Saturday, January 30, 2021
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறிய பெண் ஒருவரின் மகள் இன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகியுள்ளார்.
இதுகுறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமையும் மகிழ்வும் அடைவதைக் காண முடிகிறது.
ஆனால் இதே இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் 38 வருடமாக ஈழத் தமிழர் அகதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது.
அமெரிக்கா இந்தியருக்கு உரிமை உள்ள மண் இல்லை. ஆனாலும் அமெரிக்கா இந்தியரை வரவேற்று ஒரு துணை ஜனாதிபதியாக்கியுள்ளது.
ஆனால் ஈழத் தமிழர் தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தங்களையும் வாழ வைக்கும் என்று நம்பியே ஈழத் தமிழர் சென்றனர்.
வாழ வைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் சிறப்புமுகாம் என்னும் கொடுஞ்சிறையில் அல்லவா அடைத்து வைக்கிறார்கள்.
பல வருடங்கள் அடைபட்டுக்கிடக்கும் அந்த அகதிகள் தம்மை விடுதலை செய்யும்படி உண்ணாவிரதம் இருந்தும்கூட இந்திய அரசு இரங்க மறுக்கிறது.
இந்தியாவில் ஈழ அகதி ஒரு இந்து அகதியாக இருந்தும்கூட இந்திய அரசு குடியுரிமை வழங்க மறுக்கிறது. சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மறுக்கிறது. உயர் கல்வி கற்ககூட அனுமதிக்க மறுக்கிறது. வேலை வாய்ப்பு வழங்கவும் மறுக்கிறது.
இந்தியாவில் ஈழ அகதிக்கு இந்த நிலை இருக்கும்போது இந்திய வம்சாவழியினர் ஒருவர் அமெரிக்காவில் துணை ஜனாதிபதியானது குறித்து உணர்வுள்ள எந்த ஒரு இந்தியனும் பெருமை கொள்ளமாட்டான். மாறாக வெட்கி தலை குனிவான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment