Monday, June 16, 2014

அண்ணல் அம்பேத்கார் புகழ் ஓங்குக!

 அண்ணல் அம்பேத்கார் புகழ் ஓங்குக!

“அண்ணல் அம்பேத்கார” திரைப்படம் (தமிழ் பதிப்பு) மும்பை “விழித்தெழு இளைஞர் இயக்கம்” சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் குறுந்தகடு கிடைக்கப்பெற்றேன். அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பம் மும்பை நண்பர் ஒருவர் மூலம் நிறைவேறியுள்ளது. அவருக்கு என் நன்றிகள்.

ஒரு மாபெரும் சாதனையாளரின் வரலாற்றை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் அடக்குவது என்பது மிகவும் கடினம்தான். இருப்பினும் அம்பேத்கார் வரலாற்றை இயன்றளவு இத் திரைப்படத்தில் உள்ளடக்கியுள்ளார்கள் எனலாம். அவர்களது பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.

“அண்ணல் அம்பேத்கார்” வெறும் திரைப்படம் அல்ல. அது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பாடம். கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு மகத்தான மனிதன் அம்பேத்கார். அவரது வரலாறு சரியான முறையில் சரித்திரத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற ஒரு ஏக்கம் எனக்கு இருந்தது. குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மகாத்மா காந்தி அறியப்பட்ட அளவிற்கு அண்ணல் அம்பேத்கார் அறியப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமே.

“அண்ணல் அம்பேத்கார்” திரைப்படத்தை பார்க்கும்போது அவரது சாதனைகளை தெரிந்து கொள்வதை விட மகாத்மா என அறியப்பட்டவர் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தார் என்பதை நன்கு அறிய முடிகிறது. வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்று மகாத்மாக்கள் மக்களால் தூக்கியெறியப்படுவார்கள்.

இந்திய போன்று இலங்கையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதீய ஒடுக்கு முறைகள் உண்டு. ஆனால் இந்தியாவில் ஒரு அம்பேத்கார் போன்று இலங்கையில் ஏன் ஒரு அம்பேத்கார் தோற்றம் பெறவில்லை? இந்தியா போன்று இலங்கையில் ஏன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை?

இந்தியாவை விட இலங்கையில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவெனில் இந்திய புரட்சியாளர்கள் சாதீய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கத் தவறினார்கள். ஆனால் இலங்கையில் தோழர் சண்முதாசன் தலைமையிலான புரட்சியாளர்கள் சாதீய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமைதாங்கி முன்னெடுத்தார்கள். இதனால் ஒருவேளை இலங்கையில் அம்பேத்காரியம் தோன்றுவதற்கு அவசியமற்று போயிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

பிரான்சில் இருந்து செயற்படும் “தலித் மேம்பாட்டு முன்னணி” ஈழத் தமிழர் மத்தியில் அண்ணல் அம்பேத்கார் அவர்களை அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொள்கிறார்கள். அவர்கள் பணி வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்வரும் இணைப்பில் அண்ணல் அம்பேத்கார்(தமிழ் பதிப்பு) திரைப்படத்தைப் பார்வையிடலாம்.

http://www.youtube.com/watch?v=OUST4I2EFCA

புரட்சியாளர்கள் தந்தை பெரியாரை மட்டுமல்ல அண்ணல் அம்பேத்காரையும் அவசியம் படிக்க வேண்டும்.

No comments:

Post a Comment