Wednesday, December 25, 2013

• தோழர் தமிழரசன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதேன்?

• தோழர் தமிழரசன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதேன்?

கடந்த எனது பதிவில் தோழர் தமிழரசன் மாவீரர் இல்லையா எனக் கேட்டிருந்தேன். இதைப் படித்த ஒரு அன்பர் மக்களைக் கொன்ற தமிழரசன் ஒருபோதும் மாவீரர் ஆக முடியாது என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் வேடிக்கை என்னவெனில் அந்த அன்பர் பிரபாகரன் மாவீரர் என தனது முகப்பு பக்கத்தில் போட்டிருக்கிறார்.

பிரபாகரன் ஆரம்பத்தில் குரும்பசட்டி என்னும் இடத்தில் ஒரு தனியார் வீட்டில் கொள்ளையடித்த வரலாறு பலருக்கு தெரியவில்லை. குரும்பசட்டியில் ஒரு தனியார் வீட்டில் அடைவு வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு பிரபாகரன் வெளியே வந்தபோது அங்கே சுருட்டு சுற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பிரபாகரனை கல்லால் தாக்கினார்கள். பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றார்.

ஈழத்தில் இருந்த பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் தங்கள் இயக்க செலவுகளுக்காக பணம் கொள்ளையடித்தார்கள். சில இயக்கங்கள் வங்கியில் கொள்ளையடித்தன. சில பெற்றோல் நிலையங்கள், தபாற் கந்தோர்கள், சங்கக்கடைகள் என்பனவற்றில் கொள்ளையடித்தன. இன்னும் சில தனியார் வீடுகளிலும் மட்டுமல்ல கோயில்களிலும் கொள்ளையடித்தன.

ஈழவிடுதலை இயக்கங்கள் கொள்ளையடித்து பணத்தேவைகளை பூர்த்தி செய்ததை அறிந்த தோழர் தமிழரசனும் தமது அமைப்பு செலவுகளுக்காக பணம் கொள்ளையடிக்க முயன்றார். அவர் முதலில் முயற்சி செய்தது உட்கோட்டை வங்கியில் ஆகும். அங்கு கொள்ளையிட முயன்றபோது அந்த வங்கிக் காசாளர் பணத்தை கொடுக்க மறுத்தார். பணப்பையை எடுக்க இழுபறி நடந்தது. அதனால் அந்த காசாளர் சுடப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் கூடிவிட்டார்கள். இதனால் பணம் கொள்ளையடிக்க முடியாமல் தமிழரசன் தன் குழுவினருடன் தப்பி சென்றார்.

இதன் பின்பு தமிழரசன் பணம் கொள்ளையடிக்க முயலவில்லை. அந்த எண்ணத்தை முற்றிலுமாக கைவிட்டிருந்தார். இந்த நிலையில் ஈழவிடுதலை இயக்கம் ஒன்றிற்கு இந்திய உளவுப்படை புலிகளை அழிக்குமாறு ஒரு தொகையான ஆயுதங்களை கொடுத்திருந்தது. அந்த ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த 6 போராளிகள் தலைமையுடன் விரக்தி அடைந்திருந்தார்கள். எனவே அவர்கள் அந்த ஆயுதங்களை இரகசியமாக எம்மிடம் ஒப்படைக்க விரும்பினார்கள்.

எமது இயக்கம் அப்போது நாட்டில் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனவே ஆயுதங்களைப் பெற்றாலும் அவற்றை நாட்டுக்கு கொண்டுபோக முடியாத நிலை இருந்தமையால் நாம் அவ் ஆயுதங்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் இந்த விடயத்தை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் அவ் ஆயுதங்களை தாம் பெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால் ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த போராளிகள் தமிழரசனுக்கு கொடுக்க விரும்பினாலும் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டார்கள். இதனால் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு அவர்களை ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்ல உதவுவதாக தமிழரசன் வாக்குறுதியளித்தார்.

தோழர் தமிழரசன் இந்த விடயத்தை தன்னுடன் உறவு வைத்திருந்த பெருஞ்சித்திரனார் போன்ற தலைவர்களுடன் கலந்தாலோசித்தார். எல்லோரும் “ஆயுதங்களைப் பெற்று போராட்டத்தை ஆரம்பியுங்கள். நாங்கள் ஆதரவாக அரசியல் பிரச்சாரம் செய்கிறோம்” என உறுதியளித்திருந்தனர்.

இதனாலேயே மிகுந்த நம்பிக்கையுடன் பணம் கொள்ளையடிக்க தோழர் தமிழரசன் மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் அவர் கொண்டிருந்த அதீத நம்பிக்கையும் விட்ட சில தவறுகளும் அவரை மரணத்தில் தள்ளிவிட்டன. எதிரி மிகவும் நன்கு திட்டமிட்டு அவரை கொலை செய்துவிட்டான். ஒரு மாபெரும் போராளியை தமிழ்நாடு இழந்துவிட்டது.


அவர் விட்ட தவறுகள் என்ன? அடுத்த பதிவில் விபரமாக தருகிறேன்.

No comments:

Post a Comment