•சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்புகளும்!
முதல்ல ஒரு கதை சொல்கிறேன். அப்புறம் விடயத்திற்கு வருகிறேன். அப்பதான் உங்களால் சுமந்திரன் மற்றும் அவரது செம்புகளின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
ஒரு ஊரில் ஒரு அப்பாவி விவசாயி தன் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழக் குலையை சந்தையில் விற்பதற்காக தோளில் காவிச் சென்றான்.
அவனிடமிருந்து இந்த குலையை எப்படியாவது ஏமாற்றி பறித்துவிட வேண்டும் என்று நான்கு ஐயர்கள் திட்டம் போட்டனர்.
அதன்படி முதலாவது ஐயர் அந்த விவசாயியைப் பார்த்து “என்னடாப்பா தோளில் நாயைக் காவிச் செல்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி “ என்ன ஐயரே கண் தெரியவில்லையா? நன்கு பாரும் நான் வாழைக்குலை கொண்டு செல்கிறேன்” என்றான்.
கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டாவது ஐயர் இந்த விவசாயியைப் பார்த்து “ என்னடாப்பா நாயை தூக்கி செல்கிறாய் “ என்று கேட்டார்.
இப்போது விவசாயிக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. வாழைக் குலையை தொட்டு பார்த்துவிட்டு “ இல்லையே. நான் வாழைக்குலையைத்தானே கொண்டு செல்கிறேன்” என்றான்.
இப்படியே மூன்றாவது ஐயரும் கேட்கும்போது விவசாயிக்கு பயம் வந்து விட்டது. ஒருவேளை உண்மையில் நாயைத்தான் காவிச் செல்கிறேனோ என அவன் நினைக்க தொடங்கிவிட்டான்.
இறுதியாக நான்காவது ஐயர் கேட்கும்போது அவன் வாழைக்குலையை போட்டுவிட்டு ஓடிவிட்டான்.
இது எல்லோரும் அறிந்த கதைதான். ஆனால் இதையே “ஜயர்” சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்புகளும் செய்வதை உணரமுடியாமல் இருக்கின்றனர்.
முதலில் சயந்தன் தமிழ்தேசியகூட்டமைப்பு என்பது புலிகள் போட்ட “டீல்” என்றார். பின்பு இப்போது சுமந்திரனும் அதையே வேறு வார்த்தைகளில் கூறுகின்றார்.
ஆனால் இங்கு பலரும் “டீல்” என்ற வார்த்தை பற்றியே கவனம் கொள்கின்றனர். ஆனால் “ஜனநாயக அரசியல் செய்ய புலிகள் அனுமதிக்கவில்லை” என்று சுமந்திரன் கூறிய வரியின் சூழ்ச்சியை கவனிக்க தவறிவிட்டனர்.
முதலாவது, பாராளுமன்ற பாதையில் செல்வது மட்டுமே ஜனநாயக அரசியல் என்றும் ஆயுதம் ஏந்தி போராடுவது பயங்கரவாத அரசியல் என்றும் ஒரு கருத்தை திணிக்கிறார்.
ஆயுதம் ஏந்தி போராடிய இளைஞர்களை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவாத்தனா “பயங்கரவாதிகள்” என்றார். தமிழ் தலைவர்கள் “எங்கட பொடியன்கள”; என்றனர். ஆனால் முதன் முதலில் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகதாசனே “போராளிகள்” என்று அழைத்தார்.
அதையும் அவர் வீரகேசரிக்கு அனுப்பும் அறிக்கையில் தமிழில் கூறவில்லை. மாறாக சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், கொல்வின் ஆர்டி சில்வா, என் எம். பெரரா தலைவர்களுக்கு மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார்.
அதுமட்டுமல்ல அதே சண்முகதாசன்; “ தமிழ் போராளிகளின் ஆயுதப் போராட்டம் சாரம்சத்தில் ஜனநாயத்திற்கான போராட்டம். அதனை நாம் ஆதரிப்பது கடமை “ என்றார்.
எனவே பாராளுமன்ற பாதையில் பயணிப்பதுதான் ஜனநாயக அரசியல். மற்றவை ஜனநாயக அரசியல் இல்லை என்ற சுமந்திரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டாவதாக, புலிகள் பாராளுமன்ற பாதையில் பயணித்தவர்களை சுட்டது தவறு என்றால் சுடச்சொன்னவர்கள் எப்படி சரியானவர்கள் ஆவார்?
ஏனெனில் துரையப்பாவை துரோகி என்று சுடச் சொன்னது யார்? பொத்துவில் எம்.பி கனகரத்தினம் கட்சி மாறிய போது அவருக்கு இயற்கையான மரணம் வராது என்று பாராளுமன்றத்தில் பேசியவர் யார்? அமிர்தலிங்கம்தானே. அப்படியென்றால் ஜனநாயக அரசியலை செய்ய அமிர்தலிங்கம் விடவில்லை என்று சுமந்திரன் கூறுவாரா?
மேலும் புலிகள் மட்டுமல்ல ரெலோவும் தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் போன்றவர்களை சுட்டிருக்கிறது. இவர்களை சுடும்படி சொன்னது இந்திய உளவுப்படை றோ. எனவே ஜனநாயக அரசியல் செய்ய ரெலோவும் இந்திய அரசும் அனுமதிக்கவில்லை என்று ஏன் சுமந்திரன் கூறவதில்லை?
மூன்றாவதாக இலங்கை அரசும் ரவிராஜ் குமார் பொன்னம்பலம் போன்றவர்களை சுட்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசு ஜனநாயக அரசியல் செய்ய விடவில்லை என்று சுமந்திரன் இதுவரை கூறியதில்லை. அது ஏன்?
இறுதியாக ஒரு சின்ன குறிப்பு. நெல்சன் மண்டலொ 26 வருடங்களாக சிறை வைக்கப்ட்டிருந்தபோது ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக ஒரு அறிக்கை விட்டால் உடனடியாக விடுதலை செய்வதாக தென்னாபிரிக்க அரசு கூறியது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவர் மனைவி வின்னி மண்டலோ மீது பல கொலைக் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனாலும் எந்தவொரு தென்னாபிரிக்கரும் நெல்சன் மண்டலோ செய்த அரசியல் ஜனநாயக அரசியல் இல்லை என்று கூறியது கிடையாது.(இன்றும் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் நெல்சன் மண்டலோ பெயர் உள்ளது)
நாளைய வரலாறு போராளிகளின் பெயரையே நினைவில் வைத்திருக்கும் சுமந்திரன்களின் பெயரை அல்ல.