Monday, October 30, 2017

•யாழ் நகரில் காந்தி சிரித்தார்!

•யாழ் நகரில் காந்தி சிரித்தார்!
யாழ்நகரில் மருத்துவமனைக்கு முன்னால் உள்ள காந்தி சிலைக்கு இந்தியதூதர் நடராஜன் மாலை அணிவித்தார்.
காந்தியின் அகிம்சை சர்வதேச தினமாக கொண்டாடப்படுவது இந்தியாவுக்கு கௌரவம் என்று அவர் பேசியுள்ளார்.
யாழ் மருத்துவமனைக்கு குண்டு போட்டு பலரைக் கொன்றுவிட்டு அதே மருத்துமனை வாசலில் காந்திசிலையை வைக்க இந்திய அரசால் மட்டுமே முடியும்.
அதுமட்டுமன்றி இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்வதை அச்சுறுத்தி தடுத்தவிட்டு காந்தி சிலைக்கு மாலை போடவும் இந்திய தூதுவரால் மட்டுமே முடியும்.
அதுகூடப் பரவாயில்லை, குற்றவாளிகளை 7 வருடத்திற்குமேல் சிறையில் அடைக்கக்கூடாது என்று காந்தி கூறியிருந்தும் சிறப்புமுகாமில் பல ஆண்டுகளாக அகதிகளை அடைத்து வைத்திருப்பதும் இதே வெட்கம் கெட்ட இந்திய அரசுதான்.
ஈழத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் 180 நாட்களுக்கு மேலாக காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடுகிறார்கள். இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
இரணைதீவு மக்கள் 150 நாட்களுக்கு மேலாக தமது சொந்தநிலத்தில் குடியேற அனுமதி கேட்டு காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடுகிறார்கள். இன்னும் தீர்வுகிடைக்கவில்லை.
கேப்பாப்பிலவு மக்கள் 200 நாட்களாக தமது சொந்த நிலம் கேட்டு காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடுகிறார்கள். இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
காந்திக்கு மாலை போட்டு சர்வதே அகிம்சைதினம் கொண்டாடுவோர் இந்த போராடும் மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

ஒரு "நுளம்பு"கதை...

ஒரு "நுளம்பு"கதை...
ஆண் நுளம்பு : டார்லிங ;உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டுவருவேன்
பெண் நுளம்பு : ஓகே ஓகே இப்ப போய்தூங்கு
ஆண் நுளம்பு : கண்ணே ! உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டுவந்து கொடுப்பேன்
பெண் நுளம்பு : சரி .. சரி ... மொதல்ல தூங்கபோ டார்லிங்...
ஆண் நுளம்பு : உன்ன நான் பென்ஸ் கார்ல உட்காரவெச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்
பெண் நுளம்பு : என்மேல உனக்கு எவ்வளவு லவ்னு புரியுது டியர்.... காலையில பேசலாம். இப்ப போய்தூங்கு ...
ஆண் நுளம்பு : நீ என்ன நம்பமாட்டியா ..???
நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்கசெயின போடுவேன்பாரு ...
இப்போது ஆண் நுளம்பை ஓங்கி அறைந்த பெண் நுளம்பு...
சம்பந்தர் அய்யாவை கடிச்சுட்டு இங்க வந்து உளறாதேனு எத்தன தடவை சொல்லி இருக்குறேன்" என்றது.
குறிப்பு- இது ஒரு நுளம்பு ஜோக்தான். ஆனால் இதைப் படித்தவிட்டு திருகோணமலையில் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் இறந்தமைக்கு இந்த சம்பந்தர் அய்யாவை கடித்த நுளம்புகள்தான் காரணம் என்று கூற முனைந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
ஒரு சீரியஸ் கேள்வி- இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகம்பேர் டெங்கு நோயினால் இறப்பதற்கு என்ன காரணம்?

•தமிழ் தலைவர்களால் மறக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள்

•தமிழ் தலைவர்களால் மறக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று தமிழ் தலைவர்கள் தேர்தலில் வாக்குறுதி அளித்தார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றார்கள். பதவி பெற்றார்கள். சொகுசு வாகனம் மற்றும் சொகுசு மாளிகை பெற்றார்கள்.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் 3 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவர்கள் தமக்கு விடுதலை கோரி உண்ணாவிரதம் இருக்கவில்லை.
கடந்த 4 வருடங்களாக விசாரணை நடந்த வவுனியா நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற வேண்டும் என்றே கோருகிறார்கள்.
இலங்கை அரசு வேண்டுமென்றே அவர்களது வழக்கு விசாரணையை அநுராதபுரத்திற்கு மாற்றியுள்ளது.
தமிழர் தலைவர்களான சம்பந்தர் அய்யாவோ அல்லது ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரனோ விரும்பியிருந்தால் ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் இப் பிரச்சனையை தீர்த்திருக்க முடியும்.
ஆனால் அத் தலைவர்களோ சம்பந்தப்பட்ட உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி வந்தபின்னரும்கூட இதில் இன்னும் அக்கறை செலுத்தவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவையும் தவிர வேறு யாருமே அவர்களை சென்று பார்வையிடவில்லை.
ஒருவேளை இவ் அரசியல் கைதிகள் இறந்த பின்பு அதை வைத்து அரசியல் செய்யலாம் என இத் தலைவர்கள் காத்து இருக்கின்றார்களோ தெரியவில்லை.
ஆனால் இவ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சி காரியாலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கனடா சென்று தனக்கு நிதி திரட்டிய தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு இந்த உறவுகளை சந்தித்து மனுவை வாங்கக்கூட அக்கறை கொள்ளவில்லை.
இது சயிக்கிள் கட்சிகாரர்களின் வேலை அல்லது கூட்டமைப்பின் மற்ற கட்சிகாரர்களின் சதி என்று மாவை சேனாதிராசா சொல்லலாம்.
ஆனால் இத்தனை வருடம் காத்திருந்து பொறுமையிழந்த நிலையில் தமிழரசுக்கட்சி காரியாலயத்திற்கு இந்த உறவுகள் வந்துள்ளனர் என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்கள் விடுதலை கோரவில்லை. வழக்கை வவுனியா நீதிமன்றில் தொடர்ந்து நடத்தவே கோருகிறார்கள்.
இதைக்கூட அவர்களுக்கு செய்து கொடுக்க முடியாது எனில் என்ன மயிருக்கு தமிழர்களின் தலைவர்கள் என்று இவர்கள் சொல்லிக்கொண்டு திரிய வேண்டும்?

தமிழ்நாடு என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே!

•தமிழ்நாடு என்னும் போதினிலே
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே!!
டெங்கு காய்ச்சலுக்கு ஒரு பொலிசார் உட்பட ஒரே நாளில் ஏழுபேர் இறந்துள்ளனர்.
டெங்கு காய்சலில் இறந்த பெண்ணுக்கு ஸ்டெச்சர்கூட கொடுக்க மருத்துவமனை மறுத்துள்ளது.
டெங்கு காய்ச்சலினால் இறந்த பெண்ணை கணவணும் மகனும் கையில் சுமந்து செல்லும் கொடுமை நடந்துள்ளது.
இத்தனையும் இந்தியாவில் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. முதலமைச்சரோ திருப்பதி சென்று தரிசனம் செய்கிறார்.
தான் திருப்பதியில் வணங்கியதால்தான் தமிழ்நாட்டில் மழை பெய்கிறது என்று அந்த முதலமைச்சர் அறிக்கை விடுகிறார்.
சத்திய போராட்டம் நடத்தி துணை முதலமைச்சர் பதவி பெற்றவர் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் திறக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவரோ அந்த மணி மண்டபத்தில் சிவாஜி சிலையின் கீழ் தன் தந்தை கருணாநிதி பெயர் போடவில்லை என்று குரல் கொடுக்கிறார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சர் “ஆம்னி பஸ்சில் வந்து நுளம்புகள் கடிக்கிறது” என்ற அரிய கண்டுபிடிப்பை(?) கண்டு பிடித்துள்ளார்.
பொதுவாக ஒரு ஆட்சியில் ஒன்றிரண்டு மெண்டல் இருக்கக்கூடும். ஆனால் ஒரு ஒட்டுமொத்த மெண்டல்களின் ஆட்சி நடப்பதை இப்ப தான் பார்க்கிறோம்.
பாவம் தமிழக மக்கள்!

•முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் “வேட்கை”

•முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் “வேட்கை”
இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் “வேட்கை” என்னும் சிறைப் பயணக் குறிப்பை எழுதி வெளியிட்டுள்ளார்.
(1) எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தின் பின்னாடியும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும் என்று தோழர் லெனின் கூறினார். அதன்படி பார்க்கும் போது பிள்ளையானின் எழுத்து அவர் கூறும் கிழக்கு தமிழ் மக்களின் நலனைக்கூட பிரதிபலிக்கவில்லை. ஏமாற்றமளிக்கிறது.
(2) அவர் சிறையில் நிறைய வாசித்தாக கூறுகிறார். எந்த நூல்கள் வாசித்தார் என்று குறிப்பிடவில்லை. ஒருவேளை சிறுவர் காமிக்ஸ் அல்லது அம்புலிமாமா புத்தகங்களை வாசித்திருப்பார் போல் இருக்கிறது.
(3) ஏனெனில் அவருடைய எழுத்துக்கள் குழந்தைப்பிள்ளைத்தனமாகவே இருக்கிறது. அவர் குழந்தைப் போராளியாக மட்டுமல்ல குழந்தை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது குழந்தை எழுத்தாளருமாக இருக்கின்றார் என்ற முடிவிற்கே அவருடைய எழுத்தைப் படித்த பின்பு வர தோன்றுகிறது.
(4) தனது போராளி அனுபவம், தனது முதலமைச்சர் அனுபவம், தனது சிறை அனுபவம் எல்லாம் கூறும் பிள்ளையான் தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு பற்றி ஏன் எதுவும் குறிப்பிடவில்லை என்று புரியவில்லை.
(5) 1987ல் ஆயுதங்களை ஒப்படைத்தபோது போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய இலங்கை அரசு, 2009ல் தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தபோது ஏன் பொது மன்னிப்பு வழங்கவில்லை என்று கேட்டுள்ளார்.
(6) நியாயமான கேள்விதான். ஆனால் இதை அவர் பதவியில் இருந்தபோது அன்றைய இலங்கை அரசிடம் கேட்டு பெற்றிருந்தால் இன்று இப்படி சிறையில் அடைபட்டிருக்க வேண்டியிருக்காதே. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல் இப்ப தன்னை சிறையில் அடைத்த பின்பு இது பற்றி கேட்பதால் என்ன பயன்?
(7) இன்றைய நல்லாட்சி அரசு வேண்டுமென்றே தன்னை சிறையில் அடைத்து பழி வாங்குவதாக குறிப்பிடுகிறார். உண்மைதான். மகிந்தவின் குடும்பத்தவர்களுக்கு ஜாமீன் வழங்கும் அரசு பிள்ளையானுக்கு இரண்டு வருடங்களாக ஜாமீன் வழங்காமல் அடைத்து வைத்திருப்பது தவறுதான்.
(8) ஆனால் அதேநேரத்தில் “தன் குடும்பத்தவர்களைக் காப்பாற்றிய மகிந்த ராஜபக்ச ஏன் தன்னைக் காப்பாற்றவில்லை?” என்ற கேள்வியை பிள்ளையான் எழுப்பியிருந்தால், சிங்கள தலைமைகளால் பயன்படுத்திவிட்டு வீசி எறியப்பட்ட கறிவேப்பிலைகளில் தானும் ஒருவன் என்பதை அவர் உணர்ந்திருக்க முடியும்.
(9) பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது அவரையும் அவருடைய கட்சி தலைவர் ரகுவையும் உடனே கொழும்புக்கு வருமாறு அழைத்து மிகவும் பாதுகாப்பான பிரதேசத்தில் வைத்து அவருடைய தலைவர் ரகுவை இலங்கை அரசு தன் புலனாய்வுதுறை மூலம் சுட்டுக்கொன்றது.
(10) ரகுவை புலிகள் சுட்டுக்கொல்லவில்லை என்று அப்போது தைரியமாக அறிக்கைவிட்ட பிள்ளையான் அதன்பின்னர் ஏன் அந்த கொலைபற்றி பேசாமல் மௌனமானார் என்பது பற்றி எதுவும் எழுதவில்லை. குறிப்பாக தனது தலைவரின் கொலைக்கான நீதியைப் பெற ஏன் அவர் தன் பதவிக்காலத்தில் முயலவில்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
(11) இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்ய ரகு முயற்சி செய்துள்ளார். அதனாலேயே அதாவது இந்தியாவுக்காகவே ரகு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த உண்மையை பிள்ளையான் உணரவில்லையா அல்லது உணர்ந்தும் பகிரங்கமாக கூற அச்சப்படுகின்றாரா?
(12) ரோட்டுபோட, வீடு கட்ட என பல திட்டங்களுக்கு இந்தியா உதவி செய்ததாக பிள்ளையான் மகிழ்வுடன் கூறுகிறார். ஆனால் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில்தான் இந்தியா அதிக ஆக்கிரமிப்பை செய்து சுரண்டிக்கொண்டிருக்கிறது என்பது பற்றி அவர் ஏனோ எழுதாமல் மறைக்கிறார்.
(13) ரோட்டுபோடுதல், பாடசாலைக்கு பெயின்ட் அடித்தல் போன்றவற்றையே அபிவிருத்தி என்றும் அதனை தான் இலங்கை அரசு மூலம் சாதித்ததாகவும் குறிப்பிடுகிறார். அப்படி பார்த்தால் இலங்கையில் அதிக ரோடு போட்டவர்கள், தண்டவாளம் போட்டு ரயில் விட்டவர்கள், துறைமுகம் கட்டியவர்கள் ஆங்கிலேயரே. எனவே ஆங்கிலேயர் ஆட்சியை ஏற்க பிள்ளையான் தயாரா?
(14) தமிழரசுக்கட்சியினரை நோக்கி பிள்ளையான் எழுப்பியிருக்கும் கேள்விகள் நியாயமானவை. குறிப்பாக தமிழரசுக்கட்சி தலைமையை நன்கு அம்பலப்படுத்துகின்றன. அNதுநேரத்தில் இனப்படுகொலை செய்த அரசுக்கு துணை போன ஒருவருக்கு இந்த கேள்விகளை கேட்க என்ன தார்மீக தகுதி இருக்கிறது என்ற உணர்வும் படிப்பவர்களுக்கு ஏற்படுகின்றது.
(15) போராட துணிந்துவிட்டவனுக்கு உத்வேகத்தை கொடுப்பதாகவே இலக்கியம் இருக்க வேண்டும் என்று மார்சிம் கார்க்கி கூறுகிறார். ஆனால் பிள்ளையானின் எழுத்துக்கள் போராடும் தமிழ் மக்களுக்கு உதவவில்லை. மாறாக இலங்கை அரசுக்கு துணை செய்வதாகவே இருக்கின்றது.
குறிப்பு- பிள்ளையான் குறிப்பிடும் பிரதேசங்களில் 1985ல் கால்நடையாக திரிந்துள்ளேன். இந்த நூலை படிக்கும்பொது மீண்டும் அந்த பிரதேசங்களில் திரியும் உணர்வு ஏற்பட்டது.

•ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

•ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
பொதுவாக ஆசிரியர்கள்
பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்
ஆனால் ஈழத்தில் ஆசிரியர்கள்
பாதுகாப்பும் கொடுப்பார்கள்.
தன் உயிர் போனாலும் பரவாயில்லை
தம் மாணவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்
என்று நினைக்கும் அசிரியர்களைப் பெற்றதால்தான்
எம் தமிழ் இனம் மீண்டும் கல்வியில் தலைநிமிர்கிறது.
பாடசாலை பகிஸ்கரிப்பு செய்து
பருத்தித்துறை பொலிசில் பிடிபட்டபோது
ஓடி வந்து எம்மை மீட்ட
காட்லிகல்லூரி அதிபரை மறக்க முடியுமா?
பாடசாலையில் இருந்து அப்படியே
இயக்கத்திற்கு சென்றுவிட்ட மாணவர்களின்
சயிக்கிளை எடுத்துச் சென்று வீடுகளில்
ஒப்படைத்ததோடு, பெற்றோருக்கு ஆறுதலும் கூறிய
அந்த அசிரியர்களையும் மறக்க முடியுமா?
தமிழ் ஆசிரியர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால்
தமிழ் மக்களின் போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்குமா?
மாதா பிதா குரு தெய்வம் என்று
பெற்றவர்களுக்கு அடுத்து
கடவுளுக்கும் மேலாக
ஆசிரியர்களை மதிப்பதும்
எம் தமிழ் இனம் மட்டுமே!

• அருளினியன் எழுதிய “ கேரள டயரீஸ்”

• அருளினியன் எழுதிய “ கேரள டயரீஸ்”
1984ம் ஆண்டு ஒருநாள் சென்னையில் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் ஒரு போராளி நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு இளைஞருக்கு பலர் அடித்துக்கொண்டிருந்தனர். பஸ்சில் வந்தவர்கள் இறங்கி வந்து அடித்தார்கள்.
இதைப் பார்த்த எனது நண்பரும் ஓடிச் சென்று அடித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
திரும்பி வந்த என் நண்பரிடம் “ நீ ஏன் அடித்தாய்? அந்த இளைஞனை உனக்கு தெரியுமா?”என்று கேட்டேன்.
அதற்கு அவர் “எல்லோரும் அடித்தார்கள். அதுதான் நானும் ஓடிப் போய் அடித்தேன். மற்றும்படி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.
இதை தமிழ்நாட்டில் “தர்ம அடி” என்பார்கள். அண்மையில் கேரள டயரீஸ் நூலுக்கு விழுந்த அடியைப் பார்த்தபோது எனக்கு இந்த சம்பவமே ஞாபகத்திற்கு வந்தது.
இந்தப் பத்தகத்தை படித்துக் கருத்து சொன்னவர்களைவிட படிக்காமல் கருத்து சொன்னவர்களே அதிகம்.
இந்த புத்தகம் தமிழர்களின் வரலாற்றை கொச்சைப்படுத்த முயல்வதாக சிலர் சினம் கொள்கிறார்கள்.
தமிழர்களை அரக்கர்கள் என்று கூறும் இராமாயணம் நூல் மீது சினம் கொள்ளாதவர்கள், தமிழர்களை பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்று கூறும் வேதங்கள் மீது சினம் கொள்ளாதவர்கள் கேரள டயரீஸ் மீது சினம் கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழர்களின் போராட்டத்தை மழுங்கடிக்க முனையும் நூல் இது என்று வேறு சிலர் கோபம் கொள்கிறார்கள்.
ஒரு புத்தகம் மழுங்கடிக்கும் அளவிற்கு தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம் பலவீனமானதாக இருப்பதாக நான் கருதவில்லை.
ஒரு கேரள டயரீஸ் மட்டுமல்ல ஓராயிரம் கேரள டயரீஸ் வந்தாலும் தமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்ட உணர்வை ஒருபோதும் மழுங்கடித்துவிட முடியாது.
ஆயிரம் பூக்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும் என்றார் தோழர் மாஓசேதுங்.
எனவே எமக்கு சாதகமோ, பாதகமோ எதுவாயினும் நிறைய கருத்துகள் வரட்டும். வந்து முட்டி மோதட்டும்.
கேரள டயரீஸ் என்பது ஒரு இந்துமத நம்பிக்கையுள்ள ஒருவரின் கேரள கோயில்களுக்கான பயணக்கட்டுரைகளே.
வேர் தேடுவோம் என்று புறப்பட்டவர் நடிகர் திலீப்புக்குள் தேடிய மாதிரி அடுத்து நடிகை ஷகீலாவுக்குள்ளும் தேடப்போகிறாரோ என பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் அவர் தேடவில்லை.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இப்படி பல கேரள டயரீஸ்கள் இனிவருங்காலத்தில் நிறைய வரும். வரட்டும். வரட்டும்.
எதையும் எதிர் கொள்வோம்!

புரட்சியாளர் தோழர் “சே”வும் புலுடா பேர்வழி ஈழத்து “சே” வும்

•புரட்சியாளர் தோழர் “சே”வும்
புலுடா பேர்வழி ஈழத்து “சே” வும்
இன்று புரட்சியாளர் தோழர் சே வின் நினைவு தினம் ஆகும்.
தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு உன்னதமான போராளியின் நினைவு தினம் ஆகும்.
துப்பாக்கி அவர் நெஞ்சை குறி பார்த்தபோதும் அவர் உயிருக்காக கெஞ்சவில்லை.
“நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்” என்று அவர் முழங்கிய வார்த்தைகள் இன்று ஈழத் தமிழருக்கு உறுதியளிக்கிறது.
அவர் தேர்தல் பாதையை முன்வைக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்ட பாதையையே முன்னெடுத்தார்.
“உலகில் எங்கு அநியாயம் காணப்படுகிறதோ அங்கு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாய் எனில் நீ என் தோழனே” என்று கூறினார் தோழர் சே.
ஆனால் ஈழத்தில் அநியாயத்திற்கு துணை போகும் மாவை சேனாதிராசாவை “ஈழத்து சே” என்று சிலர் அழைக்கின்றனர்.
வாழ்க்கையில் ஒருநாள்கூட ஆயுதம் தூக்காதவர். தொடர்ந்து தேர்தல் பாதை மூலம் பதவி சுகம் கண்டு வருபவர் இந்த மாவை சேனாதிராசா.
இவரை எப்படித்தான் கொஞ்சம்கூட கூச்சமின்றி ஈழத்து சே என்று அழைக்கிறார்களோ தெரியவில்லை.
கிடைத்த அமைச்சு பதவியை துறந்து காடுகளில் அலைந்து உயிர் விட்டவர் தோழர் சே.
ஆனால் 3 சொகுசு வீடுகள், 5 கோடி ரூபாவில் சொகுசு வாகனம் என்று பந்தாவாக திரியும் புலுடா பேர்வழி மாவை சேனாதிராசாவை எப்படித்தான் சே வுடன் ஒப்பிடுகிறார்களோ புரியவில்லை.
இதுகூடப் பரவாயில்லை. தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தோழர் சே வின் வடிவில் காண்பதாக ஒரு அமைச்சர் கூறுகிறார்.
தோழர் சே வை இதைவிட வேறு யாரால் அசிங்கப்படுத்திவிட முடியும்?
ஆனாலும் நம்பிக்கை தரும் விடயம் என்னவெனில் தோழர் சே வை அழித்துவிட்டு அமெரிக்க அரசு எப்படி கனவு கண்டதோ அதேபோல் தோழர் தமிழரசனை கொன்றுவிட்டு இந்திய அரசு கனவு கண்டது.
ஆனால் தோழர் சே எப்படி உலக மக்கள் மனங்களில் இன்றும் புரட்சியாளராக வீற்றிருக்கிறாரோ அதேபோல் தமிழகத்தில் போராடும் இளைஞர்களுக்கு தோழர் தமிழரசன் விளங்குகிறார்.

•இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?

•இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?
அருணாசலப்பிரதேசத்தில் போர் விமானம் விபத்திற்குள்ளாகி 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இறந்த வீரர்களது உடல்கள் வெறும் அட்டைப் பெட்டிகளால் சுற்றி அனுப்பப்பட்டுள்ளன.
கார்கில் போரில் பிணப் பெட்டி வாங்கியதில் ஊழல் செய்தவர்கள் தற்போது பெட்டியே வாங்காமல் பணத்தை அமுக்கியுள்ளனர்.
பொதுவாக இறந்த வீரர்களுக்கு ராணுவ அல்லது பொலிஸ் மரியாதை செலுத்தியே அடக்கம் செய்யப்படும்.
அவ்வாறான நிகழ்வுகளில் மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வதும் வழக்கம்.
ஆனால் இறந்த இவ் ராணுவ வீரர் பீகாரில் அடக்கம் செய்யப்படும்போது எந்த அமைச்சரும் கலந்து கொள்ளவில்லை.
இங்கு வருத்தம் தரும் செய்தி என்னவெனில் பட்டேல் சிலை வைக்க 3000 கோடி ரூபாவை ஒதுக்கும் மோடி அரசு இறந்த வீரர்களுக்கு சவப் பெட்டி வாங்க பணம் ஒதுக்கவில்லை.
அதைவிடக் கேவலம் என்னவெனில் தனது விளம்பரத்திற்கு 1100 கோடி ரூபாவை செலவு செய்த மோடி இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை வைக்க பெட்டி வாங்க பணம் வழங்கவில்லையா?
இலங்கை அரசுக்கு 3000 கோடி ரூபாவில் இரண்டு போர்க் கப்பல்களை இலவசமாக வழங்கிய மோடி அரசால் ராணுவ வீரர்களுக்கு பெட்டி வாங்க பணம் ஒதுக்க முடியவில்லையா?
எல்லையில் சீன வீரர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்க எடுத்த அக்கறையை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் இறந்த ராணுவீரர்களுக்கு பெட்டி இருக்கிறதா என்பதில் ஏன் காட்ட முடியவில்லை?
குறிப்பு- எல்லையில் அதிகம் இறப்பது தமிழக ராணுவ வீரர்களாகவே செய்திகள் இருக்கின்றன. குஜராத் வீரர்கள் ஏன் இறப்பதில்லை? இறப்பதற்கு தமிழன். பதவியை அனுபவிப்பதற்கு குஜராத்தா?

தோழர் பவணந்தி அவர்கள் “ ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
•காஞ்சிபுரத்தில் இருக்கும் தோழர் பவணந்தி அவர்கள் “ ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தோழர் தமிழரசன் மறைவிற்கு பின்னர் அவர் காட்டிய பாதையில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர்களில் பவணந்தியும் ஒருவர்.
தமிழ்நாடு விடுதலைப்படையினால் நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு மற்றும் கிண்டி நேரு சிலை தகர்ப்பு வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் பவணந்தி அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழர் பவணந்தி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
“தோழர் தமிழரசனின் மறைவுக்கு பின்னர் அவர் முன்னெடுத்த போராட்டம் தொடர்ந்தது. அதில் எனது பங்களிப்பு என்ன என்பதையும் அவ் அனுபவங்கனையும் கூறவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவற்றை இன்னொரு நூலில் நிச்சயம் எழுதுவேன் என்று கூறிக்கொண்டு இந்நூலை முடிக்கின்றேன்”. இந் நூலின் இறுதி வரிகள் இவை.
இந்த இறுதி வரிகளின் பிறகுதான் தமிழ்நாடு விடுதலைக்கான போராட்டத்தில் எனது பங்களிப்பு இருக்கிறது. அந்த வகையில் தோழர் பாலன் மின் அஞ்சலில் அனுப்பிய ‘‘ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’‘ என்ற நூலின் மீதான எனது பார்வை.
1980 களில் தமிழீழ விடுதலைப் போரும் , தமிழக விடுதலைப் போரும் ஏறக்குறைய சம காலத்தில் ஆயுதப்போராட்டவடிவமாக வளர்ந்தது.இந்த இரு நாட்டு போராட்டங்களின் அனுபவங்களை, வரலாறாக மிக இயல்பாக கூறிச்செல்வது, பாலன் அவர்களின் மிகச்சிறந்த எழுத்தாளுமையைக் காட்டுகிறது.
தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்கள் நடத்திய இரண்டு மாநாடுகள் மிக முக்கியமானவை.
1.1984 இல் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் நடந்த இரண்டுநாள் மாநாடு.
2.1985 இல் அரிலூர் மாவட்டம் மீன் சுருட்டியில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கு.
பெண்ணாடம் மாநாடு அறிக்கையில்
1.இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழீழ விடுதலையை ஆதரிப்பது எனவும்,
2.உலக தேசிய இனங்களின் விடுதலைப்ப்போராட்டம் மற்றும் இந்தியாவில் நடந்த விடுதலைப்ப்போராட்டம் ஆகியவற்றை ஆதரிப்பது மட்டுமின்றி தமிழக விடுதலைபோராட்டத்தை பாட்டாளிகள் தலைமையில் முன் எடுப்பது. எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
மீன் சுருட்டியில் நடந்த விவசாயிகள் கருத்தரங்க அறிக்கையில்
சாதி ஒழிப்பின் எதிரிகள் ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ நிலபிரபுத்துவ சக்திகளே. சாதியைஒழிக்கக்கூடிய முன்னணி சக்திகள் தாழ்த்தப்பட்டவர்களே. அதிகாரத்தையும்,நிலத்தையும் கைப்பற்றாமல் தாழ்தப்பட்டவர்களால் சாதிகளை ஒழிக்க முடியாது. பாட்டாளி வர்க்கத் தலைமையில்லாமல், உழைக்கும் மக்களை அணிசேர்க்காமல் தாழ்த்தப்பட்டவர்களால் அதிகாரத்தை வெல்லவே முடியாது. என அறிவிக்கிறது.
இந்த இரு அறிக்கைகள் தமிழக விடுதலை வரலாற்றில் மார்க்சிய சிந்தனையை ஊட்டியது.
இந்நிலையில் இலங்கையின் புரட்சிகர அமைப்பான தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவையின் போராளிகளுடன் தோழர் தமிழரசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. தமிழ்மக்கள் பாதுகாப்புப்பேரவையினர் ஒட்டுமொத்த இலங்கைப்புரட்சியை முன்னெடுப்பவர்கள்.
இவர்களோ, இந்தியப்புரட்சி என்பதே தேசியஇனங்களின் விடுதலை மூலமே சாத்தியப்படும் என தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்தனர்.இந்த எதிர் நிலையிலும் இவ்விரு அமைப்புகளும் இணைந்து செயலாற்றியது மார்க்சிய, மாவோவிய சிந்தனைகள் அடிப்படையில்தான் என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவையினர் தோழர் தமிழரசன் மூலம் அரசியல் கல்வி பெற்றனர். அதேவேலை தோழர் தமிழரசனும் அவரது தமிழ்நாடு விடுதலைப்படைத் தோழர்களும் ஆயுதப்பயிற்சியை பேரவையினரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்
.ஈழப்போராட்ட வரலாற்றில் கருத்து வேறுபாடுகள் பெரும்பாலும் கருவிகள் மூலமே தீர்க்கப்பட்டது. ஆனால் பேரவை அமைப்பானது ஒருபோதும் இன்னொரு அமைப்புப் போராளிகளை கொன்றதில்லை என்றும்,அமைப்புக்குள்ளே கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் கொன்றதில்லை. இந்த பெருமைக்கு தோழர் தமிழரசனின் வழிகாட்டுதலே என்று நூலாசிரியர் தெரிவித்திருப்பது, தோழர் தமிழரசனின் மீதான மதிப்பை அதிகப்படுத்துகிறது.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
என்ற குறளின் வழி போலும்.
1983களில் இந்திய அரசு ஈழப்போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து ஆயுதங்களையும் கொடுத்தது.
தோழர் தமிழரசன் அவர்கள் இந்தியா ஒருபோதும் தமிழீழத்த்தை ஆதரிக்காது. பயிற்சி கொடுப்பதே இலங்கையை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காகவே என தெளிவுபடுத்தியதையும்,இதனால் போராளி அமைப்புகள் இந்திய அரசுக்கு பயந்து தோழர் தமிழரசனுடன்தொடர்பு கொள்வதையே தவிர்த்தாக தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய அரசு செய்தது தோழர் தமிழரசன் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்பதை வருத்தத்துடன் தோழர் பாலன் விளக்கியுள்ளார்.
தோழர் தமிழரசன் தேவையான பணம் இருந்தும் கூட பல நேரங்களில் நடந்தேவருவார் என்றும் உணவுகூட உண்ணாமல் வருவார் என்ற வரிகளைப்படித்ததும் என் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது.
புரட்சி என்பது மாலை நேரத்து விருந்தல்ல என தெரிந்தும்.
இன்றைய தமிழக சூழலில் பல்வேறு அமைப்புகள் தோழர் தமிழரசனின் படங்களைப் போட்டு அவரின் வழி நடப்போம், அவரது பாதையில் பயணிப்போம் என செயல்படுவது மகிழ்ச்சி என்றாலும், அந்த பாதையை நடைமுறைதான் தீர்மானிக்கும்.
இந்நிலையில் இந்நூல் வெளிவருவதென்பது பாதையை தேடுபவர்களுக்கு நல்ல துணையாக இருக்கும்.
இந்நூலை எழுதிய தோழர் பாலன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
-பவா
திருவள்ளுவர் ஆண்டு 2048,கன்னி 24.
10.10.2017.

அக்-10, இன்று உலக மனநல தினம்

அக்-10, இன்று உலக மனநல தினம்
இந்த தினம் எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ குறிப்பாக இன்றைய நிலையில் எமது தமிழ் இனத்திற்கு இது எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ எம்மிடையே போதியளவு விழிப்புணர்வு காணப்படவில்லை.
யாழ் நகரில் மனநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தன் தாயாரை கொடூரமாக தாக்கி கிணற்றில் வீசிக் கொன்றதாக இரு தினங்களுக்கு முன்னர் செய்திகள் தெரிவித்தன.
ஈழத்தில் மட்டுமன்றி கனடாவில் கூட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட தமிழ்இளைஞன் தன் தாயாரை கட்டையால் அடித்துக்கொன்ற செய்தி நான் அறிந்திருக்கிறேன்.
எமது தமிழ் சமூகத்தில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும் பொத்திப் பாதுகாக்கும் ரகசியமாகவும் இருந்து வருகிறது. பைத்தியம், கிறுக்கு, விசர் என்றும் நவீன தமிழில் லூசு, மெண்டல் என்றும் தரக்குறைவாக அழைக்கப்படுகிறது.
தமிழ்படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள். இதனால் சிறுவர்கள் இவர்கள் மீது கல் எறிகின்ற கோர நிலை எமது சமூகத்தில் காணப்படுகிறது
மனநோயாளர்கள் என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்படுபவர்கள் மீது பாரபட்சமும் வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகின்றன. குடும்பங்களிடையே இது ஒரு அவமானமாக பார்க்கப்படுகின்றது.
மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய காப்பகங்கள்கூட அவர்களை கேவலமாக நடத்துகின்றன.
அவர்களின் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள் , வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயம் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டங்களிலும் காணப்படுகின்றது.
எனவேதான் இந்த மனநோய் பற்றி உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது.
மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்த வுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.
ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார்.
குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.
இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.
மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர்.
இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.
இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் டாக்டர் தம்பிராஜா அவர்கள் “மனநோய்களும் மனக்கோளாறுகளும்” என்னும் நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந் நூல் மனநோய் பற்றிய விழிப்புணர்வை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களிடையே பரவலாக காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி, மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, மறதிநோய் முதல் உளவியல்ரீதியான பாலியல் கோளாறுகள் வரை இந் நூல் விளக்குகின்றது.
தனது மருத்துவ அனுபவங்களினூடாக ஒரு அரிய நூலை தமிழில் எழுதி தமிழ் சமூகத்திற்கு பெரிதும் உதவி புரிந்த டாக்டர் தம்பிராசா அவர்களின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.

மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்

•மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
நியாயம் கிடைக்கும்வரை விடமாட்டோம்!
30 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் அமைதிப்படையென வந்த இந்திய ராணுவம் யாழ் மருத்தவமனையில் செய்த படுகொலைகளை மறந்துவிட முடியுமா?
யாழ் மருத்துமனையில் இரண்டு நாளில் 70 அப்பாவி மக்களை இந்திய ராணுவம் படுகொலை செய்தமையை மன்னித்துவிட முடியுமா?
படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி மக்களுக்கு உரிய நியாயம் பெறாமல் தமிழ் மக்களால் இருந்தவிட முடியுமா?
அக்டோபர் 21, 1987:
முப 11 : 00 மணி – யாழ் கோட்டைப் பகுதியில் இருந்த இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் ஆரம்பித்தது.
முப 11 : 30 மணி – மருத்துவமனையின் வெளிமருத்துவ பீடத்தின் மீது ஏவுகணை ஒன்று வந்து வீழ்ந்தது.
பிப 13 : 00 மணி – அருகில் உள்ள சாந்தி தியேட்டர் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக மருத்துவமனையில் கடமையில் இருந்த மருத்துவ அதிகாரிக்குத் தகவல் வந்தது.
பிப 13 : 30 மணி – 8ம் இலக்க கூடத்தில் ஏவுகணை ஒன்று வீழ்ந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
பிப 15 : 00 மணி – சில ஊழியர்கள் பின்பக்க வழியாக மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
பிப 16 : 00 மணி – ஆசுபத்திரி வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக 15 – 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதை ஊழியர்கள் கேட்டனர்.
மாலை 16 : 20 மணி முதல் – இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர்.
அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர்.
இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
இன்னும் ஒருவரின் கூற்றுப்படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர்.
8, இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.
இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன.
அக்டோபர் 22, 1987:
காலை 08 : 30 மணி – மரு. சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்,” எனக் கத்தியபடி சென்றனர்.
துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. மரு. சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.
முப 11 : 00 மணி – இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார்.
அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர். வெளியேறும் போது அவர்கள் மரு. கணேச ரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர். அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன.
கிட்லர்கூட மருத்துவமனைகள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அப்பாவி தமிழ் மக்களை கொன்றுள்ளனர்.
ஆனால் இங்கு ஆறுதல் தரும் விடயம் என்னவெனில் இறந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் என்பதை இந்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஏனெனில் வழக்கமாக இவர்களால் இறக்கும் அனைவரையும் புலிகள் என்றே கூறி வந்தனர்.
30 வருடமாகியும் இறந்த இந்த அப்பாவி மக்களுக்கு இந்திய அரசு நியாயம் வழங்கவில்லை. ஆனால் அதே மருத்துவமனை வாசலில் காந்தி சிலை வைத்து அதற்கு வருடா வருடம் மாலை அணிவிக்கின்றது.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்வதையும் யாழ் இந்திய தூதர் தடுத்து வருகிறார்.
இந்த படுகொலைகளை நினைவு கூர்ந்த உதயன் பத்திரிகை நிறுவனர் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் யாழ் இந்திய தூதரால் மிரட்டப்பட்டுள்ளார்.
இந்த உதயன் பத்திரிகையில் நினைவுக்கட்டுரை எழுதிய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு இந்திய மேற்படிப்பிற்குரிய விசாவை வழங்க மறுத்து பழிவாங்கியுள்ளார் இந்த யாழ் இந்திய தூதர்.
இப்போது இங்கு எனது கேள்வி என்னவெனில் ராஜீவ் காந்தி கொலை பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் இந்த கொடுமைக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?