Wednesday, May 31, 2017

•எடப்பாடி அரசே!

•எடப்பாடி அரசே!
மோடி அரசு சொல்லித்தான் திருமுருகன்காந்தியை நீங்கள் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் மோடி அரசு சொல்லாமலே மோடி அரசுக்காக எதையும் செய்வதற்கு சித்தமாகவே நீங்கள் உள்ளீர்கள்.
ஆட்சியையும் பதவியையும் தக்க வைப்பதற்காக மோடி அரசை திருப்திப்படுத்த எதையும் செய்யும் நிலையில்தான் உங்கள் அரசு இருக்கிறது.
ஆனால் இங்கு எனது கவலை என்னவென்றால் மோடி மகிழ்வார் என்று நினைத்துக்கொண்டு இந்த சிறுவனை பிடித்து சிறையில் அடைத்துவிடப் போகிறீர்களோ என்பதுதான்.
அதைவிட அச்சம் என்னவெனில் உங்கள் காவல்துறை இந்த சிறுவனை கைது செய்யும்போது பொரி உருண்டை, குச்சி ஜஸ் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக அறிக்கை விட்டுத் தொலைக்கப் போகிறார்கள்.
ஆனால் ஒன்று, இந்த சிறுவன் கைகள் எப்போதும் அமைதியாக பலகையை பிடித்துக் கொண்டு நிற்கும் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்.
இந்த சிறுவனின் கைகள் இனிவரும் காலத்தில் கல் எறிய வேண்டுமா , துப்பாக்கி தூக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கப் போகிறீர்கள்.
அமைதி வழியில் போராடுபவர்கள் மீது அரசு வன்முறையை பாவித்து அடக்க முயன்றால் அவர்கள் அதே வன்முறை மூலம் பதில் அளிக்க தள்ளப்படுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
குறிப்பு- ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன்காந்திக்கு ஆதரவாக இதுவரை ஒரு ஈழத் தமிழ் தலைவரும் குரல் கொடுக்கவில்லை. எனக்கென்னவோ இந்த சிறுவன் இந்து தமிழீழம் கேட்ட காசிஆனந்தன் அய்யா முகத்தில் ஓங்கி குத்தியிருப்தாகவே உணர்கிறேன்.

•பெருமூச்சு விடுவதை தவிர தமிழருக்கு வேறு வழியில்லையா?

•பெருமூச்சு விடுவதை தவிர தமிழருக்கு வேறு வழியில்லையா?
இவர் ஒரு சிங்கள அமைச்சர். இவர் பெயர் தெவரப் பெருமா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் உதவி வருகிறார்.
இவருடைய கைகள் தனது வேட்டியை தூக்கிப் பிடிக்க வில்லை. மாறாக மக்களுக்கு பொருட்களை தூக்கி செல்கிறது.
இவருக்கும் பல மெய் பாதுகாவலாகள்; உண்டு. ஆனால் அவர்களை தனக்கு குடை பிடித்து வருமாறு இவர் பணிக்கவில்லை.
இவர் விரும்பியிருந்தால் மக்களை பார்வையிட்டுவிட்டு ஹோட்லில் சென்று உணவு அருந்தியிருக்கலாம். ஆனால் அவரோ வீதியில் வைத்து பார்சல் சாப்பாடு சாப்பிடுகிறார்.
இவர் அமைச்சர் என்பதால் அரசுக்கு நல்ல பெயர் வாங்குவதற்கு நடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
சரி. இதோ ஜே.வி.பி தலைவர் அனுரா குமார. இவர் எதிர்க்கட்சிதானே. இவர் விரும்பியிருந்தால் அரசை சாடி ஒரு அறிக்கை கொடுத்துவிட்டு வீட்டில் இருந்திருக்கலாம்தானே.
ஆனால் இவரோ தனது கட்சி செந்தாரகை அனர்த்த சேவைகள் படையணியுடன் நேரடியாக களத்தில் நின்று மக்களுக்கு உதவி புரிகின்றாரே.
இதோ எமது தலைவர் ஒருவரைப் பாருங்கள். இவர் பெயர் சரவணபவன். பாராளுமன்ற உறுப்பினரும்கூட. தமிழ் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது எப்படி உதவுகிறார் என்று பாருங்கள்.
நல்லவேளை தனக்கு குடை பிடிக்க ஒருவரை வைத்திருப்பதுபோல் தனது வேட்டியை தூக்கிக்கொண்டுவர ஒரு ஆளை வைத்திருக்கவில்லை என்று மட்டும் திருப்திப்பட வேண்டியிருக்கு.
இப்போது கூறுங்கள், தமிழ் மக்கள் இதை நினைத்து பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியுண்டா?

Tuesday, May 30, 2017

•மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள்.
உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர ஓய்வு
எட்டு மணி நேர உறக்கம்
இதற்காகப் போராடி
சிக்காக்கோ வீதிகளில்
இரத்தம் சிந்தியவர்களின் நினைவே "மே தினம்"
எமக்காகப் போராடிய அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்ததே
எம் கரங்களில் தவளும் "செங்கொடி".
வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன்
இன்று உழைப்பதற்காக வாழ்கிறான்.
மாற்றுவோம் இந்த அவல நிலையை.
உலகின் பாதி சொத்து வெறும் 62 முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது.
இந்த 62 முதலாளிகளின் சொத்து மதிப்பு 119 லட்சம் கோடி ரூபா
இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது.
பணக்காரர்களின் சொத்து மதிப்பு 44 சத விகிதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஒன்பது பேரில் ஒருவர் இரவு உணவு இன்றி பட்டினியாக உறங்க செல்கிறார்.
இந்தியாவில் ஒவ்வொரு அரை மணி நேரமும் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறார்.
ஏன் இந்த நிலை?
உலகில் செல்வம் சமமாக பங்கிடாமல் இருப்பதே காரணம்.
ஆறு மனி நேர வேலை கேட்போம்
எட்டு மணி நேர உறக்கம் கேட்போம்
பத்து மணி நேர ஓய்வு கேட்போம்.
போராடுவோம் எமக்காக மட்டுமல்ல
எமது அடுத்த சந்ததிக்காகவும்!
•முதலாளி, தொழிலாளி சுரண்டலை ஒழிப்போம்
•உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் இடைவெளியை நீக்குவோம்.
•நகரத்திற்கும் கிராமத்திற்கும் வேறுபாட்டை இல்லாது செய்வோம்
வாருங்கள் தோழர்களே! ஒன்றாய் அணிதிரள்வோம்!

•இந்திய தூதரகமும் பத்திரிகை சுதந்திரமும்.

•இந்திய தூதரகமும் பத்திரிகை சுதந்திரமும்.
ஊடகவியலாளர் தினத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டை சுமத்தியவர் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகை நிறுவனருமான சரவணபவன் ஆகும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அது கருத்துச் சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் மதிக்கும் நாடு என்று கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் இந்திய அரசானது உள்நாட்டில் மட்டுமல்ல இலங்கையிலும் அது பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பதில்லை.
1999ம் ஆண்டு கொழும்பில் உள்ள ஒரு பிரபல தமிழ் பத்திரிகை அலுவலகத்திற்கு நான் போயிருந்தேன். அதன் அசிரியர் எனது நண்பர். அவரிடம் இந்திய சிறப்புமுகாம் கொடுமை குறித்த கட்டுரை ஒன்றை பிரசுரிக்குமாறு கேட்டேன்.
அதற்கு அவர் “ இந்தியாவுக்கு எதிராக ஏதாவது பிரசுரம் செய்தால் உடனே தூதரகத்தில் இருந்து தொடர்பு கொண்டு பல கரைச்சல் கொடுப்பார்கள் “ என்று கூறினார்.
இதைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம். ஆனால் பின்பு இது உண்மைதான் என்பதற்கு பல செய்திகள் விபரங்கள் அறிந்திருந்தேன்.
இந்திய தூதரகத்திற்கு ஒத்துழைக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு பணம், விசா மற்றும் பல சலுகைகள் மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்ததையும் நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் அமைந்த பின்பு அதன் தூதர் நடராஜன் ஒரு ஆங்கிலேய காலத்து வைஸ்ராய்கள் போலவே செயற்பட்டு வருகிறார்.
தன் கையைக் கொண்டே கண்ணைக் குத்துவது போல இந்திய அரசானது ஒரு தமிழனை தூதராக வைத்தே யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மீது இந்திய ஆக்கிரமிப்பை நடத்துகிறது.
இத்தனை காலமும் பெரும்பாலும் இடதுசாரிகளே இந்த இந்திய தூதரின் அத்துமீறிய செயல்களை அம்பலப்படுத்தி கண்டித்து வந்தார்கள்.
இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இந்திய துணை தூதர் நடராஜனின் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயலை வெளிப்படையாக கண்டித்துள்ளார்.
இன்னொரு நாட்டு தூதரகம் அதுவும் ஒரு அதிகாரி பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது சாதாரண விடயம் அன்று. மிகவும் பாராதூரமான விடயம் ஆகும்.
யாழ் மருத்துவமனையில் இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து கட்டுரை எழுதக்கூடாது என்று இந்திய துணைதூதர் மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி உதயன் பத்திரிகையில் கட்டுரை எழுதியதற்காக ஒருவரின் கலாநிதிப் படிப்பை பூர்த்தி செய்வதற்கு விசா வழங்க மறுத்து அவரது வாழ்க்கையே பாழாக்கியுள்ளார்.
இறந்த எம் மக்களை நினைவு கூர எமக்கு அருகதை இல்லையா?
இந்திய ராணுவத்தின் படுகொலைகளை நாம் நினைவு கூரக் கூடாதா?
எமது சுதந்திரத்தில் எப்படி இந்திய துணை தூதர் தலையிட முடியும்?
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அக்கிரமங்களை சகித்துக் கொண்டிருப்பது?
பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மீது பல குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்திய துணைதூதர் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய கருத்தாகும்.

மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு

•மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு
குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே?
குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை?
அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை.
குழந்தை- ஏன் வேலை போய்விட்டது?
அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள்.
மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது.
இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர்.
சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும்.
இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை.
பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது.
ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும்.
எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்க முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார்.
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

• “நல்ல காலம் வருகுது. ஈழத் தமிழருக்கு இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல காலம் பிறக்குது” ஈழத்து குடுகுடுப்பைக்காரர் சம்பந்தர் அய்யா!

• “நல்ல காலம் வருகுது. ஈழத் தமிழருக்கு இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல காலம் பிறக்குது” ஈழத்து குடுகுடுப்பைக்காரர் சம்பந்தர் அய்யா!
தமிழ்நாட்டில் அதிகாலையில் வீட்டு வாசலில் வந்து “நல்ல காலம் பிறக்கப் போகுது. இந்த வீட்டுக்காருக்கு இன்னும் ஒரு வாரத்தில் நல்ல செய்தி கிடைக்கப்போகிறது “ என்று சொல்லி பிழைப்பு நடத்துவோரை குடுகுடுப்பைக்காரர் என்று அழைப்பது வழக்கம்.
அதுபோல் ஈழத்தில் தமிழ் அரசியலில் ஒருவர் “இன்னும் ஒரு வருடத்தில் தமிழருக்கு தீர்வு கிடைக்கப்போகுது” என்றார். பின்னர் இப்போது “ இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல செய்தி தமிழருக்கு கிடைக்கப்போகுது” என்கிறார்.
அந்த தமிழ் அரசியல் குடுகுடுப்பைக்காரர் பெயர் சம்பந்தர் அய்யா. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மட்டுமன்றி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் கூட.
குடுகுடுப்பைக்காரர் சொன்ன நல்ல செய்தி ஏன் நடக்கவில்லை என்று அவரிடம் கேட்க முடியாதோ அதேபோன்று ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்று அரசியல் குடுகுடுப்பைக்காரர் சம்பந்தர் அய்யாவிடமும் கேட்க முடியாது.
நல்ல செய்தி வரும் என்று குடுகுடுப்பைக்காரர் சொன்ன வீட்டில் சில வேளை செத்த வீடு நடப்பதுண்டு. அதேபோன்று இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார் சம்பந்தர் அய்யா. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அலோசனை எதுவுமின்றி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜந்து நாட்களுள் செய்தி வந்துள்ளது.
யுத்தம் முடிந்து எட்டு வருடமாகிவிட்டது. இன்னமும் காணாமல் போனோர் பிரச்சனை தீரவில்லை. மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இவை குறித்து கேட்டபோது இன்னும் ஒரு வருடத்தில் தீர்வு வரப் போகுது என்றார் சம்பந்தர் அய்யா. ஆனால் தீர்வு எதுவும் வரவில்லை.
அதேவேளை அவருக்கு இரண்டு சொகுசு பங்களா, 5 கோடி ரூபாவில் சொகுசு வாகனம், 36 கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பிற்கு, அவருக்கு சேவை செய்ய 60 ஆதிகாரிகள் மற்றும் சேவகர்கள் என பல வசதிகள் கிடைத்துள்ளன.
இப்போது,
68 நாட்களாக வடமாகாண பட்டதாரிகளின் போராட்டம் நடக்கிறது.
5 வது நாளாக இரணைதீவு மக்களின் போராட்டம் தொடருகிறது.
45வது நாளாக பன்னங்கட்டி மக்களின் போராட்டம் தொடருகிறது.
75வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த தமிழ் மக்களின் போராட்டங்கள் பற்றி சம்பந்தர் அய்யா வாய் திறப்பதில்லை. ஆனால் இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்.
இரண்டு வாரத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு வரவில்லையாயின் யாராவது பிளீஸ் சம்பந்தர் அய்யாவை அப்பலோ மருத்துமனையில் சேர்த்துவிடுங்கள்.
அவர் மரணமடைந்தார் என்ற தமிழ் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாவது வந்து சேரட்டும்!

•காஸ்மீர் தேசிய இனத்தை அடக்கும் இந்தியா தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கு உதவுமா?

•காஸ்மீர் தேசிய இனத்தை அடக்கும் இந்தியா
தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கு உதவுமா?
இந்த காஸ்மீர் தேசிய இன மாணவிகள் இந்திய ராணுவத்திற்கு எதிராக எறிவது வெறும் கற்கள் மட்டும் அல்ல.
இந்த காஸ்மீர் மாணவிகள் வெளிப்படுத்துவது இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான காஸ்மீர் தேசிய இனத்தின் விடுதலை உணர்வுகள்.
காஸ்மீர் தேசிய இனம் மட்டுமல்ல, மணிப்பூர், சிக்கிம், நாகலாந்து, அசாம் தேசிய இன மக்களும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
தனது நாட்டில் தனது சொந்த இன மக்களை நசுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் தேசிய இன விடுதலைக்கு உதவும் என சில இந்திய விசுவாசித் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இத்தனை அழிவிற்கும் பிறகும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்திய அரசை இலங்கை தமிழ் தேசிய இன மக்கள் எப்படி நம்ப முடியும்?
எதிர்வரும் 12ம் திகதி வெசாக் பண்டிகைக்காக இலங்கை வரும் இந்திய பிரதமரிடம் தமிழர் பிரச்சனை பற்றி விளக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா கூறியுள்ளார்.
தமிழர் பிரச்சனையை விளக்கினாலும் மோடியால் தீர்வு பெற்று தரப்படுமா என்பது ஒருபுறம் இருக்க, இதுவரை மோடிக்கு தமிழர் பிரச்சனை விளக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இதுவரை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், முதன்மை அதிகாரிகள் பலரை கடந்த இரண்டு வருடத்தில் 12 தடவைக்கு மேல் சம்பந்தர் அய்யா சந்தித்துள்ளார். இதுவரை தமிழர் பிரச்சனை விளக்கப்பட வில்லை என்றால் வேறு என்னதான் கதைத்துள்ளார்?
இந்த மாதம் 12ம் திகதி இந்திய பிரதமர் மோடி வருகிறார். 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரி முல்லைதீவு வருகிறார். இந்த விஜயங்கள் யாவும் தற்செயலானவை அல்ல. நன்கு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் ஆகும்.
தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி , தமிழ் மக்கள் உயிர் நீத்த தம் உறவுகளை நினைவு கூருவதையும் குழப்புவதற்காகவே நன்கு திட்டமிட்டு இவ் விஜயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சம்பந்தர் அய்யாவுக்கு சில சலுகைகளை கொடுத்துவிட்டு அவர் மூலம் மொத்த தமிழ் சமூகத்தையும் ஏமாற்றிவிட இலங்கை இந்திய அரசுகள் நினைக்கின்றன.
ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இனி யாரையும் நம்பி ஏமாறப் போவதில்லை. காஸ்மீர் உட்பட இந்தியாவுக்கு எதிராக போராடும் மக்களுடன் ஜக்கியப்பட்டு போராடுவார்கள்.

•இந்திய பிரதமர் வருகையை தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும்!

•இந்திய பிரதமர் வருகையை
தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும்!
இந்திய பிரதமர் மோடி எதிர்வரும் 12ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் வருவதாக கூறப்பட்டாலும் உண்மையில் அவர் வருவது சில ஆக்கிரமிப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவே.
இலங்கை பிரதமர் ரணில் அண்மையில் இந்தியா சென்ற பொது திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ள இருந்தார்.
ஆனால் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருமித்த போராட்டத்தினால் அவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது பிரதமர் மோடி வருகையின் போது அவ் ஒப்பந்தம் இரகசியமாக செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
திருகோணமலை எண்ணெய் குதம் மட்டுமன்றி காங்கேசன் துறைமுகமும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.
தமிழ் மக்களின் நிலங்கள் சொத்துகள் யாவும் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி இந்தியாவுக்கு தாரை வார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சம்பூரில் 500 ஏக்கர் நிலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதால் அவ்வூர் தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில் மீண்டும் குடியேற முடியாமல் உள்ளது.
எனவே இந்நிலையில் தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்பு எதிராக போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.
தமிழ் தலைமைகள் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போவதாகவே இருக்கின்றன. அவைகள் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் யாவும் இந்திய நலனுக்குரியதாகவே இருக்கின்றது என்றும் எனவே இவ் ஒப்பந்தங்களை எதிர்க்கப்போவதாக ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைதூதர் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யாவும் கருத்து தெரிவிக்கவில்லை.
எனவே தமிழ் மக்கள் தாங்களாகவே இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதன் மூலமே இந்திய பிரதமர் மற்றும் தூதர் அகியோரின் ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும்.
இந்தியாவுடன் அதிகளவு ஒப்பந்தங்களை செய்து இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போனவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே.
இப்போது அவர் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே.
இந்திய பிரதமர் மோடியின் வருகைக்கு இலங்கையில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் மக்கள் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டும்.

•“டெலோ” தலைவர் சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டுமா?

•“டெலோ” தலைவர் சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டுமா?
சிறீயண்ணா முன்வைத்த தமிழீழத்தை கைவிட்டவர்கள்
சிறீயண்ணா முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள்
பல வருடங்களின் பின் இப்போது சிறீயண்ணாவுக்கு ஏன் அஞ்சலி செலுத்துகிறார்கள்?
தமிழீழத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் கைவிட்டவர்கள் இன்னும் எதற்காக “தமிழீழ விடுதலை இயக்கம்” என்னும் பெயரில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்?
சிறீயண்ணாவுக்கு அஞ்சலி என்னும் பெயரில் சில இந்திய விசுவாசிகள் மீண்டும் 1983ம் ஆண்டு நிலைக்கு தமிழ் மக்களை கொண்டு செல்ல கனவு காண்கின்றனர். ஆனால் அவர்கள் எப்படித்தான் கனவு கண்டாலும் அல்லது தலை கீழாக நின்றாலும் இனி இந்தியாவை ஈழத் தமிழர்கள் நம்பப் போவதில்லை.
1984ல் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இரு வெள்ளையினத்தவர்களை கடத்தினார்கள். சிறையில் இருக்கும் தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா கைதிகளை விடுதலை செய்து அந்த வெள்ளைக்காரர்களை காப்பாற்ற முன்வந்தார்.
ஆனால் அப்போதைய இந்திய பிரதமரான இந்திராகாந்தி உடனே சென்னையில் இருந்த பத்மநாபா மற்றும் முன்னனி தலைவர்களை இரகசியமாக கைது செய்து ஒரு ஓட்டலில் வைத்து உதைத்து அந்த வெள்ளைக்காரர்களை விடுதலை செய்ய வைத்தார். இது அப்போது அனைவரும் அறிந்த செய்தி.
இந்கு எனது கேள்வி என்னவெனில் யாரே இரு வெள்ளைக்காரர்களுக்காக நடவடிக்கை எடுத்த இந்திய அரசு தனது விசுவாசியான சிறீயண்ணாவை ஏன் காப்பாற்ற முயலவில்லை? அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில்தானே இருந்தார். அவரை கைது செய்து மிரட்டியிருந்தால் சிறீயண்ணாவையும் அவரது போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம்தானே?
அதுமட்டுமல்ல, டெலோ இயக்கத்திற்கு பின்பு புலிகள் இந்திய விசுவாச இயக்கங்களான ஈபிஅர்எல்எவ் மற்றும் ஈரோஸ் இயக்கங்களை தடை செய்தபோதும் இந்திய அரசு மௌனமாகத்தானே இருந்தது? ஏன் அதை தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல சம்பிரதாயத்திற்காகக்கூட ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே?
உண்மையில் இந்திய அரசு தனது உளவுப்படை மூலம் இயக்கங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கியது. இயக்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி அழிய வேண்டும் என்று விரும்பியது. அதற்கான வேலைகளையே அது செய்தது.
எனவே சிறீயண்ணா இருந்திருந்தால் இந்திய அரசு உதவியிருக்கும் என்பதும் அவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் தமிழீழம் கிடைக்க இந்திய அரசு உதவியிருக்கும் என்பதும் தற்போது இந்திய அரசைக் காப்பாற்ற முயலும் சில விசுவாசிகளின் தவறான கதைகள் ஆகும்.
புழு கூட மிதிபடும்போது துடித்து எழும். ஆனால் இத்தனை அழிவுக்கும் பிறகும் இந்த அழிவுகளுக்கு காரணமான இந்திய அரசை நியாயப்படுத்த முயலும் இந்திய விசுவாசிகள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
கடந்த வருடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தற்போதைய டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அக் கேள்விக்கு செல்வம் அடைக்கலநாதன் இதுவரை பதில் அளிக்கவில்லை.
முன்னாள் தமிழர்விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோர் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவென்று கேட்டுள்ளார்.
இவர்கள் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற காரணத்தை தற்போதைய டெலோ தலைவர் செல்வம் கூறுமாறு சிறீதரன் கேட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல 30 வருடம் நாட்டைவிட்டு ஓடியவர்கள் இப்போது எதற்காக வந்து புலிகளால் சுடப்பட்டவர்களுக்கு விழா எடுக்கிறார்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்?
அத்தோடு இவற்றின் பின்னால் மறைந்திருக்கும் கரம் எது வென்றும் அது விரைவில் அம்பலத்திற்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
மீண்டும் இந்திய உளவுப்படையின் பின்னனியில் டெலோ அமைப்பு செயற்பட முனைவதாகவே அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சிறீதரன் எழுப்பியுள்ள கேள்விகள். நியாயமானவை. இதற்கு செல்வம் அடைக்கலநாதன் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது டெலோ தலைவர் குட்டிமணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர் என்று எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டியிருந்தார்.
உடனே அப்போது டெலோ தலைவராக இருந்த சிறீயண்ணா கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க “ குட்டிமணி அப்போது இயக்க போராளியாக இருக்கவில்லை. அவர் கடத்தல் காரராகவே இருந்தார். அதனால்தான் கருணாநிதி கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்” என அறிக்கை விட்டார்.
கருணாநிதியின் அரசியலுக்காக தமது தலைவரை கடத்தல்;காரன் என்று கூறிய கெட்டித்தனத்திற்காகவா சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டும் நண்பர்களே?

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்- தோழர் தமிழரசன்.

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்- தோழர் தமிழரசன்.
தமிழக மக்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதன் மூலமே ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு உதவ முடியும்.
தமிழக மக்கள் உணர்வு பெற்று விடுவார்கள் என்பதற்காகவே ஈழ தமிழ் மக்களின் போராட்டத்தை இந்திய அரசு நசுக்கி வருகிறது.
எனவே தமிழக மக்கள் தமிழ் நாடு விடுதலைக்கான போராட்டத்தை நடத்துவதன் மூலமே இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க உதவ முடியும்.
காவிரி முதல் ஜல்லிக்கட்டு , நீட் என அனைத்திற்கும் தமிழக மக்கள் போராட வேண்டுமாயின் அவர்கள் இந்தியாவில் அடிமைகளாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
எனவே ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடுவதை விடுத்து தமிழ்நாடு விடுதலைக்கான போராட்டத்தை தமிழக மக்கள் நடத்த வேண்டும்.
இதைத்தான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தோழர் தமிழரசன் சுட்டிக்காட்டியதோடு தழிழக விடுதலைக்கான போராட்டத்தையும் நடத்தினார்.

•புத்தர்! இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்?

•புத்தர்!
இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்?
கடந்த ஓராண்டில் மட்டும் காஸ்மீரில் இந்திய ராணுவத்தால்
கொல்லப்பட்டவர்கள்- 157 பேர்
படுகாயமடைந்தவர்கள்- 17650 பேர்
கண் பார்வையிழந்தவர்கள் - 825 பேர்
கண்ணில் காயமடைந்தோர்- 1860 பேர்
கைது செய்யப்பட்டோர் - 11000 பேர்
வீடுகளின் மீது தாக்குதல்- 74000
வீடு தீவைப்பு – 83
இவ்வாறு தனது ராணுவத்தின் மூலம் தனது சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திவரும் பிரதமர் மோடி புத்தரின் ஜெயந்தி தினத்தை கொண்டாட சிறப்பு விருந்தினராக இலங்கை வருகிறார்.
இலங்கையில் தனது ராணுவத்தின் மூலம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்த இலங்கை அரசானது ஒருபுறம் யுத்த வெற்றி விழாக்களை நடத்திக் கொண்டு மறுபுறம் புத்தரின் ஜெயந்தி தினத்தைக் கொண்டாடுகிறது.
இப்போது,
72 நாட்களாக வடமாகாண பட்டதாரிகளின் போராட்டம் நடக்கிறது.
9 வது நாளாக இரணைதீவு மக்களின் போராட்டம் தொடருகிறது.
49வது நாளாக பன்னங்கட்டி மக்களின் போராட்டம் தொடருகிறது.
79வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த மக்கள் போராட்டங்கள் குறித்து இலங்கை அரசு எந்த இரக்கமும் கொள்ளவில்லை. ஆனால் இலங்கை அரசு பெரும் பணம் செலவு செய்து புத்தருக்கு விழா எடுக்கிறது.
புத்தர் அன்பை போதித்தவர். புத்தர் பிற உயிர்களை நேசிக்கும்படி கோரியவர். ஆனால் மனிதர்களை கொன்று குவித்தவர்கள் புத்தருக்கு விழா எடுக்கும் அவலம் நடக்கிறது.
இதையிட்டு புத்தர் ரத்தக் கண்ணீர் வடிக்காமல் என்ன செய்வார்?

•மண்டபம் முகாமில் அகதிகள் மீது தாக்குதல் பிரதமர் மோடி புத்தர் விழாவுக்கு இலங்கை வருகிறார்.

•மண்டபம் முகாமில் அகதிகள் மீது தாக்குதல்
பிரதமர் மோடி புத்தர் விழாவுக்கு இலங்கை வருகிறார்.
தமிழ்நாட்டில் மண்டபத்தில் உள்ள சகாயமாதா ஆலயத்தின் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது போதையில் வந்த பொலிசார் அகதி பெண்கள் மீது தகாத முறையில் நடந்துள்ளனர்.
இந்த அநியாயத்தை தட்டிக் கேட்ட அகதி இளைஞர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் மீது அகதி இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்து அகதி இளைஞர்களை கைதும் செய்துள்ளனர்.
கடந்த வருடம் இதே மண்டபம் அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் நான்கு பொலிசாரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவ் வழக்கு இராமநாதபுரம் பெண்கள் காவல் நிலையத்தில் உள்ளது. இதுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை.
இந்திய அரசு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குகின்றது. ஆனால் 34 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது.
இந்தியாவில் பிற மாநிலங்களில் இருக்கும் மற்ற அகதிகள் கல்லூரியில் படிக்கவும் தொழில் புரியவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு மட்டும் கல்லூரியில் படிக்க மட்டுமன்றி வாகன லைசன்ஸ் எடுக்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது.
குடியுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. மானத்தோடு கௌரவமாக வாழவாவது அனுமதிக்கலாமே. அதைவிடுத்து அகதிப் பெண்கள் என்றால் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள் என்ற நினைப்பில் பாலியல் வல்லுறவு புரிய நினைப்பது என்ன நியாயம்?
பொலிசாரின் அராஜகதம்தை தட்டிக் கேட்டால் அவர்களை புலிகள் என முத்திரை குத்தி சிறப்புமுகாமில் அடைக்கும் கியூ பிரிவு பொலிசார் ஒருபுறம். அகதிகளை கொத்தடிமைகள் போல் நடத்தும் வருவாய்துறை அதிகாரிகள் மறுபுறம் என இரண்டுக்கும் நடுவில் சிக்கி அகதிகள் பட்ட துன்பங்கள் போதும்.
அகதிகள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரி மனுக் கொடுத்தும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அகதிகள் தாங்களாகவே வள்ளத்தில் வரமுயன்றாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது அரசு.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு தமிழ் அகதிகளை மட்டும் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொடுமை செய்கிறது. இந்த அவலத்திற்கு எப்போதூன் விடிவு பிறக்குமோ?
தனது நாட்டில் தமிழ் அகதிகளை அடைத்து வைத்து கொடுமை செய்யும் பிரதமர் மோடி அன்பை போதித்த புத்தர் ஜெயந்தி விழாவிற்கு வர என்ன தகுதி இருக்கு?
பாவம் புத்தர். அவரை இதைவிட கேவலப்படுத்த யாராலும் முடியாது!

•தளபதி கருணா அம்மானுக்கு அமைச்சு பதவி சாதாரண போராளிக்கு 50 வருட ஆயுள் தண்டனை

•தளபதி கருணா அம்மானுக்கு அமைச்சு பதவி
சாதாரண போராளிக்கு 50 வருட ஆயுள் தண்டனை
இதுதானா இலங்கை அரசின் புனர்வாழ்வு கொள்கை?
மட்டக்களப்பு முறக்கட்டானையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது 19 வது வயதில் 1993ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனையும் 50 வருட கடூழிய தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த 24 வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் மகேந்திரம் தனது 16 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இரண்டு வருடங்கள் மட்டுமே அவர் இயக்கத்தில் இருந்துள்ளார். பின்னர் அவர் இயக்கத்தில் இருந்து விலகி வீட்டில் இருந்தபோதே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் அமைப்பில் இருந்தபோது தளபதியாக இருந்த கருணா அம்மானின் கட்டளைப்படி சிறு எடுபிடி வேலைகளை செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தனக்கு மன்னிப்பு அளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
இங்கு எமது கேள்வி என்னவெனில் கட்டளை இட்ட கருணா அம்மானுக்கு அமைச்சு பதவியை இலங்கை அரசு வழங்கியுள்ளது. ஆனால் அவர் கட்டளையை ஏற்று நடந்த சாதாரண போராளியை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கின்றது.
சகல போராளிகளுக்கும் மன்னிப்பு அளித்து புனர்வாழ்வு வழங்கப்பட்டிருப்தாக இலங்கை அரசு உலகத்திற்கு கூறுகிறது. ஆனால் 2 வருடம் மட்டுமே இயக்கத்தில் இருந்த ஒரு சாதாரண போராளிக்கு 24 வருடம் கழிந்த பின்பும் விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறது.
புலிகளுக்கு வீட்டில் தங்க இடம் கொடுத்த குற்றச்சாட்டில் தேவதாசன் என்பவருக்கு அண்மையில் 18 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புலிகளுக்கு ஆயுதம் வாங்கி கொடுத்த கே.பி மீது இதுவரை வழக்குகூட போடவில்லை.
தன்னை கொல்ல வந்த புலிப் போராளியைக்கூட ஜனாதிபதி மன்னித்து விடுதலை செய்தார் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறத்தில் பலரையும் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்?
நல்லாட்சி நடக்கிறது. நல்லிணக்கமாக செயற்படுகிறோம் என்று சுமந்திரனும் சம்பந்தர் அய்யாவும் மாறி மாறி கூறி வருகிறார்கள். இதுதானா நல்லாட்சி? இதுதானா நல்லிணக்கம்?
மலையகத்தைச் சேர்ந்த வயதான தாயார் ஒருவர் புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் அளிக்காததால் அவர் கடந்த வருடம் சிறையிலேயே மரணமடைந்துவிட்டார்.
இந்த தாயார் மலையகத்தை சேர்ந்த தமிழர் என்பது மட்டுமன்றி அவர் ஒரு ஏழை என்பதால் எமது தமிழ் தலைவர்கள் யாருமே அவருக்காக குரல் கொடுக்கவில்லை. இவ்வாறு பலர் இன்னமும் குரல் கொடுக்கப்படாமல் சிறையில் அடைபட்டு இருக்கின்றனர்.
மக்களிடம் வாக்கு பெற்று பதவியைப் பெற்றவர்கள் தமக்கு சொகுசு வாகனம் சொகுசு பங்களா பெறுவதில்தான் கவனம் செலுத்துகிறார்களேயொழிய சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலையில் அக்கறை கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதர் கூட வடபகுதி எங்கும் காந்தி சிலைகளை நிறுவ எடுக்கும் அக்கறையில் ஒரு சிறுதுளி அக்கறைக்கூட இந்த சிறையில் இருப்பவர்களின் விடுதலையில் கொள்ளவில்லை.
இந்நிலையில் வெசாக் கொண்டாட வரும் பிரதமர் மோடி தமிழருக்கு தீர்வு பெற்று தரப்போகிறார் என சிலர் கூவுகிறார்கள். அவர்களை என்ன வென்று அழைப்பது?