Thursday, December 27, 2018

•நெல்லியடி பஸ் நிலையம்!

•நெல்லியடி பஸ் நிலையம்!
வடமராட்சியில் ஐனசந்தடி மிக்க பஸ் நிலையம் மட்டுமல்ல பல போராளிகள் ஆரம்ப காலங்களில் சங்கமித்த இடமும் இந்த நெல்லியடி பஸ் நிலையமே.
1980களில் எமது இயக்கத்திற்கு ஆயுதம் சேகரிப்பதற்காக பொலிசாரின் ஆயுதங்களை பறிப்பதற்கு இதே பஸ் நிலையத்தில் காத்து நின்ற தருணங்கள் இன்றும் நினைவில் இருக்கிறது.
அப்போது நெல்லியடியில் இருந்த பொலிஸ்நிலையத்தை மூடிவிட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துடன் இணைத்து விட்டிருந்தார்கள்.
எனவே இரவு எட்டு மணிக்கு நெல்லியடியில் ரியூசன் விட்டுவரும் மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பருத்தித்துறையில் இருந்து ஒரு ஜீப் வண்டியில் 5 பொலிசார் வருவார்கள்.
அவர்களின் துப்பாக்கிகளை பறிப்பதற்காக எமது இயக்கத்தின் சார்பில் அழகன், மனோ மாஸ்டர், நெப்போலியன், மனோ ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்.
பொலிசாரை சுட்டுக் கொல்லாமல் துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என்று மனோ மாஸ்டர் கூறியதால் பொலிசார் ஜீப்பில் இருந்து இறங்கி தனித்தனியாக பிரிந்து செல்லும்வரை நாம் காத்திருப்போம்.
இவ்வாறு நாம் காத்திருக்கும் வேளைகளில் இதே பஸ் நிலையத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த மாத்தையா, குண்டப்பா (ரகு) போன்றவர்களும் இருந்தார்கள்.
எல்லா இயக்கங்களைச் சேர்ந்தவர்களும்; இவ்வாறு நெல்லியடியில் கூட்டம் கூட்டமான நிற்பது வழக்கம். எனவே புலிகள் நின்றதை நாம் சந்தேகப்படவில்லை.
அன்றைய நாளும் பொலிஸ் ஜீப் வந்தது. பொலிசார் இறங்கட்டும் என நாம் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் புலிகள் திடீரென தாம் கொண்டு வந்த எஸ்.எம். ஜீ துப்பாக்கியால் ஜீப்புக்குள் சுட ஆரம்பித்து விட்டார்கள்.
ஜீப்பில் முன்னுக்கு இருந்த இன்ஸ்பெக்டர் திருச்சிற்றம்பலம் காயம்பட்டார். 3 பொலிசார் இறந்து விட்டார்கள். ஆயுதங்களை எடுத்துக்கொண்டு புலிகள் சென்று விட்டனர்.
இத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட குண்டப்பா (ரகு) என்பவர் பின்னர் 1990 களில் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
1991ல் ரஜீவ்காந்தி கொல்லப்பட்ட பின்னர் பிடிபட்ட மற்றும் இறந்த பல புலிகளை சிபிஐ பொலிசாருக்கு அடையாளம் காட்டியவர் இந்த குண்டப்பா என அப்போது சிறையில் இருந்த புலிகள் என்னிடம் கூறினார்கள்.
அவர்கள் கூறியது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இவர் சென்னையில் இருந்து இந்திய உளவுத்துறையின் உதவி மூலம் ஏஐன்சி தொழில் செய்ததை பலரும் அறிவார்கள்.
இவர் தற்போது லண்டனில் இருக்கிறார். பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் தன்னுடன் பிரபாகரன் தொடர்பில் இருப்பதாகவும் இவர் கூறிவருகிறாராம்.
இதையறிந்த பிரபாகரனின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் இவரை சந்தித்து “உண்மையை கூறுங்கள். அண்ணன் இறந்து விட்டார் என்றால் அவருக்கு எமது சமய முறைப்படி கிரியைகள் செய்ய விரும்புகிறேன்” என்று கேட்டுள்ளார்.
அதற்கு இவர் “ நெடுமாறன் அய்யா அண்ணை உயிரோடு இருக்கிறார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர் என்று சொன்னால் நம்புகிறீர்கள். நான் என்னுடன் அண்ணை கதைத்தவர் என்று கூறினால் சந்தேகப்படுகிறீர்களே?” என்று கூறினாராம்.
நெடுமாறன் அய்யா பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது யார் யாருக்கெல்லாம் பயன்படுகிறது பாருங்கள்.
மன்னிக்கவும். நெல்லியடி பஸ் நிலையம் பற்றி தொடங்கி தேவையில்லாமல் குண்டப்பா விடயங்களுக்கு சென்று விட்டேன். மீண்டும் பஸ் நிலையத்திற்கு வருகிறேன்.
இதே பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த மெண்டல் பத்மநாதனை சுட்டுக் கொன்றுவிட்டு புலிகளின் மிகப் பெரிய தளபதியை சுட்டதாக இந்திய ராணுவம் சொன்னதை யாவரும் அறிந்திருப்பீர்கள்.
அதே இந்திய ராணுவ காலத்தில் அடிக்கடி சுற்றிவளைப்புகள் நடக்கும் அப்போது சுற்றிவளைப்பில் மாட்டப்பட்ட ஆண்களை அழைத்து வந்து நெல்லியடி சந்தியில் ரோட்டில் உட்கார வைப்பார்கள்.
ரோட்டில் உட்கார்ந்த்திருக்கும்போது இந்திய ராணுவத்தினர் பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைப்பார்கள். பூவரசம் கதியாலை முதுகில் அடிப்பார்கள்.
இப்படி நான் 3 முறை மாட்டப்பட்டு அடி வாங்கியிருக்கிறேன். அவ்வாறு அடி வாங்கிய தருணங்களில் நெல்லியடியின் பிரபல கடை முதலாளிகளும் என் அருகில் இருந்து அடி வாங்கியிருக்கிறார்கள்.
நெல்லியடியில் சங்குண்ணி கடையை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சங்குண்ணி ஒரு மலையாளி. அதனால் இந்திய ராணுவ மலையாள அதிகாரியான சுகுமார் என்பவர் இவருடன் அடிக்கடி உரையாடுவதுண்டு.
இதனால் புலிகள் சந்தேகப்பட்டு சங்குண்ணியை சுட்டுக் கொன்று விட்டனர். இங்கு வேதனையான விடயம் என்னவெனில் சங்குண்ணியின் மகன் ஒருவர் புலிகள் அமைப்பில் இருந்தவர். சென்னையில் 1984ல் பாலசிங்கத்தின் கார் டிறைவராக இருந்தவர்.
சங்குண்ணியின் படுகொலைக்கு பழிவாங்குவதாக இந்திய ராணவத்துடன் சேர்ந்து செயற்பட்ட ஈபிஆர்எல்எவ் இயக்கத்தினர் அடுத்த நாள் மூன்று கடை முதலாளிகளை நெல்லியடியில் சுட்டுக் கொன்றனர்.
இவ்வாறு மாறி மாறி கொலைகள் நடந்தபோதும் ஆரம்ப காலம் முதல் போராட்டத்தை ஆதரித்து உதவியதில் நெல்லியடி கடை முதலாளிகளின் பங்கு அளப்பரியது.
இப்போது உயரமான ஒரு பஸ் நிலையத்தை கட்டியுள்ளனர். ஆனால் முன்பு தகர கொட்டகையில் இருந்த ஏதோ ஒன்று இதில் இல்லாத மாதிரி உணர்வு.
இத்தனை லட்சம் செலவு செய்து கட்டிய பஸ் நிலையத்தில் ஒரு ஒழுங்கான மல சல கூடம் இல்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.
சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வார்களா?

No comments:

Post a Comment