத்தை அழிக்குமாறு கோரி பெருமளவு ஆயுதங்கள் இந்திய உளவு அமைப்பு "றோ" வினால் வழங்கப்பட்டது. அந்த ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட அந்த அமைப்பின் பொறுப்பான மூன்று நபர்களுக்கு அதனை புலிகளுக்கு எதிராக பயன்படுத்துவதில் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் தங்களை வைத்து புலிகளை அழிக்க இந்திய உளவு அமைப்பு போடும் திட்டத்திற்கு ஒத்துழைக்க விரும்பவில்லை. அதனால் அந்த ஆயுதங்களை இரகசியமாக எமது அமைப்பிடம் ஒப்படைக்க விரும்பினார்கள். அதற்குமாறாக தங்கள் மூவரையும் பாதுகாப்பு கருதி ஏதாவது வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டார்கள். அந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டால் உடனடியாக இலங்கைக்கு எடுத்தச் செல்வதற்குரிய வசதி அப்போது எமது அமைப்பிடம் இருக்கவில்லை. எனவே நாங்கள் அந்த விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இதனை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் தான் அந்த நபர்கள் வெளிநாடு செல்வதற்குரிய பணத்தை எற்பாடு செய்வதாகவும் எப்படியாவது அந்த ஆயதங்களை பெற்று தமக்கு தருமாறு கேட்டார்.

அந்த மூன்று நபர்களையும் வெளிநாடு அனுப்புவதற்கு அப்போது மூன்று லட்சம் ரூபா தேவைப்பட்டது. இதனை தனக்கு தெரிந்த பலரிடம் கூறி பணத்தை திரட்டித் தரும்படி தோழர் தமிழரசன் கேட்டார்.  ஆனால் அவர் எதிர்பார்த்தபடி உடனடியாக அந்த தொகையை திரட்ட முடியவில்லை. எனவேதான் வேறு வழியின்றி அவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் அவர் வங்கியை கொள்ளையடிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொண்ட உளவு அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி அவரையும் அவருடன் கூடச் சென்ற தோழர்களையும் கொன்று குவித்தனர். தோழர் தமிழரசனையும் அவரது தோழர்களையும் கொன்று அழித்ததன் மூலம் தமிழ்நாடு விடுதலைப்படையை அழித்துவிட்டதாக  தமிழக காவல்துறையும் அதன் உளவு அமைப்புகளும் அறிக்கை விட்டன. தாம் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விட்டதாக அவை கனவு கண்டன.

என் வாழ்வில் பல இழப்புகளையும் நெருக்கடிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் தோழர் தமிழரசன் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்தது. அதேNளை தமிழ்நாடு விடுதலைப்படையை மீண்டும் கட்டுவதற்கும் தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைக்கான போராட்டம் தொடர்வதற்கும் என்னால் இயன்ற பங்களிப்பை செய்யவேண்டியது எனது கடமை என்ற உணர்வையும் அது எனக்குக் கொடுத்தது. அதனால் தோழைர் தமிழரசன் முன்னெடுத்த பாதையை தொடர்வதற்கு விருப்பம் கொண்ட தோழர்களை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை எமது அமைப்பின் சார்பாக நான் வழங்கினேன். மிகவும் குறுகிய காலத்திற்குள்ளேயே மீண்டும் தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டி எழுப்பினோம். இதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து அமைதிப்படை என்னும் பேரில் இலங்கை சென்ற இந்தியராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தது. பல பெண்களை பாலியல் வல்லறவு செய்தது. கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுடைய சொத்துக்களை சேதமாக்கியது. அதுமட்டுமல்ல இத்தனையையும் செய்துவிட்டு தொலைக்காட்சி மூலம் பொய்ப்பிரச்சாரம் செய்தது.

இவ்வேளையில் தாம்பரத்திற்கு அருகில் கௌரிவாக்கம் என்னும் இடத்தில்  நான் இருந்து வருவதை அறிந்து கொண்ட கியூ பிராஞ் பொலிஸ் என்னை கைது செய்ய முயற்சி செய்தது. ஆனால் அந்தவூரைச் சேர்ந்த சில இளைஞர்களின் முயற்சியால் நான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக் கொண்டேன். தமிழகத்தில் எனக்கு நெருக்கடி அதிகரித்தமையினாலும் நாட்டில் எமது அமைப்பு பணியின் காரணமாகவும் நான் இலங்கை திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விமானம் மூலம் இலங்கை செல்ல முடிவு செய்து அதற்காக திருச்சி சென்றேன். அங்கு எனது பயணத்திற்கு வேண்டிய ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டி சில நாட்கள் தங்கியிருந்தேன். அவ்வேளையில் பெண்ணாடம் சென்று புலவரைச் சந்தித்தபோதுதான் லெனினை கண்டேன்.

லெனினுடனான எனது முதல் சந்திப்பு ஒரு சில மணி நேரமாயினும் போராட்டம் குறித்த அவரது ஆர்வமும் அக்கறையும் மட்டுமல்ல  தோழமை அணுகுமுறையும் அவரை நான் நினைவில் கொள்ள வைத்தன. திருச்சியில் நான் தோழர் மாறனுடன் தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் சில பயிற்சிகளை பெற விரும்பினார். எனவே அதற்கு வசதியான இடத்தை தேடியபோது புலவர் தனது தோட்டத்திற்கு அருகில் பெண்ணாடம் ஆற்றங்கரையில் செய்யலாம் என்றும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் கூறினார். எனவே அதன்படி ஒருநாள் மாலை நேரம் தோழர் மாறனுக்கும் அவருடன் சேர்த்து புலவர் அறிமுகப்படுத்திய இன்னொரு தோழருக்கும் தேவையான பயிற்சிகளை நான் வழங்கினேன். அப்போது எமக்கு உதவியாகவும் பாதுகாப்பிற்காகவும் புலவரால் அனுப்பப்பட்டவர் லெனின். இது அவருடான எனது இரண்டாவது சந்திப்பாகும்.
பயிற்சியின் போது பாரிய சத்தங்கள் ஏற்பட்டன. இதனால் அங்கு வயல் வேலை முடிந்து வந்து கொண்டிருந்த பெண்கள் பயந்து அலறியடித்து ஓடினார்கள். அவர்களிடம் சென்று "பயப்படாதீர்கள். கோயில் திருவிழாவுக்காக வாணவெடி விட்டு பழகிறோம்" என சொல்லி சமாளித்தார். அதேவேளை அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு அருகில் தமது இரு நண்பர்களை நிறுத்தியிருந்தார். ஒருவேளை பொலிஸ் சந்தேகம் கொண்டு வெளியே வந்தால் தகவல் சொல்வதற்காக அவர்களை நிறுத்தியிருந்தாக பின்னர் அவர் என்னிடம் கூறினார். ஆனால் நல்ல வேளையாக சத்தங்கள் கேட்டிருந்தும் இருட்டு நேரமாகையால் பொலிசார் வெளியே வந்து பார்க்க முயலவில்லை.

பயிற்சி முடிந்ததும் புலவர் வீட்டில் எமது இரவு உணவை அனைவரும் உட்கொண்டோம். எல்லோரும் மிகுந்த மகிழ்வுடன் இருந்தோம். விடைபெறும்போது புலவர் எனது கரங்களைப் பற்றி " தோழர் நீங்கள் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தில் என்றும் நினைவு கூறத்தக்கவை. பாதுகாப்பாக ஊர் போய் சேர்ந்ததும் தகவல் அனுப்புங்கள்" என்றார். அதற்கு நான்  "என் வரலாற்றுக் கடமையைத்தானே நான் செய்துள்ளேன்" என்று பதில் அளித்துவிட்டு அவருடைய வீட்டிலிருந்து கிளம்பினேன். என்னையும் தோழர் மாறனையும் லெனினே சயிக்கிளில் ஏற்றிச் சென்று பெண்ணாடம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார். அப்போது பல்வேறு இடங்களில் அவர் நிறுத்தி வைத்திருந்த பல இளைஞர்கள் வருவதைக் கண்டபோது எனது பாதுகாப்பு குறித்து அவர் கொண்டிருந்த அக்கறையை என்னால் உணர முடிந்தது. அதுமட்டுமன்றி புலவர் வீட்டில் நாம் அனைவரும் உணவு உட்கொண்டபோதும் பஸ்க்கு காத்திருக்கும் அந்த சொற்ப நேரத்திலும் காப்பி வாங்கி கொடுத்து என்னை அருந்த வைத்த அவரது ஆர்வம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரும் அன்று எதிர்பாராதவிதமாக பயிற்சிகளில் கலந்துகொண்டார். அதனால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இறுதியாக பஸ் வரும்போது நான் விடை பெற்றவேளை அவர் எனது கரங்களை இறுகிப் பற்றியதும் எமது பஸ் மறையும்வரை அவர் கை ஆட்டிக்கொண்டே நின்றதும் இன்றும் என் நினைவில் அழியாமல் இருக்கின்றது.

நான் பாதுகாப்பாக இலங்கையில் எனது ஊருக்கு போய் சேர்ந்ததும் தமிழ்நாடுவிடுதலைப் படையின் தாக்குதல் பற்றிய செய்திகளை அறிந்தேன். இந்திய அமைதிப்படை மேற்கொண்ட அக்கிரமங்களை மறைத்து பொய்ப்பிரச்சாரம் செய்தமைக்காக கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்று கிண்டியில் உள்ள நேரு சிலை மீதும், மற்றும் ஊட்டி பூங்காவில் உள்ள இந்திய வரைபட சின்னத்தின் மீதும் ஏக காலத்தில் தமிழ்நாடு விடுதலைப்படையினால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. எந்த தமிழ்நாடு விடுதலைப்படையை அழித்து விட்டதாக தமிழக காவல்துறை அறிக்கை விட்டதோ அதே தமிழ்நாடு விடுதலைப்படையால் அதுவும் ஏக காலத்தில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்ற செய்தி அறிந்து நான் மிகவும் மகிழ்சி அடைந்த அதே நேரத்தில் அத் தாக்குதலில் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தி என்னை மிகவும் கவலை கொள்ள வைத்தது. தோழர் மாறனுடன் நான் சில நாட்களே பழகியிருந்தாலும் அந்த சில நாட்களில் அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியிருக்கிறேன். உண்மையில் அவருடைய தோழமை உணர்வுகள் மறக்க முடியாதவை.

இலங்கையில் நான் இருந்தபோது நிலைமைகள் மிகவும் மோசமடைந்தன. எனது பாதுகாப்பு கருதி நான் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. எனவே விமான மூலம் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தேன். சென்னையில் நான் இருந்த வேளை தோழர் சண்முகதாசன் எழுதிய "ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்" என்னும் நூலை தமிழ்நாடு அமைப்பு கமிட்டி என்னும் புரட்கர அமைப்பின் "கிளாரா" அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டேன். அவ்வேளை ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் அரசு மத்திய அரசினால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தீவிரவாதிகளுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டியே அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரத்தையும் மத்திய அரசால் காட்ட முடியவில்லை. இதனால் கலைஞர் மீதும் அவருடைய தி.மு.க மீதும் மக்களின் அனுதாப அலை ஏற்பட்டது. எனவே தேர்தலில் தி.மு. க வே மீண்டும் வெல்லும் என்ற நிலை காணப்பட்டது.

கலைஞரின் தி.மு.க கட்சியானது தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்று நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த மத்திய புலனாய்வு துறையானது அதற்கு என்னைப் பயன்படுத்த முனைந்தது. அதற்காக கியூ பிரிவு டிஎஸ்.பி ராமையாவினால் கைது செய்யப்பட்ட நான் மத்திய புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டேன். தி.மு.க வினருடன் சேர்ந்து தமிழ்நாட்டில் பல இடங்களில் குண்டு வைக்கத் திட்டம் போட்டதாக வாக்குமூலம்; கொடுக்குமாறு அவர்கள் என்னை நிர்ப்பந்தித்தனர். அவர்களின் திட்டத்திற்கு சம்மதித்தால் சில மாதங்களின் பின்னர் என்னை விடுதலை செய்து நான் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் கூடவே எனக்கு பல லட்சம் ருபா பணம் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். மாறாக நான் அவர்களுடைய திட்டத்திற்கு சம்மதிக்க மறுத்தால் வழக்கு போட்டு பல வருடங்கள் சிறையில் அடைப்போம் என மிரட்டினார்கள். நான் அவர்களின் திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்தேன். அவர்கள் மிரட்டியபடியே என் மீது கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கை போட்டு மதுரை சிறையில் அடைத்தார்கள். நான் ஜாமீனில் விடுதலை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் அடைத்தார்கள். அதன் பின்பு எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தும் அவ்வாறு விடுதலை செய்யாமல் வேலூர் சிறப்பு முகாமில் என்னை அடைத்தார்கள். வேலூர் சிறப்புமுகாமில் வைத்திருந்தவேளை நீதிமன்றத்தில் என்னை ஆஜர் செய்யாமையினால் கொடைக்கானல் நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டேன். இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துறையூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டேன். துறையூர் சிறப்புமுகாம் மூடப்பட்டதையடுத்து பின்னர் மேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டேன். இவ்வாறு சிறை மற்றும் சிறப்புமுகாம் என மாறி மாறி மொத்தம் எட்டு வருடங்கள் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். இறுதியாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.

சிறப்பு முகாம் என்பது சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் ஆகும். ஏனெனில் இங்கு சிறையில் அளிக்கப்படும் வசதிகள் மற்றும் உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன. குறிப்பாக சிறையில் எமக்கு பத்திரிகை வழங்கப்படும். புத்தகங்கள் சஞ்சிகைகள் வாசிக்க அனுமதி அளிக்கப்படும். தொலைக்காட்சி பார்க்க வசதி செய்து தரப்படும். முக்கியமாக  பார்வையாளர்கள யாவரும்; அனுமதிக்கப்படுவர். ஆனால் சிறப்புமுகாமில் இவை எதுவுமே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகை அனுமதிக்கப்படாததால் சாப்பாடு கட்டி தரும் பார்சல் பேப்பர்களை படித்து செய்திகளை அறிந்து வந்தோம். இதனை தெரிந்து கொண்ட கியூ பிராஞ் பொலிசார் உடனே எமக்கு புரியாத மலையாள கன்னட மொழிப் பேப்பர்களிலேலே சாப்பாடு கட்டித் தர ஒழுங்கு செய்து விட்டார்கள். இதனால் வெளியில் நடக்கும் செய்திகள் எதுவும் தெரிந்து கொள்ள முடியாத நிலையிலே நாம் வைக்கப்பட்டிருந்தோம். ஆனால் என்மீதான வழக்கிற்காக நீமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது நீதிமன்றத்தில் எனது வழக்கு தோழர்களிடம் இருந்து செய்திகள் அறியும் வாய்ப்பு எனக்கு இருந்தது. இதனையும் தடுக்க கியு பிராஞ் பொலிஸ் பல வழிகளில் முனைந்தது. இருந்தாலும்  தோழர்கள் எனது வழக்கறிஞர் மூலமாவது உரிய செய்திகளை எனக்கு அறிய தந்துகொண்டிருந்தார்கள்.

நான் வேலூர் சிறப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்தவேளை ஆரம்பத்தில் ஒரு ஏட்டு மற்றும் ஒரு காவலராக மொத்தம் இருவரே என்னை அரச போக்குவரத்து பஸ்சில் கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வார்கள். ஆனால் திடீரென ஒரு முறை  வழக்கத்திற்கு மாறாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று ஜீப் வண்டிகள் மற்றும் ஒரு பெரிய வண்டியில் என்னை பலத்த காவலுடன் கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றார்கள். அவ்வாறு அழைத்தச் செல்லும்போது திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டபடி என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு காட்டினார்கள். அப்போது அவர் தமிழ்நாடு மக்கள் விடுதலைப்படை தளபதி தோழர் நாகராசனை கடந்தவாரம் தான் சுட்டுக்கொன்றதை பெருமையாக கூறியதுடன் "அவன் ஒரு கொள்ளைக்காரன். எனவே தான் சுட்டுக் கொன்றேன்" என்று தன்னை நியாயப்படுத்தினார். மேலும் அதன்பின் அவருக்கு சம்பந்தம் இல்லாத நிலையிலும் அவர் எனக்கு காவலாக கொடைக்கானல் வந்தார். என்னை அவர் பார்க்க விரும்பியது. என்னிடம் தோழர் நாகராசன் படுகொலை பற்றி பேசியது. அத்துடன் காவலாக கொடைக்கானல் வந்தது எல்லாம் எனக்கு ஆச்சரியத்தையும் அவர்மீது சந்தேகத்தையும் கொடுத்தது. அதனால் கொடைக்கானல் நீதிமன்றத்தில் எனது தோழர்களிடம் இந்த விபரங்களைக் கூறினேன். உடனே அவர்கள்  "இவர்கள் ஏதோ சதி செய்கிறார்கள். உங்களை சுட்டுக்கொல்ல திட்டம் போடுகிறார்கள் போல் இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று நீதிபதியிடம் மனுக் கொடுங்கள்" என்று எச்சரித்தார்கள். அவர்கள் அவ்வாறு கூறியது உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்ட நானும் உடனே காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபுவினால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறும் கோரி நீதிபதியிடம் மனுக் கொடுத்தேன். எனது மனுவைப் பெற்றுக்கொண்ட நீதிபதி அன்று இரவு என்னை கொடைக்கானல் கிளைச்சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். மேலும் அடுத்த நாள் பகல் வேளையில் என்னை வேலூர் முகாமிற்கு அழைத்தச் செல்ல வேண்டும் என்றும் அப்போது காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு காவலுக்கு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டார். தோழர்களின் எச்சரிக்கை உணர்வினாலேயே நான் காப்பாற்றப்பட்டதாக உணர்கிறேன். ஏனெனில் இதே காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபுவினால் பின்னர் சென்னையில் தோழர்கள் இராசாராமன் மற்றும் புதுக்கோட்டை சரவணன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஒருமுறை என்னை நேரில் பார்க்க விரும்பிய தோழர் இளவரசன் புலவருடன் சேர்ந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் எனது வழக்கில் இல்லாததால் என்னை பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார். இதனால் புலவர் மட்டும் அனுமதி பெற்று என்னைப் பார்த்து பேசுவதற்காக நீதிமன்ற வாசலில் பொலிஸ் வண்டிக்குள் அமர்ந்திருந்த என்னிடம் வந்தார். புலவரை யார் என்று தெரியாத ஒரு பொலிஸ்காரர் "யோவ் பெரிசு அங்கால போய்யா, இங்காலயெல்லாம் வரக்கூடாது" என்று மரியாதைக் குறைவாக திட்டிவிட்டார். இதனால் பெரும் கோபம் அடைந்த புலவர் உடனே அந்த பொலிஸ்காரர் சட்டையை பிடித்து "எப்படி நீ உன்னைவிட வயசான என்னை மரியாதைக் குறைவாய் திட்டலாம்?" எனக் கேட்டு சண்டைக்கு போய்விட்டார். இதைப் பார்த்த எமது  வழக்கு தோழர்கள் 15 பேரும் உடனே ஒடிவந்து புலவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அவர்கள் மட்டுமல்ல வழக்கறிஞர்கள் மற்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் எல்லாம் பொலிசாருக்கு எதிராகவே குரல் எழுப்பினார்கள். விடயம் விபரீதமாக மாறுவதை உணர்ந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உடனே தலையிட்டு அந்த பொலிஸ்காரரை புலவரிடம் மன்னிப்பு கேட்கவைத்து பிரச்சனையை மேலும் வளர விடாமல் முடித்துக்கொண்டார்கள். அதன் பிறகு புலவர் என்னிடம் பேசினார். அப்போது இளவரசன் சந்திக்க வந்திருக்கும் விடயத்தை கூறினார். இளவரசன் கொடுத்தனுப்பிய 500 ரூபா பணத்தை என்னிடம் ஒப்படைத்தார். தூரத்தில் இளவரசன் என்னை பார்த்தக்கொண்டு நிற்பது தெரிந்தது. ஆனால் அவருடன் நேரில் பேச வாய்ப்பு கிடைக்காமற் போனது எனக்கு வருத்தமாக இருந்தது.

இவ்வாறு பல சிரமங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலேதான் எனது தோழர்கள் வெளியே நடக்கும் செய்திகளை எனக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக தமிழ்நாடு விடுதலைப்படை மேற்கொண்ட காவல் நிலைய தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் யாவும் எனக்கு அறிய தந்தார்கள். தோழர் லெனின் தலைமையில் தமிழ்நாடு விடுதலைப்படை முன்னெடுத்த இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை அறிந்தபோது நான் பெரு மகிழ்ச்சி கொண்டேன். ஆனால் எனது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. நான் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த லெனின் இறந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரத்தை கொடுத்தது. முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் வசந்தா என்ற பெண்;ணை பொலிசார் பாலியல் வல்லுறவு செய்து கொன்றமைக்கு பழி வாங்குமுகமாக வெடி குண்டுகளுடன் சென்று கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் குண்டுகள் வெடித்து லெனின் பலியானார் என்ற விபரம் தோழர்கள் மூலம் அறிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல லெனினை காப்பாற்றியிருக்ககூடிய வாய்ப்பு இருந்தும் பொலிசார் வேண்டுமென்றே எந்த மருத்தவ சிகிச்சையும் அளிக்காமல் அவரைக் கொன்று விட்டார்கள் என்பதை அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.

அரசும் அதன் காவல்துறையும் போராளிகளைக் கொன்று குவிப்பதன் மூலம் போராட்டத்தை நசுக்கிவிட முடியும் என கனவு காண்கிறார்கள். ஆனால் போராளிகள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். அவர்களில் இருந்து ஆயிரமாயிரம் போராளிகள் முளைத்து எழுவர் என்ற உண்மையை இந்த அரசும் அதன் காவல்துறையும் உணர்வதில்லை. ஆனால் இந்த உண்மையை தோழர் தமிழரசனில் இருந்து லெனின் முளைத்து எழுந்ததும் அதன் பின்னர் லெனினில் இருந்து பல நூற்றுக்கணக்கான போராளிகள் முளைத்ததும்; நிரூபிக்கின்றன. இன்று தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையில் பலபேர் அணிதிரண்டு செல்வது, தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை நசுக்க முடியாது என்ற உண்மையை பறைசாற்றுகின்றது.

இந் நூலை எழுதியுள்ள தோழர் செந்தமிழ் குமரனின் பணியையும் உணர்வையையும் நான் பாராட்டுகிறேன். மிகவும் பாடுபட்டு இந்த வரலாற்று நூலை அவர் தந்திருக்கிறார். லெனினுடைய போராட்ட பங்களிப்பை மக்கள் அறிய வைக்கும் இவரது இந் நூல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனெனில் லெனின் மற்றும் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றிய பல தோழர்களின் வரலாறுகள் மேலும் வெளிவருவதற்கு இந்த நூல் வழி வகுக்கும் என நம்புகிறேன். முக்கியமாக தமக்கு ஆதரவாக குரல் கொடுத்த தோழர்கள் தமிழரசன், லெனின் , மாறன் போன்றவர்களை அறிந்துகொள்ளவும்  ஈழத் தமிழர்களுக்கு இந்த நூல் மிகவும் உதவியாக அமைந்துள்ளது.

"மனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தி உள்ள ஒரு கல்விமானாகவும் சிறந்த ஞானியாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத்தான் வரலாறு மாமனிதர்கள் என ஏற்றுக்கொள்கிறது" என மாபெரும் ஆசான் கால் மாக்ஸ் அவர்கள் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, தங்களுக்காக வாழாமல் பரந்துபட்ட மக்களுக்காகப் போராடி தங்கள் வாழ்க்iகையை அர்ப்பணித்த தோழர்கள் தமிழரசன் மற்றும் லெனின் போன்றவர்கள் உண்மையில் மாமனிதர்களே. அந்த மாமனிதர்களை நினைவு கூர்வதற்கும் அவர்களைப் பற்றி அணிந்துரைiயாக சில வரிகள் கூறுவதற்கும் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
தோழர் பாலன்
லண்டன்
29.02.2016





Tuesday, March 22, 2016

•தோழர் தமிழரசன் பயங்கரவாதியா? அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமா?

•தோழர் தமிழரசன் பயங்கரவாதியா?
அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமா?
தோழர் தமிழரசன் ஒரு புரட்சியாளர். அவர் மாக்சிய லெனிய மாவோயிச தத்துவத்தை வழிகாட்டியாக கொண்டவர்.
தோழர் தமிழரசன் பாராளுமன்ற பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை தேர்ந்தெடுத்தார்.
வன்முறையின்றி எந்தவொரு வர்க்கப் பிரச்சனையும் தீர்ந்ததாக வரலாறு இல்லை என்று லெனின் கூறுகிறார்.
ஆனால் பாராளுமன்ற பாதை மூலம் தமிழின விடுதலை பெற முடியும் என சிலர் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கவும்.

•முன்னாள் முதல்வர் இந்தியா உதவவில்லை என்கிறார். இந்நாள் முதல்வர் இந்தியா உதவ வேண்டும் என்கிறார்.

•முன்னாள் முதல்வர் இந்தியா உதவவில்லை என்கிறார்.
இந்நாள் முதல்வர் இந்தியா உதவ வேண்டும் என்கிறார்.
இந்தியா சமஸ்டி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள உதவவில்லை என்று இந்தியாவின் அரவணைப்பில் இருக்கும் முன்னாள் மாகாண முதல்வர் வரதராஜப் பெருமாள் கூறியிருக்கிறார்.
ஆனால் சமஸ்டி அதிகாரங்களை பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று இந்நாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் கேட்டிருக்கிறார்.
இந்தியா தமிழ் மக்களுக்கு இதுவரை உதவவில்லை. இனியும் உதவப் போவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்தியா உதவ வேண்டும் என்று கேட்பதன் மர்மம் என்ன?
தமிழ்மக்கள் மீதான இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா உதவவேண்டும் என்று இன்னமும் கேட்பதன் அரசியல் என்ன?
இலுப்பம் பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று முன்பு சொன்னார்கள். வந்தது வெளவால் அல்ல, இந்தியா என்ற குள்ள நரி என்று கண்டோம். மீண்டும் அந்த குள்ளநரியை ஏன் நம்பி அழைக்கிறார்கள்?
தமிழ்மக்கள் உரிமை பெறுவதற்கு இந்தியா ஒருபோதும் உதவாது என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?
உரிமை என்பது யார் மூலமாவது பெறும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது. போராடுவதற்கு வக்கற்றவர்கள் எதற்கு பதவியில் குந்தியிருக்க வேண்டும்?
சிலர் இந்தியாவை நம்புங்கள் என்கிறார்கள்
இன்னும் சிலர் அமெரிக்காவை நம்புங்கள் என்கிறார்கள்
வேறு சிலர் ஜ.நா வை நம்புங்கள் என்கிறார்கள்.
ஆனால் இவர்கள் யாருமே தமிழ் மக்களை ஏன் நம்புவதில்லை?
சொந்த மக்களை திரட்டி போராடுவதற்கு ஏன் முனைவதில்லை?
இந்தியாவுக்கு சென்று அமைச்சர்களுடன் பேசுகிறார்கள்
அமெரிக்கா சென்று அமைச்சர்களுடன் பேசுகிறார்கள்
ஜ.நா சென்று அதிகாரிகளுடன் பேசுகிறார்கள்.
ஆனால் ஒரே நாட்டில் இருக்கும் சிங்கள மக்களிடம் சென்று பேச ஏன் மறுக்கிறார்கள்?
இவர்கள் நினைப்பதுபோல் ஒருவேளை இந்தியா நினைத்தாலோ அல்லது அமெரிக்கா நினைத்தாலோ சிங்கள மக்களின் ஆதரவு இன்றி எந்தவொரு தீர்வையும் கொண்டு வந்துவிட முடியுமா?
தயவு செய்து இனியும் மக்களை ஏமாற்ற முயலாதீர்கள்.
இந்திய அம்புலிமாமா கதைகளை நிறுத்துங்கள்
கண் திறந்து பாருங்கள், முழு நாடும் இந்திய ஆக்கிரமிப்பில்; உள்ளது
இனியாவது மக்களை திரட்டி போராட முனையுங்கள்
இல்லையேல் பதவிகளை துறந்துவிட்டு வீட்டுக்குச் சென்று சாய்மனைக் கதிரையில் நன்றாக ஒய்வெடுங்கள்.
ஆனால் சொந்த மக்களுக்கும் தாய் நாட்டிற்கும் துரோகம் இழைக்காதீர்கள்.

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.
தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் இன்று ஆகும்.(04.03.2016)
புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர்.
1983 க்கு முன்னர் பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர். பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர் அல்லது வெளிப்படையாக தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.
புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,
சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினேன். அடுத்து உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார். எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன். வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கிறது. மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்.
நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர். பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
புலவர் தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை ஈழத் தமிழர்களுக்கு உறுதியான ஆதரவை வழங்கியுள்ளார். அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்ட்டார். வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபொதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபொதும் அவர் கைவிட்டதில்லை.
தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.