•இலங்கையின் அதிசயம்
அழகான தீவு என்று பெயர் பெற்ற இலங்கை இப்போது அரசியல் கூத்துகளினால் அதிசய இலங்கை என்று பெயர் எடுக்கிறது.
முதலில் இரண்டு பிரதமர் இருந்தார்கள். அடுத்து இரண்டு சபாநாயகர்கள் இருந்தார்கள். இப்போது இரண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள்.
உலகில் இப்படி ஒரு அதிசயம் இலங்கையில் மட்டுமே நிகழ்கிறது.
தன்னை இன்னும் சபாநாயகர் நீக்கவில்லை என்றும் தானே எதிர்க்கட்சி தலைவர் என்றும் சம்பந்தர் அய்யா அடம் பிடிக்கிறார்.
அதேவேளை மகிந்த ராஜபக்சா எதிர்க்கட்சி தலைவர் என்று இதே சபாநாயகர்தான் அறிவித்திருக்கிறார்.
நடக்கிற கூத்துகளைப் பார்த்தால் அடுத்து இரண்டு ஜனாதிபதிகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதி உச்ச பதவியான ஜனாதிபதி பதவியை இரண்டு முறை அனுபவித்தும் மகிந்த ராஜபக்சவுக்கு பதவி ஆசை போகவில்லை.
பிரதமர் பதவியை பெற்றார். அடுத்து எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற்றுள்ளார். இதுவும் இல்லாமற்போனால் பிரதேசசபைத் தலைவர் பதவியைக்கூட பெறுவார் போல் இருக்கிறது.
சம்பந்தர் அய்யா கூட பதவியை விட்டு விலக மனம் இல்லாமல் உள்ளார்.
எல்லா அரசியல்வாதிகளும் பதவி ஆசை பிடித்தவர்களாக இருக்கிறார்களேயொழிய ஒருவர்கூட மக்கள் நலன் குறித்து அக்கறை கொள்வதாக தெரியவில்லை.
பெற்ற கடனுக்குரிய வட்டிகூட கட்ட முடியாத நிலையில் நாட்டின் நிதி நிலைமை உள்ளது.
ரூபாவின் பெறுமதி நாளுக்குநாள் குறைந்து கொண்டே போகிறது. இப்படியே போனால் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியாத நிலை விரைவில் வரப் போகிறது.
சுமந்திரன்கூட முதலில் ரணிலின் பதவியை காப்பாற்ற நீதிமன்றம் சென்றார். இப்போது சம்பந்தர் அய்யாவின் பதவியைக் காப்பாற்ற செல்கிறார். ஆனால் தமிழ் மக்களுக்காக எந்த அக்கறையும் கொள்கிறார் இல்லை.
பாவம் தமிழ் மக்கள்!
No comments:
Post a Comment