Thursday, February 28, 2019

தமிழ் மக்களின் விடுதலைக்கு தேவையானது

• தமிழ் மக்களின் விடுதலைக்கு தேவையானது
எதிரிக்கு எந்த தீங்கும் விளைவிக்காத தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் முத்துக்குமார் பாதையா? அல்லது
எதிரிக்கு எதிராக துப்பாக்கி ஏந்திப் போராடிய தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்ட பாதையா?
முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறோம். ஆனால் அவரது தியாகம் பயனற்றது என்பதை கண்டுள்ளோம். ஒரு முத்துக்குமார் அல்ல அவரைப் போல் இது வரை 16 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இதனால் கண்ட பயன் என்ன? எதிரி கொஞ்சம் கூட இரங்கவில்லையே!
இன்னும் ஓராயிரம் பேர் தீக்குளித்து இறந்தாலும் எந்த ஒரு விளைவும் ஏற்படப்போவதில்லை. எனவே இனி முத்துக்குமாரன்கள் எரியக் கூடாது. மாறாக மக்களின் எதிரிகள் எரிய வேண்டும். எதிரியில் ஒருவன் எரிந்தாலே மாற்றம் காணலாம்.
• எதிரிக்கு எந்த தீங்கும் எற்படக்கூடாது என்போரே
ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தயார் இல்லாதவர்களே
முத்துகுமார் பாதையை உயர்த்திப் பிடிப்பார்கள்!
• முத்துக் குமார் கண்ட கனவு நிறைவேற வேண்டுமானால்
மக்களின் எதிரிகள் அழிய வேண்டுமானால்
அதற்கு ஒரே வழி தோழர் தமிழரசன் காட்டிய ஆயுதப் போராட்டமே
தோழர் தமிழரசன் காட்டிய ஆயுதப் போராட்ட பாதையை முன்னெடுப்போம்!
இதன் மூலமே மக்களின் விரோதிகள் அடி பணிய வைக்க முடியும் என்போம்!
மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்க வழி செய்வோம்!

ஐ.நா இரங்குமா? இந்த மக்களுக்கு பதில் கிடைக்குமா?

•ஐ.நா இரங்குமா?
இந்த மக்களுக்கு பதில் கிடைக்குமா?
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் கடந்த 700 நாட்களாக நடைபெற்று வருகிறது.
தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தவர்கள் இதுவரை இந்த மக்களுக்கு பதில் அளிக்கவில்லை.
இதனால் தமக்கு நியாயம் கிடைக்க ஐ.நா வழி செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்
ஐ.நா எமக்கு உதவ வந்தாலும் அதை தடுப்பவர்களாக எமது தலைவர்கள் இருக்கிறார்கள்.
“நடந்தது இனப்படுகொலை அல்ல. போர்க்குற்றம் மட்டுமே, சர்வதேச விசாரணை தேவையில்லை உள்ளக விசாரணையே போதும்” என்று தலைவர்களான சுமந்திரனும் சம்பந்தரும் சொல்லி வருகிறார்கள்.
இலங்கை அரசு கேட்காமலே அதற்கு இரண்டு வருட அவகாசம் பெற்றுக்கொடுப்பவராக சுமந்திரன் இருக்கிறார்
இப்படி எமது தலைவர்களே எமக்கு எதிராக செயற்படும்போது ஐ.நா எப்படி எமக்கு உதவும்?

•பன்றிகள் ஏன் சாக்கடையை புனிதம் என்கின்றன?

•பன்றிகள் ஏன் சாக்கடையை புனிதம் என்கின்றன?
பாராளுமன்றம் பன்றிகள் உழலும் சாக்கடை என்றார் தோழர் லெனின். அதனால்தான் எமது நாட்டிலும் இப் பன்றிகள் தேர்தல் பாதையை புனிதமானது என்று கூறிவருகின்றனர்.
இந்த தேர்தல் பாதையால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆனாலும் பன்றிகள் அதனை உயர்த்திப்பிடிப்பதற்கு காரணம் அதன் மூலம் அவைகள் பல சலுகைகளை அனுபவிக்கின்றன.
இதோ ஒரு சின்ன உதாரணம். வடமாகாணசபை அவைத் தலைவர் என்ற பன்றியின் சில சலுகைகளை படித்து பாருங்கள்.
•மாத சம்பளம் - 63500 ரூபா
•உபசரணை – 2000 ரூபா
•எரிபொருள் படி – 1000லீட்டர் * 100 = 100000 ரூபா
•வாடகைப்படி – 25000 ரூபா
•காகிதப்படி – 1250 ரூபா
•அமர்வு ஒன்றுக்கான படி – 1250 ரூபா
•அமர்வு ஒன்றுக்கான பிரயாணபடி – 3000 ரூபா
•தொலைபேசிப்படி (உறுப்பினர்களுக்கு) – 25000 ரூபா
•வாகனப்படி – 40000 ரூபா
ஆக மாத மொத்த சம்பளம் - 261000 ரூபா
அவர் ஒரு வருடம் பெறும் மொத்த சம்பளம் - 3132000 ரூபா
இது தவிர அவர் தன்; உறவினர்களை தன் உதவியாளராக(8 பேர்) பதிவு செய்தும் சம்பளம் பெற்று வருகிறார். அதன்படி,
பிரத்தியேக செயலர் (1) – கொடுப்பனவு – 23000 +6600 ரூபா
இணைப்பு செயலர் (1) – கொடுப்பனவு – 22500 +6600 ரூபா
தனிப்பட்ட உதவியாளர் (1) – கொடுப்பனவு – 13990 +6600 ரூபா
முகாமைத்துவ உதவியாளர் (2) – கொடுப்பனவு – 13900+ 6600 ரூபா
அலுவலக பணியாளர் (2) – கொடுப்பனவு – 11730 +6600 ரூபா
சாரதி (1) - கொடுப்பனவு – 12470 +6600 ரூபா
எட்டு உதவியாளர்களின் ஒரு மாத மொத்த சம்பளம் - 176020 ரூபா
இந்தளவு சம்பளமும் சலுகைகளையும் 5 வருடமாக அனுபவித்து வரும் அவைத் தலைவர் இதுவரை சாதித்தது என்ன?
முதலாவது சாதனை – தனக்கு தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியில் இரண்டு சொகுசு கதிரைகள் வாங்கியது.
இரண்டாவது சாதனை – முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தமை.
இப்போது புரிகிறதா இவர்கள் ஏன் தேர்தல் பாதையை வலியுறுத்துகிறார்கள் என்று?

•“சின்னத்தம்பி”யை காப்போம்!

•“சின்னத்தம்பி”யை காப்போம்!
இன்று தமிழ்நாட்டில் இருந்து ஒரு நண்பர் மெஜென்சரில் என்னுடன் தொடர்பு கொண்டு “சின்னத்தம்பியை காப்போம். பிட்டிசனில் கையெழுத்திட்டு உதவுங்கள்” எனக் கேட்டார்.
நானும் கேப்பாப்புலவில் ரோட்டில் படுத்துக்கிடக்கும் சின்னத்தம்பியைத்தான் சொல்கிறார் என நினைத்து மிக்க மகிழ்ச்சியுடன் “ஓ தாராளமாக செய்வோம்” என்றேன்.
ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அவர் கோவையில் திரியும் சின்னத்தம்பி என்ற யானையைப் பற்றி பேசுகிறார் என்று.
அவர் தமிழ் சிறுவன் ஒருவன் 700 நாட்களாக தனது சொந்த நிலத்தை கேட்டு ரோட்டில் படுப்பது குறித்து கவலை இல்லை. ஆனால் ஒரு யானைக்கு இடம் வழங்கவில்லை என்று கவலைப்படுகிறார்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்திய பிரதமரே சாகும் தமிழர் குறித்து கவலை கொள்வதில்லை. மாறாக பசு மாட்டைப்பற்றித்தானே அதிகம் கவலைப்படுகிறார்.
பரவாயில்லை. அது அவர்கள் நாடு, அவர்கள் கவலை. நம் தலைவர்களே நம் சிறுவர்கள் பற்றி அக்கறை கொள்ளாதபோது இந்தியாவில் உள்ளவர்கள் அக்கறைப்படவில்லை என்று எப்படி நாம் வருத்தப்பட முடியும்?

இயக்க சொத்துக்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து

•இயக்க சொத்துக்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து
அவற்றைப் பெற்றுக்கொள்வது எப்படி?
இயக்க சொத்துகளை சில தனிநபர்கள்; வைத்து அனுபவிப்பதாகவும் அவற்றை மீட்டு மாவீரர் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் சிலர் எழுதி வருகின்றனர்.
போராடியவர்கள் நாட்டில் வறுமையில் வாடும்போது போராட்டத்திற்கு என சேர்த்த பணத்தை வெளிநாடுகளில் சிலர் வைத்து அனுபவிப்பதாக அவர்கள் முகநூலில் எழுதுகின்றனர்.
ஆனால்,
(1) யார் யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்தோ அல்லது அதுகுறித்த எந்தவித கணக்கு வழக்கு ஆதாரமோ இதுவரை வெளியிடப்படவில்லை.
(2) அதுமட்டுமல்ல யார் இந்த பணத்தை பெற்றுக்கொள்வது? யார் யாருக்கு பணத்தை வழங்குவது? எவ்வளவு பணத்தை வழங்குவது? என்ற விபரங்களும்கூட இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
(3) அத்துடன் இவ்வாறு முகநூலில் எழுதுவதால் பணத்தை வைத்திருப்பவர்கள் தாங்களாக முன்வந்து மாவீரர் குடும்பங்களுக்கு கொடுத்துவிடப் போவதுமில்லை.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது,
•கோத்தபாய ராஜபக்ச எடுத்து வைத்திருக்கும் புலிகள் இயக்கத்தின் சொத்தை மாவீரர் குடும்பத்திற்கு வழங்கும்படி இவர்கள் யாரும் கேட்பதில்லை.
•மாவீரர் குடும்பத்திற்கு வழங்கும்படி கேட்காவிட்டாலும் பரவாயில்லை. இலங்கை அரசிடம் ஒப்படைக்கும்படிகூட இவர்கள் கேட்பதில்லை.
•கோத்தபாயா தமிழர் இல்லைதானே? நாம் தமிழரிடம்தான் கேட்போம் என இவர்கள் ஒருவேளை சொல்லக்கூடும்.
•சரி. பரவாயில்லை. அப்படியென்றால் புலிகளின் சொத்து பற்றி மட்டும் பேசும் இவர்கள் மற்ற இயக்க சொத்துகள் பற்றி ஏன் கேட்பதில்லை?
உதாரணமாக,
(அ) ரெலோ இயக்கத்தின் கோடிக்கணக்கான ரூபா சொத்தை செல்வம் அடைக்கலநாதன் தன் சொத்தாக்கி வைத்திருக்கிறார் என்று ரெலோ இயக்கத்தினரே குற்றம் சாட்டுகிறார்கள்.
(ஆ)ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் கோடிக்கணக்கான ரூபா சொத்தை சுரேஸ் பிரேமசந்திரன் குடும்பம் அனுபவித்து வருவதாக அந்த இயக்கத்தவர்களே குற்றம் சாட்டுகின்றனர்.
(இ)பெரிய இயக்கங்கள் மட்டுமல்ல. சிறிய இயக்கங்கள் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் உண்டு. ஒரு சிறிய அமைப்பை சேர்ந்த சிலர் கொள்ளையடித்த வங்கிப்பணத்துடன் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதாக சில வருடங்களுக்கு முன்னர் “தேசம”; இணையதளத்தில் கூறப்பட்டிருந்தது.
(ஈ)இது ஏதோ ஆயுத இயக்கங்கள் மீதான குற்றச்சாட்டு அன்று. ஆயுதம் ஏந்தாத தமிழ்தேசிய கூட்டமைப்பு மீதும் இந்த குற்றச்சாட்டு உண்டு. தேர்தல் நிதியாக அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த பணத்தை மாவைசேனாதிராசா தன் மகன் லண்டனில் வியாபாரம் செய்ய கொடுத்தார் என்று குற்றச்சாட்டு உண்டு. ஒவ்வொரு தேர்தலுக்கும் இந்திய தூதராலயம் கொடுக்கும் கோடிக்கணக்கான ரூபா பணத்திற்கு கணக்கு வழக்கு அவர்களிடம் இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.
எனவே புலி அமைப்பு மட்டுமன்றி அனைத்து அமைப்புகளிலும் பொதுச் சொத்தை வைத்திருப்பவர்கள் அதனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனக் கோருவதே நியாயமாக இருக்கும்.
மேலும், எந்த அமைப்பாக இருந்தாலும் எல்லா அமைப்புகளும் போராட்டத்திற்காகவே சொத்தை திரட்டினார்கள். எனவே போராட்டத்திற்காக திரட்டிய சொத்து போராட்டத்திற்காகவே பயன்படுத்த வேண்டும். அதுவே மக்களின் விருப்பம் மட்டுமல்ல அந்தந்த அமைப்புகளில் இருந்து மடிந்த மற்றும் முன்னாள் போராளிகளின் விருப்பமாகவும் இருக்கும்.
•இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் புலிகளின் பணத்தை வைத்திருக்கும் சிலர் பிரபாகரன் வந்து கேட்கும்போது அவரிடம் ஒப்படைப்பதாக கூறுகிறார்கள்.
(1) பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறுவது இலங்கை இந்திய அரசுகளுக்கு மட்டுமன்றி பணத்தை சுருட்டி வைத்திருப்பவர்களுக்கும் உதவுகின்றது.
(2) நெடுமாறன் அய்யா கூட தன்னிடமிருக்கும் புலிகளின் சொத்தை வேறு யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பிரபாகரன் தன்னுடன் கதைத்து வருவதாக கூறுகின்றாரோ என சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.
(3) எனவே பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை மக்களுக்கு வெளிப்படையாக கூறாதவரை இவர்களிடம் இருக்கும் சொத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது.
மேலும்,
•வெளிநாடுகளில் இயக்க சொத்தை வைத்திருப்பவர்கள் முகநூலில் எழுதுவதை பார்த்து பயந்து சொத்தை ஒருபோதும் திருப்பி ஒப்படைக்க மாட்டார்கள்.
•வெளிநாடுகளில் சொத்தை வைத்திருப்போர் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களின் படியே வைத்திருப்பதால் சட்டரீதியாக அவர்களிடம் இருந்து பெற முடியாது.
•ஒருவேளை அந்தந்த நாடுகளின் அரசுகள் இந்த சொத்தை பறித்தெடுத்தாலும் ஒருபோதும் அதை மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்போவதில்லை.
அப்படியென்றால் இதற்கு என்னதான் தீர்வு?
(1)போராட்டம் இன்னும் முடியவில்லை. போராட்டத்திற்காக தேவை இன்னும் இருக்கிறது.
(2)போராட்டத்திற்கான ஒரு பலமான இயக்கம் மீண்டும் உருவாக்க வேண்டும்.
(3)அந்த பலமான இயக்கம் அனைத்து இயக்கங்களின் பொது சொத்தை வைத்திருப்பவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்.
(4)மீட்கும் பொதுச் சொத்தை தொடர்ந்து போராட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
இதுதான் சரியான வழி மட்டுமல்ல சொத்தை மீட்பதற்கான சாத்தியமான வழியும்கூட.
சரி. அப்படியென்றால் அதுவரை இந்த விடயம் கூறித்து பேசாமல் இருப்பதா?
இல்லை. தாராளமாக பேசலாம். பேச வேண்டும். இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுவதற்கு இவ்வாறு பேசுவது பெரிதும் உதவும்.
•எச்சரிக்கை - இதுவரை போராட்டத்திற்கு ஒரு சதம் கூட வழங்காதவனும் இந்த பிரச்சனை பற்றி அடிக்கடி இப்ப பேசுகிறான். ஏனெனில் இன்னொரு போராட்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இலங்கை இந்திய உளவு அமைப்புகளின் சூழ்ச்சிக்காக பேசுகிறான். இதற்கு தமிழ் மக்கள் பலியாகிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவரை “பயங்கரவாதி” என்றார்கள்

இவரை “பயங்கரவாதி” என்றார்கள்
இவர் ஆயுதம் ஏந்தியது “வன்முறை” என்றார்கள்
இவரை கொன்று அழித்தால் இலங்கை மக்களுக்கு அனைத்து வளமும் கிடைக்கும் என்றார்கள்
யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் ஒரு சிறுவன் தன் சொந்த நிலம் இன்றி ரோட்டில் படுத்துக்கிடக்கிறான்.
ஆனால் இலங்கை அரசோ 71வது சுதந்திரதினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது.

•வரலாறு மீண்டும் திரும்புகிறதா?

•வரலாறு மீண்டும் திரும்புகிறதா?
1956ம் ஆண்டு திருமலையில் சுதந்திரநாள் அன்று நடராஜன் என்பவர் கறுப்புகொடியை ஏற்றியபோது பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அன்று முதல் பலதடவை தமிழ் இளைஞர்களால் இலங்கை தேசியக்கொடி எரிக்கப்பட்டிருக்கிறது. கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டிருக்கிறது.
இத்தகைய போராட்டங்களே பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.
இத்தகைய கடந்தகால வரலாறு மீண்டும் திரும்புகிறது. இன்று யாழ் பல்கலைகழகத்தில் இலங்கை தேசியக்கொடி பறந்த இடத்தில் மாணவாத்களால் கறுப்பு கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
இலங்கையின் 71வது சுதந்திரதினம் தமிழ் மக்களின் கரிநாளாக அனுட்டிக்கும்படி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இன்று கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை தருமாறு கோரி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
700 நாட்களுக்கு மேலாக போராடி வரும் காணாமல் போனவர்களின் உறவுகளும் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் இத்தகைய எதிர்ப்பு போராட்;டங்களில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
71வது சுதந்திரதினத்தை கொண்டாடும் ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் எதிர்பார்த்து இருக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்று இருவரும் தெரிவித்துள்ளார்கள்.
தீர்வு பெற்று தருவோம் என்று கூறிவந்த இந்திய அரசும் காலம் மாறிவிட்டது. அதற்கு ஏற்ப தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதாவது இனி சமஸ்டி என்று பேசிக்கொண்டிருக்ககூடாது என்று தெளிவாக கூறிவிட்டது.
பாராளுமன்றபாதை மூலம் தீர்வு பெறலாம் என கூறிவந்த தமிழ் தலைவர்கள் இனி என்ன கூறி தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் இந்த நாளில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளது. அதாவது,
(1) சிலர் கூறுவதுபோல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தானாக வழங்கிவிட்டு செல்லவில்லை. அவ்வாறு கூறுவது இலங்கை மக்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்துவதாகும்.
(2) சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் கரி நாள் ஆகும். ஏனெனில் ஆட்சி அதிகாரம் வெள்ளையரிடமிருந்து கொள்ளையரிடம் கைமாறியுள்ளதே தவிர மக்களிடம் கிடைக்கவில்லை.
குறிப்பு - முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ் மக்களை கொன்ற அதே இலங்கை ராணுவம்தான் 1971ல் 6000 சிங்களவர்களையும் 1989ல் 60000 சிங்கள மக்களையும் கொன்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுபோலவே 1971ல் கதிர்காமத்தில் மன்னம்பேரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே இலங்கை ராணுவம்தான் முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாக்களை பாலியல்வல்லுறவு செய்து கொன்றார்கள் என்பதையும் மறந்தவிடக்கூடாது.
இதே இலங்கையில்தான் ஒருபுறம் சிங்களவரான மகிந்தவின் பிள்ளைகள் குதிரை சவாரி செய்வதற்காக லண்டன் மகாராணியின் குதிரை இறக்குமதி செய்யப்படும்வேளை மறுபுறத்தில் வறுமையின் கொடுமையால் தன் மகளை விபச்சாரத்தில் தள்ளிய குற்றச்சாட்டில் சிங்களதாய் ஒருவர் கைது செய்யப்படுகிற அவலமும் நடக்கிறது.

சுதந்திரதினத்தை கரிநாள் என்று கூறுவது தவறு – சுமந்திரன்

செய்தி - சுதந்திரதினத்தை கரிநாள் என்று கூறுவது தவறு – சுமந்திரன்
என்னதான் நாயை குளிக்கவார்த்து நடுஹோலில் வைத்தாலும் அது நக்கிதான் குடிக்கும்.
நடுக்கடலில் வைத்தாலும் அது நக்கிதான் குடிக்கும். ஏனெனில் நக்குவதுதான் நாயின் இயல்பு
1956ம் ஆண்டு தமிழரசுக்கட்சி கூறியதற்கிணங்க கறுப்பு கொடி ஏற்றியதால் கொல்லப்பட்டவர் திருமலை நடராசன்.
இன்று அதே தமிழரசுக்கட்சியில் உள்ள எம்.பி சுமந்திரன் கூறுகிறார் கரிநாள் என்று கூறக்கூடாதாம்.
திருமலை நடராஜனே எங்களை மன்னித்து விடு. இது சுமந்திரன்களின் காலம்.
குறிப்பு – சுமந்திரனை நாயுடன் ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்திவிட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

அடேய் பாவம்டா எங்கட ஐயா. விட்டிடுங்கடா!

அடேய் பாவம்டா எங்கட ஐயா. விட்டிடுங்கடா!
ஆட்டுக்கு மாலைபோட்டு வேள்வியில வெட்டி பலியிடுவதுபோல எங்கட ஐயாவுக்கும் மாலை போட்டு அழைத்து சென்று பலி எடுத்திட்டீங்களேடா?
ஒருபுறத்தில் வேள்வியில ஆடுகளை பலியிடக்கூடாது என்று மிருகவதைச்சட்டத்தை இயற்றிவிட்டு மறுபுறத்தில் எங்கட ஐயாவை வெட்டிப்போட்டீங்களேடா?
பதவி போனவுடன் பங்களாவையும் தூக்கி எறிந்துவிடும் அளவுக்கு எங்கட ஐயா மானஸ்தன் இல்லைதான்டா. ஆனாலும் சாகிற நேரத்தில் சொகுசு பங்களாவுக்காக மகிந்த ராஜபக்சாவிடம் எங்கட ஐயாவைவ கெஞ்ச வைச்சது ரொம்பவும் ஓவரடா.
தன்ர பதவிக்காக உங்கட தேசியக்கொடியைக்கூட தூக்கி ஆட்டினாரேடா. அதைக்கூட மறந்து அவர் பதவியை பறிச்சிட்டீங்களேடா.
நீங்க உங்களுக்குள்ளேதான்டா மிளகாய்தூள் எறிஞ்சு விளையாடினீங்க. கடைசியில பார்த்தா எங்கட ஐயாவின்ர பதவியை பறிக்கத்தான் இந்த விளையாட்டை விளையாடினீங்களோ என்று யோசிக்க வைச்சிட்டுட்டீங்களேடா
எங்கட ஐயா பதவி இல்லாமல் கூட இருப்பாரடா. ஆனால் பங்களா இல்லாமல் இருக்கமாட்டாரடா. 1983ல் அகதியாக தமிழ்நாட்டுக்கு போனபோதுகூட எம்.ஜி.ஆரிடம் பங்களா கேட்டு வாங்கி வாழ்ந்தவரடா எங்கட ஐயா.
கடைசியில எங்கட சிங்கத்தை சாய்ச்சுப்புட்டீங்களேடா. பிளீஸ் அந்த சொகுசு பங்களாவையாவது ஐயாட்டை இ.ருந்து பறிக்காமல் விடுங்கடா.

இலங்கை 71வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது.

செய்தி
•இலங்கை 71வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது.
•முப்படைகள் அணிவகுக்க பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்.
நன்றாக படிக்கிறாயா?
நன்றாய் சாப்பிடுகிறாயா?
நல்ல உடுப்பு போடுகிறாயா?
கவனமாய் உடம்பை பார்த்துக்கிறாயா?
என்று சுமந்திரன் அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர் அக்கறையாக கேட்டுக்கொண்டிருப்பது
இந்த ஏழை தமிழ் குழந்தையிடம் அல்ல.
லண்டனில் படித்துக்கொண்டிருக்கும் தனது சொந்த மகளிடம்.