Saturday, April 30, 2016

• லிபரா முதலாளிகளின் பணத் திமிர்

• லிபரா முதலாளிகளின் பணத் திமிர்
ஏழை ஏழைக்கு உதவி செய்கிறான்
பணக்காரன் பணக்காரனுக்கு உதவி செய்கிறான்
இங்கு "தமிழன்" என்பது வெறும் சொல்தானா?
ஈழத் தமிழரான "லைக்கா" முதலாளி சுபாஸ்கரன் நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தது குறித்து நேற்று ஒரு பதிவு இட்டிருந்தேன்.
அதனைப் பார்வையிட்ட நண்பர் ஒருவர் "லிபரா" முதலாளியும் ஒரு கோடி ருபா நடிகர் சங்கத்திற்கு கொடுத்திருப்பதாகவும அது குறித்த படமும் அனுப்பியுள்ளார்.
"லைக்காவும"; "லிபராவும்" ஈழத் தமிழர்களே. பரஸ்பரம் வியாபாரப் போட்டி உள்ளவர்கள். ஆனால் அதற்காக இப்படி போட்டிக்கொண்டு நடிகர் சங்கத்திற்கு பணம் கொடுப்பது வெட்க கேடானது.
"லைக்காவும"; "லிபராவும"; உழைப்பது ஏழைத் தமிழ் மக்களிடம். ஆனால் அவர்கள் பணம் அன்பளிப்பு செய்வது பணக்கார நடிகர்களுக்கா?
இவர்கள் வியாபாரிகள் என்றும் இவர்கள் படம் தயாரிப்பதால் வியாபார நோக்கில் பணம் அன்பளிப்பு செய்வதாக சிலர் இதனை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
அவர்களிடம் நான் கேட்க விரும்புவது, ஸடாலின் மகன் உதயநிதியும் படம் தயாரிக்கிறார். ஆனால் அவர் இந்த நடிகர் சங்கத்திற்கு ஒரு பைசாகூட கொடுக்கவில்லையே. அவரிடம் இல்லாத பணமா?
கலைப்புலி தாணு வும் படம் தயாரிக்கிறார். ஆனால் அவர்கூட இந்த நடிகர் சங்கத்திற்கு ஒரு பைசா கொடுக்கவில்லையே?
ரஜனி ஒரு நடிகர். அவர் விரும்பியிருந்தால் தமது நடிகர் சங்க கட்டிடத்திற்கு தேவையான முழு பணத்தையும் கொடுத்திருக்கலாம் ஆனால் அவர்கூட எந்த உதவியும் செய்யவில்லையே.
கமல் தன் பணத்தை கொடுத்திருக்கலாம். அல்லது சக நடிகர்களிடம் திரட்டி கொடுத்திருக்கலாம். ஆனால் எதற்காக ஈழத் தமிழ் முதலாளிகளிடம் பணம் பெற்றுக் கொடுக்க வேண்டும்?
"லைக்காவும"; "லிபராவும்" வானொலி, தொலைக்காட்சி எல்லாம் நடத்துகிறார்கள். அதனை தமிழ்தேசிய ஊடகம் என்று வேறு அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஈழ அகதிகளுக்கு நடக்கும் அவலங்களை மறந்தும்கூட சொல்ல மாட்டார்கள்.
அண்மையில் மண்டபம் முகாமில் உள்ள அகதிப் பெண்ணை நான்கு பொலிசார் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இதுகுறித்த செயதி தினமணியிலும் தமிழ்வின் ஊடகத்திலும் மட்டுமே வந்தது.
ஆனால் இந்த தேசிய ஊடகங்கள் இது குறித்து வாய் திறக்கவேயில்லை. கேட்டால் இதுவும் ஒரு வியாபார தந்திரம் என்பார்களோ?
கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள அகதி ஒருவர் தமிழக காவல்துறையால் கால் முறிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக படுக்கையில் இருக்கிறார். அவருடைய குடும்பத்திற்கு இந்த பணக்கார முதலாளிகள் ஒரு பைசாகூட உதவி செய்யவில்லை.
ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஏழைத் தமிழரான திலீபன் மகேந்திரன் என்பவரே இதனை அறிந்து தனது நண்பர்களிடம் பணம் திரட்டி ரூபா 85 ஆயிரம் கொடுத்து அந்த அகதிக் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.
திலீபன் மகேந்திரன் கொடி எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பொலிசாரால் கை முறிக்கப்பட்டவர். அவரே மிகவும் நெருக்டியான நிலையில் இருக்கிறார். ஒரு ஏழையான அவர் இன்னொரு ஏழையான அகதி குடும்பத்திற்கு உதவி செய்கிறார்.
ஆனால் பணக்காரர்களான லைக்கா மற்றும் லிபரா முதலாளிகள் தங்கள் இனமான அகதிகள் கஸ்டப்படும்போது பணக்கார நடிகர்களுக்க உதவி செய்கிறார்கள்.
இவர்கள் ஈழத் தமிழர்கள். இவர்களும் அகதியாக இருந்தவர்கள். தமது உறவகள் கஸ்ட நிலையில் இருக்கும்போது பணக்கார நடிகர்களுக்கு உதவி செய்ய எப்படி இவர்களுக்கு முடிகிறது?
அப்படி என்றால் ,
இன உணர்வு என்பது வெறும் சொல்தானா?
வர்க்க உணர்வு என்பது மட்டும்தான் உண்மையா?

Friday, April 29, 2016

•கலைஞர் அவர்களே நீங்கள் தத்தெடுத்து வளர்த்த அகதி சிறுவன் எங்கே?

•கலைஞர் அவர்களே
நீங்கள் தத்தெடுத்து வளர்த்த அகதி சிறுவன் எங்கே?
1983ம் ஆண்டு அகதியாக வந்த சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்தீர்கள்.
அந்த ஈழ அகதி சிறுவனுக்கு மணி என்று பெயரும் சூட்டி மகிழ்ந்தீர்கள்.
நீங்கள் மணியை அரவணைத்து படம் பிடித்து அதை உங்கள் முரசொலி பத்திரிகையில் பிரசுரமும் செய்தீர்கள்.
எம்.ஜி.ஆர் மலையாளி என்றும் அவரை விட உங்களுக்கே தமிழ் பற்று அதிகம் என்றும் காட்டுவதற்காக இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்தீர்கள்.
ஆனால் அந்த சிறுவனுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வருமே என்று அஞ்சிய ஸ்டாலின் குடும்பத்தினர் அந்த சிறுவனை அடித்து விரட்டியாதாக செய்திகள் வந்தன.
இதுவரை காலமும் ஸ்டாலினுடன் ஒன்றாக இருந்து அண்மையில் பிரிந்து வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் அந்த சிறுவன் எங்கே என்று கேட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல அந்த சிறுவன் ஸ்டாலினால் கொல்லப்பட்டிருக்லாம் என்று அச்சமும் தெரிவித்துள்ளார்.
உங்களுடைய மிகப்பெரிய குடும்ப போட்டோவில் அந்த மணியை தேடுனோம். ஆனால் அவனைக் காணவில்லை.
அந்த சிறுவன் எங்கே என்று பல முறை கேட்டுவிட்டோம். இதவரை நீங்கள் வாய் திறந்து பதில் சொல்லவில்லை.
முதலமைச்சர் ஜெயா அம்மையார் உட்பட தலைமை நீதிபதி அனைவருக்கும் இது குறித்து மனு அனுப்பியுள்ளோம். ஆனால் யாருமே பதில் தரவில்லை.
அகதி என்றால் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள் என்பது உண்மைதான். அதனால்தான் தமிழகத்தில் அகதிகள் கொலை செய்யப்படுகிறார்கள். பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
ஆனால் நீங்கள் உலக தமிழின தலைவர் என்று உங்களை அழைக்கிறீர்கள். கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாக மிதந்து தமிழர்களுக்கு உதவுவேன் என கதை விடுகிறீர்கள்.
உங்களிடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தயவு செய்து அந்த அப்பாவி அகதி சிறுவன் எங்கே என்று சொல்லுங்கள்.
குறிப்பு- இந்த விடயம் எற்கனவே பலமுறை கேட்டுள்ளேன். தேர்தல் நேரத்திலாவது இந்த சிறுவன் எங்கே என்பதற்கு விடை கிடைக்கும் என்ற நப்பாசையில் இதனை மீண்டும் பதிவு செய்துள்ளேன்.

• தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்.

• தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்.
14.04.2016 யன்று தோழர் தமிழரசனின் 71வது பிறந்த தினம்.
மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனை வழிகாட்டலில்
தமிழ்நாடு விடுதலைக்காய் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் 71வது பிறந்த தினம்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என கூறியவர் தோழர் தமிழரசன்.
தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஈழத் தமிழனும் விடுதலை அடைவான் என்று கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்தவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவாது. மாறாக மாபெரும் தமிழ் இன அழிவை மேற்கொள்ளும் என்று முள்ளிவாய்க்கால் அவலத்தை அன்றே எதிர்வு கூறியவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கலக்க வேண்டும் என்று கூறியதோடு தானே அதற்கு முன்மாதிரியாக விளங்க முயற்சி செய்தவர் தோழர் தமிழரசன்.
தோழர் தமிழரசன் “முருகன் முப்பாட்டன்” என்று கூறி காவடி தூக்க வில்லை. மாறாக தமிழ்நாடு விடுதலைக்காக துப்பாக்கி தூக்கியவர்.
தோழர் தமிழரசன் ஒருபோதும் முதலமைச்சர் கனவு காணவில்லை. மாறாக தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தவர்.
தோழர் தமிழரசன் தமிழ் மக்களுக்காக உண்மையாகவே போராடினார். அதனால்தான் அவர் உளவுப்படைகளின் மூலம் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்.
அதனால்தான் அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

•ஏய் தமிழா! வோட்டு போடுமுன்னர் இதை கொஞ்சம் சிந்தித்துப் பார்!

•ஏய் தமிழா!
வோட்டு போடுமுன்னர் இதை கொஞ்சம் சிந்தித்துப் பார்!
காவிரி உன்னுடையது ஆனால் அதில் உனக்கு தண்ணீர் கிடையாது
பாலாறு உன்னுடையது ஆனால் அதில் இருந்து தண்ணீர் பெற முடியாது
முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் அதில் தண்ணீர் தேக்க முடியாது
நெய்வேலி உன்னுடையது ஆனால் அதில் முழு மின்சாரமும் கோர முடியாது
வங்கக்கடல் உன்னுடையது ஆனால் அதில் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாது
கச்சதீவு உன்னுடையது ஆனால் அங்கு நீ செல்ல முடியாது
கோயில்களை உன்னுடையது. ஆனால் அங்கு உன்னால் தமிழில் வழிபட முடியாது.
நீதிமன்றங்கள் உன்னுடையது. ஆனால் உன்னால் தமிழில் வாதாட முடியாது.
பாடசாலைகள் உன்னுடையது. ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது.
தமிழ்நாடு உன்னுடையது. ஆனால் உன்னை ஒரு தமிழன் ஆள முடியாது.
நீயும் இந்தியன்தான் என்றால்,
ஏன் உன்னால் தமிழ் மீனவனைக் காக்க முடியவில்லை?
ஏன் ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை?
ஏன் இலங்கை அரசுக்கு செய்யும் உதவியை நிறுத்த முடியவில்லை?
ஏன் சிறப்புமுகாம்களை மூடி அகதிகளை விடுதலை செய்ய முடியவில்லை?
ஏன் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியவில்லை?
ஜெயா அம்மையாரும் கலைஞரும் மாறி மாறி ஆண்டதில் உன் தமிழ்நாடு; கண்ட நன்மைதான் என்ன?
கலைஞர் சம்பாதித்தது 50ஆயிரம் கோடி
ஜெயா அம்மையார் சம்பாதித்தது 30 ஆயிரம் கோடி
ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருப்தோ 1.21 லட்சம் கோடி கடன் சுமை.
காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்கிறார் கர்நாடக முதலமைச்சர்
கெயில் பைப்லைன் போடுவதை தடுக்க தமிழக அரசிற்கு உரிமை இல்லை என்கிறது உச்சநீதிமன்றம்.
பேரறிவாளன் உட்பட ஏழு தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை என்கிறது மத்தியஅரசும் உச்சநீதிமன்றமும்.
தமிழகத்தில் அணுக்கழிவுகளை புதைப்போம், அதைத் தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறது மத்திய அரசு.
நச்சு தொழிற்சாலைகள் அனைத்தையும் தமிழகத்தில் அமைப்போம். ஆனால் அதன் பலன்களை தமிழகத்திற்கு தரமாட்டோம் என்கிறது மத்தியஅரசு.
தமிழா!
இந்தியனாய் சிந்தித்து அடிமையாக இருந்தது போதும்
தமிழனாக உணர்ந்து விடுதலை பெறுவாயா?

•இப்ப என்ன சொல்லப்போகிறார்கள்?

•இப்ப என்ன சொல்லப்போகிறார்கள்?
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு.
ஈழ தமிழ் இன அழிப்பிற்காக இந்தியாவும் விசாரிக்கப்படல் வேண்டும்
என நிபுனர் குழு அறிவித்துள்ளது.
வெள்ளைக்கொடி பிடித்து சரணடைந்தோர் கொல்லப்பட்ட விடயத்தில் கலைஞர் மகள் கனிமொழிக்கும் பங்கு உண்டு என்று ஆனந்தி கூறியபோது இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியவர்கள் இப்ப என்ன சொல்லப்போகிறார்கள்?
இந்தியா எப்போதும் ஈழத் தமிழர் நலனுக்காகவே பாடுபட்டு வருகிறது என்று கூறி வருபவர்கள் இப்போது இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?
தமிழர் நலனுக்காகவே காங்கிரஸ் கட்சியுடன் கலைஞர் கூட்டு வைக்கிறார் என்று நம்புவர்கள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்?
இந்தியாவில் குடும்பத்துடன் சொகுசாக இருந்துகொண்டு இந்தியாவுக்கு விசுவாசமாக உழைத்துவரும் சம்பந்தர் அய்யா மற்றும் மாவை சேனாதிராசா இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?
தமிழ்மக்கள் தீர்வு பெற இந்தியா உதவ வேண்டும் என்று கூறிய முதல்வர் விக்கி அய்யாவும் தமிழ் மக்கள் எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்று கூறிய யாழ்ப்பாணத்pல் இருக்கும் இந்திய தூதுவரும் இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?
யார் என்ன சொன்னாலும் பிரச்சனையில்லை. ஆனால் இது குறித்து தமிழக மக்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதையே உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
தமிழின அழிப்பை மேற்கொண்ட காங்கிரஸ் தி;மு.க கூட்டை தமிழக மக்கள் நிராகரிக்கப்போகிறார்களா? அல்லது ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா என்பதை தேர்தல் முடிவு அறிய தரப்போகிறது.
காங்கிரஸ் தி.முக கூட்டு தோற்கடிக்கப்பட்டால் தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்ற செய்தி உலகத்திற்கு எட்டும்.
மாறாக சோனியா கலைஞர் கூட்டு வெற்றி பெற்றால் உலகில் தன் இனத்தை அழித்தவர்களை வெற்றி பெற வைத்த ஒரே இனம் தமிழினம் என்ற அவமானம் உலக வரலாற்றில் முதன்முறையாக எழுதப்படும்.
தமிழக மக்களே!
தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதை விட காங்கிரஸ் தி.மு.க கூட்டு தோல்வி அடைய வேண்டும் என்பதே முக்கியம்.
நிபுனர் குழவில் இடம்பெற்றவர்கள் விபரம் வருமாறு,
1. பேரா.டேனியஸ் ஃபியர்ஸ்ட்யீன்.
சர்வதேச இனப்படுகொலைப் பற்றியான பேரறிஞர்கள் குழுவின் தலைவர், அர்ஜண்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்படுகொலைக்கான மையத்தின் பேராசிரியர்.
2. திரு. டெனிஸ் ஹாலிடே,
ஐ.நாவின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர். ஐ.நாவின் 34 வருடங்களாக பணியாற்றி, ஈராக்கின் மீது பொருளாதாரத் தடையை பாதுகாப்பு அவை கொண்டு வந்ததை கண்டித்து துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜனிமா செய்தவர்.
3.பேரா.செவ்வேன் கரிபியான்
சர்வதேச இனப்படுகொலை சட்ட நிபுணரும், ஜெனிவா பல்கலைக்கழகம் மற்றும் நாச்டெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சர்வதேச குற்றவியல் சட்டம், மற்றும் சட்ட தத்துவம் குறித்தான பேராசிரியராக இருபபவர். இவர் அரசுகளின் குற்றம் குறித்து ஆய்வு செய்பவர்.
4. திரு. ஹாலூக் ஜெர்கர்.
அரசியல் செயல்பாட்டிற்காக துருக்கி அரசால் சிறைப்படுத்தப்பட்ட அறிஞர். குர்து மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்.
5. பேரா.மன்ஃப்ரட் ஓ ஹின்ஸ்,
ஜெர்மனியின் பிரிமென் பல்கலைக்கழகத்தின் அரசியல் சமூகவியல், சட்டத்தின் சமூகவியல் துறை பேராசிரியர். நமீபியா. மேற்கு சஹாராவின் விடுதலைப் போராட்டட்த்திற்கான ஆதரவு போராட்டத்திலிருந்தவர். யுனெஸ்கோவின் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் இருக்கையினை நிர்வகித்தவர்.
6. ஜார்விஸ் ஹெலன்.
இவர் கம்போடியாவில் நிகழ்ந்த படுகொலைகளுக்கான கம்போடிய நீதிமன்றத்தின் துவக்கத்தில் இருந்து பணியாற்றியவர். இனப்படுகொலை புரிந்த கேமர் ரூஜ் அரசின் மீதான விசாரணையை ஒருங்கிணைப்புக்குழுவில் பணியாற்றியவர். கம்போடிய டிரிபூனல் என்று அறியப்படும் சர்வதேச கலப்பு விசாரணை நீதிமன்றத்தில் மிகமுக்கிய பணியாற்றியவர்.
7. வழக்கறிஞர். ஜோஸ் எலியாஸ் எஸ்டேவே மோல்ட்டோ.
திபெத்திற்கான சர்வதேச வழக்கறிஞர். திபெத் மற்றும் பர்மாவில் நிகழ்ந்த குற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வழக்குகளை பதிவு செய்தவர். வாலென்ஸியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத்துறை பேராசிரியர்.
8. திரு. ஜேவியர் ஜிரால்டோ மொரியனோ
கொலம்பியாவின் மனித உரிமை செயல்பாட்டாளர். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆய்வு செய்தவர். மக்கள் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர்.
9. வழக்கறிஞர். காப்ரியல் டெல்லா மோர்ட்டா
ருவாண்டா இனப்படுகொலைக்கான வழக்கறிஞராக பணியாற்றியவர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை உருவாக்குவதற்கான அரசின் பிரதிநிதியாக செயல்பட்டவர்.
யூகஸ்லோவியாவிற்கான சர்வதேச விசாரனைக்கான சர்வதேச நீதிமன்றத்தில் சட்டத்துறையில் பணியாற்றியவர்
10. திரு. ஆய்ஸ்ட்டீன் டேவெட்டர்
நார்வே நாட்டினுடைய சர்வதேச சட்டம் குறித்தான நிபுணர். பிலிப்பெய்ன்ஸ் நாட்டில் நடந்த சட்டவிரோத படுகொலைகள் குறித்து தீர்ப்பாயத்தில் பங்களித்தவர்.
11. திரு. ஜர்னி மாயுங்க்
பர்மா நாட்டைச்சேர்ந்த மனித உரிமை போராளி. ரொஹிங்கோ இனப்படுகொலை குறித்தும், அதில் செயலற்றுப் போன ஆங்க்சாங் சுகியினை அம்பலப்படுத்தியவர்.

•செய்தி- இனவாதத்தை தூண்ட வடக்கில் விக்கினேஸ்வரனும் தெற்கில் மகிந்தவும் முயல்வதாக ஜே.வி.பி தலைவர் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு.

•செய்தி- இனவாதத்தை தூண்ட வடக்கில் விக்கினேஸ்வரனும் தெற்கில் மகிந்தவும் முயல்வதாக ஜே.வி.பி தலைவர் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு.
இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்ச இனவாதத்தை தூண்டி மீண்டும் பதவிக்கு வர முயல்கிறார் என்பது உண்மையே.
ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் விக்கினேஸ்வரன் அவர்களையும் இனவாதத்தை தூண்டுவதாக கூறுவது தவறாகும்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள்,
•சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருகிறார். அது எப்படி இனவாதமாகும்?
•காணமல் போனவர்களை கண்டு பிடிக்குமாறு கோருகிறார். அது எப்படி இனவாதமாகும்?
•போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்கிறார். அது எப்படி இனவாதமாகும்?
•வடக்கில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறார். அது எப்படி இனவாதமாகும்?
•தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசம் ஒரு தேசம் என்கிறார். அது எப்படி இனவாதமாகும்?
•அந்த தமிழ் தேசத்திற்கு சமஸ்டி தீர்வு தரும்படி கேட்கிறார். அது எப்படி இனவாதமாகும்?
ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவன் எவனும் உண்மையான கம்யுனிஸ்ட் இல்லை என்று தோழர் லெனின் கூறுகிறார்.
ஆனால் கம்யுனிஸ்ட்டுகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி இதுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை.
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத ஜே.வி.பி க்கு அந்த உரிமையை பயன்படுத்தி பிரிந்துபோக வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கோருவதற்கு என்ன தகுதி இருக்கு?
ரில்வின் சில்வா அவர்களே!
மகிந்தவை பதவிக்கு கொண்டு வந்து அவர் போர் என்ற போர்வையில் தமிழின அழிப்பு மேற்கொண்டமைக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியமைக்காக முதலில் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருங்கள்.
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின்பு அந்த உரிமையை பாவித்து பிரிந்து போக வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கேளுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலமே தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் உண்மையான ஜக்கியத்தைக் கட்ட முடியும். அதைவிடுத்து மகிந்தவுடன் சேர்த்து விக்கினேஸ்வரனையும் இனவாதி என்று கூறுவதால் ஜக்கியத்தைக் கட்டமுடியாது.

•திருக்கேதீஸ்வரத்தில் கோயில் கட்டும் இந்தியா சம்பூரில் தமிழர்களுக்கு சமாதி கட்டுகிறது.

•திருக்கேதீஸ்வரத்தில் கோயில் கட்டும் இந்தியா
சம்பூரில் தமிழர்களுக்கு சமாதி கட்டுகிறது.
தமிழ்மக்களின் நலனுக்காக திருக்கேதீஸ்வரத்தில் 27 கோடி ரூபா செலவில் கோயில் கட்டுவதாக கூறும் இந்தியா, சம்பூரில் தமிழ் மக்கள் நலனுக்கு எதிராக அனல்மின் நிலையம் கட்டுகிறது.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்றும் இந்தியாவையும் விசாரணை செய்ய வேண்டும் என்று நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ்மக்களை அழிக்க உதவி புரிந்த இந்தியா தற்போது சம்பூரில் நேரிடையாக தமிழ் மக்களுக்கு சமாதி கட்டுகிறது.
இந்த அனல்மின் நிலையத்திற்கு எதிராக தமிழ் மக்கள் போராடுகிறார்கள். முஸ்லிம் மக்கள் போராடுகிறார்கள். ஆதிவாசி மக்களாகிய வேடவ மக்கள்கூட போராடியிருக்கிறார்கள்.
இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒன்றுதிரண்டு எதிர்க்கும் திட்டம் இந்த அனல்மின் நிலையம் மட்டுமே.
ஆனால் எந்த தடைகள் வந்தாலும் அனல்மின் நிலையத்தை அமைத்தே தீருவோம் என்று மின்சார அமைச்சர் கூறுகிறார்.
இதுபற்றி சம்பந்தர் அய்யாவிடம் முறையிட்டால் அவரோ, இந்தியா போனால் சீனா வந்துவிடும் என மக்களை மிரட்டுகிறார்.
இப்படி தமிழ் மக்களை இந்தியாவிடம் சாகும்படி கூறுபவரை தமிழ் இனத் தலைவர் என்கிறார்கள். அவருக்கு நம்மவர் சிலர் கனடாவில் "வாழ்நாள் வீரர்" பட்டம் கொடுக்கிறார்கள்.
ராணுவத்தை வெளியேற்றுங்கள் என்று கேட்டால் சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை வைத்துவிட்டு எடுத்துக்காட்டுகிறது நல்லாட்சி அரசு.
யுத்தத்திற்கு பின்பு இதுவரை 313 தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வளவு காலமும் மௌனமாக இருந்த சம்பந்தர் அய்யா இந்த முறைமட்டும் கடும் நடவடிக்கை எடுங்கள் என்று அரசைக் கேட்டுள்ளார்.
சம்பூர் மக்களுக்காக அரசைக் கேட்காதவர், ராணுவத்தை குறையுங்கள் என்று அரசைக் கேட்காதவர், தற்கொலை அங்கி எடுத்தவுடன் மட்டும் கடும் நடவடிக்கை எடுங்கள் என்று அரசைக் கேட்கிறார்.
இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ் மக்கள் இவர்களை நம்பி ஏமாறுவது?

•கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம்.

•கேட்பவன் கேனையன் என்றால்
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம்.
ஆனால் இதை நம்புவதற்கு தமிழ் மக்கள் கேணையர்கள் இல்லை.
செய்தி- வடமாகாண கல்வி அமைச்சரும் யாழ் இந்திய தூதுவரும் சேர்ந்து அம்பேத்கார் விழா கொண்டாட்டம்.
அம்பேத்கார் வழியைப் பின்பற்றிய ரோகித் என்ற மாணவனைக் கொலை செய்த இந்திய அரசு
அம்பேத்காரரை தலைவராக கொண்ட டில்லி பல்கலைக்கழக மாணவர்களை தேசவிரோத சட்டத்தில் சிறையில் அடைத்த இந்திய அரசு
அம்பேத்கார் சிலைகளைக்கூட உடைத்துக்கொண்டிருக்கும் மோடியின் இந்துத்துவ அரசு
அதே இந்திய அரசு அம்பேத்காரருக்கு யாழ்ப்பாணத்தில் விழா எடுக்கிறது என்றால் அதனை எப்படி நம்புவது?
கடந்த வருடம் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் கல்வி கற்கும் ஏழாலை சிறீமுருகன் பாடசாலை தண்ணீர் தொட்டியில் உயர்சாதியினரால் நஞ்சு கலக்கப்பட்டது. இதனால் 60ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத வடமாகாண கல்வி அமைச்சர்
போதிய தகுதி இருந்தும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் உடுப்பிட்டி பெண்கள் பாடசாலை அதிபர் பதவி பெண் ஒருவருக்கு மறுக்கப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்காத கல்வி அமைச்சர்
கன்பொல்லை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களினால் நிறுவப்பட்ட சிலை உயர்சாதி வெறியர்களால் சிதைக்கபட்டு இருக்கிறது. அதைக்கூட சீர்செய்து கொடுக்க முன்வராத கல்வி அமைச்சர்
அதே கல்வி அமைச்சர் இந்திய தூதுவருடன் சேர்ந்து சாதி ஒழிப்பிற்காக அம்பேத்கார் விழா நடத்தகிறார் என்றால் அதனை எப்படி நம்புவது?
அதே கல்வி அமைச்சர் இந்தியாவில் இருந்து பேச்சாளர்களை இறக்குமதி செய்து பட்டி மன்றம் நடத்தி புத்தாண்டு கொண்டாடுகிறார்.
ஆனால் வன்னிப் பாடசாலையில் மாணவர்கள் வெய்யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கல்வி கற்கிறார்கள். பாடசாலையின் ஓலைக் கூரையைக்கூட இந்த கல்வி அமைச்சரால் சரி செய்து கொடுக்க முடியவில்லை.
தமிழ் மக்கள் கஸ்டப்படும்போது அதைப் பற்றி கவலைப்படாது ஆடம்பர விழாக்கள் நடத்தும் இவர்கள் தமிழ் ரோமாபுரி மன்னர்கள்.
இவர்களுக்கு,
மீண்டும் சாவகச்சேரியில் வெள்ளை வானில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை இல்லை
சம்பூரில் அனல்மின் நிலையத்திற்கு எதிராக தமிழ் மக்கள் போராடுவது குறித்து கவலை இல்லை.
இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது குறித்து கவலை இல்லை.
தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து கவலை இல்லை
தமிழ் பகுதிகளில் புத்த விகாரை கட்டுவது குறித்தோ பிரமாண்டமான புத்தர் சிலை அமைப்பது குறித்தோ கவலை இல்லை.
இவர்களுடைய கவலை எல்லாம் இந்திய ஆக்கிரமிப்பை எப்படி இலங்கையில் எற்படுத்துவது என்பது பற்றியே.
குறிப்பு- இந்திய தூதர் மதுரை மல்லிகை இறக்குமதி செய்துள்ளாராம். அது இனி யாழ் மல்லி என அழைக்கப்படுமாம். ஆனால் இந்த மல்லி ஒருபோதும் மணக்கப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் மனங்கள் குமுறிக்கொண்டிருக்கிறது.

•அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். மனு மேல் மனு கொடுத்தாலும் சம்பந்தர் அய்யாவின் மனம் மட்டும் இரங்க மறுக்கிறதே!

•அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.
மனு மேல் மனு கொடுத்தாலும் சம்பந்தர் அய்யாவின் மனம் மட்டும் இரங்க மறுக்கிறதே!
ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை குறித்து,
ஜெயா அம்மையார் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார்
கலைஞர் கருணாநிதி விடுதலை செய்யும்படி கோரியுள்ளார்.
வைகோ அவர்களின் விடுதலைக்காக பாடுபட்டு வருகிறார்.
டாக்டர் ராமதாஸ் அவர்களும் விடுதலை செய்யும்படி கேட்டுள்ளார்.
சீமான் அவர்களை சிறையில் சென்று பார்த்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் விடுதலை செய்யும்படி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.
ராகுல்காந்திகூட மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால்,
சம்பந்தர் அய்யா மட்டும் இதுவரை ஒருமுறைகூட அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
முருகனின் விடுதலைக்கு உதவும்படி அவரது தாயார் சம்பந்தர் அய்யாவிடம் மன்றாடிக் கேட்டும் அவர் மனம் இரங்கவில்லை.
எழுவர் விடுதலைக்காக செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து இறந்தபோதும்கூட சம்பந்தர் அய்யாவின் மனம் இரங்கவில்லை.
தனது இருதய சிகிச்சைக்காக இந்திய அரசிடம் கேட்டுப் பெற்ற சம்பந்தர் அய்யா பேரறிவாளனின் இருதய சிகிச்சைக்கு அதே இந்திய அரசிடம் குரல் கொடுக்க மனம் இரங்கவில்லை.
இந்த வயதிலும்கூட தன் மகளுக்காக கேரளாவில் இருந்துவரும் சம்பந்தர் அய்யா 25 வருடங்களாக பெற்றாரை பிரிந்து வாழும் முருகன் மகளுக்காக மனம் இரங்கவில்லை.
தான் இறப்பதற்கு முன்னர் தன் மகன் சாந்தனை ஒரு முறை பார்க்க விரும்புகிறேன் என்று முதுமையில் வாடும் அவர் தாயார் கேட்டும்கூட சம்பந்தர் அய்யாவின் மனம் இரங்கவில்லை.
இந்த எழுவர் விடுதலைக்காக,
தமிழக தலைவர்கள் குரல் கொடுக்கிறார்கள்
தமிழக மாணவர்கள் போராடுகிறார்கள்.
தமிழக மக்கள் அதரவு தெரிவிக்கிறார்கள்.
ஆனால் ஈழத் தமிழ் மக்களின் தலைவர் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் சம்பந்தர் அய்யா மனப்பூர்வமாக இல்லாவிடினும் சம்பிரதாயபூர்வமாகக்கூட அறிக்கை தர மனம் இரங்கவில்லை.
இந்த எழுவரை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது.
சிறப்புமுகாமில் அடைத்து வைத்துள்ள அகதிகளை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது.
பல வருடமாக வாழும் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க இந்திய அரசு மறுக்கிறது
தமிழ் அகதிகளின் உயர் கல்வி வாய்ப்பை இந்திய அரசு மறுக்கிறது.
டில்லி சென்று இந்திய பிரதமரை அடிக்கடி சந்திக்கும் சம்பந்தர் அய்யா இவை குறித்து பேச மறுக்கிறார்.
சம்பந்தர் அய்யா செய்வதெல்லாம்,
வாரம் தவறாமல் இந்திய தூதுவரின் தண்ணிப் பார்ட்டியில் கலந்துகொள்வது.
இந்திய தூதுவரை திருப்திபடுத்த சீனா வரப்போகுது என்று அறிக்கைவிடுவது
பாராளுமன்றத்தில் எதுவும் பேசாமல் எப்போதும் நித்திரை கொள்வது.
தமிழ் மக்கள் குறைகளை சொல்லும்போது காது கேளாத மாதிரி நடந்து கொள்வது
சம்பந்தர் அய்யாவிடம்,
சம்பூர் மக்கள் மனுக் கொடுத்துள்ளார்கள்
முல்லைத்தீவு மக்கள் மனுக் கொடுத்துள்ளார்கள்.
கிளிநொச்சி மக்கள் மனுக்கொடுத்துள்ளார்கள்.
காணாமல் போனோரின் உறவினர்கள் மனுக்கொடுத்துள்ளார்கள்.
அரசியல் கைதிகள் மனுக் கொடுத்துள்ளார்கள்.
இப்போது முருகனின் தாயாரும் மனுக்கொடுத்துள்ளார்.
எத்தனை மனுக் கொடுத்தாலும் தமிழ் மக்களுக்கு உதவ சம்பந்தர் அய்யாவின் மனம் மட்டும் இரங்குதில்லை.

•சீமான் வெற்றி பெற்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால் சீமான் தோல்வியடைந்தால் அது தமிழ் தேசியத்தின் தோல்வியாக கூறப்படும்.

•சீமான் வெற்றி பெற்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால்
சீமான் தோல்வியடைந்தால் அது தமிழ் தேசியத்தின் தோல்வியாக கூறப்படும்.
இன்றைய தமிழக தேர்தல் களத்தில் சீமான் மட்டுமே தமிழ் தேசியத்திற்காக உரத்து குரல் கொடுக்கிறார்.
அவர் வெற்றி பெற்றாலும் அதிகாரமற்ற முதலமைச்சர் பதவி மூலம் தமிழ் தேசிய விடுதலைக்கு எதுவும் செய்துவிட முடியாது.
ஆனால் அவர் தோல்வியடைந்தால் தமிழக மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து விட்டார்கள். தமிழக மக்களிடம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு இல்லை என்ற கருத்து பரப்பப்படும் அபாயம் உள்ளது.
சீமான் தனது உணர்ச்சிப் பேச்சால் ஆயிரக் கணக்கான இளைஞர்களை தேர்தல் பாதையில் கலக்க வைத்துள்ளார்.
வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை என்று தோழர் லெனின் கூறுகிறார்.
ஆனால் வன்முறையற்ற தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்க முடியும் என சீமான் கூறுகிறார்.
தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யத்தப் பாதை மூலம் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை தூக்கியெறிவன்மூலமே மக்கள் விடுதலை பெற முடியும் என தோழர் சண்முகதாசன் கூறினார்.
ஆனால் தேர்தல் பாதை மூலம் ஒரு தமிழன் முதலமைச்சர் ஆவதன்மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என சீமான் கூறுகிறார்.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி தோழர் தமிழரசன் கூறினார்.
ஆனால் தேர்தல் பாதை மூலம் ஒரு தமிழன் முதலமைச்சரானால் ஈழத் தமிழன் விடுதலைக்கு உதவமுடியும் என சீமான் கூறுகிறார்.
இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய இளைஞர்கள் காயடித்து தேர்தல் பாதையில் கலக்கவைத்ததன்மூலம் தெரிந்தோ தெரியாமலோ இந்திய அரசுக்கு சீமான் உதவியுள்ளார்.
இந்த உண்மையை இப்பொது உணராவிட்டாலும் தேர்தலுக்கு பின்னராவது நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

•எழுவர் விடுதலை. தொடரும் ஏமாற்றம்!

•எழுவர் விடுதலை. தொடரும் ஏமாற்றம்!
ஜெயா அம்மையார் தமிழக அரசுக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் வேண்டுமென்றே மத்திய அரசின் கருத்தை கேட்டார்.
கடந்தமுறை மறுப்பு தெரிவித்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இம்முறை இந்த எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
தமிழக பா.ஜ.க வும் இந்த எழுவர் விடுதலைக்காக இதுவரை குரல் கொடுத்தே வந்துள்ளனர்.
மத்திய அரசு என்ன முடிவெடுத்தாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று ராகுல் காந்தியும் கூறியுள்ளார்.
இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று எந்த பெரிய கட்சிகளும் இதுவரை கோரவில்லை.
அப்படியிருந்தும் மோடி அரசு இவர்களை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.
மோடி அரசும் ஜெயா அம்மையார் அரசும் வேண்டுமென்றே மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுகிறார்கள்.
உச்ச நீதிமன்றமும் இந்த அரசுகளின் நாடகத்திற்கு துணை போகின்றனவேயொழிய அந்த எழுவருக்கும் உரிய நீதி கிடைக்க வழி செய்யவில்லை.
இவர்களுக்கு விடுதலை அளிக்காவிடினும் நீண்ட பரோல் லீவாவது அளிக்க முடியும். ஆனால் தமிழக அரசு அதற்கு முன்வராதது அதன் கபட நோக்கத்தைக் காட்டுகிறது.
ஜெயா அம்மையாரின் அரசு நீண்ட பரோல் விடுமுறை மட்டுமல்ல பேரறிவாளன் தன் சுகயீனமான தந்தையை பார்ப்பதற்காக கேட்ட 3 நாள் விடுமுறையைக் கூட கொடுக்க வில்லை.
பரோல் விடுமுiறையக்கூட அளிக்காத ஜெயா அம்மையார், அவர்களின் விடுதலைக்கு மோடியிடம் அனுமதி கேட்கின்றாராம். அதை மோடி மறுக்கின்றாம். என்னே நாடகம் இது!
தேர்தலுக்கு இவர்கள் போடும் நாடகங்ளை புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு தமிழக மக்கள் முட்டாள்கள் அல்லர்.
இவர்கள் வாக்கு கேட்டு வீட்டு வாசலுக்கு வரும்போது தமிழக மக்கள் நாக்கை பிடுங்கிறமாதிரி நாலு கேள்விகள் கேட்க வேண்டும்.
(1) ஜெயா அம்மையாருக்கு 21 நாளில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் இந்த எழுவருக்கு 25 வருடமாக இழுத்தடிப்பது ஏன்?
(2)நடிகர் சஞ்சய்தத்ற்கு தண்டனைக் குறைப்பு வழங்கியவர்கள் இந்த எழுவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்க மறுப்பது ஏன்?
(3)நடிகர் சல்மான்கானை தண்டிக்காமல் விடுதலை செய்தவர்கள் இந்த அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
(4) உள்ளவர்களுக்கு ஒரு நீதி. இல்லாதவருக்கு இன்னொரு நீதி. இதுதான் இந்திய நீதியா?

•காஸ்மீர் ! இந்தியாவின் இன்னொரு கோர முகம்

•காஸ்மீர் !
இந்தியாவின் இன்னொரு கோர முகம்
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் இங்கு சட்டத்தின்படியே ஆட்சி நடக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
சட்டத்தால் நிறுவப்பட்ட நீதிமன்றங்களைத் தவிர வேறு எவருக்கும் இன்னொருவரின் உயிரைப் பறிக்க உரிமை இல்லை என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 கூறுகிறது.
ஆனால் காஸ்மீரில் இருக்கும் 3 லட்சம் இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி ராணுவம்,
•சந்தேகப்படும் நபர் என எவரையும் கைது செய்யலாம்
•சந்தேகப்படும் நபர் என்று யாரையும் சுட்டுக்கொல்லலாம்
•எந்த நேரத்திலும் எவர் வீட்டிலும் புகுந்து சோதனை செய்யலாம்.
•எவர் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கலாம்.
•ராணுவத்தினர் மேற்கொள்ளும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
காஸ்மீரில் இந்த சட்டம் அமுல்படுத்திய பின்பு இதுவரை விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட 8000 இளைஞர்களை காணவில்லை.
அண்மையில் காஸ்மீரில் 38 மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து 2730 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தபோது 5 அப்பாவி மக்கள் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தகைய கொடுமைகளுக்கு காரணமான ராணுவத்திற்கு வழங்கப்ட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்கும்படி சர்வலதேச மன்னிப்புசபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பன கோரி வருகின்றன.
தனது சொந்த மக்களையே கொல்லும் இந்திய அரசு இலங்;கையில் தமிழ் மக்களுக்கு உதவும் என இப்பவும் நம்மவர் சிலர் கூறி வருகிறார்கள்.

• தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு

• தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு
நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர்; தோழர் லெனின்
ருஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி ருஸ்சிய புரட்சியை வென்றெடுத்து உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்
முதலாளி வர்க்க கொடுமைகளை ஒழிக்க பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப்பிடிக்க ஆயுதப் போராட்டத்தின் மூலமான புரட்சி அவசியம் என நிரூபித்தவர் தோழர் லெனின்
தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று உலகப்புரட்சி பேசிய ரொக்ட்சியை தத்துவாhத்த ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்
.
தேசிய இனப்பிரச்சனைக்கு சுயநிர்ணய உரிமையை தீர்வாக முன்வைத்து சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்
தன் வாழ்நாள் முழுவதும் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளிவர்க்க ஜக்கியத்திற்கு வழி அமைத்தார் தோழர் லெனின்
இறந்தும்கூட எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்குகிறார் தோழர் லெனின். அதனால்தான் ருஸ்சிய அருங்காட்சியத்தில் இருக்கும் அவர் உடலை அழித்து புதைக்க வேண்டும் என்று எதிரிகள் கோருகிறார்கள்.
உலகம் உள்ளவரை தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தால் நன்றியுடன் நினைவு கூரப்படுவார்.
அவர் முன்வைத்த புரட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

•வலியை அனுபவித்தவனுக்கு இன்னொருவனின் வலியை புரிந்துகொள்ள முடியும்

•வலியை அனுபவித்தவனுக்கு இன்னொருவனின் வலியை புரிந்துகொள்ள முடியும்
கொடியை எரித்தமைக்காக திலீபன் மகேந்திரன் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக கை முறிக்கப்பட்டவர்.
சுபேந்திரன் என்ற ஈழ அகதி தமிழக காவல்துறையால் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டு கால் முறிக்கப்பட்டவர்.
எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்கும் சுபேந்திரன் வேலையின்றி வருமானம் இன்றி அவரது குடும்பம் மிகவும் கஸ்டப்படுகிறது.
வாழ வழியின்றி தற்கொலை செய்யலாமோ என நினைத்த அந்த குடும்பத்தை சந்தித்து திலீபன் ஆறுதல் கூறியிருக்கிறார்.
ஆறுதல் கூறியது மட்டுமல்ல அவர்களுக்கு தன் நண்பர்களிடமிருந்து உதவி பெற்றும் கொடுக்கிறார்.
தானே வழக்கிலும் கஸ்டங்களிலும் இருக்கும் நிலையிலும் அந்த அகதிக் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு உதவியிருக்கும் திலீபனின் உணர்வுகள் பாராட்டுக்குரியது.
இத்தகைய திலீபன் கொடியை எரித்தபோது அவரை தேச துரோகி என்றார்கள். சிலர் அவரை தமிழன் அல்ல என்றார்கள்.
இன்னும் சிலர் அவரை ஆதரித்தமைக்காக எம்மை துரோகிகள் என்றார்கள்.
ஏமக்காக வீர வசனம் பேசிவிட்டு எம்மை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் மத்தியில் திலீபன் போன்றவர்களின் செயற்பாடு எமக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது.
திலீபனுக்கு எமது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

•சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!

•சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!
மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை நடந்துள்ளது.
நாகபட்டிணம் மாவட்டம் தரங்கம்பாடி ஓலக்குடியைச் சேர்ந்த காதலர்கள் குருமூர்த்தி மற்றும் சரண்யா சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டமையினால் சாதி வெறியர்களால் கொன்று தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு சாதி வெறிபிடித்த கொலையாளிகளை கைது செய்ய தயங்குவதாலும் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் சிறையை விட்டு வெளியே வரும்போது தியாகிகள் போல் வரவேற்கப்படுவதாலும் ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தேர்தலில் சாதி வோட்டுக்களுக்காக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. கொலையாளிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கிறது. சாதி சங்கங்களுடன் வெளிப்படையாகவே கூட்டு வைக்கிறது.
தமிழ் மக்கள் இன உணர்வு பெற்று அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே தமிழ் மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் இத்தகைய கொடுமைகளை உளவுத்துறை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உருவாகிறது.
தொடரும் ஆணவக்கொலைகள் அம்பேத்காரியம் மூலம் ஒழிக்க முடியாது என்பதை காட்டுகிறது. அதேபோல் பெரியாரியத்தின் போதாமையையும் எடுத்துக் காட்டுகிறது.
அம்பேத்காரியத்தையும் பெரியாரியத்தையும் உள்வாங்கி மாக்சிய பார்வையில் சாதீயத்தை ஒழிக்க தோழர் தமிழரசன் முன்வைத்த பாதையே அவசியம் என்பதை காட்டுகிறது.
தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பிற்காக முன்வைத்த மீன்சுருட்டி அறிக்கையை மக்கள் முன்வைத்து அதன் வழியில் மக்களை அணிதிரட்டுவதே தீர்வுக்கான வழியாகும்.
தமிழகம் போன்று ஈழத்திலும் சாதிகளும் அதன் தீண்டாமைக் கொடுமைகளும் உண்டு. ஆனால் தமிழகம் போன்று ஆணவக்கொலைகள் இல்லை.
ஆனால் தமிழகத்தை பார்த்து நடிகர்களுக்கு கட் அவுட் வைக்கும் கலாச்சாரத்தை பின்பற்றுவது போல் இந்த ஆணவக்கொலைக் கலாச்சாரத்தையும் ஈழத்தில் பின்பற்றத் தொடங்கி விடுவார்களோ என அச்சம் தோன்றுகிறது.
எனவே தமிழின உணர்வு கொண்டவர்கள் இந்த ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் அதற்கு காரணமான சாதீயத்திற்கும் எதிராக தமது கருத்துகளை முகநூலில் பரவலாக பதிவுசெய்ய வேண்டும்.

•இன்னும் எத்தனை காலம்தான் ஈழத்தமிழர்களை வைத்து இவர்கள் அரசியல் பிழைப்பு நடத்தப் போகிறார்கள்?

•இன்னும் எத்தனை காலம்தான் ஈழத்தமிழர்களை வைத்து
இவர்கள் அரசியல் பிழைப்பு நடத்தப் போகிறார்கள்?
செய்தி- ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கச் செய்வேன்- ஜெயா அம்மையார் தேர்தல் வாக்குறுதி.
தமிழக தேர்தல் களத்தில் இதுவரை நாம்தமிழர் கட்சி சீமான் மட்டுமே ஈழத் தமிழர் நலன்கள் குறித்து பேசி வருகிறார்.
தற்போது ஜெயா அம்மையாரும் பேசியுள்ளார். எனவே இனி அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் பேச ஆரம்பிப்பார்கள் என நம்பலாம்.
ஜெயா அம்மையாரும் கலைஞர் கருணாநிதியும் தேர்தல் காலங்களில் ஈழத் தமிழர் குறித்து பேசுவதும் ஆட்சிக்கு வந்ததும் அது குறித்து கண்டுகொள்ளாமல் விடுவதுமாக இருக்கிறார்கள்.
அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயமாகும். எனவே ஜெயா அம்மையாரால் கடிதம் அனுப்பலாம் அல்லது தீர்மானம் நிறைவேற்றலாம். அவ்வளவே!
இதுவரை மௌனமாக ஆட்சியில் இருந்தவர் இப்போது எதற்காக ஈழ அகதிகள் மீது ஜெயா அம்மையாருக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது?
இவருக்கு உண்மையிலே ஈழ அகதிகள் மீது அக்கறை இருக்குமானால்,
•ஏன் சிறப்பு முகாம்களை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யவில்லை?
•ஏன் அகதிமுகாம்களில் உள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை அளிக்கவில்லை?
•ஏன் அகதிமுகாம்களில் நிலவும் அதிகாரிகளின் கெடுபிடிகளை நீக்கவில்லை?
•ஏன் மதுரையில் ஈழ அகதி ஒருவர் தற்கொலை செயய காரணமாய் இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
•ஏன் கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள அகதியின் காலை முறித்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
•ஏன் மண்டபம் முகாமில் உள்ள அகதிப் பெண்ணi பாலியல் வல்லுறவு செய்த நான்கு பொலிசார் இன்னும் கைது செய்யவில்லை?
ஜெயா அம்மையார் அவர்களே!
இதுவரை ஈழத் தமிழ் அகதிகளை ஏமாற்றியது போதும். இனியும் உங்கள் பதவி நலன்களுக்காக அந்த அப்பாவி அகதிகளை பலியாக்க வேண்டாம்.
உண்மையில் உங்களுக்கு அகதிகள் மீது அக்கறை இருந்தால் முதலில் உங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள சிறப்புமுகாம்களை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யுங்கள்.
அதன்பின்பு வேண்டுமானால் இரட்டை குடியுரிமை பற்றி தாராளமாக பேசுங்கள்.