Tuesday, September 12, 2017

தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெற வேண்டுமா?

•தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெற வேண்டுமா?
தோழர் தமிழரசன் கோரிக்கை அவசியமானதா?
தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மொத்த கடன் தொகை 55448 ரூபா. ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் இலவச பொருட்கள் பெறுமதி சுமார் 4000 ரூபா எனில் மிகுதி 51448 ரூபா எங்கே சென்றது?
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் 1 லட்சம் ரூபா. மாதாந்த சம்பளம் 1 லட்சம்ரூபா பெற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதியின் குடும்ப சொத்தின் பெறுமதி 45 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
மாதாந்த சம்பளம் 1 ரூபா மட்டுமே பெற்றுவந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் எப்படி கோடிக் கணக்கான ரூபா சொத்துக்கள் சேர்த்தார்கள்?
ஏன் இவர்களின் வருமானத்திற்கு மேலான சொத்தை இதுவரை பறிமுதல் செய்ய முடியவில்லை?
அப்படியாயின் இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
இந்திய அரசின் கைப் பொம்மைகளாக இவர்கள் செயற்படுவதற்கு சலுகையாகவே இவர்களது ஊழல் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா.
ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.
இந்திய மத்திய அரசு,
நேபாளத்திற்கு 14000 கோடி ருபாவையும், பூட்டானுக்கு 8000 கோடி ரூபாவையும்,
இலங்கைக்கு 10000கோடி ரூபாவையும், மங்கோலியாவுக்கு 6000 கோடி ரூபாவையும் வழங்கியுள்ளது.
ஆனால் 85000கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ்நாட்டிற்கு மழை வந்தபோது வழங்கிய உதவி தொகை வெறும் 1940 கோடி ரூபா மட்டுமே.
தமிழ்நாடு தனக்குரிய உதவியை பெற முடியாதது மட்டுமல்ல தன்னிடமிருந்து பெறப்படும் பணத்தை இலங்கைக்கு வழங்குவதைக்கூட தடுக்க முடியாத அடிமை நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்திலதான்; தமிழக மீனவனைக் கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பல் வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலைக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் தோழர் தமிழரசன் உணர்ந்துகொண்டார்.
அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார்.
இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
01.09.2017 அவரது நினைவு தினமாகும்.
அவரது நினைவை போற்றுவோம்!

•ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்

•ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
தோழர் தமிழரசனின் 30 வது நினைவு தினமான இன்று நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் வெளிவந்துள்ளது.
இந்நூல் உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளேன். எனவே இதனை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ யாரும் பயன்படுத்தலாம்.
எனது அனுமதி கோர வேண்டியதில்லை.
இந்த நூலை பெற்றுக் கொள்ளும் விபரம் விரைவில் அறிய தருகிறேன்.
தோழர் தமிழரசனுடனான எனது அனுபவங்களை கீழ்வரும் தலைப்புகளில் எழுதியுள்ளேன். (மொத்தம் 163 பக்கங்கள்)
•தோழர் தமிழரசன்- ஒரு சுருக்க அறிமுகம்
•தோழர் தமிழரசன் பயங்கரவாதியா?
•தோழர் தமிழரசனும் அவர் பின்பற்றிய தத்துவங்களும்
•தோழர் தமிழரசனும் சாதீயத்திற்கு எதிரான போராட்டமும்
•தோழர் தமிழரசனும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பும்
•தோழர் தமிழரசனை வஞ்சனையால் கொன்ற இந்திய அரசு
•தோழர் தமிழரசன் பற்றி புலவர் கலியபெருமாள்
•தோழர் தமிழரசன் பாதையில் பயணித்த தோழர் சுந்தரம்
•தோழர் தமிழரசன் பற்றி உரையாடல் மற்றும் குறிப்புகள்
தோழர் தமிழரசனுடன் சேர்ந்து பயணித்தமைக்காக இந்திய உளவுப்படையின் உத்தரவுப்படி ஈரோஸ் இயக்கத்தால்; கொல்லப்பட்ட தோழர் நெப்போலியனுக்கு இந் நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக தமிழர்கள் மட்டுமன்றி ஈழத் தமிழர்களும் தோழர் தமிழரசனை அறிந்து கொள்ள இந் நூல் உதவும் என நம்புகிறேன்.
இந் நூல் வெளிவர ஊக்கமும் உதவியும் புரிந்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

மாணவி அனிதா இது தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகள் செய்த கொலை

•மாணவி அனிதா
இது தற்கொலை அல்ல
மத்திய மாநில அரசுகள் செய்த கொலை
ஒரு ஏழை தமிழ் மாணவி தான் மருத்துவராக வேண்டும் என்று தமிழ்நாட்டில் கனவு காணக்கூடாதா?
அந்த தமிழ் மாணவி மாநில அரசை நம்பினார். மத்திய அரசை நம்பினார். இறுதியாக உச்ச நீதிமன்றத்தையும் நம்பினார்.
யாருமே அவருக்கு உதவவில்லையே. எல்லோரும் சேர்ந்து அந்த மாணவியை கொன்று போட்டார்களே.
இன்னும் எத்தனை மாணவி அனிதாக்கள் இந்த நீட் தேர்விற்காக பலியாக வேண்டும்?
எல்லா அனிதாக்களும் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.
அனிதாக்கள் போராடும் மாணவி வளர்மதியாக மாறுவார்கள்.
ஆனால் எல்லா வளர்மதிகளையும் சிறையில் அடைத்துவிட முடியும் என எண்ணி விடாதீர்கள்.
அனிதாக்கள் கரும்புலி தாணுவாக மாறி பழிவாங்க முனைந்தால் என்னாகும் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
ஓர் உரையாடல்,
தமிழிசை (பா.ஜ.க) – சார் விஜய் டிவியா?
விஜய் டிவி- ஆமாம் மேடம். என்ன விடயம்?
தமிழிசை (பா.ஜ.க) - இந்த பிக்பாஸ் நிகழ்வில் மீண்டும் ஓவியாவை கொண்டு வரமுடியாதா?
விஜய் டிவி- ஏன் மேடம்? என்ன பிரச்சனை?
தமிழிசை (பா.ஜ.க) - இந்த மாணவி அனிதா செத்துப் போச்சு. மக்கள் கொந்தளிப்பாக இருப்பதாக உளவுப்பிரிவு றிப்போர்ட் சொல்லுது. அதுதான் மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.
விஜய் டிவி- சாரி மேடம், இப்ப பிக்பாஸ் ரேட்டிங் ரொம்ப விழுந்து போச்சு. நீங்க வேணும்னா நளினியை பரோலில் விடுதலை செய்து பாருங்களேன்.
தமிழிசை (பா.ஜ.க) ஆங் அது நல்ல ஜடியாதான். ஆனால் முகநூலில் உடனே கழுவி ஊத்துவாங்களே. பார்ப்பம்.
(யாவும் கற்பனை அல்ல)

•அரசே! நடிகை காவ்யாவை ஏன் கைது செய்யவில்லை?

•அரசே!
நடிகை காவ்யாவை ஏன் கைது செய்யவில்லை?
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் சித்திரவதை செய்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில் இவ் கடத்தல் மற்றும் பாலியல் சித்திரவதை சம்பவத்தில் நடிகை காவ்யாவும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆதாரங்கள் மற்றும் விசாரணைகள் மூலம் நடிகை காவ்யா சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தும் தனது செல்வாக்கின் மூலம் கைது செய்யப்படுவதிலிருந்து அவர் தப்பி வருகிறார்.
உங்களுக்கு இதைப் படிக்கும்போது மாணவி வித்யா வழக்கில் அமைச்சர் விஜயகலா கைது செய்யப்படாமல் தப்பி இருப்பது நினைவுக்கு வரக்கூடும்.
அதேபோல் இத்தனை நாளும் அமைச்சர் விஜயகலாவை ஏன் கைது செய்யவில்லை எனக் கேட்டு வந்த நான் திடீரென்று ஏன் நடிகை காவ்யாவைக் கைது செய்யவில்லை என கேட்கிறேன் என்று குழப்பம் வரும்.
வேறு ஒன்றுமில்லை. அமைச்சர் விஜயகலா பற்றி எழுதினால் விஜயகலாவுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ அவருடைய மச்சானுக்கு கோபம் வருகிறது
எனவேதான் எதற்கு வீண் பிரச்சனை என்று காவ்யாவை கைது செய்யும்படி கேட்கிறேன்.
விஜயகலாவின் கணவர் மகேஸ்வரனின் தம்பி துவாரகேஸ்வரன் என்மீது கோபம் கொள்கிறார். என்னை “நாயே” என்று திட்டுகிறார். முடியுமென்றால் நாட்டுக்கு வா என்று சவால் விடுகிறார்.
நான் ஏதும் தவறாக எழுதியிருந்தால் அதை அவர் தாரளமாக சுட்டிக்காட்டியிருக்கலாம். அதைவிடுத்து மிரட்டல் மூலம் என்னை பணிய வைக்க முயல்கிறார்.
நான் இதுவரை பலருடைய தவறுகள் குறித்து விமர்சனம் செய்துள்ளேன். ஆனால் யாரும் இவரைப் போல் என்னை மிரட்டியதில்லை.
மாணவி வித்யா கொலையில் சம்பந்தப்பட்டதோடு அல்லாமல் அது குறித்து பேசுபவர்களை மிரட்டவும் முனையும் இவர்களின் தைரியத்திற்கு என்ன காரணம்?
குறிப்பு- துவாரகேஸ்வரன் அவர்களே!
(அ)சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது என முடிவு செய்துள்ளேன்.
உங்கள் சவாலை ஏற்றுக்கொள்கிறேன். தாராளமாக நாட்டுக்கு வந்து உங்கள் இடத்தில் உங்களை சந்திக்கிறேன்.
ஆனால் ஒரு நிபந்தனை, எனது பயண செலவை பொறுப்பேற்க வேண்டும்.
என்ன டீல் ஓகே யா?

•முழந்தாளிட்டு வாழ்வதனைவிட எழுந்து நின்று மரணிப்பது மேல்!

•முழந்தாளிட்டு வாழ்வதனைவிட
எழுந்து நின்று மரணிப்பது மேல்!
மாணவி அனிதாவின் மரணம் தமிழக மக்களின் மனட்சாட்சியை உலுக்கியுள்ளது.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தமிழகம் எங்கும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
என்ன சட்டம் கொண்டு வந்தாலும் தமிழக மக்கள் எதிர்க்க மாட்டார்கள். பேசாமல் அடங்கி கிடப்பார்கள் என்று மோடி அரசு நினைத்தது.
ஆனால் நீட் தேர்வு முறைக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்.
•மதுரையில் பிரதமர் மோடியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டுள்ளது
•சென்னையில் நுங்கம்பாக்கத்தில் ரயில் மறிக்கப்பட்டுள்ளது
•கோயம்புத்தூரில் மாணவர் போராட்டம் வெடித்துள்ளது.
•பா.ஜ.க அமைச்சரின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது
•பா.ஜ.க அலுவலகங்கள் முற்றுகை செய்யப்படுகின்றன.
தீ பரவுவது போல் தமிழகமெங்கும் மக்கள் போராட்டம் பரவுகிறது.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் தமது மருத்துவ கல்விக்காக போராட ஆரம்பித்துள்ளார்கள்.
மாணவர் சக்தி வெடிகுண்டைவிட வலிமையானது என்பதை மீண்டும் ஒருமுறை மோடி அரசு காணப் போகிறது.
தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களும் உலகெங்கும் போராட்டத்தில் குதிக்க தயாராகிறார்கள்.
தீ பரவட்டும்!
வெல்லட்டும் தமிழக மக்களின் போராட்டம்!

•இந்த தமிழரின் உடலில் ஊனம் இருக்கலாம்

•இந்த தமிழரின் உடலில் ஊனம் இருக்கலாம்
ஆனால் போராட்ட உணர்வில் ஊனம் இல்லை!
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு
மன்னார்குடியில் இநத கால் ஊனமுற்ற இளைஞர்
நான்கு மணி நேரத்திற்கு மேல் நின்றவாறு போராடியிருக்கிறார்.
மாணவி அனிதாவின் மரணத்தை கேள்வியுற்ற
அமெரிக்காவில் வாழும் தமிழ் சிறுமி ஒருவர்
தன் தந்தையின் பிறந்தநாள் விழாவையே ரத்து பண்ணியுள்ளார்.
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
என பாரதி பாடிய வரிகள் உண்மையாகின்றன.
தீ பரவட்டும்!
தடை உடையட்டும்!!
மக்கள் போராட்டம் வெல்லட்டும்!!!

பகிரதன் தனது சண்டித்தனத்தை மகிந்த ராஜபக்ச மீது காட்டியிருக்கலாமே?

பகிரதன் தனது சண்டித்தனத்தை
மகிந்த ராஜபக்ச மீது காட்டியிருக்கலாமே?
40 ஆயிரம் தமிழ்மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்ற மகிந்த ராஜபக்ச மீது காட்ட முடியாத வீரத்தை, அப்பாவி தமிழ் ஊடகவியலாளர் மீது காட்டியிருக்கிறார் அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன்.
மகிந்த ராஜபக்சவின் முன் கைகட்டி பவ்யமாக இருந்தவர் தமிழ் ஊடகவியலாரை பாய்ந்து தாக்கி தன் வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமிர்தலிங்கம் முன்னர் என்ன செய்தாரோ அதையேதான் மகன் பகிரதனும் தற்போது செய்கிறார்.
தனது தந்தை அமிர்தலிங்கம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவராக பகிரதன் கருதுகிறாரா?
அமிர்தலிங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரு தமிழனுக்கு அதுவும் ஊடகவியலாளனுக்கு உரிமை இல்லையா?
கேள்வி கேட்கும் தமிழ் ஊடகவியலாளரை தாக்கும் உரிமையை பகிரதனுக்கு யார் வழங்கியது?
பொலிஸ் நிலையத்தில் பகிரதன் மீது வழக்கு பதிவு செய்தும் இன்னும் அவர் மீது பொலிசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
சுற்றுலா விசாவில் செல்பவர் அரசியல் நிகழ்வில் பங்குபற்ற முடியாது என்று விதி இருந்தும் பகிரதன் அரசியல் நிகழ்வில் பங்குபற்ற பொலிசார் எப்படி அனுமதித்தனர்?
வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்துவரும் பகிரதன் இலங்கை வந்து ஒரு இலங்கை பிரஜையை தாக்குவதை இலங்கைபொலிஸ் ஏன் வேடிக்கை பார்க்கிறது?
யார் இந்த பகிரதன்?
யாழ் மாணவர்களை தரப்படுத்தலுக்கு எதிராக போராட சொல்லிவிட்டு தனது மகன் பகிரதனுக்கு மதுரை மருத்துவ கல்லூரியில் அனுமதி பெற்றுக் கொடுத்தவர் அமிர்தலிங்கம்
எம்.ஜி.ஆர் தயவில் மதுரையில் மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது இயக்கம் நடத்தியவரே இந்த பகிரதன்.
தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டாம் என்று இந்திரா காந்தியிடம் கேட்ட அமிர்தலிங்கம், அதேவேளையில் தனது மகன் பகிரதன் ஆயுத இயக்கம் நடத்தியதை தடுக்கவில்லை.
தாங்கள் ஜனநாயக தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்கரசி மலேசியா சென்று தனது மகனின் ஆயுத இயக்கத்திற்கு பணம் சேகரித்தார்.
இவருடைய இயக்கத்திற்கு தமிழ்இளைஞர்களை திரட்டி அனுப்பியவர்; இன்றைய தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா.
இளைஞர்களை படிப்பை விட்டிட்டு போராட்டத்திற்கு வரும்படி அழைத்த பகிரதன் தன்படிப்பை ஒருபோதும் கைவிடவில்லை.
தமிழ் இளைஞர்களை திரட்டி அனுப்பிய மாவை சேனாதிராசாவும் தம் பிள்ளைகளை ஒருபோதும் இயக்கத்திற்கு அனுப்பவில்லை
இயக்கத்தில் இருந்த இளைஞர்களுக்கு சாப்பாடுகூட போடாமல் இருந்தவர் இந்த பகிரதன். அதனால் அந்த இளைஞர்கள் அனைவரும் அப்படியே புலிகள் அமைப்பில் போய்சேர்ந்து விட்டனர்.
தனது படிப்பை முடித்தவிட்டு லண்டனில் குடியேறிய பகிரதன் ஒருபோதும் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டதில்லை.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தபின் இலங்கை சென்ற பகிரதனும் அவரது தாயார் மங்கையர்கரசியும் இறந்துபோன தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை.
மாறாக தமது பாதுகாப்பு பணி புரிந்த சிங்கள பொலிசாரின் வீட்டுக்கு தேடிச்சென்று நன்றி தெரிவித்தார்கள்.
இப்படிப்பட்டவர்கள் இன்னும் திருந்தவில்லை. இனியும் திருந்தப் போவதில்லை என்பதையே ஊடகவியலாளர் மீதூன தாக்குதல் காட்டுகிறது.

காசி ஆனந்தன் அய்யா மகளும் டாக்டர் கிருஸ்ணசாமி மகளும்!

காசி ஆனந்தன் அய்யா மகளும்
டாக்டர் கிருஸ்ணசாமி மகளும்!
“நீட்” டால் மாணவி அனிதாவின் கனவு கலைந்தது. ஒரு மாணவியின் கல்வி மறுக்கப்படுவதன் வலியை ஈழத் தமிழராகிய நாம் நன்கு உணர்வோம்.
இதேபோலத்தான் மருத்துவகல்விக்கு தேவையான புள்ளிகள் எடுத்திருந்தும் மாணவி நந்தினிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மாணவி நந்தினி ஒரு ஈழ அகதி என்பதால் அவருக்கு மருத்துவ கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மாணவி நந்தினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதி கிடைக்கவில்லை.
மாணவி அனிதாவுக்கு எப்படி நியாயம் கிடைக்கவில்லையோ அதேபோல் அகதி மாணவி நந்தினிக்கும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க வில்லை.
இன்று பாஜக வுக்காக பேசும் டாக்டர் கிருஸ்ணசாமி தன் மகளுக்கு ஜெயா அம்மையாரிடம் மருத்துவ சீட்டு பெற்றுள்ளார்.
அவர் தன் மகளுக்கு சீட் கேட்டுப் பெற்றவர் அதை மறந்து மாணவி அனிதாவுக்கு எதிராக பேசுகிறார்.
அதேபோல இன்று மோடி அரசுக்கு ஆதரவாக பேசும் காசிஆனந்தன் அய்யாவும் தன் மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்கியவர்
அகதி மாணவி நந்தினிக்கு மருத்துவ கல்வி வாய்ப்பை மறுத்த அதே தமிழக அரசுதான் காசி அனந்தன் அய்யாவின் மகளுக்கு அனுமதி வழங்கியது.
தனது ஒரு மகளுக்கு அல்ல இரண்டு மகள்களுக்குமே மருத்துவ கல்வி வாய்ப்பு வாங்கிய காசிஆனந்தன் அய்யா அகதி மாணவி நந்தினிக்கு வாங்கிக் கொடுக்க முன்வரவில்லை.
இன்று இந்திய அரசிடம் இந்து தமிழீழம் கேட்கும் காசி அய்யா அகதி மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை கேட்க மறுக்கிறார்.
இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாராளமாக சலுகைகள் பெறட்டும். ஆனால் அதற்காக அரசை நியாயப்படுத்த முயலக்கூடாது.
ஏழை மாணவர்களின் சாபம் பொல்லாதது!

•எமன் மறந்த கிழடு தமிழ் இனத்தின் சாபக் கேடு!

•எமன் மறந்த கிழடு
தமிழ் இனத்தின் சாபக் கேடு!
வெள்ளை இன முதியவர்
புலிக் கொடி ஏந்தி 
இனப் படுகொலைக்கு
நியாயம் கேட்கிறார்.
தமிழ் இனத் தலைவர் சம்பந்தர் அய்யா
சிங்கக்கொடி ஏந்தி
இனப்படுகொலைசெய்த
மகிந்த ராஜபக்சவை
ஆட்சியமைக்க அழைக்கிறார்.
என்னே கேவலம் இது?
இதைப் பார்க்கும் வெள்ளைக்காரன்
ஜ.நா வாசலில் நியாயம் கேட்கும்
புலம்பெயர் தமிழர்கள் மீது
காரித் துப்ப மாட்டானா?
எமன் மறந்த கிழடு
தமிழ் இனத்தின் சாபக்கேடு!

நேற்று - பன்சாரே , கல்புர்கி , தபோல்கர் இன்று - கௌரி லங்கேஸ் நாளை – யாரோ?

நேற்று - பன்சாரே , கல்புர்கி , தபோல்கர்
இன்று - கௌரி லங்கேஸ்
நாளை – யாரோ?
மோடியின் குஜராத் படுகொலை பற்றிய ஆவணப்படத்தை கன்னடத்தில் மொழி பெயர்த்த கௌரி லங்கேஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோடி இந்துத்துவாவின் கோரப் பற்களுக்கு அடுத்து பலியாவது இதனை மௌனமாக படித்துக் கொண்டிருக்கும் நீங்களாகவும் இருக்கலாம்
ஊடக சுதந்திரத்திற்கு , கருத்து சுதந்திரத்திற்கு மோடியின் இந்து பாசிசம் விடுத்துள்ள மிரட்டல் இது.
இந்து பாசிசத்திற்கு எதிரான மகக்ள் போராட்டம் வெடிக்க வேண்டும்!

•தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை?

•தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை?
கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக எவரும் கருத்து கூறமுடியாது.
கேரளாவில் இருந்துகொண்டு மலையாளிகளுக்கு எதிராக எவரும் கருத்து கூறமுடியாது.
மும்பையில் இருந்துகொண்டு எவரும் மராட்டியர்களுக்கு எதிராக கருத்து கூற முடியாது.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு யாரும் தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறமுடியும்.
ஏன் இந்த நிலை? தமிழன் பெருந்தன்மையை பலவீனமாக நினைக்கிறார்களா?
முன்பு “துக்ளக்” சோ தமிழ்நாட்டில் இருந்துகொண்டு மரணத்தின் இறுதி வரையிலும் தமிழர் நலனுக்கு விரோதமாக செயற்பட்டார்.
இப்போது “துக்ளக”; குருமூர்த்தி தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர் நலனுக்கு எதிராக பேசி வருகிறார்.
இதே குருமூhத்தி சங்கராச்சரியாரின் கொலை வழக்கில் அவருக்காக ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் பொலிசாரால் தேடப்பட்டவர்.
மும்பையில் சென்று ஒளிந்து இருந்தவர் தற்போது தமிழகம் வந்து வெளிப்படையாகவே தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு மாணவர்கள் தமிழகம் எங்கும் போராடி வருகிறார்கள்.
ஆனால் ஜயர் குருமூர்த்தியோ தனது துக்ளக் இதழில் மாணவியின் மரணத்தை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள் என்று மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்.
அதேபோல் ஜயர் எஸ்.வி.சேகரும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
இவர்கள இருப்பது தமிழ்நாட்டில். இவர்கள் உழைப்பது தமிழை வைத்து. ஆனால் தமிழர்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவார்கள்.
இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களின் துரோகத்தை தமிழக மக்கள்; அனுமதிக்கப் போகின்றார்கள்?

தூக்கி வீசப்பட்ட கறிவேப்பிலையை மீண்டும் கறிக்கு பயன்படுத்துவதில்லை

•தூக்கி வீசப்பட்ட கறிவேப்பிலையை
மீண்டும் கறிக்கு பயன்படுத்துவதில்லை
இதை கருணா எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்?
செய்தி- போர்க்குற்றம் பற்றி சரத் போன்சேகா பேசுவது தேசத்துக்கும், ராணுவத்துக்கும் பெரிய அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது – கருணா
கறிவேப்பிலை கறிக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும். அவ்வாறு தூக்கியெறியப்படும் கறிவேப்பிலையை பின்னர் கறிக்கு பயன்படுத்தப் படுவதில்லை.
கறிவேப்பிலை போல் தாம் பயன்படுத்தும் தமிழர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதே இலங்கையில் ஆளும் சிங்கள கட்சிகளின் வழமையாகும்.
அவ்வாறு பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்பட்ட ஒரு தமிழராக முன்னாள் அமைச்சர் கருணா இருக்கிறார். ஏனோ அது இன்னும் அவருக்கு புரியவில்லை.
பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா மீது வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளது.
இந்த வழக்கை சில மற்றஇன மனிதவுரிமை ஆர்வலர்கள் முன்வந்து தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இனப் படுகொலையாளிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று ஜ.நா வாசலில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவையாவன,
(1) இசைப்பிரியா உட்பட பல சரணடைந்து முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களை மீண்டும் அழைத்து வந்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஜெகத் ஜெயசூரியாவே பொறுப்பு.
(2) நீர்கொழும்பில் தண்ணீருக்காக போராடிய மக்கள் மீது சுட உத்தரவிட்டவரும் இதே ஜெகத்சூரியாவே.
(3) வெலிக்கடை சிறையில் நடந்த படுகொலைகளுக்கும் உத்தரவிட்டவர் இந்த ஜெகத்சூரியாவே.
சரத் பொன்சேகா இவ்வாறு கூறியதுடன் இதனை எங்கு வந்தும் சாட்சியமளிக்க தான் தயார் என்றும் கூறியுள்ளார்.
உண்மையில் இவ்வாறு கூறவேண்டியவர் தமிழரான கருணாவே. ஆனால் அவர் அவ்வாறு கூற முன்வராதது மட்டுமன்றி அவ்வாறு கூறுபவரால் சிங்கள ராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டது என்று கவலைப் படுகிறார்.
இதில் வேதனை என்னவென்றால் இப்படி கூறும் கருணாவை முதலமைச்சராக்கினால் முஸ்லிம்களிடமிருந்து தமிழருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று சில தம்பிமார் சொல்லிக் கொண்டு திரிவதுதான்.

செத்த மாட்டில் இருந்து கழன்று போகும் உண்ணிகள் !

செத்த மாட்டில் இருந்து
கழன்று போகும் உண்ணிகள் !
மாடு உயிருடன் இருக்கும்வரை அதில் ஒட்டி இருந்து ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் உண்ணிகள், மாடு செத்தவுடன் அதில் இருந்து நைசாக கழன்று விடுகின்றன.
அதுபோல் புலிகள் பலமாக இருக்கும்வரை அவர்களுடன் ஒட்டி இருந்து பதவி நலன்களை அனுபவித்தவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் உண்ணிகள் போல் கழன்று விடுகின்றனர்.
உண்ணிகள் போல் கழன்றுவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் புலிகளை தூற்றுகின்றனர்.
இதோ இந்த படத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் பின்னால் பைல் கட்டுகளை தூக்கிக்கொண்டு வரும் முதியவர் யார் என்று தெரிகிறதா?
இவர்தான் இன்றைய எதிர்கட்சிதலைவர் சம்பந்தன் அய்யா. புலிகளே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு அந்தக்காலம் அடிக்கடி வன்னி சென்று வந்தவர்.
அவர் இப்போது கூறுகிறார் தான் இப்போது சுதந்திரமாக திரிகோணமலை சென்றுவர மகிந்த ராஜபக்சவே காரணம் என்று.
அதாவது புலிகளை அழித்து தான் சுதந்திரமாக சென்றுவர மகிந்த ராஜபக்ச தனக்கு உதவியுள்ளதாக அவர் கூறுகிறார்.
மகிந்த செய்தது இனப் படுகொலை என தமிழ் மக்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தலைவர் சம்பந்தர் அய்யா மகிந்த தனக்கு சுதந்திரம் பெற்று தந்தவர் என்கிறார்.
திருகோணமலைக்கு 2 ஜீப் வண்டி நிறைந்த பொலிஸ் பாதுகாவலர் சகிதம் சென்று வரும் சம்பந்தர் அய்யா தான் சுhந்திரமாக சென்று வருவதாக கூறுகிறார்.
ஒரு தமிழ் தலைவர் தமிழ் பகுதிக்கு 20 பொலிஸ் பாதுகாப்புடன் செல்வது எப்படி சுதந்திரமாக சம்பந்தர் அய்யாவுக்கு தெரிகிறது?
எந்தவித பாதுகாப்பும் இன்றி தனியாக வன்னிக்கு சென்று வந்த சம்பந்தர் அய்யா அதை ஏன் சுதந்திரமானது இல்லை என கருதுகிறார்?
சுதந்திரம் என்பதற்கு அய்யா என்ன விளக்கம் வைத்திருக்கின்றார் என்று புரியவில்லை. ஆனால் தான் சுதந்திரமாக சென்றுவர மகிந்த உதவினார் என்று கூறியதன் மூலம் தமிழ் மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளார்.
பாவம் தமிழ் மக்கள்!

•ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று 34 வருடமாக கனவு காணும் தமிழ் தலைவர்கள்!

•ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று
34 வருடமாக கனவு காணும் தமிழ் தலைவர்கள்!
“இலங்கை தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடப் போவதில்லை. வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமுமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இந்தியா தொடர்ந்து பாடுபடும்” என இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த உறுதிமொழியை சுஷ்மாவே நூறு தடவைக்கு மேல் கூறிவிட்டார். இதே உறுதி மொழியைத்தான் இவருக்கு முன்னர் இருந்த வெளியுறவு அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள்.
கடந்த 34 வருடங்களாக இதே உறுதிமொழியைத்தான் 1000 தடவைகளுக்கு மேல் இந்தியா கூறியுள்ளது.
இதைக் கேட்டு கேட்டு தமிழ் மக்கள் சலித்து விட்டார்கள். இதை பிரசுரித்து பிரசுரித்து ஊடகங்களுமகூட் சலித்து விட்டன.
ஆனால் தமிழ் தலைவர்களோ “இந்தியா தமிழர்களுக்கு உதவும”; என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் இந்த உறுதிமொழியை கேட்டவுடன் தமிழ் மக்களுக்கு இந்தியா உதவப் போவதாக நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் இதேவேளையில் இந்தியா இரண்டாவது யுத்தக் கப்பலை இலங்கைக்கு நேற்றைய தினம் வழங்கியுள்ளது.
இதேபோன்ற ஒரு பாரிய யுத்தக் கப்பலை கடந்த வருடம் இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது.
யுத்தம் அற்ற நிலையில் எதற்காக இந்தியா யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது என்று இந்த கனவு காணும் தமிழ் தலைவர்கள் கேட்க வில்லை.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் எதற்காக இலங்கைக்கு இலவசமாக யுத்தக் கப்பல்களை வழங்க வேண்டும் என்று தமிழக தலைவர்களும் கேட்கவில்லை.
கடந்த வருடம் சென்னையில் வெள்ள அழிவு வந்தபோது 50 அயிரம் கோடி ரூபா பணம் வழங்குமாறு முதலமைச்சர் ஜெயா அம்மையார் கேட்டார்.
தமிழக மக்களிடம் வருடம் தோறும் 85 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக பெறும் இந்திய அரசு வெள்ள நிவாரணத்திற்கு வெறும் 6 ஆயிரம் கோடி ரூபாவையே வழங்கியது.
இந்த வருடம் வறட்சி காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 90 க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தமக்கு நிவாரணம் வழங்குமாறு அவர்கள் போராடுகிறார்கள்.
ஆனால் இந்திய அரசோ தமிழக மக்களுக்கு உதவி செய்யாமல் தமிழக மக்களின் பணத்தில் இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இதே தமிழக மக்களின் வரிப் பணத்தில்தான் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு பயிற்சி வழங்கிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு இந்தியா தொடர்ந்து தமிழர்களை வஞ்சித்து வருகிறது. ஆனால் தமிழ் தலைவர்களோ இந்தியா உதவும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
என்ன செய்வது? இவர்கள் கனவு கலைவது எப்போது?