Monday, June 16, 2014

இலக்கிய சந்திப்பு

• இலக்கிய சந்திப்பு

42வது இலக்கிய சந்திப்பு ஜெர்மனியில் நடைபெற்றுள்ளது. அடுத்த 43வது இலக்கிய சந்திப்பு சுவிசில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இலக்கிய சந்திப்புகளை நடாத்தும் இலக்கியவாதிகளின் ஆர்வம் நிச்சயம் பாராட்டக்குரியது.

தொடர்ந்து வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இலக்கிய சந்திப்புகள் முதல் முறையாக கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அந்த 41வது இலக்கிய சந்திப்பை முன்னிட்டு 'குவார்னிகா' என்ற கனமான தொகுப்பை வெளியிட்டிருந்தனர். இதைவிட இதுவரை நடந்த இலக்கிய சந்திப்புகளில் வேறு ஏதும் பதிவுகள் வெளியிடப்பட்டதா என எனக்கு தெரியவில்லை.

லண்டனில் நடைபெற்ற இரண்டு இலக்கிய சந்திப்புகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு இன்னமும் இந்த இலக்கிய சந்திப்புகள் என் நடாத்தப்படுகின்றன? இதன் அவசியம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

'ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்' என்றார் மாபெரும் ஆசான் மாவோ அவர்கள். அந்தளவில் புலிகள் இருந்த காலங்களில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துகள் உரையாடும் களமாக இலக்கிய சந்திப்புகள் இருந்தன. ஆனால் தற்போது புலிகள் அற்ற நிலையில் இந்த இலக்கிய சந்திப்புகளின் அரசியல் என்ன? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

• இலக்கியம் என்றால் என்ன? அதற்கு வருடா வருடம் சந்திப்பு அவசியமா?
• 'இலக்கிய சந்திப்பு' இன் அரசியல் என்ன?
• அந்த அரசியல் அடைவதற்கான வேலைத் திட்டம் என்ன?

மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக இலக்கிய சந்திப்பு குழுவினர் அடுத்த சுவிஸ் சந்திப்புக்கு முன்னர் தெளிவு படுத்துவார்கள் என நம்புகிறோம்.

பல இலக்கிய ஆர்வலர்கள் பல்லாயிரக் கணக்கான ரூபாய்க்களை செலவு செய்து நடத்தும் இந்த இலக்கிய சந்திப்புகள் எதிர்கால சந்ததிக்கு பயன் உள்ள வகையில் அமைய வேண்டும் என விரும்புகிறோம்.

எமது விருப்பம் நிறைவேறுமா?

அண்ணல் அம்பேத்கார் புகழ் ஓங்குக!

 அண்ணல் அம்பேத்கார் புகழ் ஓங்குக!

“அண்ணல் அம்பேத்கார” திரைப்படம் (தமிழ் பதிப்பு) மும்பை “விழித்தெழு இளைஞர் இயக்கம்” சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் குறுந்தகடு கிடைக்கப்பெற்றேன். அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பம் மும்பை நண்பர் ஒருவர் மூலம் நிறைவேறியுள்ளது. அவருக்கு என் நன்றிகள்.

ஒரு மாபெரும் சாதனையாளரின் வரலாற்றை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் அடக்குவது என்பது மிகவும் கடினம்தான். இருப்பினும் அம்பேத்கார் வரலாற்றை இயன்றளவு இத் திரைப்படத்தில் உள்ளடக்கியுள்ளார்கள் எனலாம். அவர்களது பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.

“அண்ணல் அம்பேத்கார்” வெறும் திரைப்படம் அல்ல. அது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பாடம். கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு மகத்தான மனிதன் அம்பேத்கார். அவரது வரலாறு சரியான முறையில் சரித்திரத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற ஒரு ஏக்கம் எனக்கு இருந்தது. குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மகாத்மா காந்தி அறியப்பட்ட அளவிற்கு அண்ணல் அம்பேத்கார் அறியப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமே.

“அண்ணல் அம்பேத்கார்” திரைப்படத்தை பார்க்கும்போது அவரது சாதனைகளை தெரிந்து கொள்வதை விட மகாத்மா என அறியப்பட்டவர் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தார் என்பதை நன்கு அறிய முடிகிறது. வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்று மகாத்மாக்கள் மக்களால் தூக்கியெறியப்படுவார்கள்.

இந்திய போன்று இலங்கையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதீய ஒடுக்கு முறைகள் உண்டு. ஆனால் இந்தியாவில் ஒரு அம்பேத்கார் போன்று இலங்கையில் ஏன் ஒரு அம்பேத்கார் தோற்றம் பெறவில்லை? இந்தியா போன்று இலங்கையில் ஏன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை?

இந்தியாவை விட இலங்கையில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவெனில் இந்திய புரட்சியாளர்கள் சாதீய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கத் தவறினார்கள். ஆனால் இலங்கையில் தோழர் சண்முதாசன் தலைமையிலான புரட்சியாளர்கள் சாதீய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமைதாங்கி முன்னெடுத்தார்கள். இதனால் ஒருவேளை இலங்கையில் அம்பேத்காரியம் தோன்றுவதற்கு அவசியமற்று போயிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

பிரான்சில் இருந்து செயற்படும் “தலித் மேம்பாட்டு முன்னணி” ஈழத் தமிழர் மத்தியில் அண்ணல் அம்பேத்கார் அவர்களை அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொள்கிறார்கள். அவர்கள் பணி வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்வரும் இணைப்பில் அண்ணல் அம்பேத்கார்(தமிழ் பதிப்பு) திரைப்படத்தைப் பார்வையிடலாம்.

http://www.youtube.com/watch?v=OUST4I2EFCA

புரட்சியாளர்கள் தந்தை பெரியாரை மட்டுமல்ல அண்ணல் அம்பேத்காரையும் அவசியம் படிக்க வேண்டும்.

மோடி பதவியேற்பில் மகிந்த ராஜபக்சே பங்கேற்பு!

• மோடி பதவியேற்பில் மகிந்த ராஜபக்சே பங்கேற்பு!

மன்னர் காலத்தில் மாமன்னர்களின் பட்டாபிசேகத்தில் குறுநில மன்னர்கள் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அதுபோல்

இன்றைய முதலாளித்துவ காலத்தில் பேட்டை ரவுடி இந்திய மோடி யின் முடிசூட்டுவிழாவில் தாதா ராஜபக்சே கலந்துகொண்டு தன் விசுவாசத்தைக் காட்டவேண்டிய நிலை.

மோடி வென்றதும் படையை அனுப்பி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என யாராவது நம்பியிருந்தால் அவர்களுக்கு மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வது நிச்சயம் அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவியாகவே செயற்பட்டது என்பதை அறிந்தவர்களுக்கு மோடியின் ராஜபக்சே வரவேற்பு நிலை ஆச்சரியமானது அல்ல.

இங்கு எனது கேள்வி என்னவெனில் தேர்தலில் தனக்கு 6 சீட்டு கேட்டு வாங்கிய வைகோ , தமிழீழம் குறித்து அல்லது ராஜபக்சே குறித்து பி.ஜே.பி யின் நிலை என்னவென்று ஒரு வார்த்தை கேட்கவில்லையா?

மோடி 3 முறை தமிழகம் வந்தார். ஆனால் ஒரு முறை கூட அவர் தமிழீழம் குறித்து ஒரு வார்த்தை கூறவில்லையே. அது குறித்து வைகோ சிறிதும் கவலை கொள்ளவில்லையே?

பி.ஜே.பி க்கு எதிராக காங்கிரசை ஆதரிப்பதும் காங்கிரசை ஒழிக்க பி.ஜே.பி யை ஆதரிப்பதும் என மாறி மாறி இந்திய அரசை காப்பாற்றி வருகிறார் வைகோ

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்திய அரசு எமக்கு தேவையில்லை என வைகோ கூறுவாரா?

அந்த இந்திய அரசின் கீழ் தமிழக மக்கள் இருக்க விரும்பமாட்டார்கள் என வைகோ கூறுவாரா?

இந்திய அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களை புறக்கணித்தால் தமிழ்நாடு தனி நாடாகும் என்று வைகோ அறிவிப்பாரா?

அல்லது தனது தொண்டர்களின் உணர்வுகளை காயடித்து இந்திய அரசுக்கு சேவகம் செய்வாரா?

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?

• ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில்
தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடின் இந்திய அரசு தமிழீழம் பெற்றுத் தர உதவியிருக்கும் என இன்றும் சிலர் முட்டாள்தனமாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை அரசுதமிழீழத்திற்கு சம்மதித்தாலும் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழம் மலர சம்மதிக்காது என்பதே உண்மை என்பதை இந்த சிலர் மறைக்கின்றனர்.

ராஜீவ் காந்தி மட்டுமல்ல இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால்கூட தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்காது. ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. இனியும்கூட ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை.

இலங்கை அரசை மிரட்டி முழு இலங்கையையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காகவே ஆரம்பத்தில் இந்திய அரசு இயக்கங்களுக்கு சில உதவிகள் செய்தது. பின்னர் இலங்கை அரசு தனது பிடிக்குள் வந்துவிட்டதும் அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் முயற்சியையே இந்திய அரசு மேற்கொண்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் விரும்பாவிடினும் இந்திய ராணுவத்துடன் மோதுவதற்கு அவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் இந்திய உளவுப்படை புளட் இயக்கத்திற்கு ஆயுதங்களை வழங்கி புலிகளை அழிக்கும்படி கட்டளையிட்டிருந்தது. அதன்படி சங்கிலியன் தலைமையிலான புளட் இயக்கத்தினர் மன்னார் பிரதேசத்தில் ஒரே நாளில் பல புலிகளைக் கொன்றனர்.

இந்திய உளவுப்படையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட புலிகள் வேறு வழியின்றி அழிவில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே இந்திய ராணுவத்திற்கு எதிராகப் போர் புரிந்தனர். போர் அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதே உண்மை.

அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவம் ஆயிரக் கணக்கில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தது. பல தமிழ் பெண்களை கற்பழித்தது. கோடிக் கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தைவிட இலங்கை ராணுவம் மேல் என தமிழ் மக்கள் நினக்கும் அளவிற்கு இந்திய ராணுவம் அழிவுகளை மேற்கொண்டது.

இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு யாரும் நீதி வழங்கவில்லை? இந்தியாவில் எதாவது ஒரு நீதிமன்றத்தில் நியாயம் வழங்கப்பட்டிருந்தால் ராஜீவ் காந்தி கொலை நிகழந்;திருக்காது. ராஜீவ் காந்தியினால் கொல்லப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுக்காதவர்கள் ராஜீவ் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோருவதற்கு என்ன தகுதி இருக்கு?

புலிகள் அமைப்பு இந்திய ராணுவத்துடன் போர் புரிந்த வேளை பாகிஸ்தான் உளவு அமைப்பு தேவையான உதவிகள் செய்ய முன்வந்தது. ஆனால் பிரபாகரன் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உதவியை பெற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல இந்தியாவுக்குள் போராடிக் கொண்டிருக்கும் சில அமைப்புகள் கூட தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரிய போது புலிகள் அதற்கு அதற்கு மறுத்துவிட்டனர்.

இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயற்பட விரும்பாத புலிகள் அமைப்பபை இந்தியாவே அழிபதற்கு பெரிதும் உதவியது என்பதை இனியாவது இந்திய அரசை இன்னமும் நம்புவோர் புரிந்து கொள்வார்களா?

தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் • வல்லரசுக் கனவில் இருப்பவர்கள் பதில் தருவார்களா?

• தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்
• வல்லரசுக் கனவில் இருப்பவர்கள் பதில் தருவார்களா?

செய்தி- இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

சில கேள்விகள்:-

(1)டில்லியில் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது பொங்கியெழுந்தவர்கள் தற்போது மௌனம் காப்பது ஏன்? பாதிக்கப்ட்டவர்கள் தலித் பெண்கள் என்பதாலா?

(2)காங்கிரஸ் மன்மோகனசிங் ஆண்டாலும், பி.ஜே.பி மோடி ஆண்டாலும் பெண்கள் மீதான கொடுமை தொடர்கிறதே. இதை தடுத்து நிறுத்த முடியாதா?

(3)இந்தியா வல்லரசாகிறது என சிலர் கனவு காண்கிறார்களே. அவர்கள் இந்த கொடுமைகளுக்கு பதில் தருவார்களா?

கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த பெண்கள்
எமது மொழி பேசாதவர்களாக இருக்கலாம்
எமது இனம் இல்லாமலும் இருக்கலாம்
ஆனால் அவர்களும் மனிதர்கள்தானே.
அவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருந்தால்
'மனிதம்' செத்துவிட்டது என்று அர்த்தமாகும்.

புதிய ஜே.வி.பி தலைவரின் லண்டன் விஜயம்! ஜே.வி.பி யின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

• புதிய ஜே.வி.பி தலைவரின் லண்டன் விஜயம்!
ஜே.வி.பி யின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

ஜே.வி.பி யின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசநாயக்க அவர்கள் அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் தமிழர,; சிங்களவர், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

நான் அறிந்தவரையில் 24.05.14 யன்று மேற்கு லண்டன் வெம்பிளியிலும,; 25.05.14 யன்று வடக்கு லண்டன் ஹாரிங்கேயிலும், 30.05.14 யன்று கிழக்கு லண்டன் ஈஸ்ட்காமிலும் ஜே.வி.பி தலைவர் பல்லின மக்களையும் சந்தித்து உரையாடல்களை நடத்தியுள்ளார். அவர் அறிவிக்கப்டாமலும் பல உரையாடல்களையும் சந்திப்புகளையும் நிகழ்தியிருக்கக்கூடும்.

ஜே.வி.பி கட்சியானது அதன் நிறுவன தலைவர் விஜயவீரா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அவர் முதலில் தோழர் சண்முகதாசன் தலைமையில் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியில் செயற்பட்டவர். தோழர் சண்முகதாசன் ஆரம்பம் முதல் ஜே.வி.பி கட்சியையும் அதன் தலைவர் காலம் சென்ற விஜயவீராவையும் இனவாதக் கட்சியாகவே குற்றம் சாட்டுகிறார். ஆனால் ஜே.வி.பி கட்சியானது இன்றுவரை தோழர் சண்முகதாசனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவேயில்லை.

அதேவேளை ஜே.வி.பி கட்சியானது தாங்கள் இனவாதக் கட்சி இல்லை என்றும் தாங்கள் ஒரு தமிழரின் நிழலுக்காவது தீங்கிழைத்தது என யாராவது நிரூபிக்க முடியுமா என்றும் சவால் விடுகிறார்கள். எதுவாயினும் மகிந்த சிந்தனையை முன்வைத்து மகிந்தவை ஜனாதிபதியாக்கிய பெரும்பங்கு ஜே.வி.யையே சாரும். அதை அவர்களால் மறுக்க முடியாது.

மகிந்தவை ஜனாதிபதியாக்கியமைக்கு ஜே.வி.பிக்கு அவர் செய்த நன்றிக்கடன் ஜே.வி.பி யை சுக்கு நூறாக உடைத்தமையாகும். இதையும் ஜே.வி.பியினால் மறக்க முடியாது.

மேலும் மாக்சிச லெனிசத்தை முன்னெடுப்பதாக கூறும் ஜே.வி.பியானது இன்றுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை. மாறாக மகிந்த முன்னெடுத்த யுத்தத்திற்கும் தமிழ் இன அழிப்புக்கும் பூரண ஆதரவை வழங்கி வந்துள்ளனர். அது தவறு என்பதையும் இன்று வரை தமிழ் மக்களிடம் அவர்கள் கூறுவதற்கு முன்வரவில்லை.

இந்நிலையில் புதிதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுராகுமார அவர்கள் பழைய பாதையில் பயணிக்கப் போகிறாரா அல்லது தமிழ் மக்களையும் அரவணைத்து ஒரு புதிய போராட்ட பாதையை தெரிவு செய்யப் போகிறாரா என்பதை அறிய தமிழ்மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

• மகிந்தவை ஜனாதிபதியாக்க பெரும் பங்கு வகித்த ஜே.வி.பி யானது மகிந்தவை பதிவியிறக்க என்ன பங்கு வகி;க்கப் போகிறது?

• லண்டனில் பல தரப்பு மக்களையும் சந்தித்த அனுபவம் புதிய தலைவரின் சிந்தனையில் மாற்றத்தை எற்படுத்துமா?

• ஜே.வி.பி கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

கலைஞர் 91வது பிறந்த நாள். மன்னிக்கவும். வாழ்த்த மனம் வரவில்லை!

• கலைஞர் 91வது பிறந்த நாள்.
மன்னிக்கவும். வாழ்த்த மனம் வரவில்லை!

100 வயது முதிர்ந்த ஒரு நபர் இறந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாமே என்று நினைப்பது பொதுவான மனிதப் பண்பு. ஆனால் ஒரு நபர் வாழும்போதே அவருக்கு இன்னும் சாவு வரவில்லையா என தமிழ் மக்கள் நினைப்பார்களேயானால் அந்த நபர் கலைஞர் ஒருவராகவே இருக்க முடியும்.

'உலக தமிழ் இனத் தலைவர்' என தன்னைத்தானே அழைத்துக்கொண்டு தன் குடும்ப நலனுக்காக தமிழ் இன அழிவுக்கு துணை போனவர் கலைஞர். முள்ளிவாய்க்கால் அழிவுகள் தமிழ் மக்கள் மனங்களில் இருக்கும்வரை கலைஞர் ஒரு தமிழ் இனத் துரோகியாகவே வரலாறு பதிவு செய்யும்.

தேர்தலில் படுகேவலமான தோல்வியை பெற்ற பின்பும்கூட தானோ அல்லது தன் குடும்பத்தவர்களோ தோல்வி குறித்து சிந்திக்க வேண்டும் என்று கலைஞர் கூறவில்லை. மாறாக தொண்டர்களே தோல்வி குறித்து சிந்திக்க வேண்டும் என்று கூறுகிறார். தனது குடும்பத்தவர்கள் பதவி பெற வேண்டும் என்பதற்காக விகிதாசார தேர்தல் முறை வேண்டும் என்கிறார்.
இது அவர் இனியும் திருந்துவதற்கு தயார் இல்லை என்பதையே காட்டுகிறது.

வெறும் மஞ்சள் பையுடன் சென்னை வந்த கலைஞர் குடும்பம் இன்று பல்லாயிரம் கோடி ரூபாவுக்கு சொத்து சேர்த்தது எப்படி? என்று கேட்டால் 'ஜெயா அம்மையார் சொத்து குறித்து கேட்கமாட்டீர்களா' என பதில் தருகிறார்.
என்னே திமிர்தனமான பொறுப்பற்ற பதில் இது?

கலைஞர் தன் பக்கத்தில் இரண்டு மனைவிகளை வைத்துக்கொண்டு திரிகிறார். இது சட்டவிரோதமாச்சே, எப்படி? என்று கேட்டால், 'ஒன்று மனைவி இன்னொன்று துணைவி' என வார்த்தைஜாலம் புரிகிறார். அதுமட்டுமா! அவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டே தைரியமாக 'ஒருவனுக்கு ஒருத்தியே தமிழர் பண்பாடு' என்று மேடையில் விளாசுகிறார். தமிழன் என்ன அந்தளவு மாங்காய் மடையன் என்று நினைக்கிறாரா?

கலைஞர் தனது ஆட்சியை தக்கவைப்பதற்காக 1990ம் ஆண்டு சிறப்பு முகாம்களை திறந்து அகதிகளை பிடித்து அடைத்தவர். அதன் பின் மூன்று முறை ஆட்சியில் இருந்துவிட்டார். ஆனால் அந்த சிறப்புமுகாம்களை மூடுவதற்கு அவர் முயற்சி செய்யவில்லை.

அதுமட்டுமல்ல இன்றும்கூட அந்த கொடிய சித்திரவதை முகாம்கள் மூடப்பட வேண்டும் என்று அறிக்கை விடக்கூட அவர் தயார் இல்லை. ஆனால் 'டெசோ' மூலம் தமிழீழம் பெற்று தருவதாக அறிக்கைவிட்டு ஏமாற்றுகிறார். அவருடைய அறிக்கையை தி.மு.க தொண்டன்கூட இனி நம்பமாட்டான். அப்படியிருக்க ஈழத் தமிழன் நம்புவானா?

பல்லாயிரம் கோடி ரூபா ஊழல் செய்துவிட்டு அதற்காக நீதிமன்றத்தில் ஆஜாரகுமாறு அழைப்பு வந்தவுடன் ஒரு மனைவிக்கு மறதி நோய் வருகிறது. மகள் மருத்துமனை சென்று தங்குகிறார்.
என்னே கேவலமான குடும்பம் இது?

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் எப்போது நிறுத்தப்படும்?

• பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் எப்போது நிறுத்தப்படும்?
• பெண்களும் சக மனிதர்கள் என சமூகம் எப்போது ஏற்றுக்கொள்ளும்?

இன்று உலகம் பூராவும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் பெண்களை கடவுளாக மதிக்கும் கலாச்சாரம் கொண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் இது அதிகளவில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் உ.பி மாநிலத்தில்
• முதலில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வல்லுறவுள்ளாக்கி தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.

• அடுத்து கூட்டுப் பாலியல் உறவுக்கு சம்மதிக்காத சிறுமி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

• அதற்கடுத்து பெண் நீதிபதி பாலியல் வல்லுறவுக்குள்ளாகி உயிருக்குப் போராடுகிறார்.

ஒரு நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்ன ? என்று கேட்டால் 'இது எமது மாநிலத்தில் மட்டுமா நடக்கிறது? இந்தியா பூராவும்தானே நடக்கிறது' என அசட்டையாக பதில் தருகிறார் முதலமைச்சர்.

இந்தியாவை வல்லரசாக்குவேன் என பதவியேற்ற புதிய பிரதமரோ இப் பிரச்சனை குறித்து இதுவரை கருத்தே கூறவில்லை. பசு மாடுகளைக் கொல்லக்கூடாது என அக்கறைப்படும் பிரதமர் மோடி பெண்கள் குறித்து அக்கறை அற்று இருப்பது பெண்கள் மாடுகளைவிடக் கேவலமாக மதிக்கப்டுவதையே காட்டுகிறது.

இத்தனை நாளும் இராணுவமும் சாதி வெறியர்களுமே பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் தற்போது மேகலாயாவில் விடுதலைக்காக போராடும் அமைப்பே பாலியல் உறவுக்கு இணங்க மறுத்த பெண்ணை சுட்டுக்கொன்றுள்ளது என்று செய்தி வந்தள்ளது.

இந்தியா மட்டுமல்ல இலங்கையும் இதற்கு சளைத்தது இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்தகாலங்களில் இலங்கை ராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி படுகொலைகள் செய்தது யாவரும் அறிந்ததே. ஆனால் தற்போது அந்த ராணுவம் சிங்கள பெண்களையும் கடித்து குதற ஆரம்பித்துள்ளது. அண்மையில் வந்த செய்திகள் சில,

• தம்பகல்லவில் 83 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவு செய்த இராணுவ வீரர் கைது.

• 50வயது பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்த 3 ராணுவத்pனர் கைது.

இந்த பாலியல் கொடுமைகளை கேட்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு 'சம்பந்தப்பட்டவர்களின் ஆண் உறுப்பை வெட்ட வேண்டும். அவர்களை உடனே தூக்கில் தொங்கவிடவேண்டும்' என சிலர் கோருகின்றனர். ஆனால் இத்தகைய கடுமையான சட்டங்கள் இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் இந்த குற்றங்கள் நடக்கின்றன என்பதை இவர்கள் உணருவதில்லை.

பொருளாதார வளர்ச்சி கண்ட மேற்கத்தைய நாடுகளிலும் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கவே செய்கின்றன. குறிப்பாக லண்டனில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே பெண்கள் மீதான இந்த பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டியது குறித்து உலகம் பூராவும் உள்ள மக்கள் ஒரு புதிய தீர்வை நோக்கி சிந்தப்பதற்கு தள்ளப்பட்டுள்ளனர். நிச்சயம் அதில் மனித சமூகம் வெற்றி பெறும் என நம்புவோமாக.

பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயா அம்மையார் சந்திப்பு

• பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயா அம்மையார் சந்திப்பு

• மீனவர் பிரச்சனை தீர கச்சதீவை மீட்குமாறு கோரிக்கை

• தமிழர் பிரச்சனை தீர பொது வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை

கச்சதீவை மீட்டால் மீனவர் பிரச்சனை தீருமா?
பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு கோருமா?
இவையெல்லாம் சாத்தியமா? அல்லது
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு வியூகமா?

இதெல்லாம் இருக்கட்டும், முதலில்
தன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறப்புமுகாமை மூட
ஜெயா அம்மையார் மறுப்பது ஏன்?
அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய
ஜெயா அம்மையார் தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டில் கொடிய சிறப்புமுகாம்கள் இருக்கும்வரை
அடைத்து வைத்திருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படும்வரை
முதலமைச்சர் ஜெயா அம்மையாருக்கு மட்டுமல்ல
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யாருக்குமே
மகிந்தராஜபக்சேவை பார்த்து கேள்வி கேட்க
எந்த தகுதியும் இல்லை!

• தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

• தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.

சிவகுமாரன் மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனைகளை பின்பற்றியவரல்ல. அவர் புரட்சியை முன்னெடுக்கவில்லைதான். ஆனாலும் அவர் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர்.

சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். குறிப்பாக அமிர்தலிங்கம் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் தயவோடு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கிப் படிக்க வைத்தார். தலைவர் சிவசிதம்பரம் மகனை லண்டனுக்கு அனுப்பி படிக்கவைத்தார்.

சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார். எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார்.

பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் கடத்தல்காரர்கள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது. அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை. எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.

வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள். தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும்.

சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர். தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர்.

இன்று ஒவ்வொரு இயக்கத்தினரும் ஒவ்வொரு தினத்தை மாவீரர் நினைவு நாளாக கொண்டாடுகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக ஒருநாளை ஒருமித்துக் கொண்டாட வேண்டும் என்பது தமிழ் மக்களின் பெரு விரும்பமாகும். அப்படி ஒருநாளைக் கொண்டாடுவதாயின் அதற்கு மிகவும் பொருத்தமான நாள் தியாகி சிவகுமாரன் இறந்த தினமாகும்.

அனைவரும் இதனை ஒருமித்து ஏற்றுக்கொள்வார்களா?

• தமிழக மக்களிடம் பட்ட கடனை எப்படி திருப்பி செலுத்தப்போகிறோம்?

• தமிழக மக்களிடம் பட்ட கடனை எப்படி திருப்பி செலுத்தப்போகிறோம்?

ஈழத் தமிழர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு 'தமிழீழம்' என பெயர் சூட்டியதாக நான் அறியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தன் மகளுக்கு 'தமிழீழம்' என பெரியார் தொண்டன் சாக்கிரட்டீஸ் பெயர் சூட்டியிருப்பதை அறிகிறேன்.

ஈழத் தமிழர்கள் யாரும் தங்கள் வியாபார நிலையங்களுக்கு 'பிரபாகரன்' பெயர் சூட்டியிருப்பதை நான் அறியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பல உணர்வாளர்கள் 'பிரபாகரன்' பெயரை சூட்டுவதை நான் அறிகிறேன்.

ஜரோப்பிய நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கூட புலிப்படம் கொண்ட ஆடைகளை அணிய தயங்குகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் சிறுவர்கள் கூட புலிப்படம் கொண்ட சட்டைகளை மகிழ்வுடன் அணிகின்றனர்.

• முள்ளிவாயக்காலில் மாபெரும் அழிவு நடந்தபோது கூட எந்தவொரு ஈழத் தமிழனும் தீக்குளித்து இறக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் 16 பேர் தீக்குளித்து இறந்தார்கள்.

• லண்டன் மாநகரில் உள்ள தமிழர்கள் 'மானாட மயிலாட' பார்த்து ரசிக்கும்போது தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்காக வீதியில் இறங்கி போராடினார்கள்.

• கனடாவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரே கோயிலில் குத்தாட்டம் போட்டபோது தமிழ்நாட்டில் பல மக்கள் யுத்த விசாரணை கோரி போராட்டங்களை நடத்தினார்கள்.

இவையெல்லாம் சரி என்றோ அல்லது இப்படியெல்லாம் செய்வதால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்றோ நான் இங்கு கூற வரவில்லை. மாறாக இந்த தமிழ் நாட்டு மக்களின் அர்ப்பணிப்பு உண்மையானது. எந்தவித சுயநலமும் அற்றது. நாம் அவர்களுக்கு மிகப்பெரிய கடன் பட்டிருக்கிறோம்.

தமிழக அரசியல் தலைவர்கள் எமக்கு துரோகம் இழைத்திருக்கலாம். ஆனால் தமிழக மக்கள் எமக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கைவேந்தன் என்று இலக்கியம் கூறுகிறது. அது எந்தளவு உண்மை என்று தெரியாது. ஆனால் அந்த ராவணன் போல் இப்போது நாம் தலை குனிந்து நிற்கின்றோம். தமிழக மக்களிடம் பட்ட இந்த கடனை எப்படி திருப்பி செலுத்தப்போகிறோம்?

இதோ இந்த இணைப்பில் தனக்கு 'தமிழீழம்' என பெயர் சூட்டிய தந்தைக்கு தமிழக சிறுமி ஒருவர் எப்படி அஞ்சலி செலுத்துகிறார் என்பதைப் பாருங்கள்.

https://www.facebook.com/photo.php?v=707897239267409&fref=nf
சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசு நினைவேந்தல் நிகழ்ச்சி படத்திறப்பு 30.05.2014 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.இதில் பெரியார் சாக்ரடீசு மகள் தமிழீழம் ஆற்றிய உருக்கமான உரை.

தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்தால் தமிழ் மக்களுக்கு விடிவு பிறக்குமா?

• தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்தால்
தமிழ் மக்களுக்கு விடிவு பிறக்குமா?

கேரளாவை மலையாளியே ஆட்சி செய்கிறான். கர்நாடாவை கன்னடத்தவரே ஆட்சி செய்கின்றனர். ஆந்திராவை தெலுங்கர்களே ஆட்சி செய்கின்றனர். அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டைவிட எந்த விதத்தில் முன்னேறியிருக்கின்றன?

தமிழகம் முன்னேற்றம் பெறாமைக்கு கலைஞரும் ஜெயா அம்மையாரும் தமிழர் அல்ல என்பது காரணம் என்றால் நாளை 'நாம்தமிழர்' சீமான் ஆட்சி எறினால் இவர்களை விட என்ன செய்து விடமுடியும்?

ஏனென்றால் மாநில முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்னும்போது ஒரு தமிழர் முதலமைச்சரானாலும் மத்திய அரசை மீறி என்ன செய்துவிட முடியும்?

இலங்கையில் கொழும்பில் தமிழர்கள் வந்து பிழைக்கிறார்கள் என கூச்சல் போடும் சிங்கள வெறியர்கள் செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடை முதலாளிகளை எதிர்ப்பதில்லை. கலவரங்களில் சாதாரண அப்பாவி தமிழர்கள் தாக்கப்படும் வேளைகளில் நகைக்கடைகள் தாக்கப்படுவதில்லை. இலங்கை அரசு அவற்றுக்கு பூரண பாதுகாப்பு கொடுத்து வருகிறது.

இலங்கையில் பெரும் முதலாளிகள் ஞானம், மகாராஜா போன்ற தமிழர்கள். யுத்தம் நடந்த காலத்தில்கூட அவர்களால் எப்படி பாதுகாப்பாக கொழும்பில் வியாபாரம் செய்ய முடிந்தது? தமிழ் முதலாளியும் சிங்கள முதலாளியும் ஒற்றுமையாக மக்களை சுரண்டுகின்றனர். ஆனால் தமிழ் தொழிலாளியும் சிங்கள தொழிலாளியும் இந்த முதலாளிகளுக்காக தங்களுக்கள் அடித்துக் கொள்கிறார்கள்.

அதேபோல் 'தமிழ்நாட்டில் மலையாளி வந்து டீ கடை போட்டு பிழைக்கிறான். பீகாரி வந்து கூலி தொழில் செய்து பிழைக்கிறான்' என கூச்சல் போடுபவர்கள் அம்பானி, பிர்லா முதலாளிகள் தமிழகத்தை சுரண்டுவது பற்றி ஏன் பேசுவதில்லை. தமிழக முதலாளி மாறன் மற்ற மாநிலங்களில் சுரண்டுவது குறித்து ஏன் கண்டுகொள்வதில்லை?

சர்வதேச தொழிலார்களே ஒன்று சேருங்கள் என ஒருபுறம் சோசம் எழுப்பிக் கொண்டு மறுபுறத்தில் இனரீதியாக தொழிலாளர்களை பிரித்து அவர்களுக்கிடையே மோதலை உருவாக்குவது என்பது முதலாளித்துவத்திற்கு மறைமுகமாக செய்யும் சேவையாகவே அமையும்.

'புரட்சிப்புயல்' வைகோ எப்போது ஆயுதம் ஏந்துவார்?

'புரட்சிப்புயல்' வைகோ எப்போது ஆயுதம் ஏந்துவார்?

இதோ 'புரட்சிப் புயல்' வைகோ அவர்களின் உணர்ச்சிப் பேச்சு. நீங்களும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள். ஈழத் தமிழனுக்காக தானே முதல் ஆளாக ஆயுதம் ஏந்துவேன் என்கிறார்.

முள்ளிவாய்க்காலில் இத்தனை அழிவுகள் நடந்த பின்பும் அவர் ஏன் இன்னும் ஆயுதம் ஏந்தவில்லை? இன்னும் எத்தனை தமிழன் அழிந்த பின்பு அவர் ஆயுதம் ஏந்துவார்?

பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தயாராக இருக்கின்றனர். வைகோ அவர்கள் தான் ஆயுதம் ஏந்தாவிட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது ஆயுதம் ஏந்தும் இளைஞர்களை ஆதரிக்காவது முன்வருவாரா?

பல வருடங்களுக்கு முன்னரே இந்திய அரசின் சூழ்ச்சிகளை புரிந்துகொண்டு ஆயுதம் ஏந்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் தோழர் தமிழரசன். அவர் பெயரைக்கூட இதுவரை வைகோ உச்சரித்தது இல்லை. இனியாவது தோழர் தமிழரசனை வைகோ அவர்கள் ஆதரிப்பாரா?

http://www.youtube.com/watch?v=Vyf5WnCt1_M

ஆசிரியர் வீரமணி, கொளத்தூர் மணி, ராமகிருஸ்ணன் பதில் என்ன?

• ஆசிரியர் வீரமணி, கொளத்தூர் மணி, ராமகிருஸ்ணன் பதில் என்ன?

தந்தை பெரியாரின் கருத்துக்களை இன்றைய திராவிடர் கழகம் எந்தளவு தூரத்திற்கு அமுல்படுத்துகிறது என்பது பற்றி விமர்சனம் இருப்பினும் 'பெரியார் திடல் அனைத்து பெரியார்வாதிகளுக்கும் பொதுவானது. அது எப்போதும் திறந்திருக்கிறது. யாரும் எப்போதும் வரலாம்' என அதன் தலைவர் வீரமணி அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கப்படவேண்டியதாகும்.

முதன் முதலாக 1972ம்ஆண்டு பருத்தித்துறை 'யுனைட்டெ' புத்தகநிலையத்தில் பத்து சதத்திற்கு பெரியார் நூல்களை எனது தந்தையார் வாங்கி கொடுத்தார். அன்று முதல் இன்றுவரை பெரியார் நூல்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வருவது மிக்க மகிழ்ச்சி தருகிறது.

நான் தமிழகத்தில் 8 வருடம் சிறையிலும் சிறப்பு முகாமிலும் மாறி மாறி அடைக்கப்பட்டிருந்தவேளை தொடர்ந்து 'விடுதலை' பத்திரிகையை ஆசிரியர் வீரமணி அவர்கள் எனக்கு அனுப்பி படிக்க உதவினார். அதுவும் இலவசமாகவே அனுப்பி உதவினார். இது எனக்கும் என்னுடன் கூடவே அடைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கும் வெளி உலகை தெரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக அமைந்தது. அது மட்டுமன்றி அந்த பத்திரிகையில் சிறப்புமுகாம் கொடுமைகள் தொடர்பாக நாம் அனுப்பும் செய்திகளையும் பிரசுரித்து உதவியதையும் நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

லண்டன் வந்த பின்பும்கூட இங்கும் ஒரு நண்பர் 'உண்மை' இதழ் தொடர்ந்து தந்து உதவுதன் மூலம் எனக்கு பெரியார் சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் எனது நன்றிகள்.

இங்கு எனது வருத்தம் என்னவெனில் புலிகள் இயக்கத்திலும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களிடமும் மதிப்பும் செல்வாக்கும் பெற்றிருந்த ஆசிரியர் வீரமணி அவர்கள் புலிகள் இயக்கத்தில் பெரியார் கருத்துக்களை பரப்ப ஏன் முனையவில்லை என்பதே?

ஏனெனில் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிகவும் கடவுள் நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர். அவர் தனது திருமணத்தைக் கூட சென்னைக்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றிலே நடத்தினார். அதுமட்டுமல்ல முதல் முறையாக ஆயுத இறக்குமதி வெற்றிகரமாக நடந்தவுடன் பழநி கோவிலில் மொட்டை அடித்தார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் அவர் ஆரம்ப காலங்களில் தாக்குதல்களை பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளிலேயே நடத்துவார். அது மட்டுமன்றி தாக்குதல் வெற்றிகரமாக நடந்தவுடன் தொன்டமனாறு செல்வசந்நிதி கோவிலில் அன்னதானமும் கொடுக்கும் அளவிற்கு நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருந்தார்.

எனவே ஆசிரியர் வீரமணி மட்டுமல்ல பிரபாகனுடன் மிகவும் நெருங்கிய உறவு வைத்திருந்த கொளத்தூர் மணி மற்றும் கோவை ராமகிருஸ்ணன் போன்றொர் கூட தாங்கள் கொண்டிருந்த பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை ஏன் பிரபாகரனிடத்திலும் அவரது புலிகள் இயக்கத்திடமும் பரப்ப முனையவில்லை என்று புரியவில்லை?

யாராவது தொண்டர்கள் இதை அவர்களிடம் கேட்டுச் சொல்வார்களா?

சீதனக் கொடுமையால் திருமணமாகாமல் குமர்ப்பெண்கள் விடும் பெரு மூச்சிற்கு முடிவு எப்போது?

• சீதனக் கொடுமையால் திருமணமாகாமல் குமர்ப்பெண்கள் விடும் பெரு மூச்சிற்கு முடிவு எப்போது?

மகிந்த ராஜபக்சே முள்ளிவாயக்காலில் அழித்தது வெறும் 40 ஆயிரம் பேரே. ஆனால் இந்த சீதனக் கொடுமையால் அழியும் பெண்கள் தொகையோ அதைவிட அதிகம்.

மகிந்தவை குற்றவாளிக்கூண்டில் எற்ற வேண்டும் என்று துடிப்போர் இந்த பெண்களை அழிப்போர் குறித்து அக்கறையற்று இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இலங்கையில் இந்தியா போல் வரதட்சனைக் கொடுமையில் பெண்கள் காஸ் அடுப்பில் பலியாவது இல்லை எனலாம். ஆனால் இந்தியாவுக்கு நிகராக இலங்கையிலும் குறிப்பாக யாழ்பாணத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் முதன்மையாக இந்த சீதனக்கொடுமை இருக்கிறது.

என்.எம்.பெரரா நிதியமைச்சராக இருந்தபோது இந்த சீதனக் கொடுமை பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது ' ஒரு நிதியமைச்சராக இதனை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இதனால் மக்களிடம் சேமிப்பு பழக்கம் ஏற்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் உதவி செய்யும்' என்றார். ஒரு மூத்த இடதுசாரி தலைவர் இவ்வாறு பேசியது துரதிருஸ்டமானதே.

ஆனால் புலிகள் இதனை ஒருபோதும் வரவேற்கவில்லை. அவர்கள் இதனை கண்டித்தார்கள். சீதணம் வாங்குபவர்களைப் பிடித்து அவரிகளிடமிருந்து பெரும் தொகை பணத்தை வரியாக அறவிட்டார்கள். ஆனால் நம் மக்கள் கில்லாடிகள் ஆயிற்றே. அவர்கள் புலிகளுக்கு தெரியாமல் இரகசியமாக பரிமாறிக் கொண்டார்கள். ஆக இந்த விடயத்தில் புலிகளுக்கு தோல்வியே எற்பட்டது.

புலிகளின் துப்பாக்கியினால்கூட இந்த சீதனக் கொடுமையை ஒழிக்க முடியவில்லை. புலிகளின் காலத்திலும் அது இருந்தது. இப்பவும் அது தொடர்கிறது. புலிகள் கூறும் தமிழீழம் கிடைத்தாலும்கூட பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த கொடுமை முற்றாக ஒழிக்கப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில் எமது மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளுக்கு சென்றாலும் அங்கும்கூட விடாமல் பின்பற்றும் வழக்கங்களில் இந்த சீதண முறையும் இருக்கிறது.

விலைவாசியை விட அதிக வேகத்தில் உயரும் இந்த சீதணம் பல குமர்பெண்களின் திருமணத்தை கேள்விக் குறியாக்கியுளளது. அழகான பெண்ணாக இருந்தும் நல்ல படிப்பு இருந்தாலும் நல்ல உத்தியோகத்தில் அதிக சம்பளம் பெற்றிருந்தாலும் தமது தகுதிக்குரிய மாப்பிளையை பெறுவதற்கு சீதனத்தைக் கொடுக்க வேண்டிய நிலையிலே பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதனைக் கொடுக்க முடியாமல் திருமணம் இன்றி கண்ணீர் விட்டு வாழ்வைக் கழிக்கின்றனர்.

திருமணம் ஆகாமல் இந்த குமர் பெண்கள் விடும் பெருமூச்சு எமுது இனத்தை அழிக்கு முன்னர் சமூக அக்கறை உள்ளவர்கள் இதற்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

பேராசிரியர் கிளாட்சன் சேவியர்; அவர்களின் ' இலங்கை இந்தியா சீனா அரசியல் பொருளாதாரம்' பற்றிய உரையாடல்

லண்டன் ஈஸ்ட்காம் நகரில் இன்று காலை 11.00 மணிக்கு பேராசிரியர் கிளாட்சன் சேவியர்; அவர்களின் ' இலங்கை இந்தியா சீனா அரசியல் பொருளாதாரம்' பற்றிய உரையாடல் இடம்பெற்றது. தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் ஜெயக்குமார் அவர்களின் வழிப்படுத்தலில் இவ் உரையாடல் நடைபெற்றது.

யாழப்பாணத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் மகன் கிணற்றில் தவறி விழுந்தபோது கிணற்றில் இறங்கி மகனைக் காப்பாற்ற முடியாத பேராசிரியர் உடனே யாராவது உதவிக்கு வருவார்களா என றோட்டில் சென்று காத்து நின்றாராம். நிறைய பட்டங்களை பெற்றிருக்கும் அப் பேராசிரியருக்கு கிணற்றில் இறங்கி மகனைக் காப்பாற்ற தெரியாவிட்டாலும்கூட, கிணற்றடியில் நின்று 'ஜயோ' என்று கத்தி இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனாவது ஓடிவந்து காப்பாற்றியிருப்பான் என்பதும்கூட தெரிந்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் இருந்து இது பேராசிரியர்களின் நடைமுறை அறிவை கிண்டலடிக்க சொல்லப்படும் கதையாக இருந்து வருகிறது.

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள பல பேராசிரியர்களின் சமூக அறிவு இந்த மாதிரித்தான் இருந்துவருகிறது என்பதை இன்றைய சென்னைப் பேராசிரியரின் உரையும் நிரூபிக்கின்றது. அவரது உரை இந்திய ஆளும் வர்க்கத்திற்கு உதவி புரிவது ஆச்சரியமான ஒன்றல்ல.

பல்வேறு புள்ளிவிபரங்களை அள்ளிவீசிய இந்த பேராசிரியர் இலங்கையில் அந்நிய முதலீட்டில் இந்தியா எத்தனை சதவிகிதம்? சீனா எத்தனை சதவிகிதம்? என்ற புள்ளி விபரத்தைக் கூறவில்லை. அதுமட்டுமல்ல இலங்கை இறக்குமதியில் இந்தியாவில் இருந்து எத்தனை சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதையோ அல்லது சீன இறக்குமதி எத்தனை சதவிகிதம் என்பதையோ கூறாமல் தவிர்த்துவிட்டார். இதைக் கூறியிருந்தால் இலங்கையில் சீனாவை விட இந்தியாவே அதிக அளவில் சுரண்டுகின்ற உண்மையை பார்வையாளர்கள் உணர்ந்திருப்பார்கள்.

தனது உரையில் புத்தளத்தில் சீன முதலீட்டாளர்கள் கட்டியிருக்கும் சொகுசு மாளிகையை கிலாகித்து பேசிய பேராசிரியர யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதுவர் கல்லூரி அனுமதியில் இருந்து பஸ் நிலைய கக்கூஸ் டெண்டர் வரை கட்டைப் பஞ்சாயத்து செய்வது ஏனோ சொல்லத் தோன்றவில்லை!

முதலாளித்துவத்தில் நெருக்கடி இருப்பதை ஒத்துக்கொண்ட பேராசிரியர் அதற்கு ஒரு புதிய தீர்வை கண்டு பிடிக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால் முதலாளித்துவத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ள மாக்சியம் ஏன் தீர்வாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை விளக்காமல் தந்திரமாக தவிர்த்தக்கொண்டார். அதுமட்டுமல்ல ஆயுதப் போராட்டம் இனி பயன் தராது என்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்ற வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறார். இதிலிருந்து இந்த பேராசிரியர்கள் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு ஊதுகுழலாகவே செயலாற்றுகின்றனர் என்பதை வெளிப்படுத்திக் கொண்டார்.

இந்திய அரசு நேரடியாகவோ அல்லது இப் பேராசிரியர்கள் மூலமாகவோ இனி தமிழ் மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க முடியாது என்பதை விரைவில் வெடிக்கும் தமிழக விடுதலைப் போராட்டம் முகத்தில் அடித்து சொல்லும்.

தொடரும் இனவாத தாக்குதல்கள்! இதற்கு முடிவு கட்டுவது எப்படி?

தொடரும் இனவாத தாக்குதல்கள்!
இதற்கு முடிவு கட்டுவது எப்படி?

3 அப்பாவிகள் பலி!
6 பேர் கவலைக்கிடம்!!
150 க்கு மேற்பட்டோர் காயம்!!!
பல கோடி ருபா சொத்துகள் சேதம்!!!

இவர்கள் பயங்கரவாதிகளா?
இவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்களா?
இவர்கள் தனிநாடு கேட்டார்களா?

ஜனாதிபதி அவர்களே!

இந்த முஸ்லிம் மக்கள் செய்த தவறு என்ன?
இவர்கள் முஸ்லிம்களாக பிறந்தது தவறா?
இலங்கை தமது நாடு என்று நம்பியது தவறா?

முதலில் முஸ்லிம்;களை 'வந்தேறு குடிகள்' என்றீர்கள்
பின்னர் 'அல்கைதா' வந்து விட்டது என்றீர்கள்
இறுதியாக 'தலிபான்' ஊடுருவிட்டது என்றீர்கள்
தகுந்த நாளை தெரிவு செய்து ஊடரங்கு பிறப்பித்தீர்கள்.
உங்கள் குண்டர்களை ஏவி விட்டு அப்பாவிகளை தாக்கினீர்கள்

கடந்த தேர்தலுக்கு 40 ஆயிரம் தமிழர்களை அழித்தீர்கள்.
அடுத்த தேர்தலுக்கு முஸ்லிம்களை அழிக்கிறீர்கள்.
உங்கள் பதவி வெறிக்கு இனவாதத்தை பயன்படுத்துகிறீர்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
தமிழ் சிங்கள் முஸ்லிம் உழைக்கும் மக்கள் உண்மையை உணர்வார்கள்.
தங்கள் ஒற்றுமையின் மூலம் அவர்கள் உங்களை தூக்கியெறிவார்கள்.
இது உறுதி!