Wednesday, December 20, 2023

இந்த வருடம் இதுவரை 1200 பதிவுகள்

இந்த வருடம் இதுவரை 1200 பதிவுகள் செய்துள்ளேன். அதாவது சராசரியாக மாதம் ஒன்றிற்கு நூறு பதிவுகள். 2013 முதல் முகநூலில் பதிவுகள் செய்கிறேன். மொத்தம் 6393 பதிவுகள். அனைத்து பதிவுகளும் என் புளக்கில் உள்ளது. கீழே லிங்க் தந்துள்ளேன். விரும்பியவர்கள் பார்க்கலாம். நான் தொடர்ந்து எழுத உதவுபவர்கள், ஊக்கப்படுத்துபவர்கள் அனைவருக்கும் நன்றி. புத்தாண்டில் சந்திப்போம். வாழ்த்துகளுடன். குறிப்பு – என்னை திட்டுபவர்களுக்கான பதில், நாய் குரைத்து சந்திரன் தேய்வதில்லை. நான் பாலச்சந்திரன் தேய்ந்துவிடுவேனா?

தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய

தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய தேவனும் தேவையில்லை தண்ணீரில் நடக்கும் இறைவனும் தேவையில்லை செங்கடலை இரண்டாக பிளந்த ரட்சகரும் தேவையில்லை மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தெய்வமும் தேவையில்லை தன் தேவாலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளையாவது செயலிழக்க வைக்கும் கடவுளே தற்போது தேவை.

மாவீரர்களுக்கு அஞ்சலி செய்தமைக்காக

மாவீரர்களுக்கு அஞ்சலி செய்தமைக்காக இரண்டு சிறுமிகளை விசாரணை செய்யும்படி உத்தரவிட்ட சிங்கள ஜனாதிபதி ரணில், தனது வெற்றியை மண்ணுக்காக மடிந்த மாவீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறிய சிறுமி கில்மிசாவை பாராட்டியுள்ளார். பிலிப்பைன்ஸ் சென்று நாட்டுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த அகிலத்திருநாயகிக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை, தனது காணாமல் ஆக்கப்பட்ட மாமாவுக்காக “கண்டால் வரச்சொல்லுங்கள்” பாடலை பாடிய கில்மிசாவுக்கு கொடுத்துள்ளன சிங்கள ஊடகங்கள் இதுதான் “மீடியா பவர்” என்பதா?

சுமந்திரன் தம்பிகள் - சேர்!

சுமந்திரன் தம்பிகள் - சேர்! நாங்க இமயமலைப்பிரகடனத்தை ஆதரிக்கனுமா வேண்டாமா? குழப்பாமல் ஒன்றை சொல்லுங்க. முதல்ல, தீர்வின் முதற்படியாக இந்த பிரகடனத்தை ஏற்கலாம் என்டீங்க. அப்புறம் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறீங்க. நாங்க என்னதான் செய்யிறது ? 😂😂

செய்தி – 65 வயதில் அரசியலில் இருந்து

செய்தி – 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். கோழிக்கு இரண்டு கால்கள்தான். ஆனால் இதையே நரி சொன்னால் நாம் கோழியின் மூன்றாவது காலை தேட வேண்டும் என்பார்கள். அரசியல்வாதிக்கும் ஓய்வு வயதெல்லை தேவைதான். ஆனால் இதை சுமந்திரன் கூறும்போது சந்தேகப்பட வைக்கிறது. ஏற்கனவே சம்பந்தர் ஐயாவை பதவி விலகும்படி நேரிடையாக கூறினார். இப்போதும் தான் 65 வயதில் ஓய்வு பெறுவேன் என்று மறைமுகமாக சம்பந்தர் ஐயாவுக்குதான் கூறுகின்றார். ஆனால் எப்படி கூறினாலும் சம்பந்தர் ஐயா சாகும்வரை பதவி விலகப்போவதில்லை. சுமந்திரன்கூட 65வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது சந்தேகமே. ஏனெனில் தீர்வு பெற்று தரவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என கடந்த நல்லாட்சி அரசில் சுமந்திரன் கூறியிருந்தார். தனது ராஜினாமா கடிதம் தன் சட்டைப்பொக்கற்றில்; இருக்கிறது என்றார். தீர்வும் வரவில்லை. கூறியபடி அவரும் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. எனவே இப்போது கூறுகின்றபடி 65 வயதில் ஓய்வு பெறுவார் என்று எப்படி நம்புவது?

ராணுவ தளபதி சவேந்திர சில்வா

ராணுவ தளபதி சவேந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என்று அவருக்கு பயண தடை விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால் அந்த இனப்படுகொலையாளி சவேந்திரசில்வாவை அழைத்து வரவேற்பளித்து கௌரவப்படுத்தியுள்ளது இந்திய அரசு. சீனா வந்துவிட்டது. எனவே இந்துத் தமிழீழம் அமைக்க இந்தியா உதவப்போகிறது என்று கூறும் காசி ஆனந்தனோ அல்லது, அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் அமைத்தவர்களோ இது குறித்து என்ன கூறப்போகிறார்கள்?

மாபெரும் ஆசான் தோழர் மாவோ

•மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2023) மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 130வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது. தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர். ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் . தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர். மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர். சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை. சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின்நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது.

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின் 18.12.2023 மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும், கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும், ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது. தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2014/12/blog-post_26.html

சிலர் அவர் மார்க்சிய வழியில்

சிலர் அவர் மார்க்சிய வழியில் திறனாய்வு செய்தவர் என்கிறார்கள். இன்னும் சிலர் அவர் பெரியாரியத்தை ஆதரித்தவர் என்கிறார்கள இவ்வாறு இவர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். அவர் சிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல சிறந்த தமிழ் இன உணர்வாளரும்கூட அதனால்தான் ஈழத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டபோது அவருக்கு வலித்தது. ஈழப் படுகொலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதான எனது ஆத்திரம் உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்று கூறினார். உறக்கமில்லாமல் கழிந்த அந்த இரவுகள் திரும்ப திரும்ப நினைவுக்கு வருகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றதும் எமக்கு வலித்தது. எமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட உணர்வைத் தந்தது. அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள். குறிப்பு - 24.12.2023யன்று தொ.பரமசிவம் அவர்களின் 3வது நினைவு தினம் ஆகும்.

Tuesday, December 19, 2023

வெகு தொலைவில்

வெகு தொலைவில் முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் உண்மையான தாய்மொழி குருதி கொட்டும் செம்மொழியாய்…. - கவிஞர் இன்குலாப் இன்று 7வது நினைவு தினம் (01.12.2016)

பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக

பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. அப்படியிருந்தும் தமிழர்கள் அந்த மாவீரர்களுக்காக அணிதிரள்கிறார்கள்” -வெளிநாட்டு ஊடகத்தில் மாவீரர் பின்னால் தமிழ்மக்கள் இருக்கிறார்கள் என்பது வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிகிறது. இந்திய மற்றும் சிங்கள அரசுகளுக்கு தெரியுதில்லையே?

ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கலையா?

•ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கலையா? அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் ?? திருமலை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் தந்தையை நினைவுகூர பொலிசார் அனுமதிக்காததை ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார். மாவீரரான தன் தந்தையை நிம்மதியாய் நினைவுகூர அடுத்த வருடமாவது வாய்ப்பு ஏற்படுத்தித்தாருங்கள் என கேட்டிருக்கிறார். அவர் தனக்கு நிதி உதவி தாருங்கள் என கேட்கவில்லை அவர் தனக்கு வீடு கட்டித் தாருங்கள் என கேட்கவில்லை அவர் தனக்கு தீர்வு பெற்று தாருங்கள் என கேட்கவில்லை அவர் தன் தந்தையை நினைவுகூர வாய்ப்பு எற்படுத்தித்தாருங்கள் என்று மட்டுமே கேட்டுள்ளார். அவர் தந்தை சாதாரண மரணம் அடைந்தவர் இல்லை. தமிழ் இனத்திற்காக போராடி மாவீரர் ஆனவர். அவருக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை இல்லையா? அவரை நினைவுகூர வாய்ப்பு எற்படுத்திக் கொடுப்பது நமது பொறுப்பு அல்லவா. இவர் சம்பந்தர் ஐயாவின் சொந்த தொகுதியை சேர்ந்தவர். மாவீரர்களின் தியாகத்தாலேயே சம்பந்தர் ஐயாவுக்கு பதவி கிடைத்துள்ளது. அந்த பதவி மூலம் இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தராவிட்டாலும் பரவாயில்லை இவர்களை நினைவு கூரும் வாய்ப்பையாவது பெற்றுக் கொடுக்கலாமே? செய்வார்களா நம் தமிழ் தலைவர்கள்?

காய்ந்து கருகிய புல்கூட சிறு மழைத் துளி பட்டதும்

காய்ந்து கருகிய புல்கூட சிறு மழைத் துளி பட்டதும் துளிர்த்து எழுகிறது. காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது மாவீரர் சிந்திய ரத்தமும் அவர்களைப் பெற்ற தாய்மார் வடிக்கும் கண்ணீரும் நாம் மீண்டும் எழுந்திட வைக்காதா?

இதுதான் இந்திய அரசு?

• இதுதான் இந்திய அரசு? அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள சீக்கிய தலைவரை கொலை செய்ய முயற்சி செய்தமைக்காக இந்திய அரசு ஊழியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்திய அரசு ஊழியர் போதைபொருள் கடத்தல்கார இந்தியர் ஒருவரை இதற்காக பத்தாயிரம் டொலருக்கு ஒப்பந்தம் செய்ததாக அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடா நாட்டில் கொல்லப்பட்ட சீக்கிய தலைவரின் விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்து வருகிறார். இதேவேளை கர்த்தார் நாட்டில் உளவு பார்த்ததாக எட்டு இந்திய அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு இந்திய எதிர்ப்பு தீவிரவாத தலைவர் கொல்லப்பட்டார். அவர் கொலைக்கும் இந்திய உளவு நிறுவனம் காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. எல்லை தாண்டி ஈழத் தமிழர்களை கொன்றவர்கள் இப்போது எல்லை தாண்டி சீக்கிய தலைவர்களை கொல்கின்றனர்.

ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால்

ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்கிறார்கள். இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் காரல் மார்க்ஸ் சாதனைக்கு பின்னால் அவர் மனைவி ஜென்னி இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும்

“நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும் பலமிழந்துபோனால் இனம் அழிந்து போகும் ஆதலால் மானுடனே தாய் நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்” -புதுவை இரத்தினதுரை காணாமல் ஆக்கப்பட்ட தாயக கவிஞனுக்கு 75வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் (03.12.1948)

கடந்த வருடம் வெளிவந்த பாடல்.

கடந்த வருடம் வெளிவந்த பாடல். இதுவரை பல மில்லியன் பேர் கேட்டு ரசித்துள்ளனர். புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் பெண் ஒருவர் போட்டிகள் நிறைந்த ஆங்கில இசை உலகில் இந்த சாதனையை புரிந்துள்ளார். அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்த பாடலை கேட்கும்போது “வாடா என் மச்சி” என்ற ராஜேந்தர் பாடல் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா? குறிப்பு – பாடல் கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன். ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.

அன்று அடுப்பூதும் பெண்களுக்கு

அன்று அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட சமூகம். இன்று கபொத சாதாரண பரீட்சையில் இலங்கையில் இரண்டாவதாக வந்து சாதனை. அக்சயா ஆனந்தசயனன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும

இவர் தமிழச்சி தங்க பாண்டியன்.

இவர் தமிழச்சி தங்க பாண்டியன். திமுக எம்.பி. இவர் பிரபாகரனுடன் சேர்ந்து உணவு உண்ண விரும்புவதாகவும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் இவர் கூறிய இக் கருத்துகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. இது தேர்தல் நேரம் இல்லை. இந்த கருத்தை கூறித்தான் தன்னை தக்க வைக்க வேண்டும் என்ற அவசியமும் இவருக்கு இல்லை. கூட்டணிக்கட்சி காங்கிரஸ் மட்டுமன்றி தனது திமுக தலைமைகூட விரும்பாது என்று தெரிந்தும் தன் கருத்தை தைரியமாக கூறியிருக்கிறார்.

அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு.

அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு. குடியுரிமை உள்ளபடியால்தான் அவரால் இலங்கை கடவுச்சீட்டு பெற முடிந்தது. இலங்கை கடவுச்சீட்டு இருந்தபடியால்தான் அவரால் இந்திய விசா பெற்று விமானம் மூலம் இந்தியா சென்று சரிகமப நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தது. இதை உணர்ந்துகொள்ள முடியாத நடிகர் சத்யராஜ் அவர்கள் அசானிக்கு மட்டுமல்ல இலங்கையில் மலையக தமிழர் எவருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார். உண்மை என்னவெனில் இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை. அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையில் மலையக தமிழர் விரும்பிய கல்வி கற்க முடியும். அரச வேலை பெற முடியும். அவர்கள் அமைச்சராகவும் கவர்னராகவும் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் உரிய புள்ளி எடுத்தாலும் மருத்துவ கல்வி கற்க முடியாது. அரச வேலை பெற முடியாது. அமைச்சராகவோ கவர்னராகவோ வர முடியாது. இலங்கை அரசுக்கு மனசாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும். ஆச்சரியம் என்னவெனில் மலையக தமிழருக்கு குடியுரிமை உண்டு என்பது சத்யராஜ்க்கு தெரியவில்லை என்பதைவிட அந்த நிகழ்வில் பங்குபற்றிய யாருக்குமே தெரியவில்லையா என்பதுதான். இதுகூடப் பரவாயில்லை. 1984ல் மதுரை மருத்துவமனையில் ஒரு மருத்துவர் என்னிடம் இலங்கையில் இருந்து பஸ்சில் வந்தீர்களா அல்லது ரயிலில் வந்தீர்களா என கேட்டார். அவருக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல் இருக்கிறது என்பதுகூட தெரியவில்லை. இது உண்மையில் அவர்கள் தவுறு இல்லை. இத்தனை நாளாக நாம் இன்னும் எமது பிரச்சனைகளை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கவில்லை என்பது எமது தவறே.

எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு

எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு ஒரு பூனையை மறித்துப்பார்.அங்கு ஒரு புலியை நீ காண்பாய் - கவிஞர் இன்குலாப் தீப் பொறிகளின் ஒற்றை விரல் கூறும் தத்துவம் என்ன? திருப்பி அடிக்காமல் தீர்வு இல்லை என்பதுதானே.

கண்டனப் போராட்டம் வெற்றி பெறட்டும்!

கண்டனப் போராட்டம் வெற்றி பெறட்டும்! அலெக்ஸ் கொலைக்கு நீதி கிடைக்கட்டும்!!

எங்கே பாடுங்க..

எங்கே பாடுங்க.. ஸ்டாலின்தான் வாறாரு.. விடியல் தரப்போறாரு..

எப்படி கேப்பாபுலவில் குழந்தை

எப்படி கேப்பாபுலவில் குழந்தை ஒன்று தன் நிலத்திற்காக வீதியில் படுத்து போராடியபோது தலைவர் சம்பந்தர் ஐயா கொழும்பில் சொகுசு மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்தாரோ , அப்படித்தான் மலையக தமிழர் இந்தியாவில் அகதிமுகாமில் வாடும்போது அமைச்சர் தொண்டைமான் குடும்பம் சொகுசாக வாழ்ந்து வருகிறது. அமைச்சர் தொண்டைமானுக்கு தமிழ்நாட்டில் வீடு சொத்து இருப்பது அனைவரும் அறிந்தவிடயம்தான். அங்கு அவர் பெரும் செலவில் காளை மாடு வளர்த்து வருகிறார். தமிழ்நாட்டில் இருக்கும் மலையக தமிழர் குடியுரிமை அற்று 40 வருடமாக அகதிமுகாமில் வாழும்போது அவர் தனது காளைமாட்டை குளிரூட்டப்பட்ட வண்டியில் கொண்டு சென்று ஜல்லிக்கட்டில் கலந்துகொள்கிறார். குளிரூட்டப்பட்ட வண்டி வைக்கும் அளவிற்கு தன் காளை மாட்டின் மீது அக்கறை கொண்ட இந்த அமைச்சர் தனது மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை. மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்காமல் அவர்களை அகதியாக வைத்திருக்கின்றமையை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற அமைச்சர் அதன்படி அனைவருக்கும் குடியுரிமை வழங்குமாறு இந்திய அரசை கோரவில்லை. மாறாக, இந்தியாவில் இருக்கும் மலையக தமிழரை திரும்பி வரும்படி கொஞ்சம்கூட பொறுப்பின்றி கூறுகின்றார். தமிழ்நாட்டில் மலையக தமிழர் குடியுரிமை இன்றி இருப்பதை நடிகர் சத்யராஜ் மட்டுமல்ல நம் ஈழத்து தலைவர்களும் கண்டிக்க தயங்குகின்றனா

தகைசால் திராவிடர்

“தகைசால் திராவிடர்” என்றுதானே வர வேண்டும். ஏன் “தகைசால் தமிழர்” என்கின்றனர். அப்படி போட்டால்தான் தமிழரை ஏமாற்ற முடியும் என்று நினைக்கிறார்களா? #திராவிட உருட்டு

அலிபாபாவும் பதினான்கு கூமுட்டைகளும்

• அலிபாபாவும் பதினான்கு கூமுட்டைகளும் கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை. அதுபோல் இவர்களின் இந்திய விஜயம் தீர்வு எதனையும் பெற்று தரப்போவதில்லை. இவர்கள் டில்லி பார்க்க விரும்பினால், அங்கு சப்பாத்தி பூரி சாப்பிட விரும்பினால் தாராளமாக சென்று வரட்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு தீர்வுக்காக போவதாக தயவு செய்து ஏமாற்ற வேண்டாம். அதுவும் தீர்வு 13ஐ வலியுறுத்த சென்றதாக கூறுவது சுத்த அயோக்கியதனமானது. கடந்த வருடம் தீர்வு 13ஐக் கேட்டு மோடிக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை. இப்போதும்கூட மோடியையோ அல்லது வெளியுறவு அமைச்சரையோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் நிலையை அங்குள்ள அதிகாரிகளுக்கு விளக்கிறார்களாம். இங்கிருந்து சென்று விளக்கும் நிலையிலா இந்திய அதிகாரிகள் இருக்கிறார்கள்? அப்படியென்றால் இத்தனை வருடமும் சம்பந்தர் ஐயாவும் மற்றவர்களுக்கும் இந்திய அரசுக்கு என்னத்தை விளக்கியவர்கள்? 40 வருடமாக ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் வைத்திருக்கிறார்கள். அதுவும் 30 ஆயிரம் மலையக தமிழரையும் குடியுரிமை வழங்காமல் அகதியாக வைத்திருப்பதை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. தன் நாட்டில் இருக்கும் தமிழருக்கு உதவி செய்யாத இந்திய அரசு சிங்கள அரசிடமிருந்து தீர்வு பெற்று தரும் என எப்படி இவர்கள் நம்புகிறார்கள்?

மதம் தாண்டிய மனிதம்!

மதம் தாண்டிய மனிதம்!

மலேசியாவில் நடைபெற்ற

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் ஈழத் தமிழர் விக்னேஸ்வரன் ருஷாந்தன் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

யாரு பார்த்த வேலைடா இது?

யாரு பார்த்த வேலைடா இது? 😂😂

பல கலைகள கற்போம்

•பல கலைகள கற்போம் அதில் சாதனைகள் படைப்போம்! சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாகாண மட்டத்திலான சித்திர போட்டியில் கிழக்கு மகாணத்தில் முதலாம் இடத்தை செல்வி ஜோமிசா பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். குறிப்பு – படத்தில் செல்வி ஜோமிசா மற்றும் அவரது சித்திர ஆசிரியை மானிஷா.

காரல் மார்க்ஸ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில்

காரல் மார்க்ஸ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் முப்பது பேரே கலந்துகொண்டனர். ஆனால் இன்று அவரது கல்லறைக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். மன்னர்களின் கல்லறைகளுக்குகூட இந்தளவு பேர் வருவதில்லை. லண்டன் ஹைகேட் மயானத்தில் அவரது கல்லறை இருக்கிறது. 1960 களில் இந்த கல்லறைக்கு வெடி குண்டு வீசப்பட்டது. அதனால் சிறிது சேதமடைந்தது. காரல் மார்க்ஸ் தத்துவம் மட்டுமல்ல அவரது கல்லறைகூட முதலாளித்துவத்திற்கு அச்சத்தைக் கொடுக்கிறது. வாரிசுகள் யாரும் இல்லாததால் தற்போது ஒரு குழு இந்த கல்லறையை பராமரிக்கிறது. இந்த குழுவின் சார்பில் ஒரு பிரசுரம் அங்கு விநியோகிக்கப்படுகிறது. அதில் காரல் மாக்ஸ்க்கும் அவரது வீட்டு பணிப்பெண்ணிற்கும் இருந்த உறவால் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த காதலர்களுக்கு உதாரணமாக மார்க்ஸ் மற்றும் ஜென்னி கூறப்படுகிறது. அப்படியிருக்கையில் மாக்ஸ் எப்படி தன் காதல் மனைவிக்கு துரோகம் இழைத்திருப்பார்? ஆதாரமற்ற இந்த செய்தி குறித்து நான் இக் குழு உட்பட பலருடன் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அது பற்றிய விபரம் இன்னொரு பதிவில் தருகிறேன். குறிப்பு – புலவர் அவர்களின் மகன் தோழர் சோழன் நம்பியார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப் படம் பதிவு செய்துள்ளேன்.

ன்று 31 ஆண்டுகளுக்கு முன்னர்

இன்று 31 ஆண்டுகளுக்கு முன்னர் (06.12.1992) பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் ஆகும். பாபர் மசூதியை இடித்தவர்களை நிரபராதிகள் என்று இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி பாபர் மசூதி தானாக இடிந்து விழுந்த நாள் இன்று ஆகும். இது இந்திய அதிசயம்!

ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம்

ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் சாதியை ஒழிக்கும் என்று கருதிய திருமா அவர்கள், தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கார் சிந்தினைகளை முன்வைப்பது ஏன்? அல்லது, ஈழத்தில் சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கார் சிந்தனைகளை பின்பற்றும்படி புலிகளிடம் ஏன் வலியுறுத்தவில்லை?

திராவிடம் என்றாலே பித்தலாட்டம்தானே?

திராவிடம் என்றாலே பித்தலாட்டம்தானே?

எதிரியை சந்திப்பது,

எதிரியை சந்திப்பது, சந்திக்கும்போது கை குலுக்குவது தவறு இல்லை. ஆனால் எதிரியை பாராட்டுவது தவறு. மாவீரர்களை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த ஒரு வாரத்தில் 11 தமிழர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகள் யாவும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே இதனை ஜனாதிபதியிடமே நேரில் கேட்டு அவரை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, நாட்டை கட்டி எழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தை பாராட்டியிருக்கின்றனர். அத்துடன் அதற்கு தமது பங்களிப்பு வழங்கப்படும் என்றும் உலக தமிழர் பேரவையினர் தெரிவித்துள்ளனர். எதிரியை பாராட்டியதன் மூலம் இவர்கள் எதிரிக்கு சோரம் போய்விட்டனரோ என்ற சந்தேகத்தை தருகிறது. இதில் ஒருவர் சோனியா காந்தி லண்டன் வந்தபோது அவரை சந்தித்தவர். சந்தித்துவிட்டு “ அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீரைக் கண்டேன்” என்று அறிக்கை விட்டவர். புலிகளை வைத்து அமைப்பு ஆரம்பித்தவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் எதிரிகளை நாடி செல்கின்றனர். இது செத்த மாட்டில் இருந்து கழரும் உண்ணிகளை நினைவூட்டுகின்றது.

போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்

போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் 26 வருடங்கள் போராடி மிகப் பெரிய அமெரிக்க வல்லரசை விரட்டியடித்தனர் வியட்நாமிய மக்கள். இந்த வெற்றியின் ரகசியம் என்ன என்று வியட்நாம் தலைவர் ஹோசிமினிடம் கேட்ட போது, “கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களுக்கு தெரியப்படுத்தினேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றியை பெற்று தந்தார்கள்” என்றார் அவர். தமிழ் மக்களுக்கு கசப்பான உண்மையை கூறாமல் மறைத்து இனிப்பான பொய்யை கூறி ஏமாற்றுகிறார்கள் நம்மவர் சிலர். இதன் மூலம் இவர்கள் சாதிக்கப்போவது என்ன?

மக்களுடன் சேர்ந்து உண்ணுங்கள்.

மக்களுடன் சேர்ந்து உண்ணுங்கள். மக்களுடன் சேர்ந்து உறங்குங்கள். மக்களுடன் சேர்ந்து போராடுங்கள் என்றார் மாசே துங். இதன் அர்த்தம் மக்களுக்காக போராடுபவர்கள் மக்களுடன் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்பதே. அதாவது தண்ணீருக்குள் இருக்கும் மீனைப் போல் ஒரு போராளி இருக்க வேண்டும். எப்படி தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்தால் ஒரு மீன் வாழ முடியாதோ அதேபோன்று மக்களைவிட்டு அந்நியப்படுபவர்களால் மக்களுக்காக போராட முடியாது. நீருக்குள் இருக்கும் மீன் எப்போதும் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தும். அதேபோன்று மக்கள் மத்தியில் இருக்கும் போராளிகள் மக்களை அடிமைப்படுத்தும் தழைகளுக்கு எதிராக செயற்பட வேண்டும். ஒரு போராளியின் தலைமறைவு வாழ்க்கை என்பது மக்களுக்கு வெளிப்படையாகவும் அரசுக்கு ரகசியமாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்று தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் சிலரின் வாழ்க்கை மக்களுக்கு ரகசியமாகவும் அரசுக்கு வெளிப்படையாகவும் இருக்கிறது. உதாரணமாக மக்களுக்கு தலைமைதாங்கி வழி நடத்தப்போவதாக கூறும் பெண்மணி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக யூ ரியூப்பில் உரையாற்றியுள்ளார். யூ ரியூப் உட்பட இண்டர்நெட் ஊடகம் எதிலும் பேக் ஐடியில் வந்தாலும் அவர்களின் முழு விபரங்களையும் அரசுகளால் பெற முடியும். அதாவது மக்களுக்காக போராடுவதாக கூறும் இவர்கள் அரசுக்கு வெளிப்டையாகவும் மக்களுக்கு இரகசியமாகவும் இருக்கின்றனர்

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது.

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது. இந்திய அரசு உதவும் என்ற கற்பனையில் ஈழத் தமிழர் விடுதலை பெற முடியாது. இதை இனியாவது “இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும்” என்று கூறும் காசி ஆனந்தனும் “சீனா வந்து விட்டது. எனவே இந்தியா தமிழீழம் பெற்று தரும்” என்று கூறும் திரு மாஸ்டரும் உணர வேண்டும்.

ஈழம் வேறு. தமிழீழம் வேறு.

ஈழம் வேறு. தமிழீழம் வேறு. இரண்டும் ஒன்றே என்று சிலர் நினைப்பது தவறு. இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம். தமிழர் பிரிவினை கோரிய பகுதி தமிழீழம். இப்போது சிங்கள அரசும் இந்திய அரசும் ஈழம் என்ற சொல்லை முற்றாக ஒழிக்க முயலுகின்றன. ஈரோஸ் மற்றும் இபிஆர்எல்எவ் இயக்கம் கோரிய ஈழம் என்பது இவற்றைவிட வித்தியாசமானது. இது குறித்து ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபா அவர்களுடன் நடத்திய ஒரு உரையாடலை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 1982ம் ஆண்டு எமது தோழர் செல்லப்பா நாகராசா ( வாத்தி) அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். அவர் அப்போது சென்னையில் அடையாறு இந்திரா நகரில் தங்கியிருந்தார். அங்கு சில நாட்கள தங்கியிருந்தபோது லண்டனில் இருக்கும் தனது தோழர்களுடன் ரெலிபோனில் கதைப்பதற்காக நாபா வருவதுண்டு. லண்டனில் இருந்து வரும் ரெலிபோன் அழைப்பு நள்ளிரவில்தான் வரும் என்பதால் அதுவரை நாபாவிற்கு பேச்சு துணையாக நான் பேசிக் கொண்டிருப்பதுண்டு. அப்போதுதான் இந்த உரையாடல் நடைபெற்றது. நான் - EPRLF , EROSS இரண்டும் ஒரே கொள்கைதானே. அப்படியிருக்கையில் நீங்கள் எதற்காக EROSS லிருந்து பிரிந்தீர்கள்? நாபா - EROSS இன் தலைமை லண்டனில் இருக்கிறது. அதனால் நாம் பிரிந்தோம். நான் - அப்படியென்றால் EPRLF தலைமை நீங்கள் இந்தியாவில் இருப்பது சரியா? நாபா – ஆம். அது தவறுதான். விரைவில் இலங்கை சென்று அங்கிருந்து பணி செய்வேன். நான் - மற்ற இயக்கங்கள் கோரும் தமிழீழத்திற்கும் நீங்கள் கோரும் ஈழத்திற்கும் என்ன வித்தியாசம்? நாபா – மற்ற இயக்கங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளை மட்டும் கோருகின்றனர். நாம் மலையகத்தையும் சேர்த்து கோருகின்றோம். நான் - மலையக பகுதிக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடைப்பட்ட சிங்கள பகுதியையும் சேர்த்து நீங்கள் கோருவது சரியா? நாபா – அதற்காகத்தான் மலையகத்தில் பாதி பகுதியை சிங்களவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறோம். அதற்கு பதிலாக சிங்கள பகுதியான இங்கினியாக்கல பகுதிகளை நாம் எடுத்துக்கொள்கிறோம். நான். - இப்படி ஒரு மக்களின் பகுதிளை விட்டுக் கொடுக்கவும் இன்னொரு மக்களின் பகுதிகளை சேர்க்கவும் உங்களுக்கு அந்த மக்கள் அதிகாரம் தந்தனரா? அல்லது அந்த மக்களிடம் கேட்டீர்களா? நாபா – மௌனம்.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில்

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இவர்கள் டில்லி சென்று வந்தனர். இவர்கள் சென்று வந்த பின்பு இந்திய அரசு தமிழருக்கு தீர்வு எதுவும் பெற்று தரவில்லை. மாறாக மன்னாரில் தமிழர் நிலத்தை தனது இந்திய முதலாளி அம்பானிக்கு பெற்றுக் கொடுத்தது. தமிழரின் திருமலை துறைமுகத்தில் எண்ணெய்குதம் பெற்றுக்கொண்டது. இப்போது இந்த வருடம் வேறு சிலர் டில்லிக்கு சென்று வந்துள்ளனர். இம்முறையும் இந்திய அரசு தமிழருக்கு தீர்வு எதுவும் பெற்று தரப்போவதில்லை. மாறாக தமிழர் வளம் எதனை எடுத்துக்கொள்ளப்போகின்றது என்று அச்சமாக இருக்கிறது. இவர்கள் டில்லிக்கு போவது ஈழத் தமிழருக்காகவா? அல்லது இந்திய நலனுக்காகவா?

இன்று மனிதவுரிமை தினமாம்? (10.12.2023)

•இன்று மனிதவுரிமை தினமாம்? (10.12.2023) போர் முடிந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை. இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 7 வருடங்களாக போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மனிதவுரிமை தினத்திலாவது சர்வதேசம் ஈழத் தமிழரை கவனத்தில் கொள்ளுமா?

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார் பாரதியார். பாரதியார் ஒரு அற்புதமான கவிஞர். ஆனால் அவர் “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடியது குழப்பமாய் இருக்கிறது இலங்கையில் அத்தீவிற்கு சொந்தமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது பாரதியாருக்கு நன்கு தெரியும் ஏனெனில் ஒரு ஈழத் தமிழரையே தன் குருவாக பாரதியார் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர் ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக சிங்கள தீவு என ஏன் பாடினார்?

செய்தி – திருமலையில் எனது ஆதரவாளர்கள்

செய்தி – திருமலையில் எனது ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடத்தக் கோருகிறார் சம்பந்தர் ஐயா. நம்ம சிங்கத்தைச் சீண்டியவன் யாரடா? சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறைவதில்லை. அதுபோல நம்ம ஐயா வயதானாலும் தன் ஆதரவாளர்களை விட்டிடுவாரா என்ன? அது சரி, ஐயா இங்கு தன் ஆதரவாளர்கள் என்று கூறுவது தன் மகனைத்தானே? அவர் மகனைப் புறக்கணிப்பது யாரு? 😂😂

ஈழத்தில் சிங்கள மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு

ஈழத்தில் சிங்கள மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய பிரபாகரனை “பயங்கரவாதி” என்று எழுதிய மேற்கத்திய ஊடகங்கள், உக்ரைனில் ரஸ்சிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் செலன்ஸ்கியை “உக்ரைனின் உயிர்” என பாராட்டி எழுதுகின்றன. இது என்ன நியாயம்?

சரியான நிலைப்பாடு

• சரியான நிலைப்பாடு சிங்கள அரசுக்கு துணைபோகும் இந்த தமிழின விரோத புலம்பெயர் அமைப்பை புறக்கணித்த கஜந்திரகுமார் அவர்களுக்கு பாராட்டுகள். இந்த லெட்டர் பேட் புலம்பெயர் அமைப்புகளை தாயகத்தில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் விரட்டி அடிக்க வேண்டும்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

•பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! சிங்கள ஜனாதிபதி ரணிலை காப்பாற்றும் உலக தமிழர் பேரவையின் விஜயத்தின் பின்னணியில் இருப்பது சின்ன கதிர்காமரா? குறிப்பு – சின்ன கதிர்காமர் - சுமந்திரன்

ஈழத்து குடுகுடுப்பைக்காரர்!

• ஈழத்து குடுகுடுப்பைக்காரர்! சுமந்திரன் - நல்ல காலம் பிறக்குது. தமிழருக்கு நல்ல காலம் பிறக்குது அப்பாவி தமிழன் - ஏன் சேர், சம்பந்தர் ஐயா செத்திட்டாரா? சுமந்திரன் - இல்லை. லண்டனில் இருந்து நம்ம GTF சுரேன் வந்திருக்கார். அப்பாவி தமிழன்; - ஓ! இவர்தானே லண்டனில சோனியா காந்தியை சந்தித்துவிட்டு “ அன்னை சோனியாவின் கண்களில் இரக்கத்தைக் கண்டேன்” என அறிக்கை விட்டவர். சுமந்திரன் - அது அப்ப. இப்ப ரணிலை சந்தித்து அவரின் செயற் திட்டத்தை பாராட்டியிருக்கிறார். கவனிக்கவில்லையா நீங்கள்? அப்பாவி தமிழன் - 11 தமிழ் இளைஞர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்த ரணிலின் செயற்திட்டத்தை பாராட்டியிருக்கிறாரா? சுமந்திரன் - என்ன இருந்தாலும் ஜனாதிபதி ரணிலை நாம் காப்பாற்ற வேண்டும் அல்லவா. அதற்காக இமயமலைப் பிரகடனம் செய்திருக்கிறார். எனவே தமிழருக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது. அப்பாவி தமிழன் - சேர் ! நல்லாட்சி அரசிலும் தீர்வு வரும். இல்லையேல் ராஜினாமா செய்வேன் என்றீர்கள். தீர்வும் வரவில்லை. ராஜனாமாவும் செய்யவில்லை. அது சரி, அந்த ராஜினாமா கடிதம் இப்பவும் சட்டைப் பொக்கற்றுக்குள்ள இருக்குதோ சேர்? சுமந்திரன் - இப்படி கேட்டா எப்படி? நான் தமிழரசுக்கட்சி தலைவராக வேண்டாமா? அப்பாவி தமிழன் - ஓ! உங்களுக்குத்தான் எப்பவும் நல்ல காலம் சேர்.

அகதி நாய்களே, தமிழ்நாட்டு அரசியலை

“அகதி நாய்களே, தமிழ்நாட்டு அரசியலை ஏன் பேசுகின்றீர்கள்?” என ஈழத் தமிழரிடம் கேட்கும் உடன்பிறப்புகளிடம் ஒரு கேள்வி. இந்த ஈழத்தடிகள் யார் என்று தெரியுமா?

அப்துல் ரவூப்!

• அப்துல் ரவூப்! என்றும் நினைவில் கொள்வோம்! 1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள். சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது. அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது. அப்துல் ரவூப் மரணம், • ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது • தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது. • ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது. • எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது. • தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது. இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான். அதுமட்டுமன்றி சாத்வீக வழிகளில் போராடுவதால் குறிப்பாக தங்களைத் தாங்களே எரித்துக்கொள்வதால் இலங்கை இந்திய அரசுகள் மனம் இரங்கப்போவதில்லை என்பதையும் அவனது மரணம் காட்டியுள்ளது. அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது. காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது. அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது. ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள். இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள். குறிப்பு- 15.12.2023 யன்று அப்துல் ரவூப் அவர்களின் 28வது நினைவு தினம்.

இருவரும் அரசியல் வாரிசுகள்

இருவரும் அரசியல் வாரிசுகள் இருவருக்கும் ஒரே துறை அமைச்சு ஒருவரை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் இன்னொருவரை மக்கள் எப்போது தூக்கி எறிவார்கள்?

பல வேடிக்கை மனிதரைப் போலே

பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ..

பக்தி ஒரு மனநோய்

"பக்தி ஒரு மனநோய்" - அமெரிக்க விஞ்ஞானிகள்

முன்னாள் நக்சலைட் போராளி.

முன்னாள் நக்சலைட் போராளி. இன்று பழங்குடி நல்வாழ்வுதுறை அமைச்சர் என்று அரசும் அதன் ஊடகங்களும் சீதாக்காவை உதாரணம் காட்டுகின்றன. ஆனால் தேர்தல் பாதை மூலம் பழங்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதற்கு இதே சீதாக்காவை நக்சலைட்டுகள் விரைவில் உதாரணமாக காட்டுவார்கள். ஏனெனில் சீதாக்கா அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு காப்ரேட் கம்பனிகளின் நலனை காக்குமே தவிர பழங்குடிகளின் நலன் காக்காது. இதுதான் மேற்கு வங்கத்தில் நடந்தது. காப்ரேட் கம்பனிக்காக பழங்குடிகளை சுட்டுக்கொன்றது கம்யுனிஸ்ட் கட்சி அரசு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது உலக தமிழ் பேரவை அல்ல இது உலக தமிழ் பேயரவை

•இது உலக தமிழ் பேரவை அல்ல இது உலக தமிழ் பேயரவை ( பேயர் - முட்டாள்) “நீ உன் நண்பர்களை கூறு. நான் உன்னைப் பற்றி கூறுகின்றேன்” என ஒரு பழமொழி உண்டு. மகிந்த ராஜபக்சாவை சந்தித்ததன் மூலம் தாம் யார் என்பதை உலக தமிழ் பேரவையினர் தமிழ் மக்களுக்கு இனங்காட்டியுள்ளனர். மகிந்த ராஜபக்சாவை அவரது சிங்கள மக்களே தூக்கி எறிந்துவிட்டனர். அவரும் அவருடைய குடும்பமும் மக்கள் முன் வரமுடியாமல் ஒளித்து திரிகின்றனர். அத்தகைய மகிந்த ராஜபக்சாவை சந்தித்து அவரது அரசியல் மீள் வருகைக்கு உதவியுள்ளனர் இவர்கள். பரவாயில்லை. மகிந்தவை சந்தித்தபோது அவர் கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர் எங்கே என்பதையாவது கேட்டிருக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் “இவர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்” என்று ஏன் கூறினார்கள் என்று இப்போது புரிகிறதா? அது சரி இந்த இமயமலைப் பிரகடனம் மக்களுக்கானதா அல்லது தலைவர்களுக்கானதா? மக்களுகானது என்றால் மக்களுக்குதானே முதலில் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் அங்கீகாரம் பெற வேண்டும்.

கட்சி - திராவிட முன்னேற்ற கழகம்

கட்சி - திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி – திராவிட மாடல் ஆட்சி நிதி கேட்க – உலக தமிழர்களே ஏன் அதிலையும் உலக திராவிடர்களே என்று கேட்க வேண்டியதுதானே? # திராவிட உருட்டு

கரடியே காரித்துப்பிடிச்சு!

• கரடியே காரித்துப்பிடிச்சு! மாப்பிளை அவர்தான். ஆனால் சட்டை தன்னுடையது என்கிறாரா?

திருக்குறளை எழுதியது கலைஞர் கருணாநிதி

திருக்குறளை எழுதியது கலைஞர் கருணாநிதி என்று தமிழக கல்வி அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். அது பற்றியது அல்ல எனது இந்த பதிவு. லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலை உண்டு. இது லண்டனில் இருக்கும் பல தமிழருக்கு தெரியாது. நான்கூட அந்த பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சோசலிச கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோதுதான் கண்டேன். ( அப்போது எடுத்த படமே கீழே பதிவு செய்துள்ளேன்) இன்று இந்த திருவள்ளுவர் சிலைக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சென்னையில் உள்ள எனது நண்பர் ஒருவர் இந்த நிகழ்வை குறிப்பிட்டு இவ் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் உண்மையான தமிழ் உணர்வு கொண்டவர்களா அல்லது திராவிட தரப்பு ஆட்களா என கேட்டிருந்தார். ஒருவேளை திருவள்ளுவர் சிலையை அகற்றிவிட்டு அதில் கலைஞர் கருணாநிதி சிலையை வைத்துவிடுவார்களோ என் நண்பர் பயந்திட்டார் போல இருக்கு 😂 திடீரென அறிய தந்ததால் என்னால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமற் போய்டவிட்டது. யாராவது சென்றிருந்தால் அல்லது விபரம் தெரிந்தால் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர்,

தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர், ஈழத் தமிழர் சி. வை .தாமோதரம் பிள்ளை என்பதை “அகதி நாய்களே வெளியேறுங்கள்” என்று கூறும் திமுக உடன்பிறப்புகள் அறிவார்களா?

கலைஞர் கருணாநிதி ஊழல் வழக்குகளில்

கலைஞர் கருணாநிதி ஊழல் வழக்குகளில் மாட்டுப்பட்டபோது அவருக்காக பணம் எதுவும் வாங்காமல் இலவசமாக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஈழத்தமிழ் தலைவர்களில் ஒருவரான ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த விடயம் “அகதி நாய்களே வெளியேறுங்கள்” என்று எழுதும் இன்றைய திமுக உடன்பிறப்புகள் அறிவார்களா?

நான் தோற்று போகலாம்.

“நான் தோற்று போகலாம். அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல” - சே

பெரியார் - அடேய் !நான் தமிழன் இல்லடா.

பெரியார் - அடேய் !நான் தமிழன் இல்லடா. திராவிடன்டா!! (200 ரூபா) உபி - போடா சங்கிப்பயலே!! போய் பெரியாரை முழுசா படி.. 😂😂

இருவரும் தமிழகத்து தலைவர்கள்

இருவரும் தமிழகத்து தலைவர்கள் ஒருவர் திராவிடர் கழக தலைவர் பெரியார். இன்னொருவர் உலக தமிழின முன்னேற்ற கழக தலைவர் பெருஞ்சித்திரனார் ஈழத்து தலைவர் தந்தை செல்வா தமிழ்நாடு சென்று ஆதரவு கோரிய போது பெரியார் ஆதரவு வழங்கவில்லை. மறுத்துவிட்டார். ஆனால் பெருஞ்சித்திரனார் ஆதரவு வழங்கியதுடன் முதல் பெண் போராளி ஊர்மிளாவை பல நாட்கள் தன் வீட்டில் இரகசியமாக வைத்திருந்து பாதுகாத்தவர். பெருஞ்சித்திரனார் தானாக வந்து ஆதரவு வழங்கியதற்கும் ஆதரவு கேட்டும் பெரியார் மறுத்தமைக்கும் என்ன காரணமாக இருக்கும்?

ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ?

ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ? நன்றாகத்தான் இருக்கிறது. ஒருமுறை கேட்டு பாருங்களேன். கலைப்பீட மாணவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

இதுவரை பல ஈழத் தமிழர் கலந்துகொண்டனர்.

இதுவரை பல ஈழத் தமிழர் கலந்துகொண்டனர். ஆனால் ஒருமுறைகூட பரிசை வென்றதில்லை அதற்கு பல காரணங்களை கூறினார்கள். ஆனால் இம்முறை அதையெல்லாம் உடைத்து பரிசை வென்றிருக்கிறார் கில்மிஷா. பரிசு பெற்ற பலர் இன்னமும் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பின்றி இருக்கின்றனர். ஆனால் பரிசு பெற முன்னரே பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் போட்டி முடியுமுன்னரே வாய்ப்பு வழங்கியுள்ளார். இன்னொரு இசையமைப்பாளர் எப்போது போட்டி முடியும் என காத்துக்கொண்டிருப்பதாக கூறினார். இந்தியாவில் இத்தகைய ஒரு பெருமையை ஈழத் தமிழர் ஒருவர் பெறுவது அதிசயம் எனில் அதைவிட அதிசயம் அதை அவர் இத்தனை சிறிய வயதில் சாதித்திருப்பது. அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.