Saturday, February 7, 2015

The Last Salute of a revolutionary

பகுதி-1


இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான என்.சண்முகதாசனின் மறைவையடுத்து “சண்டே ஐலண்ட்” பத்திரிகையில் அதன் அப்போதைய ஆசிரியராக இருந்த தலைசிறந்த ஆங்கிலப் பத்திரிகையாளர் அஜித் சமரநாயக்க “The Last Salute of a revolutionary” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் (இக் கட்டுரை 1993ம் ஆண்டு எழுதப்பட்டது)

என்.சண்முகதாசனின் மரணம் அவர் காரணமாகவே ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு சுடரை அணைத்து விட்டது. கடந்த பல வருடங்களாக அச்சுடர் வெறுமனே மினுங்கிக் கொண்டிருந்ததென்றால், அதற்கு முற்றிலும் அவரின் முயற்சிகளே காரணமாயிருந்தன எனலாம்.

தனது சுயசரிதையிலே தன்னை பச்சாதாபப்படாத ஒரு கம்யூனிஸ்ட் என்று அழைத்த அந்த மனிதர் பச்சாதாபப்படாத ஒரு ஸ்ராலினிஸ்டுமாவார். தன்னைச் சுற்றியுள்ள உலகில் கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கையில், ஸ்ராலினதும் மாஓசேதுங்கினதும் நினைவுகளை மக்கள் மனதில் உயிர்த்துடிப்புடன் நிலைத்திருக்க வகை செய்தவர் சண்முகதாசன். ஸ்ராலினுக்குப் பிறகு அவரது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றிய ஒருவராக தர்க்கரீதியாக மாஓசேதுங்கையே சண்முகதாசன் நம்பினார்.

முதலில் சீனாவும் பின்னர் அல்பேனியாவும் மாஓவை நிராகரித்து தன்னுடனான பழைய தொடர்புகளைத் துண்டித்த வேளையில், தனது நம்பிக்கையை சளைக்காமல் நியாயப்படுத்தி நின்றவர் சண்மகதாசன். மார்க்ஸ், லெனின், மாஓசேதுங் ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் பிதாமகர்களையும் உறுதியாகப் பின்பற்றிய இறுதி அரசியல்வாதியாக சண்ணை வர்ணிக்க முடியும். நாகலிங்கம் சண்முகதாசன் அவரது கால கட்டத்தின் ஒரு தோற்றப்பாடு. யாழ்ப்பாணத்தின் நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த அவர் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கையில் தனது இரண்டாவது வருடத்திலேயே முழுநேரப் புரட்சிவாதியாக மாறுவதற்கு தீர்மானித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் அவர் ஒருவர். இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் என்ற வகையில் அவர் இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக உறுதியாகக் குரல்கொடுத்தவர்களில் ஒருவராக விளங்கினார்.

சண் இலங்கையின் முதன்மையான மாஓ வாதி. அபூர்வமான நேர்மை கொண்ட கம்யூனிஸ்ட். சமுதாயத்தின் வர்க்க எல்லைக்கோட்டை அவர் ஒருபோதும் கடந்ததில்லை. இளமைக்காலத்தில் தன்னுடன் வரித்துக் கொண்ட அரசியல் நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை. இந்த வருடம் (1993) அவரின் அரசியல் வாழ்வுக்கு 50 வயது. தான் நேசித்த கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் அவர் இவ்வருடமே விடைகொடுத்துவிட்டார்.

1989 இல் வெளியிடப்பட்ட “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள” என்ற தனது சுயசரிதையில் தனது பல்கலைக்கழக வாழ்க்கையில் விறுவிறுப்பான நாட்களை சண் நினைவூட்டுகிறார். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட சண் பல்கலைக்கழகக் கல்லூரியில் பிரவேசித்த இறுதி அணியைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச வயதெல்லைக்கு (17) மூன்று நாட்கள் குறைவாக இருந்ததால் ஒரு வருடகாலம் அவர் கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியில் படிக்க வேண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் சண் சரித்திரத்தைப் பயின்றார். பல்கலைக்கழக யூனியன் சொசைட்டியில் அவர் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அப்போது தலைவராக எஸ்மண்ட் விக்கிரமசிங்க இருந்தார். பல்கலைக்கழகக் கல்லூரியில் சண் கம்யூனிஸ்ட் குழுவுக்கு தலைமைதாங்கிய அதேவேளை, எஸ்மண்ட் விக்கிரமசிங்க சமசமாஜ கட்சியின் குழுவுக்கு தலைமை தாங்கினார்.

வேடிக்கையானதும் மகிழ்ச்சியூட்டுகின்றதுமான ஒரு நிகழ்வை சண் நினைவுபடுத்துகிறார். எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் சண்ணும் கொழும்பின் முன்னாள் மேயரான இரத்னஜோதி சரவணமுத்துவின் மகனான அரபி சரவணமுத்துவும் போருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தமைக்காக பல்கலைக்கழகத்திலிருந்து இடை நிறுத்தப்பட்டனர். மற்றைய இருவரும் செல்வாக்குமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால் அவர்களுடன் சேர்த்து தானும் மீண்டும் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் அல்லாவிட்டால் தனது பல்கலைக்கழகப் படிப்பைத் தொடருவதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்பது சந்தேகமே என்றும் சண் கூறுகிறார். எனவே, வர்க்கச் செல்வாக்கு சில வேளைகளில் புரட்சிவாதிக்கும் அனுகூலமாகிவிடுகிறது. பாரம்பரிய றோயல் - தோமியன் கவர்ச்சி வட்டத்துக்கு வெளியேயிருந்த மானிப்பாய்ப் பையன் பின்னர் பல்கலைக்கழக யூனியன் சொசைட்டியின் தலைவராகி வல்லமை மிக்க ஏகாதிபத்தியவாதியான உபவேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் முன்னிலையில் உரையாற்றினார். யூனியன் சொசைட்டியின் வருடாந்த இரவு விருந்துபசாரத்தின்போது ஐவர் ஜெனிங்ஸின் “ஒரு முகப்பட்ட வாசஸ்தல பல்கலைக்கழக” கோட்பாட்டை சண் தாக்கிப்பேசினார். அவர் பின்வருமாறு எழுதுகிறார்; இரவு விருந்துபசாரத்தின் போது நான் அமர்ந்ததும் நான் தன்னைத் தவறாக புரிந்து கொண்டதாக ஜெனிங்ஸ் என்னிடம் கூறினார். தான் தங்கியிருந்த கோல்பேஸ் ஹோட்டலுக்கு தேநீர் அருந்த மறுநாள் வருமாறு என்னை அழைத்தார். கலந்துரையாடுவதற்காகவே அந்த அழைப்பு. நான் சென்றேன். கலந்துரையாடினேன். ஆனால், எனது நிலைப்பாட்டில் இருந்து என்னை மாற்ற அவரால் முடியவில்லை. அவரது நிலைப்பாட்டிலிருந்து அவரை மாற்ற என்னால் முடியவில்லை.

பகுதி-2

கொழும்பில் காலனித்துவ சமூக வாழ்வின் கேந்திரமாக விளங்கிய கோல்பேஸ் ஹோட்டலில் ஐவர் ஜெனிங்ஸ{டன் மாலைநேரம் தேநீர் அருந்திய இளம் புரட்சிவாதி பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறியதும் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக மாறுவதில் எந்தத் தயக்கத்தையும் காட்டவில்லை. கட்சியில் முழுநேர ஊழியருக்கு அந்த நேரத்தில் மாதம் 60 ரூபா அலவன்ஸ் கொடுக்கப்பட்டது.

சண்ணின் பெற்றோருக்கு இது பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. தந்தையார் றப்பர் தோட்டமொன்றில் உத்தியோகத்தர். பணம் செலவழித்து தாங்கள் படிப்பித்த மகன் அரசாங்க சிவில் சேவையில் சேருவதற்கு முயற்சிப்பான் என்றுதான் பெற்றோர் நினைத்தனர். ஆனாலும், மகனின் தத்துவரீதியான தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். முதுமையடையும் காலத்தில் நீ என்ன செய்வாய் என்று தாயார் மகனைக் கேட்டார். “நான் முதுமையடையும் போது நாட்டில் சோசலிசம் வந்துவிடும்” - இதுதான் மகனின் பதிலாக இருந்தது. தனது சுயசரிதையில் இதை சண் குறிப்பிட்டிருக்கிறார்.

சோசலிசம் என்பது சண்ணைப் பொறுத்தவரை ஒரு புத்திஜீவித்துவ நம்பிக்கை- ஒர் உணர்வு பூர்வமான கவர்ச்சியல்ல. நீ ஏன் ஒரு சோசலிஸ்ட்டாக இருக்க வேண்டும்? என்ற ஜோன் ஸ்ராச்சியின் நூலே சண்ணுக்கு சோசலிசத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. “அதிகாரத்துக்காக வரப்போகும் போராட்டம்” என்ற நூலையும் எழுதிய ஸ்ராச்சி ஒரு வலிமையான எழுத்தாளர். தர்க்கவாதி - இடதுசாரிகளின்போதகர்.

சண்ணின் அரசியலைப் பொறுத்தவரை மிகவும் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஓர் அம்சம் ரொட்ஸ்கியவாதத்தினால் அவர் ஒரு போதுமே கவரப்படாதமையாகும். வெளிநாடுகளில் கல்வியைப் பெற்ற வசதிபடைத்த குடும்பங்களின் வழித்தோன்றல்களின் ஒரு புத்திஜீவித்துவப் பித்து என்றே ரொட்ஸ்கியவாதத்தை சண் நோக்கினார் போலத் தோன்றுகிறது. இனவாதத்தின் செல்வாக்கினால் வடக்கு பாதிக்கப்படுவதற்கு முன்னதாக அப் பிராந்தியத்தின் அரசியலில் சில செல்வாக்கைச் செலுத்திய தமிழ்க் கம்யூனிஸ்ட்டுகளின் அணியைச் சேர்ந்தவர் சண். ஏ.வைத்திலிங்கம், பி.கந்தையா, எம்.சிவசிதம்பரம் போன்றவர்கள் ஏனையோர். 1952 வரை கம்யூனிஸ்டாக இருந்த சிவசிதம்பரம் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார்.

சண் முதலில் ஆற்றல்மிக்க ஒரு தொழிற்சங்க வாதியாகவே உள்ளூர் அரசியலில் தடத்தைப்பதித்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் அந்திமக் காலத்தின் போது 1943 இல் சண் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார். அந்த காலகட்டமளவில் தொழிலாளர் இயக்கம் மீதான ஏ.ஈ.குணசிங்கவின் மேலாதிக்கம் தகர்ந்து தொழிலாளர்கள் இடதுசாரிகளின் கொடியின் கீழ் தீவிர உணர்வு பெற்றவர்களாக மாறிக்கொண்டுவந்தனர். பாதுகாப்பு ஒழுங்கு விதிகளின் கீழ் அத்தியாவசிய சேவைகளில் வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்பட்டதுடன் தொழிலாளர்களுக்கு கதவடைப்பு செய்வதிலிருந்து தொழில் கொள்வோரும் தடுக்கப்பட்டனர். தேயிலை, றப்பர் தோட்டத் தொழில்துறைகளிலும் பொறியியல் தொழிலாளர்கள் மத்தியிலும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் அப்போது பலம் வாய்ந்ததாக இருந்தது. 1953 சவுத் வெஸ்ரேன் பஸ் கம்பனி வேலை நிறுத்தம், 1953 ஆகஸ்ட் ஹர்த்தால், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி நடத்திய 1958 பொது வேலைநிறுத்தம் போன்ற தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் சகலதிலும் சண் முன்னணியில் விளங்கினார். இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் இருந்ததால் அதை இலங்கை முதலாளிமார் சம்மேளனம் அங்கீகரிக்கவில்லை. அதன் காரணத்தினால் புரூக் பொண்ட் வேலை நிறுத்தத்தின் போது 1958 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் தனிப்பட்ட ரீதியாக தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்ததாக சண் தனது சுயசரிதையில் கூறியிருக்கிறார்.

1962 டிசம்பர்- 1963 ஜனவரி காலகட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற வேலை நிறுத்தம் சண் தலைமை தாங்கி நடத்திய வேலை நிறுத்தங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவற்றில் ஒன்றாகும். கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைத்துவத்தின் விருப்புகளுக்கு எதிராக இலங்கை மோட்டார் தொழிலாளர் சங்கத்துக்கு தனிப்பட்ட ரீதியில் தலைமைதாங்கி சண் இப் போராட்டத்தை வழிநடத்தினார். அப்போது ஆளும் கட்சியாக இருந்த சிறீPலங்கா சுதந்திரக் கட்சியுடனும் சமசமாஜக் கட்சியுடனும் கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பான நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட காரணத்தினால் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவம் அந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கத் தயங்கியது என்று சண் காரணம் கூறியிருந்தார்.

பகுதி-3

அதுகாலவரை ஒரே தன்மையானதாக இருந்த உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிரமாண்டமான தத்துவார்த்தப் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 1963 செப்டெம்பரில் சண்ணின் அரசியல் வாழ்வில் சரித்திர முக்கியத்துவ திருப்பம் ஒன்று ஏற்பட்டது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த சீனச் சார்பினருக்கு தலைமை தாங்கி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அந்த தத்துவார்த்த விவாதத்தை இலங்கையில் சண் முன்னெடுக்க ஆரம்பித்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மகாநாட்டில் ஸ்ராலினை நிராகரித்து குருஷேவ் மேற்கொண்ட தீர்மானத்தையடுத்தே உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் அந்தத் தத்துவார்த்தப் பிளவு மூண்டது. சோவியத் பாதையை மா ஓ சேதுங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையான மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்டுகள் என்று மா ஓ வாதிகள் தங்களைப் பிரகடனம் செய்ததையடுத்து கம்யூனிஸ்ட் இயக்கம் இரு முகாம்களாகியது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்தது. சீனச் சார்பு பிரிவினருக்கு தலைமை தாங்கிய சண் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்திலிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். ஆனால், விடாப்பிடியாகப் போராடி அடுத்த மகாநாட்டில் தொழிற்சங்க சம்மேளனத்தின் பெரும்பான்மையை தனது பக்கத்துக்கு சண் வென்றெடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி அதுவிடயத்தில் தோல்வியை ஏற்றுக் கொண்டு தனியாக ஒரு தொழிற்சங்கத்தை இலங்கைத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் என்ற பெயரில் முதலில் 50 பேரை அங்கத்தவர்களாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

சண் அமைத்து தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கப் புரட்சியில் பற்றுறுதி கொண்டிருந்தது. சோவியத் சார்பு முகாம் நியாயப்படுத்திய பாராளுமன்றத்தின் ஊடாக சமாதான மார்க்கத்தில் சோசலிசம் என்ற கொள்கையை சண் கட்சி நிராகரித்தது. 1960 களில் கம்கறுவ, றெட்ஃபிளக், தொழிலாளி என்ற மூன்று பத்திரிகைகளின் மூலமாக இக்கட்சி பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக பிரசாரங்களை உத்வேகத்துடன் முன்னெடுத்தது. “பிரகதி சீலி கமண' என்ற வார சஞ்சிகையொன்றும் கட்சியினால் வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியராகச் செயற்பட்ட ஐ.கரன்னகொட பின்னர் சீனாவுக்கான இலங்கைத் தூதுவரானார். தொழிற்சங்கப் பணிகள் நகர்ப்புறங்களில் துடிப்புடன் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, பெருந்தோட்டப் பகுதிகளில் செங்கொடிச் சங்கம் முக்கியமான ஒரு சக்தியாக விளங்கியது.

அந்த கால கட்டத்தில் உறங்கிக் கிடந்த வடக்கிற்கும் சண் போராட்டத்தை எடுத்துச் சென்றார். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அவர் அணி திரட்டினார்.

பகுதி-4

சண் ஒரு தமிழராக இருந்ததால் புரட்சிகர கட்சியில்கூட தேசியத் தலைவராக மேம்பாடு அடைய முடியவில்லை



 புராதன மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்தான் ஆலயப்பிரவேசத்துக்கான முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் களமாக விளங்கியது. கடவுள் நம்பிக்கையற்ற சண்ணுக்கும் பல்கலைக்கழகக் கல்லூரியில் அவரது முன்னாள் குருவாக விளங்கிய பேராசிரியர் சி. சுந்தரலிங்கத்துக்கும் இடையேயான இந்த வலிமைமிக்க சமர் குறித்து ( சண்ணின் வார்த்தைகளில்) முதலாளித்துவ பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. மத்தியஸ்தராக அப்போதைய யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சர் ஆர். சுந்தரலிங்கம் செயற்பட்டார். சண்ணுக்கும் இரு சுந்தர்களுக்கும் இடையேயான இந்த சுவையான காவியம் தினமும் செய்திப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகியது. சண்ணின் அரசியல் வாழ்க்கையில் அந்த காலகட்டமே மிகவும் சிறப்பான வருடங்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு சீன ஆதரவாளராக மாஸ்கோவிலிருந்து நாடு திரும்பிய ரோஹண விஜேவீரவுக்கு தனது தலைமையிலான கட்சியின் உறுப்புரிமையை சண் வழங்கினார். இதன் மூலம் இலங்கையின் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுப்போக்கொன்றில் கருநிலைக்கும் கூடுதலான பங்கொன்றையும் அவர் ஆற்றினர். சோவியத் விசா மறுக்கப்பட்டதன் காரணத்தினால் பயன்படுத்த முடியாமல் போன விமானப்பயணச்சீட்டை விஜேவீர தன்னிடம் காண்பித்ததாக சண் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். தன்னை ஒரு சோவியத் விரோதி என்று விஜேவீர காண்பித்தார். அதனால் தானும் கட்சியும் தவறாக வழிநடத்தப்பட்டதை சண் பின்னர் ஒப்புக்கொண்டிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுனைக்கான மையக்கருவாகவும் தளமாகவும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியை விஜேவீர பயன்படுத்திக்கொண்டார். அதற்கு பிறகு கோட்பாட்டு ரீதியில் ஜே.வி.பி.யை சண் கடுமையாக எதிர்த்தார். என்றாலும் 1971 கிளர்ச்சியைத் தொடர்ந்து ஐக்கிய முன்னனி அரசாங்கம் சண்ணைச் சிறையிலடைத்தது.

1971 ஏப்ரல் 12 தொடக்கம் 1972 பெப்ரவரி 2 வரை சண் வெலிக்கடை, வித்தியாலங்காரமுகாம், சிறைச்சாலை ஆஸ்பத்திரி மற்றும் பெரியாஸ்பத்திரி என பல இடங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். ஆட்சேபத்தை வெளிக்காட்டுவதற்காக சண் முகச்சவரம் செய்யாமல் நீண்ட தாடியை வளர்த்திருந்தார். அத் தாடியுடன் அவரைப் பார்க்கும் போது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வருகின்ற இறைதூதர் போல இருந்தது. நீரிழிவு நோயாளியான அவருக்கு முள்ளந்தண்டிலும் ஸ்பொன்டோலிசஸ் என்ற நோய் ஏற்பட்டிருந்தது. அவருடன் அக்காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக அப்போது இருந்த வாசுதேவ நாணயக்காரவும் ஒருவர்.

சிறையில் இருந்த வேளையில் சண் இரு நூல்களை எழுதினார். இலங்கை சரித்திரம் மீது ஒரு மார்க்சியப் பார்வை, இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் குறுகிய வரலாறு என்பவையே அந் நூல்கள். சிறைவாழ்க்கையில் ஒரு சாதகமான அம்சம் இருப்பதாக சண் கூறுவார். மனம் அறவே குழப்பப்படமாட்டாது. சிறையில் உள்ள மன அமைதியை வெளியில் பெறுவது முடியாத காரியம். சிறையில் இருக்கும்போது வெளியில் நடைபெறும் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. உறவினர்கள் இல்லை. நண்பர்கள் இல்லை. கடிதங்கள் வருவதில்லை. தொலைபேசி அழைப்பும் கிடையாது. முற்று முழுதான அமைதி கிடைக்கிறது. அத்தகைய சூழ்நிலை எழுதுவதற்கு மிகவும் உகந்தது,

பகுதி-5

மா ஓ சேதுங் மரணமடைந்ததையடுத்து, சீனாவில் அதிகாரத்துக்கு வந்தவர்கள் அவரின் கோட்பாடுகளை நிராகரிக்க ஆரம்பித்தார்கள். சண்ணுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான உறவுகளில் விரிசல் எற்படத்தொடங்கியது. சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒரு குழுவினர் பிரிந்து சென்றனர். அக் குழுவினரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரித்தது. இந்த நிலைமைகளையடுத்து இறுதியாக சண்ணுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான உறவு முறிந்துபோனது. 1971 கிளர்ச்சியின் போது திருமதி பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆதரிக்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்த போது சண்ணுக்கும் அக் கட்சிக்கும் இடையே உறவுகள் சீர்குலைய ஆரம்பித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1971 ஏப்ரலில் ஜே.வி.பி. மேற்கொண்ட சாகசத்தனமான கிளர்ச்சியை சண் கடுமையாக விமர்சித்த. அதேவேளை, இளைஞர்கள் மீது அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்கு முறையையும் அவர் கண்டனம் செய்தார்.

மா ஓ சேதுங்கின் கோட்பாடுகளை எப்போதுமே உறுதியாகப் பின்பற்றி நின்ற அல்பேனியர்களும் மாஓவை கண்டனம் செய்து நிராகரிப்பதில் சீனக் கட்சியினருடன் இணைந்து கொண்டபோது சண்ணுக்கு பலத்த எமாற்றமாகப் போய் விட்டது. சீனாவிலும் அல்பேனியாவிலும் எப்போதுமே வரவேற்கப்படும் ஒருவராக விளங்கிவந்த சண்ணுக்கு அவர் பெரிதும் நேசித்த தோழர்களே கொள்கைகளை மாற்றிக்கொண்டு செயற்பட ஆரம்பித்தமை பெரும் கவலையை அளித்தது.

அவரது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் மாஓவின் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள் அமெரிக்காவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, சிலி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அனுசரணையின் கீழ் ஒன்றுபட்டு மகாநாடொன்றை நடத்துவதற்கான சந்தர்ப்பம் தோன்றியபோது மீண்டும் ஒரு நம்பிக்கை கீற்று தென்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் இரண்டாவது மூத்தவர் சண். அப்போது அவருக்கு 64 வயது. அவரையும் விட மூத்தவருக்கு 75 வயது. மகாநாட்டில் தலைவராக நோக்கப்பட்ட சண், அதன் தீர்மானங்களை அறிவிப்பதற்கான லண்டன் செய்தியாளர் மாநாட்டில் தலைமை வகித்து உரையாற்றினார். அந்த மகாநாடு 18 நாடுகளைச் சேர்ந்த மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. இளவயதில் தான் அரவணைத்துக்கொண்ட கம்யூனிசத்துக்கான இறுதி நம்பிக்கையாக சண்ணைப் பொறுத்தவரை அந்த மகாநாடு அமைந்தது.

உலகில் சோசலிசம் கண்ட பின்னடைவு, தனது கட்சி செயலிழந்துபோனமை ஆகியவை காரணமாக தனது கொந்தளிப்பான வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் சண் உண்மையாகவே ஒரு அரசியல் உறங்கு நிலைக்கே சென்றார் எனலாம். ஆனால், அவர் ஒருபோதுமே மெத்தனமாகவோ அல்லது செயலற்று போகவோ இல்லை. கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஸ்கொபீல்ட் பிளேஸில் இருந்த தனது மாடிவீட்டில் இருந்தவாறு இலங்கையினதும் வெளியுலகினதும் அரசியல் நிகழ்வுப் போக்குகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டேயிருந்தார். வாசித்தார், எழுதினார், கடிதத் தொடர்புகளை பேணினார்.

கடந்த பல வருடங்களாக அரசியல் விவகாரங்கள் தொடர்பில் சண் எனக்கு பல கடிதங்களை எழுதியிருந்தார். அவை பிரசுரத்துக்கானவையல்ல என்று அவர் குறிப்பிடத் தவறவில்லை. அநேகமாக அக்கடிதங்களை பூக்களின் உருவரைபு கொண்ட காகிதங்களிலேயே அவர் எழுதுவார். விஜேவீர கொல்லப்பட்டதையடுத்து சண் எனக்கு எழுதிய கடிதமே இறுதியானது. சண்ணின் கட்சி அரசியலுக்கு தந்த, ஆனால் கோட்பாட்டு ரீதியில் அவரால் எப்போதுமே கடுமையாக எதிர்க்கப்பட்ட விஜேவீரவைப்பற்றி என்னை கட்டுரை எழுதத் தூண்டியது அந்த இறுதிக்கடிதமேயாகும். நான் விஜேவீர பற்றி பெரும்பாலும் மென்மையான போக்கைக் கொண்டிருப்பதாக சண் எனக்கு எழுதினார்.

பகுதி-6

இங்கிலாந்தில் வசித்து வரும் அக்கியூபங்சர் நிபுணரான மகள் இறுதி வருடங்களில் தன்னுடன் வந்து வாழுமாறு சண்ணை அழைத்தார். அங்குசென்று வாழ்வது அவருக்கு விருப்பமான ஒன்று அல்ல என்ற போதிலும், உடல் நிலை காரணமாக மகளின் வேண்டுகோளுக்கு சண் இணங்க வேண்டியேற்பட்டது. இங்கிலாந்து வாழ்க்கை தனக்கு சலிப்பைத் தருவதாக சண் முறையிட்டார். எண்ணற்ற நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது கொள்கையிலிருந்து பின்வாங்காத ஒரு கம்யூனிஸ்ட் புரட்சிவாதிக்கு அவரது அரசியல் போராட்டங்கள் இடம்பெற்ற மண்ணில் இருந்து வெகுதொலைவில் வாழ்க்கையின் முடிவு வந்தது. மார்க்ஸ் இறுதிக் காலத்தில் அஞ்ஞாதவாசம் செய்து, மூலதனம் என்ற மகத்தான நூலை எழுதிய இங்கிலாந்திலேயே சண்ணும் மரணமடைந்தார். இலங்கையில் இடதுசாரி இயக்கத்துக்கு சண் செய்த மாபெரும் பங்களிப்பு மாஓசேதுங் சிந்தனைகள் பற்றிய அவரது விளக்கமாகும்.

சமாதான மார்க்கத்தில் சோஷலிசத்தை அடையமுடியுமென்ற சிந்தனையை நிராகரித்த சண் ஆயுதப் புரட்சி மீதான நம்பிக்கையிலிருந்து எள்ளளவும் விலகியதில்லை. மாஓசேதுங்கின் சிந்தனையானது விவசாயப் புரட்சியின் ஊடாக மக்களை அணி திரட்டி கிராமங்களில் இருந்துபடிப்படியாக நகரங்களைச் சுற்றி வளைக்கும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இலங்கையில் விவசாயிகள் மிகவும் பின் தங்கியவர்களாகவும் எந்தவிதமான புரட்சிகரப் பிரக்ஞை அற்றவர்களாகவும் இருந்தனர். இதுவே சண் எதிர்நோக்க வேண்டியிருந்த முரண்பாடாகும். இத்தகையதொரு இடைவெளியில் நகரங்களில் தொழிலாளர்களையும் தோட்டப் புறங்களில் தோட்டத் தொழிலாளர்களையும் வடக்கில் தாழ்த்தப்பட்ட மக்களையும் அணி திரட்டுவதில் ஈடுபட்டார். ஆனால், இது ஒரு போதுமே கூட்டுப் பொருத்தம் கொண்ட முறைப்படுத்தப்பட்ட ஒரு இயக்கமாக வளர முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சண் ஒரு தமிழராக இருந்ததால், ஒரு புரட்சிகரக் கட்சியில் கூட தேசிய அரசியல் தலைவராவதற்கான உள்ளார்ந்த ஆற்றலைப் பொறுத்தவரை அவரால் (இனம், மதம், சாதி எல்லாம் ஒரு தலைவராவதற்கான தகுதியாகக் கணிக்கப்படும் நாட்டிலே) மேம்பாட்டை அடையமுடியவில்லை. சண்ணுடன் சேர்ந்து பணியாற்றுவது சுலபமானதல்ல என்ற ஒரு உணர்வு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தது. எளிதில் சினமடையக் கூடிய சுபாவத்தைக் கொண்டவராக அவர் கட்சி ஆதரவாளர்களுக்குத் தென்பட்டார். அதேவேளை, சண்ணின் ஆதரவாளர்கள் அவருக்கு உகந்த பணி செய்யவில்லை என்பது உண்மையே. சுமார் ஒரு வருட காலம் அவர் சிறையிலிருந்த போது தடுப்புக் காவலை எதிர்த்து சொந்தக் கட்சியினர் மத்தியில் இருந்து ஒரு குரலும் எழும்பவில்லை.

சண்ணின் அரசியல் வாழ்வில் தனியொரு மிகப்பெரிய துன்பியல் நிகழ்வு என்வென்றால் அவர் நியாயப்படுத்திய புரட்சியை அவரால் போஷித்து வளர்க்கப்பட்டவரே சீர்குலைத்தமையாகும். வன்முறைப் போராட்டம் மூலமாக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதை சண் நியாயப்படுத்தினார். அதைச் செய்வதற்கு விஜேவீர இரு தடவைகள் திரிபுபடுத்தப்பட்ட பல்வேறு வடிவங்களில் முயற்சித்தார். சண் நியாயப்படுத்தி நின்ற ஆயுதப் புரட்சியை மற்றவர்கள் அவரிடமிருந்து பிரிந்து சென்று பழி தூற்றிப் பாழ்படுத்தினார்கள்.

ஆனால், 50 வருடகால புரட்சிகர அரசியல் வாழ்வில் அந்த ஆயுதப் புரட்சி இலட்சியத்துக்காக சண் உறுதியாக நின்றார். 74 வருடங்கள் உலகில் வாழ்ந்த அவர் இளம் வயதில் பட்டதாரியாக வெளியேறிய காலத்திலிருந்து தனக்கு கிடைத்திருக்கக் கூடிய சௌகரியமான வாழ்க்கை வசதிகள் எல்லாவற்றையுமே துறந்தார். இதுவே அந்த மனிதரைப் பற்றி அளந்தறிவதற்கு போதுமானதாகும்.

ஒரு தொழிற்சங்கவாதி என்ற வகையில், தொழிலாளர் இயக்கத்தின் ஒரு போதனையாளர் என்ற வகையில், முன்னுதாரணமாகத் திகழ்ந்த தலைவர் என்ற வகையில் சண்ணின் பங்களிப்பு அளப்பரியதாகும். அரசியற் குள்ளர்களினதும் அற்பர்களினதும் காலத்துக்கேற்ப கருத்தை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளினதும் ஒத்தூதுபவர்களினதும் தாயகமாக மாறி வரும் ஒரு மண்ணில் சண் போன்ற மனிதர்கள் மீண்டும் பிறப்பதென்பது நடவாத காரியம். போராட்ட வாழ்க்கையை முன்னெடுத்த அவர் இறுதிவரை அவ்வாறே வாழ்ந்தார். தன்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் பின்வாங்கிச் செல்ல தனது நிலைப்பாட்டிலிருந்து விலக மறுத்தார். இவைபோன்ற நினைவுகளே காவியங்களைப் படைக்கின்றன.

No comments:

Post a Comment