Saturday, December 31, 2016

•கலைஞர் இப்ப என்ன சொல்லப் போகிறார்?

•கலைஞர் இப்ப என்ன சொல்லப் போகிறார்?
முள்ளிவாய்க்கால் அழிவிற்கு இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.
ஆனால் இதற்கு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியும் உடந்தையாக இருந்தார் என்ற தகவலை சிவசங்கர் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்பு அனந்தி சசிதரன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியபோது இது பொய் என்றும் அனந்தி யார் என்றே தெரியாது என்றும் கனிமொழி கூறியிருந்தார்.
ஆனால் இப்போது சிவசங்கர் மேனன் எழுதிய நூலில் மத்திய அரசின் விடுதலைப் புலிகள் அழிப்பு முயற்சிகளுக்கு கலைஞர் கருணாநிதியின் ஆதரவு இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இனி சிவசங்கர் மேனன் யார் என்று தமக்கு தெரியாது என்று கனிமொழியோ அல்லது கருணாநிதியோ கூறக்கூடும்.
ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவர்கள் விடுதலைப் புலிகளை மட்டும் அழிப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை.
ஏனெனில் புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக கூறிய பின்பு 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொன்றுள்ளனர்.
எனவே முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இனப் படுகொலைக்கு கலைஞர் கருணாநிதியும் துணை போயிருக்கிறார் என்பதே உண்மை.
பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதன் மூலம் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க முடியுமா என்று இந்திய அரசால் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட சோதனைக் களமே முள்ளிவாய்க்கால்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! எத்தனை ஆயிரம் பேரைக் கொன்று குவித்தாலும் இலங்கை இந்திய அரசுகளின் கனவு நிறைவேற இடமளியோம்.
மீண்டும் எழுந்து நிற்போம். அதுவும் விரைவில் எழுந்து நிற்போம்.
முன்னெப்போதையும்விட பலமாக எழுந்து நிற்போம். இது உறுதி

ஓ! அப்துல் ரவூப், எங்களை மன்னித்து விடு!

ஓ! அப்துல் ரவூப், எங்களை மன்னித்து விடு!
அம்மாவுக்கு பின்பு சின்னம்மாவா? என்ற இன்றைய அரசியல் பட்டிமன்றத்தின் நடுவே ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த அப்தல் ரவூப் தியாகம் மறந்து போனது ஒன்றும் ஆச்சரியமான விடயம் இல்லைத்தான்.
என்ன செய்வது? அப்தல் ரவூப்பிற்கு நம்மவர் போல் ரஜனிக்கு பிறந்தநாள் கொண்டாட தெரியவில்லை. அவன் ஈழத் தமிழர்களையும் தன் உடன்பிறப்பாக நினைத்தது முட்டாள்தனம்தான்.
தமது அபிமான நடிகர்களுக்கு கட்அவுட் கட்டி பால் அபிசேகம் செய்யும் இளைஞர் கூட்டத்தின் மத்தியில் ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை தியாகம் செய்த அப்துல் ரவூப் பிழைக்கத் தெரியாதவன்தான் போலும்.
1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள்.
சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது.
அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது.
அப்துல் ரவூப் மரணம்,
• ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது
• தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது.
• ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது.
• தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது.
இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான்.
ஆனால் நாம் அப்துல் ரவூப்பையும் அவரது தியாகத்தையும் மறந்துவிட்டோம். அதனை நினைவு கூர தவறிவிட்டோம்.
அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது. காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது. அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது.
ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள்.
இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நம்மவர்கள் அப்துல் ரவூப்பை மறந்துவிட்டார்கள். அவரின் தியாகத்தையும்கூட நினைவு கூர தவறி விட்டார்கள்.
ஓ! அப்துல் ரவூப் எங்களை மன்னித்துவிடு!

•தீர்வு கிடைக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே!
இந்த வருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவேன் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதி அளித்திருந்தார்.
அவர் வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது.
எனவே இன்னும் 15 நாட்களில்,
•சிறையில் உள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை பெறுவார்கள்.
•காணாமல் போனோர் யாவரும் கண்டு பிடிக்கப்படுவார்கள்
•இடம்பெயர்ந்தோர் யாவரும் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
•வட கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் யாவும் அகற்றப்படும்.
•இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் யாவும் மக்களிடம் கையளிக்கப்படும்.
•திட்ட மிட்ட சிங்கள குடியேற்றம் நிறுத்தப்படும். தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகள் கட்டுவது தடுக்கப்படும்.
மேற்கண்டவை யாவும் இன்னும் 15 நாட்களில் நடக்கும் என்று நம்புவோம்.
தான் வாக்குறுதியளித்தபடி இன்னும் 15 நாட்களில் தீர்வு பெற்றுத்தாராவிடின் உயிரை விடும் அளவிற்கு சம்பந்தர் அய்யா மானஸ்தன் இல்லைதான்.
ஆனாலும் இந்த வாக்குறுதியை அளித்தே தேர்தலில் வெற்றி பெற்றமையினால் தார்மீக ரீதியாக தனது பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது அவரது கடமையாகும்.
பட விளக்கம்-
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தன் கையால் தனக்கு குடை பிடிக்கிறார். சம்பந்தர் அய்யா ஏன் தனக்கு மற்றவர்களை குடை பிடிக்க வைக்கிறார் என்று நான் கேட்க விரும்பவில்லை. ஏனெனில் சம்பந்தர் அய்யா ஒபாமாவைவிட பெரிய தலைவராக அவரது விசுவாசிகள் நம்புகின்றனர்.

•இதுதான் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியா?

•இதுதான் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியா?
கேரளாவில் மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக் கட்சி அண்மையில் மறைந்த பிடல் காஸ்ரோவுக்கு கியூபா சென்று அஞ்சலி செலுத்தியது.
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பிடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
புரட்சியைக் கைவிட்டு தேர்தல் பாதைக்கு சென்றுவிட்ட இந்த போலிக் கம்யுனிஸ்டுகளிடம் ஏன் இந்த முரண்பாடு என்று கேட்பதில் அர்த்தமில்லைதான்.
ஆனால் “மாவோயிஸ்டுகள் தேச விரோதிகள் இல்லை. அவர்கள் தேச பக்தர்கள்” என்று உச்ச நீதிமன்றம் கூறிய பின்பும் மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொல்வது என்ன நியாயம்?
மாவோயிஸ்டு என்பதற்காக ஒருவரை கைது செய்யக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றமே தெரிவித்த பின்பும் மாவோயிஸ்டு என்று கூறி சுட்டுக் கொல்வது என்ன நியாயம்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் அஜீதா அவர்களை, அவர் மீது எந்த வழக்கோ அல்லது குற்றச்சாட்டோ அற்ற நிலையில் போலி மோதலில் கொன்றது என்ன நியாயம்?
சுட்டுக்கொன்றது மட்டுமல்ல அவரது உடலை உறவினர்களோ அல்லது நண்பர்களிடம் ஒப்படைக்காமல் எரிக்க முயன்றது என்ன நியாயம்?
வழக்கறிஞர் அஜீதாவுடன் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் குப்புராஜின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக கேரள பாலிடெக்னிக்கில் பணியாற்றிய மக்கள் உரிமை ஆர்வலர் ரஜீசை பணி நீக்கம் செய்தது என்ன நியாயம்?
வழக்கறிஞர் அஜிதா மற்றும் குப்புராஜ் ஆகியோர் போலி மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து குரல் எழுப்பிய “போராட்டம்” அமைப்பைச் சேர்ந்த தோழர் ராவுண்ணியை கைது செய்தது என்ன நியாயம்?
அஜிதா மற்றும் குப்புராஜ் படுகொலையைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய தோழர் திணேஸ் மற்றும் தோழர் பார்த்திபன் ஆகியோரைக் கைது செய்தது என்ன நியாயம்?
கேரளாவில் நடப்பது கம்யுனிஸ்ட் கட்சியின் ஆட்சியா? அல்லது பொலிஸ் ஆட்சியா?

•இது ஊடக விபச்சாரம் இன்றி வேறு என்ன?

•இது ஊடக விபச்சாரம் இன்றி வேறு என்ன?
கனடாவில் உள்ள ஒரு தமிழ் ஊடகவியலாளர் பாலசிங்கம் இறப்பதற்கு முன் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது “பிரபாகரன் ஒரு தீர்வுக்கு தயாராக இல்லை. யுத்தத்தால் அழியப் போகிறார்” என்று கூறியதாக கட்டுரை எழுதியுள்ளார்.
இந்த கனடா ஊடகவியலாளர் தன்னுடன் பாலசிங்கம் பேசியதாக கூறியது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஒருவர் இறந்தபின்பு அவர் இப்படி கூறினார் என்று எழுதுவதைப் படிக்கும்போது எம்.ஜி.ஆர் சாகும்போது தன்னிடம் சத்தியம் கேட்டதாலே தான் அரசியலில் இருப்பதாக ஜெயலலிதா கூறித்திரிந்தது ஞாபகத்திற்கு வருகின்றது.
இந்த கனடா ஊடகவியலாளர் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தத்தின்போது மாத்தையா கூறாத வரிகளை கூறியதாக எழுதி, அதனால் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவால் விசாரிக்கப்பட்டு பேமஸ் ஆனவர்.
அதுமட்டுமல்ல தராக்கி சிவராம் கொல்லப்பட்டபோது அதனை கருணாவே செய்தார் என்று எதோ பக்கத்தில் நின்று பார்த்தது போல் விவரித்து எழுதியிருந்தார். அப்புறம் அக் கொலையை புளட் இயக்கதினரே செய்தனர் என்ற உண்மை வெளிவந்தபோதும் இவர் கொஞ்சம்கூட வெட்கமின்றி இருந்தார்.
அதேபோன்று லண்டனில் உள்ள ஒரு தமிழ் ஊடகவியலாளர் நடந்து முடிந்த யுத்தத்திற்கும் அதில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இறந்ததற்கும் பிரபாகரனே காரணம் என்று புத்தகம் எழுதி விற்றுத் திரிகிறார்.
புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக கூறிய பின்பு 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு பிரபாகரன் எப்படி காரணம் ஆகும் என்று கேட்டால் இந்த புத்தகம் எழுதி விற்று திரியும் ஊடகவியலாளர் பதில் சொல்வதில்லை.
சரி. இந்த ஊடகவியலாளர் கூறுவது போல் தீர்வு வராமல் யுத்தம் ஏற்பட்டு அழிவு வந்தமைக்கு பிரபாகரன்தான் காரணம் என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் கடந்த ஏழு வருடமாக பிரபாரன் இல்லையே. ஏன் இலங்கை அரசால் ஒரு தீர்வை தர முடியவில்லை?
இலங்கை அரசு தீர்வு தர விரும்பியது உண்மை என்றால் அதை பிரபாகரன்தான் குழப்பினார் என்பது உண்மையானால் அந்த தீர்வை ஏன் இன்னும் இலங்கை அரசு தரவில்லை என்று இந்த ஊடகவியலாளர்கள் கூறுவார்களா?
பிரபாகரனால்தான் தீர்வு கிடைக்காமற் போயிற்று என்று எழுதும் இந்த ஊடகவியலாளர்கள் இலங்கை அரசு தீர்வு தராமல் இழுத்தடிப்பது தவறு என்று ஏன் ஒருவரி எழுத முடியவில்லை?
இவர்கள் இந்திய தூதரை திருப்திப்படுத்த எழுதும் எழுத்துகளை ஊடகவியலாளர் என்று சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் வெளியிட்டு எரிச்சல் ஊட்டுகிறார்கள்.
இப்போதெல்லாம் இப்படியான ஊடக விபச்சாரங்களை காணும்போது ஊடகவியலாளர் என்றாலே எரிச்சலும் ஆத்திரமும்தான் வருகின்றது.

நேற்று இலங்கையில் முள்ளிவாய்க்கால் இன்று சிரியாவில் அலெப்போ நாளை எந்த இடத்தில்?

•நேற்று இலங்கையில் முள்ளிவாய்க்கால்
இன்று சிரியாவில் அலெப்போ
நாளை எந்த இடத்தில்?
முள்ளிவாய்க்காலில் போட்டது கொத்துக் குண்டுகள்
காஸ்மீரில் சுடப்பட்டது பெல்லட் குண்டுகள்
அலெப்போவில் வீசப்பட்டது பேரல் குண்டுகள்.
இனி அடுத்து அணு குண்டுகளா என்ன?
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு மகிந்த தண்டிக்கப்பட்டிருந்தால்
இன்று சிரிய அதிபர் ஆசாத்திற்கு இந்த தைரியம் வந்திருக்குமா?
ஜ.நா கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
அதன் எந்த விதிகளாலும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை.
மதங்களாலும் அதன் கடவுள்களாலும் கூட மக்களை காப்பாற்ற முடியவில்லை.
பயங்கரவாத ஒழிப்பின் பெயரால் ஆயிரக் கணக்கான மக்கள் அழிக்கப்படுகின்றனர்.
ஜரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இயேசு பிறப்பிற்காக வண்ண விளக்குகள் அலங்கரிக்கின்றன.
கடைகளில் கிறிஸ்மஸ் வியாபாரம் மும்முரமாக நடக்கின்றன.
வீதிகளிலும் மண்டபங்களிலும் வீடுகளிலும் விருந்துகள் நடக்கின்றன
ஆனால் உலகின் இன்னொரு மூலையில் மக்கள் மீதே ஈவுரக்கமின்றி குண்டுகள் போடப்படுகின்றன.
சிறு குழந்தைகள்கூட கொல்லப்படுகின்றன. உணவு இல்லை. உறங்க இடமில்லை. மருத்துவ வசதிகூட இல்லை.
ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து மக்கள் மீது யுத்தத்தை திணிக்கின்றன.
வல்லரசுகள் இரக்கமின்றி தமது ஆயுத வியாபாரத்தை நடத்துகின்றன.
இதனை ஜ.நா வோ அல்லது கடவுள்களோ தடுத்து நிறுத்தப் போவதில்லை.
திணிக்கப்படும் யுத்தங்களை புரட்சியாக மாற்றுவதைவிட வேறு வழியில்லை.

•பிரித்தானிய வல்லரசு நாட்டில் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்!

•பிரித்தானிய வல்லரசு நாட்டில் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்!
இலங்கை இந்திய நாடுகளில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகம் என்று ஜரோப்பிய ஊடகங்களால் கிண்டலடிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
ஆனால் இப்போது அந்த ஜரோப்பிய நாடுகளிலேயே பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிரித்தானிய வல்லரசு நாட்டில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம். ஆனால் இன்று லண்டன் வீதிகள் எங்கும் பிச்சைக்காரர்கள் இருப்பதைக் காணலாம்.
லண்டனில் ஈஸ்ட்காம் பகுதி ஏழைகள் அதிகம் உள்ள பகுதியாகும். ஆனால் அந்தப் பகுதியில்கூட ரயில் நிலையம் முன்னால் பிச்சை எடுப்பவர்களை காணக்கூடியதாக உள்ளது.
வீதிகளில் கிறிஸ்மஸ் விழாவிற்காக வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன. ஆனால் கடும் குளிரிலும் அந்த வீதிகளில் மக்கள் பிச்சை எடுக்கின்றமை குறித்து அரசு அக்கறை இன்றி இருக்கிறது.
முதலில் அகதிகள் அதிகம் வருவதே அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்று கூறி அகதிகள் வருவதை தடை செய்தார்கள்.
அதன்பின் ஜரோப்பியர் அதிகம் வருவதே பிரச்சனைக்கு காரணம் என்று கூறி ஜரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினார்கள்.
ஆனால் மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், சலுகைகள் ஒவ்வொன்றாக குறைக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் விலைவாசி அதிகரிக்கின்றது. ஆனால் அந்தளவுக்கு மக்களின் சம்பளம் அதிகரிப்பதில்லை.
அதனால் மக்களின் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்த இடைவெளியை சமாளிக்க முடியாத மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வருகின்றார்கள். வேறு வழியின்றி பிச்சை எடுக்கிறார்கள்.
ஆனால் அதேவேளை பணக்காரர்கள் மேலும் பணக்காரகளாகி வருகின்றார்கள். உதாரணத்திற்கு பிரிட்டனின் அதிக சொத்து மதிப்பு குடும்பமாக டேவிட் மற்றும் சைமன் குடும்பம் இருக்கிறது.
இவர்களின் 2011 ம் ஆண்டு சொத்து மதிப்பு 6.18 பில்லியன் பவுண்ட்ஸ் ஆகும். 2016ல் இவர்களின் சொத்து மதிப்பு 13.10 பில்லியன் பவுண்ட்ஸ் அகும்.
அதாவது இவர்களின் சொத்து மதிப்பு 5 வருடத்தில் இரண்டு மடங்காகியுள்ளது. ஆனால் அரசு மக்களுக்கு உதவி வழங்க பணம் இல்லை என்று கூறுகிறது.
இயேசு மீண்டும் வருவார் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த இயேசு வந்தாலும் இந்த ஏழை மக்களின் பிரச்சனைகள் தீரப் போவதில்லை.
இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் செல்வம் போதாமை அல்ல. மாறாக செல்வம் சரிவரப் பங்கிடாமல் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருவதே காரணமாகும்.
இந்த உண்மையை ஏழை மக்கள் உணராதவரையில் அல்லது அவர்களுக்கு உணர்த்தப்படாதவரையில் மாற்றம் என்பது வருவதற்கு சான்ஸ் இல்லை.

•சிறு பொறிதானே பெரும் காட்டு தீயை மூட்டுகிறது!

•சிறு பொறிதானே பெரும் காட்டு தீயை மூட்டுகிறது!
செய்தி- மலேசியாவில் ஜனாதிபதி மைத்திரிக்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
20 பேர்தானே வந்துள்ளனர் என்று சில அரசு விசுவாசிகள் படம் போட்டு கிண்டல் செய்கின்றனர்.
ஆனால் இது கூடிவிட்டு கலைந்து போகும் வெறும் கூட்டம் அல்ல. இது பணம் கொடுத்து கூட்டி வந்த கூட்டமும் இல்லை.
இது தானாக கூடிய கூட்டம் மட்டுமல்ல. எதிர்காலத்தில் ஆயிரம் ஆயிரமாக வளரப் போகும் கூட்டம்.
இவர்கள் தங்கள் பிரச்சனைக்காக கூடவில்லை. மாறாக தமது உடன் பிறப்புகளாக ஈழத் தமிழரை நினைத்து இன உணர்வில் கூடிய கூட்டம்.
இத்தனை காலமும் தமிழகத்தில் மட்டுமே இப்படியான ஈழ ஆதரவு கூட்டங்களை கண்டு வந்தோம். ஆனால் இப்போது அண்மைக்காலமாக மலேசியா சிங்கப்பூர் நாடுகளிலும் இதனை காண்கிறோம்.
ஈழத் தமிழன் அனாதை என்றும் அவனை கொன்று குவித்தால் கேட்க யாருமே இல்லை என்றுமே இதுவரை இலங்கை இந்திய அரசுகள் நினைத்து வந்தன.
ஆனால் தற்போது உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன உணர்வோடு ஒன்று சேர்ந்து வருவது இவர்களுக்கு கலக்கத்தைக் கொடுக்கிறது.
இதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றே கூறினார் “ எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்று. அவர் கண்ட கனவு இன்று நனவாகிறது.
எனவே உலக தமிழினத்தின் ஒற்றுமையாய் ஒரு சிறு பொறியை மலேசிய தமிழர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். அது பெரும் காட்டு தீயாக நிச்சயம் மாறும்.
வரலாற்றில் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய எழுச்சிகள் யாவும் முதலில் ஒரு சிலருடனே ஆரம்பித்தத்தை நாம் காண்கிறோம்.
அதேபோல் இதனையும் நாம் மாற்றிக் காட்டுவோம் எமது எதிரிகளுக்கு!

•பறவைகளுக்காக இரங்குவோர் இந்த அகதிகளுக்காகவும் கொஞ்சம் இரங்கக்கூடாதா?

•பறவைகளுக்காக இரங்குவோர்
இந்த அகதிகளுக்காகவும் கொஞ்சம் இரங்கக்கூடாதா?
வார்தா புயலினால் பல மரங்கள் விழுந்து விட்டன என்றும் இனி காக்கை குருவிகள் எங்கு வாழும் என ஒரு நடிகை தொலைக்காட்சியில் மனம் இரங்கி கேட்கிறார்.
இந்த நடிகையின் கண் முன்னே கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் வாழ்ந்தவர்கள் புயலினால் பாதிக்கப்பட்டு நிற்பது ஏனோ இரக்கத்திற்குரியதாக தெரியவில்லை.
அகதிகள் என்றால் அவர்கள் பறவைகளைவிடக் கேவலமானர்களா? அவர்களும் மனிதர்கள் இல்லையா?
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் 980 குடும்பங்களைச் சேர்ந்த 3800 அகதிகள் வசித்து வருகின்றனர்.
வார்தா புயலினால் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 200 க்கு மேற்பட்ட குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சுமார் 200 மரங்கள் விழுந்துள்ளன.
மின்சார துண்டிப்பு, குடி நீர் தட்டுப்பாடு காரணமாக அகதிகள் மிகவும் கஸ்டப்படுகின்றனர். முகாமுக்கு அருகிலேயே தாசில்தார் அலுவலகம் இருக்கிறது. ஆனால் கடந்து நான்கு நாட்களாக ஒரு அதிகாரிகூட வந்து எட்டிப் பார்க்கவில்லை.
அங்கு இருக்கும் அகதிகள் தமக்கு பாய், போர்வை, மெழுகவர்த்தி, தீப்பெட்டி போன்றவை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என கேட்கிறார்கள். ஆனால் அதைக்கூட கொடுத்து உதவ யாரும் இரங்கவில்லை.
என்ன செய்வது? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் பறவைகளுக்கு இரக்கம் காட்டக்கூட சிலர் இருக்கிறார்கள். ஆனால் அகதிகளுக்கு இரக்கம் காட்ட யாருமே இல்லையே!
புயல் நிவாரண நிதியாக 50 ஆயிரம் கோடி ரூபா தரும்படி தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
அதிகளவு நிதியை வழங்குமாறு வைகோ அவர்களும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் மோடி அரசு வெறும் 500 கோடி ரூபாவையே புயர் நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
வருடம்தோறும் 85 ஆயிரம் கோடி ரூபாவை தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு புயல் நிதியாக வெறும் 500 கோடி ரூபாவையே ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் இந்த 85 அயிரம் கோடி ரூபா மிஞ்சுவதோடு நம்பி வந்த ஈழ அகதிகளையும் நன்கு கவனித்திருக்க முடியும் அல்லவா?
தமிழா நீ எப்போது இதனை சிந்திக்கப் போகிறாய்?

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்
இன்று மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும்.
தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை.
அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள்.
இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்.
ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது.
மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.
(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல.
“ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர்.
இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.
தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம்.

•இழப்பு துயரத்தில் இருந்து மீள வழியில்லையா?

•இழப்பு துயரத்தில் இருந்து மீள வழியில்லையா?
இங்கிலாந்தில் பேர்மிங்காம் நகரில் இருக்கும் மனநல மருத்துவர் தம்பிராசா அவர்கள் உளவியல் கட்டுரைகள் நூல்கள் பல எழுதிவருகிறார்.
அண்மையில் அவர் எழுதிய இழப்பு துயரத்தில் இருந்து மீள வழியில்லையா என்னும் கட்டுரை தமிழ் இந்துவில் 10.12.16 யன்று வெளிவந்துள்ளது.
“நான் இறந்த பிறகு
எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு
நம் இனிமையான தருணங்களை
அவ்வப்போது நினைத்துக்கொள்
ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.
பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்
நீ உயிரோடு இருக்கும்வரை
உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்”
மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை.
அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை.
ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம்.
ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.
தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

•மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை சம்பந்தர் அய்யாவிடம் எடுத்துச் சொல்வது யாரு?

•மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை
சம்பந்தர் அய்யாவிடம் எடுத்துச் சொல்வது யாரு?
யாழ் நகரில் மாற்றுதிறனாளியான பெணகள் தமக்கு நீதி கோரி அடையான போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நீதி வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும். இவர்களுக்கு நீதி மறுக்கப்படுவது குறித்து எந்த தமிழ் தலைவர்களும் அக்கறை கொள்ளவில்லை.
ஜனாதிபதி முதல் சம்பந்தர் அய்யா வரை அனைவருக்கும் தமது கொரிக்கையினை இந்த பெண்கள் அனுப்பியுள்ளனர். ஆனால் யாருமே தலையிட்டு தீhத்து வைக்கவில்லை.
சம்பந்தர் அய்யா தமிழ் மக்களின் வாக்குகளின் மூலமே பதவி பெற்றுள்ளார். அவர் தமிழ் மக்களின் குறைகளை கேட்டு அதனை அரசுக்கு தெரிவித்து நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டிய கடமை உள்ளவர்.
ஆனால் அவரோ மக்களை தேடிச் சென்று குறைகளை கேட்பது மட்டுமல்ல. குறை சொல்ல வரும் மக்களிடம் அக்கறையாக கேட்பதும் இல்லை.
சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து பேசச் சென்ற இளைஞர்களிடம் பத்திரிகை படித்துக்கொண்டே திறப்பு என்னிடம் இல்லை என்று நக்கலாக அவர் பதில் சொன்னதை கண்டோம்.
மாற்று திறனாளி பெண் யாழ் நீதிமன்ற வாசலில் அடையாளப் போராட்டம் செய்யும் அதே நேரத்தில் எமது சம்பந்தர் அய்யா தனது நண்பர் கட்டும் கோயில் விழாவிற்கு சென்றுள்ளார்.
திருகோணமலையில் அவரது நண்பர் கட்டும் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மிக்க மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
வன்னியில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் தன் பிள்ளைகளுடன் தற்கொலை செய்யும் அவலத்தின் நடுவே சம்பந்தர் அய்யா பல லட்சம் ரூபா செலவில் நண்பன் கட்டும் கோயில் விழாவில் கலந்து கொள்கிறார்.
மக்கள் சேவைதான் மகேசன் சேவை என்கிறார்கள். அப்படியென்றால் சம்பந்தர் அய்யா மக்களுக்கு தானே சேவை செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்ல, மக்களின் வோட்டின் மூலம் பதவி பெற்றவர்கள் மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவர்கள் அல்லவா!
வாழ்நாள் முழுக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவி. மாதம் தோறும் 2 லட்சம் ரூபா சம்பளம். அதுமட்டுமன்றி எட்டு கோடி ரூபா செலவில் சொகுசு வாகனம். காவலுக்கு சிஙகள பொலிஸ். இதுபோதாது என்று இந்தியாவில் குடும்பம்.
இத்தனையும் அனுபவிக்கும் சம்பந்தர் அய்யாவால் தமிழ் மக்களின் குறைகளை தீர்த்து வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை அவர்களின் குறைகளைக்கூட அக்கறையாக கேட்க முடியாதா?
நண்பர்களின் விழாக்களுக்கு சென்று அவர்களை மகிழ்விக்கும்; சம்பந்தர் அய்யாவால் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு ஆறுதல் வாhத்தை கூற முடியாதா?
இப்படி இருக்கும் சம்பந்தர் அய்யாவுக்கு எப்படி கனடாவில் இருக்கும் நம்மவர் சிலரால் “வாழ்நாள் வீரர்” விருது கொடுக்க முடிகிறது?
பிளீஸ் ! இனியாவது மக்களை சந்தித்து குறைகளை கேட்கும்படி சம்பந்தர் அய்யாவுக்கு யாராவது சொல்லுங்கள்.
மக்களுக்கு சேவை செய்வதே மகேசனுக்கு செய்யும் சேவை என்பதையாவது அந்த பெரிய மனிதருக்கு கொஞ்சம் விளக்கி கூறுங்களேன்.
குறிப்பு- சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு திர்வு கிடைக்க இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது.

INDIAN INVASION OF SRILANKA

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு added 2 new photos.
• INDIAN INVASION OF SRILANKA
எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலின் ஆங்கில மொழியாக்கம் Indian Invasion of Srilanka நூல் வெளிவந்துள்ளது.
தோழர் தம்பிராசா அவர்களால் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட இவ் நூலை “தோழர் பதிப்பகம்” வெளியிட்டுள்ளது.
இவ் ஆங்கில நூல் வெளிவருவதுற்கு உதவி புரிந்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நூல் கிடைக்குமிட விபரங்கள் விரைவில் அறிய தரப்படும்.
கீழ்வரும் இணைப்பில் இணையத்திலும் இவ் நூலை விருப்பமானவர்கள் படிக்கலாம். தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வெகு விரைவில் இவ் நூலின் சிங்கள மொழியாக்கமும் வெளி வரும் என நம்புகிறோம்.
இந்திய ஆக்கிரமிப்பை பரந்து பட்ட மக்களுக்கு அறிய தரும் சிறு முயற்சியே இது. எமது முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கும் ஆதரவு எமக்கு உற்சாகத்தை தருகிறது.
எனவே இதற்கான எமது உழைப்பு தொடரும். இது உறுதி

வீடு கட்டுவதிலும் ஊழல் செய்ய முனையும் அரசு!

•வீடு கட்டுவதிலும் ஊழல் செய்ய முனையும் அரசு!
•சம்பந்தர் அய்யாவுக்கும் அதில் பங்கு உண்டா?
கடந்த மகிந்த ராஜபக்கச ஆட்சிக்காலத்தில் ஊழல் , லஞ்சம் யாவும் தலைவிரித்தாடியது. பசில்ராஜபக்ச “கமிசன் அமைச்சர்” என பகிரங்கமாக அழைக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை மக்கள் தோற்கடித்தமைக்கு இவை ஒரு முக்கிய காரணம் ஆகும்.
தற்போது நல்லாட்சி செய்வதாக கூறும் ஆட்சியிலும் ஊழல் மறையவில்லை. அமைச்சர்கள் மட்டத்தில் அது தொடர்கிறது.
பொருத்து வீடுகளை யாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நிராகரித்த நிலையில் தற்போது வன்னியில் இதனை அமுல்படுத்த அரசு முயல்கிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவுகளில் 10000 பொருத்து வீடுகளை நிர்மாணிக்க மீள்குடியேற்ற அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக பல்தேசியக் கம்பனியான அர்சிலோர் மிட்டால் நிறுவனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னர் ஒரு வீட்டிற்கு 21 லட்சம் ரூபா வழங்குவதாக அரசு மிட்டால் கம்பனியிடம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் மக்களின் எதிர்ப்பால் அது தற்போது 16 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
பல்தேசியக் கம்பனியான மிட்டல் நிறுவனம் தனது கழிவு இரும்பு உருக்குகள் மூலம் பொருத்து வீடு என்ற பெயரில் இரும்புக்கூடுகளை மக்களிடம் திணிக்க முயல்கிறது.
ஆனால் இதே 16 லட்சம் ரூபா செலவில் நல்ல தரமான கல்வீடுகளை கட்ட முடியும் என பல பொது நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொது மக்களும் தமக்கு பொருத்து வீடுகள் வேண்டாம், கல் வீடே வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அரசும் அதன் அமைச்சர்களும் பல் தேசியக் கம்பனியுடன் சேர்ந்து ஊழல் செய்வதற்காக பொருத்து வீடுகளை மக்கள் மீது திணிக்க முயல்கின்றனர்.
முன்பு மகிந்த ராஜபக்ச கும்பல் ஊழல் செய்வதாக கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் இன்று தாங்கள் ஊழல் செய்கின்றனர்.
ஆனால் ஊழல் செய்த மகிந்த ராஜபக்ச கும்பலை தோற்கடித்த மக்கள் தங்களையும் நாளை தோற்கடிப்பார்கள் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள தவறுகின்றனர்.
ஆனால் இங்கு கவலைக்குரிய விடயம் என்னவெனில் இதை தடுத்து நிறுத்த வேண்டிய தலைவர்களான சம்பந்தர் அய்யா மற்றும் சுமந்திரன் பொன்றொர் மௌனமாக இருப்பதே.
இவர்களின் மௌனம், ஒருவேளை ஊழல் பணத்தில் இவர்களுக்கும் ஒரு பங்கு வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை உருவாக்கிறது.
குறிப்பு- சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 10 நாட்களே உண்டு. அதனால்தான் அய்யா மௌனமாக இருக்கிறாரா?