• லண்டனில் நடைபெற்ற “ஆயுதஎழுத்து” நாவல் வெளியீடு
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நேற்றைய தினம்(21.03.2015) தமிழ்மொழி செயற்பாட்டகம் சார்பில் இரு நிகழ்வுகள் நடைபெற்றன.
முதலாம் அமர்வாக சார்ல்ஸ் தலைமையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் சமூக நிலைமைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து பலவேறு பணிகளில் ஈடுபட்ட பேராசிரியர் கணேசன் அவர்கள் முக்கிய உரையாற்றினார்.
இரண்டாவது அமர்வாக வாசுதேவன் அவர்கள் தலைமையில் சாத்திரி அவர்களின் “ஆயுதஎழுத்து” நூல் அறிமுகம் இடம்பெற்றது. சாம்பிரதீபன் மற்றும் சபேசன் ஆகியோர் நூல் அறிமுகவுரை நிகழ்த்தினார்கள். மேலும் அறிமுகவுரை நிகழ்த்தவிருந்த நளீமா காதர் அவர்கள் எதிர்பாராதவிதமாக வரமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. நூல் ஆசிரியர் சாத்திரி அவர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
வாசுதேவன் தனது தலைமையுரையில் தானும் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகவும் இந்த “ஆயுதஎழுத்து” நாவலில் சாத்திரி குறிப்பிடும் சம்பவங்கள் மற்றும் நபர்கள் பலவும் தனக்கு தெரிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் புலிகளின் போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றார். இறுதியாக, புலிகள் நடத்திய போராட்டம் மக்களுக்கான போராட்டம் அல்ல என்றும் அது அவர்களது அதிகாரத்திற்காக நடந்த போராட்டம் என்றார்.
சாம்பிரதீபன் தனது உரையில் இந்த நாவலில் சாத்திரி குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் 100வீதம் உண்மையாயின் புலிகள் இயக்கம் தமிழ்மக்களுக்கு மாபெரும் சாபம் என்றும் அல்லாது சாத்திரி குறிப்பிட்டிருப்பது 100வீதம் பொய் ஆயின் சாத்திரி தமிழ் மக்களுக்கு ஒரு சாபம் என்றும் குறிப்பிட்டார்.
சபேசன் தனது உரையில் புலிகளின் தவறுகளை வெறுமனே அவர்களின் தவறாக அணுகாமல் அந்த நேரத்து தமிழ் சமூகத்தின் குணாம்சமாகவே அதனை பார்க்க வேண்டும் என்றார். மேலும் புலிகளின் 25 வீத கொலைகள் நடைபெற்ற போது உடன் இருந்த ராகவன் போன்றோர் 75 வீதம் கொலைகள் நடைபெற்றபோது இருந்த சாத்திரி போன்றோரை எதிர்ப்பது விந்தையானது என்றார். ராகவன் மற்றும் சிலர் இலக்கியவிழாவில் சாத்திரி உரையாற்ற முனைந்தபோது அதனை தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இறுதியாக பார்வையாளர்களின் கருத்து பரிமாற்றங்களுடன் நிகழ்வு முடிவுற்றது
No comments:
Post a Comment