Sunday, December 20, 2020
தோழர் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தாரா? – தோழர் சண் (பகுதி-2)
• தோழர் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தாரா? – தோழர் சண் (பகுதி-2)
லெனினின் வாரிசு என்ற பிரச்சனையிலும் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தார் என்ற ட்ரொஸ்கியவாதிகளின் பிரச்சாரத்தில் எள்ளவும் உண்மையில்லை என்பதை நாம் தெளிவாக காணலாம்.
வரலாற்றின்படி ட்ரொஸ்கி புரட்சிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஆனால் ஸ்டாலினோ 1912ல் பிராக் மாநாட்டில் மென்ஷிவிக்குகளிடமிருந்து பிரிந்த போது போல்ஷ்விக் கட்சியில் லெனினுடன் இணை ஸ்தாபகராக இருந்தார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் ரஷ்யாவுக்குள்ளே புரட்சிகர வேலைக்கு வழிகாட்டுமுகமாக ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்தியக் கமிட்டி ரஷ்யசபை என்ற நடைமுறையான கேந்திரம் அமைக்கப்பட்டது. இது ஸ்டாலினுடைய தலைசிறந்த ஸ்தாபன திறமைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.
லெனின் பெரிதும் வெளிநாடுகளில் இருந்து இயக்கத்திற்கு தலைமை தாங்கிய போது ரஷ்யாவுக்குள்ளே தலைமறைவுக் கட்சியை கட்டியமைத்தது ஸ்டாலின்தான்.
அப்போது 1912ல் ட்ரொஸ்கி “ஆகஸ்ட் குழு” என்பதை மும்முரமாக ஒழுங்குபடுத்தினார். அவர் இதில் லெனினுக்கும் போல்ஷ்விக் கட்சிக்கும் எதிரான குழுக்களையும் போக்குகளையும் ஒன்றினைத்தார். அப்பொழுதுதான் லெனின் அவரை “யூதாஸ் ட்ரொஸ்;கி” என்று அழைத்தார்.
1917 மே 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் மத்திய கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஏடான “பிராவ்டா”வின் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
1917ம் ஆண்டு ஜீலை 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் ஆறாவது காங்கிரசில்தான் ட்ரொஸ்கியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அப்பொழுது லெனின் பின்லாந்தில் இருந்து மாநாட்டிற்கு வழிகாட்டினார்.
ஸ்டாலின்தான் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பிரதான அறிக்கையை சமர்ப்பித்தார். இதிலிருந்து அக்டோபர் புரட்சியின் போது லெனினுக்கு அடுத்தபடியான பாத்திரத்தை வகித்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. இதனாற்தான் 1922ல் துப்பாக்கிக் குண்டின் காயம் காரணமாக லெனின் செயல்பட முடியாது இருந்த நிலைமையில் கட்சியின் பொதுச் செயலாளராக லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார்.
இவற்றை மறுக்க முடியாத ட்ரொஸ்க்கியவாதிகள் இறுதியில் பற்றிக்கொள்ளும் விடயம் லெனின் மரணசாசனம். இது உண்மையில் எதிர்வர இருந்த காங்கிரசுக்கு லெனின் சொல்ல எழுதப்பட்ட கடிதமாகும். இந்த காங்கிரஸ் லெனின் மறைவின் பின் 1924ம் ஆண்டு மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற்றது.இந்தக் கடிதத்தை காங்கிரசில் வாசிக்க வேண்டும் என்பதே லெனினுடைய வேண்டுகோள்.அதன்படி ஸ்டாலினே இக் கடிதத்தை வாசித்தார்.
இக் கடிதத்தில் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ட்ரொஸ்கியும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் ட்ரொஸ்க்கியவாதிகள் கூறுவது போல் பொதுச்செயலாளர் பதவிக்கு ட்ரொஸ்கியை நியமிக்கவேண்டும் என்று அதில் கூறப்படவில்லை. இந்தக் கடிதம் வாசிக்கக் கேட்ட பின்னர்தான் காங்கிரஸ் ஸ்டாலினை பொதுச் செயலாளராக தெரிவு செய்தது. ஒரேயொரு வாக்கு ட்ரொஸ்கியின் வாக்குதான் எதிராக விழுந்தது. அவர் தனக்குத்தானே வாக்களித்தார்.
ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவும் அவர் ட்ரொஸ்கிக்கு போதிய விவாத வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ட்ரொஸ்க்கியவாதிகள் சேறு பூசுகின்றனர். இது முற்றிலும் பொய். சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் வரலாற்றில் ஸ்டாலினைப் போல் இவ்வளவு அதிகாரம் படைத்திருந்த ஒரு தலைவர் தனது எதிரிக்கு ஸ்டாலின் ட்ரொஸ்க்கிக்கு காட்டியது போன்ற பொறுமையைக் காட்டியது கிடையாது.
விவாதங்கள் போல்ஷ்விக் கட்சிக்கு உள்ளேயும் கம்யுனிச அகிலத்திற்கு உள்ளேயும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.மீண்டும் மீண்டும் ட்ரொஸ்க்கி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.
1927 அக்டோபரில் நடைபெற்ற கட்சியின் 15வது மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு உறுப்பினரினதும் நிலைப்பாட்டை அறிவதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.724000 உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய கமிட்டியின் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.4000 பேர் ஆதாவது ஒருசத வீதத்திற்கும் குறைவானோர் ட்ரொஸ்க்கிய குழுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது ட்ரொஸ்க்கிக்கு கிடைத்த இறுதி அடியாகும்.
ட்ரொஸ்க்கிக்கு வேண்டியது ஜனநாயக விவாதமும் தீர்ப்பும் என்றால் அது போதிய அளவு கிடைத்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. தனது குழுவாத நடவடிக்கைகளை கைவிடவில்லை. கட்சியின் பொறுமை சோதிக்கப்பட்டது.1927 நவம்பர் 14 திகதி மத்திய கமிட்டி ட்ரொஸ்க்கியை வெளியேற்றியது.
சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் சோவியத் யூனியனின் ஓதுக்குப்புறக் குடியரசு ஒன்றிற்கு நாடு கடத்ப்பட்டார். ஆனால் அவர் இந்த நிபந்தனையை மீறியபடியால் ஒருவருட முடிவில் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment