Saturday, June 29, 2019

இரண்டு போராட்டங்கள் ஆனால் இரண்டு முடிவுகள்

•இரண்டு போராட்டங்கள்
ஆனால் இரண்டு முடிவுகள்
மூன்று முஸ்லிம் பிரமுகர்களின் பதவி நீக்கம் கோரி புத்த பிக்கு மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் மூன்று நாட்களில் வெற்றியில் முடிவடைந்துள்ளது.
ஆனால் அதேவேளை காணாமல் போனவர்களின் உறவுகள் கடந்த 800 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்த முடிவும் இன்னும் கிடைக்கவில்லை.
அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விடுதலை செய்யப்படவில்லை.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் வரை நடை பவனி சென்றனர். அதற்கும் அரசு மதிப்பு தரவில்லை.
கேப்பாப்புலவு மக்கள் தம் நிலத்தை கோரி இரண்டு வருடமாக வீதியில் இருந்து போராடுகின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு நிலம் கிடைக்கவில்லை.
ஒரு பிக்குவின் உண்ணாவிரதத்திற்கு 3 நாட்களில் முடிவு வழங்கிய அரசு தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எந்த முடிவையும் வழங்குவதில்லை.
இத்தனைக்கும் இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி இக் கணம்வரை தமிழ் எம்பி களின் ஆதரவினால்தான் காப்பாற்றப்பட்டு வருகிறது.
இந்த பிக்குவின் உண்ணாவிரதம் தமிழ் மக்களுக்கு சில விடயங்களை கற்று தந்துள்ளது
(1)தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டத்தை எந்தவொரு சிங்கள அரசும் மதிக்கப் போவதில்லை. எனவே அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற முடியாது.
(2அனைத்து முஸ்லிம் பிரமுகர்களும் ஒற்றுமையாக பதவி விலகியுள்ளனர். ஆனால் தமிழ் மக்களுக்காக ஒரு தமிழ் எம்.பி மட்டுமல்ல ஒரு பிரதேசசபை உறுப்பினர்கூட பதவி விலகவில்லை.
(3)மூன்று முஸ்லிம் பிரமுகர்களின் பதவிக்கு ஆபத்து என்றவுடன் அனைத்து முஸ்லிம் பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து பதவி விலகியுள்ளனர். ஆனால் எமது தலைவர் சம்பந்தர் அய்யா தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோனபோது சொகுசு பங்களாவை கெஞ்சிப் பெற்றுள்ளார்.

•இவர்கள் மெண்டல்களா?

•இவர்கள் மெண்டல்களா? அல்லது
தமிழ்மக்களை மெண்டல்களாக்கப் பார்க்கிறார்களா?
யாழ் இந்திய தூதர் அகிம்சையை போதித்த காந்தியின் பெயரால் சயிக்கிள் பேரணி நடத்தியுள்ளார்.
அதுமட்டுமல்ல அவர் வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளையும் நிறுவப் போவதாக எற்கனவே கூறியிருக்கிறார்.
இந்தியாவில் காந்தியைச் சுட்ட கோட்சேக்கு விழா எடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல பணத்தில் இருக்கும் காந்தியையே எடுக்க வேண்டும் எனவும் கூற ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் யாழ் இந்திய தூதரோ வடக்கு கிழக்கில் எப்படியும் காந்தியை பரப்பியே தீருவது என்று அடம் பிடிக்கிறார்.
சரி. பரவாயில்லை. ஆனால் இதே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் காந்தியின் அகிம்சை வழியில் போராடி வருகிறார்கள். ஆனால் இந்த இந்திய தூதர் இதுவரை இதுபற்றி வாய் திறக்கவேயில்லை.
பார்ப்பவர்களுக்கு இந்த இந்திய தூதர் “என்ன மெண்டலா?” என நினைக்க தோன்றும். ஆனால் அவர் சாதாரண மெண்டல் இல்லை. விபரமான மெண்டல்.
ஏனெனில் கடந்த 28ம் தேதி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு இரகசியமாக வழங்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று எதிர்ப்பு தெரிவித்த எவரும் கொழும்பு துறைமுகம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது குறித்து மூச்சே காட்டவில்லை.
இப்போது கூறுங்கள் எந்தவித எதிர்ப்பும் இன்றி கொழும்பு துறைமுகத்தை பெற்ற இந்திய தூதர் சாதாரண மெண்டலா? அல்லது விபரமான மெண்டலா ?
அடுத்தவர் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன். அவரை “ஈழத்துகாந்தி” என்று அழைக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கண்ணியாவில் பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு புத்த விகாரை கட்டுகிறார்கள். அதைப் பற்றி இவருக்கு அக்கறை இல்லை.
காணாமல் போனவர்களின் உறவுகள் 800 நாட்களாக போராடி வருகிறார்கள் . அதைப்பற்றியும் இவருக்கு அக்கறை இல்லை.
அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி வருகிறார்கள். அதைப் பற்றியும் இவருக்கு அக்கறை இல்லை.
ஆனால் கண்டியில் உண்ணாவிரதம் இருக்கும் புத்த பிக்குவிற்கு ஆதரவாக இவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
என்ன செய்வது? 50 கோடி ரூபா வாங்கிக்கொண்டு மகிந்த ராஜபக்சவை ஆதரித்தவர் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என எதிர்பார்க்க முடியாதுதான்.
ஆனால் இவர்கள் இருவரும் தமிழ் மக்களை மெண்டல்களாக்கப் பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்

அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்
ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார்.
அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார்.
ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை.
3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் என்றார்.
ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்பட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.
பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார்.
ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார்.
வரலாறு அவரை இன்னொரு நாயனாராக கூட எழுதிச் செல்லலாம்.
ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது நினைக்க கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே.

நாய்களை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.

நாய்களை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.
அவை எத்தனை பேரை கடித்து தொலைக்கப் போகிறதோ தெரியவில்லை
ஆனால் ஒன்று இவை முஸ்லிம்களையும் தமிழர்களையும் மட்டும் கடித்து விட்டு ஓய்ந்து விடப் போவதில்லை.
இவை இனவாதம் கொண்ட வெறி நாய்கள்.
இறுதியில் அவிழ்த்து விட்ட எஜமானர்களையும் இவை கடித்து தொலைக்கும்.
வரலாற்றில் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா ஒரு புதம்த பிக்குவால் கொல்லப்பட்டபோது சேர் ஜோன் கொத்தலாவ கூறினார் “ நான் நாய்களை கட்டி வைத்தேன். பண்டார நாயக்கா திறந்து விட்டார். இறுதியில் அவை அவரையே கடித்து விட்டன.” என்றார்.
இப்போது ஜனாதிபதி மைத்திரியும் மகிந்த ராஜபக்சவும் தமது நலனுக்காக இந்த நாய்களை அவிழ்த்து விட்டுள்ளனர்.
இப்போது இவை முஸ்லிம் மக்களை கடிக்க ஆரம்பித்துள்ளன. அடுத்து தமிழ் மக்களை கடிக்கும். இறுதியாக அவிழ்த்து விட்ட மைத்திரி மற்றும் மகிந்த ராஜபக்சவையும் கடிக்கும்.
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் புத்த பிக்குகளை அவர்கள் மதித்தாலும் தமது அரசியல் தலைவர்களாகவோ அல்லது ஆட்சி தலைவர்களாகவோ தெரிவு செய்யவில்லை.
சிங்கள மக்கள் மத்தியில் போட்டியிட்ட பிக்குகளின் கட்சியோ அல்லது தீவிர சிங்கள இனவாத கட்சிகளோ இதுவரை வெற்றி பெறவில்லை.
அப்படியிருக்க எதற்காக இலங்கை அரசு புத்த பிக்குகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறது?
இன்று இந்த புத்த பிக்குகள் போல் யாராவது மூன்று முஸ்லிம் மத குருவோ அல்லது மூன்று ஐயர்மாரோ கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தால் அரசு அதனை செய்யுமா?
ஒருபோதும் செய்யாது. அப்படியிருக்க பிக்குமாருக்கு மட்டும் ஏன் அரசு அஞ்சுகிறது?
இனவாதியான ஞான தேரரை விடுதலை செய்யுமாறு எந்த பெரிய சிங்கள தலைவர்களும் கோரவில்லை. அதுமட்டுமல்ல அவரை விடுதலை செய்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று சிங்கள பெண்மணி ஒருவரே வெளிப்படையாக கூறினார்.
ஆனால் முஸ்லிம் தலைவர்களான அசாத் அலி, ஹிஸ்புல்லா போன்றவர்கள் ஞானதேரரை விடுதலை செய்யுமாறு கேட்டனர்.
விடுதலை பெற்றுவந்த ஞானதேரர் இவர்களை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார்.
இதுதான் விசர் நாய்களின் குணம்.
இப்போது எம் மத்தியில் உள்ள கேள்வி என்னவெனில்
•இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாய்களின் அடாவடித்தனத்தை அனுமதிப்பது?
•இந்த நாய்களை விரட்டி யடிக்க இலங்கை மக்கள் என்ன செய்ய வேண்டும்?

தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.
சிவகுமாரன் மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனைகளை பின்பற்றியவரல்ல. அவர் புரட்சியை முன்னெடுக்கவில்லைதான். ஆனாலும் அவர் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர்.
சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.
குறிப்பாக அமிர்தலிங்கம் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் தயவோடு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கிப் படிக்க வைத்தார். தலைவர் சிவசிதம்பரம் மகனை லண்டனுக்கு அனுப்பி படிக்கவைத்தார்.
சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார். எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார்.
பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் கடத்தல்காரர்கள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது.
அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை. எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள். தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும்.
சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர். தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர்.
இன்று ஒவ்வொரு இயக்கத்தினரும் ஒவ்வொரு தினத்தை மாவீரர் நினைவு நாளாக கொண்டாடுகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக ஒருநாளை ஒருமித்துக் கொண்டாட வேண்டும் என்பது தமிழ் மக்களின் பெரு விரும்பமாகும்.
அப்படி ஒருநாளைக் கொண்டாடுவதாயின் அதற்கு மிகவும் பொருத்தமான நாள் தியாகி சிவகுமாரன் இறந்த தினமாகும்.
அனைவரும் இதனை ஒருமித்து ஏற்றுக்கொள்வார்களா?

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பலாமா?

•தூங்குபவர்களை எழுப்பலாம்.
தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பலாமா?
எழும்புங்கோ சித்தண்ணை
உங்காளு வியாழேந்திரன் தொல்லை தாங்க முடியவில்லை.
மகிந்தவிடம் 50 கோடி ரூபா வாங்கியபோதே அந்தாளை கட்சியை விட்டு நீக்கி எம்.பி பதவியை பறிப்பதாக கூறினீர்கள்.
ஏன் இன்னும் அதை செய்யவில்லை?
அதில் உங்களுக்கும் பங்கு கிடைத்து விட்டது அதனால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேசுகிறார்கள்.
பல கோடி ரூபா குடும்ப காணியையே பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு இலவசமாக கொடுத்தவர் நீங்கள்.
அப்படிப்பட்ட உங்களைபற்றி வியாழேந்திரனிடம் பங்கு வாங்கிவிட்டதாக பேசுவதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது அண்ணை.
தயவு செய்து தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்க அண்ணை.

•நடிகர் சஞ்சய்தத் ற்கு ஒரு நியாயம் பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்

•நடிகர் சஞ்சய்தத் ற்கு ஒரு நியாயம்
பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நியாயம் ?
மத்திய அரசு மறுத்த 55 நாட்களுக்குள் சஞ்சய் தத்தை மராட்டிய மாநில அரசு விடுதலை செய்துள்ளது.
ஆனால் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழரின் விடுதலையை மறுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியானாலும் சரி பாஜக ஆட்சியானாலும் சரி தமிழர்களும் தமிழ்நாடும் அனைத்து வழிகளிலும் வஞ்சிக்கப்படுகிறது.
இனி தமிழர்கள் கோர வேண்டியது ஏழு தமிழர் விடுதலையை அல்ல. ஒட்டுமொத்தமாக “தமிழ்நாடு விடுதலை”யையே.
நீட் பிரச்சனை, இந்தி திணிப்பு பிரச்சனை, எட்டு வழிச்சாலை பிரச்சனை, ஹைட்ரோகார்பன் பிரச்சனை என ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடுவதைவிட ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு விடுதலைக்கு போராடுவதே மேல்.
தமிழர் கோருவது பிச்சை அல்ல கெஞ்சிப் பெறுவதற்கு
தமிழர் கோருவது உரிமை. அது போராடியே பெற வேண்டும்.

•காணவில்லை

•காணவில்லை
பெயர்- சம்பந்தர் ஐயா
பதவிகள் - தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர், திருமலை பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்.
தொழில் - நீண்ட உறக்கத்தில் இருப்பது. எப்போதாவது எழும்பினால் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என அறிக்கை விடுவது.
பொழுதுபோக்கு- ஒவ்வொரு வாரமும் இந்திய தூதருடன் தண்ணி அடிப்பது.
சாதனை- எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோனாலும் பல கோடி ரூபா பெறுமதியான பங்களாவை கெஞ்சிப் பெற்றுக்கொண்டது
இலட்சியம்- சாகும்வரை பதவியில் இருக்க வேண்டும் என்பது.
ஆச்சரியம்- சந்திரிக்கா இரகசியம் சொன்னால்கூட நன்றாக கேட்கும் காது முன்னாள் போராளிகள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி கூறினால் கேட்காது.
சிறப்பு- உயிரோடு இருக்கும்போதே செத்து தொலை என்று தமிழ் பெண்களின் சாபம் பெற்ற ஒரே தலைவர்.
இந்தளவு சிறப்பு கொண்ட எமது தலைவர் சம்பந்தர் ஐயாவை யாராவது கண்டால் தயவு செய்து அவரிடம் கூறவும்.
கண்ணியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து புத்த விகாரை கட்டுபவர்கள் அடுத்து முல்லைதீவு நீராவியடி பிள்ளையாருக்கு உரிமை கோருகிறார்கள்.
நீதிமன்ற தீர்ப்பைக்கூட மதிக்காமல் புத்த பிக்குகள் போராட்டம் நடத்துகிறார்கள்.
ஐயா!
வரும்போது பிக்குவிற்காக உண்ணாவிரதம் இருந்த வியாழேந்திரன், மற்றும் பிக்குவிற்கு வேட்டி உரிஞ்சு கொடுத்த மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோரையும் கூட்டி வரவும்.

•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!

•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!
இன்று (09.06.2018) தோழர் சுந்தரம் அவர்களின் இரண்டாவது நினைவு தினம் ஆகும்.
தனக்கென்று வாழ்ந்து
தனக்கென்று உழைப்பவன்
மனிதன்!
தன் வாழ்க்கையையும்
தன் உழைப்பையும்
பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்
-மாமேதை காரல் மார்க்ஸ்
ஆம். மறைந்த தோழர் சுந்தரம் அவர்களும் ஒரு மாமனிதர்தான். அவர் தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைத்தவர் அல்ல. மாறாக, இறக்கும் வரையில் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையையும் மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு புரட்சியாளர்.
தோழர் சுந்தரம் மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளை தனது வழிகாட்டியாக கொண்டவர். அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர்.
தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படை அமைத்து பரந்து பட்ட மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவர்.
32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் சுமார் பத்து வருடங்கள் சிறை வாழ்க்கை. எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள். இத்தனைக்கும் மத்தியில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம்.
தோழர் சுந்தரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எப்போதும் ஆதரித்து வந்தவர்.
ஈழத் தமிழர்களுக்கு அதரவாக இந்திய அரசுக்கு எதிராக வெடி குண்டு வீசி எச்சரித்தவர்.
நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியவர்.
அத்தகைய தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் சுந்தரத்தின் பெயரை உச்சரிக்க ஈழ ஆதரவுத் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், திருமாவளவன் போன்றவர்கள் தவறலாம் அல்லது தவிர்க்கலாம்.
அதுபோல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் சுந்தரத்தின் பெயரை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொறிப்பதற்கு நெடுமாறன் அய்யா தயங்கலாம்; அல்லது தவிர்க்கலாம்.
ஆனால் தமக்காக குரல் கொடுத்த தோழர் சுந்தரத்தை ஈழத் தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் தங்கள் மனங்களில் நினைவு கூருவர்.
ஈழத் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தோழர் சுந்தரத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் சுந்தரம் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். இக் குறிப்பு “விடுதலை அறம்” இதழில் வெளிவந்துள்ளது.