Saturday, January 30, 2021

வழக்கறிஞர் நடசேடன் பற்றி தோழர் சண்முகதாசன்

•வழக்கறிஞர் நடசேடன் பற்றி தோழர் சண்முகதாசன் இன்றைய சந்ததியினருக்கு வழக்கறிஞர் நடசேனை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது மகன் வழக்கறிஞர் சத்தியேந்திரா பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். வழக்கறிஞர் சத்தியேந்திரா குட்டிமணி போன்றவர்களின் வழக்கில் ஆஜராகி வாதாடியவர். திம்பு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர். இந்திய அரசு அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன் போன்றவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றியபோது இவரையும் வெளியேற்றியது. இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். தமிழ் நேஷன் (https://tamilnation.org ) இணையதளத்தை நடத்தி வருகிறார். இவரது தந்தையான வழக்கறிஞர் நடேசன் அவர்கள் 21.12.1986 யன்று மரணமடைந்தார். அப்போது தோழர் சண்முகதாசன் அவர்கள் இவர் பற்றிய இரங்கல் உரை ஒன்றை டெய்லி நியூஸ் பத்திரிகையில் எழுதியுள்ளார். தோழர் சண்முகதாசன் அவர்கள் வழக்கறிஞர் நடேசன் குறித்து எழுதிய இரங்கல் உரையை கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம். ( தமிழாக்கம் - டாக்டர் தம்பிராசா) http://tholarbalan.blogspot.com/2021/01/blog-post_73.html இந்த இரங்கல் உரை மூலம் நடேசன் குறித்தும் அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் தோழர் சண்முகதாசனுக்கு செய்த பொருளாதார உதவிகள் குறித்தும் அறிய முடிகிறது. குறிப்பு - ஆங்கில மூலத்தை கீழ்வரும் இணைப்பில் பார்க்கலாம். http://tholarbalan.blogspot.com/.../obituary-senator...

Obituary: Senator Nadesan

இரங்கலுரை: செனெட்டர் நடேசன்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020ம் ஆண்டு முடிந்து 2021 ம் ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது இந்த வருடமாவது ஒரு வழி பிறக்கும் என நம்புகிறோம். ஆனால் மேலும் மேலும் நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எமக்கு எற்படுத்துகின்றன. நாம் வீழ்வது கேவலம் அல்ல மாறாக வீழ்ந்து கிடப்பதே கேவலம். மீண்டும் எழுந்து நிற்பதையே வரலாறு பதிவு செய்யும். மீண்டும் எழுந்து நிற்போம்! இதுவே இந்த வருடத்தின் வரலாற்று கடமையாக இருக்க வேண்டும்.

இனிய பொங்கல் மற்றும்

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். உழவர் மக்களின் உன்னத நாளாம் உழைக்கும் மக்களின் உரிமை நாளாம் தமிழ் மக்களின் புத்தாண்டு நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்!

• தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்! யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி நடைபெற்ற இறுதி நிகழ்வில் 11 அப்பாவி தமிழர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டனர். இந்த 11 பேரின் கொலைக்கும் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கைக்கூலியாக செயற்பட்ட மேயர் துரையப்பாவே. இச் சம்பவம் பல தமிழ் இளைஞர்கள் துரையப்பா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். இந்நிலையில் துரையப்பாவை “துரோகி” என்று முத்திரை குத்தி அவரை இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் தமிழர்விடுதலைக் கூட்டணியினரே. ஆனால் இன்று அவர்களே துரையப்பாவை கொன்றது தவறு என்கிறார்கள். அதுமட்டுமல்ல துரையப்பாவை துரோகி என்றும் கூறக்கூடாது என்கிறார்கள். சரி பரவாயில்லை, என்னவாவது சொல்லிவிட்டு போங்கள். ஏனென்றால் இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாறும் காலம். ஆனால் தயவு செய்து 11 பேரையும் துரையப்பா கொன்றது சரி என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை தாங்கும் சக்தி தமிழனுக்கு இல்லை.

“வெங்காய” சுரேன் ராகவன்!

“வெங்காய” சுரேன் ராகவன்! யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் அப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலேதான் வசித்தும் வந்தார். ஒருநாள் அவரது மகன் குளித்துக்கொண்டிருக்கும்போது தவறி கிணற்றில் விழுந்துவிட்டான். இதைப் பார்த்த பேராசிரியருக்கு கிணற்றில் இறங்க பயம் .எனவே சயிக்கிளை எடுத்துச்சென்று பல்கலைக்கழகத்தில் விடயத்தை கூறி சிலரை அழைத்து வந்தார். நல்லவேளை. யாழ்ப்பாண கிணறுகளில் எப்போதும் தண்ணி மட்டம் முழங்கால் அளவுகூட இருப்பதில்லை என்பதால் மகன் எந்தவித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டான். இதை அறிந்த பக்கத்துவீட்டுக் கிழவி அந்த பேராசிரியரிடம் “ஏம்பா இவ்வளவு படித்திருக்கிறியே. கிணத்தடியில் இருந்துகொண்டே ஐயோ என்று கத்தி இருந்தால் யாராவது வந்து காப்பாற்றியிருப்பார்களே, அதுகூட உனக்கு தெரியவில்லையா? என்று கேட்டார். புத்திஜீவிகள் என மதிக்கப்படும் பேராசிரியர்கள் ஒரு சாதாரண நடைமுறை விடயம்கூட தெரியாத அடிமுட்டாள்கள் என்பதை கூறுவதற்கான ஒரு கிண்டல் கதையாகவே இதனை நான் இத்தனை நாளும் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது சுரேன் ராகவன் என்ற புத்திஜீவியின் கருத்துக்களை கேட்கும்போது இந்தக் கதை உண்மையாக நடந்திருக்கும் என்றே நம்ப தோன்றுகிறது. சுரேன் ராகவன் ஒரு புத்திஜீவி என்பதாலேயே கடந்த ஆட்சியில் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் அவரை வடமாகாண ஆளுநராக அழைத்து வந்தார்கள். ஆனால் இப்போது அவர் சிங்கள கட்சி ஒன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அதனால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழ் இனத்திற்கு விரோதமாக கருத்து கூறுகிறார். கனடாவில் இனப்படுகொலை பற்றிய சட்டம் இயற்றப்படுவதால் இலங்கையில் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று தேவையானால் அவர் கூறியிருக்கலாம். ஆனால் அவரோ இன்னும் ஒருபடி மேலாக சென்று இலங்கையில் இனப்படுகொலை நடந்தமைக்கு ஆதாரம் இல்லை என்கிறார். இனி இனப்படுகொலையே நடக்கவில்லை என்றும் அவர் கூறுவார். பாவம். அவருக்கும் ரொம்ப பசிக்க ஆரம்பித்திருக்குபோல?

தமிழ்நாடும் தமிழீழமும் !!

•தமிழ்நாடும் தமிழீழமும் !! 52 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் பெற்ற நாள் இன்று. இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. ஆனால் இதில் தமிழ்நாடு தவிர வேறுஎதுவும் தமக்கு “நாடு” என்று பெயர் கொண்டிருக்கவில்லை. வைக்கவும் இல்லை. தமிழர் வாழும் பிரதேசம் “தமிழ்நாடு” என்று சங்க இலக்கியத்திலேயே குறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு என்னும் பெயர் தமிழர் உணர்வுகளுடன் நீண்டகாலமாக கலந்து இருப்பதால்தான் அப் பெயரை வைக்குமாறு கோரி சங்கரலிங்கனார் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். தனிநாடு கேட்டு போராடிய அறிஞர் அண்ணா அந்த போராட்டத்தை கைவிட்டிருந்தாலும் “தமிழ்நாடு” என்று பெயரையாவது சூட்டினார். அதுமட்டுமல்ல தனிநாட்டுக்கான போராட்டத்தை கைவிட்டபோது “ தனிநாட்டுக்கான காரணங்கள் யாவும் அப்படியே இருக்கின்றன” என்றார். ஆனால் நமது ஈழத்தலைவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் கிடைத்தபோது அதற்கு “தமிழீழம்” என்று பெயர் வைக்கவும் முயற்சி செய்யவில்லை. 2009க்கு பின்னர் தமிழீழத்தை கைவிட்டபோதும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பதையும் கூற விரும்பவில்லை. இவர்களிடம் அறிஞர் அண்ணாவிடம் இருந்த அரசியல் நேர்மைகூட இருக்கவில்லை. இவர்கள் கட்சி ஆரம்பிக்கும்போதே தமிழில் தமிழரசுக்கட்சி என்றும் ஆங்கிலத்தில் சமஷ்டிக்கட்சி (பெடரல் பார்ட்டி) என்றும் பெயர் வைத்து ஏமாற்றியவர்களாச்சே! இன்னும் வேடிக்கை என்னவெனில் இப்போது தமிழீழம் கேட்கும் தைரியம் இருக்கா என்று இவர்களின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை பார்த்து நக்கலாக கேட்கிறார். எல்லாம் நேரம்தான்!

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டமைக்கு இலங்கை அரசே காரணம் என்று இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த கரடி குடித்துவிட்டு உளறுவதை பார்க்கும்போது உடைக்கப்பட்டமைக்கு ஒருவேளை இந்திய பாஜக அரசுதான் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஒரு சினிமாப் படத்தில் ரகுவரன் கூறுவார் “ அவர்களே குண்டு வைப்பார்களாம். அப்புறம் அவர்களே அதை எடுப்பார்களாம்” அதுபோல் யாழ் இந்திய தூதரே இடிக்கவும் கூறினார். அப்புறம் அவரே மீள கட்டவும் கூறியிருக்கிறாரோ என நினைக்க தோன்றுகிறது. 38 வருடமாக இந்தியாவில் அகதியாக இருக்கும் ஈழத்தமிழருக்கு குடியுரிமை வழங்க அக்கறை கொள்ளாத பாஜக அரசு பல வருடங்களாக திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ தமிழ் அகதிகளை விடுதலை செய்ய அக்கறை எடுக்காத பாஜக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டமைக்கு அக்கறை எடுத்தது என்று கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது?

எதைச் சொல்லி இந்திய ராணுவத்தை வாழ்த்துவது?

எதைச் சொல்லி இந்திய ராணுவத்தை வாழ்த்துவது? இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமலஹாசன் அவர்கள் உழவர்தின மற்றும் ராணுவ தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நல்லது. ஆனால் அந்த உழவர்கள் கடந்த இரு மாதங்களாக டில்லியில் போராட்டம் நடத்துவதற்கு தமது ஆதரவை ஏன் கமலஹாசன் தெரிவிக்க முடியவில்லை? பரவாயில்லை. ஆனால் இந்திய ராணுவத்தை தானும் வாழ்த்தியதுடன் அனைவரும் வாழ்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய ராணுவத்தை வாழ்த்துவதில் எமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் என்ன சொல்லி வாழ்த்துவது? அமைதிப்படையாக சென்று ஈழத் தமிழர்களை கொன்றதை சொல்லி வாழ்த்துவதா? அல்லது, காஸ்மீரில் அந்த மக்களை சித்திரவதை செய்து கொல்வதை கூறி வாழ்த்துவதா? அல்லது, மணிப்பூரில் இருந்து ராணுவம் வெளியேறவேண்டும் என பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தியதைக்கூறி வாழ்த்துவதா? அல்லது, சதீஸ்கரில் மலைவாழ் பெண்களை மாவோயிஸ்டுகள் என்றுகூறி பாலியல் வல்லறவு செய்து கொல்வதை சொல்லி வாழ்த்துவதா? இவை எல்லாம் இந்திய ராணுவத்தின் பெருமைகள் என கமல்ஹாசன் கருதுவாரானால் அவர் ஏன் தன் பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்பக்கூடாது? ஏன் எப்பவும் ஏழைகளின் பிள்ளைகள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும்? கொஞ்ச நாளைக்கு இந்த நடிகர்கள், முதலாளிகள், அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக தியாகம் செய்யலாமே? இதில் கொடுமை என்னவென்றால் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரி என்பவர் ராணுவத்தை எல்லைச்சாமிகள் என்று கூறியிருக்கிறார். அவருடைய மனைவி ஒரு ஈழத் தமிழச்சி. அவர் தன் மனைவியிடம் கேட்டாலே இந்திய ராணுவம் எல்லைச் சாமியா அல்லது பொல்லாத ஆசாமிகளா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நான் - என்ன நாயோடு போயிட்டிருக்கே?

நான் - என்ன நாயோடு போயிட்டிருக்கே? அமைச்சர் தொண்டைமான் - நல்லாய் பாரு தம்பி. நான் மாட்டோடு போயிட்டுக்கேன். நான் - இல்லை. நான் மாட்டுக்கிட்டே கேட்டேன் அமைச்சர் தொண்டைமான் - ?????? குறிப்பு – அமைச்சர் தொண்டைமானை நாய் என்று கேவலப்படுத்திவிட்டதாக யாரும் கோபிக்க வேண்டாம். இது வெறும் பகிடி மட்டுமே. சரி. இனி சீரியஸ்யாய் விடயத்திற்கு வருவோம். நேற்று தமிழ்நாட்டில் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் தொண்டைமானின் 5 காளை மாடுகள் கலந்துகொண்டதாக அறிய வருகிறது. இங்கு அவரின் மாடுகள் கலந்துகொண்டது ஆச்சரியம் இல்லை. மாறாக அவை குளிரூட்டப்பட்ட (ஏசி) கரவன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி தன் மாடுகளை அடக்குபவர்களுக்கு விலையுயர்ந்த மோட்டார் சயிக்கிள் ஒன்றும் பரிசாக அறிவித்திருக்கிறார். பாவம். அமைச்சருக்கு வோட்டுப் போட்ட மக்களோ தங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று தருவார் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். சம்பள உயர்வு பெற்று தராவிட்டாலும் பரவாயில்லை, குளவிக்கடியில் வருடா வருடம் அந்த மக்கள் இறக்கிறார்கள். அதற்காவது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறார்கள். ஆனால் மாட்டுக்கு இரக்கப்பட்டு ஏசி வாகனம் கொடுத்திருக்கும் அமைச்சர் தனக்கு வோட்டுப் போட்ட மக்கள் மீது இரங்க மறுக்கிறார். என்னே கொடுமை இது?

ஆரிக்கு எமது வாழ்த்துகள்!

ஆரிக்கு எமது வாழ்த்துகள்! எல்லோரும் திருமணம் செய்தால் எங்கேயாவது ஒரு சுற்றுலா இடத்திற்கு மனைவியை அழைத்துச் செல்வார்கள். ஆனால் ஆரி அவர்கள் 25 வருடங்களாக தம் உறவுகளை சந்திக்க முடியாமல் இருந்த மனைவியை கிளிநொச்சிக்கு அழைத்து சென்று சந்திக்க வைத்தார். சிறந்த தமிழ் இன உணர்வாளரான ஆரி அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆரியை வெற்றியாளராக அறிவிக்க மாட்டார்கள் என்ற சந்தேகம் கடைசி நாள்வரை இருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடந்துவிடாமல் அமோக ஆதரவை வழங்கி ஆரிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர்கள் தமிழ் மக்களே. ஆரி வென்ற செய்தியைவிட தமிழ்நாட்டில் ஒரு தமிழ் இன உணர்வாளர் வெற்றி பெறும் சூழ்நிலையை தமிழ் மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதே மகிழ்சியான செய்தியாக இருக்கிறது.

ஒருபுறம் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால்

ஒருபுறம் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடிக்கிறார்கள் மறுபுறம் முல்லைத்தீவில் இந்துக்கடவுள் சின்னங்களை அகற்றிவிட்டு புத்தர் சிலையை நிறுவி அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். தமிழ் மக்களால் ஒருநாள்கூட நிம்மதியாக காலை நீட்டி உறங்க முடியவில்லை. கூனிக்குறுகியே வாழ வேண்டியிருக்கிறது. தமிழருக்கு தீர்வு தரப்படும் என்று சொல்லி சொல்லிக்கொண்டே மிச்சமிருக்கும் கட்டின கோவணத்தையும் உருவுகிறார்கள். பௌத்த பேரினவாதம் குறித்து இந்திய அரசுக்கும் அக்கறை இல்லை. இந்திய உளவுப்படையால் அனுப்பிவைக்கப்பட்ட சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்திற்கும் அக்கறை இல்லை. தமக்கு உதவ யாரும் இல்லை என்பதை மட்டுமன்றி தாமே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் தமிழ் மக்கள் உணர வேண்டிய நேரம் இது.

1983ல் நடைபெற்றது,

•1983ல் நடைபெற்றது, இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையா? அல்லது, புலிகளின் தாக்குதலால் ஏற்பட்ட இனக்கலவரமா? புலிகள் 13 ராணுவத்தினரை கொன்றமையினால்தான் 1983ல் இனக்கலவரம் ஏற்பட்டதாக நம்மில் சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இனக்கலவரம் ஏற்பட்டு அதன்மூலம் சிறையில் குட்டிமணி கொல்லப்பட வேண்டும் என்பதற்காக பிரபாகரன் நடத்திய தாக்குதல் என்றும்கூட கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நடந்தது இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை என 1983லேயே தோழர் சண்முகதாசன் கூறியிருக்கிறார். தோழர் சண்முகதாசன் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் மட்டுமன்றி தமிழ் சிங்கள முஸ்லிம் என மூவின மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவர். அதுமட்டுமன்றி அவர் ஒரு மதிப்பு மிக்க சர்வதே கம்யுனிஸ்ட் தலைவரும்கூட. அவர் எழுதிய கருத்துகளை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். ( தமிழ் மொழிபெயர்ப்பு – டாக்டர் தம்பிராசா) http://tholarbalan.blogspot.com/2021/01/blog-post_18.html ஒரு பாதிக்கப்பட்ட சாட்சியின் நேரடி அனுபவங்களாக தோழர் சண் அவர்களின் கருத்துக்கள் இருக்கின்றன. நான் அறிந்தவரையில் வேறு எந்தவொரு தலைவரும் இந்தளவு நேர்த்தியாக இதுவரை 1983 இனப்படுகொலையை எழுதவில்லை. சுமந்திரன் சுரேன் ராகவன் போன்றவர்கள் தாமும் 1983ல் பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இவர்கள் தமது அனுபவங்களை எழுதி சாட்சியாக முன்வைத்திருக்கலாம். ஆனால் இவர்கள் எழுதாதது மட்டுமன்றி இனப்படுகொலைக்கு ஆதாரமில்லை என்றும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பு – இலங்கை இந்திய அரசு விசுவாசிகளுக்கு ஒரு தயவான வேண்டுகோள்! இதைப் படித்துவிட்டு பழக்கதோஷத்தில் தோழர் சண்முகதாசன் புலிவால் பிடிக்கிறார் என்றோ அல்லது புலிகளின் பெருந்தொகையான பணம் அவரிடம் இருக்கிறது, அதனால்தான் இப்படி கூறுகின்றார் என்றோ எழுதிவிடாதீர்கள். ஏனெனில் அவர் 1992லேயே இறந்துவிட்டார். கீழ்வரும் இணைப்பில் தோழர் சண் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய பதிவை வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.com/.../black-july-1983...

யாழ்ப்பாணத்தில் கொரோனோவை பரப்பியவர்

யாழ்ப்பாணத்தில் கொரோனோவை பரப்பியவர் என சர்ச்சைக்குள்ளான சுவிஸ் போதகர் மரணமடைந்துள்ளார். அவர் நம்பிய ஆண்டவர் அவரை ஏன் காப்பாற்றவில்லை என என்னால் கேட்க முடியும். அவ்வாறு கேட்டால் “ அவரை இத்தனை நாள் காப்பாற்றியதே அந்த ஆண்டவர்தான்” என்று அவரது விசுவாசிகள் பதில் தரக்கூடும். “அப்படியென்றால் இப்போது ஏன் அந்த ஆண்டவர் கைவிட்டார்” என பதிலுக்கு நான் கேட்க முடியும். அதற்கு “ இத்தனைநாள் செய்த சேவை போதும் என்று ஆண்டவர் தன்னிடம் அழைத்துக்கொண்டார்” என்று விசுவாசிகள் பதில் சொல்லக்கூடும். இதற்குமேல் என்னால் உரையாட முடியாது. ஏனெனில் அவர் ஆண்டவருடன் இருக்கிறாரா என ஆராயும் கருவிகள் எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் அவர் ஆண்டவருடன் இருக்கிறார் என்பதை இந்த விசுவாசிகளாலும் நிரூபிக்க முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். ஏனெனில் இது அவர்களின் வெறும் (மூட)நம்பிக்கை மட்டுமே.

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா?

•பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா? “தன் மகன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று 30 வருடமாக ஒரு தாய் தவமிருக்கிறார். அந்த தாய் அற்புதமானவர்” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் கூறினார். அவர் பேரறிவாளன் விடுதலை குறித்து பேச வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. அவ்வாறு பேசுவதால் அவருக்கும் பெரிதாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. இருப்பினும் அவர் தனக்கு கிடைத்த அந்த மிகப்பெரிய மேடையில் பேரறிவாளன் விடுதலை குறித்து கூறிய அந்த வரிகளை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. நாளை உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை இடம்பெறவுள்ளது. உச்சநீதிமன்றமாவது இந்த எழுவர் விடுதலைக்கு வழி சமைக்குமா என்பதே இப்போது உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

மிழனுக்கு மூளை தலையில் இல்லை,

•தமிழனுக்கு மூளை தலையில் இல்லை, முழங்காலில் இருப்பதாக நினைக்கும் இந்திய அரசு விசுவாசிகள்! இந்தியாவுக்கு சொந்தாமான அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஊடுருவி ஒரு கிராமத்தையே புதிதாக நிர்மாணித்துள்ளார்கள். ஒரு கிராமத்தையே புதிதாக கட்டும்வரை இந்திய பிரதமர் மோடி என்ன பண்ணிக் கொண்டிருந்தார் என்று எதிர்க்கட்சிகள் வறுத்தெடுக்கின்றனர். சரி. இது அவர்கள் பிரச்சனை. நாம் எமது விடயத்திற்கு வருவோம். இது குறித்து எமது இந்திய அரசு விசுவாசிகளின் கருத்து என்ன? இங்கு எனது கேள்வி என்னவென்றால் தனது பிரதேசத்தில் சீனா ஊடுருவி கிராமம் கட்டியதையே கண்டுக்காத இந்திய அரசு இலங்கையில் சீனா ஊடுருவிட்டது என்று எமக்கு தமிழீழம் பெற்று தரும் என்று எப்படி நம்புவது? இதுகூடப் பரவாயில்லை. தமிழக தேர்தலுக்கு முன்னர் பிரதமர் மோடி கச்சதீவை இலங்கையிடமிருந்து பெறப்போகிறாராம். எனவே மோடியின் பாஜக வை ஆதரியுங்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்கிறார். இவர்கள் எல்லாம் தமிழனுக்கு மூளை முழங்காலில் இருப்பதாக நினைக்கின்றனர் போலும். அதனால்தான் தாங்கள் என்ன சொன்னாலும் தமிழர்கள் நம்புவார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் இந்திய அரசு எது சொன்னாலும் நம்புவதற்கு இது 1983 அல்ல. இது 2021.

மாஸ்டர் பட விமர்சனம்

• மாஸ்டர் பட விமர்சனம் தயவு செய்து தியேட்டரில் படம் பார்க்கும்போது சத்தம் போடாமல் பாருங்க. நெட்ல பார்க்கும்போது ஒரே விசில் சத்தமாக இருக்கு. 🙂 🙂 குறிப்பு - இது விஜய் படத்தில் விஜய் சேதுபதி நடித்தாக தெரியவில்லை. மாறாக விஜய் சேதுபதி படத்தில் விஜய் நடித்தாக தோன்றுகிறது.

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம்

•மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர் . இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924ம் ஆண்டு ஜனவரி 21ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப்பாளங்களால் மூடப்பட்டிருந்தன. சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும்.ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது.

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறிய பெண் ஒருவரின் மகள் இன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகியுள்ளார். இதுகுறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமையும் மகிழ்வும் அடைவதைக் காண முடிகிறது. ஆனால் இதே இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் 38 வருடமாக ஈழத் தமிழர் அகதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது. அமெரிக்கா இந்தியருக்கு உரிமை உள்ள மண் இல்லை. ஆனாலும் அமெரிக்கா இந்தியரை வரவேற்று ஒரு துணை ஜனாதிபதியாக்கியுள்ளது. ஆனால் ஈழத் தமிழர் தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தங்களையும் வாழ வைக்கும் என்று நம்பியே ஈழத் தமிழர் சென்றனர். வாழ வைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் சிறப்புமுகாம் என்னும் கொடுஞ்சிறையில் அல்லவா அடைத்து வைக்கிறார்கள். பல வருடங்கள் அடைபட்டுக்கிடக்கும் அந்த அகதிகள் தம்மை விடுதலை செய்யும்படி உண்ணாவிரதம் இருந்தும்கூட இந்திய அரசு இரங்க மறுக்கிறது. இந்தியாவில் ஈழ அகதி ஒரு இந்து அகதியாக இருந்தும்கூட இந்திய அரசு குடியுரிமை வழங்க மறுக்கிறது. சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மறுக்கிறது. உயர் கல்வி கற்ககூட அனுமதிக்க மறுக்கிறது. வேலை வாய்ப்பு வழங்கவும் மறுக்கிறது. இந்தியாவில் ஈழ அகதிக்கு இந்த நிலை இருக்கும்போது இந்திய வம்சாவழியினர் ஒருவர் அமெரிக்காவில் துணை ஜனாதிபதியானது குறித்து உணர்வுள்ள எந்த ஒரு இந்தியனும் பெருமை கொள்ளமாட்டான். மாறாக வெட்கி தலை குனிவான்.

கனடாவில் தமிழருக்கு நினைவு சின்னம்!

•கனடாவில் தமிழருக்கு நினைவு சின்னம்! யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்ட செய்தி அறிந்த கனடா பிரெம்டன் நகரசபை உறுப்பினர் ஒருவர் கனடாவில் தமிழருக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்துள்ளார். 3ம் வட்டார உறுப்பினரான Martin Madeiros என்பவர் கொண்டுவந்த அத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த அந்த உறுப்பினர் தமிழ் மக்களின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர். தமக்காக மாண்டவர்களின் நினைவு சின்னம் என்பது தமிழருக்கு வெறும் சீமெந்தும் கற்களும் அல்ல. மாறாக உயிருடனும் உணர்வுடனும் கலந்தது. இது கனடா நகரசபை உறுப்பினரான Martin Madeirosக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் முட்டாள்பயல் கோத்தபாயாவுக்கும் அவரது கைத்தடி யாழ் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்றும் மட்டும் நன்கு தெரிகிறது. அதாவது கோத்தபாயாவின் ஆட்சி முடிவதற்குள் தமிழ் மக்களுக்கு ஒரு வழி நிச்சயம் பிறந்துவிடும்.

1434 நாளாக தொடரும் போராட்டம்!

•1434 நாளாக தொடரும் போராட்டம்! காணாமல் போதல் கொடுமை; என்றால் அதைவிட கொடுமையானது அவர்களை தேடும் உறவுகள் எந்த முடிவும் அறியாமல் ஒவ்வொருவராக செத்துக் கொண்டிருப்பது. சுமார் நான்கு வருடங்களாக தம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. ஆயுதம் ஏந்திப் போராடுவது தவறு, அகிம்சை வழியில் போராடவேண்டும் என்று போதிப்பவர்கள் இந்த உறவுகள் நான்கு வருடமாக அகிம்சை வழியில் போராடியும் எந்த தீர்வும் பெறாதது பற்றி என்ன கூறப்போகிறார்கள்? அவர்கள் என்ன போரில் மரணமடைந்தவர்களையா கேட்கிறார்கள். இலங்கை அரசை நம்பி ராணுவத்தின் கையில் தாம் ஒப்படைத்த தம் உறவுகள் எங்கேயென்றுதானே கேட்கிறார்கள். சொல்லித் தொலையுங்களேன்டா. குறிப்பு - அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது அதை தட்டிக் கழிக்க முடியாது.

பேரறிவாளன் விடுதலை ?

•பேரறிவாளன் விடுதலை ? 3 அல்லது 4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று இதுவரை வாதாடி வந்த மத்திய அரசு தற்போது ஆளுநர் முடிவெடுப்பார் என கூறியுள்ளது திடீர்த் திருப்பமாக அமைந்துள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவித்து ஆளுநர் முடிவெடுப்பாரா? அல்லது தமிழக அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்புவாரா? என்பது இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும். இப்போது தேர்தல் காலம் என்பதால் ஆளுநர் ஒருவேளை மனுவை தீருப்பி அனுப்பினாலும் உலகத் தமிழர்களின் விருப்பத்திற்கு அமைய தமிழக அரசு இந்த எழுவரை விடுதலை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விடை இன்னும் 3 நாட்களில் தெரியும்.

சிங்கள கடற்படையால் நான்கு தமிழக மீனவர் படுகொலை!

•சிங்கள கடற்படையால் நான்கு தமிழக மீனவர் படுகொலை! இந்தியாவின் எதிரி நாடு என்று கருதப்படும் பாகிஸ்தான்கூட இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. ஆனால் நட்பு நாடு என்று கூறப்படும் இலங்கை அரசானது இதுவரை 600 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்றுள்ளது. ஏனெனில் கொல்லப்படுபவர்கள் இந்திய மீனவராக இந்திய அரசு கருதவில்லை. மாறாக தமிழக மீனவராகவே கருதுகிறது. அதனால்தான் தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படைக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் போர்க்கப்பல் இலவசமாக வழங்கி உதவி செய்கிறது. தன்னுடைய நாட்டு மீனவனைக் கொல்லும் இன்னொரு நாட்டு படைக்கு பயிற்சி, ஆயுதம், நிதி உதவி வழங்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. முன்பு புலிகள் இருக்கும்போது புலிகள் என நினைத்து தவறுதலாக சிங்கள கடற்படை சுட்டுவிட்டது என்று நியாயம் சொன்னார்கள். இப்போது புலிகளும் இல்லை. போரும் இல்லை. அப்புறம் மீனவர்களை கொன்றமைக்கு என்ன நியாயம் சொல்லப் போகிறார்கள்? தமிழகத்தில் சிங்கள தூதுவர் சென்னையில் இருக்கிறார். சிங்கள புத்தபிக்கு இருக்கிறார். பல சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பல சிங்களவர் திருப்பூர் உட்பட பல இடங்களில் வேலை செய்கின்றனர். வெளிநாடுகளுக்கு செல்வதற்குகூட சிங்களவர்கள் சென்னை விமான நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். அப்படியிருக்க என்ன தைரியத்தில் சிங்கள கடற்படை தமிழக மீனவனைக் கொல்கிறது? ஏனெனில் தமிழக தலைவர்கள் கோமாளிகள். அவர்கள்; தம்மீது ஒரு கல் எறியக்கூட தைரியம் அற்றவர்கள் என சிங்கள அரசு நினைக்கிறது. குறிப்பு - சிங்கள கடற்படை நாலு தமிழ் மீனவர்களை பிடித்து முழ்கடித்து கொல்லும்வரை இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருந்தது?

4ம் திகதி முதல் மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!

•24ம் திகதி முதல் மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்! சிங்கள கடற்படையினால் நாலு மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறுகோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 600 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து இந்திய அரசு மட்டுமன்றி தமிழக அரசுகூட அக்கறை இன்றி இருக்கிறது. ஏனெனில் தமிழக மீனவர்கள் வெற்றியை தீர்மானிக்கும் தேர்தல் தொகுதிகள் குறைவாக இருப்பதும் அதனால் அவர்கள் அரசியல் பலம் இன்றி இருப்பதுமே காரணமாகும். இப்போதுகூட வெறும் நாலு கிராம மக்களே போராட்டம் நடத்துகின்றனர். இதுவே நாலு பார்ப்பணர் கொல்லப்ட்டிருந்தால் பிரதமர் மோடியின் நெஞ்சு 56 இஞ்ச் விரிந்திருக்கும் நாலு வன்னியரோ அல்லது தேவரோ கொல்லப்பட்டிருந்தால் தமிழ்நாடே பற்றி எரிந்திருக்கும். (1) மீனவர்கள் எல்லை தாண்டி வருவதால்தானே சிங்களபடை கொல்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். எல்லை தாண்டி வருபவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் மீனவர்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. எனவே அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டுமேயொழிய கொலை செய்யக்கூடாது. (2) போதைப் பொருள் கடத்தகிறார்கள். எனவே அவர்களை கொல்வது என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள். போதைப் பொருள் கடத்தி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைக்கூட சாகடிக்கக்கூடாது என்று தற்போது இலங்கை நீதிமன்த்தில் அரசு வாதாடுகிறது. அப்படியிருக்கும்போது எந்த விசாரணையும் இன்றி மீனவனை போதைப்பொருள் கடத்தியதாக கொல்வது எப்படி நியாயமாகும்? (3) ஈழத் தமிழ் மீனவர்களின் நலனுக்காகத்தானே சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை சுடுகிறது என்று சில ஈழத் தமிழர்கள் கூறுகிறர்ககள். முல்லத்தீவு திருகோணமலை போன்ற ஈழத் தமிழர் இடங்களில் சிங்கள மீனவர்கள் வந்து சிங்கள ராணுவத்தின் உதவியுடன் மீன் பிடிக்கிறார்கள். முதலில் இந்த சிங்கள மீனவர்களை சிங்கள கடற்படை விரட்டிவிட்டு அப்புறம் தமிழக மீனவர்களை விரட்டினால் நம்பலாம். (4) அப்படியென்றால் இதற்கு என்ன தீர்வு? தமிழக மீனவர்களும் ஈழத் தமிழ் மீனவர்களும் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலமே இப் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு மட்டுமன்றி டி.ஆர்.பாலு போன்ற பெரும் படகு முதலாகளும் தடையாக இருக்கிறார்கள்.

யாழ் இந்திய தூதரின் சூழ்ச்சி பலிக்குமா?

• யாழ் இந்திய தூதரின் சூழ்ச்சி பலிக்குமா? நாலு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டமையால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதர் குடியரசுதின விழாவை ரத்துச் செய்துள்ளார். மேலோட்டமாக பார்க்கும்போது தமிழரான யாழ் இந்திய தூதர் தமிழக மீனவன் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இதனை செய்திருப்பதாக தோன்றும். ஆனால் யாழ் இந்திய தூதுவர் தன் சூழ்ச்சிகளை ஆரம்பித்தவிட்டார் என்றே தோன்றுகிறது. யாழ் குடாநாட்டில் உள்ள மீனவ சங்கங்களை தமிழக மீனவருக்கு எதிராக கதவடைப்பு போராட்டம் நடத்தும்படி தூண்டிவிடுகிறார். கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் உடல்கள் யாழ் மருத்தவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. அவை இன்னும் கு டும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் மனிதாபிமானம் இன்றி தமிழக மீனவர்களுக்கு எதிராக யாழ் இந்திய தூதர் சூழ்ச்சிப்படி ஈழ தமிழ் மீனவ சங்கம் ஒன்று கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 2009 ற்கு பிறகு தமிழக மற்றும் ஈழத் தமிழர்களிடையே ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இதனை குழப்புவதற்காகவே யாழ் இந்திய தூதர் சூழ்ச்சி செய்கிறார். இதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் பலியாகக்கூடாது.

தமிழன் தனது நிலத்தில்

தமிழன் தனது நிலத்தில் தனது கடவுளை வணங்கியது குற்றம் என்று விஜயனுடன் படகில் வந்த கும்பல் கைது செய்து சிறையில் அடைக்கிறது. தமிழனுக்கும் அவன் கடவுளுக்கும் வந்த நிலை. போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும்

எடப்பாடி உண்மையில் தமிழர்தானா?

எடப்பாடி உண்மையில் தமிழர்தானா? எடப்பாடி பழனிச்சாமி தமிழர் என்கின்றார்கள். தமிழக முதலமைச்சரான அவரால் நடந்தது கொலை என்றுகூட சொல்ல முடியவில்லையே. அது ஏன்? நாலு மீனவர்களும் சிங்கள கடற்படையால் எரித்துக் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எடப்பாடி நடந்தது விபத்து என்கிறார். அது ஏன்? கொலைக்கும் விபத்திற்கும்கூட வித்தியாசம் தெரியாதவரா தமிழக முதலமைச்சர் எடப்பாடி? இறந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபா தருவதாக அறிவித்துள்ளார். தமிழக மீனவனின் உயிர் பெறுமதி பத்து லட்சம் ரூபா மட்டும்தானா? நாளைக்கு எடப்பாடியை கொன்றுவிட்டு அவர் குடும்பத்திற்கு பத்து லட்சம் தருவதாக கூறினால் அதை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா? சிங்கள கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றுகூட ஏன் எடப்பாடியால் கோர முடியவில்லை? இனி இப்படி ஒரு கொலை நடக்கக்கூடாது என்பதற்காவது இம்முறை நடவடிக்கை எடுக்கும்படி எடப்பாடி கோரலாம்தானே? இதுவே ஒரு மலையாளியோ அல்லது வங்காளியோ கொல்லப்பட்டிருந்தால் அவர்களின் முதலமைச்சர் இப்படியா நடந்து கொள்வார்? சோனியா காந்தி தடுத்தும் ஒரு இத்தாலி கப்பல் கப்டனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியவர் அல்லவா கேரள முதலமைச்சர். ஒரு மலயாளி முதலமைச்சருக்கு இருக்கும் தைரியம்கூட தமிழக முதலமைச்சருக்கு இல்லையே?

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்! இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்கிறார்கள். இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் உள்ளது? •மணிப்பூரில் பெண்களை கற்பழித்து தங்களுக்கு ஆண்மை உள்ளதாக நிரூபிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு. •காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொல்வதற்கு சுதந்திரம் உண்டு. •சதீஸ்கரில் ஆதிவாசிகளை நக்சலைட்டு என்று முத்திரை குத்தி கொல்வதற்கு இந்திய பொலிசிற்கு சுதந்திரம் உண்டு •கோடிக்கணக்கான ஊழல் செய்வதற்கு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சுதந்திரம் உண்டு. •2ஜி யில் ஊழல் செய்ய கனிமொழிக்கு சுதந்திரம் உண்டு. ரபோல் விமானத்தில் ஊழல் செய்ய மோடிக்கு சுதந்திரம் உண்டு. •கூலிப்படையை ஏவி கொலை செய்ய சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அது மட்டுமல்ல நீதியை விலை கொடுத்து வாங்கவும் அவருக்கு சுதந்திரம் உண்டு. •பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனையும் கொலை செய்த சங்கராச்சாரிக்கு விடுதலையும் வழங்க இந்திய நீதித்துறைக்கு சுதந்திரம் உண்டு. •நடிகர் சஞ்சய்தத்திற்கு விடுதலை அளிக்கவும் ஏழு தமிழரை விடுதலை செய்யாமலும் இருக்க ஆளுநருக்கு சுதந்திரம் உண்டு. •இலங்கையில் 40 ஆயிரம் மக்களைக் கொல்ல இலங்கை அரசுக்கு உதவ இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. அதுமட்டுமல்ல தமிழக மீனவனைக் கொல்ல இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவும் இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. •விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்க பல்லாயிரம் கோடி ரூபாவை கடன் வாங்கிவிட்டு தப்பி ஓட முதலாளிகளுக்கு சுதந்திரம் உண்டு. இப்படி பல சுதந்திரம் இந்தியாவில் உண்டு. நீங்கள் எந்த சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கின்றீர்கள்?

மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம்!

•மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம்! ஒருபுறம் இந்திய அரசு குடியரசுதினவிழா கொண்டாடுகிறது. மறுபுறத்தில் தமிழ் மக்கள் தமது மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூருகின்றனர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நம்பிக்கையுடன் பங்கெடுத்தவர்கள் தமிழ் மக்கள். ஆனால் சுதந்திரம் பெற்றபின் அமைந்த இந்திய அரசோ தமிழ் மக்களையும் அவர்களின் தமிழ் மொழியையும் நசுக்க முனைகின்றன. அதனால் இந்தியை திணிக்க முயலும் இந்திய அரசுக்கு எதிராக எண்ணற்ற தியாகிகள் தமது இன்னுயிரை ஈர்த்தனர். உலகில் தோன்றிய எத்தனையோ மொழிகள் அழிந்த நிலையில் தமிழ் மக்களின் தமிழ் மொழி அழியாமல் இருக்க காரணம் தமிழ் மக்களின் மொழி உணர்வே. தமிழ் மக்கள் தமது தாய் மொழியையும் தாய் மண்ணையும் தமது இரு கண்ணுக்கு ஒப்பாக கருதுபவர்கள். அதனால்தான் பொங்கு தமிழுக்கு இன்னல் நேர்ந்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு என்று கவிதை பாடி வைத்திருக்கிறார்கள். இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில்உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்: 1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 2. தாலமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார். 4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார். 5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார். 6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு: 16.7.1945, இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார். 7. கீரனூர் முத்து, பிறப்பு: 15.1.1943, இறப்பு: 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார். 8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார். 9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார். 10. விராலிமலை சண்முகம், பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார். 11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார். 12. மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

இதுதான் சிங்கள அரசின் நீதி!

•இதுதான் சிங்கள அரசின் நீதி! நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்காதவர்களை பிடிவிறாந்து போட்டு சிறையில் அடைப்பது வழக்கமான நடவடிக்கைதான் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் முன்கூட்டியே சமூகம் அளிக்கும் திகதியை மாற்றிவிட்டு அப்புறம் சமூகம் அளிக்கவில்லை என காரணம்காட்டி கைது செய்வது எப்படி வழக்கமான நடவடிக்கை ஆகும்? அதுவும் இந்த கொரோனோ காலத்தில் எதற்காக அவர்களுக்கு பிணை வழங்காமல் சிறையில் அடைக்க வேண்டும்? சரி. இதுதான் நீதிமன்ற நடைமுறை என்றால் லலித் குகன் என்ற இருவர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கோத்தபாயாவுக்கு யாழ் நீதிமன்றம் பல தடவை சம்மன் அனுப்பியும் அவர் ஒரு தடவைகூட ஆஜர் ஆகவில்லையே. கடந்த ஆட்சிக்காலத்தில் கோத்தபாயா எந்தப் பதவியும் வகிக்கவில்லை. அவர் ஒரு சாதாரண பிரஜையே. ஆனாலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை. நீதிமன்ற நடைமுறைப்படி அவருக்கு பிடிவிறாந்து போட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. இலங்கை ஜனநாயகநாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் என்றால் கைகது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிங்கள கோத்தபாயா என்றால் கண்டுக்காமல் விடுகிறார்கள். ஏனெனில் இதுதான் சிங்கள அரசின் நீதி!

கடந்த 60 நாட்களாக ஜனநாயக வழியில் அமைதியாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது

கடந்த 60 நாட்களாக ஜனநாயக வழியில் அமைதியாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது வன்முறையை இந்திய அரசு ஏவியுள்ளது. ஒரு விவசாயி பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுவிட்டதாக அறிய வருகிறது. பலர் காயமடைந்துள்ளனர். டில்லியில் இணைய சேவையை அரசு முடக்கியுள்ளனது. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என அஞ்சப்படுகிறது. ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம் எப்படி வன்முறை மூலம் அரசு அடக்கியதோ, ஜல்லிக்கட்டு மக்கள் போராட்டம் எப்படி வன்முறை மூலம் அரசு அடக்கியதோ அதேபோன்று விவசாயிகளின் போராட்டத்தையும் அரசு வன்முறை மூலம் அடக்க முனைகிறது. இப்போது எழும் முக்கிய கேள்வி என்னவெனில் “மக்கள் போராட்டங்களை அரசு வன்முறை மூலம் அடக்க முனைந்தால் அதை மக்கள் எப்படி எதிர் கொள்ள வேண்டும்”என்பதே. அரசு வன்முறையை ஏவினால் மக்கள் அதே வன்முறை மூலம் பதில் அளிப்பதன் மூலமே தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்பதன் சாரம்சம் இதுவே.

முத்துக்குமாரை நினைவில் கொள்வோம்!

•முத்துக்குமாரை நினைவில் கொள்வோம்! ஈழத் தமிழரைக் காக்குமாறுகோரி தமிழ்நாட்டில் தீக்குளித்து உயிர் துறந்த முத்துக்குமாரின் 12வது நினைவு தினம் . (29.01.2021) அவர் உயிர் துறந்தபோது “உன் மூச்சுக்காற்று சோனியாவை எரிக்கும்” என்று பாட்டு பாடினார்கள். ஆனால் அவ்வாறு பாடியவர்கள் மதவாத மோடியை ஒழிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு அன்னை சோனியாவே வருக என்று இப்போது பாட ஆரம்பித்துவிட்டார்கள். என் பிணம்கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று கூறியவர் இப்போது ராகுல் காந்தியின் தலைமையில் தேசம் காக்க மாநாடு நடத்துகிறார். காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து முத்துக்குமார் தன் உயிர் துறந்தார். அவரின் உடலை தூக்கி சுமந்தவர்கள் இப்போது அதே காங்கிரசையும் திமுக வையும் தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். சோனியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்த முத்துக்குமார் தன் முகத்தை தீயினில் எரித்தார். ஆனால் ஈழத் தமிழ்தலைவர் ஒருவர் “அன்னை சோனியாவின் முகத்தில் இரக்கத்தை கண்டேன்” என்று அறிக்கை விடுகிறார். மன்னித்தவிடு முத்தக்குமாரா! உன்னை நினைவு கூரக்கூட எமக்கு நேரம் இல்லை. தமிழ்நாட்டில் சட்டசபைத்தேர்தல் வருகிறது. இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் வருகிறது. அதில் எப்படி பதவி பெறுவது என்பதே இப்போது எமது தலைவர்களின் கவனம் எல்லாம்.

வேலாயுதம்!

•வேலாயுதம்! இது நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் படம் பற்றிய பதிவு அல்ல. இது முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேல் ஆயுதம் பற்றிய பதிவு. இந்துத்துவவாதிகள் கடவுள் ராமரை முன்னிறுத்தும்போது அதற்கு பதிலாக ராமர் கடவுள் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படல் வேண்டும். ஆனால் தமிழத்;தேசியவாதிகள் சிலர் தமிழ்க் கடவுள் என்று முருகனை முன்நிறுத்துகிறார்கள். கடவுள் முருகனும் தமது ராமரின் உறவினர்தான் என்று சொல்லிக்கொண்டு தமிழக பாஜக தலைவர் வேல் யாத்திரை செல்கிறார். சரி. முருகன் ராமரின் உறவினர் என்றால் வட இந்தியாவில் எங்கேயும் முருகன் கோவில் ஏன் இல்லை என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. தமிழகத்தில் வேல் யாத்திரை செய்யும் பாஜக வட இந்தியாவில் ஏன் செய்வதில்லை என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. ஆனால் இங்கு வேடிக்கை என்னவெனில் கடவுள் இல்லை என்று கூறிவந்த திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும் வேல் ஏந்தி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். சரி. தேர்தல் வந்தால் இந்த அரசியல்வாதிகள் பதவி பெறுவதற்காக எதையும் தூக்குவார்கள் என்பது தெரிந்ததுதானே. ஆனால் இவர்கள் தூக்கும் அந்த வேல் ஆயுதம் எமக்கு உணர்த்தும் பொருள் என்ன? அல்லது அதன் அர்த்தம் என்ன? அநியாயம் செய்த சூரன் என்ற அரக்கனை வேல் என்ற ஆயுதம் ஏந்தி முருகன் அழித்ததாக கதைகள் கூறுகின்றன. முருகன் கடவுளா அல்லது தமிழர்களின் மூத்த குடியா என்ற விவாதத்திற்கு அப்பால் அவர் வேல் என்ற ஆயுதம் எந்தியே அரக்களை அழித்தார் என்பது யாரும் மறுக்க முடியாத செய்தி ஆகும். முருகன் தேர்தல் பாதை மூலம் அரக்கனை அழிக்கவில்லை. அல்லது அகிம்சை மூலம் அழிக்க முடியும் என்றும் கூறவில்லை. முருகன் காட்டிய வழியில் ஈழத்தில் போராளிகள் துப்பாக்கி எந்தி போராடியபோது முருகனை கடவுள் என்பவர்கள் போராளிகளை பயங்கரவாதிகள் என்கின்றனர். குறிப்பு – சரவணபவன், சுப்பிரமணியன் என்ற பெயர்கள் உயர் சாதியினருக்கும் கந்தன், முருகன் வேலன் என்ற பெயர்கள் தாழ்த்தப்பட்;டசாதி மக்களின் பெயராகவும் இருப்பதன் காரணம் என்ன?

ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்! இலங்கையில் இருந்தபோது அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரது மல்லிகை இதழை தவறாமல் வாங்கி படித்திருக்கிறேன். தனி ஒரு மனிதராக மல்லிகை இதழை பல வருடங்களாக அவர் வெளியிட்டு வந்தமையை சாதனையாக பலர் கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவர் தனது முற்போக்கு கருத்துகளை கைவிடாமல் இதழை வெளியிட்டமையையே சாதனையாக கருதுகிறேன். ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்கள்.

பேரறிவாளன் விடுதலை,

•பேரறிவாளன் விடுதலை, ஆளுநர் உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகிறாரா? அல்லது, உச்சநீதிமன்றமும் ஆளுநருடன் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறதா? தமிழக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவெடுப்பார் என மத்திய அரசு கடந்த 21ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஒரு வாரம் கடந்த நிலையில் ஆளுநர் முடிவு எடுக்கவும் இல்லை. பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் விடுதலை செய்யப்படவும் இல்லை. ஆளுநரும் மோடி அரசும் உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகின்றனரா? அல்லது உச்சநீதிமன்றமும் மோடி அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்களா? மோடி அரசு எழுவர் விடுதலையை தாமதப்படுத்த முடியுமேயொழிய ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனெனில் இந்த எழுவர் விடுதலை என்பது எட்டுக்கோடி தமிழ் மக்களின் விருப்பமாகும்.

யாழ் இந்திய தூதுவர் இனியாவது திருந்துவாரா?

•யாழ் இந்திய தூதுவர் இனியாவது திருந்துவாரா? வல்லரசு நாடுகள்கூட இலங்கையில் ஒரு தூதுவராலயமே வைத்திருக்கின்றன. ஆனால் இந்திய அரசோ கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, அம்பாந்தோட்டை என நான்கு இடங்களில் நான்கு தூதுவராலயங்களை வைத்திருக்கின்றன. பொதுவாக இலங்கையை ஆக்கிரமிப்பதே இதன் நோக்கமாக இருந்தாலும் யாழ்ப்பாண இந்திய தூதுவரோ தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களையே தொடர்ந்து செய்து வருகிறார். அண்மையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக சில ஈழத் தமிழ் மீனவ சங்கங்களின் பெயரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின்னாலும் இந்த யாழ் இந்திய தூதுவரே இருந்தார். இதன் மூலம் தமிழக தமிழ் மக்களையும் ஈழத் தமிழ் மக்களையும் பிரிப்பதே இவரின் நோக்கமாக இருந்தது. தொப்புள்கொடி உறவை இல்லாமல் செய்வதே இவரின் கனவாக இருக்கிறது. ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இவருக்கு தக்க பதில் அளித்துள்ளார்கள். ஆம். அவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு தமிழக மீனவர்களுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தூதுவரின் முகத்தில் ஓங்கி குத்தி நிரூபித்துள்ளார்கள். அதேவேளை டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடநதுள்ளது என்ற செய்தியும் வருகிறது. இனியாவது யாழ் இந்திய தூதுவர் திருந்துவாரா? தமிழ் மக்களுக்கு எதிரான சதிவேலைகளை நிறுத்துவாரா?