Wednesday, August 31, 2016

•இவர்களும் தமிழர்கள்தானே? இவர்களுக்கு மட்டும் ஏன் இன உணர்வு வருகிறது?

•இவர்களும் தமிழர்கள்தானே?
இவர்களுக்கு மட்டும் ஏன் இன உணர்வு வருகிறது?
ஜெர்மனியில் இருக்கும் இவர்கள் விரும்பியிருந்தால்
மற்ற புலம்பெயர் தமிழர்கள் போல்
கோவிலில் உருண்டிருக்கலாம்
பால் குடம் எடுத்திருக்கலாம்
அல்லது கொலிடேக்கு நல்லூர்; சென்று படம் எடுதிருக்கலாம்.
தண்ணியடித்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கலாம்
அல்லது நாய்க்கு செத்தவீடு நடத்தியிருக்கலாம்.
நடிகர் சிம்புவை கட்டிப் பிடித்து படம் எடுத்திருக்கலாம்.
ஆகக்குறைந்தது சுப்பர் சிங்கர் பாடகர்களையாவது டிக்கட் எடுத்து பார்த்திருக்கலாம்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீதியில் நின்று போராடுவது யாருக்காக?
போராளிகளின் மரணம் குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று
ஜேர்மன் அதிபரிடம் மனுக் கொடுத்து போராடியிருக்கிறார்கள்.
இவர்களின் உணர்வு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
மற்றவர்களுக்கு முன்மாதிரி காட்டியுள்ளார்கள்.
நம்பிக்கையளிக்கிறது. ஈழத் தமிழினம் மீண்டும் தலை நிமிரும்.
பெரும் காட்டுத் தீயை மூட்டும் சிறு பொறி இது.

•இவை புகைப்பட தினத்திற்குரிய படங்கள் அல்ல!

•இவை புகைப்பட தினத்திற்குரிய படங்கள் அல்ல!
தமிழன் கோட் சூட் போட்டால் அதற்காக வெள்ளைக்காரன் பெருமை கொள்வதில்லை. ஆனால் வெள்ளைக்காரன் வேட்டி கட்டினால் அதற்காக தமிழன் பெருமை கொள்வது ஏன்?
தமிழன் ஒட்டக இறைச்சி சாப்பிடுவதை அரபுக்காரன் படம் பிடித்து போடுவதில்லை. ஆனால் அரபு சேட் வாழை இலையில் சாப்பிட்டால் அதை படம் பிடித்து தமிழன் போடுவது ஏன்?
தமிழன் சேர்ச்;க்கு போய் இயேசு கிறிஸ்துவை வணங்கினால் அதை ஜரோப்பியர் புதினமாக பார்ப்பதில்லை. ஆனால் ஜரோப்பியர் நல்லுர் வந்து முருகனை வணங்கினால் தமிழன் புதினம் பார்ப்பது ஏன்?
தமிழன் ஆங்கிலம் பேசுவதை அந்தஸ்தாக நினைக்கிறான். ஆனால் ஆங்கிலேயன் தமிழ் பேசுவதை இன்னொரு மொழி அறிவாக மட்டுமே பார்க்கிறான்.
தமிழனிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு காரணம்.
ஆண்ட இனம் என்கிறோம்
உலகின் மூத்த குடி என்கிறோம்.
இருந்தும் எம் அடி மனதில்
தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்கிறது.
இதனை எப்படி நீக்கப் போகிறோம்?

•இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

•இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
இந்திய ராணுவம் பெலட் குண்டுகளை காஸ்மீர் மக்கள் மீது பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட போது
முதலில், இந்தியா ஜனநாயக நாடு. அதன் ராணுவம் அரச அனுமதி இன்றி இப்படியான தடை செய்யப்பட்ட குண்டுகளை பாவிக்க முடியாது என்றார்கள்.
அடுத்து, பெலட் குண்டால் பாதிக்கப்பட்ட காஸ்மீர் குழந்தையின் படத்தை காண்பித்தபோது அது பாலஸ்தீன் குழந்தையின் படம் என்று மறுத்தார்கள்.
தற்போது, இந்திய ராணுவமே தான் பெலட் குண்டுகளை பயன்படுத்தியதாக காஸ்மீர் உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
அதுவும் கடந்த 32 நாட்களில் 13லட்சம் பெலட் குண்டுகள் பயன்படுத்தியதாக ராணுவம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இனி இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?
ஒரு ஜனநாயக நாட்டில் தன் சொந்த மக்கள் மீது தடை செய்யப்பட்ட பெலட் குண்டுகளை பயன்படுத்துவது என்ன நியாயம்?
இதற்காக இந்திய அரசுக்கும் அதன் ராணுவத்திற்கும் யார்? என்ன தண்டனை? வழங்கப் போகிறார்கள்?
இவ்வாறுதான் இலங்கை அரசும் அதன் சொந்த மக்களாகிய தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசியது.
இலங்கை அரசு கொத்துக் குண்டு வீசியது நிரூபிக்கப்பட்டும் இதுவரை அதற்காக இலங்கை அரசு ஜ.நா அமைப்பினால் தண்டிக்கப்படவில்லை.
அதேபோல் தற்போது இந்திய அரசும் தன் காஸ்மீர் மக்கள் மீது தடை செய்யப்பட்ட பெலட் குண்டுகளை பயன்படுத்தியுள்ளது.
ஆனால் ஜ.நா அமைப்பு வழக்கம்போல் மௌனம் காக்கிறது.

•தமிழ் குழந்தை இறைவனால் ஆசீர்வதிக்கப்படவில்லையா?

•தமிழ் குழந்தை இறைவனால் ஆசீர்வதிக்கப்படவில்லையா?
உலகில் உள்ள குழந்தைகள் எல்லாம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்கிறார்கள்.
அதனால்தான் சிரிய நாட்டுக் குழந்தை கடற்கரையில் ஒதுங்கியபோது உலகமே கண்ணீர் விட்டது.
அதனால்தான் வியட்நாம் நாட்டு குழந்தை நிர்வாணமாக ஓடிய போது அதற்கு காரணமான அமெரிக்காவை முழு உலகமும் வெறுத்தது.
அதனால்தான் காஸ்மீர் குழந்தை இறந்தபோது முழு உலகமும் அக்கறையுடன் திரும்பிப் பார்க்கிறது.
ஆனால் தமிழ் குழந்தைகள் இறந்தபோது இந்த உலகம் திரும்பிக்கூட பாhக்கவில்லையே?
அப்படியென்றால்,
தமிழ் குழந்தைகள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படவில்லையா?
தமிழ் குழந்தைகள் இரக்கத்திற்கு உரியவர்கள் இல்லையா?
தமிழ் குழந்தைகள் அனுதாபத்திற்குரியவர்கள் இல்லையா?
மாட்டுக்காக வருத்தப்படும் இந்திய பிரதமர்கூட தமிழ் குழந்தைகளுக்காக வருத்தப்படுவதில்லையே?
தமிழ் குழந்தைகள் மாட்டைவிட மதிப்பு குறைந்தவர்களா?
தமிழ் குழந்தை மனித இனம் இல்லையா?
குறிப்பு-
தமிழ் குழந்தை படம் தவிர மற்ற எல்லா குழந்தை படமும் போட்டு கடுப்பேத்துகிறார்கள் மைலோட்!
நீங்கதான் ஒரு நியாயம் சொல்லனும் யுவர் ஆனர்!

•கோவிந்தா! கோவிந்தா!

•கோவிந்தா! கோவிந்தா!
மகிநதவும் திருப்பதி போய் கும்பிடுகிறார்
மைத்திரியும் திருப்பதி போய் கும்பிடுகிறார்.
இவர்களுக்கு இலங்கையில் உள்ள சாமிகளை கும்பிட முடியாதா?
இவர்களுக்கு இலங்கையில் உள்ள சாமிகள் மீது நம்பிக்கை இல்லையா?
இவர்கள் இலங்கை சாமிகளைவிட திருப்பதி சாமியை ஏன் அதிகம் நம்புகிறார்கள்?
சாமி கும்பிடவும் இந்தியாதான் செல்ல வேண்டுமா?
என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் ஜனதிபதி அவர்களே!
குறிப்பு-
கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்றார்களே?
அப்படியென்றால் எதற்காக திருப்பதி செல்ல வேண்டும்?
இலங்கைத் தூணிலும் துரும்பிலும் கடவுள் இல்லை என்கிறார்களா?
இந்திய கம்பனிகள் மட்டுமல்ல இந்திய கடவுளும் இலங்கையை ஆக்கிரமிக்கப் போகிறது!
DEAL ? OR NO DEAL ?
திருப்பதி ஆண்டவன் கொஞ்சம் பணக்கார கடவுள்தான்.
பக்தர்களிடம் நிறைய பணம் வாங்கிறாராம்.
“பணம் தருகிறோம். மைத்திரி மூலம் தீர்வு பெற்று தாருங்கள்” என்று திருப்பதி சாமியிடம் தமிழர்கள் ஒரு டீல் போட்டால் என்ன?

•ஜெர்மி கோபைனை ஆதரிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?

•ஜெர்மி கோபைனை ஆதரிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?
இலங்கை வரலாற்றில் சமாதானத்தை நிலைநாட்டுவேன் என்று கூறி வெற்றி பெற்று வந்த சந்திரிக்காவினால் சமாதானத்தை நிலை நாட்ட முடியவில்லை. மாறாக யுத்தத்தில் 75 வீதத்தை தானே செய்ததாக இப்போது அவர் பெருமை பேசுகின்ற அவல நிலையினைக் காண்கிறோம்..
இந்திய வரலாற்றில் "தவறான இடத்தில் இருக்கும் நல்லவர்" என்று புகழப்பட்ட வாஜ்பேய் அவர்களால் எந்த நல்லதொரு விடயத்தையும் செய்யவில்லை. மாறாக அவர் காலத்திலும் தமிழருக்கு எதிராக இலங்கை அரசுக்கு பல உதவிகள் வழங்கப்பட்டதை கண்டோம்.
அமெரிக்க வரலாற்றில் முதல் கறுப்பு ஜனாதிபதி என்ற பெருமை பெற்ற ஒபாமாவினால் தன் கறுப்பு இன மக்களைக் கொல்லப்படுவதைக்கூட தடுக்க முடியவில்லை. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இருந்தும் அவர் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் காக்கவில்லை.
தற்போது இங்கிலாந்தில் லேபர் கட்சியின் தலைவராக ஜெர்மி கோபைன் வருவதற்கு முழு தமிழரும் ஆதரவு வழங்க வேண்டும் என சில தமிழர்கள் கோருகின்றனர்.
அவர் பதவிக்கு வந்தால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு என்ன செய்வார் என்பதை அவரும் கூறவில்லை. அவரை ஆதரிக்குமாறு கோருவோரும் இதுவரை கூறவில்லை.
சந்திரிக்காவினால், வாஜ்பேயினால், ஒபாமாவினால் எதுவும் செய்ய முடியாமற் போனதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் நாளை ஜெர்மிகோபைன் செய்ய முடியாமைக்கும் காரணமாக இருக்கப் போகிறது.
ஆம். ஆளும் வர்க்கமானது தனது நலன்களுக்கு எதிராக செயற்பட யாரையும் அனுமதிக்கப் போவதில்லை. அது ஜெர்மி கோபைனையும் விடப் போவதில்லை.
இங்கிலாந்தில் கன்சவேட்டிக் கட்சி மட்டுமல்ல லேபர் கட்சியும்கூட ஆளும் வர்க்கத்தின் நலன் பேணும் கட்சிகளே.
பிளேயர் போன்றவர்கள்; பதவிக்கு வருவதை தடுப்பதற்காக ஜெர்மி கோபைனை ஆதரிக்க வேண்டியது இடதுசாரிகளின் கடமை என்று கூறும் அளவுக்கு சிலர் வந்துள்ளனர்.
ஆனால் பிளேயர் போன்று ஜெர்மி கோபைனும் பதவிக்கு வந்த பின் மாற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்டால் அதற்கு பதில் அளிக்க மறுக்கின்றார்கள்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு இங்கிலாந்து ஆளும் வர்க்கம் அம்பலப்பட்டு நிற்கின்றது. அது மக்களின் கவனத்தை எப்படி திருப்பலாம் என்று யோசிக்கின்றது.
ஜெர்மி கோபைனுக்கு ஆதரவு என்பது ஆளும் வர்க்கத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ செய்யும் உதவியாகவே அமையப் போகின்றது.

•சிறப்புமுகாமை மூடுமாறு கோரி நம்பிக்கை தரும் நடவடிக்கைகள்.

Special Camp
•சிறப்புமுகாமை மூடுமாறு கோரி நம்பிக்கை தரும் நடவடிக்கைகள்.
சிறப்புமகாமிற்கு எதிரான போராட்டத்தின் பயனாய் செய்யாறில் அமைந்திருந்த சிறப்புமுகாம் அண்மையில் மூடப்பட்டுவிட்டது.
தற்போது திருச்சியில் மட்டுமே சிறப்புமுகாம் இருக்கிறது. அதனையும் மூடுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.
கௌத்தூர் மணி அவர்கள் சிறப்புமகாமை மூடுமாறு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழ்தேசமக்கள் கட்சியினர் அனைத்து அரசியல் அமைப்புகளையும் உள்ளடக்கி சிறப்புமுகாம் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிய வருகிறது.
இந்நிலையில் நியூசிலாந்தில் எனது “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 27.08.2016 யன்று நடைபெறவுள்ளது.
சிறப்புமுகாமை மூடுமாறு கோரி நடத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகள் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விரைவில் விடுதலை பெறுவார்கள் என்ற நம்பிக்கையளிக்கின்றன.
இவ்வாறான நிகழ்வுகள் சிறப்புமுகாம் மூடப்படுவதற்கும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் விடுதலை செய்யப்படுவதற்கும் நிச்சயம் வழி சமைக்கும்.
எனவே அனைத்து தமிழ் மக்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
எந்தளவு மக்களுக்கு இது சென்றடைகிறதோ அந்தளவு விரைவாக சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை பெறுவதற்கான வாயப்பு உண்டு.
ஏனெனில் மக்கள் மட்டுமே, மக்களால் மட்டுமே இதனை சாதிக்க முடியும்

•இந்தியாவில் ஈழ அகதிக் குழந்தைகள் கல்வி கற்கவும் உரிமை இல்லையா?

•இந்தியாவில் ஈழ அகதிக் குழந்தைகள் கல்வி கற்கவும் உரிமை இல்லையா?
காஞ்சிபுரத்திற்கு அருகில் அச்சிறுபாக்கம் என்னும் இடத்தில் பிரைட் தொண்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்ட 55 அகதிக் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஈழஅகதி மாணவர்கள் எவ்வித ஆவணமும் இன்றி கல்லூரிகளில் உயர் கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயா அம்மையார் ஈழ அகதி மாணவர்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பை தடை செய்தார்.
தற்போது உரிய ஆவணம் இல்லை எனக்கூறி அகதிக் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியையும் ஜெயா அம்மையாரின் அரசு தடை செய்துள்ளார்கள்.
அகதிகளிடம் அகதி ஆவணம் இன்றி வேறு என்ன ஆவணம் இருக்க முடியும்? எனவே உரிய ஆவணம் இல்லை எனக்கூறி கல்வி வாய்ப்பை தடை செய்வது கொடூரம் இல்லையா?
இந்தியாவை தவிர மற்ற நாடுகள் எல்லாம் ஈழ அகதிகளுக்கு கல்வி வாய்ப்பு மட்டுமன்றி குடியுரிமையைக்கூட வழங்குகின்றன.
ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் மட்டும் 36 வருடங்களாக இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மட்டுமன்றி தற்போது கல்வி வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
ஈழம் எடுத்தக் கொடுப்பேன் என்று முழங்கி “ஈழத் தாய்” என்று பட்டம் பெற்ற ஜெயா அம்மையார் தன் ஆட்சியில் ஈழ அகதிகளை இவ்வாறு துன்புறுத்துகிறார்.
மோடி பிரதமரானால் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில் நிச்சயம் உதவிகள் புரிவார் என்றார்கள்.
ஆனால் பதவிக்கு வந்த மோடியோ வங்கதேச இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கிறார். ஆனால் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்.
கல்வி ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை ஈழ அகதிகளுக்கு இந்திய அரசு மறுப்பதையிட்டு எமது தலைவர்கள்கூட அக்கறை கொள்ளவில்லை.
எமது தலைவர்கள்; இத்தனைக்கும் பிறகும்கூட இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யும் என்று தேவாரம் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
முகநூலில்கூட நம்மவர்கள் அக்கறை எல்லாம் செவாலியர் விருது வாங்கிய கமலகாசனுக்கு வாழ்த்து கூறாமைக்கு ஜெயா அம்மையாருக்கு கண்டனம் தெரிவிக்கின்றனரேயொழிய அகதிக் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டிருப்பது குறித்து கண்டனம் தெரிவிப்பதில்லை.
விளங்கிடும் தமிழ் இனம்!

தோழர் சந்திரசேகர் அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு “நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் சந்திரசேகர் அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு “நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
“எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் அதன் ஆரம்பகால வகுப்புகளில் “இந்திய விஸ்தரிப்பு வாதம்’’ ஒன்றாகும்.
அதாவது இந்திய விஸ்தரிப்பு வாதத்தைப் பற்றி 1967களிலேயே பேசியவர்கள் நாம்.
தற்போது இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் மேலும் உக்கிரமடைந்திருக்கும் வேளையில், தோழர் பாலன் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலை எழுதியமைக்காக தோழர் பாலன் அவர்களுக்கு முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனெனில் இலங்கைக்கு வெளியே லண்டனில் அவர் தற்போது இருந்தாலும் இலங்கை குறித்த விடயத்தில் அக்கறையுடன் துணிச்சலாகவும் பகிரங்கமாகவும் அவர் இதனை எழுதியுள்ளார்.
பல கல்விமான்களும் புத்திஜீவிகளும் நிறைந்துள்ள யாழ்ப்பாணத்தில் இந்த இந்திய ஆக்கிரமிப்பு குறித்து யாருமே பேசாத நிலையில், நான் அறிந்தவரையில் தோழர் பாலன் மட்டுமே முதன் முதலாக பகிரங்கமாக இதனைப் பேசியுள்ளார்.
இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழு இந்திய ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக காட்சியளிக்கின்ற நிலையில், இந்த இந்திய ஆக்கிமிப்புக்கு எதிராக துணிந்து பேச யாரும் முன்வராத நிலையில், தோழர் பாலன் அவர்கள் இந் நூல் மூலம் வழி காட்டியுள்ளார்.
இது ஒரு சிறிய நூல்தான். ஆனால் இந்திய ஆக்கிரமிப்பை புரிந்துகொள்ள தேவையான அளவு விபரங்களை இந் நூல் கொண்டிருக்கிறது.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ள, இலங்கையில் உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய மிகவும் அவசியமான நூல் இது.
இந் நூலை எழுதி வெளிக்கொணர்ந்தமைக்காக தோழர் பாலனுக்கு மீண்டும் எனது பாராட்டுகள்.
இலங்கை மீதான இநதிய ஆக்கிமிப்புக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வோம்.

•பாருள்ளே நல்ல நாடு “பாரத” நாடு?

•பாருள்ளே நல்ல நாடு “பாரத” நாடு?
தாழத்தப்பட்ட சாதி சேர்ந்தவர் என்பதால் அம்புலன்ஸ் வண்டி கொடுக்கப்படவில்லை.
தனியார் வண்டி பிடிக்கவும் கையில் பணமும் இல்லை. அந்தளவு வறுமை.
16 கி.மீ மனைவியின் இறந்த உடலை தோளில் தூக்கிச் சென்ற ஒரு ஏழையின் அவல நிலை.
இந்திய அரசு முதலாளிகளுக்கு வழங்கியுள்ள கடன் விபரம்,
ரிலைன்ஸ் (முகேஸ் குரூப்)- 187070 கோடி ரூபா கடன்
ரிலைன்ஸ் குரூப்- 121000 கோடி ரூபா கடன்
எஸ்ஸார் குரூப் - 101461 கோடி ரூபா கடன்
அதானி குரூப் - 96000 கோடி ரூபா கடன்
ஜேபி குரூப் - 75000 கோடி ரூபா கடன்
ஜிஎம்ஆர் குரூப் - 47976 கோடி ரூபா கடன்
லான்கோ குரூப் - 47102 கோடி ரூபா கடன்
வீடியோகான் - 45400 கோடி ரூபா கடன்
முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளி வழங்கும் இந்திய அரசு ஏழைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகளைக்கூட கொடுக்க மறுக்கிறது.
2020 ல் பாரத நாடு வல்லரசு நாடு ஆகிவிடுமாம்!
த்தூ……

•செவ்வாய்க்கு ராக்கட் விட்ட தேசத்தில் ஏழைகளுக்கு அம்புலன்ஸ் வண்டி விடமுடியாதா?

•செவ்வாய்க்கு ராக்கட் விட்ட தேசத்தில்
ஏழைகளுக்கு அம்புலன்ஸ் வண்டி விடமுடியாதா?
செவ்வாய்க்கு ராக்கட் விட்டதாக பெருமை கொள்கிறார்கள்.
2020ல் நிச்சயம் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்கிறார்கள்.
பிரதமருக்கு 2000கோடிக்கு தனி விமானம் வாங்கிறார்கள்.
ஆனால் ஏழைகளுக்கு ஒரு அம்புலன்ஸ் வண்டிகூட விட மனம் வரவில்லையே!
அம்புலன்ஸ் வண்டி இல்லை என்ற காரணத்தால்,
சில தினங்களுக்கு முன்னர் ஓரு ஏழை தன் இறந்த மனைவியின் உடலை 16 கி.மீ தோளில் சுமந்து சென்றார்.
நேற்றைய தினம் இறந்த ஒரு விதவைப் பெண்ணின் உடலை இரண்டாக முறித்து தூக்கிச் சென்றுள்ளார்கள்.
மகனின் முன்னிலையிலேயே தாயின் உடலை இவ்வாறு கொண்டு சென்றுள்ளார்கள்.
அந்த ஏழை மகனால் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
முதலாளி அம்பானியின் மனைவிக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.
ஆனால் இறந்த விதவைப் பெண்ணின் உடலைக்கூட அம்புலன்ஸ் வண்டி இல்லை என்று கூறி உடலை முறித்துக் காவிச் செல்கிறார்கள்.
இலங்கைக்கு 100 அம்புலன்ஸ் வண்டிகளை அன்பளிப்பு செய்யும் இந்திய அரசு
தனது சொந்த ஏழை மக்களுக்கு அம்புலனஸ்; வண்டி இல்லை என்கிறது.
இந்தியா பணக்காரர்களுக்கு மட்டுதான் சொந்தமா?
அங்கு ஏழைகள் வாழ இடமில்லையா?

•நம்புங்கள் ! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு?

•நம்புங்கள் !
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு?
இந்தியாவின் ஹரியானா மாநில சட்ட சபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து நிர்வாண சாமியார் 40 நிமிடம் அருளாசி வழங்கினார்.
இத்தனை காலமும் அரசியல் தலைவர்கள் சாமியார் மடங்களுக்கு சென்று அருளாசி பெற்றனர்.
தற்போது ஒரு சாமியார் சட்டசபைக்கு வந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அருளாசி வழங்கிறார்.
இனி அடுத்து பாராளுமன்றம் , ஜனாதிபதி மாளிகை எல்லாம் சாமியார்கள் சென்று அருளாசி வழங்கப் போகிறார்கள்.
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே இப்பவும் கூறுகிறார்கள்.
இதை எப்படி நம்புவது?
இந்த கொடுமையை என்னவென்பது?
குறிப்பு-
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பார்கள்.
மோடி அரசாண்டால் இன்னும் எத்தனை சாமியார்கள் வரப் போகிறார்களோ?

•தோழர் செங்கொடியை நினைவில் கொள்வோம்!

•தோழர் செங்கொடியை நினைவில் கொள்வோம்!
இவர்,
தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம்
ஆனால் இவரின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மூன்று தமிழர் உயிர் காக்க
தன் உயிரைக் கொடு;த்தவர்
வாழ வேண்டி வயதில்
சாவை விரும்பி ஏற்றவர்.
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.
இது உறுதி!

•சேரன் அவர்களே!

•சேரன் அவர்களே!
ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்காக போராடுவது ஒருபோதும் அருவருப்பானது அல்ல.
மாறாக ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்காக போராடாமல் இருப்பதே அருவருப்பானது.
ஈழத் தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் பார்ப்பான் துக்ளக் சோ ராமசாமிகூட இதுவரை ஈழத் தமிழர்களை திருடர்கள் என்று கூறியதில்லை.
காட்டிக்கொடுக்கும் பார்ப்பான் சுப்பிரமணிய சுவாமிகூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தமை அருவருப்பாக இருக்கிறது என்று கூறியதில்லை.
எப்படி உங்களால் மட்டும் ஈழத் தமிழர்களை திருடர்கள் என்றும் அவர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறது என்றும் கூற முடிந்தது?
ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டு அதரவு தெரிவித்தமைக்காகவே பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் இருக்கிறார். அவருடைய இளமைக் காலம் முழுவதும் வீணாக கழிந்துவிட்ட நிலையிலும் அவரது தாயார் இதுவரை ஈழத் தமிழர்களை ஆதரித்தது தவறு என்று ஒரு வார்த்தை கூறவில்லையே?
ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை மாய்த்தவர் முத்துக்குமார். அவருடைய குடும்பம் மிகவும் கஸ்ட நிலையில் இருந்தும்கூட அவரது தந்தையார் தன் மகன் ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்தது தவறு என்று இதுவரை கூறியதில்லையே?
ஈழத்தில் இந்திய ராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராக கொடைக்கானலில் குண்டு வைத்து மரணமானவர் மாறன். அவரது தந்தையாரை சந்தித்து உங்கள் மகன் ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்ததையிட்டு கவலை கொள்கிறீர்களா என நான் கேட்டபோது என் கரங்களைப் பற்றி “ இல்லை. ஒருபோதும் அவ்வாறு நினைக்கமாட்டேன்” என்று கூறினாரே!
யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிராக தன்னை தீயிட்டு மாண்டவர் துறையூர் அப்துல் ரவூப். அவரது தந்தை இன்று வரையும் தன் மகனின் ஈகையையிட்டு பெருமை கொள்வதாகத்தானே கூறுகின்றார்!
ஈழத் தமிழனுக்காக மருதையாற்றில் வெடிகுண்டு வைத்தவர். உளவுப்படையால் அடித்துக் கொல்லப்பட்டவர். தோழர் தமிழரசன். அவரது தாயார் இன்றும் வறிய நிலையில் இருக்கிறார். ஆனால் அவரும்கூட தன் மகன் ஈழத் தமிழருக்காக போராடியதை நினைத்து அருவருப்பதாக கூறவில்லையே?
இவர்களைவிடவா நீங்கள் போராடினீர்கள்?
இவர்களின் குடுமபத்தைவிடவா நீங்கள் கஸ்டப்படுகின்றீர்கள்?
அப்படியிருக்கையில் எப்படி உங்களால் மட்டும் இப்படி கூறமுடிந்தது?
மிகவும் வலிக்கிறது. தயவு செய்து நீங்கள் கூறியவற்றை வாபஸ் பெறுங்கள்.
இறுதியாக,
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று தமிழ்நாடுவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசன் கூறுகிறார்.
எனவே நீங்கள் உங்களுக்காக போராடுவதே ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு செய்யும் உதவியாகும்.

•மாதராய் பிறந்திட மாதவம் புரிந்திட வேண்டும். ஆனால் திருமணத்தின்போது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும்?

•மாதராய் பிறந்திட மாதவம் புரிந்திட வேண்டும். ஆனால்
திருமணத்தின்போது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும்?
பெண்களின் கன்னித் தன்மையை பரிசோதித்து அவர்களின் ஒழுக்கத்தையே கேள்விக்குள்ளாக்கும் கொடுமை இன்னும் இந்த ஆணாதிக்க உலகில் தொடருகின்றது.
மகாராஸ்ரா மாநிலத்தில் பொலிஸ் வேலையில் இருக்கும் பெண் ஒருவருக்கு முதலிரவின்போது படுக்கை விரிப்பில் இரத்தக்கறை வரவில்லை என்பதால் அவர் ஒழுக்கமற்றவர் என குற்றம்சாட்டி அன்றே விவாகரத்து செயய்ப்பட்டுள்ளது.
கஞ்சர்பாத் என்ற சாதியில் இவ்வாறு பார்த்து விவாகரத்து வழங்கவென்று ஒரு பஞ்சாயத்துக் குழு முதலிரவு அறைக்கு வெளியே உட்காhந்து இருக்குமாம்.
என்ன கொடுமை இது? கடுமையான பயிற்சி அல்லது சயிக்கிள் ஓட்டுவதன் மூலமோ இந்த கன்னித்திரை கிழிய வாய்ப்புண்டு என்பது கூட இந்த முட்டாள்களுக்கு இன்னும் தெரியவில்லையா?
கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. ஆனால் ஒரு பெண் பலவந்தமாக உறவு செய்யப்பட்டால் “கற்பழிப்பு” என கூறப்படுகிறது.
பாலியல் வல்லுறவுக்குள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதிசெய்ய பெண்களின் பிறப்பு உறுப்பில் நடத்தப்படும் இரு விரல் சோதனையானது அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அதைத் தடைசெய்துள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.
கன்னித்தன்மை பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று 2013-ல் பி.எஸ்.சவுஹான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சொல்லிவிட்டது.
ஆனாலும் இன்றும்கூட பாதிக்கப்பட்ட பெண்கள் மீது கன்னித் தன்மை பரிசோதனை நடத்தப்படுகிறது.
2013-ல் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுஹான் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது, அப்பெண்களில் பலர், மாவட்ட அதிகாரிகளால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
இந்த கன்னித்தன்மை பரிசோதனைக் கொடுமை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் பெண்களுக்கு நடந்துகொண்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்கா நாட்டில் ஒவ்வொரு வருடமும் ‘ரீட் டான்ஸ்’ என்ற அரை நிர்வாணக் கலை நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்துகொள்ளப் பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
2016-ம் ஆண்டு புதிய விதியின்படி, இந்தோனேசிய ராணுவத்தில் சேர, ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானில், ஏடெனா ஃபர்கடானி என்ற கார்ட்டூனிஸ்ட், தன் ஆண் வழக்கறிஞருடன் கைகுலுக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
1970-களில் திருமண விசாவில் பிரிட்டனுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய வரலாறு உண்டு.
இந் நிலையில் ஜ.நா வின் தென்னிந்திய பெண்களுக்கான அமைதித் தூதுவராக ஜஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜஸ்வர்யாவுக்கு ரஜனிகாந்த் மகள், தனுஸ் மனைவி என்பதைவிட வேறு என்ன தகுதிகள் இருக்கிறது என்று இப் பதவி வழக்கப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை.
ஆனால் ஜஸ்வர்யா தன் திருமணத்தின்போது அவரின் கன்னித்தன்மை குறித்து வெளிவந்த பல கிசு கிசு செய்திகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.
எனவே அவர் தனது பதவிக்காலத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் இந்த கொடிய கன்னித்தன்மை பரிசோதனையை தடைசெய்ய முழு கவனம் செலுத்தவார் என நம்புவோம்.
பெண்கள் உலகமெங்கும், எல்லாத் துறைகளிலும் பல தடைகளை உடைத்து முன்னேறி நாட்டை ஆள்கிறார்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். எத்தனையோ சாதனைகளைச் செய்துவருகிறார்கள்.
ஆனால், திருமணம் என்று வரும்போது, தங்கள் ஒழுக்கத்தை நிரூபிக்க இப்படியெல்லாம் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை என்பதைச் சமூகம் உணர வேண்டும்.